Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ – நூல் வெளியீடும் பாராட்டும்


ஈழத்த இலக்கிய பரப்பில் முக்கிய படைப்பாளியாகத் திகழும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் அவருக்கான பாராட்டு விழாவும் 16-02-2104 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து பாக்யா பதிப்பகம் ஒழுங்கு செய்து நடாத்தியிருந்த இந்த விழா மங்கல விளக்கேற்றல் மற்றும் சுப்பையா கமலதாசனின் வரவேற்புரையுடன் நான்கு அரங்குகளைக் கொண்டதாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

 மலையகத்தின் சிறுகதை மூலவரான கோ.நடேசய்யர் அரங்கில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளர் எம்.வாமதேவன் தலைமையில் பாக்யா பதிப்பகத்தின் ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ எனும் தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. கலைக்கேசரி பொறுப்பாசிரியர் திருமதி. அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் வெளியிட்டு வைக்க புரவலர் ஹாசிம் உமர், பேராசிரியர் தை.தனராஜ், திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியொர் சிறப்புப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

தலைமையுரையாற்றிய எம்.வாமதேவன், நாடற்றவர்களாக இருந்த மலையக மக்கள் தற்பொது ஊரற்றவர்கள் நிலைக்கு உள்ளாகி வருகின்றனர் அவர்களுக்கான வாழ்விட நிலம் தொடர்பில் தற்போது அறிவு ஜீவிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தெளிவத்தை மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை இலக்கியமாக பதிவு செய்ததோடு தெளிவத்தை எனும் தோட்டத்துப் பெயரை தனது பெயரில் இணைத்து மலையகத்துக்கு புகழ் சேர்த்தவர். ஆனால் இதுவரை அவருக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும் என தெரிவித்தார்.

நூலாய்வுரையை ஆற்றிய லெனின் மதிவானம் தெளிவத்தை தனது படைப்புகளின் ஊடாக மலையக எல்லையைக் கடந்து தேசிய மட்டத்தில் பேசப்படும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். இன்று விஷ்ணுபுரம் போன்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டாலும் அத்தகைய விருதுகளுக்கு அப்பால் பெறுமதி மிக்கவராகவே உள்ளார் எனவும் தெரிவித்தார்.

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்கில் எழுத்தாளர் ஜெயமோகன் தொகுத்த தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘மீன்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டது. கொடகே பதிப்பக உரிமையாளர் ஸ்ரீ சுமன கொடகே நூலினை வெளியிட்டு வைக்க பேராசிரியர் சந்திரசேகரன், தொழிலதிபர் நடராஜா அகியோர் பெற்றுக்கொண்டனர் தலைமையுரையாற்றிய ‘ஞானம்’ கலை இலக்கிய இதழின் ஆசிரியர் தி.ஞானசேகரன், தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தேடியெடுத்து தொகுக்கும் அளவு தகுதி பெற்ற எழுத்து தெளிவத்தையினுடையது. அவரது எழுத்துக்களின் வலிமையினால் மலையக மக்களின் வாழ்க்கையை மற்றைய சமூகங்களுக்கு எடுத்துச் சென்றவர் என குறிப்பிட்டார்.

 ஆய்வுரையாற்றிய கவிஞர் அல் அஸுமத் அவர்கள் தெளிவத்தையின் கதைசொல்லும் நுட்பத்தை வியந்து பாராட்டினார். மீன்கள் தொகுப்பில் வரும் ‘மீன்கள்’ கதையில் வரும் தாம்பத்யம் சார்ந்த விடயத்தை நுணுக்கமாக காட்டியுள்ள விதத்தை எழுத்தாளர் ஜெயமோகன் வியந்து பாராட்டியுள்ளார் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும், இதே கதையை ஏனைய எழுத்தாளர் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்? குறிப்பாக சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணும்போதுதான் தெளிவத்தையின் நுட்பம் புரியும். ஆனாலும் இவரது சிறுகதைகள் ஏன் இலங்கைப் பாடநூல்களில் இன்னும் சேர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார்

மலையகச் சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம் இராமையா அரங்கில் ‘குடைநிழல்’ நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பிரதியை அந்தனி ஜீவா அவர்கள் வெளியிட துரைவி பதிப்பகத்தின் ராஜ்.பிரசாத், மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரன, கவிஞர் மேமன் கவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தலைமையுரையாற்றிய சமூக ஆய்வாளர் பெ.முத்துலிங்கம்: தெளிவத்தையின் எழுத்துக்கள் எந்த அரசியல், தொழிற்சங்க பக்கம் சாராது மக்களின் மனசாட்சியாக பிரதிபலிப்பவை. அவரது பணி மகத்தானது. விஷ்ணுபுரம் விருதினை அவர் பெறுவது தொடர்பில் ஆரம்பத்திலேயே சர்ச்சைகள் எழுந்தபோது, தமிழநாட்டில் அரசியலோடு இவரை சம்பந்தப்படுத்த வேண்டாம் எனவும் இவரை மாக்ஸிம் கார்க்கி நொக்கில் பார்க்காது டாலஸ்டாய் நோக்கிலேயே  பார்க்க வேண்டும் என்றார். 

ஆய்வுரையாற்றிய பேராசிரியர் செ.யோகராசா சமூகம், குடும்பம், அரசியல் என மூன்று தளத்தில் நின்று கொழும்பில் வாழும் மலையக தமிழர் ஒருவரின் சிக்கல் நிறைந்த வாழ்வை அழகியலோடு குடைநிழல் நாவலில் தெளிவத்தை படம்பிடித்துள்ளார் என குறிப்பிட்டார்.

மூன்று அமர்வுகளையும் தொகுப்பாளராக நின்று பாக்யா பதிப்பக நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் நெறிப்படுத்தினார் தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பயணத்தை காட்டும் ஆவணப்படக்காட்சி விழாவின் மகுடமாக அமைந்தது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக விஷ்ணுபுரம் விருது வென்ற எழுத்தாளரும் மன்றத் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மன்றத்தின் உபதலைவர் மு.சிவலிங்கம் தலைமையில் இணைச் செயலாளர்களான இரா.சடகோபன், ஜி.சேனாதிராஜா, காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன், மு.தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர் தெளிவத்தையின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. திருமதி.தெளிவத்தை ஜோசப் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

- சுப்பையா கமலதாசன்























எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த நாவல் - வனசாட்சி - எம். வாமதேவன்


தமிழ் நாட்டைச்சேர்ந்த தமிழ்மகன் (துணை ஆசிரியர் ஜுனியர் விகடன்) என்பவரால் எழுதி 2012 இறுதியில் வெளிவந்துள்ள நாவல் 'வனசாட்சி’. இதனை வாசிக்கத் தூண்டியமைக்கு பல காரணங்கள் இருந்தன.

ஓன்று இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தேயிலைத் தோட்டத்திலே வேலை செய்வதற்காக, வறுமையில் உழன்று தென்னிந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு சமூகக்கூட்டம், அங்கிருந்து வந்து இலங்கையில் நூற்றாண்டு காலமாய் வாழ்ந்து, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் தாயகம் திரும்பி, அங்கு வாழத்தொடங்கியதை உள்ளடக்கிய கதை என்று அறிந்தமை. 

மற்றது தமிழகத்தில், இலங்கைத்தமிழர் அவர்களது பிரச்சனைகள் பற்றி மக்கள் அறிந்திருந்த அளவிற்கு, மலையக இந்திய வம்சாவளி தமிழர்பற்றியோ அவர்களது வரலாறு, இருப்பு பற்றிய அறிவு குறைவான ஒன்றே. இந்த நாவல், தமிழ்நாட்டு வாசகரிடையே இந்த மலையக மக்கள் குறித்த அறிவினை பெருக்க உதவலாம் என்ற எதிர்பார்ப்பு. 

அத்தோடு, மலையக தமிழர், மற்றும் அவர்களது குடியகல்வு பற்றி பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும், தமிழ்நாட்டிலே படைப்பிலக்கியமாக இவ்விடயம் உள்ளடக்கப்பட்டது குறைவே. 
1960களில் தீபம் பத்திரிகை ஆசிரியரான நா. பார்த்தசாரதி இலங்கை வந்து சென்று 'மேகங்கள் மூடிய மலைகளுக்கு அப்பால்' என்ற நாவல் வெளிவந்தபோது அது அன்றைய மலையக பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆகவே இந்த நாவல் எந்தளவிற்கு யதார்த்தமாக அமையப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு வாசிக்கத்தொடங்கிய எனக்கு, வாசித்து முடிந்த போது ஒரு ஏமாற்றமே ஏற்பட்டது. 

இந்த நாவலின் உள்ளடக்கம், நூறு ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் கதை. மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1. முன்பனிக்காலம்: தென்னிந்தியாவில் கங்காணிகளால் ஆசைவார்த்தை காட்டப்பட்டு, தமிழ்நாட்டின் வடபகுதியில் வட ஆற்காட்டு பகுதியிலிருந்து புறப்பட்டு இலங்கையின் மத்திய பகுதியான ஹட்டன் பகுதிக்கு வந்து சேர்ந்த துயரம் தோய்ந்த கதை மிக உருக்கமாக சொல்லப்படுகிறது. இந்த காலப்பகுதி கண்டியிலிருந்து ஹட்டனுக்கு புகையிரதப்பாதை போடப்பட்ட காலம். 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பமாக இருக்கலாம். 

2. பின்பனிக்காலம்: ஹட்டன் பகுதி தோட்டமொன்றில் வாழத்தொடங்கி, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிறைவேற்றபபட்டு(1964) மூன்று ஆண்டு காலத்திற்கு(1967) பின் இடம்பெறுகின்ற தாயகம் திரும்பும் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

3. இலையுதிர்காலம்: இச்சமூகத்தின் ஒரு பகுதியினர் தாயகத்தில் தங்களது சொந்த ஊருக்கு சென்று, அங்கு தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், மலைப்பகுதிக்கு சென்று அங்கு தங்களது வாழ்க்கையை தொடருகின்ற சம்பவங்களை உள்ளடக்குகின்றது. இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் இடம்பெறுகின்ற சம்பவங்களை உள்ளடக்குவதால், 2009 அல்லது 2010 என எடுத்துக்கொள்ளலாம்.

இந்த கால வரையறைக்குள் ஒரு கதை ஒன்று சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பனிக்காலத்தை, ஒரு நீண்ட முகவுரையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கதை என்ற நோக்கில், பின்பனிக்காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, அது சம்பவங்களை பதிவு செய்வதால் ஒரு ஆவணமாகவும் அமைந்துவிடுகின்றது என்ற கருத்தோட்டத்தில் பார்க்கையில் சில விபரிப்புக்கள், உண்மைநிலையை எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை. எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது, தாயகம் திரும்புவோரின் குடியகல்வு இடம்பெற்றதை எடுத்துக்கூறியுள்ளமையாகும். ஒப்பந்தத்தின் நடைமுறையின்படி, இந்திய வம்சாவளியினரின் மொத்த  எண்ணிக்கை, இரண்டு நாடுகளுக்குமிடையே பகிரப்பட்டதன் பின்னர், மக்களுடைய விருப்பப்படியே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்திய பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்தவருக்கு குடியகல்வு பத்திரம் (பாஸ்போட்) வழங்கப்பட்டு அவர்கள் தங்களது பிரயாண ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு 4 ஆண்டு காலப்பகுதி வழங்கப்பட்டது. 

குடிப்பெயர்வின் நடைமுறையில் வற்புறுத்தலோ கட்டாய நாடுகடத்தலோ இடம்பெறவில்லை. இந்திய குடியுரிமை பெற்று, அதன் நிமித்தமாக குடியகல்வு பத்திரம் பெற்று 4 ஆண்டுகள் கழித்ததின் பின்னர் இந்தியா செல்லாத போதே கட்டாய நாடுகடத்தல் இடம்பெற்றது. இந்த உண்மை நிலைக்கு மாறாக, ஆரம்பத்திலேயே தோட்டங்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள், காவல் துறையின் உதவியோடு, தோட்டங்களுக்கு சென்று, அவர்களை பலவந்தமாக இல்லையென்றாலும், அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றி, தலைமன்னாருக்கு அனுப்பி வைக்கின்றதாக கதையில்  விபரிக்கப்படுகின்றது. இது நாவலின் கதையோட்டத்திற்கு மிகமுக்கியமானது. ஏனெனில் கதையின் முக்கிய பாத்திரங்களான, பெரியசாமி குடும்பம், தங்களது இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்றபோது, ஏதோ ஒரு காரணத்தினால் மகள் லட்சுமியின் விண்ணப்பம் சேர்க்காமல் விடுபடுகின்றது. இதனால், குடியகல்வு பத்திரங்களோடு தோட்டங்களுக்கு வருகின்ற அதிகாரிகள், மகளின் குடியகல்வு பத்திரத்தை கொண்டுவராததால் அவள் தன்னுடைய குடும்பத்தோடு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை உருவாகின்றது. இந்த மகளே இந்தியா செல்ல முடியாததால பின்னர் எப்படியோ வவுனியா சென்று, அங்கு விடுதலை இயக்கப் போராளியாக மாறியதாக கதை கூறுகின்றது. விண்ணப்பப்பத்திரத்தை குடும்பத்தோடு சமர்ப்பிக்கமுடியாமல் போன சூழ்நிலை, அதன் காரணமாக தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து பயணிக்கமுடியாமல் போனமை மிகவும் கற்பிதமாக, உண்மை நிலைக்கு புறம்பானதாகவே அமைந்துள்ளது. 

இந்தியாவுக்கு ஒரு குடும்பமாக போவதென தீர்மானித்ததன் பின்னால், எல்லோரும் ஒரே குடும்பமாக செல்வதற்கு உரிய வசதிகள் 1967ம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டன. அத்தோடு லட்சுமி வவுனியாவிற்கு போய்ச் சேருகின்ற சம்பவ விபரிப்பும் யதார்த்த நிலையோடு ஒத்ததாகவே படவில்லை.

இன்னுமொன்று குறிப்பிட வேண்டியது சம்பந்தப்பட்ட மக்கள், எவ்வாறு இந்தியா செல்வதென அறியாதிருந்தனர். கொழும்பு போய் அங்கிருந்து மன்னாருக்கு தோணிகள் மூலமாக அனுப்பிவைப்பார்களோ' என உரையாடுவதும் கற்பிதமாகவே படுகின்றது.

இதைவிட, 'தோட்டப்பாடசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்றது' பற்றிக்குறிப்பிடுகையில், அவை சிங்களப் பாடசாலைகளாக மாற்றம் பெற்றன என்ற குறிப்பும் உண்மைக்கு மாறானது. தோட்டப்பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றமை, ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். இந்த காலப்பகுதியில், தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் நன்கு வேரூன்றிவிட்டன. ஆரம்பகாலத்தில், தோட்டநிர்வாகத்திற்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் தொடர்பாடாலராக இருந்தவர்கள் பெரிய கங்காணிகள். இவர்கள் ஒரு நிறுவனமாக இருந்த நிலை, தொழிற்சங்கங்களின் வளர்ச்சியோடு இல்லாதொழிந்தமையே வரலாறாகும். தோட்டங்களின் முகாமைத்துவம், கம்பனிகளாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும், முறையாக செயல்ப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் தோட்ட ஆபீஸில் நன்கு பதிவுசெய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கு சிறு சிறு குறைகள் இருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக பதிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் இருக்கத்தக்கதாக, தோட்டத்திற்கு செல்லும் தூதரக அதிகாரிகள் தேவையான விபரங்களை கங்காணிகள் மூலமாக பெற்றுக்கொள்வதாக காட்ட முனைவது தோட்ட நிர்வாக அமைப்பினை நன்கு விளங்கிக் கொள்ளாததாகும். தோட்டங்கள், இலங்கைப் பொருளாதாரத்தில், நவீன துறையாக கணிக்கப்பட்டமையும், கம்பனிகளின் முகாமைத்துவம் மிகவும் சிலாகித்து பேசப்பட்டு வந்த  நிலையில், அது பற்றிய எவ்வித பிரதிபலிப்பும் இந் நாவலில் காணாமல் போனது ஒரு குறையே.

இங்கு மலையக மக்கள் வன்னிப்பகுதியோடு கொண்டுள்ள தொடர்பு தற்செயலாக இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையாக 1972ம் ஆண்டு தோட்டங்களினை அரசமயமாக்கியமை, 1977ல் ஆரம்பித்த இன வன்முறை என்பவை காரணமாக மலையகத்திலிருந்து தமிழர்கள் குறிப்பாக மாத்தளை, கண்டி போன்ற பிரதேசங்களிலிருந்து வன்னி நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். இப்படி சென்றவர்களே விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே  சேரவேண்டிய கட்டாயத்திற்குள்ளானர். இந்த வகையில் மலையகம், வன்னி ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பை தொட்டுக்காட்டவோ, என்னவோ லட்சுமி என்ற பாத்திரத்தை ஆசிரியர் உபயோகித்திருக்கிறார் போலும்.

இந்த நாவலின் இறுதிப்பாகத்தில், தாயகம் திரும்பியோரின் வாழ்வு நிலை எடுத்துக்காட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. இருப்பினும், நாவலில் இரண்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
1. தங்களது சொந்த கிராமங்களுக்கு, சொந்தங்களை நம்பி சென்றவர்கள், அங்கு வஞ்சிக்கப்பட்டு,இலங்கையில் தங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து மலைப்புறங்களை – கொடைக்கானல், வால்பாறை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் நோக்கி சென்றமையே பொதுவான செல் நெறியாக அமைந்திருந்தது.

2. தாயகம் திரும்பியோரின் சமூக உயர்வை நோக்கிய நகர்வு (upward social mobility) மிகத் துரித கதியில் இடம்பெற்றமையாகும். நான் 1986ல் தமிழ்நாட்டில் இருந்தபோது மக்கள் மறுவாழ்வு என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையில் 'இலங்கையில் 150 ஆண்டுகளில் அடையப்பெறாத முன்னேற்றத்தை, சிலர் இங்கு 15 ஆண்டுகளில் அடைந்துள்ளனர்' என்று எழுதினேன். அதை உறுதிப்படுத்துவதாக, தாயகம் திரும்பிய பெரியசாமியின் மகன் கல்லூரிப் பேராசிரியராக, குறுகிய காலத்தில் உயர்நிலையை அடைந்து கொள்கின்றமை சான்றாக அமைகின்றது.

இந்நூலில் பின் அட்டையில் குறிப்பிட்டது போல, அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு உட்பட்ட இச்சமூகத்தின் கதையானது, கொஞ்சம் 'நகைச்சுவை' சேர்க்கப்பட்டு சொல்லப்படுவதானது, இந்த கதையின் மையப்போக்கினை தொய்வடையச் செய்துவிட்டது போன்ற ஒரு உணர்வினை எனக்கு ஏற்படுத்தியது. கல்லூரிகளின் நிர்வாக அடக்குமுறையை நகைச்சுவையோடு விவரிக்கின்ற நாவல், மலைப்பகுதிகளில் தாயகம் திரும்பியோர் எதிர்நோக்கிய அடக்குமுறையை தொட்டுக்காட்டியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. அந்த மக்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த இலங்கையிலிருந்து 1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் சென்ற சமூக செயற்பாட்டாளர்களான மறைந்த இரா. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன் போன்றோரின் செயற்பாடுகள் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், நூல் சுட்டிக்காட்டுவதைப்போல 200 ஆண்டுகால தோட்டப்பின்னணியை, ஹட்டன் மற்றும் கூடலூர் போன்ற வனப்பிரதேசத்திலும், பின்னர் வவுனியாவிலும் வனத்தை சாட்சியாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை முழுமையான திருப்தியை தராவிட்டாலும், இந்த முயற்சி வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். அத்தகைய முயற்சியை மேற்கொண்டமைக்காக ஆசிரியரை பாராட்டலாம்.

மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்


எமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.

மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய, வழங்கி வருகின்ற சக்திகள் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை இலங்கையின் சம பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியமையும், இம்மக்களின் உழைப்பின் மீதான தீவிர சுரண்டலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளமையும் இம் மக்கள் கல்வியை மட்டுமே தமது விமோசனத்துக்கான வழிகாட்டியாக காணும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழலுக்கு வரலாறு முழுவதும் இலங்கை அரசாங்கங்கள் மலையக மக்கள் மீது மேற்கொண்ட பேரினவாத அடக்குமுறைகளின் பங்கும் குறிப்பிட்டுச் செல்லத்தக்கதே.

எனவே, கல்வியை மட்டும் தமது விமோசனமாக மலையக மக்கள் இன்று நோக்குவதற்கும் மலையக அரசியல் சக்திகளின் இயலாமைக்கும் நேரடியான உறவுண்டு. ஒடுக்கப்பட்ட இனம் என்ற நிலையில் அவர்களின் அடிப்படை அரசியல் பொருளாதார உரிமை பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு, கல்வியினூடாக தனித்தனியாக விமோசனம் காணுதல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ளும் போக்காகும். இப்போக்கானது கல்வியை பெறுவதன் ஊடாக தமது சமூக அடையாளங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி நிலைநிறுத்துவதிலும் பார்க்க அதனை மறைக்கும் முயற்சிகள் கற்றவர்களிடத்தில் அதிகமாக இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கல்வி மலையகத்தில் ஏற்படுத்தி வரும் ஒரு எதிரிடையான மாற்றமாகும். இந்த மாற்றமானது முடிவில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனையும் தீர்க்க எத்தனங்கள் எதுவுமின்றி இருக்கும் அரசியல் சக்திகள் தொடர்ந்து கோலோச்சுவற்கும் வழிவகுக்கிறது.

மேற்குறித்த காரணங்களினால் மலையக மக்கள் இன்று கல்வி தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை சாதகமில்லாத அல்லது அவசியமற்ற ஒரு அம்சமாக நோக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வெளிப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அதேவிதமான போக்கே நிலவும் வாய்ப்பு உள்ளது என்று கூறமுடியாது. இன்றைய கல்வி முறை வளர்க்கும் சுய ஈடேற்றத்தின் மீதான நாட்டம் சமூக பிரக்ஞை அக்கறையின் மீதான விரோதங்கள் மீதான கேள்விகளைக் கேட்பதற்கான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் பொதுவில் நாட்டிலும் மலையகத்தில் இடம்பெற்றே வருகின்றன. அதன் வெளிப்பாடுகளை மலையகத்தில் வரலாற்றிலும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மலையக சமூகத்தின் கல்வி மீதான அக்கறையானது இறுதி பகுப்பாய்வில் சாதமகமான ஒரு அம்சமே.

மலையக மக்களின் கல்வி உரிமை தொடர்பாக ஆதிக்க அரசியல் தலைமைகள் உதட்டளவில் பேசினாலும், “அவர்களுக்கு கல்வி வழங்கினால் அது தமது ஆதிக்க அரசியலுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வந்துவிடும்” என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளூர உண்டு. மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கினால் தமது ஆதிக்கத்துக்கு பாதிப்பு என்று சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குரிமையை மறுத்தமைக்கும் இவர்களின் கல்வி உரிமை மறுப்பிற்கும் இடையே வேறுபாடு இல்லை. எனினும் மக்கள் கல்விக்கு வழங்கம் முக்கியத்துவம் காரணமாக அப்பியாசக்கொப்பிகளையேனும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் “அரசியல் பணியை” மலையக புதுத்தலைமைகளும் செய்து வருகின்றனர். தனது பிள்ளைக்கு அப்பியாசக்கொப்பி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு அரசியல் பிரச்சினையாக தெரிவதில்லை. இவற்றுக்கு அப்பால் எமது கவனத்துக்குட்பட வேண்டிய முக்கிய அம்சமாக இருப்பது இவர்கள் பாடசாலைக் கல்வியில் செலுத்தும் தாக்கமாகும்.

மலையகத்தில் கற்றவர்களுல் அதிகமானவர்கள் ஆசிரியர் சேவையில் இருக்கின்றமையால் ஏனைய சமூகங்களை விட மலையகத்தில் பாடசாலை முக்கிய இடமாக நோக்கத்தக்கதாகும். சமூகத்தில் கருத்துக்களின் ஊடாக வழிநடாத்தக்கூடியவர்கள் இங்குதான் உள்ளனர். இதனை உணர்ந்துள்ள அரசியல் தலைமைகள் பாடசாலைகளில் தமது அரசியல் செல்வாக்கை வெவ்வேறு வழிகளில் நிலைநிறுத்தி பாடசாலையை தமது ஆதிக்கதில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றும் ஆசிரியர்கள் குறைவே. அதிபர்களில் ஏக பெரும்பான்மையானவர்கள் தமது அதிபர் பதவியை அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றமையினால் குறித்த அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளையின் நிர்வாகம் அதன் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச பணிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இன்று மலையகத்தின் பல பாடசாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சில அதிபர்களினால் தமது கடமைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் போது அதிபர்கள் சொல்லும் பதில் நீங்கள் இது தொடர்பாக யாரிடமும் முறையிடலாம். நான் பயம் இல்லை என்பதே. இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் அரசியல் செல்வாக்கே காரணம் என மக்கள் அறிவர். இந்த நிலை இலங்கை முழுவதற்கும் ஏற்புடைய அம்சமாகும். எனினும் இந்நிலையானது ஏனைய சமூகங்களை விட கல்வி அடைவுகளில் பின்தங்கியுள்ள மலையக மாணவர்கள்; கல்வியை பெற்றுக் கொள்வதில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த கட்டிடங்களில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு வழங்க விடாது தடுத்து அதனை தமது அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மலையகத்தில் பலம்பெரும் தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் முயன்றமை பலரும் அறிந்ததே. மலையக மக்களின் கல்வியில் மலையக தலைமைகள் கொண்டிருக்கும் அக்கறையின் இயல்பு வெளிப்பட முதலாவது சந்தர்ப்பம் இது அல்ல என்ற போதும், தலவாக்கலை பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இதனை நேரடியாக உணர வாய்ப்பளித்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரின் போராட்டங்களும் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளாலுமே அக் கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேல் கொத்மலைத் திட்டம் என்ற மலையக மக்களின் இருப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நிலமைகள் அந்த அழிவில் இருந்து கிடைத்த சில சலுகைகளையும் மக்களுக்கு வழங்க மறுப்பதில் இருந்து அவர்களின் மக்கள் சார்புத் தன்மையை அறியலாம். கல்வி உரிமையைப் பொறுத்தவரை யாரெல்லாம் இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் அதன் அழிவுசார் அம்சங்களையும் வெளிப்படுத்தி விமர்சிப்பவர் அனைவரும் இருக்கும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். எனினும் இந்தக் கல்வி முறையை மெச்சுகின்ற அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்களும் கூட இக் கல்வி முறையின் பெறுபேறுகள் அனைவருக்கும் சமமாக எட்ட வேண்டும் என்று எண்ணுவதில்லை.

எனவே மலையகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியே மலையக மக்களின் வாழ்வை மாற்ற ஒரே வழி என்று அரசியல்வாதிகள் கூறும்போது, அவர்களிடம் திருப்பிக் கேட்பதற்கு பல கேள்விகள் மலையக மக்களுக்கும் மலையகத்தின் கல்வி முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர்களுக்கும் உண்டு.

மலையகத்தில் இருந்து - விஜயகுமார்
நன்றி - tamicircle

‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை - என்.சரவணன்



சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை ‘கௌரவத் தாய்’ (அபிமான் மாத்தா) என்கிற விருதை மகளிர் தினமான நேற்றையதினம் அளித்தது.

“இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் உலகெங்கிலும் உள்ள நீதிமான்களின் மனசாட்சிகளைத் தட்டியெழுப்பும் வகையில், மானிட தர்மத்தினதும் சமூகச் சகோதரத்துவத்தினதும் கொடியை இலட்சிய தாகத்துடன் கரமேந்தி, அபரிமிதமான துணிவோடு முன்னெடுத்துச் செல்லும் தனிச்சிறப்பு வாய்ந்த போராட்டத்துக்காய் சந்தியா எக்னலிகொட அவர்களுக்கு ஐக்கிய மகளிர் முன்னணி 2014ஆம் வருடத்திற்கான ‘கௌரவத் தாய்’ விருதினை மிகுந்த பெருமிதத்தோடு வழங்கி மகிழ்கின்றது.”

இவ்வாறு அந்த மண்டபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த விருதினை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி கௌரவித்தார். எப்போதும் போல சந்தியா எக்னலிகொட தனது கையில் பிரகீத் எக்னலிகொடவின் புகைப்படத்தை தாங்கியபடியே இருந்தார்.

“சந்தியா எக்னலிகொட போராடியது தனது கணவருக்காகவோ அல்லது தனது பிள்ளையின் தந்தைக்காகவோ மட்டும் அல்ல. காணாமல்போன அனைத்து கணவன்மார்களுக்காகவும் அவர் போராடி வருகிறார். காணாமல்போன அத்தனை தந்தைமார்களுக்காகவும் அவர் போராடிவருகிறார். சந்தியா எக்னலிகொடவுக்கு இந்த விருதை வழங்க அந்த வலுவான காரணம் ஒன்றே போதும்” என ஐக்கிய பெண்கள் முன்னணியின் தலைவி டயனா கமகே, ‘கௌரவத் தாய்’ என்கிற விருதை சந்தியா எக்னலிகொடவுக்கு வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போது கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த ‘கௌரவத்தாய்’ விருது வழங்கும் விழாவை நாங்கள் ஏற்பாடு செய்ததே ஒடுக்கப்படும் பெண்களின் போராட்டங்களுக்கெல்லாம் வலு சேர்ப்பதற்காகவே.
இந்த முறை இந்த விருதுக்கு உரிய ஒருவர் யார் என்பதை நாங்கள் தேடிக்கொண்டிருந்தபோது எங்களுக்கு சந்தியா எக்னலிகொட உடன் நினைவுக்கு வந்தார்.

அவர் யாரையும் சபிக்காமல், எவரையும் துவேஷிக்காமல் கடந்த நான்கு வருடங்களாக காணாமல்போன கணவர்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் இடைவிடாத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

தனது கணவர், தனது பிள்ளையின் தந்தை இன்னமும் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட அவர் அறிய மாட்டார். ஆனால், தேடிக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு தெரியும் அவர் தேடியலைவது அவரது கணவரை மட்டுமல்ல, காணாமல்போன அத்தனை தந்தைமார், கணவர்மார், பிள்ளைகள், சகோதரர்கள் அனைவருக்காகவுமே. நலிந்து சோர்வுற்றிருக்கும் அனைத்து பெண்களையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அந்த முன்னுதாரணத்திற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

சந்தியா எக்னலிகொட உரையாற்றும் போது…

“இந்த விருது பிரகீத்தின் பேரால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது எனக்கு மட்டுமல்ல, வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என இந்தத் தீவின் அனைத்து பிரதேசங்களிலும் காணாமல்போனோருக்காக போராடி நலிந்துபோன அனைவருக்கும் சொந்தமானது. எனவே, இந்த தேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து கணவர்மார், தந்தைமார், சகோதரர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

இந்த நேரத்தில் இன்னொருவரையும் நினைவுகொள்கிறேன். சகோதர பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சா அவர்களின் தாயார் மனோராணி சரவணமுத்து அவர்கள். அவரின் துணிச்சல் பற்றி முக்கியமாக நாம் நினைவுறுத்த வேண்டும். ரிச்சர்ட் டி சில்வா காணாமல் ஆக்கப்பட்டவரல்ல. அன்று மிகவும் கொடூரமான ஆட்சி நிலவியபோது ‘அன்னையர் முன்னணி’ அமைப்பை கட்டி எழுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தபோது மனோராணி  என்கிற அந்தத் தாய் தனது பிள்ளையை உயிர்போன சடலமாக கண்டெடுத்தார்.

இத்தனைக்குப் பின்னும் அவர் துணிச்சலாக, சமூக பலமற்ற நிலையில் பல தாய்மாரை இணைத்துக்கொண்டு அன்னையர் முன்னணியைக் கட்டியெழுப்பினார். அவர் அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் போராடியவர். பலரை காணாமல்போகச்செய்யும் அந்த கொடூர நிலைக்கு எதிராகப் போராடும் ஒரு பயணத்தை தோற்றுவித்து, அனைவருக்கும் முன்னோடியாக இருப்பவர்  அவர். அது போல அதற்கு நிகராக 80களின் நடுப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் பல தாய்மார் ‘அன்னையர் முன்னணி’யை தோற்றுவித்து போராடியதையும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

இந்த நாட்டில் காணாமலாக்கப்படும் கலாசாரத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதிகாரம் எப்படி வேறுபட்டாலும் யார் கைகளுக்கு மாறினாலும் ‘காணாமலாக்கப்படும் கலாசாரம்’ வேறுபட்டதில்லை. அன்று அன்னையர் முன்னணி மூலம் அரசியல் இலாபமடைந்து அதிகாரத்துக்கு வந்தவர்களே இன்று ஏனையோரை காணாமல் போகச்செய்கின்றனர்.

எனவே, காணாமல்போவோர் அற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்ப மக்கள் ஒன்றுபடவேண்டும். பெண்களோ, ஆண்களோ, சிங்களமோ, தமிழோ, முஸ்லிமோ, பரங்கியரோ என்று பிளவுபடத் தேவையில்லை. நீதிக்காக போராட எந்த எல்லையும் அவசியமில்லை. அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை ஓயாமல் இருப்பதற்கு திடசங்கற்பம் கொள்வோம். இது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான போராட்டமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் காணாமல்போகும் வரை காத்திருக்கவும் தேவையில்லை. இது மனித நேயத்துக்கான போராட்டம். காணாமல்போனோர் பற்றியும், கொல்லப்பட்டவர்கள் பற்றியும் உண்மையை எடுத்துரைக்க சக்தியற்ற இந்த சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்களுக்கான நீதியை ஏற்படுத்தும் பலம் மட்டும் எங்கிருந்து வரும். இந்த விருது அப்பேர்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் முக்கியமானது.

நாமெல்லோரும் ஒன்றிணைந்து, ஐக்கியப்பட்டு உழைத்தால் மட்டுமே இந்த நாட்டில் காணாமல் போவோர் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.”

இலங்கை அரசை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளரும் கார்ட்டூன் ஓவியருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி  24 காணாமல்போனது தொடக்கம் அவரை தேடியலைந்து, உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் முறைப்பாடுகளுக்கு மேல் முறைப்பாடு செய்தும், அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், கண்காட்சிகள் நடத்தியும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருபவர்.

அது மட்டுமல்லாது இலங்கையில் சமீபகாலமாக தொடரும் ஜனநாயகத்துக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்த்து பணிபுரிபவர். பெண்கள் அமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், ஊடக உரிமை போராட்டங்கள் என அனைத்திலும் கலந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கி வருபவர்.

சமீபத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக பெண்களை ஒன்று சேர்த்து அமைப்பொன்றை உருவாக்கிய சந்தியா, ஜனாதிபதியின் மனைவியையும் அதில் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், காணாமல்போன தனது கணவர் குறித்து ஜனாதிபதியிடம் பலமுறை முறையிட்டும் தகுந்த பதிலில்லாத நிலையிலேயே தான் ஐ.நா வரை செல்ல நேரிட்டது என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு நேற்றிரவே ஐ.நா மனித உரிமைகள் தொடர் கூட்டத்தோடு தொடர்புடைய கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்காக அவர் ஜெனீவா நோக்கி பிரயாணமாகவிருந்தார்.

இந்த விருதினை எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்தாலும் சந்தியா எக்னலிகொட தகுந்த முறையில் மேடையை பாவித்தார் என்றே கூற வேண்டும். அவரின் பேச்சு மிகவும் துல்லியமான, அரசியல் ஆழமிக்க ஒரு பேச்சு. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் மனிதர்கள் காணாமல்போவதில் மாற்றமில்லை என்பதை எடுத்துரைத்ததுடன், ஐ.தே.க. காலத்தில் ரிச்சர்ட் டி சில்வா காணாமல்போனதன் பின்னணியையும் அவரது தாயாரின் வரலாற்றுப் பணியையும் கூறத்தவறவில்லை.

(என்னுடன் மொழிபெயர்ப்பில் இணைந்துகொண்ட சகோதரி லறீனாவுக்கு நன்றி)

நன்றி Maatram - on March 9, 2014 

'முகவரியற்ற கடிதங்கள்': மலையக தபால் சேவையின் அவலம் - பி.பி.சி


இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட தோட்டங்களும் 1500க்கும் மேற்பட்ட தோட்ட உட்பிரிவுகளும் இருக்கின்றன.
இந்தத் தோட்டங்களுக்காக கடிதங்களைக் கொண்டு சேர்ப்பதற்காக இலங்கை அரசு 5 ஆண்டுகளுக்கு முன்னர் நியமித்த 400 தபால் ஊழியர்களில் 386 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை தான் நிரந்தர நியமனம் கிடைத்திருக்கிறது.
இவர்களில் 141 பேர் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சுதந்திர இலங்கையில் மலையக தோட்டப்புற மக்களுக்கு உரிய முறையில் கடிதங்கள் கூட வந்து சேர்வதில்லை என்பது இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்துவருகிறது.

இந்தப் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்கான கோரிக்கைகளை மலையகத்தின் பிரதான அரசியல்கட்சியும் தற்போது அரசின் பங்காளியாகவும் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, 2007-ம் ஆண்டில் மலையகத் தலைவர்களில் ஒருவரான எம்.எஸ். செல்லசாமி துணைத் தபால்துறை அமைச்சராக இருந்தபோது தோட்டப்புற இளைஞர்களுக்கு முதற்கட்டமாக தற்காலிக தபால்காரர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

வீடுகளுக்கு இலக்கங்கள் இல்லை
'இரண்டு நூற்றாண்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதலாவது முயற்சி 2007-ம் ஆண்டில் தான் எடுக்கப்பட்டது. எனினும் அப்போது தேவையான அளவுக்கு நியமனங்களை வழங்க முடியாமல் போனது' என்று தமிழோசையிடம் பேசிய முன்னாள் தபால் துணை அமைச்சர் எம்.எஸ்.செல்லசாமி கூறினார்.

முகவரியை உறுதி செய்வதில் தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது: தபால்மா அதிபர்
'தோட்டங்களில் வீடுகளுக்கு இலக்கங்கள் கிடையாது, சீரான முகவரி கிடையாது, இப்படியான பிரச்சனைகள் பற்றி மீண்டும் ஆய்வு நடத்தி இந்தத் தபால் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும்' என்றும் செல்லசாமி தெரிவித்தார்.

நாட்டின் தபால் துறையை முன்னேற்ற வேண்டும் என்று தற்போதைய அரசாங்கத்தின் மகிந்த சிந்தனை கொள்கைத்திட்டம் கூறுகிறது.
ஆனால் மலையக தோட்டப்புறங்களில் தபால் ஊழியர்களை நியமிப்பதில் ஏற்பட்டுவரும் தாமதம் ஏன் என்று இலங்கையின் தபால் மா அதிபர் ரோஹண அபேரத்னவிடம் தமிழோசை வினவியது.

'தோட்டப்புற தபால் ஊழியர்களுக்களில் முதற்கட்டமாக 2007-ம் ஆண்டில் 400 பேருக்கான நியமனம் வழங்கப்பட்டது. இவர்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்காக தனியான ஆட்சேர்ப்பு நடைமுறையை உருவாக்குவதில் தான் இந்தத் தாமதம் ஏற்பட்டிருந்தது' என்றார் இலங்கையின் தபால்துறைத் தலைவர்.

இலங்கையிலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் இந்த நியமனங்கள் போதாது. பல தோட்டங்களில் வீடுகளுக்கு இலக்கமில்லை. முகவரி சரியாக இல்லை என்பது போன்ற பிரச்சனைகளும் உள்ளன. அவற்றை எப்படி நீங்கள் தீர்ப்பீர்கள் என்றும் தமிழோசை வினவியது.

'மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. தோட்டங்களுக்கு தபால் சேவையை வழங்குவதில் தாமதங்கள் இருந்துவருவது எங்களின் கவனத்திற்கும் வந்துள்ளது.,புதிதாக நாங்கள் நடத்திவரும் ஆய்வின் பின்னர் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்' என்றார் தபால் மா அதிபர்.
21-ம் நூற்றாண்டில் கடிதங்கள் கூட வந்துசேராத தோட்டங்களிலிருந்து தான் இலங்கையின் தேசியப் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி பி.பி.சி

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மகளிர் தினம்


ஆண்டு தோறும் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் மிகவும் அர்த்தபுஸ்டியானதாக அமையவேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனின் வருடாந்தம் இச்சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை ஒரு களியாட்ட நிகழ்வாக நடத்தி கொண்டிருப்பது எமது பெண் சமுதாயத்தின் விடிவெள்ளிக்கு மற்றுமோர் தடைக்கல்லாக அமைவதுடன் பெண்கள் எதிர்நேக்கும் சமூக பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவதற்கு ஏதுவாக அமையாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.

உழைக்கும் பெண்கள் தாம் எத்தகைய சவால்களை சந்திக்கின்றனர்? அது குடும்பமாகவும் இருக்கலாம் அல்லது சமூகமானதாகவும் இருக்கலாம். அதை தகர்த்தெரிந்து தாம் விரும்பும் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைத்துக்கொள்ளும் உரிமை அவர்களினாலே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

அதனை விடுத்து மலையகத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் மகளிர் தினம் ஆண் தலைவர்களினால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுவதுடன், அன்றைய தின நிகழ்வுகளிலும் ஆண் தலைமைகள் கௌரவிக்கப்படுவதும் மேடைகளில் அவர்களது முழக்கத்தையுமே  அதிகமாக காணமுடிகின்றது. பொதுவாக மகளிர் தின திட்டமிடலைகூட ஆண் தலைவர்களே தங்கள் வசம் முன்னிலைப்படுத்திவருவது இதன் முக்கியத்துவமாகும்.

கடந்த பல வருடங்களாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட உழைக்கும் பெண்கள் தினத்தில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் என்ன? அவைகளுக்கு நடந்தது என்ன என்பது பற்றி திருப்பி பார்க்கும்போது அது ஒரு நிகழ்வாகவே காணப்படுவதுடன், ஆழமான அல்லது தெளிவான சிந்தனையை தூண்டக்கூடிய நிகழ்வுகள் மிகவும் குறைவு என்பதையே சுட்டிக்காட்டமுடிகிறது.

தொழிற் சங்கங்களினாலும் அரச சார்பற்ற அமைப்புக்களினாலும்  சிவில் சமூகங்களினாலும் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தினங்கள் தங்களது நிறுவன மயப்படுத்தலின் நோக்கத்திற்காகவும் தங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டிக்கொள்ளக் கூடியதான நிகழ்வுகளே அதிகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இன்று உழைக்கும் பெண்கள் தினத்தில் கலந்து கொள்ளும்  பெண்களில் எத்தனை பேருக்கு மகளிர் தினம் தொடர்பான விடயம் புரிந்திருக்கின்றதென்ற கேள்வியை தொடுக்கக் கூடிய ஓர் துர்ப்பாக்கிய நிலைகூட அதிகமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அன்று பெருந்தோட்ட தொழில் முறையில் காணப்பட்ட சம்பள முரண்பாட்டிற்கு 17.50 பஞ்சப்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்பு இருபாலாருக்கும் சம சம்பளம் கிடைத்த பின்பு இருபாலாரும் சமநிலையை அடைந்துள்ளதாக சிலரால் கூறப்படும் கருத்து எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை. ஏன்னென்றால் இன்றும் கூட ஆண்களும் பெண்களும் சம சம்பளத்தையே நாட்சம்பளமாக பெறுகின்றனர் ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலை நேரம் எவ்வாறு காணப்படுகின்றது,

பெண்களை மேற்பார்வை செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கான வேலைப்பளு போன்றவற்றை  தீர்மானிப்பது யார் என்பதை கவனத்தில் கொள்வதில்லை அத்துடன் அனைத்து குடும்பங்களிலும் முடிவெடுக்கும் பொறுப்பும் ஆண் தலைமைகளிடமே காணப்படுகின்றது. அந்த வகையில் உழைக்கும் பெண்களின் சம்பளத்தைக் கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்னும் பெருந்தோட்ட தொழிலாளர்களிடையே காணப்படுகின்றது.

 எல்லா நிகழ்வுகளிலும் மலையக பெண்கள் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களாகவும் தலைவர்களுக்கு மாலை அணிவிப்பவர்களாகவும் வீட்டிலுள்ள ஆண் தலைமைகளின் அனுமதியோடு வெளியில் செல்லும் நிலை இன்னும் மாற்றமடையவில்லை. அத்துடன் சமூக நிறுவனங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பது  எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது. உதாரணமாக தொழிற்சங்கங்கள், சமூக நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், பொது அமைப்புகளில் பெண்களின் பங்கு எத்தகையது அவர்களின் தலைமைத்துவம் போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடைகாண வேண்டிய மாபெரும் பொறுப்புக்களை எம்மிடையே வைத்துக்கொண்டிருக்கின்றோம்.

தோட்டங்களில் அதிகமாக தொழில் செய்பவர்கள் பெண்கள்,அதிக வருமானத்தை ஈட்டுபவர்கள் பெண்கள், அதிகமாக தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது மற்றும் சந்தா செலுத்துவது பெண்கள். அதேபோல பொது நிகழ்வுகளுக்காக நன்கொடைகளும் இவர்களினாலே அதிகளவு வழங்கப்படுகின்றது. உதாரணமாக தோட்டங்களில் அமைக்கப்பட்டுவரும் கோயில்கள். ஏனைய மத ஸ்தாபனங்களுக்கு இவர்களது பொருளாதார பங்களிப்பு இன்றியமையாதவொன்றாகும். இருப்பினும் இவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை, தலைமைத்துவம் பங்கீடு, சமவுரிமை என்பது விரல் விட்டு எண்ணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் ஏனைய துறைசார் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெருந்தோட்ட தொழில்சார் பெண்களுக்கு மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. அதாவது தொழிற்சார் உரிமைகள், வேலைத்தள சுகாதார பாதுகாப்பு போன்ற விடயங்களில் பெருந்தோட்ட பெண்கள் மிகவும் பின் தள்ளப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

இவைகளுடன் பெருந்தோட்டப் பெண்கள் குடும்ப வன்முறைகள், சமூக வன்முறைகள் போன்றவற்றுக்கும் பெரிதும் முகம்கொடுக்கும் அதே வேளை, கலாசார பின்னடைவையும் எதிர்நோக்கி வருவது இவர்களின் மற்றுமொறு வளர்ச்சிப்படியின் தடைகளாக அமைகின்றது. இவைகளுடன் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட சில வேலைகளில் தட்டிப்பறிக்கப்படுகின்றது. ஆகவே சமூக பொறுப்புவாய்ந்த நிறுவனங்களாக செயற்படும் தொழிற்சங்கங்கள், சமூக மற்றும் சமய பொது நிறுவனங்கள் இவர்களில் அக்கறை செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

அத்துடன் வெறுமனே தோட்ட தொழிலாளர்கள் அல்லது சந்தா செலுத்துபவர்கள் என்றில்லாது எமது சமூகத்தைச் சேர்ந்த ஏனைய பெண்கள் தொழில் புரியும் தொழில் நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் தனிநபர் சாலைகள் பற்றியும் எமது கவனத்தை செலுத்துவது அவசியமானது. அந்தவகையில் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பெண்கள் ஈடுபாடு காட்டிவரும் ஆடைதொழிற்சாலை, தனியார் நிறுவனங்கள், சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களில் தங்கியிருக்கும் பெண்களின் நிலைப்பாட்டிலும் அக்கறை காட்டவேண்டியது சமூகத்தின்பால் நாம் செலுத்தும் அக்கறையாகும்.

இதைவிட  இன்று மலையகத்தில் இருந்து வீட்டு வேலைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது இவைகள் பற்றிய அண்மைக்கால பத்திரிகை மற்றும் ஏனைய  ஊடகங்களின் செய்திகள் எம்மை மிகவும் சிந்திக்கவும்  செயற்படவும் தூண்டுகின்றது. இவர்களுக்கு தொழில் உரிமைகள், தொழில் பாதுகாப்பு சம்பளம் என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அத்துடன் இன்றுவரை இவர்கள் முறைசாரா தொழிலாளர்களாகவே கணீப்பீடு செய்கின்றனர் ILOஇன் 2008 ஆம் ஆண்டு அறிகக்கையின்படி 15.5% பெண்கள் மட்டுமே சம்பளம் பெறுகின்ற வேலையாட்களாக உள்ளனர் 2010 ஆண்டு புள்ளி விபரத்தின்படி இலங்கையில் முறைசார தொழிலாளர்கள் 62.6% ஆக காணப்படுவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளனர். சர்வதேச தொழில் ஸ்தாபனம் தனது 100 ஆவது அமர்வில் கடந்த 16.06.2011 இல் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அன்றைய அச்சூழலில் இலங்கை அரசும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது ஆனாலும் இன்னும் இலங்கை அரசாங்கம் இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்காத நிலை காணப்படுகின்றது. அத்துடன் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான சங்கம் இலங்கையில் கடந்த 2012.03.05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. இதன் பதிவு இலக்கம் 8242 இது செங்கொடி சங்கமும் செங்கொடி பெண்கள் இயக்கமும் அயராது எடுத்த முயற்சியின் வெற்றியாக காணப்பட்டது. தொடர்ந்தும் இவர்களை சட்டரீதியான தொழிலாளர்களாக அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுடைய  நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம்,           ஊழியர் சேமலாப நிதி/ஊழியர் நம்பிக்கை நிதி, அடிப்படை சம்பளம், தொழில் ஒப்பந்த நிர்ணயம்,  தொழில் பாதுகாப்பு, பாதுகாப்பான வேலை தள சூழல் என்பன இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். ஆகவே இதன் விளைவு பாரதூரமானதாகவும் சமூக பிரச்சினைகளாகவும் உருவாக்கப்பட்டதுடன் இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர் பெண்களாகவும் கணீப்பீடு செய்யப்பட்டுள்ளது மற்றுமோர் முக்கிய விடயமாகும். 

முறைசாரா தொழிலாளர்களில் வீட்டு வேலை செய்பவர்கள் மாத்திரமன்று பராமரிப்பு வேலை, விவசாயம், மீன்பிடி, வீட்டுத்தோட்டம் போன்ற கடினமான தொழில்களில் ஈடுபடுபவர்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயம். பெண்களுக்கான உரிமை 
சாசனம் 1840 ஆம் ஆண்டளவில் இலண்டனில் நடைபெற்ற அனைத்துலக அடிமைத்தனத்திற்கு எதிரான மாநாடு இடம்பெற்றபோது முதலாவது பெண்கள் உரிமை சாசனம் முன்மொழியப்பட்டதாக வரலாறு கூறினாலும் மலையக பெருந்தோட்ட துறைசார் மற்றும் ஏனைய துறை சார்ந்த பெண்கள் இன்னும் அடிப்படை உரிமை தொடர்பாகவும் அவர்களை இதில் விழிப்புணர்வு அடையச் செய்தலிலும் கவனம் செலுத்தக் கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் சமூக நீரோட்டத்தில் எமது பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான வலுவான நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை. இதில் மற்றுமொரு பக்கத்தை மறந்துவிட முடியாது. அதுதான் ஜனநாயகத்தில் பங்குபற்றவும் பேரம் பேசவும், ஆண்களோடு அதிகார வெளியை பகிர்ந்துகொள்ளவும் எமது பெண்கள் வலுவான நிலையை அடைய வழியமைக்கவேண்டும்.

அதன் அடிப்படையில் பிரதேச சபையில், மாகாண சபையில் மற்றும் பாராளுமன்றத்தில் எமது பெண்களின் பங்குபற்றுதல் எந்தளவு என்பது சொல்லித் தெரிந்துகொள்ள தேவையில்லை. இதைவிடவும் பெருந்தோட்டத் துறையில் 60% இற்கு மேல் பெண் தொழிலாளர்கள் வேலை செய்தாலும் அவர்களது ஊதியத்தை தீர்மானிக்கும் சம்பளவுயர்வு கைச்சாத்திடும் ஒப்பந்த அமர்வில் பெண் பிரதிநிதித்துவம் என்பது பூச்சியமாகவுள்ளதையும் மறந்துவிட முடியாது.

அத்துடன் சமூக மட்டத்திலான நிறுவனங்களில் அதாவது கூட்டுறவுச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், சமய நிறுவனங்கள், மரண உதவிச் சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் என்பவற்றில் பெண்களின் உறுப்புரிமை எந்தளவு காணப்படுகின்றது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இவைகளுடன் சம்பந்தமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதுடன் அங்கு பால்நிலை, பால்நிலை பாகுபாடு, பால்நிலை சமத்துவம் என்பன பற்றிய வேலைத் திட்டங்களை சமயாசமயத்தில் கவனிக்கப்படுவதுடன், திட்டமிடப்பட்டுள்ள சகல வேலைத்திட்டங்களிலும் பால்நிலை சம்பந்தமான விடயம் காணப்படுகின்றதா என்பதை கண்காணித்தல் தற்போதைய நிலையில் அத்தியாவசியமாகின்றது.

வெறுமனே குடும்ப பொறுப்புக்கள் பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதப்படும் பாரம்பரியமான ஓர் எதிர்பார்ப்பும் மனப்பதிவும் எவ்விதமான கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலை மாற்றியமைக்கப்பட்டு சமூக ரீதியிலான பங்குபற்றல் என்பது பெண்களுக்கு அத்தியாவசியமானது. இது பெண்களின் இயல்புக்கும், ஆற்றலுக்கும் முக்கியமானது என்பதை புரிந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. ஏங்கல்ஸ்  குறிப்பிட்டது போல பெண்கள் மீதான அடக்குமுறையானது உண்மையில் வர்க்க சமூகத்தின் விருத்தி நிலையுடன் தொடர்புபட்டதாகும். எனவே மலையகம் முன்னெடுக்கும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் மிகவும் அர்த்தபுஷ்டியானதாக அமையவேண்டும் என்பதே முடிவான எதிர்பார்ப்பாகும்.

எஸ். டி. கணேசலிங்கம் 

பிரதி பொதுச் செயலாளர், 
செங்கொடிச் சங்கம். 

மலையக தமிழ் ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்க பணிப்பு


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் கீழ் இயங்கிவரும் கண்டி மலையக ஒலிபரப்பு சேவையில் இடைநிறுத்தப்பட்ட தமிழ் ஒலிபரப்பை ஒருவார காலத்தில் மீண்டும் ஆரம்பிக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை காலை ஊடகத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மலையக மக்கள் கடந்த 30 வருடங்களாக செவிமடுத்துவந்த கண்டி மலையக ஒலிபரப்பு தமிழ் சேவை இடைநிறுத்தப்பட்டமை மலையக மக்களின் கல்வி, கலை, கலாசார, பாரம்பரியம், ஆலய உற்சவங்கள், பண்டிகைகள், விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் தொடர்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த சேவையை உடனடியாக தொடர்ந்து கடந்த காலங்களைப் போல ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே இராதாகிருஷ்ணன் எம்.பி. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்தே, இந்த ஒலிபரப்பு சேவையை ஒருவார காலத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த ஒலிபரப்பு சேவை இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04.03.2014) மத்திய மாகாண சபை கூடியபொழுது தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிலும் இது தெடர்பான செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து தான் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப் பட்டு மீண்டும் இந்த ஒலிபரப்பு சேவையை ஆரம்பிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் மேலும் குறிப் பிட்டுள்ளார்.

நன்றி - தினகரன்

மலையக எழுத்தாளர் சந்திப்பு



மு.சிவலிங்கத்தின் ''வெந்து தணிந்தது காலம்'' சிறுகதை நூல் வெளியீட்டு விழா



மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவர் மு.சிவலிங்கத்தின் 'வெந்து தணிந்தது காலம்' சிறுகதை தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் 16.03.2014 ஞாயிறன்று மாலை  4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்சங்கத்தில், காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில் நடைபெறும்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்துக்கொள்ளும் இவ்விழாவில்  வெளியிட்டுரையை மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரா.சடகோபனும் ஆய்வுரைகளை  எழுத்தாளர் கவிஞர் விமர்சர் மு.பொன்னம்பலம், எம்.வாமதேவன் (காப்பாளர் ம.எ.ம) ஆகியோர் நிகழ்த்துவர். கருத்துரையை மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்துவார்.

இலக்கியப் புரவலர் ஹாசிம்  உமர் முன்னிலை வகிக்கும் இவ்விழாவில் வரவேற்புரையை மன்ற இணைச்செயலாளர்  ஜி.சேனாதிராஜாவும் நிகழச்சி தொகுப்பினை மல்லியப்புச் சந்தி திலகரும் செய்கின்றனர். நூலசிரியர் மு.சிவலிங்கம் ஏற்புரை வழங்குவார். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 

பெண் தொழிலாளியை தாக்கிய தோட்ட நிர்வாக அதிகாரி...








ரொசல்ல டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் 03.03.2014 அன்று குறித்த தோட்டத்தின் அதிகாரி ஜானக தொழிலாளிகளிடம் பிற்பகல் 3 மணியளவில் 20 கிலோ கொழுந்து பறிக்கும் படி கூறியுள்ளார். 20 கிலோ கொழுந்து பறித்தால் தான் இன்றைய நாளுக்கான ஊதியம் கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கதைப்பதற்கு தனது அலுவலகத்திற்கு தொழிலாளிகளை வரும்படி தெரிவித்துள்ளார். அதன் பின் தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்போது புஸ்பராணி என்ற தொழிலாளியை தோட்ட அதிகாரி தீடிரென தாக்கியுள்ளார். 

காரணம் :- குறித்த தொழிலாளி அதிகாரியிடம், ஒரு நாளொன்றுக்கு கூட்டு ஒப்பந்தத்தின்படி 16 கிலோ தான் கொழுந்து பறிக்கவேண்டும். நீங்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் என்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்போது தோட்ட அதிகாரி குறித்த தொழிலாளியை தாக்கியுள்ளார். 

தோட்ட அதிகாரி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் தம்மை தொழிலாளிகள் தாக்கியதாக முறைப்பாடு செய்ததோடு அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழிலாளி புஸ்பராணியை தோட்ட அதிகாரி தாக்கியதாக வட்டவளை பொலிஸாரிடம் தொழிலாளர்கள் முறைபாடு செய்துள்ளனர். குறித்த தொழிலாளி புஸ்பராணி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தோட்ட தொழிலாளர்கள் 04.03.2014 அன்று வேலைக்கு செல்லும்போது தோட்ட நிர்வாகம் தொழிலாளிகளுக்கு வேலை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது. எனவே வட்டவளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

க.கிஷாந்தன்

நன்றி - malayagam.lk

கல்வியில் செயல் நிலை ஆய்வு – கலந்துரையாடல்


17.03.2014 திங்கட்கிழமை அட்டன் ஸ்ரீபாத சிங்கள வித்தியாலயத்தின் கணித அலகில் கல்வியில் செயல் நிலை ஆய்வு (Action Research in Education) எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் அட்டன் கல்வி வலயத்தின் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்களாக சுமார் இருபது ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். மேற்படி கலந்துரையாடலானது அட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு நாமல் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை மட்டத்தில் செயல்நிலை ஆய்வுக்களை மேற்கொண்டு அதனூடாக தற்கால கற்றல் - கற்பித்தல் முறைமையில் காணப்படும் இடர்பாடுகளை குறைத்தல், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான புதிய உபாயங்களை கண்டறிதல், தேசியமட்டத்தில் கல்விக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், இளம் ஆசிரியர்கள் மத்தியிலும் பாடசாலை மட்டத்திலும் செயல்நிலை ஆய்வுகளை பரவலடையச்செய்தல் முதலான நோக்கங்களுக்காக மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இருபது ஆய்வாளர்களால் இருபது தலைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு இன்றுமுதல் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

பொகவந்தலாவை ப. விஜயகாந்தன்

ஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்


இன்னும் அந்த உச்சி மலைக் கற்பாறையின் மேல் உட்கார்ந்துக் கொண்டு, பள்ளத்தாக்கை… பணிந்த நிலப்பரப்பை… நோக்கிக் கண் கொட்டாமல் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான் சுக்குரு என்ற சுப்பிரமணி. உலகத்தின் பாதிப்பிரதேசத்தைத் தன் கண்கள் பார்த்து விட்டப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்… அதி உயரத்திலிருந்து காணும் காட்சியைப் பறவைப் பார்வை என்பார்கள்.

இனி ஒரு காலத்தில்… இந்த மலையில்… இப்படி வந்து உட்கார்ந்து… இவ்வளவு அழகு கொட்டும் பூமியைப் பார்க்க முடியுமா…? அவன் கண்கள் தூரத்துப் பார்வையிலிருந்து அருகில் இருக்கும் மலைத்தொடர்கள் வரை நோட்டமிடுகின்றன… குளிர் வாடையாய், தென்றலாய் அவனைத் தழுவுகின்ற பாசக்காற்று இன்னும் எத்தனை மாதங்களுக்கு உறவாடும்? அவனுக்கு இலங்கை மண்ணை விட்டு இந்தியாவுக்குப் போகவே விருப்பமில்லை.

பெற்றோர்கள் செய்த முட்டாள்தனத்தால் பழியை இவன் அனுபவிப்பதா…? வழிகாட்டத் தவறிய தலைமைகளினால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக் கொண்டிருப்பவர்களில் அவனும் ஒரு திசை தெரியாதவன்.

சுக்குரு கற்பாறையிலிருந்து எழும்பி… கல்லிடுக்கில் பளிங்கு போல் வடியும் காட்டு நீரில் முகத்தைக் கழுவிவிட்டு… இரண்டு வாய் தண்ணீரை அள்ளிக் குடித்து… ஏப்பம் விட்டான். காட்டுத் தண்ணீரைக் குடித்தால், வயிறு நிறைந்து பசியாறியது போல் தெம்பு வரும். சும்மாடு துணியில் முகத்தைத் துடைத்துக் கொண்டு… விறகுக் கட்டைச் சுமப்பதற்குத் தொப்பியை மாட்டினான். இனிமே நமக்கு என்னாத்துக்கு இவ்வளவு வெறகு…?

சுக்குரு விறகுக் கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தை நோக்கி நடந்தான். கவ்வாத்து மலையில் அவன்தான் கடைசி ஆள். சக தொழிலாளர்களெல்லாம், ஒவ்வொரு விறகுக் கட்டுகளோடு பள்ளத்தைக் கடந்து… மலை அடிவாரத்துக்குச் சென்று கருத்தை ரோட்டில் இறங்கி நடப்பது தெரிகிறது.

களைப்போடு விறகுக் கட்டைச் சுமந்து வந்து, அடுத்த வீட்டுச் செல்லம்மா வீட்டு வாசலில் போட்டான். செல்லம்மாக்கா…! இனிமே எனக்கு என்னாத்துக்கு வெறகு…? இருக்கிற வெறகு போதும். அது முடியிறதுக்குள்ள, நாங்க இந்தியாவுக்குப் பயணப் பட்டுருவோம்…! என்றான்.

அப்புடியெல்லாம் சொல்லாத சாமி! நீ மகா தைரியசாலி! சொந்த ஊர்ல போயி புள்ளக் குட்டிகளோட மவராசனா இருப்ப…! ஈந்தியா நம்ம ஊருதானே சாமி…? திரும்பவும் சொந்த ஊருக்குப் போறதப் பத்தி சந்தோசப்பட்டுக்கணும் ராசா…! இந்தா தேத்தண்ணி..! ஆட்டுப்பாலு தேத்தண்ணி..! என்று செல்லம்மா அத்தை சுப்பிரமணிக்கு தேத்தண்ணியைக் கொடுத்து ஆறுதல் கூறினாள்.

அவளுக்கு இந்த வருசத்துக்கே போதுமான தேயிலை விறகைச் சுப்பிரமணி கொண்டு வந்து போட்டிருந்தான். எந்தக் காலமும் அடுத்த வீட்டுச் செல்லம்மா… சுப்பிரமணியின் பிள்ளைகளிடம் உயிராய் இருப்பாள். குழந்தையிலிருந்து பெரிய குமரிகளாய் வளரும் வரை அவளும் ஒரு தாயாக இருந்தாள்.

சுப்பிரமணியின் பிள்ளைகள் அம்மாயி… அம்மாயி… என்று ஆயிரந் தடவை கூப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் என்ன கறிக் குழம்பு வைத்தாலும் கிண்ணம் நிறைய ஊற்றிக் கொண்டு அடுத்த வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுப்பாள்.
சுக்குருவின் பிள்ளைகளும் கறி மாற்றம் செய்து கொள்வார்கள். நாட்டுக் கோழி இறைச்சிக் கறி வைத்தால், எலும்பில்லாத இறைச்சிகளைக் கிண்ணம் நிறையப் போட்டு, அம்மாயிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். செல்லம்மா குடும்பம் கொஞ்சம் விபரம் தெரிந்த குடும்பம். புருசன்காரன் மருதை படிப்பறிவு உள்ளவன்.

அவன் நேரங் காலத்தோடே இலங்கைக்கே பிரஜா உரிமைக்கு விண்ணப்பம் செய்து விட்டவன். நாடு பிரிட்டிஷ்காரனிடமிருந்து, சுதந்திரம் அடைந்ததும், சிங்கள அரசியல்வாதிகளின் ஆட்சி அமைந்ததும், இந்தியத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்ததுதான் முதல் அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

இந்தியத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்த அரசியல்வாதிகள், மீண்டும் இலங்கைப் பிரஜையாவதற்கு விருப்பமானவர்கள் குறிப்பிட்டக் காலத்துக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று சட்டமும் போட்டார்கள். தொழிலாளரின் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள், ஒழுங்காக… தெளிவாக… வழி காட்டவில்லை. விண்ணப்பம் செய்ய வேண்டாம்… போராடுவோம்… என்றார்கள். நடு வழியில் கையை விரித்து விட்டார்கள்! கடைசி நேரத்தில் அப்ளிகேசன் போடுங்கோ என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

இலங்கையில் சிறிமா ஆட்சி வந்தது. இந்தியாவில் லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி வந்தது. இரண்டு நாட்டுப் பிரதம மந்திரிகளும் இந்தியத் தமிழர்களைப் பங்கு வைக்கும் ஒரு பண்டமாற்று ஒப்பந்தத்தைப் போல் ஒப்பந்தம் எழுதி, மக்களைப் பங்கு வைத்துக் கொண்டனர். வழி தெரியாமலும்… அனுபவித்தத் துயரத்தாலும்… தாய், தகப்பன் பொறந்த தாய் நாட்டுக்கே போயிச் சேருவோம் என்ற ஆக்ரோஷத்தால், இந்தியக் குடியுரிமைக்கு மனுப் போட்டவர்களில் சுப்பிரமணியத்தின் தகப்பன் சிவசாமியும் ஓர் ஆளாகும். இந்தியாவுக்கு விண்ணப்பம் செய்து விட்டப் பிறகுதான் மடையன் மாதிரி தவறு செஞ்சிப்புட்டேன் ராக்கம்மா! என்று மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளைகளுக்குத் தெரியாமல் அழுதார்.

சுப்பிரமணி இந்தியாவுக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். முன்பின் அறியாத ஓர் ஊருக்குத் தாய்நாடு என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டு… அங்கே… மூன்று குமரிப் பிள்ளைகளையும், ஒரு மகனையும், லயக்காம்பிரா, பிரட்டுக்களம், அம்மன் கோயில், தேயிலைக்காடு என்ற இந்த நான்கு இடங்களைத் தவிர வேறு எதுவுமே தெரியாத மனைவியையும், வயசாகி நடை தளர்ந்து போன பெற்றோர்களையும் இழுத்துக் கொண்டு, இன்னொரு நாட்டில் போய் எப்படிப் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பது? அவனுக்கு முன் போய்ச் சேர்ந்தவர்களெல்லாம் இங்கே வராதே..!
அந்த நாட்டிலேயே செத்துப் போனாலும் நல்லது..! என்று அழுதழுது எழுதிய கடிதத்தின் மேல் கொட்டிய கண்ணீரை, மைக் கசிவின் மூலம் சுக்குருவினால் அறிய முடிந்தது. அவன் தனது திக்குத் தெரியாத பயணத்தை நினைத்து மனம் கலங்கினான். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவனின் முறுக்கேறிய அவனது உடல் தளர்ந்து, மெலிந்து போய்க் கொண்டிருந்தது.

தாயகம் திரும்புவோர் (Repatriates) என்ற ஒரு புதிய அரசியல் நாமத்தோடு இந்தியா சென்றவர்களின் ஓலங்கள் இந்து மகா சமுத்திரத்தின் பேரலைகளின் இரைச்சலை விட ஓங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. பலரது வாய்ப் பேச்சுத்தான் பரபரப்பைத் தோட்டங்களில் உண்டு பண்ணின. ஏண்டா ஈந்தியாவுக்கு எழுதினோம்…? என்ற ஏக்கப் பெருமூச்சு… நூறு விதமான மக்களின் நெஞ்சறைகளிலிருந்து வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தன.

சுப்பிரமணியின் தகப்பனாரின் சொந்தக் கிராமம்… திருச்சி மாவட்டம், வாலிகண்டபுரம், முருக்கன்குடி என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். அவனது தகப்பன் சிவசாமி நான் செத்துப் போயிட்டா, சிலோன்ல யாரும் இருக்காதீங்க! என் சித்தப்பன் மவன், பெரியப்பன் மவன் எல்லோரும் நஞ்சை, புஞ்சையோட, காணி, பூமியோட செறப்பா வாழுறாங்க. அட்ரஸ்ஸ எழுதிக்கோ… பத்திரமா ரேங்குப் பெட்டியில வச்சுக்கோ! என்று அவர் அன்று கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்தான்.

நாலு, அஞ்சி பரம்பரைக்குப் பொறகு இனிமே… அந்த நாட்டுக்குப் போயி, சித்தப்பன், பெரியப்பன் மகன்மார்களக் கண்டு, கதைச்சி என்னா புரயோசனம்? சுப்பிரமணியின் தலை சுற்றியது. இந்தியப் பயணத்தின் மேல் வைத்த நம்பிக்கை அவனுக்குக் குறையத் தொடங்கியது.

சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 1964-லிலிருந்து, இந்தியா திரும்பிய உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி கண்ணீரில் நனைந்த கடிதங்களையே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என் இரு கண்களிலும் கிடைக்கப்பெற்ற சுக்குருவுக்கு, தங்கவேலு எழுதும் கடுதாசி.. நாங்கள் இப்பவும் கடவுள் கிருபையால் ஷேமமாக இருக்கோம். தம்பி, இந்தியாவுக்கு வர்ற ஆசைய வுட்டுப்புடு…! இங்க இருக்கிறவனெல்லாம் மனுசங்களே கெடையாது. திருட்டு, ஏமாத்து, பொய்தான் வாழ்க்க. வாக்குவாதம் செஞ்சா.. வெட்டு, கொத்து, கொல.. எல்லோருமே கொடூரமானவங்க.

இலங்கையிலே சிங்களச் சனங்க எவ்வளவு தங்கமானவங்க… பண்பு, பாசம் உள்ளவங்கன்னு இந்தியா வந்த பெறகுதான் புரியுது. கையில் மடியில் கொண்டு வந்த பணமெல்லாம் மண்டவம் கேம்ப்போட முடிஞ்சி போச்சி. இப்போ இந்தியா கவருமெண்டு குடுக்கிற ரேசன் சாமான்களை வாங்கித்தான் வயிறு கழுவுறோம். அது தர்மமோ, பிச்சையோ தெரியல்ல.. யாவாரக்கடன், விவசாயக்கடன் எல்லாம் வாங்கினாலும் எங்களால ஒன்னும் செய்ய முடியாது. பெருமாளு, கோவிந்தசாமி, தங்கராசு மூணு பேரும் வடநாட்டுப்பக்கம் போயி காடு வெட்டி, கொஞ்ச காலம் இருந்து சொகமில்லாம செத்துப் போனாங்கன்னு.. பாப்பாத்தி காயிதம் போட்டிருந்திச்சு. அவங்கெல்லாம் என்னா கெதி என்று தெரியாது. நாங்க இன்னும் மண்டவம் கேம்புலதான் இருக்கோம்.

ப்பவும் இலங்கை நெனப்புத்தான். நாங்க தவறு செஞ்சிட்டோம். கேப்பார் பேச்சுக் கேட்டு, இந்தியாவுக்கு எழுதியது விதியாய்ப் போச்சி. கடவுள் உங்களையெல்லாம் நல்லா வச்சிருப்பார். நீங்கள் இங்கே வரும் யோசனையை விட்டு விடுங்கள். வணக்கம்… அன்புள்ள தங்கவேல் குடும்பத்தினர். சுப்பிரமணி கடிதத்தை வாசித்து, மனைவி, பிள்ளைகளுக்குத் தெரியாமல் பெட்டி அட்டாலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். அவன் மனம் இன்னும் தளர்ந்தது.

சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தாயகம் திரும்புவோர் என்ற பெயர் இலங்கையிலும், அக்கரையில் சிலோன் அகதி என்றும் சீர் கெட்ட புனர் வாழ்வுத் திட்டத்தில் தொழிலை அமைத்துக்கொள்ள முடியாமல் இடம் மாறியவர்கள்… விட்டோடிகள் என்றும் பட்டப் பெயர் பெற்றார்கள். விவசாயக் கடன், வியாபாரக் கடன் வாங்கித் தருவதாக முன் நின்றவர்கள், பணத்தை வாங்கிக் கொண்டு மறைந்தார்கள். ஒவ்வொரு அசைவிலும் ஏமாற்று, களவு, கொள்ளை, கொடூரம், நிர்க்கதி என்ற நிலைமைகளை சுப்பிரமணி அறிந்தான்.
அவன் தைரியத்தை இழக்கவில்லை. பாக்கியம்..! நாளைக்கு வேலைக்குப் போகாதே..! வீட்டுல இரு… புள்ளைக ஸ்கூலுக்குப் போனதும் நீயும் நானும் ஒக்காந்து இந்தியா பயணம் பத்திப் பேசணும்…! என்றான்.

ஏற்கனவே இந்தியாவுக்குக் கொண்டு போகச் சாமான் பெட்டி ஒன்று அடித்து வைத்து மேல் விலாசமும் எழுதி வைத்திருந்தான். சிவசாமி சுப்பிரமணியம்- மண்டபம் கேம்பு.

பாக்கியம், சுப்பிரமணி சொல்வதற்கெல்லாம் மறுத்துப் பேசாமல், சம்மதம் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பேதைக்கு உலகம், வாழ்க்கை, உயிர், மரணம் எல்லாமே அவன்தான். பெரிய பாப்பாவுக்கும், சின்ன உங்காளுக்கும், நண்டுக்குட்டிக்கும் மூணு பவுன்ல செயினு… ரெண்டு பேருக்கும் தோடு… தம்பிப் பயலுக்குக் கால் பவுன்ல மோதரம்… ஒனக்கும் ஒரு செயினு… எனக்கும் ஒரு மோதரம்… அப்புறம் உடுப்பு, துணி மணி… கொஞ்சம் சமையல் பாத்திரம் புதுசா வாங்கிக்கணும்… எல்லாம் கெடைக்கப்போற கடைசிச் சீட்டுப் பணத்தில வாங்கிக்கலாம்… சீட்டு எப்பக் கெடைக்கும்..? என்று கேட்டான் சுப்பிரமணி.
இன்னும் கடைசிச் சீட்டுக்கு ரெண்டு மாசம் இருக்கு… சீட்டுச் சல்லி ஐயாயிரத்துல சமாளிச்சுக்கலாம் என்றாள் பாக்கியம். அப்புறம் ஈப்பியெப் பணம்… சர்வீஸ் பணம் கெடைச்சா…செலவுக்கட கடன், கைமாத்துக்கடன், தீவாளி அட்வான்ஸ் எல்லாம் குடுத்து மீதிக்காசு இருக்கும். பத்திரமா அந்தப் பணத்தோடதான் மண்டவம் கேம்பு போயி, வேல வெட்டி கெடைக்கிற வரைக்கும், கைச் செலவுக்கு வச்சிக்கணும்..! யாருக்கும் பத்து சதங்கூடக் கடன் வைக்காம இந்த நாட்ட வுட்டுப் போகணும்…! என்று பெருமூச்சு விட்டான் சுப்பிரமணி.

இது வைகாசி மாதம்.. மழை ஆரம்பமாகும் காலம்.
தேயிலைக்கு ஒரம் போடுற காலமுமாகும்.
சுப்பிரமணி அவனது பாடசாலை நண்பனான சுந்தரத்துடன், ஞாபகத்துக்காக ஒரு புகைப்படம் பிடித்துக்கொள்ள ஆசைப்பட்டான். இருவரும் தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பை முடித்துக்கொண்டு, நகரப் பாடசலையில் ஓ.எல். வரை படித்து, ஒருவன் நான்கு பாடங்களும், மற்றவன் மூன்று பாடங்களும் சித்தியடைந்து, தேயிலைக் காட்டுக்கே தொழிலுக்கு வந்து விட்ட துரதிர்ஷ்டசாலிகள்..!

சுந்தரம்..!
ஒரம் போட்டு முடிச்சதும் ரெண்டு பேரும் டவுனுக்குப் போயி ஒரு போட்டோ புடிச்சுக்குவோம்! இனிமே எந்தக் காலம் நீயும் நானும் இப்படி இருக்கப்போறோம்..? என்று சுப்பிரமணி சொன்னான். அவனது கைகளை இறுகப் பிடித்துக் கொண்ட சுந்தரம், டேய்.. நீ போனப் பொறகு ஒன்னையப் பாக்குறதுக்குக் கட்டாயம் வருவேன். கவலப்படாத..! போட்டோ செலவு நாந்தான் குடுப்பேன்… என்றான். இருவரும் உர மூட்டைகளைப் பிரித்து, தேயிலை நிறைக்குள் இறங்கினார்கள். பகல் 11 மணிக்கெல்லாம் 7-ஆம் நெம்பர் மலையில் உரம் போடும் வேலை முடிந்தது.

தேயிலைச் செடிகளுக்குச் சீமை உரம் (செயற்கை உரம்) போடும் வேலையின் போது தொழிலாளர்கள் உடல் முழுக்கச் சாம்பல் பூசியது போல், முகத்தில் அரிதாரம் பூசிய கோமாளிகள் போலவும் இருப்பார்கள். சீமை உரம் தாவரங்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த ரசாயனக் கலவையாகும்.

இவை கண், மூக்கு, சுவாசத்துக்கு ஊறு விளைவிக்கும். உரம் போடும் வேலை முடிந்ததும் தொழிலாளர்கள், குளிக்காமல் வீடு செல்ல மாட்டார்கள். உரம் போடுவதற்குப் பாதுகாப்பு உடைகள் உண்டு. ஆனால் நிர்வாகம் கொடுக்க மாட்டாது. அவர்களும் கேட்க மாட்டார்கள்.

வேலை முடிய காட்டுப் பீலியில் குளிப்பதற்கு இருவரும் தோட்டத்து ஆபீஸ் ரோட்டு வழியாக இறங்கினார்கள். சுப்பிரமணிக்கு டவுன் பக்கம் போவதற்குக் கொஞ்சம் அச்சம் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. அசோகச் சக்கரம் பொறித்த இந்திய சிவப்புப் பாஸ்போர்ட் வாங்கி, சென்ற மாதத்தோடு இலங்கையில் வசிக்கும் விசா காலம் முடிவடைந்திருந்தது.

தோட்டங்கள் தோறும் பொலிஸ் வண்டி நடமாடியது. இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்குப் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த மண்ணில் பிறந்தவனுக்கு, இன்னொரு நாட்டு விசா குத்தப்பட்டு, இங்கே வசிக்க வேண்டிய கால வரையறை வழங்கப்பட்டது.

இந்தியாவுக்குப் பயணமாகும் கால வரையறை முடிந்தவர்களின் குடும்பத் தலைவனைப் பிடித்துப் பலவந்தமாக வண்டியில் ஏற்றி, கொழும்பு கொம்பனித்தெரு சிறைச்சாலையில் அடைத்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட தொழிலாளியின் குடும்ப உறவினர்களுக்குத் தோட்ட நிர்வாகம் கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளைத் துரிதப் படுத்துவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு குடியேற்ற, வெளியேற்றத் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இணைந்து செயல்படும்.

இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் மேகமலைத் தோட்டக் காரியாலயத்துக்குப் பொலிஸ்காரர்கள் ஐந்து பேர் வந்து காத்திருந்தார்கள். பொலிஸ் வண்டி தோட்டத்துக்கு வெளியே அரை கிலோ மீட்டர் தொலைவில் மறைந்திருந்தது.

குளிப்பதற்குப் போய்க் கொண்டிருந்த இருவரில், சுப்பிரமணியத்தை ஆபீஸிலிருந்தபடி பெரிய கிளாக்கர் அடையாளம் காட்டினார். சிவில் உடையில் வந்திருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் ஓடிப்போய் சுப்பிரமணியைப் பிடித்துக் கொண்டார்கள். திருடனைப் பிடித்தது போல் இழுத்துக்கொண்டு பொலிஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு பறந்தார்கள்…! சுக்குரு தேயிலைக்கு உரம் போட்டவன். அந்த உரம் படிந்த கோலத்தோடு பொலிஸ் வண்டியில் ஏற்றப்பட்டான்…!

சேர்..! சேர்..! நான் எங்க வேணுமுன்னானும் வர்றேன். இப்போ வூட்டுக்குப் போகணும்… குடும்பத்தச் சந்திக்கணும்… மொதல்லாவது நான் குளிக்கணும்…!
கட்ட வஹப்பன் ஓய்…! இந்தியாவே கிஹின் நாப்பான்… வாய் மூடு ஓய்…! இந்தியாவுல போய்க் குளி…! என்றான் ஒரு பொலிஸ்காரன்.

சுக்குருவுக்கு சிங்களம் நன்றாகப் பேச முடியும். அவனும் சிங்களத்தில் பதில் சொன்னான்.
தமுசே மனுச ஜாத்தித…? தமுசெட்ட மனுஸ்ஸகம் தியெனவாத…?
அடோ உம்பட்ட சிங்ஹள கத்தா கரண்ட புளுவன்த..! உம்ப அப்பிட்ட தமுசே கியனவானேத… தெமளா…!

உரையாடல் காரசாரமாகியது… மூன்று பொலிஸ்காரர்கள் ஓடுகின்ற ஜீப்புக்குள் சுக்குருவைக் கொடூரமாகத் தாக்கினார்கள். வாயில் வடிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்ட சுக்குரு, ஒரு பொலீஸ்காரனின் குரல்வளையையாவது கடித்துக் குதறுவோமா என்று திமிறியவன், திடீரெனக் குடும்பத்தை நினைத்து மௌனமானான்.
ஜீப் வண்டி போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஓடியது.

சுந்தரம் பதை பதைத்தவனாய் பாக்கியத்திடம் தகவலைச் சொல்வதற்கு ஓடினான்.

தோட்டத்து கிளாக்கர் பொலிஸ் அதிகாரியின் கட்டளைப்படி சுப்பிரமணி, அவன் மனைவி பாக்கியத்தின் கொடுப்பனவுகளை அவசர அவசரமாகத் தயார் செய்து கொண்டிருந்தார். இன உணர்வு, சமூக உணர்வு, அரசியலில் பொது அறிவு எதுவுமே அற்ற ஜடமாகவே தோட்டத்து உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் விசுவாசிகளாக மட்டுமே இருப்பார்கள்.

பாக்கியத்திற்கும், சுப்பிரமணியத்திற்கும் தோட்ட நிர்வாகம் சேமித்து வைத்திருந்த ஊழியர் சேமலாப நிதியுடன் ஏனைய லீவ் போனஸ், சேவைக்காலப் பணம் என்று இருவருக்கும் மொத்தமாக 30 ஆயிரம் கணக்கு எழுதி, அதில் தோட்டத்துக் கடன் பணத்தையும் கழித்துக்கொண்டு, இருபத்தைந்தாயிரம் ரூபாவை பாக்கியத்தின் கையில் கொடுத்தான் தோட்ட நிர்வாகி.

பாக்கியம்… கொடுத்த பணத்தைக் கணக்குப் பார்ப்பதற்கோ, அதை வாங்கிக் கொள்ளும் நிலையிலோ இல்லை… கட்டிய துணியோடு போனாலும் பரவாயில்லை.. கணவனுக்கு ஆபத்து நடந்துவிடக் கூடாதென்று மழை மழையாய்க் கண்ணீரைப் பொழிந்தாள்.
நண்பனின் மனைவி பாக்கியத்துக்கு, சுந்தரம் பயண ஏற்பாடுகளைச் செய்ய உதவினான்.
சுக்குருவின் குடும்பத்தினருக்குத் தோட்டத்து உறவினர்கள், நண்பர்கள் வேட்டி, சேலை, பிள்ளைகளுக்கு உடுப்பு துணிமணிகள் எடுத்துக் கொடுத்தார்கள். வசதியற்றவர்கள் 2 ரூபாய், 1 ரூபாய் என்று தங்களால் முடிந்ததைக் கொடுத்தார்கள்.
அநேகமானோர் கோழி அடித்து, விருந்து கொடுத்தார்கள். செல்லம்மாக்கா… சுக்குரு குடும்பத்துக்கு உடுப்பு, துணிகளோடு.. அவனது கடைசி மகளுக்கு தான் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தாள். பிள்ளைகள் எவ்வளவோ மறுத்தும், செல்லம்மா திரும்பி வாங்கிக் கொள்ளாமல் கோபப்பட்டாள். இந்தியா பயணம் ஆரம்பமாகிய நாள் முதல் தோட்டத்து லொறியில் (லாரியில்) ஏறும் வரை சுக்குரு வீட்டில் அடுப்பு எரிக்க எவருமே விடவில்லை..! பாக்கியத்துக்குத் தோட்டத்து ஜனங்கள் விபூதி வைத்து, பிள்ளைகளை ஆசீர்வதித்து, கட்டிப்பிடித்து அழுது புலம்பினார்கள்.

புள்ளக்காம்பரா சந்தியில் தோட்டத்து லொறி வந்து நின்றது. பாக்கியம் குடும்பத்தை வழியனுப்புவதற்காக அந்தத் தோட்டத்தில் எவரும் வேலைக்குப் போகவில்லை. பிள்ளைக் காம்பரா சந்தியில் தோட்டத்துச் சனங்கள் குழுமியிருந்தார்கள். சுக்குருவின் சின்ன மகன் தனது பாட்டனின் பாரம்பரியச் சொத்தான ரேங்குப் பெட்டியைத் தலையில் சுமந்து கொண்டு சென்றான்.

சொந்தக்காரர்கள், நெருங்கிப் பழகியவர்கள் யாவரும் ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்தார்கள். மண்டபம் கேம்ப் வரையிலான பிரயாண டிக்கட்டுகளையும், ரயில் நிலையம் வரை வாகன வசதியையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றிருந்தது. இந்தச் சலுகைகள் சிறிமா… சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ளன.

றயில்வே நிலையத்தில் பாக்கியம் குடும்பத்தைப் போல பல தோட்டத் தொழிலாளர்கள் வந்து நிறைந்திருந்தார்கள்.

தலைமன்னார் கோச்சி பதுளையில் காலை 6 மணிக்குப் புறப்படும். இந்தக் கோச்சியை ஒப்பாரிக் கோச்சி என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள்…! தலை மன்னார் கோச்சி, தலவாக்கொல்லை ஸ்டேஷனுக்கு வந்ததும், எல்லோரும் குய்யோ… முறையோ… என்று ஓலமிட்டுக் கதறினார்கள். மரண வீட்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள். கோச்சி வண்டிக்குள் ஏறியவர்கள், கரங்களை நீட்டிக் கீழே நிற்பவர்களைப் பிடித்துக்கொண்டு அலறும் அந்தத் துயரக் காட்சி உயிரையும், ஆத்மாவையும் பிடுங்கியது. ஒப்பாரிச் சத்தத்தோடு கோச்சி புறப்பட்டது.

கோச்சி ஓடத் தொடங்கியதும், பல இளைஞர்கள், தங்கள் உறவுகளைப் பிரிய முடியாமல், கைகளை அசைத்துக்கொண்டு, சிறிது தூரம் கோச்சியின் அருகிலேயே ஓடினார்கள். சட்டத்தின் முன்னால் மனிதத் தவிப்புகள் எப்படி எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகின்றன என்பதை அந்தக் காட்சி கண்முன்னே காட்டியது.

அந்த ரயில் வண்டியை இந்தியா கோச்சி, ஒப்பாரிக் கோச்சி என்று பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர, அது

சாஸ்திரி கோச்சி… சிறிமா கோச்சி… என்று சொல்லும் அளவுக்கு, கடைசி வரை அவர்களுக்கு அரசியல் தெரியாமலேயே போய் விட்டது.

- தலைமன்னார் இறங்குதுறை.
தேயிலைக்கு உரம் போட்ட நிலையில் கை கால் கூடக் கழுவாமல், வியர்த்த, பசளை பற்றிய உடலோடு, மனிதாபிமானமின்றி இழுத்து வரப்பட்டு, உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் கை கால் கழுவிக்கொண்டு, வேலைக்காட்டு உடையோடு, கொழும்பு, கொம்பனித்தெரு, சிறையில் இருந்த சுப்பிரமணி, சுந்தரம் கொண்டு வந்து கொடுத்த மாற்றுடையை உடுத்தியிருந்தான்.

சுப்பிரமணியைக் கப்பல் ஏற்றுவதற்குப் பொலிஸ் அதிகாரிகள் தலை மன்னார் இறங்கு துறைக்கு அழைத்து வந்திருந்தனர்.

மனைவி பாக்கியம், மகள்மார் மூவரும், மகனும், சுப்பிரமணியின் பெற்றோர்களும் திகிலடைந்த நிலையில் தலைமன்னாருக்கு வந்திருந்தனர். குடும்பத்திடம் சுப்பிரமணியை ஒப்படைத்து விட்டு, அடுத்த வேட்டைக்குப் பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்குத் திரும்பினார்கள்.
நாட்டைச் சுரண்டும் வியாபாரிகளும், ஏனைய தீய சக்திகளும் இந்த நாட்டில் கௌரவப் பிரஜா உரிமை பெற்றுக் கொண்டு நிலைத்து வாழுகின்றபோது, காட்டை அழித்து, நாட்டை உருவாக்கிய பாட்டாளிக் கூட்டம் நாடு கடத்தப் படுகின்றது. சட்டம் ஒரு சிலந்திக்கூடு… அதில் வலிமை பெற்ற வண்டுகள் துளைத்துக்கொண்டு பறந்தோடுகின்றன. எளிய பூச்சிகளே சிக்கிக் கொள்கின்றன.
சுந்தரமும் சுக்குருவும் கட்டிப் பிடித்துக்கொண்டு குமுறிக் குமுறி அழுதார்கள். தலை மன்னார் இறங்குதுறையில் எங்கு பார்த்தாலும் ஒரே ஓலங்கள்… ஒப்பாரிச் சத்தங்கள் துயரச் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதிகாரிகளின் அதட்டலும்.. வழிநடத்தலும் ஆரம்பமாகின…

வாழ்க்கையைத் தேடி இந்த நாட்டுக்கு வந்த மக்கள்.. இருநூறு வருசங்களை வீணடித்து விட்டு… மீண்டும் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு அந்த நாட்டுக்குக் கப்பலை நோக்கி… கடல் பாலத்தின் மேல் நடந்தார்கள்.

அவர்களது மூதாதையர்கள் இதே திசையில், இதே கடல் பாதையில் தோணிகளிலும், வள்ளங்களிலும் வந்த வரலாறு… அந்த வழிப்பயணத்தில் பலரைக் கடல் விழுங்கிய கதைகள்… தப்பிக் கரையேறிய வம்சத்தினரின் இன்றைய எச்சங்களாகிய இவர்கள், இன்று அரச மரியாதையுடன் கப்பலேறி, மீண்டும் அக்கரைக்குத் திரும்பிப் போகும் கசந்த வரலாறு காவியமாகிக் கொண்டிருந்தது…!

ராமானுஜம் கப்பல் ஊளையிட்டுக்கொண்டு அசைவதைச் சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம்.

(யாவும் நடந்தவை…!) – வீரகேசரி, ஜூலை 2008.
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates