Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தேசியக் கொடியா? சிங்களக் கொடியா?: வரலாற்று சர்ச்சை! - என்.சரவணன்


சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்னங்களை சிங்கள பௌத்தமயப்படுத்தும் எத்தனங்களைக் குறிப்பிடலாம். தேசத்தின் பெயர், தேசியக்கொடி, தேசிய கீதம் அனைத்தையுமே மாற்ற வேண்டும் என்று மைய அரசியல் இயந்திரத்துக்கு நிர்ப்பந்தத்தைக் கொடுக்கும் பணியில் பல வடிவங்களில் சளைக்காமல் இயங்கி வருகிறது பேரினவாதம்.

தமிழர்களைப் பொறுத்தளவில் இனப்பிரச்சினையின் உக்கிரத்தின் பின்னர் தேசியக்கொடி என்பது ஒரு ஆக்கிரமிப்பு கொடியாகவே கண்டு வந்துள்ளனர். வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது நிறைவில் தேசியக்கொடியை ஏற்றி தமது வெற்றிக்களிப்பை வெளிக்காட்டி வந்துள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் சுதந்திர தினமானது நெடுங்காலமாக கருப்பு நாளாக அனுட்டிக்கப்பட்டு அன்றைய தினம் ஏற்றப்படும் தேசியக்கொடிக்குப் பதிலாக கறுப்புக் கொடியை ஏற்றி தமது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியும் வந்துள்ளனர்.

தமிழர்களை வெற்றிகொண்டதற்க்கு அடையாளமாக 1995இல் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த யாழ்ப்பாணத்தில் (அன்றைய நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை யாப்பா பட்டுன என்கிற சிங்கள பெயரில் அழைக்கவும் செய்தார்கள்) சிங்கக் கொடியேற்றி இறுமாப்பை வெளிப்படுத்தியதாயும் மறந்திருக்க மாட்டோம். 2009 புலிகளை தோற்கடித்ததற்கு அடையாளமாகவும் வடக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் பல நாட்களாக சிங்கக் கொடிக்கு வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவமும் நினைவிருக்கலாம். போரை வெற்றிகொண்டதற்காக   மகிந்தவை ஒரு “சிங்கம்” என்று புகழப்பட்ட பாடல்கள் கூட இயற்றப்பட்டன. தமிழ் மன்னன் வேண்டாம் என்று கண்டி ஆட்சியை வீழ்த்தி, அந்த ஆட்சியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்த இனவாதம் பின்னர் கண்டி மன்னனின் கொடியை சிங்களக் கொடி என்றும் அதுவே தேசியக் கொடியாக வேண்டும் என்றும் இன்றுவரை வாதிட்டு வருகிறது.


கண்டியில் நடந்ததென்ன
200ஆண்டுகளுக்கு முன்னர் 1815 மார்ச் 2 அன்று செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தின் போது ஏற்றப்பட்டிருந்த ஆங்கிலேய யூனியன் ஜெக் (Union Jack Flag) கொடியை இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார் வாரியபொல ஸ்ரீ சுமங்கலதேரர். அவரின் நினைவாக இந்த மாதம் 2ஆம் திகதி அந்த நினைவு நாளில் அதே இடத்தில் சிங்களக் கொடியை ஏற்றியே தீருவோம் என்று சிங்கள ஜாதிக பெரமுன (சிங்கள தேசிய முன்னணி) பெரிய ஊர்வலமாக கொழும்பிலிருந்து  கண்டிக்கு சென்றது. பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிக்குகளின் தலைமையில் அடாவடித்தனமாக ஆவேசத்துடன் நுழைந்து அங்கிருந்த தேசியக்கொடியை இறக்கி விட்டு சிங்கம் மட்டும் இருக்கின்ற “சிங்களக்” கொடியை ஏற்றினர்.


பௌத்த காவி சீருடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனத்தை ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்க்க முடியாத பரிதாபகரமான நிலையில் போலீசார் இருந்தனர். அங்கு போலீசார் காட்டிய சிறிய தடுப்பு முயற்சியைக் கூட பிக்குமார் தேசத்துரோகமாக சித்திரித்தனர். பின்னர் இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக்கு சென்ற இடத்தில் போலீசாரை தாக்காத குறையாக விரட்டப்பட்டனர். சிங்கள தேசிய முன்னணி, பொதுபல சேனா உள்ளிட்ட பல சிங்கள அமைப்புகள் இப்போது இந்த சம்பவத்தை அரசுக்கும் போலீசாருக்கும் எதிராக கையிலெடுத்திருக்கிறது. “சிங்கள நாட்டில் சிங்களக் கொடியை ஏற்ற என்ன தடை. புலிகளுக்கும்..., அந்நிய மதத்தவர்களுக்கும் சோரம் போய்விட்டது இந்த அரசு” என்றெல்லாம் இந்த சம்பவம் குறித்து தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன பல சிங்கள அமைப்புகள். தேசிய கொடியில் சிறுபான்மை இனங்களைக் குறிக்கும் பச்சை, செம்மஞ்சள் நிற கோடுகளை நீக்கும்படி தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

கண்டி மன்னனின் கொடி சிங்களக் கொடியாகவும் தேசிய கொடியாகவும் உருவகப்படுத்தப்பட்ட கதை நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று.

தேசியக்கொடியைத் தேடிய பயணம்
1815 கண்டி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கண்டி ராஜ்ஜியத்தின் கொடியான சிங்கக் கொடியை இறக்கி அதனை 1835ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனிக்கு ஊடாக இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்ட 133 வருடங்களுக்குள் அந்த கொடியை பலரும் மறந்து போயினர். இந்த கொடி பற்றி பேர்னட் என்பவர் “சிங்கக் கொடி” பற்றி எழுதிய நூலொன்றின் மூலம் அறிந்து கொண்ட ஈ.டபிள்யு.பெரேரா தமது சகாக்களுடன் உரையாடியதன் விளைவாக ஆங்கிலேயர்கள் பறித்த இலங்கைக் கொடி எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விளைந்தார். 1912ஆம் ஆண்டு கண்டி கச்சேரிக்கு சென்று அங்குள்ள பழைய சுவடிகளை பல நாட்களாக ஆராய்ந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பயன்படுத்தப்பட்ட பிரதேச கொடிகள், ராஜதானிகளின் கொடிகள், தலதா பெரஹர, விகாரைகள், என்பன பாவித்த கொடிகளும் கிடைத்தன. அன்றைய காலத்தில் இருந்த சாதிகளின் கொடிகள் கூட கிடைத்தன. “கராவ” சாதி (தமிழ் சமூகத்தில் கரையார் சாதிக்கு நிகரான கரையோர சமூகங்களைக் குறிக்கும் சாதி) காலத்துக்கு காலம் சிங்கக் கொடியை பயன்படுத்தி வந்த விபரங்கள் தனியொரு கதை. இப்படி மயில், கழுகு, பாம்பு, புலி போன்றவை பயன்படுத்தப்பட்ட பல நிறத்தினாலான பல கொடிகளை கண்டெடுத்தபோதும் கண்டி ராஜ்ஜிய கொடி எதுவும் அந்த சேகரிப்பில் கிடைக்கவில்லை. இலங்கைக்குள் தேடும் முயற்சியும் அத்துடன் கைவிடப்பட்டது.

ஆனால் ஈ.டபிள்யு.பெரேரா சளைக்கவில்லை. குறைந்தபட்சம் இறுதியாக
ஆண்ட கண்டி ராஜ்ஜியத்தின் “சிங்கக் கொடி” எப்படி இருந்தது என்கிற வடிவத்தையாவது அறிய முற்பட்டார். அன்றைய தொல்பொருள் ஆணையாளராக இருந்த ஈ.சி.பெல் என்பவரின் வழிகாட்டலின்படி கண்டி மன்னனின் இறுதிக்கொடியைத் தேடி இங்கிலாந்து புறப்பட்டார். 1815காலப்பகுதியில் இலங்கையிலிருந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கடத்திச்செல்லப்பட்ட மதிப்புமிக்க பல்வேறு பொருட்கள் உள்ள இடங்களில் அக்கொடியை தேடியலைந்தார். இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அதிக அக்கறை செலுத்தி பெருமளவு செலவை ஏற்றுக்கொண்டவர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரபல செல்வந்தருமான டீ.ஆர்.விஜயவர்தன. இவர் இன்றைய பிரதமர் ரணிலின் தாய்வழிப் பாட்டனார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மாமனார்.

ஈ.டபிள்யு.பெரேரா பிற்காலத்தில் அவர் தேடிய கொடிகள் குறித்து “sinhalese Banner and Standards" எனும் நூலை வெளியிட்டார். அந்த நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“பெனட் எனும் ஆங்கில ஆய்வாளரின் ஆலோசனைப்படி அந்தக் கொடியைத் தேடிக்கொண்டு United service museum சென்று தேடியதில் ஒருபலனும் கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடிக் கொண்டு சென்ற போது லண்டனிலுள்ள செல்சீ அரச வைத்தியசாலை (Royal Hospital Chelsea) சேமிப்பகத்தில் தற்செயலாக கிடைத்தது நமது சிங்கக் கொடி.”

அங்கு நெப்போலியனின் கொடியும் இருந்ததாக பெரேரா தெரிவித்திருந்தார். அவருக்கு கிடைத்த மூன்று கொடிகளில் இரண்டு வர்ணம் மங்கிப்போன நலையில் கிட்டியது. ஒன்று மாத்திரம் கவனமாக துப்பரவு செய்து எடுத்தபோது சற்று உருக்குலைந்த நிலையில் இலங்கை இறுதியாக ஆண்ட கண்டி அரசனின் கொடியின் வடிவத்தை மீட்க முடிந்தது. அதன் வடிவத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் டீ.ஆர்.விஜயவர்தன எப்.ஆர்.சேனநாயக, டீ.பீ.ஜயதிலக்க போன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அந்த கொடியை சவுத்வூட் அண்ட் கொம்பனி என்கிற நிறுவனத்தின் உதவியுடன் பிரதிசெய்து நிறமூட்டி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மகிழ்ச்சியை நாட்டு மக்களுக்கு செய்தியாக தெரிவிக்க லேக்ஹவுஸ் உரிமையாளர் டீ.ஆர்.விஜயவர்தன தினமின பத்திரிகைக்கு ஊடாக அதனை வெளியிட்டார். சரியாக கண்டி அரசனின் கொடி இறக்கப்பட்ட 100வது ஆண்டில் அதே 02,03.1915 அன்று அந்த அறிவிப்பு வர்ண நிறத்தில் பிரேத்தியேகமாக வெளியிடப்பட்டது. இலங்கையின் கடைசி அரசின் கொடி எப்படி இருந்தது என்பது பற்றி அப்போது தான் பலரும் அறிந்துகொண்டார்கள்.

சிங்கள பௌத்த கொடி = தேசிய கொடி
1945 செப்டம்பர் மாதம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரச சபையில் இந்த கொடி பற்றி நீண்டதொரு உரையாற்றும்போது இந்த கொடியை இலங்கைக்கு மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த உரையைத் தொடர்ந்து சிங்கக்கொடி இந்த நாட்டுக்கு கொணரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

1948இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது எந்த கொடியை ஏற்றுவது என்கிற கேள்வி எழுந்தது. 1815 கண்டி ஒப்பந்தத்தின் பின் இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிகப்பு நிற பின்னணியுடன், வாலேந்தியபடி இருக்கின்ற சிங்கத்தைக்கொண்ட ஸ்ரீ விக்கிரமசிங்க ராஜசிங்க மன்னனின் அரச கொடியே இலங்கையின் தேசியக்கொடியாக கொள்ளவேண்டும் என்று முதலில் பிரேரணையை கொண்டு வந்தவர் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த முதலியார் சின்ன லெப்பை. அந்த பிரேரணையை அரசவை உறுப்பினர் ஏ.ஈ.குணசிங்க ஆமோதித்ததன் மூலம் 16 ஜனவரி 1948 அன்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார்.
“இந்த கொடி கண்டியின் இறுதியரசனின் கொடி என்பதை அறிவோம். அந்த கண்டி அரசன் ஒரு தமிழர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் காலத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவருமே ஒன்றுபோல் வாழ்ந்து வந்தார்கள்.
சிலர் அரிவாளும் சுத்தியலும் கொண்ட கொடியை ஏற்ற விரும்புவதாயு அறிவேன். ஆனால் விடுதலை தினமொன்றில் தேசியக்கொடியாக ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து அதிகாரத்தை பறித்து கீழே வீழ்த்திய சிங்களக் கொடியையே நாம் தெரிவு செய்ய வேண்டும்.”
1948இல் டீ.எஸ்.சேனநாயக்க கண்டிய சிங்கக் கொடியுடன்
அந்த பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த போதும் அந்த கொடியின் உள்ளடக்கத்துக்கான வரைவிலக்கணம் எவருக்கும் புரியாததாக இருந்தது. நிறங்களுக்கான அர்த்தம், சிங்கம் எதன் அடையாளம், வாள் எதனைக் குறிக்கிறது போன்ற கேள்விகளுக்கு பதில் புனைய நேரிட்டது. அதனை வரைவிலக்கணப்படுத்துவதற்காகவே 1948 ஜனவரி 27 அன்று தேசியக்கொடி உருவாக்க குழு நியமிக்கப்பட்டது. மேலும் அந்த கொடிக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த போதும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கனகரத்தினம் போன்ற தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். 

சுதந்திரத் தினத்தன்றுக்கு முன்னர் கொடி குறித்த முடிவுக்கு வர முடியாத நிலையில் 1815இல் கண்டியில் ஆங்கிலேயர்களால் இறக்கி வைக்கப்பட்ட சிங்கக்கொடி 133 ஆண்டுகளுக்கு பின்னர் 1948ம் ஆண்டு, “ஒருங்கிணைந்த இலங்கைக்குரிய கொடியாக” மீண்டும் முதலாவது சுதந்திர தினத்தன்று சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

தேசியக் கொடியைத் தெரிவு செய்வதற்காக பிரதமர் நியமித்திருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவராக எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும், செயலாளராக கலாநிதி செனரத் பரண விதாரனவும் செயற்பட்டனர். ஜே.ஆர்.ஜயவர்தன, சேர் லலித் ராஜபக்ஷ, சேர் ஜோன் கொத்தலாவல, ஜீ.ஜீ.பொன்னம்பலம், டி.பி.ஜாயா,  எஸ்.நடேசன் ஆகியோரும்  தெரிவு செய்யப்பட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வாளேந்திய சிங்கக் கொடியில் சிறிதளவு மாற்றத்தையேனும் செய்வதற்கு இணங்காமையால் பத்துத் தடவைக்கு மேல் தெரிவுக் குழு கூடியபோதும் தீர்க்கமான முடிவு எதனையும் பரிந்துரைக்க இயலவில்லை.

பொது மக்கள் கருத்துக் கோரப்பட்டபோது பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் நான்கையும் சேர்ந்தவர்களால் வணக்கத்துக்குரிய ஒருதலமாகப் போற்றப்படும் ஆதாமின் சிகரமாக அழைக்கப்படும் சிவனொளிபாத மலையையே சின்னமாக தேசியக்கொடி கொண்டிருத்தல் வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும் திரைக்குப் பின் சம்பவித்திருந்த சூழ்ச்சியால் திடீரென்று வாளேந்திய சிங்கக் கொடிக்குப் புறத்தே தமிழ், இஸ்லாமிய மக்களைப் பிரதிபலிப்பதாக இரு வரைகோடுகளைத் தேசியக் கொடியில் இணைப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ரி.பி.ஜாயாவும் இணக்கம் தெரிவித்தனர்.

1950ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம்திகதி இந்தக்குழு இலங்கையின் தேசியக் கொடிக்கான தமது பரிந்துரையை வெளியிட்டது. இந்தக்குழுவின் பெரும்பான்மையோர் எடுத்த இந்த முடிவுக்கு செனட்டர் நடேசன் இணக்கம் தெரிவிக்கவில்லை. கையெழுத்திடவுமில்லை. அதற்கான காரணங்களைத் தெரிவித்த அவர் 15.2.1950 அன்றே ஓர் அறிக்கையையும் வெளியிட்டார்.

சிங்களவர்களை குறிக்கும் வகையில் சிங்கமும், கொடியின் நான்கு மூலைகளிலும் பௌத்த மதத்தை குறிக்கும் அரசமரத்தின் இலைகளும் அமைக்கப்பட்டன. ஆனால் சிறுபான்மையினரைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் மஞ்சள் பச்சைக்கோடுகள் வாளேந்திய சிங்கத்தோடு சேர்ந்து இருக்கவில்லை. சிங்கம் இருக்கின்ற சதுரத்துக்கு அப்பால், அதற்கு வெளியேதான் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்படுகின்ற இந்த இரு வண்ணக்கோடுகள் இருக்கின்றன.

குறிப்பாக இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காக, சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது. இந்த தேசியக் கொடி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக இருக்காது. தேசப்பிரிவினையின் குறியீடாக இருக்கும் என்று செனட்டர் எஸ்.நடேசன் எச்சரித்திருந்தார். தமிழ் தலைவர்களது எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது 02.03.1952 அன்று பாராளுமன்றத்தில் தேசியக்கொடி அங்கீகரிக்கப்பட்டது. தேசியக்கொடி அறிக்கைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சி.சுந்தரலிங்கம் எம்.பி உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியை அங்கீகரிக்காது ஆட்சேபித்து தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜிநாமா செய்து ஓர் இடைத் தேர்தலை ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து வவுனியாவுக்கான இடைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் சார்பில் முன்னாள் கொழும்பு மேயர் குரே போட்டியிட்டிருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கு.வன்னிய சிங்கம் சுந்தரலிங்கத்தை ஆதரித்து பிரசாரம்  செய்திருந்தார். வவுனியாத் தொகுதித் தமிழ் மக்கள் வாளேந்திய சிங்கக்கொடியை நிராகரித்திருந்தார்கள் என்றே கூற முடியும். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார்.

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பில் கொடியைச் சுற்றி மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது. அத்துடன் சிங்கத்தை சூழ நான்கு மூலைகளிலும் அரச இலையும் மாற்றங்களுக்கு உள்ளானது. சிங்கள பௌத்தத்துக்கான முதன்மை ஸ்தானத்தை உறுதிபடுத்தியது.

“சிங்கத்துக்கு பிறந்த சிங்களவர்கள்”?
சிங்களவர்களின் பிறப்பு மூலத்தை சிங்கத்தின் வழித்தோன்றலாக கருதும்
ஐதீகம் இன்னமும் உண்டு. மகாவம்சத்தில் சிங்கள இனத்தின் தோற்றுவாயாக கூறப்படும் விஜயனின் வருகை குறித்த கதையில் விஜயனின் தந்தை மன்னர் சிங்கபாகு சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர் என்கிறது. தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடித்த துட்டகைமுனுவின் படை சிங்கக் கொடியை தாங்கிச் செல்வதாக தம்புள்ள சுவரோவியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. துட்டகைமுனுவின் கொடியாக கூறப்படும் அந்த கொடியை சிங்களவர்கள் அப்படியே நம்பி வருகிறார்கள். 90களில் சிங்கள வீர விதான இயக்கத்தின் இயக்கத்தின் (படிமுறையாக அது ஜாதிக ஹெல உறுமய இயக்கமாக இன்று மாறியிருக்கிறது) சின்னமாக அந்த கொடியைத்தான் பயன்படுத்திவந்தார்கள்.

இது தான் துட்டகைமுனுவின் கொடி என்று அறிமுகப்படுத்தியவரும் ஈ.டபிள்யுபெரேரா தான். ஆனால் அவரது நூலில் இருக்கும் அந்த கொடி உண்மையான தம்புள்ள சுவரோவியத்தில் இல்லை என்று என்கிறார்கள் வேறு ஆய்வாளர்கள்..  சிங்கத்தை முதன்மைபடுத்தும் கல்வெட்டுக்களும், சிற்பங்களும் நாட்டின் பல இடங்களிலும் கிடைக்கின்றன. சிகிரிய மலையின் வாயில் சிங்கத்தின் உருவ சாயலில் இருக்கிறது. கண்டி அரச வம்சத்தினர் சிங்கக்கொடியைத் தான் பயன்படுத்திவந்தார்களா என்று சந்தேகமெழுப்பும் பல ஆய்வுகள் கூட காணக்கிடைக்கின்றன. கண்டி அரசன் சூரியனும், சந்திரனும் உள்ள கொடியையே பயன்படுத்திவந்ததாக சில ஆங்கிலேயர்களின் சில சாட்சியங்களும் காணப்படுகின்றன. இவை பற்றி விரிவாக ஆராயப்படவேண்டியவை.

1815 – 1915 – 2015
தேசியக்கொடியை இன்றைய பேரினவாத அரசியலின் கருவிகளில் ஒன்றாக பயன்படுத்தி வருவது தொடர்ந்தே வருகிறது. தற்போதைய அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கும் புலிகளுக்கும் சார்பான அரசாங்கம் என்று தொடர் பிரச்சாரம் செய்துவரும் பேராசிரியர் நளின் டி சில்வா “ஒவ்வொரு நூறாண்டுக்கு ஒருமுறை சிங்கள பௌத்தர்கள் காட்டிக்கொடுப்புக்கும், தோல்விக்கும் உள்ளாகிவருகிறார்கள்” என்று கடந்த “கண்டி ஒப்பந்த நினைவு” குறித்து மார்ச் 1 அன்று எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது 1815, 1915, 2015.

தேசியக் கொடியானது தனியொரு இனத்தின் அடையாளத்தோடு மட்டுபடுத்த வேண்டும் என்று விடாப்பிடியாக வலியுறுத்தி வருகின்றன பேரினவாத சக்திகள். அதுபோல “தேசியக்கொடியிலுள்ள சிங்கம் நீக்கப்பட வேண்டும் இல்லையேல் சிறுபான்மை இனங்களுக்கு பாரபட்சமாகிவிடும்” என்று விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோரின்  மிகச் சிறிய குரலும் ஒலித்தபடிதான் இருக்கிறது.

காலனித்துவ சக்திகள் ஆக்கிரமித்த போது இது ஒரே நாடாக இருக்கவில்லை என்பதையும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியையும் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட “இலங்கை”யிடம் தாரை வார்த்துவிட்டு போனார்கள் ஆங்கிலேயர்கள்; என்கிற கதையை இன்று சிங்களவர்கள் நம்ப மறுப்பார்கள். “வரலாறு பலம் படைத்தவர்களால் எழுதப்படுவது” என்கிற எடுகோளின்படி தமிழர்கள் குறித்து பேரினவாதம் புனைந்திருக்கும் கதையே இன்று “தேசியக்கொடியில் உனக்கேன் பங்கு... தமிழில் தேசியகீதம் முடியாது” என்பவற்றில் முடிந்திருக்கிறது.

(இந்தக் கட்டுரையின் சற்று சுருக்கிய வடிவம் 08.03.2015 தினக்குரலில் வெளியானது.
இந்த கட்டுரை தேசியக் கொடி பற்றிய விரிவான நூலொன்றை எழுதும் முயற்சியில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை தேசிய சுவடி கூடத்திணைக்களம், கொழும்பு நூதன சாலை, தேசிய நூலக சபை போன்றவற்றில் சேகரிக்கப்பட்ட பல ஆவணங்களையும், வெறும் பல சிங்கள, ஆங்கில நூல்களையும், கட்டுரைகளையும் அடிப்படையாக வைத்து ஒரு காலத்தின் தேவைக்காக ஒரு சிறு கட்டுரையாக சுருக்கியிருக்கிறேன். 02.03.1951இல் தேசிய கொடி பற்றி பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் முக்கியமானது. சுவடிகள் திணைக்களத்தில் இருந்து நான் எடுத்த அந்த பிரதியின் உள்ளடக்கம் முழுமையாக ஏதேனும் வழியில் வெளிக்கொணரப்பட வேண்டியவை.)
-என்.சரவணன்

மலையக மக்களுக்கு 175,000 வீடுகள்!!!??


மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் உட்பட, மலையகத்தில் 175,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்பு பணிகள் எதிர்வரும் நான்கு மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், அவ்வீடுகளுக்கான  காணி உறுதிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு பணிகள் பதுளை, பூனாகலை தோட்டத்துக்குட்பட்ட மக்கள்தெனிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பெருந்தோட்டத்தறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போதே அமைச்சர் திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ''மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 78 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் 7 பேர்ஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீடுகளுக்கான கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றவுடன் வீட்டு உறுதிகள் வழங்கப்படும்.

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடு அமைக்கப்பட வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த நிலையிலேயே புதிய அரசாங்கத்தினால் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமே நன்றி கூறவேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்' என அமைச்சர் மேலும் கூறினார்.

அங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறுகையில், 'பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால், அதற்கு கடிவாளமாக பெந்தோட்ட மனிதவள நிதியம் விளங்கியது' என்றார்.

'வட மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் கடந்த கால அரசின் கடிவாளம் காணப்பட்டது. இந்நிலையில் இவ்விரு கடிவாளங்களும் இன்று தகர்த்தப்பட்டுள்ளன. இனி வட மாகாணசபை சுதந்திரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டமும் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்.

இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம். இதேவேளை, 'பதுளை மாவட்டத்துக்குட்பட்ட 5 தமிழ் பாடசாலைகள், விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.

-க.ஆ.கோகிலவாணி, கவிதா சுப்ரமணியம், டீ.சங்கீதன்

தோட்டப்புறங்களிலேயே அதிக மதுபாவனை


புகையிலை மற்றும் மதுசார சட்ட மூலம் மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை ஆற்றிய உரை

கடந்த மாதங்களில் ஹட்டன் செனன் தோட்ட பெண் தொழிலாளர்களால் அங்குள்ள மதுபான கடையொன்றை மூடுவதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சமூக ஆர்வலர்களால், பாதிக்கப்பட்ட பெண்களால், இளைஞர்களால், பாடசாலை மாணவர்களால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அம் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாதிருப்பது துரதிஷ்டமே.

தொற்றாத நோய்கள் எனப்படுகின்ற உடல்நிறை அதிகரித்தல், இரத்த அழுத்தம், புற்று நோய், நுரையீரற் புண் போன்ற பல நோய்கள் புகையிலை மற்றும் மதுசார பழக்க வழக்கங்களால் வருகின்றன என்று சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன. நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் கிராம புறங்களையும் நகர் புறங்களையும் விடவும் தோட்டப் புறங்களிலேயே புகையிலை மற்றும் மதுபான பாவனைகள் அதிகமாக இடம்பெறுகின்றது. பொலிஸ் பிரிவுகளில் பெரும்பாலான வழக்குகள் மதுபான பாவனை மற்றும் விற்பனை தொடர்பானவைகளே அதிகமாக வந்த வண்ணமேயுள்ளன.

பெருந்தோட்ட மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாகவும் இம் மதுபான மற்றும் புகையிலை பாவனை காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களையும் சில சமுதாய விசமிகள் இவ்வாறான கெட்ட செயல்களுக்கு பயிற்றுவிப்பது கண்டிக்கப்படக்கூடியதொன்றாகும்.

குறிப்பாக இலங்கையிலே பல இலட்சணக்கணக்கான தொழிலாளர் படையொன்று மாதாந்த சம்பளமின்றி நாள் சம்பளத்திற்கு தொழில் புரிகின்ற இத் தோட்ட மக்களின் செலவீனத்தை குறைப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த யுக்தியாக நோக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனலாம்.

நகர்ப்புறங்களிலே இளைஞர்கள் மற்றும் பெண்கள் புகையிலை மற்றும் பான்பராக் பாபுல் நிஜாம் பாக்கு போன்ற பல போதை தரக்கூடிய பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். சிறுகைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பான அமைச்சுக்களின் மூலம் நல்ல முறையில் சமூகத்திற்கு பயன்தரக் கூடிய கௌரவமான தொழில்களை இளைஞர்கள் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

இலவச சுகாதாரத்தினை எமது நாடு சிறப்பாக அமுல்படுத்துவதற்கு இம் மதுபாவனை புகையிலை பாவனை போன்றவை முட்டுக்கட்டைகளாக உள்ளன. காரணம் மதுபாவனையினால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு சிகிச்சைக்காக ஆண்டு தோறும் பல மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் செலவு செய்கின்றது. அத்துடன் குறிப்பிட்ட நுகர்வோர்களால் அதற்காக செலவழிக்கப்படும் தொகை நாளொன்றுக்கு 208 மில்லியன்கள் என்று சிடிசி அறிக்கை கூறுகின்றது. எனவே, இத்தகைய பாரிய தொகையை அன்றாடம் அபிவிருத்தியடைந்து வருகின்ற எமது நாட்டிற்கு செலவிட்டால் சிறந்த அபிவிருத்தியை பெற முடியும்.

புத்த பிரானின் பௌத்த தர்மத்தின் படி பஞ்சமா பாதகங்கள் என்பவற்றுள் கள்ளுண்ணல், சூது போன்றவை கூடாத பழக்கங்கள். அவை மக்களால் விலக்களிக்கப்பட வேண்டியவை என்று கூறப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது செயற்றிட்டங்களில் சுகாதாரம் என்பதற்கும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான விடயங்களை மக்களிடமிருந்து அகற்றி அவர்களது வாழ்வாதாரத்தை அதிகரிக்க பல மில்லியன்களை ஒதுக்குகின்றன.

இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் நாடு இலங்கை. ஆனால் இன்று போதைப்பொருள் கைமாற்றப்படும் இடமாக மாறியுள்ளமை வெட்கத்துக்குரியது. இதுவா ஆசியாவின் ஆச்சரியம் என்பது? மக்களின் உயிர்களை பறிக்கும் இந்த போதவஸ்த்துகளை பிரபல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பயமின்றி தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இதனை அரசாங்கம் எவ்வித பாகுபாடுமின்றி நிறுத்த வேண்டும்.

நன்றி - வீரகேசரி 03.01.15

பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் நேர்முகப் பரீட்சை புள்ளிகளை வெளியிட்ட பின்னர்பரீட்சையை நடத்துங்கள்


மூவாயிரம் ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் தமது பெயரை பதித்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டிருக்கின்ற நூறு நாள் வேலைத்திட்ட அரசியலில் முதலில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளை வெளியிட்ட பிறகு நேர்முகப் பரீட்சையை நடத்தும் திகதியை தீர்மானிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மூவாயிரம் ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்பின் கீழ் ஆரம்பத்திலிருந்து இந்த விடயத்தை கையாண்டதன் காரணமாக சில விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. இவ் ஆசிரிய உதவியாளர் நியமனத்தை வைத்து சிலர் அரசியல் ரீதியான அறுவடையை எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இந்த பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாது அரசியல் இலக்குகளை மையப்படுத்தி நியமனங்களை வழங்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் இவ்விடயத்தை சரியாகவும் நேர்மையாகவும் கையாளாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பரீட்சைக்கு தோற்றியவர்களை அழைத்து நியாயம் கேட்க தயார்படுத்தவேண்டிய நிலையும் ஏற்படும். பரீட்சைக்கு விண்ணப்பித்த ஒவ்வொருவரும் இந்த பரீட்சைக்காக பணம் செலுத்தியுள்ளனர். தமது பரீட்சை பெறுபேற்றை அறிந்துகொள்வதற்கு அந்தந்த பரீட்சார்த்திகளுக்கு உரிமை இருக்கிறது. பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததால் பாடசாலைகளையும், அந்தந்த பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளையும் வெளியிட்டு நேர்முகப் பரிட்சையை நடத்துவது என கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதை புதிய நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தாமல் நேர்முகப்பரீட்சைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் மலையகத்தில் படித்துவிட்டு வேலையை எதிர் பார்த்து காத்திருக்கின்ற பல்லாயிர க்கணக்கான இளைஞர், யுவதிகளின் எதிர்பார்பை உதாசீனம் செய்யும் வகையில் அமையாமல் திறமை அடிப்படையில் நியாயமாக அமை யவேண்டும் எனவும் கணபதி கனக ராஜ் தெரிவித்துள்ளார்.


பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான தமிழ் மொழி மூல ஆசிரியர் உதவியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை இடம்பெற உள்ளமை தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமையானது விண்ணப்பதாரிகளிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கென்று தமிழ்மொழி மூல ஆசிரிய உதவியாளர்கள் மூவாயிரத்து 24 பேரை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் இடம்பெற்றது தெரிந்ததாகும். இப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமையவும் ஏனைய தகுதிகளையும் பெற்றவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பதாரிகள் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். இதற்கிடையில் அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையே காணப்படுகின்றது.

இதற்கிடையில் மலையக பெருந் தோட்ட ஆசிரிய உதவியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பிரதான இடங்களில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பதுளை, கண்டி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி போன்ற இடங்களில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற உள்ளன. இதற்கான கடிதங்கள் சில விண்ணப்பதாரிகளுக்கு கிடைத்துள்ள அதேவேளை மேலும் சிலருக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது. நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரிய உதவியாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியளவில் நியமனங்கள் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பரீட்சை பெறுபேறுகளை விண்ணப்பதாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு அழை க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகளிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் நேர் முக பரீட்சைகள் இடம்பெற்றிருந் தால் அது பொருத்தமாக இருந்திருக்கும் என்று விண்ணப்பதாரிகள் கருதுகின்றனர். இவ்விடயம் தொட ர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் கவனத் திற்கும் கொண்டு வந்துள்ளதாக விண்ணப்பதாரிகளில் சிலர் தெரி விக்கின்றனர். அரசியல் தொழிற் சங்க பேதங்களுக்கு அப்பால் தகுதி யானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் இவர்கள் வலி யுறுத்துகின்றனர்.


நன்றி - வீரகேசரி 

1000 ரூபா நாட் சம்பளம் கோரிக்கை சாத்தியப்படுமா? - துரைசாமி நடராஜா


பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்கும் வித்திடும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான அதிர்வலைகள் இப்போது மேலோங்கி வருகின்றன. அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அரசின் இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் ஊடாக சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதைப் போன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார நெருக்கடியானது சகல துறைகளிலும் இம்மக்கள் பின்னடைவு காண்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதால் சம்பள உயர்வுக்கு வித்திடும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று புத்தி ஜீவிகள் தொடர்ச்சியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வரலாறு என்பது மிகவும் நீண்டதாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இம்மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய அளவிற்கு எந்தத்துறையிலும் இன்னும் விருத்தி பெற்றிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வீட்டுவசதி, காணியுரிமை, சுகாதார மருத்துவ வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக வாழ்வு என்று சகல மட்டங்களிலும் இம்மக்கள் உரிய இலக்கை எட்டாத தன்மையையே காணக்கூடியதாக உள்ளது. மலையகத்தில் மலையேறி பாடுபடும் இம்மக்களின் வாழ்வு இன்னும் ஏற்றம் காணவில்லை. நிலமட்டத்தில் மலையகம் உயர்ந்திருக்கின்றதே தவிர வாழ்க்கை நிலைமைகள் ஏனோ இன்னும் தாழ்வாகவே காணப்படுகின்றன என்பதனை யாவரும் அறிவர்.

உழைப்பை நம்பி வாழும் இத்தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கின்றதா என்று எண்ணிப்பார்த்தால் விடை இல்லை என்றே வெளிப்படும். 1908 ஆம் ஆண்டில் ஒரு தோட்ட துரை நான் இலங்கையில் வாழ்ந்து 14 வருட காலத்தில் நாளொன்றுக்கு ஆண்களுக்கு 33 சதத்திற்கும் பெண்களுக்கு 25 சதத்திற்கும் மேல் கூலி வழங்கியதில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்ட வேதன நிலைமைகளை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

தொழில் திணைக்களத்தின் அறிக்கையின் அடிப்படையில் 1944 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆண்களுக்கு 41 சதமும், பெண்களுக்கு 37 சதமும், சிறுவர்களுக்கு 25, சதமும் என்று கூலி வழங்கப்பட்டுள்ளது. இது நாளாந்த கூலியாகும். 1947 இல் ஆண்களுக்கு ஒரு ரூபாய் 72 சதமும் பெண்களுக்கு ஒரு ரூபாய் 38 சதமும், சிறுவர்களுக்கு 1 ரூபாய் 12 சதமும் என்ற அடிப்படையில் நாளாந்த வேதனம் அல்லது கூலி வழங்கப்பட்டது. 1954 ஆண்டுகளின் நாளாந்த வேதனம் இரண்டு ரூபாய் 43 சதமாகவும் 1967 இல் மூன்று ரூபாய் ஒரு சதமாகவும் 1977 இல் நான்கு ரூபாய் 56 சதமாகவும் 1984 இல் 24 ரூபாய் 23 சதமாகவும் 1987 இல் 33 ரூபாய் 92 சதமாகவும் 1989 இல் 37 ரூபாயாகவும் இருந்துள்ளது.

இதேவேளை, 1954 இல் பெண்களின் நாளாந்த வேதனம் ஒரு ரூபாய் 93 சதமாகவும் 1967 இல் இரண்டு ரூபாய் 45 சதமாகவும் 1977 இல் மூன்று ரூபாய் 70 சதமாகவும் 1984 இல் 24 ரூபாய் 23 சதமாகவும் 1987 இல் 33 ரூபாய் 92 சதமாகவும் 1989 இல் 97 ரூபாயாகவும் இருந்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு 44 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசாங்கமே நேரடியாக இதில் தலையிட்டு வேதன அதிகரிப்பை வழங்கியதோடு நீண்ட காலமாக கோரப்பட்டு வந்த ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் வேதனங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதாக பேராசிரியர் மா.செ. மூக்கையா தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.

19 ஆம் நூற்றாண்டில் ஆண் / பெண் தொழிலாளர்களது கூலி மட்டங்களுக்கு இடையிலான வேறுபாடு 25 சதவீதமாக இருந்துள்ளது. இன்னுமொரு தகவலின் அடிப்படையில் 1929 – 1933 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆண் / பெண் நாட் சம்பளங்களில் சிற்சில மாறுதல்கள் இடம்பெற்றுள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான கூலிச்சமமின்மை பெண்ணிலைவாதிகள் மற்றும் நிறுவனங்களின் கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தது. இதனடிப்படையிலேயே 1984 இன் கூலிச்சபை சட்டத்தினால் சமவேலைக்கு சம சம்பளம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

1992,1993, 1996,1998 போன்ற ஆண்டுகளில் மேற்கொள்ள சம்பள உயர்வில் ஆண்/ பெண் இரு சாராரும் சம சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நிலைமை உருவானது. 1998 ஆம் ஆண்டு 101 ரூபாய் சமசம்பளம் இரு சாராருக்கும் கிடைத்தமையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1998 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் சார்பான கொடுப்பனவு உயர்வு பெற்றுள்ளமையையும் கூறியாக வேண்டும். இதனடிப்படையில் சேமலாபநிதி சேவைகாலப் பணம், மேலதிகக் கொடுப்பனவு, விடுமுறை கால போனஸ், பிரசவ சகாய நிதி போன்ற பல கொடுப்பனவுகளும் உயர்வு பெற்றதாக புத்திஜீவிகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.

இதேவேளை, தொழில் திணைக்கள அறிக்கையின்படி தொழிலாளர் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த வேலை நாட்களின் தொகையையும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 1964 இல் ஆண் ஒருவருக்கு மாதாந்தம் சராசரியாக 19.3 வேலை நாட்கள் வழங்கப்பட்டிருந்தன. 1974 இல் 16 வேலை நாட்களும் 1977 இல் 20 வேலை நாட்களும் 1982 இல் 16 வேலை நாட்களும் 1984 இல் 17.5 வேலை நாட்களும் 1985இல் 22.2 வேலை நாட்களும் வழங்கப்பட்டிருந்தன. இதே வேளை பெண் ஒருவருக்கு 1964 இல் 18.6 வேலைநாட்களும் 1974 இல் 17.2 வேலை நாட்களும் 1977 இல் சராசரியாக 19 வேலைநாட்களும் 1982 இல் 15.5 வேலை நாட்களும் 1984 இல் 18.5 வேலை நாட்களும் 1988 இல் 23.3 வேலை நாட்களும் வழங்கப்பட்டிருந்தமையை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
காலத்துக்குக் காலம் வேதன அதிகரிப்புகள் வழங்கப்பட்டபோதும் தொழிலாளர் வேதன உயர்வு குறித்து இன்னும் இழுபறியான ஒரு தன்மையைக் காணக்கூடியதாயுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பேசுகின்ற போது தேயிலை தொடர்பாக பேசாமல் இருக்க முடியாது. உலகின் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாடாக இருக்கின்றது. உலக சந்தையில் எமது நாட்டின் தேயிலைக்கென்று ஒரு தனித்துவமான இடம் இருப்பதையும் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் தேயிலைத் தொழிலில் பல இலட்சம் பேர் ஈடுபட்டுள்ள நிலையில் பலர் தங்கி வாழ்வதனையும் கூறியாக வேண்டியுள்ளது. 1985 இல் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 650 ஹெக்டேயர் பரப்பின் தேயிலை பயிர்ச்செய்கை இடம்பெற்றுள்ளது. இது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு இலட்சத்து 21 ஆயிரத்து 75 ஹெக்டேயராக குறைவடைந்தது. நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகமான பரப்பில் தேயிலை உற்பத்தி இடம்பெறுகின்றது. 1945 இல் இலங்கையில் தேயிலை உற்பத்தி 125.6 மில்லியன் கிலோவாகும். 1970, 1980, 1986, ஆம் ஆண்டுகளில் முறையே 221.2, 191.3, 211.3 மில்லியன் கிலோவாக தேயிலை உற்பத்தி இருந்தது. 1990இல் தேயிலை உற்பத்தி 233 மில்லியன் கிலோவாகும்.

தேசிய வருவாயில் தேயிலையின் வகிபாகம் கணிசமாக இருந்து வருகின்றது. 2012 இல் மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் பதினைந்து சதவீதத்திற்கு தேயிலை வகை கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகளவான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. 2014 ஆண்டின் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதியானது 7.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அந்நியச் செலாவணி வருமானமானது 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது தேயிலைக்கான விலை 9.8 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தேயிலை தொழிற்துறை குறித்து நாம் கவனம் செலுத்துகின்ற போது சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்கருதி அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை நாம் இவ்விடத்தில் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. பெருந்தோட்டக் காணிகள் பல்வேறு அபிவிருத்தி தொடர்பான காரணங்களைக் காட்டி சூறையாடப்படும் நிலையானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் இருப்பையும் பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

இந்நிலையில் தேயிலை தொழிற்றுறையானது வீரியமற்ற போக்கைக் கொண்டுள்ளதாக காரணம் காட்டி முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் இழுபறித்தன்மை மேலோங்க வழிவகுத்துள்ளது. உற்பத்தி செலவினங்களின் அதிகரிப்புத் தன்மை ஊழியர்களுக்கான அதிகரித்த செலவுகள் உள்ளிட்ட மேலும் பல காரணங்களுக்கு தமக்கு சாதகம் இல்லாதிருப்பதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகின்றது. அத்தோடு தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தளவிலான நாட்களே வேலைக்கு செல்வதாகவும் இதனால் தாம் உற்பத்தி மற்றும் முகாமைத்துவ ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது பல முறைகள் கூறுவதற்கும் தவறவில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் தற்போதைய கூட்டு ஒப்பந்தம் நிறைவடைகின்ற நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்த அதிர்வலைகள் மேலெழும்பத் தொடங்கி இருக்கின்றன. பொருட்களின் விலை அதிகரிப்பு, தேவைகளின் அதிகரிப்பு, பொருளாதார முடக்கம் என்பவற்றுக்கு உரிய பரிகாரத்தை புதிய கூட்டு ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றமையும் தெரிந்ததே. மேலும், தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மட்டுமல்லாது தொழிலாளர்களின் ஏனைய பல நலன்களையும் பாதுகாப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளது. தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தோட்டத்தொழிலாளர்களும் தனியார் துறையினர் என்ற ரீதியில் உரிய கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் பலருடைய கருத்தொருமித்த நிலையைக் கொண்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது. தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதமளவில் இடம்பெற உள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தின் பிரதான பங்காளி கட்சியான இ.தொ.கா. தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் நிலைமைகளால் தேர்தல் முன்னெடுப்புகளால் பேச்சுவார்த்தை பிற்போடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் உரிய காலப்பகுதியில் இருந்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க இ.தொ.கா. உறுதி பூண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையில் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை இரண்டாயிரத்து 500 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி ஆலோசனையின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கு கூட்டு ஒப்பந்தக்காரர்களுடன் கலந்தாலோசிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக இ.தொ.கா. தரப்பின் செய்திகள் வலியுறுத்துகின்றன. மேலும் இச்செய்தியின் படி பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்கும் வலுச்சேர்க்கும் கூட்டு ஒப்பந்தமான மார்ச் 31 உடன் முடிவடைகின்றது. உரிய காலத்தில் மக்களின் எதிர்கால மற்றும் அதிகரித்த செலவினத்தை ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு அதிகரித்த சம்பளமாக இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள தொகையும் உள்ளடங்கலாக மொத்த சம்பளமாக நாளாந்தம் ரூபா ஆயிரத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏனைய கூட்டு ஒப்பந்தம் தொழில்சங்க பங்குதாரர்களுடன் பேசி கலந்தாலோசிக்க இ.தொ.கா. தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை மக்களின் அனைத்து பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டே காலங்காலமாக வேதன உயர்வை இ.தொ.கா. பெற்றுக் கொடுத்து வந்துள்ளது. அந்த வகையில் தற்போதைய இ.தொ.கா. தீர்க்கமான முடிவு குறித்து கலந்துரையாட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று அச்செய்தி வலியுறுத்துகின்றது.
இதேவேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு மலையக தொழிலாளர் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கும் என்று முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் அண்மையில் இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட 2500 ரூபாய் சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நாம் கோரினோம். ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் அல்லது சம்பளம் அதிகரிக்கப்படும் நியதிகள் கூட்டு ஒப்பந்தத்திலேயே நிர்ணயிக்கப்படுவதால் அவ்வாறான சலுகைகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாமல் போகின்றது. ஆனால் இந்த தொகையும் உள்ளடக்கப்படுவது போல இக்கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டும்.

மலையகத்தின் ஏனைய அமைப்புகளும் இ.தொ.கா. வின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு கட்சி ஏதாவது காரணத்திற்காக இதனை எதிர்த்தால் அதனை சாட்டாக வைத்து இந்த கோரிக்கை வீணாக்கப்பட்டு விடக்கூடாது. அதேவேளை, சம்பள உயர்வுக்கு அப்பாற் பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்கும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கே. சுப்பிரமணியம் தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

கூட்டு ஒப்பந்த காலத்தில் பல தொழிற்சங்கள் புற்றீசல் போல புறப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் மீது எப்போதும் இல்லாத பாசமும் கருணையும் இத்தொழிலாளர்களுக்கு வந்து விடுகின்றன. கூட்டு ஒப்பந்த காலத்தில் சாத்தியப்படாத சம்பள உயர்வையும் இன்னும் பல விடயங்களையும் முன்னிறுத்தி இவர்கள் தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களிடையேயும் முரண்பாடுகளை தோற்றுவித்து வருவதனையும் சமகாலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது இந்நிலை வேறருக்கப்படுதல் வேண்டும்.

தொழிற்சங்கங்களின் பிளவுகளும் விரிசல்களும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு வாய்ப்பாக போய்விடும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதனைப் போல முதலாளிமார் சம்மேளனம் பிளவுகளை வாய்ப்பாகக் கொண்டு காரியத்தை சாதித்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தும் கடந்த கால வரலாற்றுப் பாடங்களும் இதனை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன.

தொழிற்சங்கங்கள் எதுவாக இருப்பினும் அது தொழிலாளர்களின் நலன்களைப் பேணும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழி லாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு வித்திடுதல், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், எழுச்சிக்கு கை கொடுத்தல் என்று தொழிலாளர் சார்பாக தொழிற்சங்கத்தின் பணிகள் ஏராளமானதாகும். ஒவ்வொரு தொழிற்சங்கமும் இதிலிருந்தும் பின்னிற்கக் கூடாது.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதென்பது முக்கிய த்துவம் மிக்க ஒரு விடயமாகும். இச்சந்தர்ப் பத்தில் தொழிற்சங்கங்கள் தானே பெரியவன் என்று முட்டி மோதிக் கொண்டு தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கக் கூடாது. தொழிற்சங்கங்கள் எல்லாமே தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தென்றால் தொழிற் சங்கங்களுக்கிடையில் ஏன் ஒரு கருத்தொருமிப்பும் புரிந்துணர்வும் இருத்தல் கூடாது. இந்த கூட்டு ஒப்பந்த விடயத்திலாவது இந்த கருத்தொருமிப்பும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டும். மலையகத்திற்கு யார் தலைவன் என்பது முக்கியமல்ல மக்களுக்காக சிறந்த சேவையை முன்னெடுத்து செல்லக்கூடிய ஆளுமைமிக்க தலைவன் யார் என்பதே முக்கியமாகும். அவரை இனங்காண்போம்.

நன்றி - வீரகேசரி

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்- ஒரு மாற்று சமூக முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி... எம். எஸ். இங்கர்சால்


28-02-2015 அன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் திரு. லெனின் மதிவானம் தலைமையில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்  பிரதமஅதிதியாக கலந்துக் கொண்ட 

பேராசிரியர்  தை. தனராஜ் தமது உரையில்

 ”இருபத்தொராம் நூற்றாண்டானது அறிவியல் துறையில் பாரிய மாற்றங்களை கொண்டிருக்கின்ற காலமாகும். அறிவியல் துறையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைய தலைமுறையினர் இந்த யுகத்திற்கு சொந்தகாரர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் இந்த வளர்ச்சிப் போக்கை மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கியுள்ளார்கள் என்பது முக்கியமான வினா தான். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்கின்றவர்களாகவும் தமது வாண்மைத்துவ விருத்தியை அபிவிருத்தி செய்கின்றவர்களகவும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சி துரிதமக வளர்ந்துக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் தான் கல்வியை பெற முடியாது வறுமையில் வாடுகின்ற மக்கள் கூட்டமும் காணப்படுகின்றார்கள். இவ்வகையான அமைப்புகள் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பின் தங்கிய சமூகங்களில் செயற்பட வேண்டியிருன்றது. கல்வியில் சமத்துவம் என்பதும் அந்த உரிமைக்கான போராட்டம் என்பதும் வாழ்க்கைக்கான போராட்டம் மட்டுமல்ல வாழ்க்கை முறையையே மாற்றும் செயன்முறையாகும்.முந்தைய உலகம் தராத ஆனால் நமது தற்போதைய உலகம் தரும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, அந்த உலகத்தை மனிதனுக்காக படைத்து புதிய சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமையாகும். இந்தப் பின்னணியில் இத்தகைய சவால்களை எதிர் கொள்ளும் வகையில் தமது தொழில் வாண்மைத்துவ விருத்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  இதனை இலங்கை கல்வி சமூகச் சம்மேளனம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. மலையகத்தின் தனித்துவத்தை பேணுகின்ற அதே சமயம் இவ்வமைப்பு முழு தேசம் தழுவியதாகவும் அமைந்திருப்பது சிறப்பானது. அந்த வகையில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர் கலத்தில் நடத்த இருக்கும்   தொழில் வாண்மைத்தவ செயலமர்வுகளை இலவசமாக செய்ய தயாரக உள்ளேன் ” எனக் குறிப்பிட்டார்.


திரு. லெனின் மதிவானம் தமதுரையில்

 ” இந்த சம்மேளனம் என்பது இன மத மொழி, மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டதொன்றாகும். இவ்வமைப்பில் வெவ்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் அமைப்புசாரதவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஓர் உலக மயமாதல் சூழலின் பின்னணியில் நமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான எல்லா சாத்தியங்களும் மேலோங்கிய நிலையில் நமது வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் அசுரகணத்தடன் மட்டுமல்ல அசுர வேகத்துடனும் நடைப்பெறவேண்டியுள்ளது. கல்வித் துறைசார்ந்தவர்கள் இப்பொறுப்பிலிருந்து அந்நியப்பட்டிருக்க முடியாது. எனவே வெவ்வேறு தளங்களில் அமைப்புகளில் இயங்குகி்றவர்களாக நாம் காணப்பட்டபோதும் நமது உணர்வுகள் ஒரு புள்ளியில் சந்திக்க கூடியதாக உள்ளது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதேவேளையில் அவர்களது பன்முகப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள ஒருங்கினைக்கும் ஒரு ஸ்தாபனமாகவும் சிலிக்கோ அமைப்பு தொழிற்ப்படும். கடந்த காலங்களிலே இவ்வாறாக தோற்றங் கொண்ட அமைப்புகளில் தலமையேற்றவர்கள் அல்லது அவ்வியங்களை ஆதிக்கம் செய்தவர்கள் தமது அறிவை மிகப் பழைய புத்தகங்களிலிருந்தே பெற்றிருந்தனர். புத்தகவாதத்திற்கு அப்பால் நேரடி அனுபவங்களையும் சமூக கூட்டு நடைமுறையின் மூலம் பெறப்பட்ட அறிவையும் குறைவாக மதிப்பிடும் போக்கே அவர்களிடம் காணப்பட்டது. நாம் தொடர்ச்சியாக இந்த தவறை விட முடியாது. இது பற்றிய விவாதமும் சுயவிமர்சனமும் தேவையாகும். இந்த அமைப்புக்கு தலைமை தாங்குகின்றவர்கள் தங்களது முன் கூட்டிய முடிவுகளை உறுப்பினர்களிடையும் பொது மக்களிடமும் முன்னிறுத்துவதை தவிர்த்து அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். கூடி விவாதித்து பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் மூலமாக தீர்மாங்களை முன்னெடுக்கப்படல் வேண்டும். இதனையே புரட்சிகர தன்னடக்கம் என நேர்மையுள்ள முற்போக்கு மார்க்சியர்கள் கூறுவர்”. எனக் குறிப்பிட்டார்.

யாப்பு ஒரு கண்ணோட்டம் என்ற பொருளில் கருத்துரை வழங்கி 

சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமதுரையில்


”பிராந்தியங்கள் மாவட்டத்தை உருவாக்கும். ஒரு அல்லது பல மாவட்டங்கள் இணைந்து மாகாணத்தை உருவாக்கும். மாகாணங்கள் இணைந்து தேசம் தழுவிய குழுவை உருவாக்கும். தேசம் தழுவிய செயற்குழுவே சம்மேளனத்தை நிருவகிக்க கூடியதாக இருக்கும். ஒரு குழுவாக செயற்படுவது என்பது தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் அடக்குவது என்பது பொருளல்ல. மாறாக ஒவ்வொருவரின் தனித்தனிப் பண்புகளையும் பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்ப்பது என அர்த்தப்படும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். தனிமனிதர்களின் அபிலாசைகளுக்கோ அவர்களின் விறுப்பு வெறுப்புகளுக்கேற்றவகையில் முடிவுகளை எடுப்பதற்கோ அல்லது உறுப்பினர் ஒருவரை விலக்குவதற்கோ இங்கிடமில்லை. சம்மேளனத்தில் பொதுச் செயலாளருக்கு மாறாக நிர்வாக செயலாளர் பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்கான உரிமை யாப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல அமைப்புகளில் அமைப்பின் பாதையை தலைமைப்பொறுப்பிலிருந்தவர்களே தீர்மாணித்தார்கள். அமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிலே இருக்க வழிவகுக்கம் செயற்பாடுகளை உருவாக்கும் போக்கே காணப்பட்டது. நடைமுறையில் இவ்வம்சம் இளைஞர்கள் தலைமை பொறுப்பிற்கு வருவதை தடுப்பதாக அமைந்திருந்தது. இதற்கு மாறாக இச்சம்மேளனத்தின் உறுப்பினர் தெரிவு என்பது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைப்பெறும் பொதுக் கூட்டத்திலேயே தெரிவு செய்யப்படும்  ” எனக் குறிப்பிட்டார்.

இச்சகூட்டத்தில்  ஹட்டன்- டிக்கோயா நகர பிதா டாக்டர் ஏ. நந்தகுமார், இலங்கை தமிழர் ஆசிரிய சங்க பிரதநிதி ஜெயசீலன், ஆசிரிய ஆலோசகர் கு. இராஜசேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம். சந்திரன், எம். எஸ். இங்கர்சால், எஸ். சுரேஷ்காந்தன், எஸ். குமார்  தமது குழுக்களின் செயற்றிட்டங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அறிக்கை சமர்பித்தனர். நிருவாகச்செயலாளர் கே. கிருஸ்ணன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆசிரிய தொழிற்சங்க முன்னோடியும் செயற்பாட்டாளாருமான திரு. எம். ஆர். விஜயானந்தன் அவர்கள் நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இருபத்யோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர் நோக்கியிருக்கும் இன்றைய சூழலில் சமூகத்தை மாற்றக் கூடிய சமூக மற்றும் பண்பாட்டு சக்திகளை ஒன்றினைப்பதே சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் கலையாகும். மானுட மேம்பாட்டிற்காக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் மேற்கொண்டுள்ள பிரயத்தனங்கள் ஒரு மாறுப்பட்ட உலகை சிருஷ்டிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது.கல்வித் துறை சார்ந்தவர்களின் பிரசன்னமும் பங்கேறபும் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தது.


1000/= : !+? - ஜே.ஜி. ஸ்டீபன்


பாவப்பட்ட ஜென்மங்கள் எனும் வாசகத்து க்கு வரைவிலக்கணம் தேடுவதானால் தயக்கமே இன்றி தோட்டத் தொழிலாளர்களை ஞாபகப்படுத்தி இடித்துரைத்து கூற முடியும்.

தோட்டத் தொழிலாளர்கள் என்றதும் நீண்ட வரிசையில் அதாவது லைன் (LINE) முறைமையில் 16 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இரண்டு அறைகளைக் கொண்டமைக்கப்பட்டுள்ள வீட்டு வாழ்க்கையும் சுகாதார வாழ் க்கையை எண்ணியும் பார்க்க முடியாதவொரு படமுமே மனக்கண்முன்னால் தோன்றுகிறது.

தோட்டத்தொழிலாளர்களின் சமூக பொருளாதார வாழ் க்கைச்சூழல் மாறாத கோட்டில் பயணித்துக்கொண்டிருப்பதற்கு முன்னால் நிற்பவரைப்பார்த்து விரல் நீட்டி குற்றம் சுமத்தி தப்பித்து விட முடியாது.

லயன் வாழ்க்கை முறைமை மாற்றியமைக்கப்படாதிரு ப்பதற்கும் தமது அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படாதிருப்பதற்கும் ஏனைய சமூகங்களோடு தம்மை ஒப்பி ட்டு போட்டித்தன்மையுடனான படிநிலைக்கு நகர்ந்து செல்வதற்கும் இன்னும் கூறப்போனால் பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்தி கொள்வதற்கும் அக்கறைய ற்றவர்களாகவே தோட்டத் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.

மலையக சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பில் அவ்வப்போது வெளிப்படுத்தல்கள் இருந்து வருகின்ற போதிலும் விழிப்பற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் இருக்கின்றனர் என்று கூறினால் அதில் பிழையில்லை. தோட்டத்தொழிலாளர்களின் மனோநிலையை நன்கு அறிந்து புரிந்து எடை போட்டு வைத்திருக்கும் நபர்கள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் அவர்களும் இவர்களிலிருந்துதான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

மலையகத்தை பொறுத்தவரையில் அங்கு கட்சிகளு க்கும் பஞ்சமில்லை. தொழிற்சங்கங்களுக்கும் குறைவி ல்லை. கோடிட்டுக் கூற வேண்டுமானால் 100 அங்கத்தவ ர்களைக்கூட கொண்டிராத தொழிற்சங்கங்களும் இருக்கின்ற நிலையில் உண்மையாகவே மக்களுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் சிலர் இயங்கி வருவதையும் மறுத்து விட முடியாது.

இன்றைய நிலைமையில் தோட்டத்தொழிலாளி ஒருவ ரின் சம்பளமானது அனைத்து கொடுப்பனவுகளுடன் நாளொன்றுக்கு 620 ரூபாவாக அமைந்துள்ளது. இங்கு குறிக்கப்படுகின்ற 620 ரூபாவை ஒருநாள் சம்பளமாக பெற வேண்டுமானால் அதற்கான கடமை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

620 ரூபா எனும் சம்பளமானது குறைவான தொகை என்று கூறுவதற்கு இல்லை. தமக்கான சம்பளத்தொகை யை முழுமையாக பெற வேண்டுமானால் தொழிலாளி குறிப்பிட்ட நாட்களுக்கு வேலைக்கு சென்றிருத்தல் அவசியமாகும். சுகயீனம் மற்றும் ஏனைய காரணங்களை காட்டி வேலைக்கு செல்லவில்லையெனில் வேலைக்கு செல்லாத ஒருவருக்கு சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளியானவன் முட்டாள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நகர்ப்புறங்களில் தொழில் புரிகின்றவர்களது சம்பளத்துடன் ஒப்பிடுகையில் தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பளம் குறைவானது அல்ல என்று அடித்துக் கூற முடியும்.

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்துக்கு சமனான தொகையை பெறுகின்ற நகர்ப்புற வாசி ஒருவர் தமது குடும்பத்தினது பொருளாதார படிமுறையை கட்டமைத் துக்கொள்வதை போன்ற நிலைமை மலையகத்தில் இல்லை.

எந்த சந்தர்ப்பத்திலும் அடுத்தவரை நம்பியே பழகிப்போன மக்களாக இருப்பதாலேயே வாழ்க்கையில் முன்னேற முடியாத ஜென்மங்களாக இருந்து வருகின்றனர்.

தோட்டத்தொழிலாளி ஒருவரது குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொழில் புரிவோராக இருந்தால் மேற்கூறப்பட்ட சம்பளத்தொகையில் சிறந்த முகாமைத்துவத்தை கடைப்பிடித்து சிறப்பாக வாழ முடியும்.

நகர்ப்புறத்து வாசியையும் தோட்டத்தொழிலாளியை யும் வருமான ரீதியில் ஒப்பிட்டு பேச முடியாது என்கின்ற போதிலும் அடுத்தவரை பார்த்தேனும் தம்மை செதுக்கிக்கொள்ளும் இயலுமையாக இருக்க வேண்டும். குடும்ப வருமானத்தை சிறப்பாக முகாமை செய்து,வரையறுத்து, செலவு செய்து தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிலான நிரல்களின் அடிப்படையில் எம்மை நாம் ஆக்கிக்கொள்வோமெனில் வாழ்க்கை வளமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

குடிநீர், எரிவாயு, வீட்டு வாடகை என்ற செலவினங்கள் பெருந்தோட்டப்புறங்களில் இல்லை. ஆனால் நகர்ப்புறங்களில் இவை இணைந்துள்ளன. இப்படி இருக்கையில் திட்டமிடல்கள் இல்லாததாலேயே அரசியல்வாதிகளைக் குறை கூறுவதற்கு பழக்கப்பட்டு விட்டனர்.

மேலும் தோட்டத்தொழில் செய்யும் கணவன் மனைவி ஆகிய இரு தரப்பினருமே மதுவுக்கு அடிமையாகியிருப்பது மிக மோசமான கலாசாரத்தை வளர்த்து வருகின்றது. மலையகத்தில் மதுபானக் கடைகள், மதுபான வர்த்தக நிலையங்கள் அதிகரிப்பதற்கும் கள்ளச்சாராயக் கடை கள் முளைப்பதற்கும் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யப்படுவதற்கும் இவ்வாறு ஆணும் பெண்ணும் போதை தலைக்கேறும் வரையில் குடியில் மிதப்பதே பிரதான காரணமாகும்.

இவ்வாறு மது போதையில் இருக்கும் கணவனும் மனைவியும் பிள்ளைப் பேறுகளை பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் தவறிழைப்பதால் இயல்பாக தேவைப்படுகின்ற கால இடைவெளி இல்லாது பிள்ளைப்பேறுகளும் உண்டாகி விடுகின்றன. இப்படியான நிலைமைகள் குடும்பத் தின் வறுமை நிலைக்கு பிரதான காரணிகளாகின்றன. இவை மாற வேண்டும்.

மலையகத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு செயற்படுகின்ற தொழிற்சங் கங்கள் தமது அங்கத்துவங்களை அதிகரித்துக்கொள்வதற்கு மிகச் சிறப்பாக செயற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கணவன் ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருக்க மனைவி பிறிதொரு சங்கத்தில் இணைந்திருப்பார். இதில் இன்னுமொரு விடயம் என்னவெனில் தாம் எந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கி றோம் என்பதே தெரியாத நிலையிலும் இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் இத்தகைய நிலைமையை உணர்ந்து கொண்டதால்தான் அரசியல்வாதிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கோயிலுக்கு நாற்காலிகளும் ஒலிபெருக்கிகளும் இன் னும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் கூரைத்தகடுகளும் கொடுத்து விட்டால் போதும். எமது மக்கள் வலிந்து விடுவார்கள். கோயிலுக்கு ஒலிபெருக்கி கொடுக்கும் அரசியல்வாதியை தெய்வமாக்கி விடுவார் கள்.

இவ்வாறான சூழ்நிலைகள் மாறும் போதுதான் மலையமும் மாறும். மலையகத்தில் மாற்றம் வேண்டும் எனும் போது இப்படியான மாற்றமே எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியான நிலையில்தான் மலையகம் தொடர்பிலும் மலையக சமூகம் தொடர்பிலும் அறிக்கை மன்னர்கள் சிலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

வெறுமனே பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிடுவதோடு அவர்களின் அரசியல் ஓடிக்கொண்டிருக்கி றது. அறிக்கை மன்னர்களாக இருப்போர் மலையக மக்களின் வாழ்விடங்களுக்கு சென்று எதனையும் கண்டறிவதாகவோ கேட்டறிவதாகவோ இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு புதுமையான விடயம் என்னவென்றால் தேயி லைத் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் நூறு வீதமானோரும் ஆண் தொழிலாளர்களில் 99 வீதமானேரும் பத்திரிகைகள் குறித்தோ அல்லது வேறு ஊடகங்கள் குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்வது கிடையாது.

பாடசாலைச் சமூகம், படித்த சமூகம் மற்றும் வர்த்தக சமூகமே அதிகளவு உலக நடப்புக்களை அறிவதற்கு ஆவலாக இருப்பதைக் காணமுடிகிறது.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கின்றவர்களால் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களுக்கு சென்று அங்கு கை தட்டுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியலே மலையகத்தில் காலூன்றியுள்ளது. இவ்வாறானவர்களுக்காகவே அறிக்கை மன்னர்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். இப்படியானவர்களிடம் ஏதேனும் உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறினால் தலைமைகள் புரா ணம் பாடத்தொடங்கி விடுவர். நாம் அந்தக் காலத்தில் அதனைச் செய்தோம். இதனைச் செய்தோம் என்றும் போராட்டங்களை முன்னெடுத்தோம் என்றும் பிதற்றிக்கொள்வர். இந்த பிதற்றல்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை ஏற்றுக்கொண்டாலும் சம காலத்து போக்குகளுக்கும் சமூக பொருளாதார அரசியல் கலாசார மற்றும் விஞ்ஞான யுகத்துக்கும் ஏற்றாற் போல் நாமும் மாறி நமது சமூகத்தையும் இழுத்துச் செல்வோராகவே இருக்க வேண்டும்.

தற்போது மலையக அரசியல் களத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சினை, கூட்டு ஒப்பந்தம்,அரசாங்கத்தினால் தனியாருக்கு சம்பள அதிகரி ப்பு, ஆலோசனை தொடர்பில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படியான கால கட்டங்களில்தான் மலையக இளை ஞர் சமுதாயம் விழிப்படைய வேண்டிய தேவை எழுகின்றது. எமது முன்னோர்கள் கல்வியில் ஆர்வம் காட்டாத தால் நேர்ந்த கதி இன்று மலையகத்தில் உணரப்பட்டு விட்டது.

அந்த வகையில் இன்றைய மலையக இளைஞர் சமுதாயம் கல்வியில் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை கூறியே ஆக வேண்டும்.

இவ்வாறு எழுச்சி கண்டு வரும் மலையகத்தின் இளை ஞர் சமூகம் அதிகமாய் சிந்திக்க வேண்டியவர்களாகவும் மூத்தோர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி தூண்டி விடுபவர்களாகவும் மாற வேண்டும்.

மலையக இனத்தை கட்டிக் காப்பதாக கூறுகின்ற அரசியல் தலைமைகள் காலா காலமாய் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தவர்கள் தோட்டப் புறங்களில் இருந்து படித்த இளைஞர்களை தெரிந்து அரச சேவைகளுக்குள் புகுத்தி விடுவதற்கு செயற்பட்டிருக்கின்றனரா என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது.

ஆசிரியத் தொழில், தபால் ஊழியர் இல்லாவிட்டால் கிராம உத்தியோகத்தர் பதவிகளைத் தவிர்ந்த ஏனைய பதவிகளில் சந்தர்ப்பங்கள் கிட்டுவதாக இல்லை. அமைச்சர்களாக பதவியேற்றோர் தமது அமைச்சு நடவடிக்கைகளுக்காக பதவியில் அமர்த்தப்படுகின்ற இளைஞர்கள் அமைச்சுப்பதவிக்காலம் முடிவடைந்ததும் குறித்த இளை ஞர் வேறு தொழிலை தேடி அலையும் நிலைமை உருவாகின்றது.

அடுத்தவன் எந்த விதத்திலேனும் முன்னேறி விடக் கூடாது என்ற மகா எண்ணம் தமிழனிடம் மாத்திரமே இரு க்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது இனத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். பாராளுமன் றம், தேர்தல்கள் செயலகம், சுகாதாரத்துறை, கல்வி நிர்வாக சேவை உள்ளிட்ட அனைத்து அரச பணிகளிலும் தமது சமூகத்துக்கு சந்தர்ப்பத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.

இதில் சிங்களவர்களைப் பற்றி கூறித் தெரிய வேண்டி யதில்லை. ஆனாலும் மலையகத்தான் மாத்திரமே இது பற்றி எண்ணம் கொள்வது கிடையாது.

இப்படியான நகர்வுகள் ஏற்ற தாழ்வுகள் அசட்டுத் தன்மைகளுக்கு மத்தியில்தான் அப்பாவித் தோட்டத் தொழி லாளர்களின் சம்பள விடயத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் நாட் சம்பளக்காரர்கள், நாட்கூலிகள் என்ற அந்தஸ்திலேயே வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளரின் ஒரு நாளுக்கான சம்பள த்தை இத்தனை ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என்ற பேச்சிலேயே மலையகத்தில் அரசியல் செய்யப்படுகிறது. ஆனால் தோட்டத் தொழிலாளிக்கு மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தஸ்தை வழங்குவதற்கு எவ ரும் முன் வந்தது கிடையாது. இப்படிக் கூறுவதற்கும் விள க்கம் சொல்வதற்கும் ஏராளமானோர் வருவர் என்பது புரிகிறது.

எத்தனையோ போராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றதாகக் கூறப்படுகிறதே? தோட்டத் தொழிலாளி க்கு குத்தப்பட்டுள்ள நாட்கூலி என்ற நாமத்தை துடை த்தெறிவதற்கு என்ன தான் செய்யப்பட்டது. மலையகத் தின் மூத்த அரசியல் வாதிகள் தங்களது காலம் முழுதும் இதனைப் பற்றி சிந்திக்காது இப்போது காலம் கடத்துபவர்களாக இருக்கின்றனர். அப்படியானவர்கள் தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையாவது முன்வைக்க முடி யும். இதிலிருந்தும் இவர்கள் தவறுகின்றனர்.

மேலே குறிப்பிட்டது போன்று இன்னும் சில மாதங்க ளில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயமும் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிலைப்படுத்தியே நாடு முழுவதும் காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலையகம் மாத்திரம் இதற்கு விதிவிலக்காகி விடாது.

இந்நாட்டை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற, ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கங்களும் தோட்டத் தொழிலாளிகளின் உண்மையான நிலைவரங்களைப் புரிந்து கொண்டதில்லை. அரசாங்கத்திலிருந்து எந்தவித பரிந்துரைகளும் இதுவரையில் இல்லை என்ற போது அரசாங்கங்களால் நேரடியான எந்தவொரு நன்மையினையும் சலுகையினையும் பெற்றது கிடையாது. மலையக அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தம க்கு ஒதுக்கீடு செய்வனவற்றில் பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டங்களை விட வேறு எதுவும் கூறுவதற்கு கிடையாது. இது பற்றி அதிக விளக்கமும் தேவையற்றது.

தற்போதும் புதிதாக பதவியேற்றுள்ள தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினரு க்கு 2500 ரூபாவை சம்பள அதிகரிப்பாக வழங்குமாறு அரசாங்கம் தனியார் தொழில் தருநர்களுக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அது மாத்திரமன்றி 75 வீதமான தனியார் துறை தொழி ல் தருநர்கள் அரசாங்கத்தின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அளவில் உண்மை இருக்கிறது என்பது புரியாத விடயமாகும்.

இந்நிலையில் அரசாங்கம் வழங்கியுள்ள ஆலோசனை யின் பிரகாரம் 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான அழு த்தங்கள் தற்போது எழுந்துள்ளன.

எனினும் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

2500 ரூபாவை தோட்டத் தொழிலாளிக்கு பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு 100 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறுவது போன்று நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறுகின்றமையால் தோட்டத் தொழிலாளி ஒருவரது சம்பளம் நாளொன்றுக்கு 380 ரூபாவால் அதிகரிக்கப்ப ட்ட சம்பளமாக இருத்தல் வேண்டும்.

தற்போது கிடைக்கின்ற 620 ரூபாவுடன் அரசாங்கத் தின் பரிந்துரையின் பேரிலான 2500 ரூபா கிடைக்கும் பட்சத்தில் அதில் நிர்ணயிக்கப்படுகின்ற நாளொன்றுக்கான 100 ரூபாவையும் இணைத்தால் 720 ரூபாவாக உயர்கிறது.

இந்நிலையில் இத்தொகையோடு இன்னும் 280 ரூபா வை இணைத்து 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவே இ.தொ.கா. கூறுகிறது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத் தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு இணக்கம் காணப்போவதாகவும் கூறியுள்ளது. அவ்வாறெனின் இ.தொ.கா. வின் கணக்கின்படி மேற்குறிப்பிட்ட 2500 ரூபாவுடன் மேலும் 7000 ரூபாவை இணைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 9500 ரூபாவால் அதிகரித்துக் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

தனியார் ஊழியருக்கு 2500 ரூபாவை அரசாங்கம் பரிந்துரை செய்திருக்கின்ற நிலையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் நாட்கூலிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டவர்களாக இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு 9500 ரூபாவை மாதமொன்றுக்கான அதிகரித்த சம்பளமாக பெற்றுக்கொடுக்கப் போவதாக கூறுவது எந்தவிதத்தில் நியாயபூர்வமானது என்பது புரியவில்லை.

அத்துடன் இவ்வாறு 1000 ரூபா சம்பள உயர்வு குறித்து முன் வைக்கப்படுகின்ற கோரிக்கை நிராகரிக்கப்படின் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்துக் கொடுப்பதற்கு தாம் முழுமையான ஆதரவினை வழங்குவதாக மலையக தொழிற்சங்கங்கள் சில தெரிவித்துள் ளன.

உண்மையில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் புதிய ஒப்பந்தத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய அரசியலுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங் கள் பாராளுமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் எதிர்வரும் ஜூன் மாத இறுதிப்பகுதி அல்லது ஜூலை மாதத்திலேயே கூட்டு ஒப்பந்தப் பேச்சுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்ற நிலை உருவாகியுள் ளது.

மேலும் கூட்டு ஒப்பந்தத்தின் போது பல்வேறு இழு பறிகள் இடம்பெறுவது வழக்கமாகக் கொண்டிரு க்கின்ற நிலையில் 100 ரூபாவை அதிகரிப்பதற்கே முதலாளிமார் சம்மேளனம் மற்றும் கம்பனிகள் முன் வருவதில்லை. இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிடப்பட்டதான நாளொன்றுக்கு 380 ரூபா அதிகரிப்பு கோரிக்கையானது எந்தளவில் சாத்தியம் என்பது கேள்வியாக உள்ளதுடன் இதுவும் ஒருவித அரசியல் சித்து விளையாட்டாக இரு க்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறான விட யங்களில் மிகவும் விழிப்பாக இருத்தல் அவசியமா னது. நிறைவேறாத அல்லது நிறைவேற்றப்பட முடியாத விடயங்கள் தூண்டி விடப்பட்டு இறுதியில் நிறைவேறா மலே ஆகி விட்டால் வெறுப்புத் தன்மையே தோன்றும்.

அப்பாவிகள் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். எந் தச் சந்தர்ப்பத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் உண ர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது. அரசியல் களத்தில் கூற ப்படுகின்றவற்றை போல் அரசாங்கத்தினால் வழங்கப் படுகின்ற உறுதி மொழிகளையோ எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகின்ற தர்க்கங்களையோ உடனடியாக நம்பி விடவும் வேண்டாம். பின்னர் ஏமாறவும் வேண்டாம். சிந்தித்து செயலாற்றினால் யாவருக்கும் ஜெயம் உண் டாகும்.

ஜூன் மாதத்தின் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இந்திய வம்சாவளித் தமி ழர்களின் தொப்புள் கொடி உறவு எனக் கூறப்பட்டு வருகின்ற இந்திய தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் தரவுள்ள நிலையில் அவரிடம் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் நேரடியாக அழைத்துச் சென்று தொழி லாளர்களின் வாழ்க்கைப் பொருளாதார நிலைமைகளை காண்பிப்பதற்கும் வழி வகை செய்வதற்கு மலையகத் தலைமைகள் முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்கால த்திலாவது நன்மைகள் வந்து சேர்வதாய் அமையும் என் பதிலும் ஐயமில்லை.

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் வெளிப்படுத்தப் படாமையே பின்னடைவுகளுக்கான பிரதான காரணி. இதனை புதிதாகவும் சொல்ல வேண்டியுள்ளது.
நன்றி - வீரகேசரி 

1815 கண்டி ஒப்பந்தம் : 200 ஆண்டுகள் - என்.சரவணன்

 

கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு நாளையோடு 200 வருடங்கள் ஆகின்றன. அவ்வொப்பந்தத்தின் பின்னணி மற்றும் அதன் பின்விளைவை விளக்குவதே இக்கட்டுரை.

1815 இல் கண்டி ராஜ்ஜியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்ட கதையை சென்ற வாரம் பார்த்தோம். கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்திடமுமிருந்து அன்னியரிடம் பறிபோனது.

காலனித்துவத்திடம் பறிபோன கதை
1505 இல் இலங்கை அந்நிய காலனித்துவத்திடம் பறிபோனது. போர்த்துக்கேயர் இலங்கை கைப்பற்றிய போதும் அவர்களால் கரையோரப் பிரதேசங்களையே 1685வரை ஆண்டனர். போர்த்துக்கேயரை இலங்கையை விட்டு விரட்டுவதற்காக கண்டி மன்னன் இரண்டாவது இராஜசிங்கன் ஒல்லாந்தரின் உதவியை நாடினார். அப்படி செய்தால் அதற்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அல்லது கொட்டியாரத்தில் ஒல்லாந்தருக்கு ஒரு கோட்டையை கட்டி கொடுப்பது என்பதே மன்னனின் திட்டமாக இருந்தது. அதன்படி 23.05.1638இல் ஒல்லாந்தருக்கும் கண்டி அரசனுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி ஒல்லாந்தருக்கு கண்டியின் விளைபொருள்களை ஏற்றுமதிக்கான ஏகபோக உரிமையை வழங்கி பொருளுதவி, படையுதவியையும் செய்வதாக உடன்பாடு காணப்பட்டது. அதன்படி ஒல்லாந்தரும் 1658 யூன் மாதமளவில் போர்த்துகேயரை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டனர். ஆனால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டபடி கைப்பற்றிய இடங்களை மன்னரிடம் ஒப்படைக்காமல் தாம் கைப்பற்றிய இடங்கள் தமக்குரியவை என்றனர்.

இதற்கிடையில் கண்டியின் அரசர்கள் மாறினார். மன்னர் நரேந்திர சிங்க (ஆட்சிபுரிந்தது 1707-1739) மன்னருக்கு அடுத்து ஆட்சிபுரிய வாரிசு இன்றிப் போனதால் அவரின் முதலாவது மனைவியின் சகோதரர் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டு அரசராக்கப்பட்டார். அதுபோலவே ஸ்ரீ விஜய ராஜசிங்கனுக்கும் வாரிசு இல்லாத நிலையில் அவரின் முதல் மனைவியின் சகோதரர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782) மதுரையிலிருந்து அழைக்கப்பட்டு மன்னராக ஆக்கப்பட்டார்.

இப்படி நாயக்க வம்சத்து மன்னர்கள் சிங்கள பௌத்தர்களை ஆண்டது குறித்து பிற்காலங்களில் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாலும் அன்றைய ஆரம்ப கட்டத்தில் இந்த அளவு இனவாதத்துடன் அணுகப்படவில்லை. அவர்களையும் ஒரு சிங்கள மன்னனாகவே கருதினார்கள். அந்த நாயக்க மன்னர்களும் பௌத்த மதத்துக்கு மாறி தம்மை சிங்கள மக்களின் அரசனாகத்தான் ஆட்சி நடத்தினார்கள். குறிப்பாக கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் தான் பௌத்த மதத்தைப் பலப்படுத்துவதற்கான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்தரின் புனிதப்பல்லை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, புனிதப்பல்லை மக்கள் வணங்குவதற்காக வருடாந்த தலதா பெரஹர கொண்டாட்டம் 1753இல் இவரின் ஏற்பாட்டிலேயே தொடங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக நலிந்து போயிருந்த பௌத்த மதத்தை கட்டியெழுப்புவதற்க்காக அன்றைய  சீயம் நாட்டு (தாய்லாந்து) அரசருக்கு தூது அனுப்பி அங்கிருந்து தேரவாத பௌத்த பிக்குகளை வரவழைத்து சீயம் நிகாய ஆரம்பிக்கப்பட்டது. பல நிலங்கள் விகாரைகளுக்கு வழங்கப்பட்டது. சிதைவுற்றிருந்த பல விகாரைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் காலத்தில் ஒல்லாந்தருடன் பகைமை உணர்வுகள் தொடர்ந்த போதும் இரு தரப்புக்கும் இடையில் உக்கிர போர் முயற்சிகள் இடம்பெறவில்லை. ஆனால் ஒல்லாந்தரின் ஆட்சிப்பகுதிகளில் இருந்த கரையோர பிரதேசங்களில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சியைப் பயன்படுத்திய  கண்டி மன்னர் 1761இல் ஒரு படையெடுப்பை செய்தார். இதற்குப் பதிலடியாக ஒல்லாந்தரும் கண்டி ராச்சியத்துக்கு உரித்தான சிலாபம் புத்தளம் போன்ற பிரதேசங்களைப் பிடித்தனர். அத்துடன் நில்லாது கண்டி மீது படையெடுத்து வெற்றிமுரசு கொட்டினர். ஆனால் அதனை தக்கவைத்துகொள்ளும் பலமில்லாததால் ஒல்லாந்தர் பின்வாங்கினர். இரு தரப்பும் விட்டுகொடுப்புகளை செய்வதாக ஒரு முக்கிய சமாதான உடன்படிகையை 14.02.1776 இல் செய்துகொண்டனர். இந்த ஒப்பதத்தின் மூலம் சூட்சுமமாக வளங்களை கொள்ளையடித்தனர் ஒல்லாந்தர். இதன் உச்சக் கட்டமாக ஒல்லாந்தரை துரத்தியே ஆவது என்கிற முடிவுக்கு வந்த மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.

இதற்கு முன்னர் போர்த்துகேயரை விரட்ட ஒல்லாந்தர்களைப் பயன்படுத்தியதன் விளைவு போர்த்துக்கேயரின் இடத்தை ஒல்லாந்தர் வகித்தனர். அந்த வரலாற்றுப் பாடத்தை மறந்து மீண்டும் இந்த முறை ஒல்லாந்தர் மீது படையெடுப்புக்காக ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார் கண்டி மன்னர்.  ஆங்கிலேயர் இந்த சூழலைப் பயன்படுத்தி திருகோணமலையை 1782இல் கைப்பற்றியிருந்தனர். அதே ஆண்டு மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் குதிரையிலிருந்து விழுந்ததில் மரணமானார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 - 1798) ஆட்சியேறினார். இவரது ஆட்சியில் தான் அரசருக்கு எதிராக கண்டிப் பிரதானிகளதும், அதிகாரிகளதும் அதிருப்திகள் அதிகரித்தன. அவர்கள் அரசருக்கு எதிராக சூழ்ச்சி செய்துகொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  அடுத்ததாக முடிசூட்டப்பட்ட அவரின் மூத்த மனைவியின் சகோதரர் முத்துசாமியை ராஜாதிராஜசிங்கனுக்குப் பின்னர் முடிசூட்ட விடவில்லை. அதற்குப் பதிலாக இரண்டாவது மனைவியின் சகோதரன் ஸ்ரீ விக்கிரமா ராஜசிங்கனை முடிசூட்டினர் . அதற்கூடாக அரசாட்சியை தமது கைக்குள் வைத்திருக்கலாம் என்று போட்ட கணக்கு பிழைத்தது. அவர்களின் சூழ்ச்சி எல்லை மீறிப் போனபோது மன்னரின் தண்டனைக்கு உள்ளானார்கள். இறுதியில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள் ஆங்கிலேயர்களின் துணையுடன் கண்டி அரசை கைப்பற்றி அரசரை சிறைபிடித்தனர். இலங்கையின் கடைசி அரசும் வீழ்ந்தது. முழு இலங்கையும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது.

1803, 1809ம் ஆண்டுகளில் கண்டியை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்திருந்தன. 1803இல் நிகழ்ந்த போரில் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயப்படையினர் கொல்லப்பட்டு ஒருவர் மாத்திரமே தப்பி சென்றார். அனால் 1815இல் கண்டியைப் பிடிக்கப்போன 3744 ஆங்கிலப் படையினரில் எவருக்கும் சேதமின்றி கண்டி கைப்பற்றப்பட்டது.

ஒப்பந்தம்
கண்டு கைப்பற்ற பின்னர் தம் மத்தியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள் என்றே காட்டிக்கொடுப்புக்கு துணைபோன பெரும்பாலான பிரதானிகள் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எமாற்றப்பட்டிருந்தார்கள். “இரு தரப்புக்கும் தேவைப்பட்டது அரசனை வீழ்த்துவது. அது முடிந்துவிட்டது. இனி நீங்கள் போகலாம்” என்பதே ஆங்கிலேயர்களின் சைகையாக இருந்தது.
 

சிறைப்பிடிக்கப்பட்ட அரசரின் நலன்களை ஏற்பாடு செய்வதற்காக டொய்லி 08 நாட்கள் ஒப்பந்தம் குறித்த உத்தியோகபூர்வமாக கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை. 

கண்டி தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களிடம் பணிந்துவிட்டதால் அன்றைய ஆள்பதியின் விருப்பின் பேரில் அதிகாரி டொய்லி ஒரு மாநாட்டைக் கூட்டினார். விமரிசையான அந்த ஏற்பாட்டில் கண்டி பிரதானிகள், அதிகாரிகள், திசாவைகள் பலரும் கலந்துகொண்டனர்.  அங்கு ஏன் கண்டியை கைப்பற்றினோம் என்று விளக்கமளிக்கப்பட்டது. “கண்டிப் பிரதானிகளே கைப்பற்றும்படி அழைத்தார்கள், அவர்கள் எங்கள் படைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்” என்று ஆள்பதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கண்டி ராஜ மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு கண்டி ஒப்பந்தம் (Kandy convention) செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜோன் டொய்லியால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் பிரதானிகள் கையெழுத்திட்டனர்.  ஆங்கில-சிங்கள மொழிகளில் அது வாசிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அந்த ஒப்பந்தம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. ஆனால் 6 ஆம் திகதி ஆங்கிலேய வர்த்தமானி பத்திரிகையில் முதல் தடவையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

ஒப்பந்தம் செய்துமுடிக்கப்பட்டதன் பின்னர் ஆங்கிலேய கொடி ஏற்றப்பட்டது. குண்டுகளையும் துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்து தமது வெற்றியைக் கொண்டாடினர் ஆங்கிலேயர்.

அதே நாள் பிரித்தானிய கொடியான ”யூனியன் ஜாக்” கொடியை வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் இழுத்து இறக்கி சிங்கக் கொடியை ஏற்றினார். அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது ராஜ்ய துரோக குற்றம் சுமத்தப்பட்டு சிறையிருந்தார். சிங்களவர்கள் மத்தியில் இன்றும் பாடப்புத்தகங்களில் உள்ள நாயகன் அவர். இன்றும் தலதா மாளிகையின் முன்னால் ஆங்கிலக்கொடியை இறக்கி கையில் வைத்திருக்கும் ஒரு சிலை உண்டு.

தமிழில் வைக்கப்பட்ட கையெழுத்து
இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து வைப்பதை கௌரவமாக நினைப்பதைப்போல அப்போது தமிழில் கையெழுத்திடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழை ஓரளவு அறிந்தும் வைத்திருந்தனர். நாயக்க மன்னரின் உறவினர்கள் பலர் அரச சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் தமிழும் வழக்கில் இருந்தது. ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்ட கையெழுத்து. சிலரின் கையெழுத்து என்ன மொழி என்றே அடையாளம் காண முடியாது உள்ளதை ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஆங்கிலேயர் சார்பில் 
ரொபர்ட் பிரவுன்றிக் – ஆள்பதி
ஜோன் டொய்லி – பிரதான மொழிபெயர்ப்பாளர்
ஜேம்ஸ் சதர்லன்ட் – ஆங்கிய அரசின் பிரதி செயலாளர்
கண்டி மக்கள் சார்பாக கையெழுத்திட்டவர்கள்
எஹெலபொல மகா நிலமே
மில்லேவ – வெல்லஸ்ஸ தொகுதி
ரத்வத்த – மாத்தளை தொகுதி
கலகொட – கண்டி கலாவிய
மொல்லிகொட அதிகாரம் – ஏழு கோறளை
மொல்லிகொட – மூன்று கோறளை
பிலிமதலாவ அதிகாரம் – சப்பிரகமுவ தொகுதி
பிலிமதலாவ – நான்கு கோறளை
கெப்பெட்டிபொல – ஊவா
கலகம – தமன்கடுவ

கையெழுத்தில் சில மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக இப்போதைய புதிய ஆய்வுகள் சந்தேகிக்கின்றன. குறிப்பாக எஹெலபொலவின் கையெழுத்து போலியாக இருக்க வாய்ப்புண்டு என்றும் அதற்கு எதுவாக இருக்கக்கூடிய காரணங்களையும் அந்த ஆய்வுகள் முன்வைக்கின்றன.  பலரது கையெழுத்துக்கள் அப்படி மோசடியானவை என்கிறது அந்த ஆய்வுகள்.

வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைய வரலாற்றை ஆங்கிலேயர்களின் கண்களுக்கூடாகவும் அவர்களின் மூளைக்கூடாகவுமே பார்க்கத் திணிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் சொன்னதே இன்றும் எமக்கான ஆதாரமாகியிருக்கிறது. எனவே இந்த மோசடிகள் குறித்த சந்தேகங்களை அசட்டை செய்யவும் முடியாது.

ஒப்பந்த உள்ளடக்கம்
உடன்படிக்கை 12 பிரமாணங்களைக் கொண்டது. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் அரச போகத்தை இழப்பதுடன், இனி அந்த வம்சாவளியை சேர்ந்த எவருக்கும் ஆளுரிமை இல்லை என்றும், அவர்களில் எவரும் கண்டி பிரதேசத்துக்கும் நுழைந்தால் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்தே முதல் மூன்று  பிரமாணங்களும் பேசுகின்றன. நான்காவது கண்டி பிரித்தானிய ஆட்சிக்குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கிறது. ஐந்தாவது பௌத்த மதத்தை பேணி பாதுகாப்பது குறித்தும், ஆறு, ஏழு, எட்டு ஆகியவை தண்டனை நிறைவேற்றுவதில் நெகிழ்ச்சித் தன்மை குறித்தும், ஒன்பதாவது கண்டியில் நீதி வழங்கும் அதிகாரம் ஆள்பதியின் கட்டுப்பாட்டில் இருப்பது, பத்தாவது இந்த ஒப்பந்தத்தின் வலிமை குறித்தும், பதினோராவது கண்டியில் பெறப்படும் வரி கண்டியின் அபிவிருத்திக்கு பயன்படும் என்றும், பன்னிரெண்டாவது வர்த்தகம் குறித்த விடயங்களை ஆள்பதி மன்னருக்கு பொறுப்பு கூறுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள்
ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பலவற்றை ஆங்கிலேயர் பின்பற்றவில்லை என்று அதிருப்திகொண்டனர் கையெழுத்திட்டவர்கள். பொது மக்கள் மத்தியிலும் ஆங்கிலேய எதிர்ப்பு நாளாக நாளாக வளர்ந்தது. 
இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பெட்டிபோல, பிலிமத்தலாவ, மில்லவ போன்ற தலைவர்கள் தம்மை ஏமாற்றிய ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஒரு சிங்கள மன்னனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். அதன் விளைவாக அவர்கள் பலர் 1818இல் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். சிலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சிறைத்தண்டனை பெற்றனர்.

கண்டியரசன் ஆங்கிலேயர்களுக்கு கடைசியாக சொன்ன வசனம் 
“எஹெலபொலவையும், மொல்லிகொடவையும் நம்பாதீர்கள். அவர்கள் என்னை ஏமாற்றியவர்கள். உங்களையும் ஏமாற்றத் தயங்க மாட்டார்கள்.”
இலங்கை ஏறத்தாள 450 வருடங்கள் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. போர்த்துக்கேயர் 153 வருடங்கள், ஒல்லாந்தர் 140 வருடங்கள், ஆங்கிலேயர் 152 என அது தொடர்ந்திருக்கிறது. ஒரு சண்டியரிடம் இருந்து தப்புவதற்காக இன்னொரு சண்டியரை நாடுவதும், காப்பாற்ற வந்த சண்டியர் முன்னைய சண்டியரை விரட்டிவிட்டு மேலும் மோசமான சண்டித்தனம் செய்வதுமாக தொடர்ந்திருக்கிறது. இறுதியில் சொந்த தேசத்து மன்னரை விரட்டிவிட்டு அந்நிய ஆக்கிரமிப்பு பேய்களிடம் மொத்தமாக தம்மை ஒப்படைத்த கதை விசித்திரமானது. சொந்த மன்னனை அந்நியன் என்று தூற்றி அவரை விரட்ட செய்த சதி இறுதியில் உண்மையான அந்நியனிடம் தேசத்தை காவு கொடுத்தனர். அந்த வகையில் கண்டி ஒப்பந்தம் இலங்கையின் மரண சாசனம் தான். அந்த ஒப்பந்தத்தின் எதிர்விளைவை நாடு இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates