Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அதிகாரம் பகிரப்படும் போது அதில் மலையக மக்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும் - திலகர் எம்.பி



புதிய அரசியலமைப்பு வடிவமைப்புத் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது அரசியலமைப்பில் மலையக மக்களின் அரசியல் அடையாளம் என்ன என்பது பற்றி உரையாடும்போது சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால் மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக, புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம்.  எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். 

‘அரசியல் யாப்பு சீர்திருத்தமும் மக்கள் பங்குபற்றலும்’ எனும் தொனிப்பொருளில் கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் மலையகமெங்கும் நடாத்திவரும் பொதுக் கருத்துப்பகிர்வு கலந்துரையாடல் அண்மையில் ஹட்டன் நகரில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். 

மனித அபிவிருத்தி நிறுவன (கண்டி)  தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வை சாத்தியமாக முன்னெடுக்கும் வகையில்  கருத்துப்பகிர்வை கேள்வி, பதில் வடிவத்தில் ஏற்பாட்டாளர்கள் அமைத்திருந்தனர். அந்த வகையில் திலகர் எம்.பிக்கு வழங்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கும் அவர் பின்வருமாறு பதில் வழங்கியிருந்தார்

ஆட்சி முறை –
பாராளுமன்ற முறைமை ஒற்றை ஆட்சியா ? அல்லது சமஸ்டி முறையிலா அமைதல் வேண்டும்?

தற்போது இலங்கையில் ஒற்றையாட்சி நிலவுவதாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு மாயை நிலவுகின்றது என்றே நினைக்கிறேன். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாணசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதிகாரப்பகிர்வு ஒன்று இடம்பெற்று ஒற்றையாட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைகள் தனியான நிர்வாகத்தையும் அதிகாரங்களையும் கொண்டு இயங்கி வருகின்றன. அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் உண்டு. போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை மற்றும் அதிகாரங்கள் சம அளவில் பகிரப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் அவற்றை நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தரப்பினரிடம் இருந்து இது பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அதுவே இன்று சமஷ்டியாக அமைதல் வேண்டும் என தெளிவாக முன்வைக்கப்பட்டும் வருகின்றது. 

அதே நேரம் மலையகம் இன்னும் உள்ளுராட்சி நிர்வாகத்திலேயே முழுமையாக பயன்பெறாத நிலையில் இங்கு சமஷ்டி பற்றிய உரையாடல்கள் குறைவாகவே உள்ளன. அதற்கு வடக்கு, கிழக்கு போல் அல்லாது மலையக மக்கள் பரவலாக வாழ்வதும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே கலந்து வாழ்வதும் காரணமாக அமையலாம். எனவே அதிகாரப்பகிர்வு என்று வருகின்றபோது தேசிய ரீதியில்  எவ்வாறான பிரேரணைகள் சக சமூகங்களினால்  முன்வைக்கப்படுகின்றதோ அதற்கு எவ்வாறான இசைவாக்கம் அரச மட்டத்தில் கடைக்கின்றதோ அவற்றுக்கு ஏற்ப மலையக சமூகமும் அவதானங்களைச் செலுத்தி முன்னகர வேண்டும். ஆனால, எவ்வித அதிகாரப்பகிர்வு முறை வரினும் அதில் மலையக மக்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

தேர்தல் முறை –
தொகுதிவாரி தேர்தல் முறையா? அல்லது விகிதாசார தெரிவு முறையா? அல்லது கலவை முறையா? மலையகத் தமிழ் மக்களுக்கு பயணளிக்கும்?

வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977க்குப்பின் சிறுசிறுக வாக்குரிமைக் கிடைக்கப்பெற்றதும் நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநித்துவ முறையின் கீழ் கணிசமான அளவில் மக்கள் சபைகளில் பிரதிநிதித்துவத்தை பெற்று வருகின்றனர். தற்போது ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த சமூகம் 2006-2010 காலத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. குறைபாடுகள் உள்ள முறைமையாயினும் நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமை மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஓரளவ உறுதி செய்வதாக உள்ளது. அதேநேரம் தேசிய ரீதியாக தொகுதிக்கு பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவர் இல்லாமை மற்றும் விருப்பு வாக்குகளினால் உட்கட்சி மோதல்கள் அரசியல் செயற்பாட்டாளர் அல்லாத ஒருவரும் மந்திரியாகிவிடுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நடைமுறையில் உள்ள விகிதாசார முறை மாற்றப்படல் வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்படுகின்ற வேளை நாம் தனித்து நின்று விகிதாசார முறைiமையை வேண்டி நிற்கும் நிலைமை இன்று இல்லை. இதில் பாதிக்கப்பட போவது தென்னிலங்கை முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களும் சிறுகட்சிகளுமே.

அதேநேரம் நிலவுகின்ற தன்மைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்புக்கு முன்பதாகவே ஏற்கனவே 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ள ‘கலப்பு முறை’ தேர்தல் முறைக்கான நடைமுறைகளை சட்டமாக்கும் ஒரு அறிகுறி தெரிகின்றது. எனவே இதுவரைக்காலமும் நடைமுறையில் இருந்திருக்காத கலப்பு முறையில் நாம் எத்தகைய பிரதிபயன்களை அடைவோம் என்பது யாரும் அறியாததாக உள்ளது. அதேநேரம் கலப்பு முறையை பிரேரிக்கும் அரசியல் தரப்பாக இருந்தாலும் சரி அல்லது அதனை வடிவமைக்கும் நிபுணத்துவ குழுக்களாயினும் சரி மலையக மக்களை ‘பல அங்கத்தவர்’ தொகுதிகள் மூலம் உள்வாங்கினால் போதுமானது என்பது போன்ற கருத்து நிலையில் உள்ளன. இதனை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு ஆசனத்தை வைத்து அவர்கள் அளக்கிறார்கள். இது தவறு. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் மலையக மக்கள் 1947 ஆம் பாராளுமன்ற அவைக்கு 7 உறுப்பினர்களை நேரடியாக தனித் தொகுதிகள் ஊடாக தெரிவு செய்தவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நாம் அதனை மீளவும் நினைவ படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சொல்பெரி அரசியல் அமைப்பில் மலையக மக்கள் 14 பேர் பிரதிநித்துவம் பெறத்தக்கதாக வழி அமைக்கப்பட்டிருந்தது. 1948இல் குடியுரிமை பறிக்கப்பட்டதாலும், 1964 ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையக மக்கள் இந்தியா அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட மாற்றங்களே 1977 ஆம் ஆண்டு ‘பலஅங்கத்தவர்’ தொகுதியொன்றின் ஊடாக ஒரு ஆசனத்தைப் பெறும் நிலை உருவானது. எனவே தொகுதியும் விகிதாசாரமும் கலந்து ஒரு முறை அறிமுகப்படுத்தப்படுமெனில் மலையக மக்கள் தனித்தொகுதிகளை பெறுவதற்கு போதுமான எல்லாத் தொகுதி நிலைகளும் தனித்தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அதற்கு மேலதிகமாகவே பல அங்கத்தவர் தொகுதி மூலமும் மாவட்ட விகிதாசார முறை மூலமும் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை ஏற்றுக்கொள்ளபப்டல் வேண்டும் என்பதை நான் அழுத்தமாக சொல்லி வருகிறேன். அதனையே அரசியல் யாப்புக்கான எனது பிரேரணையாகவும் முன்வைக்கிறேன். 

அதிகாரப்பகிர்வு-
உள்ளுராட்சி, மாகாண சபை முறை அல்லது சிறுபான்மையினரை மையப்படுத்திய தீர்வு. இவற்றில் எது சாத்தியமானது,

முதலாவது வினாவுக்கு பதிலளித்து போன்றே இதில் நாம் தேசிய செல்நெறியைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதேநேரம் உள்ளுராட்சி மன்றங்கள்  தொடர்பில் தற்போதுள்ள நடைமுறை மலையக மக்கள் பேரளவில் உள்ளவாங்கிய ஒரு முறையாகவே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள உள்ளுராட்சி நிர்வாக முறைமையோ  அல்லது அதன் சட்டங்களோ மலையக மக்களுக்கு முழுமையான பயனைத் தருவதாக இல்லை. எனவே மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட காலமாக அரசியல், சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு இப்போது மாவட்ட செயலாளர் மட்டத்தில் கூட அது ஒரு கோரிக்கையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு பிரதேச செயலகங்கள் அதிகரிக்கும்போது பிரதேச சபைகள் இயல்பாகவே அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அழுத்தம் இந்த அரசியலமைப்பு மாற்ற கலந்துரையாடல்களின்போது மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மறுபுறம் மாகாண சபைக்கு மாறான ஒரு முறைமை சம்ஸ்டி என்ற பெயரிலோ அவ்வாறு அல்லாமலோ முன்வைக்கப்படும் பட்சத்தில் அது ‘பிராந்திய சபை ஒன்றாக’ அமையும் வாய்ப்புகள் உள்ளன. வடக்கு கிழக்கு இணைப்பை கோரி நிற்கும் வடகிழக்கு மக்களுக்கு மாற்றாக இந்த பிராந்திய சபை முறை முன்வைக்கப்படலாம். இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணைக்கப்படும் நிலை வரும்போது ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் இணைந்த ஒரு பிராந்தியத்துக்குள் மலையக மக்கள் அரசியல் அதிகாரம் பெறக்கூடிய அலகு ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது. அது அவ்வாறு அமைதல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கலாம். இந்த மூன்று மாகாணத்து வெளியே பரந்து பட்டு வாழும் மலையக மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் கீழான அரசியல் அதிகாரங்களைப்பெறும் யோசனை வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும். 

மலையக மக்களின் இன அடையாளம்?
இது மிகவும் முக்கியமான ஒரு தலைப்பு என நினைக்கிறேன். ஏனெனில் சிலர் ‘மலையகம்’ என்பதை புவியியல் நிலை சார்ந்து நோக்குகின்றனர். ஆனால், மலையகம் என்பது அந்த மலையக மண்ணை உருவாக்கிய மக்களின் அடையாளமாக புவியியல் எல்லைகளைக் கடந்து ‘உணர்வு ரீதியாக’ மாறிவிட்ட ஒரு விடயம்.  எனவே பண்பாட்டு ரீதியாக மலையகத் தமிழர் எனப்படுவோர் அரசியல் ரீதியாகவும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படல் வேண்டும். நாம் இந்திய வம்சாவளி தமிழர் என அழைத்துக்கொண்டாலும் சட்டப்பதிவுகளில் அவ்வாறு இல்லை. இன்றும் கூட நேரடியாக மலையக மக்களை பிறப்பு சான்றிதழ்களில் ‘இந்திய தமிழர்’ என அழைக்கும் நிலை காணப்படுகின்றது. இது இலங்கை நாட்டில் இருந்து மலையக மக்களை அந்நியப்படுத்தும் சொல்லாடல் என்றே நான் பார்க்கிறேன் அது அவ்வாறு தான் நடக்கிறது. 

அதேநேரம் நிலை மாற்றமடைந்துவரும் மலையக சமூகத்தில் இந்திய அனுதாபிகளாகவும் அவ்வாறு அழைப்பதை கௌரவமாகவும் கருதும் மூத்த தலைமுறையினர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்கள் எவ்வாறு தமக்கு இந்திய அடைமொழி தேவையென நினைக்கிறார்களோ அதைவிட இறுக்கமாக மலையக அடையாளத்தினை ஏற்கனவே இளம் மலையக தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வேறுபட்ட மனநிலைகள் காரணமாக இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களின் சனத்தொகை எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்துக் காட்டுகின்றது. இது பாரதூரமான விளைவுகளை அரசியல் ரீதியாக தந்துகொண்டிருக்கிறது. 

எனவே அரசியல் யாப்பு மாற்ற காலத்தில் மலையக மக்கள் கடந்த ஐம்பது வருடகாலமாக பண்பாட்டு ரீதியாக வளரத்தெடுத்திருக்கும் உணர்வு பூர்வமான ‘மலையகத் தமிழர்’ என்பது எவ்வகையிலும் அரசியல் அடையாளமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதேநேரம் அந்த உணர்வைப் பெறாத அல்லது பெற மறுக்கின்ற மக்களையும் இணைத்துச் செல்லும் நோக்கில் ‘இந்திய வம்சாவளி  மலையகத் தமிழர்’ என்ற சொல்லாடலை பிரேரிக்கலாம். இதன் மூலம் இதுவரை காலம் சேர்க்கப்படாத ‘வம்சாவளி’ (Origin) என்ற சொல்லும் ( இது இந்திய தமிழர் என்பதற்கு பதிலீடாக அமையும்) ‘மலையகம்’ என்ற சொல்லும் உள்வாங்கப்பட இரண்டு தரப்புக்குமான தீர்வைத் தருவதாக அமையும்.

மேற்படி நான்கு கேள்விகளுக்கும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் மற்றும் எஸ்.ராஜரட்னம் ஆகியோரும் கலந்து கொண்டு பதிலளித்தனர். அமர்வை பி.பி.சிவபிரகாசம் நெறிப்படுத்தியிருந்தார். 

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்லியப்புசந்தி திலகர்



அறிமுகம் 
மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வையை செலுத்­த­வ­தற்கு ‘மலை­யகம்’ எனும் தொடர் பற்­றிய சிறு அறி­மு­கத்தைச் செய்­து­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. ‘இலங்­கைத்­தமிழ் வழக்கில் இன்று மலை­யகம் என்­பது இலங்­கையின் மலைப்­பி­ர­தே­சங்­களில் உள்ள பெருந்­தோட்­டங்­க­ளிலும் அவற்­றைச்­சார்ந்த நக­ரங்­க­ளிலும் வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழரைக் குறிப்­ப­தாகும். மலை­யகப் பகு­தி­க­ளைச்­சா­ராத பகு­தி­க­ளி­லுள்ள பெருந்­தோட்­டங்­களில் அதா­வது மேல், தென் மாகா­ணங்­களைச் சார்ந்த இறப்பர் பெருந்­தொட்­டங்­களில் வாழ்­ப­வர்­க­ளையும் மலைசார் பகு­தி­களில் இருந்து சென்று வட­கி­ழக்கு பகு­தியின் விவ­சாய பிர­தே­சங்­க­ளிலும் (கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில்) கொழும்­பிலும் வாழ்­ப­வர்­க­ளையும் கூட மலை­ய­கத்­த­மிழர் என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கில் உள்­ளது’ என்­கிறார் பேரா­சி­ய­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி. (இலங்கை மலை­ய­கத்­த­மி­ழரின் பண்­பாடும் கருத்­து­நி­லையும் - தொகுதி 1 (1993-உதயம் வெளி­யீடு) ஆய்வு முன்­னுரை பக்.11-). மலை­யகப் பண்­பாட்­டுத்­தளம் பற்­றிய முற்­றி­லு­மாக கவனம் செலுத்­தப்­பட்டு செய்­யப்­பட்ட ஆய்­வுத்­தொ­குப்பு என்ற வகையில் நாம் ‘மலை­யகம்’ எனும் தொட­ருக்­கான விளக்­க­மாக இந்த கூற்­றினைக் கொள்ள முடியும். எனினும் இந்த ஆய்­வு­கூற்­றுக்கு மேல­தி­க­மாக பின்­வரும் வகு­தி­யி­ன­ரையும் ‘மலை­யகம்’ என்ற தொட­ருக்குள் உள்­ள­டக்­கிப்­பார்க்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளமை தற்­கா­லத்தில் விவா­திக்­கப்­பட்­டு­வரும் விட­ய­மா­கி­றது.

அவை­யா­வன, 
1964 ஸ்ரீமா சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இந்­தி­யா­வுக்கு திருப்பி அனுப்­பப்­பட்டும் இன்­று­வரை இந்­திய தமிழ்­நாட்டில் சிலோன்­கா­ரர்­க­ளாகப் பார்க்­கப்­படும் ‘மலை­ய­கத்­த­மி­ழர்கள். இலங்­கையில் இடம்­பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் (மேற்­கூ­றிய ஆய்­வுக்­கூற்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள) வட­கி­ழக்கு பகு­தியில் வாழ்ந்த மலை­யக மக்­களின் புலப்­பெ­யர்வு. இவர்கள் அக­தி­க­ளாக இந்­தி­யா­வுக்கு சென்று இன்­றைய நாள் வரை இந்­தி­யா­விலும் ‘மலை­ய­கத்­த­வர்­க­ளாக’ அக­தி­ வாழ்க்கை வாழ்­கின்­றமை. இதில் குறிப்­பி­டத்­தக்க அம்சம் இந்த மக்கள் தொகை­யினர் ஏறக்­கு­றைய முப்­ப­தி­னா­யிரம் அள­வி­ன­ருக்கு 2009 ம் ஆண்டு 5ம் இலக்க நாடற்­ற­வ­ருக்­கான பிர­ஜா­வு­ரிமை வழங்கும் (திருத்தச்) சட்­டத்தின் பிர­காரம் ‘இலங்­கைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளமை.

இப்­ப­டி­யாக இந்­தி­யாவில் வாழும் இலங்கை குடி­யு­ரிமைப் பெற்ற ‘மலை­யக மக்கள்’.  சுதந்­தி­ரத்­துக்­குப்­பின்­னான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தான புலப்­பெ­யர்­வுகள் வடக்கு, கிழக்கு மற்றும் பூர்­வீ­கத்­த­மி­ழர்­களை மலை­யகம் நோக்­கியும் மலை­ய­கத்­த­மி­ழர்­களை வட­கி­ழக்கு மற்றும் மேற்­கு­லக நாடுகள் நோக்­கியும் இடம்­பெ­ய­ரச்­செய்­ததன் விளை­வாக தோன்­றி­யி­ருக்­கக்­கூ­டிய சமூ­கக்­கு­ழு­மங்கள். 
இதில் மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வை இரண்­டு­வி­த­மா­கப்­பார்க்­கலாம்.

ஒன்று, பிரித்­தா­னியர் காலம்­தொட்டே வியா­பாரம் மற்றும் தொழில் நிமித்தம் மலை­யகம் நோக்கி புலம் பெயர்ந்து அங்­கேயே தம்மை நிலை­நி­றுத்­திக்­கொண்டும் அங்­கி­ருந்து வெளி­யே­றியும் மலை­யக அர­சியல், சமூக,  இலக்­கிய துறையில் இவர்கள் ஆற்­றி­யி­ருக்­கக்­கூ­டிய பங்­க­ளிப்பு.

இரண்­டா­வது, இலங்­கையில் இடம் பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் மேற்­கு­லக நாடுகள் நோக்கி புலம் பெயர்ந்­தது போன்று மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வும் அங்கு (மலை­ய­கத்தில்) அவர்கள் தனிப்­பட்­ட­ரீ­தி­யா­கவும் சமூ­கக்­க­கு­ழு­ம­மா­கவும் மலை­யக அர­சியல், சமூக,  இலக்­கிய துறையில் கொண்­டி­ருக்கும் வகி­பாகம். மற்­றை­யது மலை­ய­கத்­தைச்­சார்ந்­த­வர்கள் மேற்­கு­லக நாடு­க­ளுக்குச் சென்று அங்கு மலை­யக மக்­களின் குழு­ம­மாக செயற்­ப­டு­வதன் மூலம் மலை­யக அர­சியல், சமூக, இலக்­கிய துறை­களில் வகிக்­கக்­கூ­டிய பங்கு. 

(இது பற்­றிய விரி­வான கட்­டுரை: இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள் - ஒரு மீளாய்வு எனும் தலைப்பில் ‘இந்­திய பூர்­வீக  இலங்கை தமிழர் பேரவை கனடா’ கன­டாவில் வெளி­யிட்ட ‘குறிஞ்­சி­மலர் 2012’ எனும் இதழில் இதே கட்டுரை ஆசி­ரி­யரால் எழு­தப்­பட்­டுள்­ளது. பின்னர் நோர்­வேயைத் தள­மா­கக்­கொண்டு இயங்கும் நம­து­ம­லை­யகம்.கொம் எனும் இணை­யத்­த­ளத்தில் அந்தக்­கட்­டுரை பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கட்­டு­ரையில் எடுத்­தா­ளப்­பட்டுள்ள விட­ய­தானம் அந்­தக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­படும் சமூ­கக்­கு­ழு­மங்­களின் செயற்­பா­டு­களின் விளை­வாக எழுந்த பிர­சுர செயற்­பா­டு­க­ளி­னூடே வெளி­வந்­தி­ருப்­பது இங்கு முக்­கி­யத்­து­வ­மா­னது)

மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்றி பேச­வந்­த­வி­டத்து மேற்­சொன்ன ‘மலை­யகம்’ என் தொடர் பற்­றிய ஆய்வு கூற்றும் அதன் பின்­ன­ரான அந்த சமூக்­க­கு­ழுமம் கண்­டி­ருக்­கக்­கூ­டிய ‘மலை­ய­கத்தின்’  வீச்சு எல்லை சம்­பந்­த­மா­கவும் சற்று விரி­வாக நோக்­கி­யதன் தேவை யாதெனில், இந்த உள்­ள­டக்­கத்­திற்குள் வரு­வோ­ரிடம் இருந்து வரக்­கூ­டிய ஆக்க இலக்­கிய படைப்­பு­களும் ‘மலை­யக இலக்­கியம்’ என்ற பரப்­புக்குள் உள்­ள­டங்­கி­வி­டு­வதன் அல்­லது உள்­ள­டக்­க­ப­டுவதன் தேவை இருப்­ப­த­னா­லாகும். மலை­யக இலக்­கி­யத்தில் இப்­ப­டியானதொரு செல்­நெறி தொடர்ச்­சி­யா­கவே இட­ம­பெற்­று­வந்­துள்­ளமை அவதானிக்­கத்­தக்­கது.. எதிர்­வரும் காலங்­களில் ‘மலை­யக’ வீச்­செல்­லையை மையப்­ப­டுத்தி ஆய்­வுகள் வெளி­வ­ர­வேண்­டி­யதன் தேவையை வலி­யு­றுத்­தியே இந்­தக்­கு­றிப்பு இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

மலை­யக கவிதை இலக்­கி­யத்தின் தோற்­றுவாய்:

இலக்­கி­யத்தில் மூத்­தது கவிதை என்­பார்கள். ஆக்க இலக்­கியம் உணர்­வு­களின் பிரக்­ஞை­யின்­பாற்­பட்­டது. எனவே உணர்ச்­சியின் வெளிப்­பா­டாக ஒன்றை சொல்ல வரு­கின்­ற­போது அதன் முதல் உந்­து­த­லாக கவிதை அமைந்து விடு­கின்­றது. பல எழுத்­தா­ளர்கள் தாம் முதலில் கவிதை எழு­து­ப­வர்­க­ளா­கவே வெளிப்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்­கலாம். 

மலை­யக கவிதை இலக்­கி­யமும் இதற்கு விதி­வி­லக்­கா­ன­தல்ல. மலை­யக இலக்­கி­யத்தின் மூத்­த­தா­கவும் முதன்­மை­யா­ன­தா­கவும் கவிதை இலக்­கி­யமே அமை­கின்­றது எனலாம். எனினும் நேர­டி­யாக எடுத்த எடுப்­பி­லேயே ‘கவிதை’ என்ற கட்­டு­கோப்­புக்குள் வந்­து­வி­டாமல் வாய்­மொழி பாரம்­ப­ரி­யத்­துக்குள் இருந்து புறப்­படும் ஒரு சிறப்­புத்­தன்­மையை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தில் தரி­சிக்­கலாம். அதா­வது மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஊற்­றுக்­கண்­க­ளாக இருந்­துள்­ளன. 
மலை­யகக் கவி­தைப்­பா­ரம்­ப­ரி­யத்தில் நாட்டார் பாடல்­களின் சாயல் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­கின்ற குற்­றச்­சாட்டு அல்­லது சிறப்­புப்­பண்பு அதன் வேர் அது­வா­கவே அமைந்­து­வி­டு­வ­த­னா­லாகும் என கொள்­ளலாம்.

இந்த மலையயக நாட்டார் பாடல்கள் பற்­றிய பார்­வையை செலுத்­தாமல் மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வைக்குள் வர­மு­டி­யாது. இந்த அம்­சத்தை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் பல­மாக பார்ப்­போரும் பல­வீ­ன­மாகப் பார்ப்­போரும் உள்­ளனர். எது எவ்­வா­றா­யினும் மலை­யக இலக்­கியம், மக்கள் இலக்­கி­யத்­தி­லி­ருந்து  மாறு­பட்டு நிற்க முடி­யாத அள­வுக்கு ஒன்­றிப்போய் உள்­ளது. மக்கள் இலக்­கியம் படைக்­காத மலை­யக இலக்­கி­ய­வா­தி­களை யாரும் கவ­னத்தில் எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. மலை­ய­கத்தின் மூத்த இலக்­கியம் என்­ற­வ­கையில் மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஆரம்­ப­மாக அமை­கின்­றன.

தொடரும்

நுவரெலியா மாவட்ட இணைத்தலைமைப் பதவிகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நியமனங்கள்


நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ மற்றும் கொத்மலை ஆகிய தொகுதிகளுக்கான அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நுவரெலியா பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமும் , அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக கல்வி ராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும் கொத்மலை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் ஒருவர் மக்களின் பிரதிநிதி என்றவகையில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அரச அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களுக்கு நியாயமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இத்தகைய பதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது தேசிய அரசாங்கம் நடைமுறையில் உள்ளதால் மாவட்ட மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் தேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்தும் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைத் தலைமைப்பதவிகளாக வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைத்தலைமைப் பதவிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது காலங்காலமாக நடைமுறையிலுள்ள ஒரு நியமனங்களாகும். எனவே இந்த நியமனங்களுக்காக பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தோ ஊர்வலம் சென்றோ மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்   வகையில் செயல்படவேண்டாம் என தமது கூட்டணி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, 

இதனிடையே நுவரெலியா மாவட்ட இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாசவும், நுவரெலியா பிரதேச இணைத்தலைவராக பெருந்தோட்டத்துறை கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு

வீரகேசரி, Varite Research ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய செயலமர்வு

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டக் கைத்தொழில் அண்மைக்காலமாக வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் எற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைவது மாத்திரமல்ல அந்த பெருந்தோட்டத் துறையில் தங்கிவாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாளாந்த சம்பளத்துக்காக கூட இன்றும் போராடிக்கொண்டிருக்கிற நிலைமை தொழிலாளர்கள் மட்டத்தில் காணப்படுகின்றது. எனவே தோட்ட முகாமைத்துவமும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கும் இந்தக் கைத்தொழிலை மீளவும் சக்திமயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வீரகேசரி நிறுவனம் வரிட்டே ரிசேர்ச் எனப்படும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வு குறித்த செயலமர்வு அண்மையில் கொழும்பு லக்ஷ்மன்; கதிர்காமர் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வீரகெசரி நிறுவனத் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் கலாநிதி. நிஷாந்த டிமெல் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். ‘பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய ஆய்வாளர் தொழிலாளர்கள் (தொழிற்சங்கம்), முகாமைத்துவம், அரசு என மூன்று தரப்பினரும், எவ்வாறு இதற்கு பங்களிப்பு வழங்கலாம் என விரிவான விளக்கத்தை வழங்கினார்.

 உண்மையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பக்கம் நின்று முழுமையாக பணியாற்றுவதில்லை என தெரிவித்த ஆவாய்ளர் தோட்ட முகாமைத்துவம் இன்னும் ‘பண்ணையார் - கொத்தடிமைகள்’ போன்ற மனநிலையில் பணியாற்றுவதாகவே தனது ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அதேநேரம் அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அந்த மக்களின் பின்னடைவுக்கு பிரதான காரணம் எனவும் தெரிவித்தார்.

எனவே இந்த மூன்று பிரிவினரும் ஒருமித்த கருத்தொருமைபாட்டுக்கு வருவதன் மூலம் மாத்திரமே இந்த பெருந்தோட்டக் கைத்தொழிலை வெற்றிகரமானதாக மாற்ற முடியும். தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனே சம்பளத்தை மாத்திரமின்றி தமக்கான கௌரவத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த கௌரவம் கிடைக்காதபோது அவர்கள் இந்த தொழில் துறையில் இருந்து மாறி வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர். கம்பனிகள் தொழிலாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்குரிய முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். அரசாங்கம் இந்த மக்கள் சமூகம் குறித்து தேசிய திட்டமிடலில் கவனம் எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைக்க வேண்டும். குறிப்பாக பிரதேச சபைகள் சட்டத்தில் உள்ள சரத்துகள் பெருந்தோட்ட பகுதிக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ளமை, அரச நிர்வாகப் பொறிமுறையை அடிமட்டத்தினருக்கு கொண்டு செல்லும் ‘கிராம சேவகர்களின்’ எண்ணிக்கை அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லாமை மற்றும் அவர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளமை போன்றன அரச தரப்பில் செய்யப்படவேண்டிய உடனடி மாற்றங்களாக உள்ளன எனவும் கலாநிதி நிசாந்த டிமெல் தெரிவித்தார்.

பங்குபற்றுனர்கள் வரிசையில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தொழிற்சங்க பிரதிநிதிகள்,  பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் மலையக பேராசிரியர்கள் கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க,  தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்,  மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி,  பிரதி பொதுச் செயலாளர் சண்.பிரபாகரன்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமி,  பெருந்தோட்ட கம்பனிகள் சார்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களும்,   கல்விச்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மு.சின்னத்தம்பி,  சோ.சந்திரசேகரம்,  கலாநிதி. ஏ.எஸ்.சந்திரபோஸ் எம்.வாமதேவன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலிலும் பங்குபற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தீர்க்கப்பட முடியாத நிலைமையில் அதற்கு மாற்றீடாக தோட்டத் தொழிலாளர்கள் இடையே தேயிலைக் காணிகளை பங்கீடு செய்து ‘வெளியகப் பயிரிடல்’  (Out Growing) முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவது எனும் முறையே உள்ள மாற்றுவழி என முதலாளிமார் சம்மேளனத் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்க அதற்கு தானும் உடன்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தமையும்,  அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பாக தாம் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்த கருத்தும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படப்போவதனை உறுதிபடுத்துவனவாகவுள்ளது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும்போது தொழிலாளர்களுக்கு உள்ள உத்தரவாதம் என்ன என்பது பற்றியே தொழிற்சங்கங்களும்,  அரசியல் தலைமைகளும் மலையக கல்விச் சமூகமும் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

தொகுப்பு : ஜீவா சதாசிவம்
நன்றி - veerakesari

பாடத் தெரிவுகளில் குளறுபடிகள் தவிர்க்கப்படல் வேண்டும் - மொழிவரதன்


மலையகப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரப்பிரிவுகளுக்கு பாடநெறிகளை தெரிவு செய்வது தொடர்பாக வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன.

பின்வரும் சில விடயங்களை அடிப்படையாக வைத்து இப்பாடத்தெரிவுகள் இடம்பெறுதல் காலத்தின் தேவையாகும்.

*குறித்ததொரு பாடநெறியை தெரிவதால் கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள்

*இன்று மலையகத்தில் தேவையாக உள்ள பிரிவுகள்

*மாணவனின் இயல்பான திறமை, விருப்பு வெறுப்பு

மேற்கூறியவற்றை விட மேலும் சில விடயங்களை மையமாக வைத்து க.பொ.த உயர்தர பாடநெறிகள் தெரிவு செய்யப்படலாம். எனினும், மிகப்பிரதானமான விடயங்களே மேற்குறிப்பிட்டவை எனலாம்.

கணிதம், விஞ்ஞானப்பாடநெறிகள் மலையகத்திற்கு கேள்வியாக (Demand) உள்ள பாடத்துறைகள் ஆகும்.

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி, பிற ஆசிரியர் கலாசாலை அனுமதிகள் பொதுவான ஆசிரியர் நியமனங்கள் என்பனவற்றில் இப்பாடநெறிகள் மிக அதிகமாக கவனத்திற் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி அனுமதியின் போது போதிய அளவு மாணவர்கள் இத்துறைக்கு இன்மையானது சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொழில் என்று பார்க்கும் பொழுது இத்துறைசார் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்கின்றது. ஆனால், இத்துறையில் உள்ள பிரச்சினை பலர் இப்பாட நெறிகளுக்குச் சென்று பின்னடவை சந்திப்பதாகும். காரணம் அடிப்படையான நல்ல கணித, விஞ்ஞான அறிவு போதாமையாகும்.

க.பொ.த. உயர்தரப் பிரிவுகளில் பல பாடசாலைகளில் உரிய ஆசிரியர்கள் அவ்வாறு இருந்தாலும் போதிய அளவு இத்துறையில் ஆற்றல் இல்லாமையாகும். விடயம் தொடர்பான ஞானம் கற்பித்தல் முறைமையிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றைக் கூறலாம்.

இந்நிலையில், மலையக மாணவர்கள் பாரம்பரியமான பாடநெறிகளை தவிர்த்து இன்று தேவையாகவும் தொழில் ரீதியான வாய்ப்புக்கள் உள்ளதுமான பாட நெறிகளை தெரிவு செய்யலாம்.

பெருமளவில் பலர் தொடாத அதேவேளையில் தொழில் வாய்ப்புக்களை தரக்கூடிய துறைகளைத் தெரியலாம். தொழில்துறை தொடர்பான வழிகாட்டல்கள் மூலம் அதிபர், ஆசிரியர்கள், தொண்டர் நிறுவனங்கள் இதனைச் செய்யலாம்.

E–tech எனும் தொழில் நுட்பப் பாடம் பற்றிய விழிப்புணர்வு மேலும் மாணவர் மத்தியில் எடுத்துச்செல்லப்படல் வேண்டும்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி போன்ற கலாசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவதில் பிரதேச செயலகப்பிரிவுகளின் அடிப்படையில் தெரியும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நுவரெலியா போன்ற மாவட்டங்கள் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து மட்டுமே வெற்றிடம் உள்ள பாடங்களுக்கு மாணவர் தெரியப்படுவர்.

இதேவேளை, சில மாவட்டங்களில் மிக அதிகமான பிரதேச செயலகப்பிரிவுகள் (DIVISIONAL SECRETARIAT) காணப்படின் அதிக மாணவர்கள் தெரியப்படலாம்.

இந்நிலையில், சில பாடங்களுக்கான வெற்றிடங்கள் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படாத நிலையில் மாணவர்கள் தெரியப்படமாட்டார்கள். உதாரணமாக சமூக விஞ்ஞானப்பாடநெறிக்கு வெற்றிடம் இல்லை என்பதனால் இது தொடர்பான கற்றலை மேற்கண்ட மாணவர்கள் தெரியப்பட வாய்ப்பு இல்லை.

இந்நிலைமைகளை க.பொ.த உயர்தரப்பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதுடன் மாணவர், பெற்றோர் கல்வி சமூகத்தினரும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.

தொழிற்றுறை வழிகாட்டல்கள் மட்டுமின்றி, எப்பாடநெறியை தொடர்வது என்பது பற்றியும் மலையகத்தில் புதிய சிந்தனைகளும் தேடல்களும் இத்துறை சார்ந்தோரிடமிருந்து பெறல்படல் வேண்டும். 1 AB, 1C பாடசாலைகளில் இதற்கான செயல் அமர்வுகள், வழிகாட்டல்கள் பாடசாலையினுள்ளே மாணவர்கள் மத்தியில் செய்யப்பட வேண்டும்.

சித்திரம், மனைப்பொருளியல், விவசாயம் போன்ற பாடநெறிகள் தொடர்பாகவும் மொழிகளை கற்றல் என்பது பற்றியும் தெளிவூட்டல்கள் அவசியம்.

குறிப்பாக, பாரம்பரியமான எமது கற்கை நெறிகளும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மாணவர் திறன் மாணவர் விருப்பு என்பது பற்றி கவனத்திற் கொள்ளாது க.பொ.த சா/தரம் பெறுபேறுகள் வெளிவர முன்னரே தனியார் வகுப்புகளுக்கு மாணவர்களை தெரிந்து வகுப்புக்களை ஆரம்பித்து விடுகின்றனர்.

என்ன அடிப்படையில் குறித்த ஒரு மாணவன் குறித்த ஒரு பாடநெறியினை சிறப்பாகச் செய்வான் என நம்புவது ? இதில் பெற்றோர்களும் உள்ளே புகுந்து மாணவனின் திறமை, விருப்பு பற்றி எண்ணாது தாம் விரும்பும் பாடநெறிக்கு கௌவரம், அந்தஸ்து கருதி திணிப்பதைக்காணலாம்.

அப்பட்டமான பணம் பண்ணும் இந்த நடைமுறை கண்டிக்கத்தக்கது. தொடர்ந்தும் மலையக மாணவர்கள் இந்திய வம்சாவளியினர், தோட்டத்தொழிலாளர் பிள்ளைகள் என்ற அடிப்படையில் சலுகை கேட்டுப்பெற முடியாது என்பதனையே பிரதேச செயலகம் (DIVISIONAL LEVEL) அடிப்படையிலான மாணவர் தெரிவு முறை உணர்த்துகின்றது. இலங்கை எனும் தேசிய ரீதியான கொள்கைகளுக்கு புறம்பாக இந்திய வம்சாவளியினருக்கான சில வழிமுறைகள் என்பது தொடர்ந்தும் பெற முடியாத ஒன்றென்பதை நாம் உணரல் வேண்டும். அவ்வாறு சில வழிமுறைகளை உருவாக்கக்கூடிய எமது அரசியல் சக்தி எந்தளவு உள்ளது என்பதையும் சிந்தித்தல் நலம்.

என்றாலும் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறத்தாழ முப்பது வருடத்தை பின்னோக்கிய மலையக கல்வி வரலாறு பின் தங்கிய ஒன்றென்பதும் ஓர் உண்மையே. எனினும், தேசிய ரீதியாக நாம் சிறுபான்மையினத்தவர் என்பது இதன் மற்றொரு பக்கம் ஆகும்.

எனவே, மலையகக்கல்வி முன் பல விடயங்கள் உள்ளன. பாடசாலைகள் வெறும் பாடத்திட்டங்களையும் அரசின் கொள்கைத்திட்டங்களையும் மாத்திரம் முன்னெடுப்பதாக இல்லாது எமது மலையகத்திற்கான பாடத்தெரிவுகள், பாடநெறித்தெரிவுகள் பற்றி சிந்திப்பது நல்லது.

நன்றி - veerakesari

மலையகமெங்கும் விஸ்தரிக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் - சத்தியமூர்த்தி


புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இம்முறை மலையக அரசியற்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்ட கூட்டணிக்கு நாடு முழுவதிலும் குறிப்பாக, மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்திருந்தது.

இதன் காரணமாக கூட்டணியில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவை தலா இரு உறுப்பினர்கள் வீதம் 6 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டன.

அவர்களில் மூவர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் மலையக மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பவற்றுடன் தொடர்புடைய அமைச்சுகளை தம்மகத்தே கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு காரணமாக அமைந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அமைந்த அரசாங்கத்திலும் இவர்கள் அமைச்சுப் பதவிகள் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக கூட்டணி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடர்களின் போதும் குழு நிலை விவாதங்களின் போதும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு வரும் வகையில் உரையாற்றி வருவதானது பாராட்டத்தக்க விடயமாக உள்ளது.

எனினும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழு மலையகத்தின் அபிவிருத்தியையும் இலக்காக கொண்டதாகவே காணப்பட்டது. மலையக மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கல்வி பொருளாதார அபிவிருத்தி என பல்வேறு முன்மொழிவுகள் தேர்தல் பிரசார மேடைகளில் கூட்டணி வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டன.

தேர்தலுக்குப்பின் புதிய பாராளுமன்றம் அமைந்து ஆறு மாதங்களை எட்டப் போகின்ற போதிலும், கூட்டமைப்பின் பெரும்பாலான செயற்பாடுகள் மத்திய மாகாணத்தை மாத்திரம் இலக்காக கொண்டு இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

காபந்து அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய வீ.இராதாகிருஸ்ணன் மலையக தமிழ் பாடசாலைகளின் ஆளணி பெளதீக வசதிகளை மேம்படுத்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை போராடிப் பெற்றுக் கொடுத்தமை அவரின் ஒரு சாதனையாக கொள்ளப்பட வேண்டும்.

எனினும், பதுளை, இரத்தினபுரி உட்பட மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் (தெரிவு செய்யப்பட்ட) கணித, விஞ்ஞான வகுப்புகளை அங்க சம்பூர்ணப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக பதுளை மாவட்டத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் தலைமையில் அதிபர், ஆசிரியர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை பாடசாலைகளில் ஸ்தாபிப்பது தொடர்பாக முன்மொழிவுகளும் பெறப்பட்டன.

இந்நடவடிக்கை இடம்பெற்று பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இம்முறையும் உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளுக்காக மாணவர்கள் வெளிமாவட்டங்களை நாடிய வண்ணம் உள்ளனர். இதேபோன்று மலையக தமிழ் மொழி பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் பாடசாலைகளை இதுவரை சென்றடையவில்லை.

அமைச்சர் திகாம்பரம் பதுளை மாவட்டத்துடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளார்.அவரது தொழிற்சங்கத்தின் சார்பாக அதிபர் இராஜமாணிக்கம் இரு தடவைகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்தியில் தமது பங்களிப்பை வழங்குவதாக தமது நெருக்கமான ஆதரவாளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். பூனாகலை, மீரியபெத்த வீடமைப்பு திட்டத்திற்கு புறம்பாக எல்ல நிவ்பர்க் தோட்டத்தின் ஒரு பிரிவில் மாத்திரமே புதிய தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து தொலைபேசியூடாக கூட தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன. அமைச்சின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிட்ட சில இணைப்பாளர்களாலே பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோன்று ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித்தலைவர் தமது அமைச்சின் ஊடாக தேசிய பிரச்சினையாக கருதப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதில் அதிகம் முனைப்பு காட்டி வருகின்றார்.

தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்த விடயத்திலும் கூட்டணி எட்ட நின்றே காய் நகர்த்தி வருகின்றது. கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தை எட்ட போகின்ற போதிலும் அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கூட்டணியும் இதுவரையும் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றே கூற வேண்டும்.

மலையக மக்கள் தொடர்ந்தும் சுயநல அரசியல் காரணமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலை தொடர வேண்டும் என்பதாலோ என்னவோ தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூட இ.தொ.கா பொதுசெயலாளருக்கு அமைச்சு வழங்கப்பட வேண்டுமென ஆதங்கப்பட்டுள்ளார். இதை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

கூட்டணி தொடர்பாக மலையக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பொய்த்து போகக்கூடாது. அவர்களின் செயற்பாடுகள் முழு மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவர்களிடையே மாவட்ட ரீதியாக அபிவிருத்தி பணி பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும்.

நன்றி - veerakesari

தொழிலாளர் சம்பள உயர்வு; மனசாட்சியுடன் செயற்பட வேண்டிய தொழிற்சங்கங்கள் : என்னென்ஸி



தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி இப்போது எந்தவொரு தொழிற்சங்கமும் வாய்திறப்பதில்லை. அனைத்து தொழிற்சங்கங்களுமே தானுண்டு தனது சொந்த வேலையுண்டு என்ற நினைப்பில் இருக்கின்றன.தொழிலாளர்களோ திரிசங்கு நிலையில் இருக்கின்றனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் சரி, ஏனைய சங்கங்களும் சரி தொழிலாளரின் சம்பள உயர்வைப்பற்றி பேசாமல் தொடர்ந்தும் மெளனம் காத்து வருகின்றன. தொழிலாளரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கான சம்பள உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் இலட்சணம் இதுதானா என்று தொழிலாளர்கள் கேட்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாத மலையகத் தலைவர்கள், தோட்டங்களில் தொழிலாளர்களால் நடத்தப்படும் விழாக்கள், பொது நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் என்பவற்றில் எவ்வித குற்ற உணர்வுகளுமின்றி சிரித்த முகத்துடன் கலந்து கொள்வதுதான் வேடிக்கையானது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத, தாம் அவர்களால் நடத்தப்படும் விழாக்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வது சரிதானா? என்பதைப் பற்றி சிறுதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு புறம் மிகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

சம்பள உயர்வு மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்க அமைப்புக்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கும் ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 2013 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் (2015) மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது.

எனவே, குறித்த காலப்பகுதிக்குள் இரு தரப்பினராலும் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது 2015 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 10 மாதங்களாகின்ற இவ்வேளை வரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தான்.

தொழிலாளருக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை கிடைக்கவில்லை. நலன்புரி விடயங்களும் இல்லை. நாட்டின் தற்போதைய விலைவாசிக்கேற்ப தொழிலாளருக்கான சம்பளம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை சம்பளம் உயர்த்தப்படாததால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ள மூன்று தொழிற்சங்க அமைப்புக்களே இவ்வளவு காலமாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர் வினையும் ஏனைய நலன்புரி விடயங்களையும் பெற்றுகொடுத்து வந்தன. இப்போதும் கூட அந்தத் தொழிற்சங்கங்களுக்கே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது.

அந்தவகையில் இந்த முன்று தொழிற்சங்கங்களும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றியிருக்கின்றனவா? பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட இச்சங்கங்கள் அதனை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் அந்தப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?

முதலாளிமார் சம்மேளனத்துடன் சுமார் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திய இந்தத் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்பதற்காக பேசாமல் இருந்து விடுவதா? தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாமா?
கம்பனிகள் சம்பள உயர்வைத் தருவதற்கு மறுத்துவிட்டன. எனவே, அவர்களுடன் மேலும் பேசுவதில் எந்தவிதமான பயனும் இல்லையென ஒதுங்கிக்கொண்டால் யார்தான் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பது? இது பற்றி இந்த சங்கங்கள் சிந்தித்துப் பார்த்தனவா?

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு மட்டுமே தொழிலாளருக்கான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை இருக்கின்றது என ஏனைய தொழிற்சங்கங்கள் இலகுவில் ஒதுங்கிக் கொள்ள முடியாது. தொழிலாளர்களைப் பிரதிநிதிதுவப்படுத்தும் ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் அந்தக் கடமை உள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதிகாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களுமே பெற்றுள்ளன.

அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது பல பெரிய சிறிய தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி போன்ற பெரிய தொழிற்சங்கங்களும் உள்ளன. இந்தச் சங்கங்களின் தலைவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் இந்தத் தலைவர்கள் அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இவ்விடயத்தில் தமக்கு பொறுப்பு இல்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களுக்கே அந்த பொறுப்பு உள்ளது என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து இ.தொ.கா. வுக்கே அந்தப் பொறுப்பு உள்ளது என்று இனியும் தட்டிக்கொள்ள முடியாது. எல்லோருக்குமே இந்த விடயத்தில் பொறுப்புக்கள் உள்ளன.

அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசினுடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அல்லது தமே கம்பனிகளுடன் பேச்சுவார்தை நடத்தி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தவிர அரசுடனோ அல்லது கம்பனிகளுடனோ பேச்சுவார்தை நடத்துவதற்கு துணிவில்லையா?

அந்த வகையில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல விவேகமானவர். தோட்டத்தொழிலாளருக்கு பெருந்தோட்டக் கம்பனிகளால் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியும் அதற்கான இலாபம் கம்பனிகளுக்கு கிடைக்கிறது என்று உறுதிப்படத் தெரிவித்து வருகிறார். மட்டுமின்றி தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறலாம் என்று பல முறை பகிரங்கமாக கம்பனிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஆனால் தொழிலாளர் பலத்தை வைத்துக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களோ வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.

இதேவேளை தனியார் துறையினருக்கு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிளாருக்கும் வழங்க வேண்டுமென்று தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்தன அறிவிப்பு விடுத்துள்ளமையும் பாராட்டத்தக்க விடயமாகும். தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாடு எட்டப்படாத நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்தார்.

ஆனால் தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர்களான அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் சம்பள உயர்வு விடயத்தில் தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதனையும் சும்மா செய்து செய்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சம்பளமாக சந்தாப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன. எனவே பெற்றுக் கொள்ளும் சந்தாப் பணத்துக்கு உண்மையாக மனசாட்சியுடன் சேவை செய்வது கடமையாகும். சம்பளம் (சந்தா) பெறாமல் இலவசமாக சேவை செய்யவதானால் தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கணிக்க முடியும்.

தொழிற்சங்கங்கள் இனிமேலும் மெளனம் சாதிக்காமல் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முதாலாளிமார் சம்மேளனத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதுவே தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை.

நன்றி - veerakesari


இன்னும் பல நூற்றாண்டுகள் அடிமைகளாக வாழ வேண்டுமா? புதிய அரசமைப்பு குறித்து மலையகத் தலைமைகள் நிலைபாடு என்ன? - சு.நிஷாந்தன்


மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை இன்று சர்வதேச நாடுகள் போற்றும் அளவுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றது. இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உறுதிப்படுத்த தேவையாக  உள்ள முக்கிய அம்சம்தான்  அனைத்தின மக்களும் முன்னோக்கிப் பயணிக்கும் ஒரு நிலையான ஜனநாயகத்தின் உறைவிடமாக இருக்கக் கூடிய அரசரமைப்பு. 

தற்போதைய நல்லிணக்க அரசாங்கம் இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பிலான பேச்சுகள் தற்போது மிகத் தீவிரக்கட்டத்தை எட்டியுள்ளன.          சகல மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்ற முனைப்புடனும், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனப்பிரச்சினைகுத் தீர்வுகாண வேண்டுமென்ற நோக்குடனும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடனும் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் அத்திபாரம் இடப்பட்டுள்ளது.


இலங்கையில் முதன்முறையாக மக்கள் கருத்துகளுடன் கூடிய ஓர் அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இலங்கை அரசு பெருமிதம் கொண்டுள்ளது. ஓர் அரசமைப்பு என்பது தனிமனித சுதந்திரத்தின் உறைவிடமாகவும், ஓர் இனத்தின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் என்பதே அரசமைப்பின் அடிப்படைத் தத்துவமாக அமைய வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலக்கத் துடிக்கும் மலையக மக்களை காலங்காலமாகப் புறந்தள்ளப்பட்டது போன்று இந்த நல்லாட்சியிலும் புறந்தள்ளிவிடக் கூடாது.

200 வருடங்கலாக அபிவிருத்தியற்ற அடிமை சமூகமாக நடத்தப்பட்டுவந்த மலையக மக்களின் மீது இலங்கையை ஆட்சிசெய்யும் இரு தேசிய கட்சிகளின் பார்வையும் வெறும் 30 வருட வரலாற்றைக் கொண்டதேயாகும். காரணம் மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமை (வாக்குரிமை) கிடைத்தமைதான். இதன் பின்னரே எமது தேவைகள் பற்றிய எண்ணங்கள் தோன்றலாயின.   மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் முதல் அவர்களது அனைத்து சுதந்திரமும் ஏற்படுத்தப் போகும்  அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பு.

ஒரு நாடு சுதந்திரமடைந்தப் பின்னர் அந்த நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்த பெருமை இலங்கைகே உள்ளது என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சிங்கள இனவாதத்திலும், பௌத்த தேசியவாதத்திலும் இலங்கையில் 67 வருடமாக சுதந்திரக் காற்று வீச வில்லை. இந்த மைத்திரி  ரணில் நல்லாட்சி அரசில் ஜனநாயகத்தின் விதை விதைக்கப்படும் என்றே சர்வதேச ஆரூடர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.

அடிமை வாழ்வுக்குச் சொந்தகாரர்களாகவுள்ள மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப் போகும் அரசமைப்பிலாவது நிலையானக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று முறையை ஒழித்தில், தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் பகிர்வு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்ற முக்கிய நான்கு காரணங்கள் தொடர்பில் அரசு கூடுதல் கரிசனையோடு செயற்பட உள்ளது.
தொகுதிவாரி முறையையும், விகிதாசார முறையையும் உள்ளடக்கிய தேர்தல் முறைமையே கொண்டுவரப்படும் என்று இரு தேசியக் கட்சிகளும் உறுதியாக உள்ளன. எவ்வாறான முறை கொண்டுவரப்பட்டாலும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அரசு வகுக்க வேண்டும். இந்த நாட்டில் 15 இலட்சத்திற்கு அதிகமான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர்.  ஆனால், அவர்களுக்கானப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராடசிமன்றம் என அனைத்து மட்டத்திலும் குறைவாகவே உள்ளன.

நுவரெலியா மாட்டத்தை தாண்டி மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் மாகாண சபைக்குத் தெரிவாவது என்பது சிம்ம சொப்பனமாகவே காணப்படுகின்றது. உதாரணமாக கேகாலை, இரத்தினப்புரி மாவட்டங்களில் மலையக மக்கள் சார்பில் பிரதிநிதி ஒருவர் அல்லது இருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் வாக்குபலம் இருந்தும் விருப்பு வாக்கு, விகிதாசார முறை காரணமாக  நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக் கனியாகவே உள்ளது.

இந்த இரு மாவட்டங்களிலும் மாகாண சபைக்கே இரு தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த முறைதான் ஒருவர் என்ற வீதத்தில் தெரிவாகியிருந்தனர். அதேபோல், ஊவா மாகாணம், கண்டி மாவட்டம், கொழும்பு போன்ற இடங்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவங்கள் என்பது சொற்ப அளவே உள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஓர் இணக்கப்பாட எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதேபோல் நீண்டகாலமாக மலையக மக்களின் அபிவிருத்திக்குத் தடையாகக் காணப்பட்ட பிரதேச சபை சட்டங்களாக 15, 34ஆம் இலக்கச் சட்டங்கள் திருத்தியமைக்க உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு இணங்கியுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

வரலாற்றில் முதல் முறையாக வரவு  செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் கல்வித்துறையிலும் பலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இம்மாற்றங்கள் நிலையானதாக மாற வேண்டும்.

அபிவிருத்தியில் நீண்ட பின்னடைவில் உள்ள இலங்கை முன்னோக்கிச் செல்லக் கூடிய வகையில் நிலையான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. நின்று நிலைக்கும் சமத்துவமான அரசமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாகவே மேற்குல நாடுகளில் சமாதானமும், அபிவிருத்தியும் உலகம் வியக்கும் வகையில் வலுவடைந்துள்ளன.

புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மலையகத் தலைமைகளும்  மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமாகச் செயற்பட வேண்டுமென மலையக மக்கள் எதிர்பார்க்கின்றனர். எமது சுதந்திரம் இந்த நாட்டில் பறிக்கப்பட்ட போது எவரும் எமக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.

1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட வாக்குரிமை 2003ஆம் ஆண்டுதான் முழுமையாகக் கிடைத்தது. அதுவரை காலமும் மலையக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் சஅழுத்தமாக ஒலிக்க போதுமானப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை. சிறிமா  சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது 4, 5 இலட்சம் மலையகத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது 10ஆயிரத்திற்கும் அதிகமான மலையகத் தமிழர்கள் கொள்ளப்பட்டனர். வரலாற்றில் எந்தவொரு காலப்பகுதியிலும் மலையகத் தமிழர்களுக்காக குரல் ஒலிக்கவில்லை என்பதே நிதர்சம்.

மலையக மக்களுக்கான உரிமைகளும், அங்கீகாரமும் முறைமைப்படுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறு இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். எனவே மீண்டும் அந்த கசப்பான வரலாற்றை மலையக மக்கள் அனுபவிக்கத் தயாரில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை மலையக தலைமைகள் விடுவார்களாயின் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பாரிய கேள்வியெழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது மலையகத்தில் மக்கள் அபிலாஷைகளைப் பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு கட்சிகளே புதிய அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கக் கூடிய அதிகாரத்தில் காணப்படுகின்றன.

புதிய அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளையும், கோரிக்கைகளையும் உள்ளடக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், வடக்கில் தற்போது உருவான தமிழ் மக்கள் பேரவை,  சில சிறிய கட்சிகள் கூட தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆனால், மலையகத் தலைமைகள் இன்னமும் முழுமையாக கண் விழிக்க வில்லை. கடந்த புதன் கிழமைதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசமைப்புத் தொடர்பில் தமது யோசனைகளை முன்வைக்க 11 பேர் கொண்ட குழுவொன்றை முன்மொழிந்துள்ளது.

1972, 1978 போன்ற அரசமைப்புகள் தன்னிச்சயாக சிங்கள் மக்களின் ஆதிக்கத்தை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விளைவே, வடக்கில் ஆயுதப் போராட்டமொன்று வெடித்தது. எங்கும் ஒரு சமூகம் அடிமைப்படுத்தப்படும் போது அங்கு போராட்டம் வெடிக்கும் என்பதே உலக நியதி.  எனவே, இந்த நாட்டில் உருவாகும் அரசமைப்பு என்பது மலையக மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.  அதனை இலட்சியமாகக் கொண்டு எமது தற்போதைய தலைமைகள் முழுவீச்சுடன் செயற்பட வேண்டும். ஆனால், அதற்கு இன்னுமும் மலையகத் தலைமைகள் தயாராகவில்லை என்பதே உண்மை. இ.தொ.கா. 11 பேர் அடங்கிய குழுவொன்று நியமித்துள்ளது.  தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னமும் இது தொடர்பில் முறையானத் திட்டமொன்று வகுக்கவில்லை. காலங்காலமாக மலையக தொழிற்சங்கங்களின் அரசியல் போட்டி, பொறாமைக் காரணமாக மக்கள்தான் கஷ்டப்படுகின்றனர் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.

வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமொன்று இலங்கையில் வாழக் கூடிய ஒட்டு மொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ள நிலையில் மலையக மக்களின் தேவைகள் தொடர்பில் தற்போதைய தலைவர்கள் கூடிய அக்கரைக் காட்ட வேண்டிய முக்கியமான காலகட்டமாக இது அமைந்தள்ளது.     ஏற்படுத்தப் போகும் அரசமைப்பில் மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாவிடின் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவே வாழ வேண்டும். எனவே, மலையகத் தலைமைகள் சிந்தித்துச் தீர்க்கமாகச் செயற்பட முன்வர வேண்டும் என்பதே மலையக மக்களினதும், மலையக புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மலையகத்திற்கு ஏன் பல்கலைக்கழகம் வேண்டும்! - பா.திருஞானம்


நாட்டின் கல்வி முறையில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவது சிறந்த அம்சமாகக் காணப்படுகின்றது. ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி வாய்ப்புகளும் இன, மத, மொழி, பால், வகுப்பு, சமூக வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கின்றது. அவரவர் தாய்மொழி மூலம் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதமாகும். இதன் காரணமாக நம் நாடு அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான எழுத்தறிவினையும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுமளவிற்கு உயர் கல்வியின் அடைவுகளையும் பெற்றுள்ளது.

சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வி முறைமை மற்றும் அதன் பின்னர் அரசாங்கங்களால் கல்வி மேம்பாட்டிற்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கைகள் என்பன நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளன.

ஆரம்ப கல்வி மற்றும் இரண்டாம் நிலைக்கல்வி மட்ட அடைவுகளில் நாம் திருப்தியான அடைவுகளை கொண்டிருந்த போதிலும் பல்கலைக்கழக மட்டத்திலான பெறுபேறுகளில் அவ்வாறு கொள்ள முடியாதுள்ளது.

ஏனெனில்,  2013இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றியோர் 2,46,665 பேராகும். அதில் பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிப்பெற்றவர்கள் 1,43,740 பேர்.

பல்கலைக்கழக அனுமதிக்க விண்ணப்பித்தோர் 55,901 பேர்.

 பல்கலைக்கழக அனுமதிப் பெற்றோர் 25200 பேர்மாத்திரமேயாகும். இதன்படி நோக்குமிடத்து க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றியோரில் 10.2 வீதத்தினர் மாத்திரமே பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பினை இன்று பெறுகின்றனர். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிப் பெற்ற 1,43,740 பேரில் 17.5 வீதத்தினரே பல்கலைக்கழக உயர்கல்வி முறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மலையகத்திலிருந்து உயர் கல்விக்கு உள்வாங்கப்படுவோரில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உயர்கல்விக்கு மலையக மாணவர்கள் மேலும் உள்வாங்கப்பட வேண்டுமானால் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.

இது குறித்து மலையகத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரனிடம் வினவிய போது, தற்போது மலையகத்திலுள்ள பெரும்பாலானோர் தமது உயர்கல்வித் தேவைகளுக்காகத் தனியார்துறை கல்வி நிறுவனங்களையே நாடவேண்டியுள்ளது. இது பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களுக்கு ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், வறியவர்கள், கீழ்மட்ட, மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு இது எவ்வாறு சாத்தியமாக முடியும் என்பது கேள்விக்குறியாகும். தனியார்துறை கல்வி நிறுவனங்கள் அறவிடும் பெருந்தொகையான பணத்தினை இவ்வறிய பிள்ளைகளின் பெற்றோர்களால் நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த முடியுமா?

இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் தமது வாழ்க்கையை வெற்றிகரமானதாக அமைத்துக் கொள்ளவே விரும்புகின்றான். வாழ்க்கையின் வெற்றி என்பது தனக்கு விருப்பமான உயர் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலொன்றினை அமைத்துக் கொள்வதிலேயே தங்கியுள்ளது.

இன்றைய உலகில் நல்ல உயர்கல்வியை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வதன் மூலமே இதனை சாத்தியப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த சாத்தியமான உயர்கல்வி சூழல் இன்னும் முழுமையாக தோற்றுவிக்கப்படவில்லை.

அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் என்ற நிலைமையை இலவச கல்வியை அறிமுகப்படுத்தி 75 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் நம் நாடு அடைந்து கொள்ள முடியாதுள்ளமை ஓர் பின்னடைவே ஆகும்.

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பாடநெறிகள் அறிவியல் சார்ந்தவையாகவும் இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருந்தக் கூடியவையாகவும், குறிப்பிட்ட அறிவியல், துறையைச் சார்ந்து இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தரக் கூடியவையாகவும், பல்கலைக்கழகங்களில் கற்று வெளியேறும் பட்டதாரிகளின் சிந்திக்கும் திறன் மற்றும் அறிவியல் செயலாற்றம் என்பனவற்றை மேம்படுத்துவதாகவும், உலகலாவிய தொழிற்சந்தையில் போட்டியிட்டு தனக்குரிய தொழில் தகைமையின் அடிப்படையில் தொழிலொன்றினைப் பெற்றுகொள்ளக் கூடியதாயுமிருத்தல் வேண்டும். இதற்கு இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும்.

அவற்றினால் வழங்கப்படும் பட்டங்கள் உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றிருத்தல் வேண்டும். வெளியேறும் பட்டதாரிகள் ஆய்வியல் திறன்களையும் பிரச்சினைகளுக்கு நடைமுறை சார்ந்த தீர்வுகளை காணக்கூடிய தகைமைகளைக் கொண்டவர்களாயிருத்தல் வேண்டும்.

இலங்கையிலுள்ள ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர ஏனையவைகள் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவைகளாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனவே, அனைத்தும் உலக தரத்திற்கு தரம் உயர்த்தப்படல் வேண்டும். இதனை அடைவதற்கு பல்கலைக்கழகங்களில் பெளதீக கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகள், ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பவற்றிற்கான வளங்களை அதிகரித்தலும் தொழில்நுட்ப வாய்ப்புகளை விரிவுபடுத்தலும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளாகும்.

நாட்டின் உயர் கல்வித்துறை தொடர்ச்சியாக எதிர்நோக்கும் மற்றுமொரு முக்கிய பிரச்சினை, பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கற்கை நெறிகள் மற்றும் பட்டங்களுக்கும் விருத்தியடைந்துவரும் கைத்தொழில் துறையின் தொழிலாளர் தேவைகளுக்குமிடையே பொருத்தப்பாடு காணப்படாமையாகும். இது தொழிற்சந்தையில் தேவைகளை கவனத்திலெடுத்து பல்கலைக்கழக கற்கை நெறிகளை வடிவமைக்காமை, மிகவும் ப.ைழமை வாய்ந்த கற்கை நெறிகளை நவீன உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்காமை, தனியார் துறை சார்ந்த கைத்தொழிற்றுறையுடன் அரச பல்கலைக்கழகங்கள் இணைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமை, புதிய ஆய்வுகள், புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் போதியளவு இடம்பெறாமை போன்றவற்றால் தோற்றம் பெற்றுள்ளது.

ஆகவே, உயர்கல்வி சார்ந்த மேற்படி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பின்வரும் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள பல்கலைக்கழகங்களில் பெளதீக மற்றும் மனித வளங்களை அதிகரிப்பதனூடாக அந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பிராந்திய தேவைகள், சமூகங்களை உள்வாங்கல், புதிய பாட நெறிகளை அறிமுகப்படுத்தல், மேலதிக பட்டதாரி மாணவர்களை உள்வாங்கள் என்பதன் அடிப்படையில் புதிய பல்கலைக்கழகங்களை மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளை ஸ்தாபித்தல், உயர்கல்வியில் பின்தங்கிய சமூகங்களுக்கு குறிப்பாக பெருந்தோட்ட இந்திய வம்சாவளி சமூகம், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான வறியவர்கள், மிகவும் வசதிகுறைந்த பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் விஷேட கோட்டா முறையினை அறிமுகப்படுத்தல் மற்றும் அனுமதிக் கொள்கையை கடைப்பிடித்தல்.

பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் உயர்கல்வியைத் தொடர முடியாதிருக்கும் மற்றும் இடைநிறுத்தம் மாணவர்களுக்கு மேலதிக நிதிவசதிகளை அளித்தல், அறிவியல் ரீதியாக வளர்ச்சியுறும் உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் கைத்தொழிற்துறையின் தேவைகளை கருத்திற் கொண்டும் பட்டதாரிகளின் தொழில்சார்ந்த போட்டித்திறனை மேம்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக கற்கை நெறிகளை புதுப்பித்தல் வேண்டும். புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தல் வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டிருந்ததைப் போல சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரவினால் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை மற்றும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்களால் கல்வி மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்கல்வி வரையிலான கல்விக் கொள்கைகள் என்பன இலங்கையின் கல்வி மட்ட அடைவுகளுக்கு பெரிதும் பற்காற்றியுள்ளதாயினும் இலங்கையில் வாழும் எல்லா சமூகத்தினரும் எவ்வித தடைகளுமின்றி இலவச கல்விக்கான வாய்ப்புக்களை அனுபவிக்கக்கூடியதாக இருந்ததா? மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் 194இலிருந்து அரசின் இலவச கல்விக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டதா? என்ற வினாவை எழுப்பினால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் 1975ஆம் ஆண்டு தோட்ட பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் வரை அவர்களுக்கு இலங்கை அரசின் இலவச கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமையும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டிருந்தன.

இந்நாட்டில் பிறந்த அனைத்து குடிமகனுக்கும் இவ்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் ஏறக்குறைய 30 வருடங்கள் குறிப்பாக ஒரு பரம்பரையினருக்கே இலவச கல்வி மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை மிகவும் வேதனையுடன் சுட்டிக் காட்டவேண்டும். இதன் காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களின் கல்வி அடைவுகள் குறிப்பாக உயர்கல்வி அடைவுகள் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களான சிங்கள மக்கள் முஸ்லிம்கள் வடகிழக்குத் தமிழர்கள் ஆகியோரின் அடைவுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

உதாரணமாக பின்வரும் தரவுகள் இதனை எடுத்து காட்டுகின்றன.

பல்கலைக்கழங்களில் கல்விகற்கும் மொத்த மாணவர்கள் ஏறக்குறைய 90000 பேர் இவர்களில் இந்திய வம்சாவளிச் சேர்ந்தவர்கள் வெறும் 476பேர் மட்டுமேயாகும். இதிலும் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் 200க்கும் குறைவானோராகும்.

2013ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பெற்றோர் 25200 பேராகும். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 123 பேர் மட்டுமேயாகும். இதிலும் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் 60 இற்கும் குறைவானோரே.

இவர்களில் 60% த்திற்கும் அதிகமானோர் கலைத்துறைக்கே தெரிவு செய்யப்படுகின்றனர்.

30 வீதத்தினர் முகாமைத்துவ பீடத்திற்கும் 10 வீதத்திற்கும் குறைவானோரே மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், கணணி ஆகிய பீடங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். வருடத்திற்கு 15 பேருக்கும் குறைவானோரே இத்துறைகளுக்கு தெரிவாகின்றனர். பல்கலைக்கழத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர்கள் 794பேரில் மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தோர் ஒருவரும் இல்லை. (5பேர் ஓய்வுபெற்றுள்ள நிலையில்) விரிவுரையாளர்கள் 4482 பேரில் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 18பேர் மாத்திரமேயாகும். மொத்த பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் 5176பேரில் 15 இலட்சம் மக்கள் தொகையையும் ஏறக்குறைய 7% இனவிகிதாசாரத்தையும் கொண்டுள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் சமூகத்தைச் சாந்தோரின் சதவீதம் 0.35 மட்டுமேயாகும்.

எனவே உயர்கல்வி மேம்பாடு மற்றும் பல்துறைசார் சமூக எழுச்சி அறிவியல் வளர்ச்சி என்பன கருதி

01. மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

02. பல்கலைக்கழக அனுமதியில் விசேட கோட்டாமுறை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

03. விஞ்ஞான மற்றும் கணித பாடநெறித்துறைகள் புதிதாக மலையகப் பாடசாலைகளில் ஆரம்பித்தல் வேண்டும்.

04. போதியளவான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.

05. பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். அவற்றில் கா.பொ.த. உயர்தரம் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

06. கா.பொ.த. உயர்தரமுள்ள பாடசாலைகளில் விடுதி வசதிகளும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் கூறினார்.

இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனிடம் வினவிய போது, தற்போதைய நல்லாட்சியில் 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் கல்வி வளர்ச்சி மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக கல்லூரி ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எனக்கு பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் காணப்படும் 3000 தமிழ் மொழிமூலமான அனைத்துப் பாடசாலைகளும் எனது நேரடி கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதன்படி மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம், விளையாட்டு, நுன்கலை கல்வி கற்பிப்பதற்கு 25 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 250 பில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டிய, கெட்டபுல தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கு 05 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள் ஆங்கில மொழியில் கல்வி கற்க புதிய பாடசாலை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தில் ஒவ்வொரு பிரதேச காரியாலங்களுக்கு உட்பட்ட தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 2016 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு காலத்திற்கான புதிய கல்வி கொள்கையில் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது. மலையகத்தில் ஆரம்ப மாதிரி பாடசாலைகளும் அமைக்கப்படவுள்ளன. அதேபோல் தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு ஆளணி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர் தரத்தில் கணித, விஞ்ஞான கல்வியை அபிவிருத்தி செய்யவும், அதற்கான ஆசிரிய நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலை அதிகரிக்கும் பட்சத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சியும் உயர் கல்வி அபிவிருத்தியும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான செயற்றிட்டம் வடகிழக்கு பகுதியிலும் ஆரம்பிக்கப்படும். அங்கும் யுத்தத்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளன. அவையும் இதேபோல் அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார்.

நன்றி - veerakesari

தனிச் சிங்கள பௌத்த பாடசாலைகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் - என்.சரவணன்


முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய அரசாங்கத்தின் நிழல் இயக்குனராகவும் இருக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க சமீப காலமாக பொதுக் கூட்டங்களில் கூறிவரும் கருத்துக்கள் சிங்கள பௌத்தர்களை கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளன. சமீபத்தில் கூட இப்படி உரையாற்றியிருந்தார்.

“இலங்கையில் மிகப் பெரிய பிரபல பாடசாலைகள் உள்ளன. சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறெவரையும் சேர்ப்பதில்லை என்கிற கொள்கையை உடையவை அவை. ஒரு காலத்தில் ஆனந்தா, நாலந்தா பாடசாலைகளில் கல்வி கற்ற பெரும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இன்றும் உள்ளார்கள். இன்று வேறெவருக்கும் அங்கு இடமில்லை. இத்தனைக்கும் இந்த சிங்கள பௌத்த பாடசாலைகளை ஆரம்பித்தவர்கள் சிங்கள பௌத்தர்கள் அல்லர். ஆங்கில கிறிஸ்தவர்களால் அவை ஆரம்பிக்கப்பட்டவை. எனது பதவி காலத்தில் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டேன். யுத்தம் நடந்துகொண்டிருந்ததால், நிர்ப்பந்தமாக இவற்றை செய்வதில் பல சிக்கல் இருந்தது.


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவன் ஐந்தாவது ஆண்டு புலமைப்பரீட்சையில் முதலாவதாக வந்தார். அவர்களுக்கு எந்த பாடசாலையும் கேட்க முடியும். அவர் ஆனந்தா பாடசாலையில் கற்பதற்காக கோரிக்கை விடுத்தார்கள். அந்த மாணவனுக்கு அனுமதியைக் கொடுக்கும்படி நான் கூறினேன். தரமுடியாது என்று அப்பாடசாலையின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கினார்கள். அப்படியிருந்தும் எனது நிர்பந்தத்தால் அங்கு அந்த சிறுவன் சேர்க்கப்பட்டான்.  இரு மாதங்களுக்குப் பின்னர் அந்த மாணவன் அங்கிருந்து தானாக விலக நேரிட்டது. அங்கு அந்த மாணவனை மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.  நாம் பௌத்தர்களாக கற்றுக்கொண்டது இதைத்தானா? இந்த மாணவர்கள் வாழ்க்கையில் வேற்று மதத்தவர்களோடு பழகியது இல்லை. ஏனைய பாடசாலைகளுக்கும் இதே நிலை தான். ஆக இந்த நாட்டில் யுத்தம் தோன்றுவது ஆச்சரியமானதல்ல. அதன் பின்னர் நான் பாடசாலையே மூடும்படி கூறியதாக ஒரு புரளியையும் கிளப்பிவிட்டுள்ளார்கள்.”

இலங்கையில் இனவாதத்தை களையெடுப்பதில் கல்வி அமைப்பு முறையின் பாத்திரம் முக்கியமானது என்று அவர் பல இடங்களிலும் கூறிவருகிறார். சமீபத்தில் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலும் அதனை வலியுறுத்தியிருந்தார்.

அதுபோல பாடத்திட்டங்களில் பௌத்த மத கல்வியையும் நீக்கிவிட்டு சர்வமதங்களையும் பற்றி கற்கக் கூடியவாறு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார். சிங்கள பௌத்த பாடசாலைகளிலும், பாடத்திட்டத்திலும் கைவைக்கும் துணிச்சல் இதற்கு முன்னர் எவருக்கும் இருக்கவில்லை. இன்றைய நிலையில் நிறுவனமயப்பட்ட பேரினவாதம் பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில் சந்திரிகாவை தாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த அரசாங்கம் பௌத்த எதிர்ப்பு அரசாங்கம் என்று பகிரங்கமாக பிரசாரம் செய்து வருகிறது.

“மேடம் முடிந்தால் நீங்கள் மருதானை சாஹிரா கால்லூரியிலோ, புனித பெனடிக் கல்லூரியிலோ, அல்லது இந்து கல்லூரிகளிலோ சில பௌத்த மாணவர்களை சேர்த்து காட்டுங்கள் அதற்கப்புறம் நாங்கலும் உங்கள் முயற்சியில் கைகோர்க்கிறோம்.” என்று சந்திரிகாவை விமர்சித்து சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை சவாலிடுகிறது.

புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவுடன் “தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லினக்கத்துக்குமான அலுவலகம்” ஒன்றை ஸ்தாபித்தது. இந்த பணியை முன்னெடுக்கும் பொறுப்பை சந்திரிகா ஏற்றுக்கொண்டார். தற்போது அதன் இயக்குனராக இயங்கிவருகிறார். எனவே சந்திரிகாவின் புதிய முன்னெடுப்புகள் உத்தியோகபூர்வ வெளிப்பாடுகளே.

ஆனந்தா, நாலந்தா போன்ற பாடசாலைகள் இன்று நூறு வித சிங்கள பௌத்த பாடசாலைகளா ஆகியுள்ளன. அப்படி பேணுவதை அப்பாடசாலையில் கற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர். இது குறித்த சர்ச்சை நீட காலமாக தொடர்கிறது. சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சகல அதிகாரங்களைக் கொண்டிருந்தும் கூட முடியவில்லை என்பதையே அவரது உரையும் பறைசாட்டுகிறது.

சந்திரிகா தனது பதவிக்காலத்தில் இனவாத சக்திகளுக்கு துணைபோன வரலாற்றை எவரும் மறக்கமாட்டார்கள். ஆனால் இன்று அதற்கெல்லாம் பிராயச்சித்தம் தேடும் வகையில் மேற்கொண்டிருக்கும் துணிச்சல் மிக்க முயற்சிகள் பாராட்டுதற்குரியவை

கல்வியில் மதம்

1880இல் கேணல் ஒல்கொட் இலங்கை வந்து பிரம்ம ஞான சங்கத்தை (Theosophical Society) ஆரம்பித்தபோது அதன் இணை ஸ்தாபகர் பொன்னம்பலம் இராமநாதன். அச் சங்கம் பௌத்த கல்வி நிதியத்தை ஆரம்பித்தபோது அந் நிதியத்தின் இணைசெயலாளராக ஒல்கொட்டுக்கு நிகராக அதில் பணியாற்றினார் இராமநாதன். ஆங்கில மிஷனரி பாடசாலைகள் கிறிஸ்தவத்தை நிலைநாட்டுவதற்காக ஆங்கில பாடசாலைகளை
பயன்படுத்திவந்த வேளை சுதேச பாடசாலைகளை நிறுவும் நோக்கில் சிங்கள பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. பௌத்த மறுமலர்ச்சிக்கு துணைபுரிந்த இந்த நிதியத்துக்கு அப்போதைய நிலையில் 15 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி அந்நிதியத்தை ஆரம்பித்தார் இராமநாதன். ஆனால் அந்நிதியம் ஆனந்தா, நாலந்தா போன்ற தனி பௌத்த பாடசாலைகளை மாத்திரமே தொடக்கும் பணிகளில் ஈடுபட்டதால் மனமுடைந்த இராமநாதன் அதில் இருந்து வெறும் ஐயாயிரம் ரூபாயை மாத்திரம் மீள பெற்றுக்கொண்டு இந்துக் கல்லூரிகளை ஆரம்பிக்கப் புறப்பட்டார்.

பொன்னம்பலம் இராமநாதனை ஆனந்தா கல்லூரி ஆரம்பவிழாவுக்கு 1.11.1886 அன்று ஒல்கொட் அழைத்திருந்தார். தனக்கு அடுத்ததாக இராமநாதனை உரையாற்ற அழைத்திருந்தார். இராமநாதனின் உரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“உங்கள் சிங்கள உதடுகள் சிங்களம் பேசாது போனால் வேறெவர் தான் பேசுவார். ஒரு தேசம் தனது தவறுகளிலிருந்து மீள்வது எப்படி. சீர்திருத்தமும், தூரநோக்குள்ள உயர்கல்வியும் சொந்த மொழியின்றி எப்படி சாத்தியமாகும்? சிங்கள நபர் சிங்களம் பேசுவதை தவிர்த்தாலோ, பெருமையுடன் சிங்களம் பேச முன்வராவிட்ட்டாலோ அவர் சிங்களவர் அல்லர்.”

சிங்கள பாடசாலைகள் சிங்களத்தையும், பௌத்தத்தையும் முன்னிறுத்தி, சுதேசிய உணர்வுக்குப் பதிலாக “இன, மத” போக்கை கடைபிடித்தன. ஆனால் வடக்கில் “சைவத்தையும், தமிழையும்” அதாவது மதத்தையும், மொழியையும் முதன்மைபடுத்தி வேலைத்திட்டங்கள் நடந்தன. அந்த சைவ பாடசாலைகள் அரசுடமையாக்கும் வரை யாழ்-உயர் சாதியினருக்கான பாடசாலைகளாகவே இருந்தன என்பது வேறு கதை.

இலங்கையில் பௌத்த அறநெறிப் பாடசாலை (தஹாம் பாசல்) முதன் முதலாக 03.08.1895 இல் காலி ஸ்ரீ விஜயானந்தராம விகாரையில் தொடங்கப்பட்டது கேணல் ஒல்கொட்டின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இலங்கையிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளிலும் வாரம் தோறும் சில மணித்தியாலங்கள் பௌத்த அறநெறியைப் புகட்டும் கற்கை ஆரம்பிக்கவேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தது மட்டுமன்றி அதனை செயல்படுத்தினார் ஒல்கொட். இன்றுவரை ஞாயிறு “தஹாம் பாசல்” எனப்படும் பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தொடர்கின்றன. கிறிஸ்தவ முறையில் “ஞாயிறு கிறிஸ்தவ அறநெறிப் பாடசாலை” வழிமுறையையே ஒல்கொட் இலங்கையின் பௌத்த மரபில் இணைத்துக்கொண்டார். அதுபோல இந்துக்களின் மத்தியிலும் கூட சைவ அறநெறிப் பாடசாலைகள் வார இறுதிகளில் இந்து பாடசாலைகளில் நடக்கின்றன. முஸ்லிம் பாடசாலைகளிலும், பள்ளிவாசல்களிலும் இவ்வாறான மதப் போதனை வகுப்புகள் நடக்கவே செய்கின்றன.

தமது பெற்றோரின் மதத்தை பிள்ளைகள் கற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும் என்கிற கோரிக்கையின் காரணமாக 1945 டிசம்பர் அது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அதுவரை 1956இல் தமது தாய்மொழியில் உயர்கல்வி கற்கக்கூடிய வழிவகைகளை உருவாக்கினார்  அன்றைய கல்வி அமைச்சர் கன்னங்கரா. கடும் எதிர்ப்பின் மத்தியில்   சிறிமா தலைமையிலான அரசாங்கம் பாடசாலைகளை அரசமயப்படுத்தியது. கல்வி அமைச்சராக நியமிக்கபட்டார் பதியுதீன் மொகமட். அவரை இன்றுவரை கடுமையாக சிங்கள பௌத்தர்கள் தாக்குவதைக் காண முடிகிறது. குறிப்பாக வரலாறு, இலக்கியம் போன்ற பாடங்களை பதியுதீன் நீக்கினார் என்கிறார்கள்.

1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்த போது படித்த இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டது. வரலாறு, இலக்கியம் என்பன தொழில் வாய்ப்புக்கான பாடங்கள் இல்லையென்று அதற்கு மாற்றீடாக வேறு பாடங்களை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் வரலாறு என்கிற பெயரில் ‘சிங்கள பௌத்த’ வரலாற்றையே அதுவரை கற்பித்து வந்தார்கள். இன்றும் இலங்கையின் வரலாறு பற்றிய பாடத்திட்டம் சிங்கள பௌத்த வரலாறாகவே சிங்கள, தமிழ் மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பாடநூல்களில் தமிழ் நூல்களில் முதற் பக்கங்களில் மிக சமீபகாலம் வரை இருந்து வந்த தமிழ் மொழியிலான இலங்கையின் தேசிய கீதம் கூட “ஸ்ரீ லங்கா தாயே” என்பதை சிங்களத்தில் “நமோ நமோ தாயே” என்று மாற்றி விட்டார்கள். தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை பறித்தெடுத்தார்கள். ஒரு புறம் சிங்கள பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை, இருக்கும் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்ட கொடுமைகள் பல தொடர்கின்றன. 

சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் இந்த நிலைமையை மாற்றுவதற்கென “சமவாய்ப்பு சட்டம்” எனும் பேரில் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டபோதும் 1999 இல் சிங்கள வீரவிதான உள்ளிட்ட இனவாதிகள் தமது பலமான எதிர்ப்பின் மூலம் அம்முயற்சியை கைவிடச் செய்தார்கள். மகாசங்கத்தை சேர்ந்த பிக்குமார்களையும் இணைத்துக்கொண்டு அச்சட்டத்துக்கு எதிராக மாநாடுகளையும், ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட பாடசாலைகளும் வீதியில் இறங்கி போராடின. இறுதியில் அரசாங்கம் மண்டியிட்டு சரணடைந்தது. இனவாதிகள் வெற்றி பெற்றார்கள்.

சமவாய்ப்பு சட்டம் குறித்து அத்துரலியே ரதன தேரர் ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார். இந்த நாட்டின் பௌத்த தலைவர்கள் உருவாக வேண்டிய இடம் ஆனந்தா கல்லூரியே. 1956 சிங்கள வெற்றியின் பிறப்பிடம் ஆனந்த வித்தியாலயம் தான். 1999 இல் சமவாய்ப்பு சட்டத்தை தோற்கடித்தவர்களும் நாங்களே. (13.05.2005 - திவய்ன)

சமவாய்ப்பு சட்டம் குறித்த சர்ச்சையில் அன்று பேரினவாதிகளால் அதிகம் இலக்கு வைத்து தாக்கப்பட்டவர் மறந்த அஷ்ரப். “68% பௌத்தர்கள் வாழும் இந்த நாட்டில் சாஹிரா கல்லூரியில் அதற்கேற்ப இடம் கொடுப்பீர்களா” என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்.

சர்வமத பாடத்திட்டம்

பெரும்பாலான மேற்கத்தேய பாடசாலைகளில் “இறையியல்” (Theology) என்கிற பாடத்திட்டமே பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றன. மாணவர்கள் அங்கு சகல மதங்கள் குறித்த அறிவைப் பெறுவார்கள். மத நம்பிக்கையை ஊட்டும் கல்விமுறை அங்கு கிடையாது. இது ஒரு பன்மத, பன்முக அறிவை மாணவர்களுக்குப் பெற்றுத் தருவதோடு தனியொரு மதத்துக்குள் உள்ளிழுப்பதை தவிர்க்கிறது. ஏனைய மதங்களுக்கு மதிப்பளிப்பதற்கும், அவற்றின் மீதான சகிப்புணர்வுக்கு பழக்கப்படுத்துவதற்கும் வழிகாட்டப்படுகிறது. அதேவேளை இந்த நாடுகளில் வெளிநாட்டு குடியேற்றவாசிகள் தமது மத நம்பிக்கை சார்ந்த பகுதிநேர பாடசாலைகளைத் திறந்து தனிமத போதனைகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்குவதை இந்த நாடுகளின் தாராள ஜனநாயகவாத கொள்கைகள் தடுக்கமுடியவில்லை. பல ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் பாரம்பரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் பலமிழந்து வருவதுடன் வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் மதவழிபாட்டுத் தளங்கள் பலமடைந்து வருவது கூட மதசார்பற்ற நிலைக்கு சவாலாக அமைந்துள்ளன என்பது உண்மை தான், முஸ்லிம் பள்ளிவாசல்களின் பெருக்கம், யூத, இந்து, பௌத்தம், சீக்கியம் போன்ற மத வழிபாட்டுத் தளங்களின் தோற்றமும் அவற்றின் போதனைகளும் கூட இப்பேர்பட்ட வேறுபாடுகளையும், மனிதத் துருவங்களையும் உருவாக்கிவருவதை நடைமுறையில் காண முடிகிறது.

நமது நாட்டில் இன்றைய பாடசாலைகள் இனவாரியாக பிரிக்கப்படவில்லை, அல்லது தனி மொழிப் பாடசாலைகளாக அவை இல்லை, அவை “தனி மத” பாடசாலைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன என்பது நடைமுறை யதார்த்தம். பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளாகவே நிலைபெற்று பழகிவிட்ட இந்த அமைப்புமுறையை மாற்றுவதை குற்றம் சாட்டுபவர்கள் கூட விரும்புவதில்லை. சமத்துவம், சகோரத்துவம், சகவாழ்வு, மதச் சகிப்பு போன்றவை எட்டாத் துருவ நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இன்றைய நிலையில் அது இலகுவானதல்ல.

இன்றைய நிலையில் இலங்கையில் மத சார்பற்ற தனியார் பாடசாலைகள் சாத்தியப்பட்டிருக்கிறதே. அந்த இடைவெளியை பல்தேசிய கம்பனிகளும், பணம் கறக்கும், கல்வியை விற்றுப் பிழைக்கும் உள்ளூர் மாபியாக்களும் நிரப்பியுள்ளன.

பௌத்த மத முன்னுரிமை

மத சமத்துவம் மீறப்படும் வேளைகளில் சிறுபான்மை இனங்கள் எதிர்வினையாற்றும்போதேல்லாம் அரசியலமைப்பில் அன்று நுழைத்துக்கொண்ட பௌத்த மதம் குறித்த சரத்தை வைத்துக் கொண்டு தான் முறியடிக்கின்றன.

இனவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் சகல முயற்சிகளையும் இனவாதிகள் எதிர்த்து முறியடிப்பதற்கு ஆதாரமாக இருப்பது இந்த நாட்டின் அரசியலமைப்பும், 1815 கண்டி ஒப்பந்தமுமே. ஆங்கிலேயர்களிடம் கண்டி வீழ்ந்ததன் பின் முழு நாட்டையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் ஆங்கிலேயர்கள். கண்டி அரசனைக் காட்டிக்கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்ட கண்டி பிரதானிகள்  அவ் ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவிற்கு ஊடாக பௌத்த மதத்தை பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்களிடம் கையெழுத்தில் உறுதி வாங்கிக்கொண்டனர். அந்த ஒப்பந்தத்தைக் காட்டியே தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களோடு சர்ச்சைகள் செய்து அவ் உரிமைகளை உறுதிபடுத்தி வந்தனர். அவ்வொப்பந்தத்தை இன்றும் அவர்கள் எங்கும் எடுத்துக் காட்டுவதுண்டு.

அடுத்தது பிரபல இடதுசாரித் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்களால் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பில் முதன் முறையாக பௌத்த மதம் அரச மதமாக ஆக்கப்பட்டது. அதுவரை சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பாக சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டது. இலங்கையை உத்தியோகபூரவமாக சிங்கள பௌத்த நாடாக நிறுவனப்படுத்திய முதல் சந்தர்ப்பம் அது தான். 

1978 இல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலும் கூட இந்த சரத்தை ஜே.ஆரால் எடுத்து விட முடியவில்லை. இனிவரும் காலங்களிலும் அதனை மாற்றுவது என்பது குதிரைக்கொம்பே. அப்பேர்பட்ட சரத்தைப் பயன்படுத்தி பௌத்த மதம் பெரும் நிதியொதுக்கீட்டுடன் பல சலுகைகளுடன் ஏனைய இனங்களையும் மதங்களையும் நசுக்கி பாசிச வடிவம் பெற்று விருட்சமாகியுள்ளது. இன்று ஏனைய சமூகங்களின் உரிமைகளை மறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும், பறிப்பதற்கும் இந்த அரசியலைமைப்பு ஏற்பாடு தான் பக்க பலமாக இருந்து வருகிறது.

தற்போதைய அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின் 09 ஆவது சரத்து பின்வருமாறு கூறுகிறது. 'இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, 10 ஆம், 14 (01)(உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்'.

எந்த அரசியல் சந்தர்ப்பவாதிகளால் பௌத்த மத முன்னுரிமை ஏற்பாடு கொண்டுவரப்பட்டதோ இன்று அவர்களே நினைத்தால் கூட மாற்ற முடியாத நிலைமையை இன்று தோற்றுவித்துள்ளது. சாதாரண சமவாய்ப்பு சட்டத்தையே கைவிட்டு சரணடைந்தவர்களால் அரசியலமைப்பில் மாத்திரம் அம்மாற்றத்தை எப்படிக் கொண்டு வர முடியும். இந்த சரத்து நீக்கப்பட்டால் இனப்பிரச்சினை தீர்வு எதிர்நோக்கும் முக்கியதொரு தடை நீங்கி விடும்.

புதிய அரசியமைப்புக்கு ஊடாக மத சார்பற்ற நாடாக பிரகடனபடுத்துமாறு கோரிக்கைகள் வலுக்கின்றன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இவ்வரசியலமைப்பின் நோக்கங்களில் ஒன்று என கூறும் அரசாங்கம் பௌத்த மத முன்னுரிமையை நீக்குமா?

சமீபத்தில் அரசாங்கம் கொண்டுவரவிருந்த வெறுப்பு பேச்சுக்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலமும் பௌத்த சக்திகளின் எதிர்ப்பின் விளைவாக கைவிடப்பட்டிருக்கிறது.

தாம் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள்; அரசியலமைப்புக்கு ஊடாக தமக்கு தந்த அதிகாரம் என்று நம்பிகொண்டிருக்கும் பிக்குகள் பெருகிவருகிறார்கள். பௌத்த காவியுடை என்பது சண்டித்தனம் செய்வதற்கு அளிக்கப்பட லைசன்ஸ் அல்ல என்பதை தெளிவுபடுத்த வரவிருப்பது தான் பிக்குகள் ஒழுக்கச் சட்டம்.

பிக்குகள் ஒழுக்கவியல் சட்டம்

தேரவாத பௌத்த சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து பிக்குமாரின் மோசமான நடத்தைகளை கட்டுப்படுத்தும் முயற்சி இழுபறி நிலையில் இருக்கிறது. அச்சட்டமூலம் பிக்குமாரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியது. “துறவறம் பூண்ட” பிக்குமார் பலரிடம் இன்று பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. பணம், காணிகள், வாகனங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் இருகின்றன. எந்த வரையறையுமில்லாமல் தாம் நினைத்த இடங்களில் விகாரைகளை அமைத்து வருகிறார்கள். பிக்குவாக ஆவதற்கான வயது, தகுதி என்பன மீறப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் வகையில் இந்த சட்டம் தயாரிக்கப்படுகிறது.

அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சியை எதிர்ப்பவர்கள் அத்தகைய இனவாத – சண்டித்தன அமைப்புகளே. ஆனால் மூன்று பௌத்த சங்க பீடங்களும் தமது கோரிக்கையின் பேரிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளன. இது 25 வருடகால கோரிக்கை என்கிறார்கள் அவர்கள். இப்போது அரசாங்கம் இதற்கான சட்டவரைபை தாம் தயாரிக்காமல் சங்க பீடங்களிடமே அந்த பொறுப்பை கொடுத்து விட்டது. அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்கள் இந்த சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி தமது ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கின்றன. சென்ற அரசாங்கத்திடம் இந்த சட்டத்தை கொண்டுவரும்படி கோரிக்கை விடுத்திருந்தபோதும் அவர்கள் அதை சில நலன்களுக்காக பொருட்படுத்தவில்லை என்று  மல்வத்து நாயக்க தேரர் சித்தார்த்த சுமங்கல தேரர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இனவாத அமைப்புகள் ஆங்காங்கு சிங்கள அமைப்புகளை தூண்டி இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. போதாததற்கு சிங்கள ஊடகங்களில் இச் சட்டத்தை எதிர்த்து பல கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. பிக்குமாரின் நடவடிக்கைகளை இப்படி கட்டுபடுத்தினால் பௌத்தர்கள் பலவீனப்படுவார்கள், ஏனைய இனங்கள் இந்த நாட்டை துண்டாடி ஆக்கிரமித்துவிடும், பௌத்த சாசனம் அழிந்துவிடும் என்று பீதியைக் கிளப்பி வருகின்றன.

கடந்த 26.01.2016 அன்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இந்த சட்டத்தை எதிர்த்து ஒரு வழக்கு கூட தாக்கல் செய்தது குறித்த செய்தி பதிவாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பு மாற்றம். போர் விசாரணை. இந்த இரண்டும் தமது உடனடி முன்னுரிமை நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறது பேரினவாத தரப்பு. அந்தப் பேரினவாதத்தின் வீரியம் சோராமல் தக்கவைத்திருப்பதற்கு ஓய்வற்று அது இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். தனது இனவாத நிகழ்ச்சிநிரலில் உள்ள பல்வேறு நடவடிக்கைகளில் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

கல்விமுறையானது சர்வமத கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும், பிரபல பாடசாலைகளில் சகல மதத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்பதும் பெரும் சவாலான காரியங்களே. பௌத்த மத முன்னுரிமையை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதன்மூலம் பேரினவாதத்தின் வீரியத்தைக் குறைத்தால் மட்டுமே இனப்பிரச்சினைத் தீர்வு உட்பட மேற்படி பல்வேறு சிக்கல்கள் தீர வழிதிறக்கும்.

நன்றி  - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates