Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இயக்க வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு தாவூத்

தோழர் பஷீர் சேகு தாவூத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட இந்த வரலாற்றானுபவத்தை நன்றியுடன் மீள இங்கு பதிவு செய்கிறோம்.
1
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்ட எளிய முயற்சியை அந்தத் தொழிலாளர் முடித்த அடுத்த நாள் காலை நான் ஹற்றன், மல்லியப்பூ பஜார் நோக்கிப் புறப்பட்டேன்.

மல்லியப்பூ பஜாரில் உள்ள கோயில் ஒன்றில் பாலநடராச ஐயர் என்ற இயற் பெயரைக் கொண்ட, இளையவன் என்ற பெயரில் எழுத்தாளராக அறியப்பட்ட உரும்பராயைச் சேர்ந்த தோழர் சின்ன பாலாவின் மாமா "குருக்களாக" பணியில் இருந்தார். அவரோடு கோயில் அறை ஒன்றில் இயக்கப் பணிகளின் நிமித்தம் சின்ன பாலா தங்கியிருந்தார். இவரோடு இணைந்து செயலாற்றுவதற்காகவே நான் அங்கு சென்றேன். வழியில் எந்தத் தடங்கலும் இன்றிப் போய் பாலாவுடன் இணைந்துகொண்டேன். இரவு வேளைகளில் அவருடனேயே தங்கிக்கொண்டு பகலில் இயக்க வேலைகளில் இருவருமாக ஈடுபட்டோம்.

சில நாட்களில் பாலா, உணவகம் ஒன்றில் கோழிக் கறி சாப்பிடுவதை அவரது ஐயர் மாமா கண்டு விட்டார். அன்றிலிருந்து கோயில் வளவுக்குள் எங்களது கால் படுவதற்கு மட்டுமல்ல, எம்மில் உராய்ந்து செல்லும் குளிர் காற்றுக்கூட கோயிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. பாலாவின் மிகக் கடுமையான போக்குக் கொண்ட ஐயர் மாமாவினால் உடுப்புப் பைகள் கோயில் எல்லைக்கு அப்பால் கொண்டு வந்து அழுகி முடை நாற்றமெடுக்கும் இறந்த ஏதோ பறவைகளை எறிவது போல தரப்பட்டது. அதுதான் முதன் முதலில் தான் சாப்பிட்ட 'மச்சம்' என்றும், இதற்கு முன்னர் சாப்பிட்டதே இல்லை என்றும், மாமா துரத்தினாலும் பரவாயில்லை கோழிக் கறி மிகவும் சுவையாக இருந்தது என்றும் பின்னொரு நாளில் நாமிருவரும் மட்டக்களப்பில் மலையக நினைவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது பாலா நகைச்சுவையாகக் கூறினார்.
2
1986 இல் மீண்டும் மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களுக்காகவும், இயக்கம் தொடர்பாக மலையகத் தமிழ் இளைஞர்களுக்குள் பிரச்சாரங்களை மேற்கொண்டு அணிதிரட்டுவதற்காகவும் மலையகத்துக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது.

இம்முறை நுவரெலிவை இலக்கு வைத்த பயணத்துக்குத் தயாரானேன். 1977 இல் மலையகத்து தமிழர்களை இலக்கு வைத்து கலவரம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட தாக்குதல்களினாலும், கொள்ளையினாலும் பாதிக்கப்பட்டு செங்கலடிக்கு வந்தார் சிவா. இவர் அங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள கடைத் தொகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து " லவினி மெடிக்கல்" என்ற பெயரில் ஒரு பார்மஸியைத் திறந்து வியாரம் செய்து வந்தார்.இவருடன் அப்பிரதேச ஈரோஸ் போராளிகள் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தனர். இந்த நட்பு வட்டத்துக்குள் நானும் ஒருவனாயிருந்தேன். எங்கள் கருத்துக்களை உள்வாங்கிய சிவா எந்த இழப்புக்கும் தயாரான உறுதி படைத்த ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளரானார். இவரது கடையின் முன்னால் மறைந்த தியாகத் தோழர்கள் ரமேஷ், வேணு, மனோகரன் மற்றும் இன்னும் மறையாத நான் ஆகியோர் பிரதான வீதியின் இரு புறத்தையும் திரும்பிப பார்த்த வண்ணம் கதைகள் பேசிக் கழித்திருப்போம். ஏதாவது பாதுகாப்புத் தரப்பு வண்டிகள் வந்தால் மெல்ல லவினி மெடிக்கலுக்குள் புகுந்து பின்னால் வேலிகள் பாய்ந்து ஒடி பிள்ளையார் கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிடுவோம். இவ்வாறான தருணங்களில் கடை முதலாளிக்கு ஆபத்துகள் நிகழும் என்றெண்ணி ஒரு போதும் எம்மைக் கண்டு சிவா முகம் சுழித்தது கிடையாது. ஈரோஸ் மலையகத் தமிழர்களின் விடுதலை பற்றி முதன்மையான அக்கறையைக் கொண்ட அமைப்பு என்பதை சிவா முழுமையாகப் புரிந்திருந்ததே அவரது திடகாத்திரமான ஆதரவுக்குக் காரணமாகும்.

சிரேஷ்ட மலையகத் தோழர் கணேஷ் 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏறாவூரில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 'தூக்கப்பட்டு' இக்கினியாகலைக்குக் கொண்டு செல்லப்படார். அங்கு சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். கணேஷ் தளத்தில் இன்மையால் நான் மலையகத்துக்கு மீண்டும் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நுவரெலியா செல்வதற்கு லவினி சிவாவிடம் உதவி கோரினோம். மனமுவந்த அவர் என்னையும் தோழி சுகிர்தாவையும் தொடரூந்தில் கண்டிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பேரூந்தில் நுவரெலியா கொண்டு சேர்த்தார்.

தோழி சுகிர்தா அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரியாவார். அந்தக் காலத்தில் பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவுடன் வேலை வாய்ப்புக் காத்திருக்கும். அதுவும் விஞ்ஞானப் பட்டதாரி என்றால் வெளியேறும் போதே வாயிலில் வந்து நின்று வாய்ப்புகள் அரவணைத்து வரவேற்கும். அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு ஈழப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சுகிர்தா, பெரும் மனிதாபிமானியும், கொள்கைப் பற்றுள்ளவரும், புத்திஜீவியுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு துணிகரமான பெண்ணாகும்.

நாம் மூவரும் தொடரூந்தில் கண்டியை நோக்கிச் செல்கையில் மன்னம்பிட்டியில் தரித்த வண்டிக்குள் அதிரடிப் படையினர் சோதனைக்காக ஏறினர். விசிலையும், புகையையும் ஊதிய தொடரூந்து நகரத் தொடங்கியது. சுகிர்தா அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்தில் இடமிருந்த போதும் வெவ்வேறு இடங்களில் அமர்வது பாதுகாப்பாக இருக்குமென்று கருதிய நாங்கள் வெவ்வேறாக அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் போல அமர்ந்திருந்தோம்.சிவா மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் நாமிருவரும் கவனமாக இருந்தோம்.

அதிரடிப் படையினரோடு முகமூடி அணிந்த "காட்டிக் கொடுக்கும்" நபரொருவரும் வந்ததைக் கண்ட சுகிர்தா கண்ணைக் காட்டி என்னைத் தன்னருகே அழைத்தார். சுகிர்தாவை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் முகமூடி அணிந்தவரைக் கண்ணுற்றதும் என்னை முகமூடி அடையாளம் காணக்கூடும் என்று பயந்துதான் ஒரு திடீர் திட்டத்தோடு என்னைத் தன்னருகே வருமாறு சுகிர்தா அழைத்தார் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை. அருகில் சென்ற என்னிடம் " நீங்கள் எனது மடியினுள் முகத்தைப் புதைத்தபடி தூங்குவது போல நடியுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்று மெல்லக் கூறினார். அப்படியே செய்தேன். சிவா தனது அடையாள அட்டையைக் காண்பித்தார், அவரது நரைத்த மீசையும் அவரைச் சந்தேகப்படாமலாக்கிற்று. எம்மிருவரது இருக்கைகளுக்கருகிலும் சோதனைக்காக வந்தவர்களிடம் 'இவருக்கு சரியான சுகமில்ல நான் பேராதெனிய பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு போறன்' என்று சுகிர்தா சொன்னது முகம் புதைத்துக் கிடந்த என் செவிகளில் கேட்டது.சுகிர்தாவின் முகத்தில் இழையோடிய சோகத்தையும், நாத்தழும்பும் பாவத்திலான கதையையும் கேட்ட படையினர் நகர்ந்து விட்டனர். படையினர் ஹபறண நிலையத்தில் இறங்கிய பின்னர் மூவரும் புன்சிரிப்போடு முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். இந்நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன், எண்ணிலடங்கா நன்றிகள் தோழி சுகிர்தா!

எங்களை சிவா நுவரெலியா நகரின் மத்தியில் லேடி மெக்லம்ஸ் வீதியில் அமைந்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வீட்டில் கொண்டு ஒப்படைத்துவிட்டு அவர் கிளம்பி எங்கோ அவருக்குத் தெரிந்த இன்னொருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
3
தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகள் கற்கும் முன்பள்ளியில் கற்பித்துக் கொண்டிருந்த இவ்வாசிரியைக்கு சொற்ப சம்பளமே கிடைத்தது. ஈரோஸ்காரரின் வழமைக்கிணங்க நாம் தங்கியிருந்த வீட்டுக்காரரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம். இவரது கணவன் சந்திரமோகன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தராக இருந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இறப்பின் பின் மனைவிக்கு காங்கிரஸ் இந்த ஆசிரியைத் தொழிலை வழங்கியிருந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனுமாக மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூத்த பெண்ணுக்கு 18 வயதாகவும், இளைய பெண்ணுக்கு 15 வயதாகவும், மகன் அம்மாவுடன் முன் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாகவும் இருந்தான். தனது சிறிய சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த இந்தத் தாய்க்கு மேலதிக சுமையாக ஒரு தங்கையும், தம்பியும் போய்ச் சேர்ந்திருந்தோம். எவ்வளவு வற்புறுத்தியும் இவ்வாசிரியை எங்களிடம் பணம் பெற்றுக்கொள்ளவே இல்லை. தோட்டமொன்றுக்குச் சொந்தமான வீடு இவர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்தது. அடிக்கடி வீட்டைக் காலி பண்ணுமாறு தொந்தரவு வேறு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தொழிலாளர் காங்கிரசில் முன்னர் பிரபல்யமான பிரமுகராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து தற்போது விலகி வேறு கட்சி ஒன்றில் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சதாசிவம் ஐயாவுக்கும் இந்த ஆசிரியையின் கணவருக்கும் இடையில் இருவரும் காங்கிரசில் ஒன்றாக இருந்த காலத்தில் பலத்த போட்டி நிலவியதாக அறிந்தோம்.

லேடி மெக்லம்ஸ் வீதியின் முடக்கில் ஒரு பெரிய வெளி, இந்த வெளியின் மேலே இருக்கும் வானத்தின் பரப்பை மறைக்கும் வல்லமையுடன் கிளைகள் பரப்பிப் பரந்திருந்த நூற்றாண்டு பழமையான புளிய மரத்தின் கீழால் சென்று சில படிகள் ஏறி அந்தப் பழைய இருண்ட இரண்டறை வீட்டுக்குள் நுழைவது அலாதியான அனுபவத்தைத் தந்தது.ஒரு விறகு அடுப்பும் கம்பளிப் போர்வைகளும் அந்த வீட்டில் எமக்கான குளிர்க்காவலர்களாயிருந்தன. வீட்டின் முன்னால் ஒரு இரட்டைக் கழிவறையும்,குளியலறையும் இருந்தன. பல குடும்பங்கள் இவ்விரண்டையும் பயன்படுத்தின. 1986 ஏப்பிரல் 17 ஆம் திகதி காலையில் அந்தக் குழியலறைகளையும், கழிவறைகளையும் தீவிரமாகத் துப்பரவு செய்து கொண்டிருந்தேன். வெளியில் வந்து இதனைக் கண்ட சுகிர்தா என்ன இன்றைக்கு தீவிரமான சுத்திகரிப்புத் தொழிலாளராக மாறிவிட்டீர்கள் என்று கேட்டார். ஆமாம் எனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் என்று பதிலிறுத்தேன். அன்று எனது 26 ஆவது பிறந்தநாள் பிறந்திருந்தது.

நாம் தங்கியிருந்த இந்த வீட்டின் பின்புறத்தால் இறங்கி மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையால் ஏறினால் வெகு தூரத்தில் உள்ள மலை உச்சியில் அரச ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கோபுரம் அமைந்துள்ளது. மூச்சிரைக்க அக்கோபுரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். இக்கோபுரத்தை ஈரோஸ் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதில் மலையக மூத்த தோழர் கிருஷ்ணனும் பங்குபற்றியிருந்தார். இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் தாக்குதல் பற்றிய வீரப் பிரதாபங்களை தோழர் கிருஷ்ணன் நுவரெலியா நகருக்குள் கொட்டித் தீர்த்தமையால் கைது செய்யப்பட்டார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பொது மன்னிப்பினால் அவர் விடுதலையானார். இப்போது இவர் கடும் நோய்வாய்ப்பட்டவராக தனிமையிலும் வறுமையிலும் உழல்வதாக அறிகிறேன். இவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வேலைகள் தோழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 

தங்கிய வீட்டுக்கு அருகாமையில் புளியமரத்துக்கு பக்கவாட்டில் சற்று உயரமான மேட்டில் ஒர் அகலமான பெரிய மாடிகளற்ற தள வீடு இருந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் எம். எச் முஹம்மத் ஆவார். நாம் நுவரெலியாவில் இருந்த காலத்தில் இவ்வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகம் நடாத்திக்கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இவ்வலுவலகத்தின் பொறுப்பாளராக திரு சதாசிவம் இருந்தார். நாங்கள் அந்தக் காரியாலயத்துள் நுழைந்து அங்கு வேலை செய்த இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக்கொண்டோம். நாட்போக்கில் அரசியல் வகுப்பெடுத்து அவர்களைத் தோழர்களாக்கி ஈரோஸ் உறுப்பினர்களாக உள்ளீர்த்தோம். பின்னென்ன, இரவு வேளைகளில் எனது உறக்கம் இந்த அலுவலகத்தில் இருந்த பெரிய மேசையின் மீதுதான் கழிந்தது. சுகிர்தா ஆசிரியை வீட்டில் தங்குவது தொடர்ந்தது. அங்கு வேலை செய்த தோழர்கள் ஓரிருவர் என்னோடு கூடவே தங்குவர். இவர்கள் இரவில் நெய் பூசி சுட்டுத் தந்த கோதுமை ரொட்டி போல் சுவையுள்ள ரொட்டியை நான் இன்று வரை வேறெங்கும் உண்டதில்லை. காலையில் எழுந்து ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக் குளித்துவிட்டு தோட்டங்களுக்கு ஏறத்தொடங்கி விடுவேன். இங்கு பிடித்த எனக்குப் பிடித்தமான தோழர்கள் நுவரெலியாவில் உள்ள நிறையத் தோட்டங்களுக்கு என்னை அழைத்துச் சென்று இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வகுப்புகள் எடுக்கப் பெருந்துணை புரிந்தனர். சுகிர்தாவைத் தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதில்லை. தோட்டங்களைத் தெரிந்து கொண்டோம், அங்கெல்லாம் போகும் வழி தெரிந்து கொண்டோம், பலரை அமைப்பின் உறுப்பினர்களாக்கினோம், எமக்குத் தெரிந்தவர்களும் எம்மைத் தெரிந்தவர்களும் - எமது கொள்கைகளைப் புரிந்தவர்களும் பெருகினர், ஒருகட்ட வேலையைப் பூர்த்தி செய்துவிட்டு பதுளையூடாக அம்பாறை வந்து அக்கரைப்பற்றை அடைந்தோம்.
4
1977 இல் டெவன் தோட்டத்தை நட்சாத் திட்டத்திற்காக இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் தீவிர பங்கெடுத்த வட்டகொட ஒக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவணுலட்சுமணன் பொலிசாரினால் மே மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டு வந்து ஒரு வாரத்தில், சிவணுலட்சுமணனின் ஒன்பதாவது நினைவு தினம் தொடர்பான மக்கள் வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்காக மீண்டும் நுவரெலியா செல்லுமாறு இயக்கத்தால் பணிக்கப்பட்டேன்.

படுவான்கரைப் பாவற்கொடிச் சேனையில் இருந்து அக்கரைப்பற்றினூடாக அம்பாறை போய் பதுளையில் இறங்கி, அங்கிருந்து நுவரெலியா போகும் நோக்கோடு வந்த வழிப் பயணம் தொடங்கிற்று.

அக்ரைப்பற்றூரைச் சேர்ந்த ஈரோஸ் ஆதரவாளரான சலாஹுதீன் வட்டவிதானையார் அவரது உந்துருளியில் பாவற்கொடிச் சேனை வந்து என்னை ஏற்றிக்கொண்டு அம்பாறை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கி பதுளை போகும் பேரூந்தில் அவரது பணத்தில் நுழைவுச் சீட்டும் எடுத்துத் தந்தார். நான் பதுளையூடாக நுவரெலியா சென்று ஆசிரியையின் வீட்டையடைந்தேன்.

இம்முறை பாதுகாப்பு விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற முன்முடிவோடு செயலாற்றத் தொடங்கினேன். எனது முன்னைய மலையக வேலைத்திட்டங்களில் ஒன்றாக அனைத்து மதத்தலங்களுக்கும் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நுவரெலிய நகரப் பள்ளிவாயிலிலின் கவுழில் மிகவும் குளிரான நீரில் வுழூஉ செயது லுகர் தொழுகையை நிறைவேற்றிய பின் புவாத் என்ற ஒருவரை சந்தித்து நண்பராக்கிக் கொண்டேன். இவர் ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கமான ஐக்கிய தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியக் காரியாலயத்தில் இலிகிதராக வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது இம்மாவட்டக் காரியாலயத்தின் பொறுப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி இருந்தார். நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்கக் காரியாலயத்தைப் பயன்படுத்திய போது அதன் பொறுப்பாளராக இருந்த சதாசிவத்துக்கோ, புவாத்துடனான தொடர்பு பற்றி புத்திர சிகாமணிக்கோ தெரியாதவாறே காய்களை நகர்த்தினேன். ஆனால் மலையகத்தில் நடமாடிய காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் அமைச்சர் தொண்டமானின் புகைப்படத்தை எனது சட்டைப் பைக்குள் வைத்தவனாகவே நடமாடினேன்.அடிக்கடி புவாத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து உறவாடத் தவறவில்லை.
5
மட்டக்களப்பிலிருந்து புறப்படும் போது சிவணு லட்சுமணனின் நினைவாக மக்களை விழிப்பூட்டும் வகையிலான சுவரொட்டி வாசகங்களை தோழர்களோடு கலந்து வடிவமைத்து அரபு எழுத்துக்களில் தமிழ் கருத்துப்பட எழுதி வைத்துக்கொண்டேன்.

நுவரெலியாவை அடைந்தவுடன்
முன்னைய தொடர்புகளினால் கிடைத்த தோழர்களினூடாக மே 11 சிவணுலட்சுமணனின் நினைவுச் சுவரொட்டிகளைத் தமிழில் தயாரித்தேன். 63 தோட்டங்களில் நானும் தோழர்களும் ஏறி இறங்கி சுவரொட்டிகளை ஒட்டினோம். அடுத்த நாள் காலை தோழர்கள் எல்லோரும் முதல்நாள் இரவு நடந்தவை எவையும் தெரியாதவர்களாக நடித்து அவரவர் வேலைகளுக்குத் திரும்பினோம். நான் ஓர் அப்பாவி சுற்றுலாக்காரனாக புவாத்தின் காரியாலயத்துக்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பகல் போசனத்துக்கான நேரம் நெருங்கியது.கீழே இருந்த ஒரு முஸ்லிம் உணவகத்துக்குச் செல்வோம் என்று கூறி என்னை அழைத்துக்கொண்டு புவாத் இறங்கினார். நாமிருவரும் போகும்போது வெள்ளை உடையணிந்த திடகாத்திரமான இருவர் எம்மைப் பின் தொடர்வதை அவதானித்தேன். எதுவுமே தெரியாத 'பச்சப்புள்ள' புவாத் உணவகத்தினுள் சென்று அமர்ந்து இரண்டு சோற்றுச் சாப்பாட்டுகளைக் கொண்டு வருமாறு பணித்தார். நான் கூர் உணர்திறனுடனும்,அவதானத்துடனும் புவாத்தின் அருகில் அமர்ந்திருந்தேன். எம்மைக் பின்தொடர்ந்த வாட்டசாட்டமான அந்த இருவரும் உணவகத்தினுள் நுழைந்தனர். கதிரைகளில் அமர்ந்த அவர்கள் ஆளுக்கு ஒரு கால் இறாத்தல் பாணும் கறியும் கொண்டு வருமாறு வேலையாளைப் பணித்தனர். நான் உசாரானேன் பகலுணவுக்காக எவர்தான் காலிறாத்தல் பாண் எடுப்பர்? நிச்சயப்படுத்திக் கொண்டேன், இவர்கள் என்னைப் பின் தொடரும் அரசபடையைச் சேர்ந்த சிவில் உடையில் உலவும் அதிகாரிகளென்று. நான் கழிவறைக்குச் சென்று வருகிறேன் என்று புவாத்திடம் சாக்குச் சொல்லிவிட்டு உணவகத்தின் பின் வழியாக வெளியேறி விரிந்து கிடந்த 'கொல்ப்' மைதானத்தைத் தாண்டி பிரதான வீதியை அடைந்தேன். தங்கிநிருந்த வீட்டையடைந்து பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.
6
வீட்டை அடைந்தவுடன் எனது தடிப்பான மீசையை அவசரமாக மழித்து எறிந்திருந்தேன். பயணப் பையை எடுக்கும் போதே அணிந்திருந்த மேற்சட்டையையும், காற்சட்டையையும் மாற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டேன். என்னை ஓரிரு முறைகள் பார்த்தவர்கள் அடையாளம் காண்பதற்கு சிரமப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செய்தேன்.

பேரூந்து நிலையத்தை அடைந்து பதுளைக்குச் செல்லும் பேரூந்துகளைத் தேடினேன், ஆனால் அந்நேரம் அங்கு பதுளை செல்ல வண்டிகள் எதுவுமிருக்கவில்லை.அங்கு தாமதிக்க விரும்பாமல் சற்றுத் தள்ளியிருக்கும் தனியார் வேன்கள் தரித்திருக்கும் நிலையத்துக்கு நடையைக்கட்டினேன். நான் அவ்விடம் போய்ச் சேரவும் ஒரு பழைய வேன் வெலிமடைக்கு புறப்படவும் சரியாக இருந்தது. எம்பி ஏறி வேனுக்குள் தொங்கினேன். தரிப்பிடத்தில் இருந்து உயரமான மேட்டில் உறுமியபடி ஏறிய வேனின் இயந்திரம் நின்று போனது. சாரதி ச்ச்சிர்ர் என்று மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்தார். ம்ஹூம் இயந்திரம் இயங்க மறுத்தது. வெளியில் எட்டிப் பார்த்தேன், பேரூந்து நிலைய வளாகத்துக்குள்- உணவகத்துக்கு என் பின்னால் வந்த இருவரும் வேகமாகத் தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனே இயங்கினேன். Bபஹின்ட, தள்ளுவக் தாமு (இறங்குங்க தள்ளு ஒன்று போடுவோம்) என்று கூறியவாறு நான் முதலில் இறங்கினேன். தொடர்ந்து அனைவரும் இறங்கினர். பலங்கொண்டமட்டும் வேனைத் தள்ளினோம், ஸ்டார்ட் வந்து விட்டது. எல்லோரும் உள்ளே ஏறியதும் வேன் வெலிமடையை நோக்கிப் பயணித்தது.

வெலிமடையை வந்தடைந்த வேனிலிருந்து இறங்கினேன். பதுளை செல்லவேண்டும் பொது மற்றும் தனியார் வாகனத் தரிப்பிடங்களில் பதுளை செல்ல எந்த வண்டிகளும் இருக்கவில்லை.மாலை ஆறு மணிக்குத்தான் பதுளை செல்லும் வண்டிகள் புறப்படும் என்றார் அங்கிருந்த நேரக்காப்பாளர். இந்தப் பொது இடத்தில் நிற்பது பாதுகாப்புக்கு உசிதமல்ல என்று எண்ணியவுடன் வெலிமடையில் இருந்த "சத்தார்ஸ்" என்ற காத்தான்குடி முதலாளிக்குச் சொந்தமான துணிக்கடை நினைவுக்கு வந்தது. இக்கடை பேரூந்து நிலையத்துக்கு அண்மையிலேதான் அமைந்திருந்தது. கடைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த சிலருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஏறாவூரைச் சேர்ந்தவன் என்பதையும் அறிந்திருந்தார்கள். வாங்க.. வாங்க.. என்று அன்புடன் வரவேற்றார்கள். சாப்புட்டீங்களா? சாப்பிடாட்டி வாங்க சாப்மிடலாம் என்று அழைத்தார்கள். வேண்டாம் நான் பகல் சாப்பிட்டுட்டுத்தான் வாறன் என்று பொய் சொன்னேன். பசியா பசி.. சிறு குடலைப் பெருங்குடல் தின்னத் தொடங்கியிருந்த நேரம் அது. ஒரு கோப்பை தேத்தண்ணி தந்தால் குடிப்பேன் என்றேன்.தந்தார்கள், குடித்தேன். பதுளைக்குச் செல்லும் வண்டிக்கான நேரம் நெருங்கும் வரை பாதுகாப்பாகக் கடைக்குள்ளே இருந்துவிட்டு தரிப்பிடம் சென்று அரச பேரூந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். சரியாக ஆறுமணிக்கு வண்டி பதுளையை நோக்கிக் கிளம்பிற்று.
7
ஒரு மணி நேரம் வண்டி ஓடியிருக்கும்,திடீர் சோதனைக்காக வெலிமட- பதுளைப் பிரதான வீதியில் பொலிசார் வண்டியை நிறுத்தினர். நுவரெலியாவில் இருந்து ஒரு பயங்கரவாதி தப்பியமையால் இந்த திடீர் சோதனை நிகழ்த்தப்பட்டது.

வீதியோரத்தில் தனி நபர் வரிசை வகுக்கப்பட்டிருந்தது." அனைவரும் ஒவ்வொருவராக பிரயாணப் பைகளைத் திறந்தவாறு அடையாள அட்டைகளை கையிலேந்திக்கொண்டு தனியாளாக வரிசையில்" வருமாறு கேட்கப்பட்டோம்.என்னைப் பிடித்தால் துப்பாக்கியைப் பறித்துச் சுடுவது என்பது எனது அப்போதைய உறுதியான தீர்மானமாகும்.

ஈரோஸ் 1983 இல் நூரளை சீத்தா எலிய கோவிலின் பின்புறமாக இறங்கி நெடுந்தூரம் பயணித்தால் வெல்லவாய ஊடாக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தை அடையலாம் என்று வரைபடத்தினூடாக கணிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் சீதா எலிய ஊடாக கீழிறங்கி உன்னிச்சையை அடையும் முயற்சியில் தோல்வியே கிடைத்தது. போகும் வழியெங்கும் அனுமதியின்றிக் களவில் மாணிக்கக் கல் தோண்டும் சிங்களவர் நாட்டுத் துப்பாக்கிகளோடு காவலில் இருந்தமையால் எமது முயற்சி கைகூடவில்லை. இது கைகூடியிருந்தால் இந்தக் கஷ்டம் இல்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
8
வரிசையில் செல்லும் போது சோதனை செய்பவருக்கு அலுப்புத் தட்டும் நேரத்தில்தான் எனது 'தவணை' வரவேண்டும் என்பதற்காக வரிசையில் பின்புறமாக நின்றுகொண்டேன். ஹுசைன் என்ற பெயரிலான தேசிய அடையாள அட்டையை அவசரத்தில் எடுக்க மறந்திருந்தேன். கைவசம் பஷீர் என்ற பெயரிலான எனது ஆசிரியர் அடையாள அட்டையே இருந்தது. நான் சோதனையிடும் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்னிலைக்கு வந்தேன். அடையாள அட்டையை மூடியபடி கையில் ஏந்தியவனாக பயணப் பையின் ஸிப்பைத் திறந்து காட்டினேன். கையில் இருந்த அரச அடையாள அட்டையைக் கண்ட அதிகாரி அதனை விரித்துப் பார்க்கவில்லை,பையை மட்டும் கிண்டிவிட்டு என்னை அனுப்பிவிட்டார். மீண்டும் அதே பேரூந்தில் பயணம் தொடர்ந்தது.பதுளை பேரூந்து நிலையத்தில் இறங்கினேன். இரவில் பதுளையில் இருந்து கிழக்கிற்குச் செல்ல வாகனங்கள் இல்லை. கடையில் இரவுணவு உண்டேன். எங்கே தங்குவது? பதுளைப் பள்ளிவாயிலுக்குப் போனேன், அங்கே ஒரு பீரங்கி என்னை வரவேற்றது. ஒலி பெருக்கி பாவனையில் இல்லாத காலத்தில் தொழுகைக்கான அழைப்பாக பீரங்கியை வெடிக்க வைப்பார்களாம்.

கால்களைக் கழுவிய பின்னர் பள்ளிக்குள் சென்று ஒரு மூலையில் பயணப் பையைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் பள்ளி முஅத்தின் வந்து எழுப்பி நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். மட்டக்களப்பு போக வாகனமில்லை அதனால் இங்கு தூங்கி காலையில் போகலாம் என்றிருக்கிறேன் என்றேன் அவரிடம். அப்படியா வாங்க மேலே போய் என்னுடைய அறையில் தங்குவோம் என்று அழைத்தார். நானும் மகிழ்வோடு சென்று மனிதனோடு தூங்கினேன். அசதியினாலும், களைப்பினாலும் மெய் மறந்து தூங்கிய என்னை முஅத்தினார் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுப்பினார். அன்று தலை நோன்பு என்பது என் நினைவில் இருக்கவில்லை. சஹர் உணவு தந்தார், சாப்பிட்டுவிட்டு சுபஹ் கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டபின் முஅத்தினாரிடம் விடைபெற்று பேரூந்து தரிப்பிடம் சென்றேன். அம்பாறைக்குச் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்தேன். அம்பாறையில் இறங்கி வழமையான பாதுகாப்பான வழியால் பாவற்கொடிச் சேனையை அடைந்தேன்.
9
சில வாரங்களின் பின்னர் அமைப்பாக்கப் பணிகளுக்காக மீண்டும் மலையகப் பயணம், ஆனால் இம்முறை நுவரெலியாவுக்கல்ல கண்டிக்குச் சென்றேன்.

கண்டியைச் சேர்ந்த தோழர் குணசீலன் மட்டக்களப்பு சென்ற் மைக்கல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஈரோஸ் அவரைக் கருத்துக்களால் கவ்விப் பிடித்திருந்தது. இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், முத்தையா முரளிதரனின் உறவுக்காரர். இவரோடு கண்டியில் உள்ள கந்தானைத் தோட்டத்துக்குச் சென்றேன். இங்குதான் சீலனின் அக்கா குடும்பம் வாழ்ந்துவந்தது. அக்காவின் கணவர் தோட்டத்தில் இலிகிதராக வேலை செய்தார். இவர்களோடு தங்கியிருந்து கொண்டு பல தோட்டங்களுக்கும் சென்று அப்பிரதேசத்தில் அமைப்பாக்க வேலைகளைச் செய்தோம். வகுப்புகள் எடுத்தோம், உறுப்பினர்களைச் சேர்த்தோம். சில வாரங்கள் கடந்தன. நுவரெலியாவில் ஏற்கனவே செய்த வேலைத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தமை கவலையைத் தந்தாலும் அச்சம் அங்கு செல்வதற்கு தடையாக இருந்தது. இது மட்டுமல்லாமல் மடத்தனமாகச் சென்று மாட்டிக்கொள்ளவும் கூடாது என்ற அவதானமும் நுவரெலியா செல்வதைத் தடுத்தது. எதற்கும் தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா அலுவலகத்தில் வேலை செய்யும் தோழர்களோடு தொலைபேசிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் இருந்து முக்கியத்தர்கள் கடமை முடிந்து போன பின்னர், இரவானதும் அங்கு தங்கி இருக்கும் தோழர்களொடு பேசினேன். விலாவாரியாக வினாக்களை எழுப்பினேன். அந்தப் பக்கமோ நான் தங்கியிருந்த வீட்டுக்கோ எந்தப் பாதுகாப்புத் தரப்பினரும் வரவோ விசாரிக்கவோ இல்லை என்று சொன்னார்கள். அடுத்த நாள் காலை புவாத்துடன் தொலைபேசினேன். நான் உணவகத்தில் இருந்து சாப்பிடாமல் போன பின்பு அவர் என்னைத் தேடிப் பார்த்தார். நான் எங்கும் கிடைக்காததால் அவர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றாராம். பின்னேரம் நாலு மணி போல் இருவர் வந்து உங்களோடு கடைக்கு சாப்பிட வந்தவர் யார்? அவரது விபரங்களைத் தரவேண்டும் என்று கேட்டார்களாம். அவர் ஒரு தொழிற்சங்க வேலையாக வந்தார், தோட்டங்களில் இருந்து அலுவலகத்துக்கு வந்து இருப்பவர்களுக்கு உணவு வேளை வந்தால் சாப்பாடு கொடுப்பது எமது வழக்கம், அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அழைத்துச் சென்றேன். ஆனால், திடீரென வயிற்று வலி வர அவர் சாப்பிட முடியாமல் போய்விட்டார்.அவரது பெயர் ஷியாம் என்று சொன்னாராம் புவாத். ஆம் மலையகத்தில் நான் ஷியாம் என்ற பெயரில்தான் நடமாடினேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி புரிந்த காலமது, ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் ஏடாகூடமாகப் பேசவும் முடியாது என்பதால் அவர்கள் கதையைக் கேட்டபின் சென்றுவிட்டார்களாம்.
இக்கதைகளை எல்லாம் கேட்டபின் அச்சம் நீங்கி நுவரெலியா போகும் ஆவல் ஓங்கியது.
10
கண்டியில் இருந்து நுவரெலியா சென்றேன். தோழர்களுடன் தொடர்பு கொண்டு விடுபட்ட வேலைகளில் இறங்கினேன். ஆயுதப் பயிற்சி வழங்குவதற்காக ஏற்கனவே சில இளைஞர்களைத் தெரிவு செய்திருந்தோம். இவர்களோடு இன்னும் மேலதிகமாகச் சிலரையும் இணைத்துக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பாக மட்டக்களப்புக்கு கொண்டு சேர்க்கும் சிக்கலான பொறுப்பை ஏற்றேன். போர்க்கப்பல்களைத் தோற்கடிக்கும் வல்லமையுள்ள தோணிகளைத் தயாரிக்கும் பணி தொடங்கிற்று. இலங்கையில் 200 ஆண்டுகளாக ஒடுக்குமுறைக்கு உட்படும் மலையகத் தமிழர்களே போராடத் தகுதியுள்ள முதன்மையான தேசிய இனமாகும். இவர்களுக்கல்லாமல் வேறு யாருக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது?

18 இளந்தோழர்களுடன் நுவரெலியாவில் இருந்து பேரூந்தில் கண்டி சென்றேன். கண்டியிலிருந்து தொடரூந்தில் மாஹோ சந்தி சென்று மட்டக்களப்பு செல்வது வரையப்படாத திட்டமாகும். கண்டியில் நின்ற தோழர் குணசீலன், நான் அறிவுறுத்தியதற்மைய தொடரூந்துக்கான 19 நுழைவுச் சீட்டுக்களை வாங்கி வைத்திருந்தார். தொடரூந்தில் 19 பேரின் பயணம் தொடங்கிற்று, எமக்கு அச்சம் நீக்கும் மருந்தாகவும், எதிரிகளுக்கு எம்மைப் பற்றிய சந்தேகம் ஏற்படாத வகையிலான உத்தியாகவும் பாட்டும் நடனமுமாகப் பயணித்தோம். குருநாகல் எனும் பெருநகரை அடையும் முன்பான பொல்கஹவெல நிறுத்த நிலையத்தில் வண்டி நின்றது. உடனே துப்பாக்கி ஏந்திய பொலிஸ் படையினர் பலர் கூட்டாக வண்டிக்குள் ஏறினர்.துரிதமாகச் செயற்பட்டு தோழர்களோடு வண்டியைவிட்டு நான் கீழிறங்கினேன். படையினரை ஏமாற்றிய வண்டி கிளம்பிற்று.

நாங்கள் பேரூந்தில் ஏறி குருநாகல் நகரை வந்தடைந்தோம்.அங்கிருந்து வேறொரு பேரூந்தில் பொலன்னறுவை நகருக்கு வந்தோம். எங்களுக்கா படையினரை ஏமாற்றத் தெரியாது? பொலன்னறுவையில் இருந்து மீண்டும் தொடரூந்தில் ஏறி எந்த தொந்தரவுகளுமின்றி மட்டுநகர் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். "கோச்சில எந்த பயங்கரவாதிகளும் பயணிக்கவில்லை."
மட்டக்களப்பு நிலையத்தில் இறங்கி கடவைகளைக் கடந்து பின்னால் செல்லும் பாதைகளூடாக நடந்து பார் வீதியில் இருந்த தோழர் கண்ணனிடம் மலையகத் தோழர்களை "பாரப்படுத்திவிட்டு" நான் நடந்தே மறைந்தேன். தொடரூந்துப் பயணத்தில் எஞ்சின்கள் மாறும், பெட்டிகள் மாறும், இலக்குகள் மட்டுமே மாறாது. இனி மீதியை கண்ணன் பார்த்துக்கொள்வார். கண்ணன் கச்சிதமாகச் செயற்பட்டு மலையகத் தோழர்களை ஆயுதப் பயிற்சிக்காக ஈரோஸின் பாவற்கொடிச்சேனை முகாமுக்கு அனுப்பி வைத்தார்.
11
தோழர் கண்ணன் 1990 இல் ஈரோஸ் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட போது செய்வதறியாது திணறினார். ஆனாலும், அவசரமாக சுதாகரித்துக் கொண்டு பரம்பரையினரின் ஏடுகளைக் கையிலேந்தி ஆயுர்வேத வைத்தியத்தைக் கற்றுத் தேர்ந்தார். இலங்கை அரச ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தின் பரீட்சை எழுதி சித்தியடைந்தார்.தமது மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான வளவுக்குள் மூலிகைச் செடிகளை நட்டு பெரிய தோட்டத்தை உருவாக்கி வைத்தியத்தை சமூக சேவையாக செய்யத் தொடங்கினார். ஆங்கில வைத்தியத்தால் கைவிடப்பட்டவர்களை சவாலாக ஏற்று பலரைக் குணமாக்கினார். கிழக்கு முழுக்க அவரது புகழ் பரவியது. தமிழ் முஸ்லிம் மக்கள் அவரைச் சூழ்ந்தனர். நிறைவாக சேவை செய்தார். தம்மைச் சந்திக்க வருவோர்க்கு இயற்கை உணவை உட்கொள்வதற்கான ( Organic food) ஆலோசனைகளையும், மற்றும் மனோவலிமைக்கான உளவளப் பயிற்சிகளையும் வழங்கினார். விரைவில் செத்தும் போனார். மட்டக்களப்பில் கண்ணனின் மகளுக்கூடாக இன்னும் வாழ்கிறது அவரது வைத்தியமும், ஆலோசனைகளும். ஆம் இவரது மகள் இப்போது ஆயுர்வேத வைத்தியராக அப்பாவின் இடத்தை நிரப்பி பணி புரிகிறார்.

நான் மலைகத்தில் இருந்து புரட்சிகரமான செயல்களைப் பயிற்றுவிக்க மட்டக்களப்புக்கு அழைத்து வந்த தோழர் தினேஷ் கண்ணனின் தங்கையை திருமணந்து பார் வீதியில் வாழ்கிறார். விதைகளை நீரூற்றுக் கிடைக்கும் இடத்தில் பதியமிட்டால் அவை முளைக்கத்தானே செய்யும்.வளர்ந்து வளத்தை வழங்கத்தானே செய்யும்.
12
தோழர் கணேஷ் 1986 இறுதிக்காலத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துவிட்டார். மீண்டும் கணேஷோடு மலையேறினேன்.1987 ஜனவரி முதல் வாரத்தில் ஹற்றன் சோமசெட் தோட்டத்தின் கணக்கப்பிள்ளையின் வீட்டின் தொடர்பை கணேஷ் நீண்ட காலமாகப் பேணியிருந்தார். இம்முறை கணேஷ் இந்த வீட்டாரை எனக்கு அறிமுகப்படுத்தி என்னையும் அங்கு தங்கவைத்தார். கணேஷ், கண்டி திகண உடிஸ்பத்துவத் தோட்டத்தில் பிறந்து, கலகெதரவில் கல்வி கற்றிருந்தாலும் சிறை செல்வதற்கு முன்பு நுவரெலியா எங்கணும் இயக்க வேலைகள் செய்து பல இடங்களில் தொடர்புகளைப் பேணியிருந்தார். மறைந்த அமைச்சர் சந்திரசேகரம் தொழிலாளர் காங்கிரசில் முக்கிய தொழிற்சங்கப் பிரமுகராக இருக்கையில் கணேஷ் அவருடன் பல தடவைகள் ஈரோஸ் பற்றி விளக்கமாக உரையாடியிருந்தார். சந்திரசேகரத்துக்கு காங்கிரசுடன் முரண்பாடுகள் ஆழப்படத் தொடங்கிய காலத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபர் என நடித்து அவரை நேர்காணல் கண்டு அவரது நாடியோட்டத்தை அறிந்து ஈரோஸின் பக்கம் ஈர்க்க முயன்றிருக்கிறேன். ஈரோஸின் கொள்கை போட்பாடுகள் பற்றி ஏற்கனவே கணேஷ் மூலம் அனிந்திருந்த இவர் இக்காலத்தில் ஈரோஸ் ஆதரவாளராக மாறியிருந்தார். அவ்வருடம் தொழிலாளர் காங்கிரஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் சந்திரசகரம் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு அந்தக் கூட்டத்தில் ஆரவாரமான தனித்துவக் கோசங்களை எழுப்பிய வண்ணம் போய் ஏறினார். சூழ்நிலையை அவதானித்து இயக்கத்துக்கு அறிக்கையிடுவதற்காக இக்கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். இந்நிகழ்வுக்குப் பின் சந்திரசேகரத்தார் தனிக்கட்சி தொடங்கி விட்டார்.இவரின் வலது கரமாகவும், தத்துவாசிரியருமாக தோழர் காதர் செயற்பட்டார். காதர் தமிழ்நாட்டில் இருந்த போது எழுதிய "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம்" என்ற மலையக மக்கள் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை ஈரோஸின் பொதுமை வெயீட்டகம் பதிப்பித்து வெளியிட்டிருந்தது. சென்னையில் கண்ணன் என்ற பெயரில் இயங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் யோகராசாவின் அச்செழுத்து தோற்றுப்போகும் அழகிய கையெழுத்தாலான இப்புத்தகப் பிரதியைப் படித்திருக்கிறேன்.

இடையில் சந்திரசேகரம், ஏனோ தெரியவில்லை புளட் இயக்கத்துடன் உறவாடத் தொடங்கினார். இதனால் ஈரோஸ் இவரில் இருந்து கொஞ்சம் விலகி நின்றது. இந்த நிலைமையினால் 1989 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகரத்தை, தோட்டங்களில் ஆழக் காலூன்றி நின்று அகலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஈரோஸ் இரகசியப் பிரச்சாரத்தின் மூலம் தோற்கடித்தது. பின்னர் ஈரோஸ், பாடசாலை அதிபராக இருந்த தனது ஆதரவாளரான மறைந்த இராமலிங்கத்தை தேசியப் பட்டியல் மூலம் மலையக மக்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக்கியது.
ஒரு வாரமளவில் சோமசெட் தோட்டத்தில் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டபின் இரண்டாவது வாரம் கணேசைவிட்டுப் பிரிந்து தனியாக நான் நுவரெலியா வந்தேன். மீண்டும் முன்பள்ளி ஆசிரியையின் வீட்டில் தங்கியிருந்து நுவரெலியாத் தோழர்களோடு இணைந்து வேலைகளில் ஈடுபட்டேன். 1987 ஜனவரி 14 ஆம் நாள் மாலை கடுங்குளிரில் நடுங்கியபடி ஆசிரியையின் வீட்டு விறகு அடுப்பில் கைகளைச் சூடேற்றிக் கொண்டடே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அன்றைய மாலைச் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தேன். செய்திகள் முடிவடைந்ததும், மரண அறிவித்தல் வந்தது. அதில் ஏறாவூரைச் சேர்ந்த மீராசாஹிப் என்பவர் இன்று காலமானார். ஆசிரியரான இவர் செய்த்தூன் பீவியின் கணவரும், ஆயிஷா ரமீஷாவின் தகப்பனும்.... ஆவார் என்று சொல்லப்பட்டது.எனது இரத்த ஒட்டம் அதிகமாயிற்று. மீராசாஹிப், தோழர் றகுமானின் மூத்த சகோதரியின் கணவனாகும்.எனது நெருங்கிய உறவினராகவும், தோழர்களுக்கு உதவுபவராகவும் இருந்த இவர் இளமையில் மரணத்தைத் தழுவியது எனக்கு பெருந்துயரைத் தந்தது. அடுத்த நாள் அதிகாலை புறப்பட்டு வழமையான வழிகளினூடாக வாகனங்களிலும் நடையுமாக ஏறாவூரை அடைந்து, நள்ளிரவில் மரணவீட்டுக்குள் பிரவேசித்தேன். கண்டவுடன் சத்தமிட்டு அழத்தொடங்கிய குடும்பத்தாரை பொறுமையாக இருங்கள் இல்லாவிட்டால் நான் இங்கு வந்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். தகவல் பாதுகாப்புப் படையினர் வரை சென்றால் எனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கூறி அவர்களை அமைதி காத்தேன். 

நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும் வானொலிச் செய்தி கேட்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நடந்த மரணத்தை உங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மரண அறிவித்தலை வானொலிக்குக் கொடுத்தோம் என்று அங்கிருந்த தோழர் றகுமான் கூறினார்.

அன்று
அதிகாலை வெளிக்கிட்டு ஈரோஸின் உறுதியான கிராமத் தளமான தன்னாமுனைக்கு நடந்து போய்ச் சேர்ந்தேன். மதியம் தோழர்கள் விஜி, கவி ஆகியோரும் நானும் தோணியில் மட்டக்களப்பு ஆற்றைக் கடந்து படுவான்கரை விளாவட்டவானுக்குச் சென்றோம்.மீராசாஹிப் ஆசிரியர் என் மனதோடே பயணித்தார். மீண்டும் நான் வேலைகளில் தீவிரமாக இறங்க மீராசாஹிப் என் மனதில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார். மச்சானின் மரணம் நிகழ்ந்து ஒரு வாரத்தில் றகுமான் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இச்செய்தி குடும்பத்தினருக்கும் எனக்கும் வேதனையை இரட்டிப்பாக்கியது. பாவற்கொடிச் சேனையில் இருந்து கன்னன்குடா வழியாக மட்டக்களப்பு எருமைத் தீவைத் தோணியில் கடந்து போவது எனது திட்டமாக இருந்தது. ஆனால் நான் ஒரு யமஹா ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளில் தனியாகப் போவதை அவதானித்த வான்படையின் உலங்கு வானூர்தி தாழப்பறந்து என்னை நோக்கி HMG என்ற பாரிய ஆயுதத்தால் தாக்கியது நான் மோட்டார் சைக்கிளை கீழே கிடத்திவிட்டு ஒரு பனை மரத்தின் கீழே ஒதுங்கினேன். இதனைத் தொலைத் நோக்கியூடாகப் பார்த்த மேலிருந்த சிப்பாய் பனை மரத்தை நோக்கிச் சுட்டார் மரத்தின் வட்டு பிழந்தது. நான் படுத்து உருண்டு அங்கே இருந்த சிறிய கொன்க்றீட் பாலத்தின் கீழே புகுந்துகொண்டேன். சுற்றிவர சரமாரியாகச் சுட்டுவிட்டுப் வட்டமடித்துப் பறந்து சென்றது உலங்கு. நான் வெளியில் வந்து, நகரையடைந்து மீண்டும் ஏறாவூர் வந்தேன்.
13
சில நாட்களில் மூதூர் சோமண்ணையும், நானும், யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தோழர் முருகனும் வெருகல் ஊடாக நடந்து கிளிவெட்டியை அடைந்து அங்கிருந்து மூதூர் சென்றோம். மல்லிகைத் தீவில் ஒரு நாள் இரவு தங்கி அடுத்த நாள் சோமண்ணையின் வழிகாட்டலில் புல்மோட்டைக்குச் சென்று கடல் மார்க்கமாக முல்லைத்தீவு சென்றோம். அங்கே ஈரோஸ் முகாமில் சிறிது நேரம் தரித்த பின் வடமராட்சிக்குப் பயணமான நாம் நடுநிசியில் நெல்லியடியில் இறங்கினோம். அங்குள்ள ஈரோஸ் காரியாலயத்திலிருந்த தோழர்கள் எம்மை வரவேற்று அழைத்துச் சென்றனர். எமக்கு எல்லையில்லாப் பசி எடுத்திருந்தது. காரியாலயத்திலும் அந்நேரம் உண்ண எதுவுமில்லை.எங்கள் நிலையைப் பார்த்த தோழர்கள் சாமம் என்றும் பாராது பக்கத்து வீடுகள் இரண்டைத் தட்டி எழுப்பி சோறும் மீன் குழம்பும் கொண்டு வந்தனர்.இரவுணவை முடித்து தூங்கி நீண்ட நேரமானதனால் அந்த வீடுகளிலும் எஞ்சியிருந்த கொஞ்ச உணவையே வழங்கினார்கள். மீன்குழம்புக்குள் மீன் துண்டுகள் இருக்கவில்லை. குழம்பை சோற்றில் விட்டு சாப்பிட்டோம். குழம்புக்குள் சிதிலமாகி ஒரு பெருவிரல் நகத்தின் பிரமாணத்தில் கிடந்த மீன் சதை எனது உணவுத் தட்டுக்குள் தட்டுப்பட்டது, அதை எடுத்து நுணைத்தேன். ஆஹா அதுபோலொரு சுவையான மீன்குழம்பை இந்த 31 வருடமாக எங்கும் உண்டதில்லை நான். உப்பு, புளி,உறைப்பு எல்லாம் கன கச்சிதமான அளவுத்திட்டத்தோடு பாவிக்கப்பட்டு ஊறி சுவை ததும்பிய ஒரு குழம்பை இன்னும் தேடுகிறேன்! அதிக பசி அந்த சுவைக்கான காரணமாக இருக்கும் என்று நண்பர்கள் பலர் அபிப்பிராயப்பட்டனர்.அப்படியாயின் இதன் பின்பும் அதீத பசியிலிருக்கும் போது மீன் குழம்பும் முழு மீன் துண்டும் உண்டிருக்கிறேன், இதிலெல்லாம் நெல்லியடி உருசி வரவில்லையே! 

அடுத்த நாள் நாம் மூவரும் யாழ்நகர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அமைப்பின் தலைமைக் காரியாலயத்துக்கு வந்தோம். முருகன் கல்வியங்காட்டில் உள்ள தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையைக் காண வீட்டுக்குச் சென்றுவிட்டார். சோமண்ணையும் நானும் யாழ் திருநெல்வேலியில் இருந்த ஈரோஸின் மணவர் அமைப்பான 'கைஸ்' (GUYS) இன் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நின்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் ஜெமீலைச் சந்தித்து அளவளாவினோம். பின்னேரம் ஐந்து மணிபோல் பாலகுமாரன் அண்ணன் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக, நான் கிளம்பி மிருசுவில்லில் அமைந்திருந்த இயக்கத்தின் பண்ணைக்குப் போனேன். அங்கிருந்த தோழர்களோடு எனது மலையக அனுபவங்களைப் பகிர்ந்தேன். மேலும் அந்த இரவின் பெரும் பகுதியை அரசியல் நிலைவரங்களையும், இயக்கங்களுக்கிடையிலான முரண்களையும் பேசியபடி கழித்தோம். 

விடிந்ததும் புறப்பட்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் முகைதீன் மௌலவியையும் அவரது குடும்பத்தையும் பார்ப்பதற்காக கொண்டாவிலில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வந்தேன். அவர்களோடு பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிக் களித்தேன்.அடுத்த நாள் முருகன் வந்து என்னை அவரது வீட்டுக்கு அழைத்துப் போனார்.

முருகன் மலையக வேலைத்திட்டங்களைப் பார்க்க விரும்பினார்.இரண்டு நாட்கள் கழிந்து நானும், முருகனும் யாழிலிருந்து கொழும்பு ஊடாக நுவரெலியா சென்றோம்.

தோழர் முருகன் தேர்ந்த வாசகர்,புதுக்கவிதைகளில் நாட்டமுடையவர், மக்கள் நேசன், என்னோடு நிறையப் பேசுகிறவர்- தோழமைகயைக் கடந்தும் பாசத்தைக் கொட்டியவர். 1989 ஆம் ஆண்டு ஏறாவூரில் எமது வீட்டில் தங்கியிருந்த முருகனும், திருமலையைச் சேர்ந்த சிரேஷ்ட தோழர் கஜனும் செங்கலடியை நோக்கிப் போகையில் காணாமலாக்கப்பட்டார்கள். இது நடந்ததைக் கேள்வியுற்றவுடன் கொழும்பில் இருந்த நான் அவசரமாக ஊர் திரும்பினேன். ஏனைய தோழர்களோடு இணைந்து இவர்களை மும்முரமாகத் தேடினேன். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் செங்கலடி போகும் வழியில் ஏறாவூர் செங்கலடி எல்லையில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவத்தின் ( TNA) அலுவலகத்தில் இருந்தவர்கள் இவர்களை வழி மறித் கடத்திச் சென்று கடற்கரையோரமாகக் கொன்று புதைத்துவிட்டனர் என்ற தகவல் மக்களிடமிருந்து இரகசியமாக எமக்குக் கிடைத்தது. இந்தக் கொலைகளை தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தாஸ் என்பவன் செய்ததாகப் பின்னர் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
14
நானும் முருகனும் நுவரெலியா, ஹற்றன், கண்டி பிரதேசங்களில் உள்ள தோழர்களைக் கட்டங்கட்டமாகச் சந்தித்து உரையாடினோம். முருகனை அதிகமாப் பேசவிட்டோம். அவர் தனது அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்தார்.முருகன், தேசியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மறைந்த வெள்ளையன் பற்றி பெருமதிப்பு வைத்திருந்ததை அவரது மலையகத் தோழர்களுடனான கருத்துப் பரிமாறல்களின் போது கவனித்தேன். வெள்ளையனின் நூறாவது பிறந்தநாள் அண்மிக்கிறது. இந்நேரத்தில் கதை பகிர முருகன் இல்லையே!

இக்காலத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றிய செய்திகள் ஊடகங்களை நிறைத்திருந்தது.

முருகன் ஒப்பந்தம் நிறைவேறும் என்பதில் அவ்வளவாக நம்பிக்கை வைக்கவில்லை, ஒப்பந்தம் இடம்பெற்றாலும் மலையக வேலைத்திட்டங்கள் மேலும் வேகத்துடன் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று முருகன் தோழர்கள் மத்தியில் வேண்டிக்கொண்டார்.

ராஜிவ் காந்தியின் கொழும்பு வருகையும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் நாங்கள் மலையகத்தில் நின்ற போதே நடந்தது. ஒப்பந்தத்தில் அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளமையைக் கருத்தில் எடுத்திருந்தோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாம் நாள் நாமிருவரும் கொழும்புக்கு வந்து மருதானை பஞ்சிகாவத்தைப் பகுதியில் ஒரு சிறிய விடுதியில் தங்கியிருந்தோம். ஒப்பந்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இவ்வன்முறை தமிழர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற ஐயம் எமக்கிருந்தது. ஆயினும் கொழும்பு எங்கணும் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதையும், அரச பேரூந்துகளுக்குத் தீ வைப்பதையும் வீதியின் மருங்குகளில் நின்று பார்த்தோம். இந்த வன்முறைகளில் இளம் தேரர்களும் பங்குபற்றியதைக் கண்டோம், அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் வன்முறையாளர்கள் ஜே.வி.பி யைச் சேர்ந்தவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் சிலர், இளம் தேரர்கள் போல் தெரிபவர்கள் உண்மையில் தேரர்களல்ல அவர்கள் மொட்டையடித்துக் காவி அணிந்து தேரர்கள் போல் வேசமிட்ட ஜேவிபி உறுப்பினர்கள்தானோ என்றும் சந்தேகப்பட்டனர். ஆனால் அக்காலத்தில் தேரர்கள் ஜேவிபியில் உறுப்பினர்களாகவும் இருந்தனர், மட்டுமல்ல இலங்கையில் தேரர்கள் பல சந்தர்ப்பங்களில் வன்முறகளில் ஈடுபட்ட வரலாறும் உண்டு என்று விடுதி திரும்பியதும் முருகன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கொழும்பில் மேலும் தங்குவது உசிதமல்ல என்று நினைத்த நாங்கள் அடுத்த நாள் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் புண்ணியத்தில் பகிரங்கமாக மட்டக்களப்புக்குப் பிரயாணமானோம். பாதுகாப்பாக மத்திய வீதிக் காரியாலயத்தை அடைந்தோம்.
15
இதன் பின் இந்திய இராணுவத்தால் கைது, இலங்கை அதிரடிப்படையால் கைது என்பனவும், இந்தியப் படைக்கும் புலிப்படைக்கும் இடையிலான யுத்த நெருக்கடி காலத்தில் மட்டக்களப்பில் நிற்கவேண்டிய அவசியம், எனக்கும் ராணிக்கும் திருமணம் நடந்தேறியமை, ஈரோஸ் பங்குபற்றாவிட்டாலும் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் கூர்மையான அவதானிப்புத் தேவைக்காக கிழக்கில் நிற்கவேண்டியிருந்தமை, யாழ்ப்பாணத்தில் 29 நாட்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்ற ஈழந்தழுவிய முக்கிய தோழர்கள் பங்கு கொண்ட மாநாட்டில் பங்குபற்றியது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றமை ஆகிய காரணங்களால் என்னால் மலையகத்துக்குச் செல்ல முடிந்திருக்கவில்லை. அதனாலென்ன, ஈழப் புரட்சி அமைப்பு மலையகத்தில் பதியமிட்ட விதைகள் முளைத்து மரமாகிக் கிளைபரப்பி நின்றன.1988, 1989 ஆகிய இரண்டு வருடங்கள், மே தினம் மலையக ஈரோஸ் தோழர்களால் ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் மேடையமைத்துக் கூட்டமிட்டுக் கொண்டாடப்பட்டது. ஈழப்போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சம பங்காளிகள் என்று தத்துவ ரீதியாக நிரூபணம் செய்த ஈரோஸின் நிறுவுனர் தோழர் இரத்தினசபாபதி 1989 ஆம் ஆண்டைய மே தினக் கூட்டத்தில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

1990 ஆம் ஆண்டு நோர்வூட்டில் ஈரோஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் கொட்டும் மழையிலும் அணி திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினேன். எத்தனையோ மேடைகளிலும், அரங்குகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியிருக்கிறேன். ஆனாலும், நோர்வூட் மே தின மேடையில் உரையாற்றிய போது எனக்கிருந்த உச்சந்தொட்ட மனவுணர்வையும், நிறைவையும் வேறெந்த மேடைகளிலும் நானடையவில்லை. நான் பேசிக்கொண்டிருந்த வேளை மேடையின் முன்னால் வந்து நின்று தோழர் கணேஷ் இன்னும் பேசு, இன்னும் பேசு என்று என்னை ஊக்கப்படுத்தியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

மே தினக்கூட்டம் முடிவடைந்ததும் இரவோடிரவாக நானும் இரண்டு தோழர்களும் கொழும்பை நோக்கி காரில் பயணித்தோம். எமது நூறுக்காக்கா வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்த போது இடை நடுவில் வைத்து "தம்பி பிறேக் வேலை செய்தில்ல" என்று பதட்டத்துடன் கூறினார். வளைவுகளும் நெளிவுகளும் நிறைந்த மலைப் பாதைப் பயணம், என்ன செய்வதென்றே தெரியவில்லை." மெதுவாக ஓரமாக நிறுத்துங்க காக்கா" என்றேன். அவ்விடத்தில் இருந்து நான் சாரதியாகி மெல்ல மெல்ல அவதானமாக பிறேக் இல்லாமலே வண்டியை ஓட்டிக்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தோம்.
16
எம்பியாகிய பின்னர் தும்பியாகிப் பறந்த கதை சுவாரசியமானது. 
ஈரோஸின் அலுவலகம் இல: 39, பகதல வீதியில் அமைந்திருந்தது. 1990 இல் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் உரசல்கள் தொடங்குமாப் போல் இருந்த காலத்தில் பிரேமதாச அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதானத் தரகராகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.சீ.எஸ் ஹமீதுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல் செய்வதற்கான ஏற்பாட்டை ஈரோஸ் செய்து கொடுத்தது. கொழும்பு பகதல வீதி அலுவலகத்தின் பாதாள அறையில் சக்திவாய்ந்த தொலைத் தொடர்பு சாதனத்தை வைத்திருந்தோம். அக்காலத்தில் கைத் தொலைபேசிகள் பாவனையில் இருக்கவில்லை. புலிகளிடம் சட்டர்லைட் தொலைபேசி வசதியும் இருக்கவில்லை. ஆனால் புலிகளிடமும், அரசாங்கத்திடமும், ஈரோஸிடமும் வயர்களற்ற தொடர்பு சாதனம்(wireless Communication set) இருந்தது. புலிகள் அரசாங்கத்தின் சாதனங்களூடாகப் பேச விரும்பவில்லை. ஆகவே, ஹமீட் அவர்கள் புலிகளுடன் தொடர்பாட ஈரோஸ் தனது சாதனத்தைக் கொடுத்து உதவியது.அமைச்சர் 70 வயதை எட்டியிருந்த காலமது. அவரை நான் கைகளில் பிடித்த வண்ணம் கீழே மேலே மறுபடியும் கீழே மேலும் கீழே பின்னர் மேலே இன்னும் கீழே என்று பல தடவைகள் அழைத்துச் சென்று புலிகளும் அரச பிரதிதிதி ஹமீட்டும் பேசுவதற்கு உதவியிருக்கிறேன். அமைச்சர், ஜனாதிபதி பிரேமதாசாவின் அனுமதியுடன்தான் பேசுவதற்கு வந்தார்.அவர் மரப் படிக்கட்டுகளில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி மேலும் இறங்கி ஏறி இறங்கும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதைப் பார்க்கையில் எனக்குக் கவலையாக இருக்கும். ஹமீட் இறுதியாகப் புலுகளுடன் நேரடியாகப் பேச விரும்பி உலங்கு வானூர்தியில் வடக்கு சென்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதாக கொழும்புக்குத் தகவல் கிடைத்த வண்ணமிருந்தது. அன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் எம். எச் முஹம்மத் பாதுகாப்பாகக் கொழும்பு திரும்பவேண்டும் என்று பகிரங்கமாக வேண்டினார். ஹமீட்டைப் புலிகள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இவை நிகழ்வதற்கு முன்பு பாலகுமாரன், பரராஜசிங்கம்(பரா) ஆகியோரும் இன்னும் சில சில தோழர்களும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர். பாலா அண்ணன் யாழ் சென்று சில நாட்களில் ஈரோஸ் யாழ் காரியாலயத்தில் வைத்திருந்த இதே வகையான தொடர்பு சாதனமூடாக கொழும்பு அலுவலகத்துக்குப் பேசி ஈரோஸின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவிகளைத் துறக்குமாறு கடுமையான தொனியில் கூறினார். அடுத்த நாளே அனைவரும் இராஜினாமாச் செய்தோம். பின்னொரு நாள் பாலா அதே தொலைத் தொடர்பூடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உடனடியாக அனைவரும் கிளம்பி யாழ்ப்பாணம் வருமாறு "கட்டளையிட்டார்" பதவிகளைத் துறந்த பெரும்பாலானவர்கள் சாதனத்தின் முன்னால் எதுவும் பேசாமல் தொடைகள் நடுங்க நின்றிருந்தனர். அல்பா போர் ( Alpha four) எங்கே என்று கர்ச்சித்தார். சுற்றியிருந்தவர்கள் விழி பிதுங்கி நின்றனர். தொடர்பு சாதனத்தினூடாகப் பேசும்போது ஆளடையாளத்தைக் காட்டாத வகையிலான என்னக்குரிய குறியீட்டுச் சொல் அது. தொடர்பு சாதனத்தின் இயக்கத்துக்குப் பொறுப்பாய் இருந்த தோழர் எனது முகத்தைப் பார்த்தார்.

ஒம் அண்ணே!- நான்

என்ன செய்யிறா அங்க இவ்வளவு நாளும்! எல்லாரையும் கூட்டிட்டு இங்க வா- பாலா

அண்ணே இங்க கொழும்புல பாதுகாப்பில்லாம 112 தோழர்கள் நிக்கிறாங்க நானெப்பிடி இவங்கள இங்க விட்டுட்டு வாறது? - நான்

பாலா பக்கமிருந்து சத்தமில்லை அவரின் தோழமையுணர்வும் மனிதாபிமான மனதும் அழுவதை நானுணர்ந்தேன். எனது கண்கள் கொஞ்சம் பனித்தன, அண்ணே நீங்கள் வடக்கு சூழலின் அழுத்தத்திற்கு ஏற்ப செயல்படுங்கள், நான், இங்கு தோழர்களின் பாதுகாப்பைக் கையாளுகிறேன் என்று சொன்னேன். தொடர்பு அறுந்தது. இதனை பாலாவின் அங்கீகாரமாகக் கருதி செயல்படலானேன்.

பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா பயணமானார்கள். நான் கொழும்பில் நின்றேன். மீண்டும் நாடாளுமன்று புகுந்தேன். மீண்டும் நாடாளுமன்ற உறுப்பிரானதன் நிமித்தம் எனக்கு அரசு தந்த ஜீப்பை விற்றுவிட்டு கொழும்பு அலுவலகத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற தோழர்களில் அநேகரை, தோழர் சுதா மாஸ்டரும் நானும் இணைந்து தாய்லாந்துக்கு அனுப்பினோம். அங்கே உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபை (United Nations Human Rights Council) அலுவலகத்தில் அவர்கள் தம்மை அகதிகளாகப் பதிவு செய்தனர்.சொற்ப காலத்தில் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அச் சபையால் அனுப்பிவைக்கப்பட்டனர். 

இக்காலத்தில் நான் முன்பு நுவரெலியாவில் தங்கியிருந்த முன்பள்ளி ஆசிரியை ஏதோ ஒரு தேவை நிமித்தம் எமது கொழும்பு அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தோழர்கள் அவர்களை பசீர் எம்பியை சந்தியுங்கள் என்று என்னிடம் அனுப்பிவைத்தனர். நானும் எனது மனைவியும் அந்த அலுவலகத்தில்தான் தங்கியிருந்தோம். என்னை வந்து கண்ட அவர்கள், இது எங்க சியாம் அண்ணனல்லவா என்று சத்தமிட்டவாறு ஒடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தனர். எனது இயற்பெயர் பஷீர் என்பதும் நான் ஒரு முஸ்லிம் என்பதும் அன்றுதான் அவர்களுக்குத் தெரியவந்தது.

1990 ஆம் ஆண்டு இயக்கம் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட பின்னரும் மலையகத் தோழர்களுடன் தத்துவார்த்தத் தொடர்பாடலை வைத்திருத்தோம்.

இன்று ஈரோஸ் மலையகத்தில் மீளமைக்கப்பட்டு ஈழவருக்குத் தலைமை தாங்கும் தகுதியோடு இயங்குகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?


இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல கட்சி முக்கயஸ்தர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை ரூபாயில் சராசரியாக நாளொன்றுக்கு 500 வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பின்தங்கியுள்ளனர்.

  • "நான் தமிழன்... விடுதலைப் புலிகள் தோற்க வேண்டும் என்று நினைத்தேன்"
  • இலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்


இலங்கையின் பொருளாதாரத்தில், தேயிலை, ரப்பர் தொழில் அதிக வலு சேர்த்துள்ளது. அதிகளவிலான அந்நியச்செலாவணியையும் பெற்றுத் தருகிறது.

நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இந்த சம்பளத் தொகைத் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று, தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகிறது. ஒவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் காலப்பகுதி வரும் போதும் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

யார் இந்த மலையகத் தமிழர்கள்?

1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.

1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.

1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.

வரும்வழியும், வந்துகுடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.

இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் - மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

(மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்)

காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

நாடற்றவர்களான மலையகத் தமிழர்

1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 - 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.

  • `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை
  • திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி 

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.

மலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா - சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.

போராட்டமும், அரசியல் அங்கீகாரமும்

கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட - தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய "நாடற்றவர்களாக" கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் "நாடற்றவர்" என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்" புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் - விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுடத்தது.

வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்

1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது, பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேர,காலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் கரிசணை

மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டுள்ளது.

இதற்காக பல மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன், மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.

மாறிவரும் மலையக சமூகம்

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.

வளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும், கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.

நன்றி - பி.பி.சி

ஆயிரம் ரூபா இல்லாவிட்டால் கூட்டொப்பந்தம் தேவையில்லை : தொழிலாளர்கள் கூறுகிறார்கள்


ஒரு நாளைக்கு எமக்கு அடிப்படை சம்பளமான 500 ரூபாவே கிடைத்து வருகின்றது இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அது குறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு இத்தனை காலமும் அது குறித்து பேச எந்த தொழிற்சங்கங்களும் எம்மைக் காண வந்ததில்லை இம்முறை எமக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இல்லாவிடின் இந்தக் கூட்டு ஒப்பந்தமே எமக்குத்தேவையில்லை என்கின்றனர் தொழிலாளர்கள். கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தோட்டத்தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது குறித்து அட்டன் பிரதேச தேயிலைத்தோட்டங்களில் கடமையாற்றும் பெண் தொழிலாளர்கள் சிலரை சந்தித்தபோது அவர்கள் கூறிய கருத்துகள் இங்கு தரப்படுகின்றன.


பிரமிளா
ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இது வரை அதைப்பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்களுக்கு திராணியில்லை. எல்லாம் அடங்கலாக எமக்கு 730 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்து வருகின்றது என்று கூறுவது பொய்யாகும். அந்தத் தொகைக்கு அவர்கள் ஒப்பம் வைத்திருப்பார்கள். ஆனால் எமக்கு அப்படிக் கிடைப்பதில்லை.ஏனென்றால் நாம் ஒரு நாளைக்கு 19 கிலோ எடுத்தால் மட்டுமே ஏனைய கொடுப்பனவுகளும் சேர்த்து அத்தொகை கிடைக்கும். கொழுந்தில்லாத காலங்களில் 10 கிலோ எடுப்பதே கடினம். அந்நாட்களில் அடிப்படை சம்பளமான 500 ரூபா மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல வேலை நாட்களும் 10 அல்லது 15 நாட்களே இருக்கும். இப்போது பாருங்கள் எங்களது சம்பளத்தொகையை ? இதை வைத்துக்கொண்டு எங்ஙனம் சீவிப்பது? பிள்ளைகளின் கல்வி ,ஏனைய செலவுகள் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது? இம்முறை எங்களுக்கு எப்படியாவது ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும். இல்லாவிட்டால் எமக்கு கூட்டு ஒப்பந்தமே வேண்டாம். வேறு எந்த முறையிலாவது எமக்கு சம்பளத்தைப்பெற்றுத்தாருங்கள்.

பி.அம்பிகா
இங்கே பாருங்கள் தேயிலை பறித்துப் பறித்து கைகள் காயமடைந்து விட்டன. அதனால் துணியினாலான கையுறை அணிந்து கொழுந்து பறிக்கிறேன். வேறு வழியில்லை. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே. எமது நிலைமை ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்துபவர்களுக்குத்தெரியாதே? கொழுந்து குறைந்த காலத்திலும் 19 கிலோ எடுத்தால் மட்டுமே முழுப்பேர் கிடைக்கின்றது. 15 அல்லது 16 கிலோ எடுத்தாலும் முழுமையான கொடுப்பனவு எமக்கில்லை மேலதிக கொழுந்துக்குக்கிடைக்க வேண்டிய தொகையும் கிடைப்பதில்லை. நாட்டில் எல்லோருக்கும் ஒரே விலைவாசி தானே எமக்கு மட்டும் பொருட்களை குறைந்த விலைக்கா தருகிறார்கள்? வருடக்கணக்காக தொழிற்சங்கங்கள் நடத்துகிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஒரு 50 ரூபாவை கூட்டித்தருவதற்கு முடியவில்லையே ஆனால் இத்தனை காலமும் எமது சந்தாப்பணத்தை வேண்டாம் என்றும் கூறியதில்லை. எமது தலைவிதியை நினைத்துத் தான் வெயிலிலும் மழையிலும் கடினப்பட்டு வேலை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் எவரும் கண்டு கொள்வதில்லை.

உமாதர்ஷினி
எனக்கு 18 வயதாகின்றது. சாதாரண தரம் வரை படித்து விட்டு வீட்டு வறுமை காரணமாக இத்தொழிலுக்கு வந்து விட்டேன். தந்தைக்கு நோய் காரணமாக வேலை செய்ய முடியாது.அண்ணா தொழில் செய்கிறார். தம்பி படித்துக்கொண்டிருக்கிறார். இனி எனது காலம் முழுக்க இந்தத் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் எம்போன்று சாதாரண மற்றும் உயர்தரம் படித்து விட்டு தோட்டங்களை விட்டு வெளியே போக முடியாத சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்கு இங்கேயே இருக்கும் ஒரே தொழில் இது மட்டும் தான். வேறு தொழில்கள் பற்றி அவர்களும் சிந்திப்பதில்லை.

சாந்தகுமாரி
எனக்கு 3 பிள்ளைகள். அவர்களை படிக்க வைக்க வேண்டும். மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்தால் தான் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அதுவும் 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே முழு கொடுப்பனவும் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதி, ஏனைய கொடுப்பனவுகள், முன்பணம் எல்லாவற்றையும் கழித்துப்பார்த்தால் மாதம் 6 அல்லது 5 ஆயிரம் தான் மிஞ்சுகிறது இதை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் என்ன தான் செய்ய முடியும்? தொழிலாளர்கள் இல்லை என்கிறார்கள். சரியான சம்பளம் இல்லாததால் தானே எல்லோரும் வெளி வேலைக்குப்போய்விட்டனர்? இப்படியே போனால் தோட்டங்களை இழுத்து மூட வேண்டியது தான்.

யோகலட்சுமி
கோதுமை மா விலை அதிகரித்து விட்டது. அரிசி கிலோ 100 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகிறது. இந்த நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஏனையோருக்கு கிடைக்கும் நிவாரணமும் உதவியும் ஏதோ எமக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்த நேரம் ஏதோ கத்துவார்கள். பின்பு அவர்களுக்கு விருப்பப்பட்ட ஒரு தொகைக்கு கையெழுத்திட்டு அமைதியாகி விடுவார்கள்.எப்போதாவது இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் எங்களிடம் வந்து இத்தொகை போதுமா என்று கேட்டிருக்கின்றார்களா? ஆனால் வெட்கமில்லாது கூட்டத்தோடு கூட்டமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து என்ன தான் எமக்குக்கிடைத்தது? காணி, வீடு எமக்குத்தேவை வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அதில் வசிப்பதற்கு வாழ்வாதாரம் தேவை தானே?

இதே வேளை சில தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதியம் பெற்றவர்களையும் தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை முக்கிய விடயம்.

இவர்களும் 20 கிலோ வரை நாள் ஒன்றுக்கு கொழுந்து பறித்தல் அவசியம்.அதில் குறைந்தால் அரைபேர் அதாவது 250 ரூபாவே வழங்கப்படுகிறது. 10 கிலோ எடுத்தால் கிலோ ஒன்றுக்கு 25 ரூபா வீதம் வழங்குகின்றனர். இது தோட்ட நிர்வாகங்களுக்கு இலாபம் என்று கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் தொழிலாளர்களின் ஒரே குரலாக நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவுக்கு குறையக்கூடாது என்பதாக இருக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ன செய்யப்போகின்றன, கம்பனிகளுடன் எவ்வாறு பேச்சு நடத்தப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சந்திப்பு: சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி

கௌரவமான வாழ்வும் மலையக அதிகார சபையும்!


பெருந்தோட்டப்பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதானது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. அதே வேளை, பெருந்தோட்ட பிரதேச மக்களின் அபிவி ருத்திக்கு கடந்த 30 வருடங்களாக தடையாக இருந்த 1987 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க ஷரத்தும் (பிரதேச சபை சட்டமூலம்) திருத்தப்பட்டிருக் கின்றமையானது, இத்தனை காலமும் தேர்தல்களில் பங்களிப்புச் செய்து அதன் மூலம் பயன் எதையும் பெறாது இருந்த மக்களுக்குக் கிடைத்த வெற்றியா கவும் கருதலாம். இந்நாட்டில் உழைக்கும் வர்க்கமாக குடியேறி இருநூறு வருடங்களைப் பூர்த்தி செய்யவிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்டச் சமூகத்தின் ஆறாவது தலைமுறையினருக்கே இந்த வரப்பிரசாதம் கிடைத்திருக்கின்றது.

பெருந்தோட்ட மக்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவே பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக இச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு பேசிய உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தி ருந்தார். கடந்த காலங்களில் பெருந்தோட்டப்பகுதி களின் உட்கட்டமைப்பில் எந்தவித தாக்கத்தையும் செலுத்த முடியாதவாறு பிரதேச சபை சட்டமூலம் ஒரு தடையாகவே இருந்த வந்தது. பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்தாலும் கூட அப்பிரதிநிதிகளால் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கு குடிநீர்க்குழாய் வசதி ஒன்றைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையே இருந்தது.

அதேவேளை இதற்கு அப்பாற்பட்டு மலையக மக்களுக்கான வீடமைப்பு உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பெருந் தோட்ட மனித வள நிதியம் மட்டுமே முனைப்பு காட்டியது. ஆனால் காணிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் இதற்கு இருக்கவில்லை. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மலையகப் அதிகார சபையின் மூலம் மத்திய அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்படும் அனைத்து வளங்களும் நேரடியாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது, மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட மூல திருத்தம் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மலையக பிரதிநிதிகள் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள இவை வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், இவ்விவாதத்தில் உரையாற்றிய மலையகத்தைச் சாராத பிரதிநிதிகளில் குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் இம்மக்களின் வாழ்வாதார பிரச்சினையான ஊதியம் பற்றி பேசியிருந்தமை முக்கிய விடயம்.

பெருந்தோட்ட பிரதேச வாழ்விடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும் அவர்கள் கௌரவமான வாழ்க்கை நிலைக்கு வந்து விடப்போவதில்லை என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரமாக இருக்க தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் வெறும் 500 ரூபா வாகவே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கடந்த 19 வருடங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 300 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ள தாக புள்ளி விபரங்களை முன்வைத்திருந்தார்.

இதை ஏனைய மலையக பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு இனி அடுத்த தேர்தல்கள் வரை மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்தம் பற்றியே பேசிக் கொண்டிராமல், தொழிலாளர்களின் ஊதியம் பற்றியும் பாராளுமன்றில் விவாதம் நடத்தி அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிசமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உண்மையான கெளரவம் அவர்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தல் அவசியம். எவ்வித கெளரவமும் பாராது இந்நாட்டின் உயர்விற்காய் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் இம்மக்களுக்கு இத்தனை காலம் கடந்தும் சில நல்ல விடயங்கள் இடம்பெறுவதை வரவேற்கத்தான் வேண்டும். அதே போன்று அவர்களின் ஊதிய விடயத்திலும் பிரதிநிதிகள் தமது அக்கறையை செலுத்துவார்கள் என்று நம்புவோமாக!

நன்றி - வீரகேசரி

தேயிலையின் எதிர்காலம்? மாற்றுப்பயிர்ச்செய்கையின் அவசியம் - அருள்கார்க்கி


தொழிலாளர் வேதனம் தொடர்பான கருத்தாடல்கள் சூடுபிடிக்கும் இக்காலப்பகுதியில் தேயிலையின் எதிர்காலம் குறித்தும் பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரம் குறித்தும் மாறுபட்டுச் சிந்திப்பது அவசியம். கம்பனிகள் காலங்காலமாக சொல்லும் நட்டக்கணக்கும் அசாத்தியத்தன்மையும் ஒருபுறம் இருக்க, தேயிலையின் வீழ்ச்சிப்போக்கும் உற்பத்திச் செலவினமும் கவனத்திற்கொண்டு மாற்றுப்பயிர்ச் செய்கைகள் இனங்காணப்பட வேண்டியது அவசியம். தேயிலையை அழித்து விட்டுத்தான் இதனை செய்யவேண்டுமென்பதில்லை. இன்று அநேகமான பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் வெறுமனே பயனற்றுக்கிடக்கின்றன. அதே போல் உற்பத்திக்குத் தேவையான நீர், தொழிலாளர் என்பனவும் சாத்தியமான இயற்கையும் மலையகத்தில் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்தும் முறை ஒன்றை காலத்தின் தேவை கருதி இனங்காண வேண்டும்.

தேயிலை உற்பத்தியானது காலத்திற்குக் காலம் குறைவடைந்து செல்கின்றது. பராமரிப்பின்மை, மீள்நடுகை இன்மை, அலட்சியம், அதிகரித்தச் செலவினம், காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் உற்பத்தியானது வீழ்ச்சியடைந்துள்ளது. பெருந்தோட்டக்கம்பனிகள் தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்திச்செலவு,கேள்விக்குறைவு போன்றனவற்றைக் காரணம் காட்டி இத்தொழில் துறையை சவாலான ஒன்றாக காட்டுகின்றன. எனினும் இவற்றுக்கான மாற்றுத்திட்டங்களை கம்பனிகளோ, அரசாங்கமோ, தொழிற்சங்கங்களோ முன்வைப்பதில்லை. முடிந்தளவு இலாபம் கிடைத்தால் போதும் என்று கம்பனிகளும், தேயிலையின் அழிவோடு இனத்தின் செறிவையும் குறைக்கலாம் என்று அரசாங்கமும் சந்தா கிடைத்தால் போதும் என்று தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. எனினும் இலாபகரமான முறையில் தேயிலைத் தொழிற்துறையை மாற்றியமைக்கக் கூடிய திட்டங்களை பலர் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களும் இதன்மூலம் பலனடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான ஒரு முன்மொழிவே மாற்றுப்பயிர்ச் செய்கையாகும். குறிப்பாக, சாத்தியப்பாடான மாற்றுப்பயிர்கள் தொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் பற்றி ஆராய வேண்டும். மலையகத்தின் மாறுபட்ட காலநிலை, மண் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாக வைத்து இவை முன்னெடுக்கப்படல் அவசியம்.

எனவே, பயிரிடப்படும் மாற்றுப்பயிருக்கு தகுந்த பிரதேசம் இனங்காணப்பட வேண்டும். விஷேடமாக மாற்றுப்பயிர்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வியாபார பெறுமதியும், உள்நாட்டு,வெளிநாட்டு சந்தை வாய்ப்பும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அரசு தலையிடுவதன் மூலம் உற்பத்திகளின் அறுவடையை பன்னாட்டு சந்தைகளுக்கும் விஸ்தரிக்க முடியும். இன்றளவில் மிளகு, கறுவா, மரமுந்திரிகை, அன்னாசி, கற்றாளை, பப்பாசி, தோடம்பழம், மெகடாமியா, செம்பனை போன்றன சில பிரதேசங்களில் சிறியளவில் பயிரிடப்படுகின்றன. இவற்றில் செம்பனை (palm tree) உற்பத்தி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. போதுமான ஆளணி, முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை போன்ற காரணங்களினால் இவை பெரியளவில் முன்னேற்றம் அடையவில்லை. இவற்றை அபிவிருத்திச் செய்ய வேண்டியதும் கட்டாயமாகும்.

கோப்பி, கொக்கோ, கரும்பு,வாழை, வெனிலா, டிராகன் பழம் ((dragan fruit)

 கொய்யா, ஸ்ரோபரி, போன்றனவும் ஏற்றுமதி நோக்கத்தோடு சில பெருந்தோட்ட கம்பனிகளும் சிறுதோட்ட உரிமையாளர்களும் உற்பத்திச் செய்கின்றனர். தேயிலையின் ஊடுபயிராக மிளகு மற்றும் பிரத்தியேகமான நிலப்பரப்பில் மேற்குறிப்பிட்ட பழப்பயிர்ச்செய்கைகளும் பயிரிடப்படுகின்றன. சில பெருந்தோட்டக் கம்பனிகளால் டிராகன் பழப் பயிர்ச்செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும் இப்பழங்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாக அறியமுடிகின்றது. இதன் அலகொன்றுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2000.00 (ஆகக்கூடியது) ஆகவும் மரமொன்றின் ஆயுட்காலம் சுமார் 25 வருடங்களாகவும் இருக்குமென்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பைப் பொறுத்து டிராகன் பழ அறுவடையை அதிகரித்துக்கொள்ள முடியும். உள்நாட்டு சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் இப்பழத்துக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. இவ்வாறான முயற்சிகளில் முதலிடுவதற்கு பெருந்தோட்டக்கம்பனிகள் முன்வர வேண்டும்.

மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான அரச தனியார் முதலீடுகள் அவசியமானதாகும். காலங்காலமாக தேயிலை விலைவீழ்ச்சி என மக்களை ஏமாற்றும் கம்பனிகள் கைவிட்ட நிலங்களில் எந்த முயற்சிகளும் முன்னெடுக்காததும் அரசுக்கு சாத்தியமான மாற்றுப்பயிர் யோசனைகளை முன்வைக்காமையும் வருந்தத்தக்கன.

இவ்வாறான முறைகள் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வர். அதே போல் பெருந்தோட்டங்களில் உள்ள ஆளணியையும் பயனுள்ள வகையில் மாற்றியமைக்கலாம்.

மலையக இளைஞர், யுவதிகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு தினக்கூலிகளாக செல்லும் நிலைமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கைவிடப்படும் பெருந்தோட்டக் காணிகளை இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்ச் செய்கைகளுக்கான ஆலோசனைகளையும் முதலீடுகளையும் வழங்குவதன் மூலம் அவர்களை நிலவுடைமையாளர்களாகவும் சுயதொழில் முயற்சியாளர்களாகவும் உருவாக்கலாம். தொழிற்சங்கங்கள் செய்யக்கூடிய நன்மைகளில் இது பிரதானமானது.

மொனராகலை மாவட்டத்தில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு மாற்றீடாக கரும்பு, பப்பாசி, வாழை என்பன பயிரிடப்படுகின்றமை வழக்கம். அதே போல் தனியார் நிறுவனங்கள் பல மொனராகலைப் பிரதேசத்தில் நிலங்களை குத்தகைக்கும், உபகுத்தகைக்கும் பெற்று இப்பயிர்களை பயிரிடுகின்றன. இதன்மூலம் சொற்ப தொகையினருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது. எனினும் நிலங்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் போது நிலங்கள் தனியார் மயமாகும் அபாயம் இருக்கின்றது. பெருந்தோட்டப்பிரதேசங்களில் ஒருசில தோட்டக்கம்பனிகள், தேயிலையின் வீழ்ச்சிப்போக்கு தொழிலாளர் பற்றாக்குறை, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றைக் காரணம் காட்டி மாற்றுப்பயிர்களாக கருப்பந்தேயிலை ((Turpentine Tree) ஊசியிலை மரம் ((Pine Tree) போன்ற நெடுங்கால மரங்களை பயிரிடுகின்றன. இவ்வாறான மரங்கள் மூலம் தொழிலாளருக்கு எவ்வித நேரடி வருமானமும் இல்லை. அறுவடைப்பருவம் வந்ததும் கம்பனிகள் அம்மரங்களை வெட்டி விற்று இலாபமடைகின்றன. இதன்மூலம் கொள்ளை இலாபம் ஈட்டப்படுகின்றது. தோட்டக்காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளித்து மாற்றுப்பயிர்களையோ அல்லது தேயிலையையோ பயிரிடலாம் என்று அவ்வப்போது கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவை நடைமுறைச் சாத்தியமாவது குறைவு. அவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் அவர்களின் அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ற வகையில் மரக்கறிகளையாவது பயிரிட்டு வருமானம் ஈட்டுகின்றனர். கம்பனிகள் நிலங்களை வைத்துக்கொண்டு அவற்றை காவல் காத்துக்கொண்டு இருப்பதில் எவ்வாறான உற்பத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும் இந்நிலங்களின் உரிமையாளர்களாக எம்மவர்களே இருக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

சுனிலா அபேசேகரவுடன் நேர்காணல் (நேர்காணல் மீள் பிரசுரம் - என்.சரவணன்)

சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக 20 ஆண்டுகளுக்கு முன் சரிநிகரில் வெளியான இந்த நேர்காணல் மீண்டும் உங்களுடன் பகிரப்படுகிறது.
சோசலிஸ பெண்ணிலை வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சுனிலா ஒரு மனித உரிமையாளரும் கூட. முன்னர் ஜே.வி.பி. இயக்கத்தில் தீவிர செயற்பாட்­டாளராக இருந்தவர். தற்போது பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு (Women & Media Collective), இன்போர்ம் (Inform) என்பவற்றின் இயக்குனர்­களில் ஒருவராக இருந்தவர். நான்கு பிள்ளைகளின் தாயாரான சுனிலா தனியொருவராக பிள்ளைகளை வளர்த்து வருபவர். இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் மிகவும் தீவிர செயற்பாட்டாளராக இருந்துவரும் இவர் தனது வாழ்க்கையிலும் பெண்ணிலைவாதி யாகவும் மாதிரிப் பெண்ணாகவும் வாழ்ந்து வந்தவர். இவரை தவிர்த்து விட்டு செய்யப்படும் இலங்கையின் பெண்ணிய சூழலைப் பற்றிய எந்த ஆய்வும் பூரணமாகாது. சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு சரிநிகர் பத்திரிகைக்காக அவரிடமிருந்து பெறப்பட்ட நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.

பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை. இருக்கின்ற பெண்கள் அமைப்புகள் எல்லாமே அரசு சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுகின்றன. அதற்கு வெளியில் சுயாதீனமான பெண்கள் அமைப்புகள் எதுவுமே இல்லை. அப்படி தோன்றினால் கூட என்.ஜீ.ஓ.க்கள் அவற்றை உள்வாங்கி ஏப்பமிடுவதற்கூடாக அவற்றின் தீவிரத் தன்மையைக் கூர்மங்கச் செய்வது ஒரு காரணமாக இருக்க முடியாதா?

இது பெண்கள் அமைப்புகளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே இந்த போக்கு நிலவுகிறது. சிவில் சமூக செயற்பாடுகளில் காணப்பட்டு வரும் மாற்றங்­களையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 90களைப் பார்த்தோமானால் சிவில் சமூக செயற்பா­டானது மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. 30களிலிருந்து தீவிரப்பட்ட தொழிற்சங்க நடவடிக்­கைகளுக்கும், இடதுசாரி செயற்பாடுகளுக்கும் கூட இந்த நிலைமை தோன்றியுள்ளன எனலாம். சித்தாந்த வீழ்ச்சியும் காணப்படு­கிறதல்­லவா? சமூக மாற்றத்துக்கான சித்தாந்த சூத்திரங்களை எம்மால் மாற்றத்துக்குள்­ளாக்க நேரிட்டதல்லவா? இதன் காரணமா­கவே தீவிரமடைதலுக்கும் பீதி நிலவுகிறது. சிவில் சமூகத்தில் செயற்பாட்டுச் சக்திக­ளாகவும் நிர்ப்பந்தச் சக்திகளாக பத்திரிகையாளர்களும், கருத்துச் சுதந்திரத்திற்­காக போராடுபவர்களுமே காணப்படுகின்­றனர் என்றே நான் கருதுகிறேன்.

நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் நீங்கள் கண்ட அனுபவங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினை குறித்த அவதானங்களைப் பகிர முடியுமா?

ஜே.வி.பி.யினர் இன்றும் நான் ஒரு உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை என்றே கூறி வருகின்ற­னர். நான் ஒரு தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்திருக்கி­றேன். சோஷலிச கலைச் சங்கத்தின் கீழ் 1977இல் தோற்றுவிக்கப்பட்ட விமுக்தி கீ (விடுதலை கீதம்) குழுவில் பாடல்கள் பாடி வந்தேன்.

நீங்கள் ஜே.வி.பி.யின் சோஷலிச மகளிர் சங்கத்தில் இருக்கவில்லையா?

இல்லை, நான் அதில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அப்போது அதன் கூட்டங்களில் உரையாற்­றியிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் ஜே.வி.பி. ஆங்கில மொழியில் வெளியிட்டு வந்த Red Power பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தேன். தொகுத்துமிருக்கிறேன். அதற்­குப் பொறுப்பாக சில காலம் இருந்திருக்கி­றேன். ஆங்கில மொழியிலான விடயங்கள் பலவற்றை நானே செய்ய நேரிட்டது. கொழும்பு கிழக்கின் அமைப்பாளராக செயற்பட்டிரு­க்கிறேன். நான் விஜேவீர, கெலி சேனநாயக்க உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அப்போது கியுபாவில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கும் சென்று வந்தோம். அப்போது ஜே.வி.பி.க்கு அங்கு நல்ல வரவேற்பி­ருந்தது. அதனைத் தவிர அப்போது ஜே.வி.பி.யின் மனித உரிமைகள் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமைப் பொறுப்பையும் நானே வகித்து வந்தேன்.


ஜே.வி.பி.யுடன் இணைவதற்கு உந்துதலாக இருந்த சூழலை விளக்குவீர்களா?

நான் இன்றும் நம்புகிறேன். இலங்கை­யில் தீவிர இடதுசாரித்துவத்திற்கான தேவை தொடர்ந்துமி­ருக்கிறது. 1976இல் தான் நான் மார்க்சிய அரசியலில் அக்கறை காட்டினேன். நாட்டில் ஒரு சமூக மாற்றமெ­ன்றை உருவாக்கும் ஆற்றல் ஜே.வி.பி.க்கு இருப்பதாக நம்பினேன். அன்று 71 கிளர்ச்சி­யில் பங்கு பற்றியவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்­குழுவின் விசாரணை­களின் போது நானும் சென்று ஆர்வமாக அவதானித்து வந்தேன். இதற்கூடாகவே ஜே.வி.பி.யுடனான தொடர்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. தோழர்கள் என்னை அடையாளம் கண்டு தொடர்பு கொண்டனர். அவர்களின் வேலைகளில் நானும் பங்கேற்றேன். 78இல் தோழர் விஜேவீர விடுதலை­யான பின் 71 கிளர்ச்சியில் படுகொலை செய்யப்பட்ட பிரேமவதி மனம்பேரி நினைவாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது தோழர் விஜேவீர என்னைச் சந்தித்து உரையாடினார் அதன் பின் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன்.

ஜே.வி.பி.யில் இருந்து ஏன் விலகினீர்கள்?

ஒரு விதத்தில் என் தனிப்பட்ட பிரச்சி­னைகளும் எனது விலகலுக்குக் காரணமா­கியிருந்தன. அதை விட தொடர்ந்தும் பல கருத்துப் பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக பெண்கள் விடயம் தொடர்பா­னது. சோஷலிச மகளிர் சங்கம் சுயாதீன­மாக இயங்க முடியாதிருந்தது. ஆண் தோழர்க­ளின் வழிநடத்தலிலேயே, அவர்­கள் இடும் ஆணைகளே சோ.ம.ச.வை இயக்கின. இது தொடர்பாக கட்சிக்குள் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தன. சோ.ம.ச. வின் தலைவியாக செயற்பட்ட நந்தசீலி சகோதரியின் பிரசவ விடுமுறை கூட அன்று வழங்க மறுக்கப்பட்டது. இது தொடர்பான பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போது. என் மீது மத்திய தர வர்க்க முத்தி­ரை குத்தப்பட்­டது. நான் ஆங்கில மொழி மூல விடயங்கள் பெருமளவு செய்து வந்த­தால் இது இம்முத்­திரை குத்தலுக்கு சாதகமாகப் போனது. இந்த நிலைமையை சமாளித்து நீடித்திரு­க்க முடியாது போனது. படிப்படியாக அதிலிருந்து அந்நியப்பட வேண்டி வந்தது. இன்று கூட நான் கெலி சேனநாயக்கவுடன் தொடர்பு வைத்திருந்­ததன் காரணமாகவே விலகினேன் என பிரச்சாரப்படுத்தி வருகிறது. கியூபாவுக்கு சென்றி­ருந்த வேளையில் அங்கு நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு போவதற்கு எம்மோடு வந்த சில தோழர்­களை அழைத்­திருந்தேன். ஆனால் எல்லோரும் மறுக்கவே என்னோடு கெலி மட்டுமே வரத் தயாராக இருந்தார்.

அங்கு போனதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் கண்டிக்கப்பட்டோம். கெலியையும் என்னையும் சம்பந்தப்படு­த்தி அபாண்­டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்­பட்டன. அது இறுதியில் எங்கள் இருவரை­யும் உண்மையிலேயே ஒன்று சேர நிர்ப்பந்தித்­திருந்தது. அக் குற்றச் சாட்டையே இன்றும் கூறி வருகிறது. இன்று வரை என்னால் எழுப்பப்பட்ட கருத்து ரீதியான பிரச்சினை­களை மூடிமறைத்துக் கொண்டே வருகி­றது. பெண்கள் பிரச்சினை போலவே ஜனநாயகம் பற்றிய பிரச்சினையும் கட்சிக்­குள் எழுந்தது. குறிப்பாக 1979ஆக இருக்கும் கம்போடியாவில் பொல்பொட் அரசாங்கம் பற்றிய சிக்கல்கள் எழுந்தன. கம்போ­டியப் போராட்டத்தை ஒரு புரட்சிகர எழுச்சியாக கருத முடியுமா என்ற விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி.யின் நியமுவா பத்திரிகையில் பொல்பொட் அரசாங்கம் ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றே வாழ்த்தி வந்தது. ஆனால் பொல்பொட் அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கம் என்ற கருத்து என்னி­டம் இருந்தது. சீ.ஐ.ஏ.வின் செய்தி ஸ்தாபனங்கள் பரப்பி வரும் பிரச்சாரங்க­ளைக் கொண்டே நான் வாதிடுவதாகவும் பொல்பொட் அப்படியான கொலைகளைச் செய்யவில்லை என்றும் விஜேவீர தோழரும் எதிர்த்தார். நான் சீ.ஐ.ஏ. ஏஜன்ட் என்றும் பிரச்சாரப்படுத்­தினர். ஆனால் இன்று பொல்பொட் யார் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இப்படி­யான கருத்து ரீதியான பிரச்சினைகளை சரியான பொறிமுறைக் கூடாக முகம்கொ­டுக்க ஜே.வி.பி. தயாராக இருக்கவில்லை.

இன்றும் கூட சமூக மாற்றமொன்றுக்­காக தொடர்ச்சியாக முயற்சி செய்கின்ற ஜே.வி.பி.யின் மீது எனக்கு அக்கறை உள்ளது. ஆனால் இன்றும் பெண்கள் தொடர்பான விடயம் உள்ளிட்ட பல விடயங்­களில் கருத்து ரீதியான வளர்ச்சி காணப்ப­டுவதாகத் தெரியவில்லை. பொரு­ளாதார விடுதலை­யிலேயே பெண்களின் விடுதலை தங்கியிருக்கிறது என்கின்ற கருத்துட­னேயே இன்றும் இருப்பதாகத் தெரிகிறது. நவீன பெண்ணிய சிந்தனை தொடர்பான கருத்தாடல் கட்சிக்குள் தற்போது இருப்ப­தாகத் தெரியவில்லை.

நன்றி - சரிநிகர்

தனிவீட்டுத்திட்டங்களும் மேலதிக வருமானமும் - அருள்கார்க்கி


மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தனிவீட்டுத்திட்டங்கள் மலையகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே.

07 பேர்ச்சஸ் காணி என மட்டுப்படுத்தப்பட்ட நிலவுரிமையுடன் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சுமார் 198 வருட லயன் வாழ்க்கை முறைக்கு விடுதலை அளித்து கௌரவமான வாழ்க்கை முறைக்கு எம்மக்கள் முன்னேறும் காலமிது.

பெருந்தோட்ட பொருளாதாரத்தின் அடிப்படையாக தேயிலையை மட்டுமே நம்பியிருந்தது போக எம்மவர்களின் பொருளாதாரத்தை லயன்களைச் சுற்றியிருந்த நிலங்களே தீர்மானித்தன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுயதொழில்கள் என எம்மவர்களின் பொருளாதாரம் சற்று ஸ்திரமானது. குறிப்பாக விவசாயம் மூலம் மேலதிக நேரத்தை பயனுடைய வகையில் எம்மக்கள் இன்றும் மாற்றியமைத்து நன்மையடைகின்றனர்.

பெருந்தோட்டத்தில் வேலை நாட்கள் குறையும் சந்தர்ப்பங்கள், போதிய சம்பளம் கிடைக்காத நிலைமைகளில் இவ்வாறான மேலதிக வருமானங்கள் குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை சமாளிக்க இன்றியமையாதவையாகும். தோட்டங்களில் வேலை செய்யாதோரும், ஓய்வு பெற்றவர்களும் முழு நேரமாக மரக்கறி, கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களின் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதாவது காடாகிக் கிடந்த நிலங்களை பணத்தை முதலீடு செய்து விளைநிலங்களாக ஆக்கி வருமானம் தேடுகின்றனர். குறிப்பாக வடிகால் வசதிகள், பாத்தி அமைப்பு போன்றவற்றுக்கு அதிகமான பணம் முதலீடுச் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் கால்நடை வளர்ப்புக்கு தொழுவங்கள் அமைத்தல், பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான தேவைகளுக்கும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பால் உற்பத்தி, (மிருகக்கழிவுகள்) சேதனப்பசளை உற்பத்தி போன்ற செயற்பாடுகள் மூலம் சாதகமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இவையனைத்தும் லயன் குடியிருப்புகளை அண்டியே அமைந்திருந்தமையால் சாதகமாக இருக்கின்றது. மறுபுறம் தனிவீட்டுத்திட்டங்கள் மூலம் நிலப்பரப்பு மட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான தொழில்களை செய்வது சாத்தியமற்றதாக மாறலாம். குறிப்பாக தனிவீட்டுத்திட்டங்களுக்கான காணிகளை ஒதுக்கும் போது பெருந்தோட்டக் கம்பனிகள் தேயிலை விளைச்சல் குறைவாக அல்லது தரிசாக காணப்படும் நிலங்களே வழங்கப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் குடியிருப்பு தொகுதிகளை அமைக்கும் போது வீதி, குடிநீர், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய வேண்டியேற்படுகின்றது.

தனிவீட்டுத்திட்டங்களை காரணம் காட்டி பெரும்பாலான தோட்டக்கம்பனிகள் மக்களை தோட்டங்களினுள், மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மட்டும் கட்டுப்படுத்தி வைக்க முற்படுகின்றன.

லயன்களையும் அது சார்ந்த நிலங்களையும் விட்டு வெளியேறும் தொழிலாளர்களின் விவசாய நிலங்களையும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளும் விபரீதமும் ஏற்பட வாய்ப்புண்டு.

சில பெருந்தோட்டக்கம்பனிகள் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் காணப்படும் லயன்கள் மற்றும் விவசாய நிலங்களில் நெடுங்கால மரங்களை பயிரிட திட்டமிட்டு வருகின்றன. இது மண்சரிவுக்கு மாற்றீடான யோசனையாக இருப்பினும் கூட, தேயிலை மலைகளைப்போலவே விவசாய நிலங்களிலும் எம்மவர்களின் உழைப்பு உண்டு என்பதை உணர வேண்டும். எனவே எம்மவர்களின் மேலதிக வருமானத்துக்கான அடிப்படைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

நிச்சயத்தன்மை அற்ற பொருளாதாரமாக இன்று பெருந்தோட்டத் தொழில் துறை பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. பெரும்பாலான தோட்டங்கள் மூடப்பட்டும், திட்டமிட்டு காடாக்கப்பட்டும் வருகின்றன. தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றுப்பொருளாதார வாய்ப்புகள் மிகவும் அவசியமாகும். அதேபோல் நாட்டின் உணவு உற்பத்தி, பசும்பால் சார்ந்த உற்பத்திகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதால் அவர்களின் முயற்சிகள் அரசினால் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதே போல் சுயதொழில்கள் மூலமும் எம்மவர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.

அதற்கு நிலமும், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்றியமையாததாகும். மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் (தனிவீடு) இவ்வாறான சுயதொழில்களை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால் அங்கு அவர்களுக்கு சுயதொழில் மானியமும், உதவுத்தொகைகளும் இழப்பீடுகள், காப்புறுதி என்பனவும் வழங்கப்படுகின்றன. ஆனால் எம் இளைஞர் யுவதிகளுக்கு அவ்வாறான எந்த சலுகைகளும் இதுவரை வழங்கப்பட்டதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. சுயதொழில்களில் ஈடுபட்டவர்களுக்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நடைமுறைகள் மூலம் எம் பொருளாதாரம் ஸ்திரமற்று காணப்படுவது குறித்து எம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் எம்மை வந்தேறு குடிகளாகவே இன்னும் வைத்திருக்க முனைவது இதன் மூலம் புலப்படும். வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய பெருந்தோட்ட நிலங்களை மீட்பதும் கடினமானது. எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

தனிவீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரத்தியேகமான நிலம் வழங்கப்பட வேண்டும். லயன்களை இடித்து தள்ளுவதற்கு புறம்பாக கால்நடை வளர்ப்புக்கு அவற்றை உபயோகப்படுத்தலாம். கிராம அபிவிருத்தி எண்ணக்கரு மூலம் சுயதொழில் புரியும் இளைஞர் யுவதிகளுக்கு தனியான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

மலையகம் என்பது வெறுமனே மக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அது எம் நிலத்துடனான உரிமையையும் இருப்பையும் வெளிக்காட்டுகின்றது. எம் தேவை வாழ்வதற்கு 07 பேர்ச்சஸ் நிலம் மட்டுமல்ல. எம் சொந்த நிலத்தில் நாம் சுதந்திரமாக சமூக பொருளாதார ரீதியாக ஸ்திரமான இருப்பை உறுதி செய்யும் உரிமையாகும்.

நன்றி - வீரகேசரி

நம் காலத்து நாயகி : சுனிலா அபேசேகர (1952-2013) - என்.சரவணன்

பட்டறிவு
சுனிலாவின் ஐந்தாண்டு நினைவாக கொழும்பில் சில நிகழ்வுகள் இந்த வாரம் ஏற்பாடாகியுள்ளன. அவரின் நினைவாக இந்தக் கட்டுரை
90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது.... திம்பிரிகஸ்யாயவிலுள்ள எமது சரிநிகர் அலுவலகமும் சுனிலாவின் இன்போர்ம் நிறுவனமும் எதிரெதிரில் அலுவலகங்கள் இருந்தன. எமது சகோதர நிறுவனமும் கூட.

சக தமிழ் பணியாளர்களின் பாதுகாப்பில் அனைத்து சிங்கள நண்பர்களும் மிகுந்த அக்கறை எடுப்பார்கள். அப்படி பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அது இருக்கட்டும். எனக்கு ஒரு நாள் நேர்ந்தத்தை பதிய வேண்டும்.

ஒரு நாள் காலியில் உள்ள ஒரு தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற இடத்தில் திரும்பி வர இரவு பஸ்சும் இன்றி நான் சிக்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கிருந்து தொலைபேசியில் அறிவிக்கக் கூட வசதி இல்லை. இருட்டிய பின்னர் அவர்கள் என்னையும் வெளியில் அனுப்புவதாக இல்லை. வழமையாக நான் எங்கு சென்றாலும் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் நான் பத்திரமாக இருப்பதை வீட்டுக்குத் தெரிவித்து விடுவேன். அன்று அதற்கு வழியில்லை என்றாகிவிட்டது. விடிந்ததும் கிளம்பத் தயாராக இருந்தேன்.

சுனிலாவின் குரலில் அமைந்த பாட்டுப் பின்னணியுடன் இந்த காணொளி செய்யப்பட்டிருக்கிறது.

அன்று விடியவே அந்த கிராமத்திலிருந்து ஒரு மாட்டு வண்டிலை பிடித்து சந்திவரை வந்து இன்னொரு ட்ரக்டரில் என்னை ஏற்றிவிட்டார் தோழர். அங்கிருந்து டவுனுக்கு வந்து காத்திருந்து பஸ் பிடித்து கொழும்பு வந்து, கொழும்பில் இருந்து நேராக அலுவகத்திற்கு வந்து சேர்ந்தேன். சற்று பின்னேரமாகியிருந்து.

அங்கு அலுவலகம் அல்லோல கல்லோலமாக இருந்தது. என்னைத் தூரத்தில் கண்டவுடன் அங்கு அலுவலக பணியாளர் அதோ சரா வருகிறார் என்று சிங்களத்தில் கத்திய சத்தம் கேட்டதும் அலுவலகத்தின் உள்ளிருந்து சக நண்பர்கள் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள். அருகில் உள்ள இன்போர்ம் அலுவலகத்திலிருந்தும் நண்பர்கள் வந்து என்ன நடந்தது என்று பதட்டமாக கேட்டார்கள்.

அவர்களைப் பார்த்து நானும் பதட்டமடைந்தேன். எங்கு போயிருந்தாய் உன்னை காணவில்லை என்று ஊடக செய்திகள் வரை போய் விட்டது. நான் நடந்ததைக் கூறினேன். சுனிலா அங்கிருந்து வந்து என் மண்டையில் ஒரு அடி அடித்தார்.

“வீட்டுக்கு நீ நேற்று வரவில்லை என்று அம்மா காலையில் தொடர்பு கொண்டு கூறினார். நாங்கள் பதட்டப்பட்டு மங்களவுக்கு தெரிவித்தோம் (மங்கள சமரவீர: ஒரு சமயத்தில் நம்முடன் நட்புடன் இருந்த இன்றைய அமைச்சர், அன்றைய ஊடக அமைச்சர்). உன்னைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்ற பயத்தில் சற்று கடுமையாகவே நாங்கள் உரையாடினோம். பொலிஸ் நிலையங்களில் அப்படி ஒருவர் உள்ளே இல்லை என்றும் பொலிஸ் மா அதிபரும் கூறிவிட்டார். அப்படி கண்டு பிடித்தால் அறிவிப்பதாக கூறியிருக்கிறார். இங்கே நாங்கள் ஏனைய ஊடகங்களுடனும் தொடர்புகொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். நீ ஹாயாக வந்து இருக்கிறாய்...”

மற்ற நண்பர்கள் சூழ இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் இடைக்கிடை என்னை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். குற்றவாளியாக அதிர்ச்சியடைந்து இருந்தேன்.

ஏதாவது ஒரு வழியில் எமக்கு நீ தகவல் தந்திருக்க வேண்டும் என்பதே அனைவரது ஆத்திரத்திலும் இருந்த சாராம்சம். நான் காலி டவுனில் அதை செய்திருக்கலாம். எனது தவறை நினைத்து வெட்கித்தும், என்னிலே ஆத்திரமும் கொண்ட தருணம் அது. இவ்வளவு அசட்டையாக நான் பாதுகாப்பு விடயத்தில் பொதுவாக இருந்ததில்லை. அன்று எனக்கு பெரிய பாடம் கிடைத்தது. என்னில் அக்கறை கொண்டவர்களை நான் இப்படி பதட்டத்துக்கும், பயத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறேன். குறிப்பாக என்னை எந்த இடத்திலும் தன் தத்துப் பிள்ளையாக அறிமுகப்படுத்தும் சுனிலாவை நான் காயப்படுத்திவிட்டேன் என்று மிகுந்த வேதனைப்பட்ட நாள் அது.

சுனிலா உலகறிந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். அவரின் கருத்துக்களை அசட்டை செய்ய மாட்டார்கள். எனவே சுனிலா மீண்டும் உரிய இடங்களுக்கு நான் பத்திரமாக இருப்பதை அறிவித்தார்.

சுனிலா இறப்பதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் 2012 ஒக்டோபர் மாதம் ஒஸ்லோ வந்திருந்தார். ஒஸ்லோவில் மனித உரிமை குறித்த ஒரு கலந்துரையாடலை எனது நிறுவனத்தில் ஒழுங்கு செய்தேன். அப்போது பல இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார், ஏற்கெனவே திட்டமிட்டபடி என்னையும் அங்கெல்லாம் அழைத்துச் சென்றார். சுனிலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது வெளியில் மழைத்தூரலும், குளிருமாக இருந்தது. நான் எப்போதும் போல எனது ஜெக்கட்டை மூடாமல் அனாயசமாக குடையை அவருக்குப் பிடித்தேன். என் தலையில் அதே குட்டு விழுந்தது.

“முதலில் ஜெக்கட் சிப்பை இழுத்து மூடு. குளிராக இருக்கிறது. விளையாடுகிறாயா... வியாதியை இழுத்துக்கொள்....”

அன்று தான் நான் அந்த இறுதிக் குட்டை வாங்கினேன். அது தான் நான் அவரை சந்திக்கும் இறுதி நாள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.

சுனிலா புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை இறுதியாக சந்தித்த வேளை தான் மிகவும் தேறிவிட்டதாகவும், ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும் கூறினார். அப்போது அவர் நெதர்லாந்தில் சிறிது காலம் வாழ்ந்து வந்தார். நோயுற்று இருந்த நிலையிலும் இலங்கை திரும்பமுடியாத படி அவருக்கு உயிரச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் அக்கிரமங்களை உலகெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததால் மகிந்த அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்தார். அவரை கிட்ட இருந்து கவனிக்க என்று முமுதினி சாமுவேல், சேபாலி இன்னும் சில சக தோழிகள் இலங்கையில் இருந்து மாறி மாறி நெதர்லாந்து வந்து தங்கியிருந்து அவரைக் கவனித்துச் சென்றார்கள்.

“நான் ஒரு அகதியைப் போல நாட்டுக்கு நாடு திரிந்து அலைந்து என்னைத் துரத்திய எமனிடமிருந்து தப்ப முயற்சித்தேன். ஆனால் எமன் எனது உடலுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். என்று அவர் இன்னொரு நண்பியிடம் தெரிவித்திருந்தார்.

சுனிலாவின் வீடு புற்றுநோயாளும் வேறு உடல் உபாதைகளாலும் பாதிக்கப்பட்ட பல நட்புகளுக்கு உறைவிடமாக ஒரு காலத்தில் இருந்ததை நான் அறிவேன். பேராசிரியர் மௌனகுருவுக்கு இதய சத்திரிசிகிச்சை செய்து சுனிலாவின் வீட்டில் இருந்தபோது அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதை அவரின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எங்கள் அலுவலகத்தில் எவருக்கும் தெரியாதிருந்தது. பார்க்க வருபவர்களால் அவருக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்று கவனமாக இருந்தார்.

எங்கள் சரிநிகர் பத்திரிகையை வெளியிட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், நீண்ட காலமாக தன தலைவராகவும் இருந்த பிரபல மனித உரிமையாளர் சார்ள்ஸ் அபேசேகரவின் மகள் தான் சுனிலா.

இலங்கையில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய காலம் மிகவும் பசுமையானது. நகைச்சுவை உணர்வை எப்போதும் பேணுபவர். அவருடன் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பல்வேறு விடயங்களை விவாதித்து, உரையாடியிருக்கிறேன். பெண்ணியம், மனித உரிமைகள் சார்ந்த கூட்டங்கள் பலவற்றில் அவரின் மொழிபெயர்ப்பாளராக நான் இயங்கியிருக்கிறேன். எங்கும் என்னை தனது தத்துப் பிள்ளை என அறிமுகப்படுத்துவது அவரது வழக்கம்.

உயிரச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு பலரும் தப்பிப் போவதற்கு தனிப்பட்ட ரீதியில் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அது மட்டுமன்றி பின்னர் அவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு சுனிலா காரணமாக இருந்திருக்கிறார்.


மனித நேயம் மிக்கவராக மட்டுமல்ல சிறந்த மனித உரிமையாளராகவும் உலகளவில் அறியப்பட்டிருந்தார் சுனிலா. 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறந்த மனித உரிமையாளருக்கான விருது அவருக்கு அன்றைய செயலாளர் நாயகம் கொபி அனானால் வழங்கப்பட்டது.

அவர் போன்ற ஒரு பெண் ஆளுமையை நான் இதுவரை இலங்கையில் கண்டதில்லை. 70களின் இறுதியில் புரட்சிகர மேடைகளில் அவரின் குரல் மிகவும் பிரசித்தம். ஜே.வி.பியின் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்ட அந்த காலப்பகுதியில் “விமுக்தி கீ” (விடுதலை கீதம்) என்கிற பிரச்சாரக் குழுவில் முக்கிய பாடகி. மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர், தமிழர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை குரல்கொடுத்தவர். ஒட்டுமொத்தத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சகல தளங்களிலும் போராடியவர் அவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னணிப் பாடகியாகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் நம்மை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 9ஆம் திகதியோடு சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் நம் காலத்து நாயகி. நம் காலத்து வீராங்கனை.

நன்றி - அரங்கம்


"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)

பொருளாதார ரீதியாக மலையக பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் அவர்களின் வாழ்வாதாரம் கொழுந்து பறித்தல் தொழிலில் மட்டும் தங்கி இருப்பதாகும். தேயிலை தொழில் துறையானது வருடந்தோறும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதன் காரணமாகவே சில மாதங்கள் அவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாகவும் வருமானம் கீழ் மட்டத்திலும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் மாற்றுத்தொழில்களில் ஈடுபாடு காட்டுவது அவசியம். அதாவது இத்தொழிலை பிரதானமாகக்கொண்டு ஏனைய உப தொழில்களில் ஈடுபடல் அவசியம். அதற்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகங்களும் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான மு.சின்னத்தம்பி. கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு.

கேள்வி: இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் மிகவும் மதிக்கப்படும் கல்வியியலாளரான உங்களைப்பற்றி…?

பதில்: நான் கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்தேன். அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தேன். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948 ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றேன். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது. பின்பு 1959 இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தேன். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப்பெற்றேன். 1974 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்தேன். 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2006 இல் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: வளங்கள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தன?

பதில்: வளங்கள் குறைவு என்பது உண்மை தான் ஆனால் முயற்சி என ஒன்றுள்ளதே? நான் சிறுவயதிலிருந்தே வாசிப்பிலும் கற்றலிலும் திறமையாக விளங்கினேன். அதுவே எனது வளர்ச்சிக்குக்காரணம். பெற்றோரின் ஆதரவும் கூறப்போனால் கடவுளின் கடாட்சமும் எனக்குக் கிடைத்தது.

கேள்வி: மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய பல பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் ஏன் இந்த சமூகம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது?

பதில்: பல காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக இச்சமூகத்துக்கு அனைத்தும் தாமதமாகியே கிடைத்ததைக்கூறலாம். 1980 களுக்குப்பிறகு தான் கல்வி வளர்ச்சியைப்பற்றி பேச முடியும். அதே நேரம் அரசியலிலும் குறித்த காலப்பகுதிக்குப்பின்னரே உரிமைகளைக்கேட்டுப்பெறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமரர் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல கல்விக் கூடங்கள் உருவாக வழிவகுத்தார். இது ஆரம்ப கால வரலாறு. தற்போது வரை ஏன் இச்சமூகம் இப்படி இருக்கின்றது என்றால் இம்மக்களின் ஒரே வாழ்வாதாரத் தெரிவாக கொழுந்து பறித்தல் மட்டுமே காணப்படுவதேயாகும்.இவர்கள் ஒரே தொழிலில் மட்டும் தங்கி வாழும் குழுவாக இருக்கின்றனர். மாற்றுத்தொழில் குறித்த எவ்வித விழிப்புணர்வும் இவர்களிடையே இல்லை என்பதோடு அதை அவர்களுக்குத்தெளிவு படுத்தும் பணிகளை அரசியல் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே உள்ளன. மாற்றுத்தொழில்கள் என்றால் இவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.அப்படிக் கருதியதாலேயே தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கேள்வி : என்ன மாற்றுத்தொழில்களை நீங்கள் சிபாரிசு செய்கின்றீர்கள்?

பதில்: இப்பகுதியின் புவியியல் அமைப்பின் படி கால்நடை வளர்ப்பு சிறந்த மாற்றுத்தொழிலாக இருக்கின்றது அடுத்ததாக விவசாயத்தைக்கூறலாம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மலைகளைத் தவிர தரிசுநிலங்கள் காணப்படுகின்றன. கால் நடை வளர்ப்புக்குரிய தோதான காலநிலை உள்ளது. பண்ணைகளை அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் மேலதிக வருவாயைப்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத்தேவைக்கு வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. மேலும் ஒவ்வொரு மாதமும் வருவாயை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாக இது உள்ளது. அடுத்ததாக காய்கறி செய்கை. இதற்கும் இங்கு நிலம் தாராளமாகவே உள்ளது. ஆனால் எல்லா தொழிலாளர்களும் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஏனெனில் இதற்கு முதலீடு அவசியம். இதற்கு இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தோட்ட நிர்வாகங்களும் இவ்வாறான தொழில்களில் இவர்களை ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு அடையச்செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கால்நடை பண்ணைகளை தோட்ட நிர்வாகங்களே அமைத்துக்கொடுக்கலாம். கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது அல்லது கிடைக்கும் இலாபத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு சாதகமான அம்சத்தை தரும். அதாவது தொழிலாளர் வெளியேற்றத்தை இச்செயன்முறைகள் கட்டுப்படுத்தும்.

கேள்வி: தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் தேயிலை தொழிற் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றனவே?

பதில்: ஓரளவிற்கே அதில் உண்மையுள்ளது.

 இங்கு வீழ்ச்சியடைந்திருப்பது உற்பத்தி அளவு மட்டுமே ஒரேடியாக தொழில் துறையைக்கூறமுடியாது. அதாவது ஒரு தொழிலாளி கொழுந்து பறிக்கும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே அது. பராமரிப்பு ,தேயிலை கன்றுகளை நடல் போன்றவற்றில் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக போட்டி நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் ஒரு தொழிலாளி பறிக்கும் கொழுந்தின் அளவு மிகக்குறைவு. கென்யாவில் 3035 கிலோவாகவும் ,இந்தியாவில் 25 கிலோவாகவும் வியட்நாமில் 30 கிலோவாகவும் இருக்கும் அதே வேளை இலங்கையில் அது 1220 கிலோவாக உள்ளது. நிலத்தினதும் ஊழியத்தினதும் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்தி செலவு இங்கு அதிகமாக உள்ளது. ஒரு ஹெக்டேயருக்கான தேயிலை விளைச்சல் கென்யா மற்றும் இந்தியாவில் 2300 கிலோவாக இருக்க இலங்கையில் 1688 கிலோவாகவே உள்ளது. இது தொடர்பான தகவல்களை ‘இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் என்ற ‘எனது புதிய நூலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

கேள்வி: அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போதைய சூழலில் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 1200 ரூபா வரை இருத்தல் வேண்டும் என்று கூறியிருந்தீர்களே?

பதில்: உண்மை அது தான். ஆனால் அத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் முன்வருவதில்லை. அவர்கள் நட்டக்கணக்கை காட்டுகின்றனர். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர அத்துறை நட்டமடையவில்லை. அப்படி நட்டம் ஏற்பட்டால் கம்பனிகள் இப்படி இயங்க முடியாது. தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டுமே? மேலும் ஆய்வு ரீதியான தரவுகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அப்போது தான் வாதம் புரிய முடியும். 1984 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் பற்றிய ஒரு அறிக்கையை நாம் தயாரித்து வழங்கியிருந்தோம். அதை சிறப்பாக முன்னெடுத்தார் அவர். இறுதியில் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.

கேள்வி: தற்போது ஏன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை?

பதில்: அக்காலகட்டத்தில் தொழிற்சங்க செயற்பாடுகள் அதிகம். அதற்கு அரசாங்கமும் ஏனையோரும் பயங்கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வேகம் இருந்தது. தற்போது அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. தொழிற்சங்க அணுகுமுறைகள் முற்றாக இல்லாது போய்விட்டன அல்லது அவை பற்றி இப்போதுள்ளவர்களுக்கு தெரிய வில்லை எனலாம்..இதை அரசாங்கமும் கம்பனிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

கேள்வி: மாதச் சம்பள முறை சாத்தியமாகாதா?

பதில்: இல்லை அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரே தொகை சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகங்களால் முடியாது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி ஒரே அளவில் இருப்பதில்லை. அது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

கேள்வி: தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்தை ஏன் அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை?

பதில்: முதலில் இம்மக்களின் பிரச்சினைகளை இங்குள்ள அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கண்டு கொள்ள வேண்டும்.அதாவது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் ஒரேடியாக இவர்களை பின்தங்கிய சமூகம் என்று அடையாளப்படுத்த முடியாது. மெதுவாக முன்னேறி வரும் சமூகம் எனலாம். இங்கிருந்து கல்வியியலாளர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். ஆனால் அரசியலில் கற்றவர்களின் செயற்பாடுகள் அவசியம். அல்லது அவ்வாறானவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளல் மிக முக்கியம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலகட்டத்தில் இப்பணியை அவர் சிறப்பாக முன்னெடுத்திருந்தார். எனினும் இப்போது எவரையும் இவ்விடயத்தில் நான் குறை கூறவில்லை. ஏனெனில் காலமாற்றங்கள் அனைத்தையும் மாற்றுவனவாக உள்ளன. ஆனால் கல்விமான்கள் ,கொள்கை வகுப்பாளர்களை நிச்சயமாக அரசியல்வாதிகள் அரவணைத்துச் செல்லல் வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்பதை விட வேறு என்ன தான் கூற முடியும்?

கேள்வி:கல்விப் புலத்திலுள்ளோர் சமூக மாற்றத்துக்கு வித்திட முடியாதா?

பதில்: நிச்சயமாக முடியும் ஆனால் இப்போதுள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதே? தற்போதைய சூழலில் பல ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு மிகவும் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இதில் அடக்க முடியாது ஆனால் ஒரு கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் மட்டுமே பெறுபேறுகளை அடைய முடியும். இதை ஒரு வருமானம் தரும் தொழிலாக என்று இவர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து சேவை மனப்பான்மையும், சமூகத்தை வளர்க்க கல்வி அவசியம் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லாது போய்விட்டது. எமது காலத்தில் அது சாத்தியப்படலாம் இப்போது அப்படி முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்படியல்ல. இன்று மலையக கல்விப்புலத்திலுள்ளோர் சிலர் தனித்தனியாக அமைப்புகளை நிறுவி சமூக உயர்வுக்கு பாடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஆதரவு கிடைக்கும் நிலைமை உள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை. இவற்றையெல்லாம் தாண்டி சில நல்ல ஆசிரியர்களும் அதிபர்களும் பாடு பட வேண்டியுள்ளது.

கேள்வி: தனி வீட்டுத்திட்டங்களை வரவேற்கின்றீர்களா?

பதில்: வரவேற்கின்றேன் ஆனால் 7 பேர்ச் காணி என்பது அவர்களுக்கு போதாது. நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று தொழிலாளர்கள் மாற்றுத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு அதற்கான சூழல் அமைய வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் அவர்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். கால் நடை வளர்ப்புக்கு இல்லாவிட்டாலும் உப உணவுப்பயிர்ச்செய்கைகள் சிறிய அளவிலான பண்ணைகள், சிறு தொழில் முயற்சிகளுக்கு உரிய இடம் அவர்களுக்கு வேண்டுமே?

கேள்வி: பெருந்தோட்டங்களும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் அபிவிருத்தியடைய அரசியல் ரீதியாக என்ன நகர்வுகளை மேற்கொள்ளலாம்?

பதில்: பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். இச்சபைகளுக்கு வாக்களிக்கும் மக்களாக இவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி சேவைகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களை திருப்திப் படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை விட இம்மக்களின் நீண்ட காலத்தேவையை கருத்திற்கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசியல்வாதிகள் முனைப்போடு செயற்படல் அவசியம்.

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates