Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

"கள்ளத்தோணி" நூலுக்கு அணிந்துரை - வி. முத்தையா


கள்ளத்தோணி என்கிற இந்த நூல், மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வியலைப் பதிவு செய்து வெளியாகியுள்ள நூல்களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட முடியும்.

நூலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் நூலாசிரியரைப் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நூலாசிரியர் சரவணன், ஆழ்ந்த படிப்பறியும் தோய்ந்த ஆய்வியல் சிந்தனையும் கொண்டவர். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுகளையும், சான்றாதாரங்களையும், கிடைத்தற்கரிய  ஆவணங்களையும் தேடித்தேடிச் சேகரித்துத் தருவதில் சளைக்காத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.  மலையக மக்களின் வரலாற்றையும் அவர்கள் எதிர்கொண்ட வாழ்வியல் துயரங்களையும் குறித்து காக்கை இதழில் அவர் தொடர்ந்து எழுதிவரும் பதிவுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை.  வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து அவர் சொல்லாடல் செய்யும் பாங்கு கிறுகிறுக்க வைக்கும். ஈழம் குறித்தும் ஈழப்போராட்டம் குறித்தும், போராட்ட வாழ்வியலில் மலையக மக்களின் வரலாறு குறித்தும் எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் கிழக்கின் தொடுவானமாக உயர்ந்து நிற்பவர் மட்டுமல்ல.  காக்கைக்குக் கிடைத்த அரிய செல்வம் சரவணன்.   

இவர் எழுதியுள்ள கள்ளத்தோணி என்கிற இந்நூலில், "எந்த சிங்கள பௌத்தத்தின் பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையுடன் எந்தவிதப் பூர்வீகத் தொடர்புமில்லை.  பௌத்தமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது.  சிங்கள மொழி உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளியும், சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது என்பதை சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே முன்வைக்க முடியும்"  என நெஞ்சை நிமிர்த்துகிற போது மலையக மக்களின் வாழ்வுரிமையையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் சொடுக்கிக் காட்டுகிறார்.

மாதத்தில் 26 நாட்கள் பணி செய்யாவிட்டால் மொத்த மாதச் சம்பளமும் ரத்து செய்யப்படும் என்றிருந்த 1930 களில், சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களிடையே முழங்கி அவர்களிடையே விழிப்புணர்ச்சி மிக்க கருத்துகளைப் பரப்பி வந்த இடதுசாரி இயக்கச் சிந்தனையாளரான ‘பிரஸ் கேர்டல்’ பற்றி விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக, நாட்டு மக்களிடையே ப்ரஸ்கேர்டல் குழப்பத்தை விளைவிப்பதாகக் கருதி நாடு கடத்த முடிவெடுத்து அரச சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 34 உறுப்பினர்களில் 27 பேர் எதிர்த்தும் 7 பேர் ஆதரித்தும் வாக்களித்த விவரத்தைச் சொல்லி அந்த ஏழுபேரில் ஒருவர் ஜி.ஜி. பொன்னம்பலம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

காலனித்துவத்தின் காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை 1880 வரை மலபாரிகள் என்றே அழைத்து வந்ததாக The Blue book of Ceylon என்கிற இலங்கையின் ஆவணத்தை மேற்கோள்காட்டி இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த "மலபார் கூலிகள்" என்று அழைத்ததையும் சுட்டி, தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், ரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்களே இறக்கப்பட்டதால் "இந்தியக் கூலிகள்" என்று பெயரிட்டு அழைத்ததையும் அவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்கூட கூலிச் சட்டங்கள் என்றே அழைக்கப்பட்டதையும் மிக அழகாக விவரித்துள்ளார்.

1881 இல் வெளியான குடித்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில்தான்  இறக்குமதி செய்யப்பட்ட தமிழர்களை "இந்தியத்தமிழர்" என்று அரசாங்கம் பதிவு செய்துள்ளது. "தோட்டகாட்டான்", "கள்ளத்தோணி" என்கிற இழிச்சொற்களால் அழைக்கப்பட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை இலங்கைவாழ் தமிழர்களின் சனத்தொகையைவிட அதிகரித்த காலத்தில் தான் அதாவது ஒரு நூற்றாண்டு கடந்த பின்னர்தான் இந்திய வம்சாவளியினர் என்கிற பெயர் பெற முடிந்தது என்றும் சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை விட்டுத் துரத்தும் அவலம் நேரிட்ட               போதுதான் இனி இந்தியாவுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனக்கூறி "மலையகத் தமிழர்" என்ற அடையாளத்தை நிறுவிக் கொண்டதாகவும் இந்த நிலையில்தான் இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், இசுலாமியர்கள் போல மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்கிற கருத்தாக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மலையக மக்களிடையே பேசுபொருளாகி இருப்பதாகவும் பதிவிட்டிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. 

1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் பலர் இலங்கையில் பல பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.  1983 கலவரத்திற்காக மலையகத்தை அச்சுறுத்தியதின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து அந்த மக்களை விலகி இருக்கச் செய்துவிட முடியும் என சிங்களப் பேரினவாதம் கருதியது என்றும் ஆனாலும் கணிசமானோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈழப்போராட்டக்களத்தில் நின்றதைத் தடுக்க இயலவில்லை என்றும் செய்துள்ள பதிவு முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.

நாடற்றவர்களாகக் கணக்கிடப்பட்ட  9,75,000 பேரில் 5,25,000 மேல் இந்தியாவும் 3,00,000 பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது மீதமுள்ள 1,50,000 லட்சம் பேருக்கு பிற்பாடு முடிவெடுப்பது என்பது தான் சிரிமாவோ - சாஸ்திரி  ஒப்பந்தத்தின் முக்கியச்சாரம். அதன் மூலம் உயிரும் உணர்வும் மிக்க மனிதர்கள் வெறும் எண்களாகப் பார்க்கப்பட்டதாகவும் 1967 முதல் அமலாகத் தொடர்ந்த இந்த ஒப்பந்தம் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கைக் குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என்று முக்கூறாகப் பிரித்து வீசியதாகவும் துயரம் தோய்ந்த பதிவு ஒன்றையும் இந்நூலில் தந்திருக்கிறார். 

1947 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு, 1948 ஆம் ஆண்டின் வாக்குரிமை பறிப்பு, 1964 ஆம் ஆண்டின் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டின் சிரிமா - இந்திரா ஒப்பந்தம் எல்லாமே மலையக மக்களுக்கு தீராத் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியது என்பதை கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்டுகிறார்.

1974 மே 18இல் தார் பாலைவனத்திலுள்ள பொக்ரைன் என்னுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்த இந்தியாவைத் தனிமைப்படுத்த பாகிஸ்தான் பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக, இந்தியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தை முறியடிக்க உதவிய இலங்கைக்கு பிரதி உபகாரமாகத்தான் கச்சத்தீவு இந்தியாவால் தாரை வார்க்கப்பட்டது என்பதையும் ஆவண ஆதாரங்களோடு உடைத்திருக்கிறார்.

சிங்களத்தவரின் கொடூரங்களையும் மலையகப் பெருவெளியின் புவியியலையும்  தொட்டுக்காட்டி இந்நூலின் வழியே ஒரு புதிய சிந்தனையை விதைக்க முயன்றுள்ளார் நூலாசிரியர்.  வரலாற்றுத் தரவுகளை சிங்களர்கள் கட்டிக்காக்கும் ஆவணங்களிலிருந்தே வெளிப்படுத்த முயன்றுள்ளதன் மூலம் சிங்களர்களின் கட்டுக்கதைகளை சுக்குநூறாக உடைத்தெறிகிறார்.  

காலத்தை நிறுத்திக் கேள்வி கேட்கும் வலிமையும் வல்லமையும் கொண்ட சரவணனின் எழுத்து வல்லூறுகளின் உறக்கத்தைத் தொலைக்கும்.

தோழமையுடன்,
வி. முத்தையா
(ஆசிரியர் - காக்கைச் சிறகினிலே)
14-12-2019

மன்னாரில் தமிழ்ப் பெயர்பலகை வீரவன்சவின் ஆணையால் மீண்டும் சிங்களத்துக்கு மாற்றம்

இன்று மாற்றப்பட்டிருக்கும் பலகை -
கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் விமல் வீரவன்சவால் மன்னார் செல்வாரியில் பனை அபிவிருத்திச் சபையின் ‘ பனந்தும்பு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டது பெயர்ப்பலகையைத் தான்.

அதன் பெயர்ப்பலகை தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் இடப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையைக் கண்டு கடுப்பேறிய விமல் வீரவன்ச கடும் ஆவேசத்துடன் அதனை திறக்கப்பட்ட அந்த பலகையை கழற்றி எறிந்து விட்டு உடனேயே சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுததாகவும் வரும் வகையில் மாற்றும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டு அதை மாற்றியே விட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்டதை வெற்றிப் பெருமிதத்துடன் தான் அதை மாற்றிவிட்டதாக சிங்களவர்களுக்கு இன்று அவரின் முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார். இதை வரவேற்று சிங்களவர்கள் பலர் அவரை வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடக்கப்பட்ட போது அங்கே பெயர்ப்பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமயாக விமர்சித்து கூட்டங்களில் பேசியதுடன், பத்திரிகை மாநாடு நடத்தி கண்டித்ததும் நினைவிருக்கலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக ஏதாவது அரச மட்டத்தில் ஏதாவது ஒரு அதிர்ச்சியை நாளாந்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சனிக்கிழமை திறந்துவைத்த நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆனயீட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது. என்று இட்ட முகநூல் பதிவு. இதனை வெளியிட்ட இரண்டு மணித்தியாலத்தில் 3400 பேருக்கும் மேல் பகிர்ந்திருக்கிறார்கள். 1300 பேர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை வரவேற்றே அக்கருத்துக்கள் காணப்படுகின்றன.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதில் எந்த மொழி மீறலுமில்லை, சட்ட மீறலுமில்லை.

அரசியலமைப்பில்
அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தின் பிரகாரம் அரசகருமமொழி, தேசிய மொழிகள், கல்வி மொழி, நிர்வாக மொழிகள், சட்டவாக்க மொழி, நீதிமன்றங்களின் மொழிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் அரசகருமமொழியென சிங்களத்தை குறிப்பிட்ட போதும். 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இந்த விதிகள் மாற்றப்பட்டன. அதன் பிரகாரம் “தமிழும் அரசகரும மொழிகளில் ஒன்றாதல் வேண்டும்” என்று 18.(2) பிரிவு திருத்தப்பட்டது.

அதுபோல 17.12.1988 அன்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின் மூலம் மொழி பற்றிய முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரிவு 22 (1) நிர்வாக மொழி குறித்து இப்படி கூறுகிறது.
''சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத் தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத் தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக்கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் எனச் சனாதிபதி பணிக்கலாம்"
என அரசியலமைப்பு கூறுகிறது. 

தென்னிலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சகல பிரதேசங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழிக்கே முன்னுரிமையும் வழங்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  தமிழுக்கு சமவுரிமை வழங்கப்படுவது கூட கிடையாது. அதற்காகத் தான் அதனை அமுல்படுத்துவதற்கென்றே “அரச கரும மொழிகள் திணைக்களம், அமைச்சு மட்டுமன்றி அதற்கென்று ஆணைக்குழுகூட கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் அரச பதாகைகளில், வெளியீடுகளில் ஏன் முதலாவது சிங்களத்தில் இடப்படுகிறது என்று தமிழர்கள் எவரும் கேள்வி கேட்டதில்லை. மாறாக தமிழிலும் வெளியாடாத போதும், தமிழ் மொழியில் பிழையாக எழுதப்படுகின்ற வேளைகளில் மட்டும் தான் முறைப்பாடு செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அங்குள்ள “நிர்வாக மொழி” தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்பட்ட நடைமுறையே.

1956: (2) - "மத மறுமலர்ச்சிகளின் வகிபாகம்" - என்.சரவணன்


1956 நிலைமைகளை விளங்கிக் கொள்வதாயின் சில வரலாற்றின் பக்கங்களை மீளப் புரட்டிப் பார்த்தால் இலகுவாகிவிடும் என்பதால் சற்று சுருக்கமாக காலனித்துவக் காலத்திள் இருந்து வந்த வளர்ச்சியை வகமாக பார்த்து விடுவோம்.

இலங்கைக்கான தேசியவாதம் இன்று தனித்த இனத் தேசியவாதமாகவோ அல்லது தனித்த மதத் தேசியவாதமாகவோ வளர்ந்து நிற்கவில்லை. மாறாக அது சிங்கள இன + பௌத்த மத + சிங்கள மொழி ஆகியவை கூட்டாக இணைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்துகிற தேசியவாதமாக வளர்ந்து நிற்கிறது.

ஆக, இனமும், மொழியும் தேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பதை புரிந்துகொள்ள கடினம் இருக்கமுடியாது. ஆனால் மதம் இதில் சேர்த்துக் கொண்டதற்குப் பின்னால்; மகாவம்ச கால நீட்சியுடைய வரலாறொன்று இருக்கிறது. அதுவும் இலங்கைத் தீவின் ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டு இலங்கை என்கிற வடிவம் கொடுக்கப்பட்டு பிற் காலத்தில் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டபோது அது “சிங்கள - பௌத்த” தேசியமாக பெரும்பான்மை மக்களால் புனையப்பட்டு அதே ஐதீகம் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது.

5000 ஆண்டுகளுக்கு இலங்கைத் தீவு தான் பௌத்தத்தை காக்கப் போகிறது என்று புத்தர் கூறி விட்டு இறந்ததாக புனையப்பட்ட மகாவம்சக் கட்டுக்கதையின் வகிபாகம் குறைத்து மதிக்கத்தக்கதல்ல. 

“சிங்கபாகுவின் மகன் விஜயன் 700 பேர்களுடன் வந்திருக்கிறார், தேவர்களின் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலைநிறுத்துவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக” என்று புத்தர் இந்திரனிடம்வேண்டுகிறார்.

அதாவது புத்தரால் தெரிவு செய்யப்பட்ட நாடு இலங்கை, பௌத்தத்தைக் காக்க தெரிவு செய்யப்பட்ட இனம் சிங்களவர் என்கிற  (Choosen country, Choosen Nation) ஐதீகமே பிறர் மீதான வெறுப்பையும், எதிர்ப்பையும் ஆழமாக விதைத்து வைத்திருக்கிறது.

காலனித்துவத்தின் மதம்
இலங்கையின் சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இரண்டு தற்செயல் கரையொதுங்கள் நிகழ்ந்துள்ளன.
  • கி.மு 543 இல் தம்பபன்னியில் கரையொதுங்கிய கப்பலில் வந்த விஜயன் (மகாவம்சத்தின் படி)
  • இந்து சமுத்திரப் புயலால் 1505 ஆம் ஆண்டு காலியில் கரையொதுங்கிய கப்பலில் வந்திறங்கிய போர்த்துகேய கப்டன் லோரன்ஸ் அல்மேதா.
இருவருமே 2000 ஆண்டுகள் இடைவெளியில் தற்செயலாக கரையொதுங்கியவர்கள்.

1505 ஆம் ஆண்டு காலி கரையோரத்தில் ஒதுங்கிய கப்பலின் கப்டன் லோரன்ஸ் அல்மேதாவின் வரவே இலங்கையை அடுத்த நான்கரை நூற்றாண்டுகளுக்கு காலனித்துவத்தின் பிடிக்குள் சிக்குற வைத்தது.

இந்தக் காலப்பகுதியில் முதலில் போர்த்துக்கேயர் 1505-1640 வரையும் ஒல்லாந்தர் 1640-1796 வரையும்  ஆங்கிலேயர்கள் 1796–1948 வரையும் ஆண்டார்கள் என்பதை நாமறிவோம். போர்த்துகேயர் இலங்கையில் மத மாற்றத்தில் காட்டிய அக்கறை அளவுக்கு ஒல்லாந்தர் காட்டவில்லை. கத்தோலிக்க மதத்துக்குப் பதிலாக ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்துக்கு இலங்கையின் பௌத்தர்ர்களையும், இந்துக்களையும் மட்டுமன்றி கத்தோலிக்கர்களையும் மாற்றுவதில் அக்கறை காட்டிய போதும் முன்னர் இருந்த இறுக்கம் இருக்கவில்லை. ஆனால் இலங்கை ஆங்கிலயர்களின் பிடிக்குள் போனதும் மீண்டும் கத்தோலிக்க மதம் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

1815 இல் செய்து கொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஐந்தாவது பிரிவின்படி பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்கள் உத்தரவாதமளித்தாலும் 1818 கிளர்ச்சியை அடக்கிய பின்னர் இலங்கை தரப்பினருக்கு வழங்கிய உடன்பாடுகளை இலகுவாக மீறினார்கள். 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் நேரடி மதத் தலையீடாக கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை இருக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மிஷனரி சபைகளின் வருகைக்கு ஆங்கிலேய அரசு அனுசரணை வழங்கவே செய்தது. சுதேசிய மக்களிடம் மதத்தை மட்டும் பரப்பாது கல்வியையும் சமூக சீர்திருத்தப் பணிகளையும் முன்னெடுத்ததானது ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அதற்கு முன்னர் போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் தமது நேரடி மத போதகர்களைக் கொண்டே தேவாலயங்களை உருவாக்கி இயக்கியது.

அந்த வகையில் ஆங்கிலேயர்கள் இலங்கையை பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மிஷனரி அமைப்புகள் உள்நுழையத் தொடங்கி விட்டன. 1804-1818 வரையான 13 ஆண்டுகளுக்குள் அப்படி வந்த ஐந்து கிறிஸ்தவ மிஷனரி சபைகள் முக்கியமானவை.
இந்த சபைகளின் செயற்பாடுகளால் இலங்கையில் நாடாளாவிய ரீதியில் கிறிஸ்தவ மதப் பரப்பல் தீவிரம் பெற்றது. கிறிஸ்தவ பிரச்சாரம் அதன் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. மாறாக ஒரு கட்டத்தில் சுதேசிய மதங்களின் மீதான புனைவுகளைப் பரப்பி, வெறுப்புணர்வையும் ஆங்காங்கு பரப்பத் தவறவில்லை.

தமது பிரசங்கங்களிலும், மதப்பரப்பு கூட்டங்களிலும், தமது பிரச்சார பிரசுரங்களிலும் பௌத்தத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். 

இதன் விளைவே சுதேசிய மதங்களின் மீளெழுச்சி. பௌத்த மறுமலர்ச்சியும், சைவ மறுமலர்ச்சியும் இதன் விளைவே.

மிஷனரிகள் ஆங்கிலப் பாடசாலையை நடத்திய அதே வேளை, தங்களது நோக்கத்தையடைய சிங்களத்தையும், தமிழையும் போதனா மொழியாக்கினர் என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. அதாவது ஆங்கில மொழியை நிர்ப்பந்திக்கும் பணியை அவர்கள் முன்னெடுக்கவில்லை. அறிவுக்காக ஆங்கில மொழியை கற்பிக்கத் தொடங்கிய அதே வேளை சுதேசிய மொழியை வளப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் அவர்கள் காட்டிய அக்கறை சந்தேகமற்றது.  ஆங்கிலேயர்கள் சுதேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தை கோல்புறூக் அரசியல் திட்டக் காலத்தில் கொண்டுவர எத்தனித்த காலத்தில் மிஷனரி பாடசாலைகள் பலமாக இருந்தன. அவற்றுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக அச்சபைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே மானியம் வழங்கத் தொடங்கியது. 

இலங்கையில் ஆங்கில மொழி, கத்தோலிக்க மதம், ஆங்கிலேய பண்பாட்டு முறைகள் என்பவற்றால் சுதேசிய பாரம்பரிய பண்பாடு நலிந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவந்த காலத்தில் தான் அவற்றுக்கு எதிரான கலகக் குரல்கள் எழத் தொடங்கின.
பௌத்த மறுமலர்ச்சி
1800 களின் நடுப்பகுதிக்குப் பின்னர் கிறிஸ்தவர்களின் பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்வினையாற்றும் போக்கு தெற்கிலும், வடக்கிலும் எழுச்சியுற்றது. தெற்கில் மிகெட்டுவே குணானந்த தேரர், ஹிக்கடுவே சுமங்கள தேரர், வெலிகம சுமங்கள தேரர் போன்றோர் பௌத்த மறுமலர்ச்சிக்கு தலை கொடுத்தார்கள்.

பௌத்த மத மறுமலர்ச்சியின் போது நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடலாம்
  • புதிய பௌத்த விகாரைகளை அமைத்து விஸ்தரித்தல்.
  • மிஷனரி கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவியது
  • தமது பௌத்த மத பிரச்சாரத்துக்கும், மிஷனரி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அச்சகங்களை உருவாக்கி பல நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுபிரசுரங்கள் போன்ற வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கியமை.
இலங்கையில் 1862இல் வெளியான முதலாவது சிங்கள பத்திரிகை "லங்காலோக". கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்கு அந்த பத்திரிகையை பயன்படுத்தினார்கள். அந்த அச்சு இயந்திரத்தை  ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய பண உதவி செய்தவர் அன்றைய சீயம் நாட்டு (தாய்லாந்து) மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொவிகம சாதியல்லாதோருக்காக சீயம் நிக்காயவை தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர்.

இதன் பின்னர் திகதியையும், இடத்தையும் குறித்து போது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களை நடத்தினார்கள். இலங்கையின் வரலாற்றில் “பஞ்சமகா விவாதம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரபலமான விவாதம் அது.

சைவ மறுமலர்ச்சி
வடக்கில் சைவத்துக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்த கிறிஸ்தவ சக்திகளுக்கு எதிர்வினையற்றும் பணிகளும் தொடங்கப்பட்டன. மேற்படி பணிகளைப் போலவே அச்சு இயந்திரம் கொண்டுவருதல், பிரசுரங்களை வெளியிடுதல், சைவ பாடசாலைகளை நிறுவுதல், சைவக் கோவில்களை நிறுவுதல், புனரமைத்தல் போன்றன நிகழ்ந்தன.

ஆறுமுகநாவலர் இந்தப் பணிகளுக்கு தலைமை கொடுத்தார். 1849 இலேயே அவர் அச்சு இயந்தரத்தை வாங்குவதற்காக  சதாசிவம்பிள்ளையுடன் சென்னைக்கு சென்றார். அந்த பயணத்தில் தான் அவருக்கு “நாவலர்” என்கிற பட்டமும் சூட்டப்பட்டது. அவர் சென்னையிலேயே தங்கியிருந்து சூடாமணி நிகண்டுரை, சௌந்தரியலங்கரி போன்ற நூல்களை அச்சிற் பதிப்பித்தார். அதன் பின்னர் தான் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஆனால் நாவலரின் ஆரம்பகால பதிப்புகள் தமிழ், சைவ சமயம் என்கிற வரையறைக்குள் தான் இருந்தது. அச்சகம் தொடங்கப்பட்டதன் இலக்கும் ஆங்கிலேயே எதிர்ப்பைக் கொண்டதல்ல. ஆனால் பிற்காலத்தில் தான் அவர் சைவ சமயத்துக்கு எதிரான கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்தை எதிர்த்து எழுதிய பலரின் எழுத்துக்களை பதிப்பிக்கத் தொடங்கினார்.

அவற்றில் ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், (முத்துக்குமாரகவிராசர்), அஞ்ஞானக் கும்மி (சிலம்புநாதபிள்ளை), வச்சிரதண்டம், சைவ தூஷண பரிகாரம், மித்தியாவாத நிதர்சனம், சுப்பிர போதம் போன்றவை முக்கியமானவை. 

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் வடக்கிலும், தெற்கிலும் நிகழ்ந்த இந்த கிறிஸ்தவ எதிர்வினைப் பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும், சம்பந்தப்படாததாகவும், ஒன்றையொன்று அதிகம் அறியாததாகவும் ஏக காலத்தில் நிகழ்ந்தது தான்.

தெற்கில் பஞ்ச மகா விவாதத்தைத் தொடர்ந்து பௌத்த எழுச்சியொன்று உருவானது. அந்த வழியில் உருவானவர்கள் தான் அநகாரிக்க தர்மபால போன்றோர். இந்த விவாதத்தால் கவரப்பட்டு அமெரிக்காவிலிருந்து வந்து கேர்னல் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துதலைக் கொடுத்தார். அவரும் பிளாவுட்ஸ்கியும் சேர்ந்து பிரம்மஞான சங்கத்தை ஆரம்பித்து பௌத்த மிஷனரி பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவினார்கள். அடிமட்டத்திலிருந்து, வசதி படைத்த மேட்டுக்குடியினர் வரை இந்த பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்ள ஏதுவானது. அப்படி இணைத்துக் கொண்டவர்கள் தான் இலங்கைக்கு சுதந்திரம் கோரும் சக்திகளாகவும் நாளடைவில் ஆனார்கள்.

1883 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தனத்தன்று கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. ஒரு உயிரும் பலியானது. நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு அந்த கலவரம் பரவியிருந்தது. சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், பலர் காயப்பட்டனர். இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது அது. "Kotahena Riots" என்கிற ஒரு விசாரணை அறிக்கையையும் ஆங்கிலேய அரசு பின்னர் வெளியிட்டது.

இந்தக் கலவரத்தைப் பற்றி முறைப்பாடு செய்வதற்காகவும் ஒல்கொட் இங்கிலாந்து சென்று பல முக்கிய வெற்றிகளை பௌத்த தரப்புக்கு ஏற்படுத்திக் கொண்டு வந்தார்.

அதன்படி வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து வெசாக் விடுமுறை காலனித்துவ ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956 பண்டாரநாயக்க ஆட்சியில் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல்

மூடப்படும் அபாயத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகள் - க.பிரசன்னா

  • மத்திய மாகாணத்தில் 240
  • சப்ரகமுவ மாகாணத்தில் 230
  • ஊவா மாகாணத்தில் 158
நாடுமுழுவதும் தற்போது 13 வருட கட்டாயக் கல்வியானது நடைமுறையில் இருந்துவருவதால் சகலருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் நாடுமுவதுமுள்ள பாடசாலைகளுக்கு வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமமான முறை பின்பற்றப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1486 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக 2017 ஆம் ஆண்டின் கல்வியமைச்சின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மூடப்பட்டுள்ள பாடசாலை விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி கல்வி அமைச்சிடம் கோரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (ED/RTI/1907/316) நாடளாவிய ரீதியில் 50 மாணவர்களுக்கும் குறைந்த 1444 பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளில் 275 பாடசாலைகள் வட மாகாணத்திலும் 240 பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும் 230 பாடசாலைகள் சப்ரகமுவ மாகாணத்திலும் 158 பாடசாலைகள் ஊவா மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் ஆகக்கூடுதலாக கேகாலை மாவட்டத்தில் 119 பாடசாலைகள் மூடப்படவேண்டிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு அதிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகள் பெருந்தோட்ட மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளாகும். அதனால் புதிய பாடசாலைகள் அவர்களுக்கு பொருத்தமான சூழலில் காணப்படுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விடயமாகும். தற்போது நாடளாவிய ரீதியில் 10,194 பாடசாலைகள் காணப்படுவதுடன், இவற்றில் மத்திய மாகாணத்தில் 1519 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 1129 பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 900 பாடசாலைகளும் காணப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 50 மாணவர்களுக்கும் குறைவான 1458 பாடசாலைகள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கையில் நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சிடம் இல்லையென தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டிருந்தன. ஆனால் பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதற்கு மாணவர்களின் வீழ்ச்சி, நாட்டில் ஏற்படுகின்ற குழப்ப நிலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள், நகர்புற பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லுதல், தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாமை, பாடசாலைகளை ஒருங்கிணைத்தல் என்பனவே காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1444 பாடசாலைகள் காணப்படுவதாகவும் அப்பாடசாலைகளில் 9171 பேர் அதிபர் மற்றும் ஆசிரியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூடப்படுகின்ற பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் கல்விக்கற்கக்கூடிய புதிய பாடசாலைகளை வலயக்கல்விப்பணிப்பாளர் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும் மூடப்படும் பாடசாலைக்கட்டிடங்களை மூன்று மாதங்களுக்குள் வலயக் கல்விப்பணிமனையானது இன்னுமொரு வலய கல்வி அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 353 தேசிய பாடசாலைகளும் 9841 மாகாண பாடசாலைகளும் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளுக்கிடையில் வளங்கள் சமமாக பகிரப்படாமையும் தூர கடப்பிரதேசங்களாகவும் காணப்படுகின்றமை, கட்டாய கல்வி தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமை, வறுமை, மாணவர்களை பரீட்சைகளுக்குத் தோற்றவிடாமல் தடுத்தல் போன்ற பல காரணிகள் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் தடையை ஏற்படுத்துகின்றன. அதேவேளை ஒரு ஆசிரியருடன் இயங்குகின்ற 54 பாடசாலைகளும் இரண்டு ஆசிரியர்களை கொண்ட 97 பாடசாலைகளும் 3  5 ஆசிரியர்களை கொண்ட 723 பாடசாலைகளும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வரவு  செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கிடப்படுவதாக கூறப்பட்டாலும் 1.7 வீதமே ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை ஒதுக்கப்படும் நிதியும் பாடசாலைகளுக்கு சென்றடையாத நிலை மற்றும் செலவளிக்கப்படாத நிதி என்பவையும் மற்றுமொரு பிரச்சினையாக இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 75 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 36 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 83 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 40 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 103 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 76 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தினால்கூட பாடசாலைகளின் வளங்களை சீராக்கி தரமுயர்த்த முடிவதுடன் மாணவர்களின் தேவைகளையும் நிறைவேற்றமுடியும் இதனால் பாடசாலைகளை அநாவசியமாக மூட வேண்டிய தேவை ஏற்படாது.
அதேவேளை இலங்கையில் விஞ்ஞான பாடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 45 வீதமானவர்களே அதற்கான தகுதியை பெற்றவர்களெனவும் கணித ஆசிரியர்களில் 15 வீதமானோரே அதற்கான தகுதியை பெற்றவர்களாகவும் புள்ளிவிபரங்களில் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஒருவேளை இதனால்கூட மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியிருக்கலாம் அல்லது வேறு பாடசாலைகளை தெரிவு செய்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் அடிமட்ட மக்களில் 10 வீதமானவர்கள் மட்டுமே உயர்கல்வியை தொடர்வதாகவும் உயரிய சமூகத்தில் 73 வீதமானோர் உயர் கல்வியை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் உயர் கல்வி கற்கும் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்துக்கு 12,500 ரூபா பிரத்தியேக வகுப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய தேவை இலங்கையில் இருக்கின்றது. கல்விக்காக சாதாரண மாணவர்கள் கடுமையாக போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் பாடசாலைக்கான மாணவர்களின் வருகை குறைவதும் பாடசாலைகளை மூடவேண்டியதும் தேவையாக மாறிவிடுகின்றது. எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மாணவர்களையும் கல்வியையும் விடுவிக்கவேண்டிய தேவை இருக்கின்றது.

ஒருசில பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதனால் வேறு தரமான பாடசாலைகள் கிடைக்குமென பலரும் கருத முடியும். ஆனால் தற்போது மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பாடசாலைகள் தூர பிரதேசங்களிலோ அல்லது கஷ்டப் பிரதேசங்களிலோ இருந்தால் புதிதாக கிடைக்கும் பாடசாலைகள் இன்னும் தூரமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவை இன்னும் மாணவர்களை சிக்கலுக்குள் கொண்டுசெல்ல வாய்ப்பிருக்கின்றது. எனவே இவை தொடர்பாக கல்வி அமைச்சும் மாகாண கல்வி அமைச்சும் நடவடிக்கையெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளையும் அவற்றின் வளங்களையும் பாதுகாப்பதற்கு கல்விச் சமூகமும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

நன்றி - தினக்குரல்

கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்

இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின்
முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி

இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இலங்கையை ஆள்வதற்கென்று ஆங்கிலேயர்களுக்கு ஒரு அரசியல் அமைப்புமுறையும் நாடாளுமன்ற நிர்வாக முறையும் தேவைப்பட்டது. இதற்காக ஒழுங்குகளை ஆராய்வதற்காக 1829 ஆம் ஆண்டு வில்லியம் கோல்புறூக், சார்ல்ஸ் கமரூன் ஆகியோரின் தலைமையில் ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பிரேரித்த அமைப்புமுறையைத் தான் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தம் என்கிறோம்.

முதலாவது சுதேசிய பிரதிநிதிகள்
கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட 15 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டநிரூபன சபையில் உத்தியோகபற்றுள்ள 9 உறுப்பினர்களும், உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்டதாக அது அமைக்கப்பட்டது. அதன்படி உத்தியோகபற்றற்ற அறுவரில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர் -1, தமிழர் -1, பறங்கியர் – 1. என்கிற அடிப்படையில் அங்கத்துவம் வகித்தார்கள். அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (J.G. Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் (J.G.Hillebrand) முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.

இவர்களில் ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்னவின் பரம்பரையில் வர்ந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க என்பது இன்னொரு அரசியல் கிளைக்கதை.

தேர்தல் அறிமுகமில்லாத இந்தக் காலப்பகுதியில் ஆளுநர் தான் விரும்பிய ஒருவரை தன்னிச்சையாக தெரிவு செய்யும் வழக்கமே இருந்தது. ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்ட்டனுக்கு 9 உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களை நியமிப்பது இலகுவாக இருந்தது. ஆனால் உத்தியோகபற்றற்ற 6 பேரைத் தேடிபிடிப்பதும் தெரிவு செய்வதும் சிரமமாக இருந்தது. ஐரோப்பியர் மூவரையும் பறங்கியர் ஒருவரையும் கண்டு இலகுவாக கண்டு பிடித்துவிட்டார். 

எஞ்சிய இரு பிரதிநிதிகள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் முதலாவது கூட்டம் 01.10.1833 அன்று இலங்கை சுதேசிகள் எவரும் இல்லாமலே கூடியது. இதை அன்றைய குடியேற்றக் காரியதரிசி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக தனது பிரதான மொழிபெயர்ப்பாளர்களாக இருந்த ஆறுமுகம்பிள்ளை, பிலிப்ஸ் பண்டிதரத்ன ஆகிய இருவரையும் முழுச் சம்பளத்தோடு இளைப்பாறச் செய்துவிட்டு 30.05.1835 இல் உத்தியோகபற்றற்றவர் வரிசையில் இருத்தினார் ஆளுநர். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை மகா முதலியாக இருந்தார். பிலிப்ஸ் பண்டிதரத்ன முதலியாராக இருந்தார். 

இதன்படி இலங்கைத் தமிழர்களின், முஸ்லிம்களின் முதலாவது பிரதிநிதியும் அவர் தான். இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சுதேசிய அங்கத்தவரும் அவர் தான் எனலாம். 

அப்போதெல்லாம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை தமிழர் என்கிற அடையாளத்தின் கீழேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை இருந்தார். பிற்காலத்தில் இதே வம்சாவளியில் வந்த சேர்.பொன்.இராமநாதன் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை எதிர்த்து வாதிட்டது இன்னொரு தனிக்கதை.

பெயர் குழப்பம்
அவரின் பெயரை பலரும் பல குழப்பகரமான பெயர்களைக் கொண்டு அழைப்பதை அவதானிக்க முடிகிறது. க.சி.குலரத்தினம் எழுதிய பிரபல நூலான “நோர்த் முதல் கோபல்லாவரை” (1966) என்கிற நூலில் ஆறுமுகத்தா பிள்ளை என்று அழைக்கிறார். சேர் பொன் இராமநாதனின் சரிதையை (The life of Sir Ponnambalam Ramanathan - 1971) எழுதிய எம்.வைத்திலிங்கம் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஏ.ஜே.வில்சனின் நூல்களிலும் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்றே அழைக்கப்படுகிறார்.  எஸ்.ஆறுமுகம் தொகுத்த இலங்கைத் தமிழர் சரிதை அகராதி (DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon -1997) நூலில் ஆறுமுகம்பிள்ளை என்றே குறிப்பிடுகிறார். வி.முத்துக்குமாரசுவாமி எழுதிய “Founders of Modern Ceylon eminent Tamils” (1973) என்கிற நூலிலும் ஆறுமுகம்பிள்ளை என்றே ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். நாமும் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி என்றே அழைப்போம்.

வாழ்க்கைக் குறிப்பு
கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். மூத்த சகோதரன் வாரித்தம்பி கொழும்பு செக்கட்டித் தெரு பகுதியில் வந்து குடியேறி வர்த்தகப் பிரமுகரானார். அங்கிருந்து முகத்துவாரத்தில் ஆமைத்தோட்டம் பிரதேசத்தில் வீடு வாங்கி வாழ்ந்தார்.  பொன்னம்பலம் குடும்பத்தினர் பிற்காலத்தில் கொழும்பை மையப்படுத்திய அரசியல் தலைவர்களானது இங்கிருந்து தான் ஆரம்பமானது. இலங்கையின் பெரிய மேட்டுக்குடி பிரமுகர்களும், வர்த்தகர்களும் குழுமியிருந்த மையமாக அப்போது கோட்டை, மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு போன்ற பிரதேசங்கள் இருந்தன. பிற காலத்தில் தான் கறுவாத் தோட்டப் பகுதியான இன்றைய கொழும்பு 7 பகுதி உயர் வர்க்க செல்வாக்குள்ள மேட்டுக்குடியினரின் மையமாக மாறியது. பொன்னம்பலம் குடும்பத்தினரும் கொழும்பு 7க்கு குடிபெயர்ந்தார்கள்.

1795 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வசமிருந்து திருகோணமலைக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். யாழ்ப்பாணம், கல்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கோட்டைகளும் சரணடைந்தன. அதனைத் தொடர்ந்து அன்றைய டச்சு கவர்னர் களுத்துறை, காலி. மாத்தறை கோட்டைகளையும் பிரித்தானியரிடம் ஒப்படைக்க முன்வந்தார். 1796 இல் இறுதியில் கொழும்பும் இயல்பாகவே ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. இலங்கையில் பூரண ஆட்சியை நிலைநாட்டும் வரையான காலப்பகுதியில் மெட்ராசில் இருந்து கவர்னர் தான் இலங்கையின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்.

நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான கணிசமான பணியாளர்களை அடையாளம் கண்டு தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் வாரித்தம்பி.13 வயதேயான குமாரசுவாமியையும் அவர் தான் கொழும்புக்கு அழைத்து கவனித்து வந்தார்.

இங்கிலாந்து அரசரின் ஆணைப்படி இலங்கையும் தனியான காலனி நாடாக நிர்வகிப்பதற்காக தனியான ஒரு ஆளுநரை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி முதலாவது ஆளுநராக பிரெடெரிக் நோர்த் 1798 ஒக்டோபரில் அரசரால் நியமிக்கப்பட்டார். ஆனாலும் 1802 ஆம் ஆண்டு உறுதியாக இலங்கை பிரித்தானிய முடியின் கீழ் உத்தியோகபூர்வமாக வந்துவிட்டதை உறுதிசெய்யும் வரை இலங்கை இந்தியாவில் இருந்த ஆளுநரின் பணிப்பின் கீழ் தான் இயங்கியது.

பிரெடெரிக் நோர்த் வந்த வேகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பிரபுக்களினதும், ஆங்கிலேய நிர்வாகிகளதும் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலையொன்றை உடனடியாக அமைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 28.10.1799 அன்று கொழும்பில் அப்பாடசாலை நிறுவப்பட்டது. அதே வேளை தமது நிர்வாகத் தேவைக்காக உள்ளூரிலிருந்தே பலரை உருவாக்கும் நீண்ட காலத் தேவையை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். கொழும்பு வுல்பெண்டால் தேவாலயத்தின் வடகிழக்கு மூலையில் 18 சிங்கள மாணவர்களைக் கொண்டு ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. Schroter  பாதிரியாரால் தமிழ் பிரிவு உருவாக்கப்பட்ட போதும் சிலரே கற்றனர். அது தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் தான் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும் அப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். குமாரசுவாமியின் அபாரமான ஆற்றல் அவரை வேகமாக அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு சென்றது.

ஆற்றிய சேவை
1805 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களின் பின்னர் அன்றைய அரசாங்கத்தின் பிரதிச் செயலாளராக இருந்த ரிச்சட் பிலாஸ்கட் (Richard Plasket) குமாரசுவாமி தேர்ந்த திறமையாளர் என்று சான்று பகர்ந்தார். 1808 ஆம் ஆண்டு குமாரசுவாமி ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் க்கு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1810 மே மாதம் அவர் ஆளுநரின் தலைமை தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஆக்கப்பட்டு முதலியார் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 26 வயது மட்டும் தான் ஆகியிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய செட்டிமார் சமூகத்துக்கும், யாழ் சைவ வேளாள சமூகத்துக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். சேர் பொன் இராமநாதனின் சரிதையை எழுதிய எம்.வைத்திலிங்கம் அந்நூலில் இந்த கெடுபிடியில் வெள்ளாளர் சமூகத்தின் ஆதரவுடன் குமாரசுவாமி எப்படி தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார் என்கிற செய்திகளையும் பதிவு செய்கிறார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேல் குமராசாமி பரம்பரையினர் கொழும்பில் இருந்தபடி தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு மீண்டும் தமது மூத்த குடிகளின் மண்ணான யாழ்ப்பாணத்துக்கே போய் சேர்ந்தது ஒரு நூற்றாண்டின் பின்னர் தான். அது ஏறத்தாழ 1920களில் நிகழ்ந்த இன்னொரு கதை.

1800களின் ஆரம்பத்தில் கொழும்பில் வர்த்தகச் சமூகமாக இருந்த செட்டி சமூகத்தின் செல்வாக்கும் வளர்ந்திருந்தது. 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் :கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும்.

1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஆளுநரின் நேரடி உத்தியோகத்தரராக இருந்த இந்தக் காலப்பகுதியில் கண்டியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பப்பட்ட படையோடு ஆறுமுகம் பிள்ளையும் அனுப்பப்பட்டிருக்கிறார். 1815 பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து 14 நாட்களாக படையுடன் அவர் சென்றிருக்கிறார். கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் படிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பட்ட வேளை அவரையும் அவரின் உறவினர்களையும் வேலூருக்கு நாடு கடத்தும் பணிகளில் அரசருக்கு உதவ பணிக்கப்பட்டிருந்தார்.

அடிமையொழிப்பு
ஏற்கெனவே போர்த்துகேய, ஒல்லாந்து காலத்தில் தொடரப்பட்ட அடிமைமுறை ஆங்கிலேயரின் ஆட்சியிலும் ஆரம்பப்பகுதியில் தொடர்ந்தது. அடிமைகளை உரிமையாகக் கொண்டிருந்தோர் கணிசமானோர் நாட்டில் இருக்கவே செய்தார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக விற்கப்பட்டார்கள். அல்லது தந்தையிடம் இருந்தி பிள்ளைகளைப் பிரித்து, தாயிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து, மனைவி, கணவனை தனியாக பிரித்தோ விற்ற கொடுமை தொடர்ந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கைத் தீவில் மாத்திரம் மொத்தம் 28,000 அடிமைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 22,000 அடிமைகள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆண் அடிமையின் விலை 17 ரூபாய், ஒரு பெண் அடிமையின் விலை 34 ரூபாய்கள். மொரிசியசிலும், மேற்கிந்தியாவிலும் அடிமை முறை 1833 இல் தான் இல்லாது செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இங்கிலாந்தின் இளவரசர் ரெஜென்ட் (Regent) இன் பிறந்த நாளின் நினைவையொட்டி 12.08.1816 அன்று அடிமையொழிப்புக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அன்றைய இலங்கைப் பிரமுகர்களின் பெரும் பட்டியலொன்றை (Ceylon Ordinances - 1853) காண முடிகிறது.  இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் அனைவரும் சாதி ரீதியாக பிரிந்து கையெழுத்திட்டிருப்பது தான். வெள்ளாளர், கரையார், வண்ணார், செட்டியார் என நீள்கின்றன அந்த குழுமங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அளவில் கையெழுத்திட்டிருக்கும் இந்தப் பட்டியல் பிரதேசவாரியாகவும், சாதி மற்றும் இனவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  கையெழுத்திட்ட கொழும்பு மலபாரிகள் (கொழும்புத் தமிழர்கள்) பட்டியலில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் பெயரும் அடங்கும்.

அடிமைமுறையிலிருந்து பகுதி பகுதியாக வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்ட விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் இருந்து 1819 இன் இறுதிப் பகுதிகளில் பள்ளர், கோவியர், நளவர் சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை அன்றைய நீதிமன்றம் தலையிட்டு மீட்ட விபரங்களை மேற்படி அறிக்கையில் பக்கங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயரின் பாராட்டு
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் சேவையைப் பாராட்டி 1819 ஆம் ஆண்டு ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக்  பதக்கமொன்றை தங்க மாலையுடன் சேர்த்து பரிசாக அளித்தார். அந்த பதக்கத்தில் இப்படி பொறிக்கப்பட்டிருந்தது.
“இந்தப் பதக்கம் கௌரவ சேர் ரொபர்ட் பிரவுன்றிக் அவர்களால் ஆளுநர் தனது பதவிக் காலத்தில் முதன்மைச் சேவையாளரும் அரசாங்கத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் திருப்திகரமான சிறந்த பொதுச் சேவையாற்றியதைப் பாராட்டி ஆறுமுகநாதப்பிள்ளை குமாரசுவாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.” 
குமாரசுவாமி விசாலாட்சி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.

ஆறுமுகம்பிள்ளை  ஆளுநர் சேர் எட்வர்ட் பேகட் (Sir Edward Paget - 1822-1824), ஆளுநர்  சேர் எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes 1824- 1831) ஆகியோரிடமும்\ சேவையாற்றியிருக்கிறார்.
குமாரசுவாமி குடும்பத்திலிருந்து வந்தவர்கள்
காலம் ஆதல்
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 ஆம் ஆண்டு சட்டநிரூபன சபைக்கு தெரிவானபோதும் அதற்குப் பின்னர் அடுத்த கூட்டத் தொடருக்கு கூட அவரால் செல்ல இயலவில்லை. அதற்குள் அவர் 07.11.1836 அன்று இறந்து போனார்.  அதாவது ஏறத்தாழ அவர் ஒன்றரை வருடத்துக்குட்பட்ட காலம் தான் அப்பதவியில் இருந்திருக்கிறார். ஒரு அரசியல் பிரதிநிதியாக அந்த முதல் சட்ட நிரூபன சபையில் குறிப்படத்தக்க வகிபாகத்தை எந்த அங்கத்தவரும் ஆற்றவுமில்லை ஆற்றியிருக்கவும் முடியாது என்பதையே அன்றைய அரசியல் அதிகார கட்டமைப்பின் வரலாறு மெய்ப்பிக்கிறது. ஆனால் முதலாவது சுதேசிய அங்கத்தவர் என்கிற பெருமையையும், பதிவையும் அவர் கொண்டிருக்கிறார். சிவில் சேவையில் அவரின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. வரலாற்று முக்கியத்துவமும் பெற்றது. அதுபோல அவரின் அடுத்த சந்தியினர் அவரின் இடத்தை நிரப்பினார்கள்.

அவரின் இறப்பையடுத்து ஆளுநர் ரொபர்ட் ஹோர்ட்டன் அவருக்காக உணர்வுபூர்வமான அஞ்சலியுரையை 07.11.1836 அன்று ஆற்றினார்.  அவருடைய இடத்துக்கு இன்னொருவரை தெரிவு செய்வதில் ஆளுநருக்கு மீண்டும் சிரமமானது. ஒன்றரை வருடம் வரை குமாரசுவாமியின் இடத்தை ஆளுனரால் நிரப்ப முடியவில்லை. இறுதியில் கற்பிட்டியைச் சேர்ந்த சிறந்த சிவில் சேவை உத்தியோகத்தரும், கல்விமானாகிய சைமன் காசிச் செட்டியை உத்தியோகத்திலிருந்து இளைப்பாறச் செய்து உத்தியோகபற்றற்ற தமிழர் பிரதிநிதியாக நியமித்தார் ஆளுநர். 

குமாரசுவாமிக்குப் பின் சைமன் காசிச் செட்டியும் பின் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும் அவருக்குப் பின் ஆறுமுகம்பிள்ளையின் மகன் முத்துகுமாரசுவாமியும் அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கபட்டார்கள். குமாரசுவாமி குடும்பத்தவர்கள் இலங்கையின் முதலாவது அரசியல் சீர்திருத்தமான கோல்புறுக் கமரூன் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து டொனமூர் சீர்திருத்தக் காலம் வரை அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றில் குமாரசுவாமி போட்ட விதை என்பது எப்பேர்பட்டது என்பதை கடந்த ஒன்றரை நூற்றாண்டு அரசியல் நீரோட்டத்தில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு ஏற்படுத்திய அரசியல் திருப்புமுனைகளை அவதானித்தால்  வியப்பாக இருக்கும். அவருக்கு பின் வந்தோரைப் பற்றி நாம் அறிந்த அளவுக்கு அவரை அறிந்ததில்லை.

உசாத்துணைக்குப் பயன்பட்டவை
  1. Lakshmi Kiran Daniel - PRIVILEGE AND POLICY: THE INDIGENOUS ELITE AND THE COLONIAL EDUCATION SYSTEM IN CEYLON, 1912-1948 - Faculty of Modern History, Michaelmas Term, 1992
  2. க.சி.குலரத்தினம் - “நோர்த் முதல் கொபல்லா வரை” ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை - யாழ்ப்பாணம் 1966
  3. T.Duraisingam - Politics and life in our times - Vol - II - Printed in the Democratic Socialist Republic of Sri Lanka at Unie Arts (Pvt) Limited – 2000
  4. JOHN H. MARTYN - NOTES ON JAFFNA- Chronological, Historical, Biographical - etc. - American Ceylon Mission Press Tellippalai Ceylon - 1923
  5. A. J. Wilson - Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries - 2000)
  6. V.Muttucumaraswamy - Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II THE PIONEERS - THE FOUNDERS
  7. M. VYTHILINGAM -THE LIFE OF SIR PONNAMBALAM RAMANATHAN Vol.I, RAMANATHAN COMMEMORATION SOCIETY - COLOMBO 1971
  8. A COLLECTION OF LEGISLATIVE ACTS OF THE CEYLON GOVERNMENT FROM 1796: Colombo - William Skeen, Goverment printer, Ceylon - 1853
  9. S.Arumugam - Dictionary of Biography of the tamils of Sri Lanka – London - 1996
நன்றி - தினக்குரல்


இனப்பிரச்சினையில் '1956'இன் வகிபாகம்! (1) - என்.சரவணன்


இலங்கையின் இனத்துவ அரசியலின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்கு“1956” அரசியல் மாற்றத்துக்கு உரியது. சிங்கள பௌத்த தேசிய வாதம் பேரினவாதமாக உருவெடுத்து பாசிச வடிவத்துக்கு அண்மித்த நிலையை எட்ட அந்த மாற்றமே அத்திவாரத்தை ஸ்தூலமாக இட்டது.

சிங்களத் தேசியவாதிகள் இன்று வரை “1956 புரட்சி” என்றும், “1956 தர்ம யுத்தம்” என்றும் அந்த மாற்றத்தை இன்றும் அழைத்து வருகிறார்கள். 1956 அரசியல் மாற்றத்தை ஆட்சி மாற்றமாகவும், பண்டா செல்வா ஒப்பந்தம், சத்தியாக்கிரப் போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு, தனிச்சிங்களச் சட்டம் என்பனவற்றோடு மட்டுமே தகவல் ரீதியில் அறிந்து வைத்திருக்கிறோம். 

ஆனால் 1956 அரசியல் மாற்றத்துக்கான தயாரிப்புகள் எப்படி நிகழ்ந்தன? அதற்கு பின்னால் இருந்த சக்திகள், கட்சிகள், தனி நபர்கள் யார்? அவற்றின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் எவை? அவற்றின் தந்திரோபாய செயற்திட்டங்கள் எவை? பேரினவாதம் எப்படி அவற்றை வெற்றி கொண்டது? அதனால் விளைந்த பின்விளைவுகள் எவை? பின்வந்த தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான நியாயங்களை 56 அரசியல் மாற்றம் எவ்வாறு உருவாக்கியது? என்பவற்றை மேலும் சற்று துல்லியமான தகவல்களுடன் ஆராயும் தொடர் இது.

அம்மாற்றத்தைப் பற்றி தமிழில் இதுவரை அறியப்படாத பல விபரங்களை, விளக்கங்களையும் வெளிக்கொணரும் தொடர்.

பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு”  என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்”  என்றே அழைக்கிறார்.

சுதந்திரம் என்கிற பெயரால் காலனித்துவத்திடமிருந்து அதிகாரம் சிங்கள பௌத்தர்களிடம் கைமாறியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. அதற்கென்று ஒரு படிநிலை வளர்ச்சியுண்டு. இலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஆக்குவதற்கான சகல அத்திவாரங்களும் இடப்பட்ட காலக்கட்டம் இது தான்.

அதுவரை இலக்கு வைக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள் அல்லாதவர்கள் தான். ஆனால் 56 சிங்கள பௌத்தர்கள் அல்லாதர்வகளையே ஓரங்கட்டும் அளவுக்கு பாசிச வடிவத்துக்காண தளத்தை இட்டுக்கொடுத்தது. 

ஆங்கிலேய பண்பாட்டு வழிமுறையையும், ஆங்கில மொழி, கிறிஸ்தவ செல்வாக்கு என்பவற்றை ஓரந்தள்ளிவிட்டு தேசிய பண்பாட்டு மூலங்களை அதற்குப் பதிலாக பிரதியீடு செய்வது என்கிற திட்டத்துடன் இறங்கியவர்கள் இலங்கையின் தேசியத்தை சிங்கள – பௌத்த தேசியமாக குறுக்கிவிட்டதற்குப் பின்னால் சிங்கள பௌத்த கூட்டு வேலைத்திட்டமே பெரும் பாத்திரம் வகித்தது. இவை அனைத்துக்கும் அவர்களுக்கு குறுகிய காலம் போதுமானதாக இருந்தது. சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு அரச அனுசரணையும், சிங்கள சிவில் சமூகத்தின் பெரும் வரவேற்பும், மேட்டுக்குடி வர்க்கத்திலிருந்து சாதாரண சிங்கள தொழிலாளர் வர்க்கம் வரை ஆதரவு கொடுத்து அவற்றை நிறைவேற்றினார்கள்.

சிங்களவர்களாக இருந்து அவர்கள் பௌத்தர்களாகவும் இல்லாவிட்டால் அவர்களும் அந்நியப்படுத்தலுக்கு இலக்கானார்கள். குறிப்பாக சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தேசத்தின் “தூய” மண்ணின் மைந்தர்களாக பார்க்கப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அந்நியர்கள் என்றால் பௌத்தம் மட்டும் அந்நியம் இல்லையா என்கிற தர்க்கம் கொஞ்சம் கூட எட்டியும் பார்ப்பதில்லை. சிங்கள இனமும், சிங்கள மொழியும் கூட அந்நியமே, அந்நியக் கலவையே என்கிற வாதத்துக்கும் சற்றும் இடமிருப்பதில்லை.

சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் தம்மை இலங்கையர்களாக உணரமுடியாத நிலைக்கு தள்ளிச் செல்லுகின்ற செயற்திட்டங்கள் இங்கு தான் ஸ்தூலமாக வகுக்கப்பட்டது. 

பௌத்தத்தின் காப்பாளராக இலங்கையை புத்தர் தெரிவு செய்ததாகவும் அப்பேர்பட்ட இலங்கைக்கு வந்தடைத்திருக்கும் விஜயனையும், அவனின் தோழர்களையும் காக்கும்படி புத்தர் தேவர்களிடம் வேண்டிக்கொண்டதாகவும் விஜயனின் வம்சாவழியே விருத்தியடைந்து சிங்கள இனமாக ஆனதாகவும் . விஜயனே முதல் சிங்களவன் என்றும் புனையப்பட்டிருக்கிறது மகாவம்சத்தில். அக்கதைக்கு இலக்கிய, வரலாற்று, புனித செல்வாக்குக்கு உட்படுத்திய சிங்கள பௌத்தத் தரப்பு அதற்கு மேலும் வலு சேர்த்து அரசின் உத்தியோகபூர்வ  வரலாற்று ஆவணமாக ஆக்கியதும் இந்த காலத்தில் தான். பிக்குமாரின் கைகளிலும், ஆய்வாளர்களின் கைகளிலும் இருந்த மகாவம்சத்தை மக்களிடம் பல்வேறு வடிவத்தில் கொண்டு சேர்த்ததும் இந்தக் காலப் பகுதியில் தான்.

பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபதத் தொடங்கியது இந்தக் காலத்தில் தான். இந்தத் தொடக்கமே இன்று காவியுடை பாசிசம் வரையான நீட்சிக்கு அடிகோலியது.

அரச / அரசாங்க / அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் வலிமையை இங்கிருந்து தான் பௌத்த மகாசங்கத்தினர் ஆக்கிக்கொண்டார்கள்.

சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை பண்டாரநாயக்க தெரிவு செய்யவில்லை. அப்பேர்பட்ட நிகழ்ச்சிநிரலே ஒரு பண்டாரநாயக்கவை தெரிவு செய்தது. 

மொழித் தேசியவாதமானது தமிழர்களை மட்டுமல்ல இலங்கையில் அதுவரை அமைதியாக வாழ்ந்துவந்த பறங்கி இனத்தையே கூண்டோடு நாடுகடக்கச் செய்தது.

சிங்கள இனம் – பௌத்த மதம், சிங்கள மொழி ஆகியவையே இலங்கைத் தேசியத்தின் அடையாளங்கள் என்கிற கருத்துநிலைக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிய காலம். “இன + மத + மொழி”ச் சுத்திகரிப்பு என்பது அடுத்து வந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இன அமைதியின்மையை நாட்டில் ஏற்படுத்தியது.

சிங்கள பௌத்த பண்பாட்டின் பேரால் இலங்கையின் ஏனைய சுதேசிய இனங்களின் பண்பாடுகளை ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி இன, மத, மொழிச் சுத்திகரிப்பை அரசே முன்னின்று செய்யத் தொடங்கியது இந்தக் காலப் பகுதியில் தான்.

பண்டாரநாயக்கவை “பஞ்சமகா சக்திகள்” ஒன்று சேர்ந்து பதவியிலமர்த்தினர் என்பார்கள். அதாவது “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்) என்கிற ஐந்து சக்திகள். இந்த “பஞ்சமகா சக்திகள்” என்கிற கருத்தாக்கம் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கவில்லை.

பண்டாரநாயக்க ஆட்சி என்பது நிச்சயமாக நிறைகளையும் கொண்டிருந்தது. அதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதையும் பேசுவோம். ஆனால் இனத்துவ அரசியலை இனவாத வடிவத்துக்கு தள்ளி இலங்கையின் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு பின் தள்ளியதற்கான விதை அந்த ஆட்சியில் எப்படி இடப்பட்டது என்பதை மேலும் விரிவாகவும், விபரமாகவும், தெளிவாகவும் நாம் இந்தத் தொடரில் அலசுவோம்.

இலங்கையின் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் சரிவு தொடங்கிய காலகட்டம். சிங்களத் தேசியவாத சக்திகளின் வலையில் விழுந்து நாளடைவில் சிங்கள பௌத்த பேரினவாத போக்கின் அங்கமாக மாறத் தொடங்கிய காலகட்டம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியென்றால் அது “இடது சாரி சார்பு கட்சியே” என்கிற மாயைக்குள்  மக்களை பல தசாப்தங்களுக்கு தள்ளவைத்ததுக்கு அத்திவாரம் இங்கு இருந்து தான் இடப்பட்டது.

1956 ஆம் ஆண்டின் பௌத்தம் புத்துணர்ச்சியையும், எழுச்சியுனர்வையும் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வருடம் புத்தரின் 2500 புத்த ஜயந்தி வருடம். அப்படி புத்த ஜயந்தி வருடம் என்று அதனை அழைத்தாலும் கூட அது புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500 வருடமாகவே கொள்ளப்படுகிறது. அதாவது புத்தர் மரணித்த அந்த வருடம் கி.மு.544. அதே நாளில் தான் விஜயன் இலங்கை வந்தடைந்ததும், சிங்கள இனத்தின் உருவாக்கமும், இலங்கை ராஜ்ஜியமும் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்புகளும் பௌத்த உணர்வைத் தூண்டி பலன்களை அடைய வாய்ப்பு விரிந்தது என்றே கூறலாம்.

புத்த ஜயந்தியின் பாத்திரம், பஞ்சமகா சக்தி கருத்தாக்கம், பண்டாரநாயக்கவின் அரசியல் பரிமாண மாற்றம், சிங்கள மகா சபை, ஐ.தேகவில் இருந்து பிரிந்து சுதந்திரக் கட்சி உருவானதன் பின்னணி, பௌத்த தேசிய படை, பிக்கு பெரமுன, கண்டி சோஷலிச கட்சி, திரி சிங்களே பெரமுன, விப்லவகாரி சமசமாஜக் கட்சி , எக்சத் பிக்கு பெரமுன போன்ற இயக்கங்களின் தோற்றம் அவற்றின் கூட்டு வகிபாகம், பௌத்த ஆணைக்குழுவின் திட்டங்களை சுவீகரித்துக் கொண்ட விதம், “தச பனத” என்கிற “பத்துக் கட்டளைகள்” பண்டாரநாயக்கவை கட்டுப்படுத்திய விதம் என பல்வேறு அம்சங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.

அடுத்த வாரம் பண்டாரநாயக்கவின் அரசியல் நுழைவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நன்றி - தினக்குரல்

ஜனவரி 10 மலையக தியாகிகள் தின பிரகடமும், அனுஷ்டிப்பும்


மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா

கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது என்று மலையக உரிமைக்குரல் அமைப்பு தெரிவித்தது.

அத்துடன், நிகழ்வின் 2ஆம் அம்சமாக அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கள்ளத்தோணி’ நூல் வெளியிடப்படும்.

அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதேவேளை, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்தே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் இவ்விரு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

குடியுரிமை - என்.சரவணன்

புதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்யின் அறிவித்தலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இக்கட்டுரை அதைப் பற்றியதல்ல. குடியுரிமையின் வலியையும், வலிமையையும் நான் அறிவேன். இது அதைப் பற்றியது.  
2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு நாள் நோர்வே அரசு எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. நான் அன்று முதல் நோர்வேயின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாகவும், இனி இதுநாள் வரை எனக்கு இருந்த குடியுரிமையை நான் இழப்பதாகவும் அந்த கடிதத்தில் இருந்தது. 

ஒரு விதத்தில் அந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இனிமேல் நான் இலங்கையின் பிரஜை என்பது மறுபுறத்தில் வலித்தது. சற்று நேரத்தில் இன்னொரு விடயமும் என்னை உறுத்தியது.

ஆம் நான் அதுவரை இலங்கையின் பிரஜையாக இருந்ததுமில்லை. எந்தவொரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமையும் எனக்கு இருந்ததுமில்லை. இன்னும் சொல்லப்போனால் நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன். இல்லாத குடியுரிமையை நான் இனி எவ்வாறு இழக்கப் போகிறேன்? எனக்குள் நகைத்துக்கொண்டேன். 

இந்த செய்தியையும், நகைப்பையும் ஒரு பதிவாக முகநூலில் இட்டிருந்தேன். சிறிது நேரத்தில் வாழ்த்துக்கள் பல குவிந்தன, அதேவேளை "அதெப்படி குடியுரிமை இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறீர்கள்? எப்படி கடவுச்சீட்டு எடுத்தீர்கள்? எப்படி நோர்வே வந்து சேர்ந்தீர்கள்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளைப் பல நண்பர்கள் தொடுத்தார்கள். 

இந்த விவாதத்தைக் கண்ணுற்ற நண்பர் சீவகன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அப்போது லண்டன் பிபிசியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் அதே கேள்விகளைக் கேட்டார்.  

எனது பதில் தந்த ஆச்சரியத்தில் இந்த விவகாரத்தை நாம் ஒரு பேசுபொருளாக்குவோம். என்று கூறி விட்டு என்னிடமும் இது குறித்து ஒரு நேர்காணலைச் செய்துவிட்டு இலங்கையில் இருந்து மனோகணேசன், காமினி வியங்கொட போன்றோரிடமும் இது தொடர்பிலான உரையாடலைச் செய்து BBCயில் அன்று இரவு தமிழிலும் சிங்களத்திலும் பதிவு செய்தார். இந்த உரையாடலைத் தொடர்ந்து வேறு பத்திரிகைளும் நேர்காணல் செய்தன. "விகல்ப" (vikalpa - மாற்று) என்கிற இணையத்தளத்தில் இதை ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தார்கள். 

என்னைப் போலப் பலரும் அந்த நிலையில் இன்றும் இருக்கிறார்கள் என்கிற செய்தி மீண்டும் பேசுபொருளாக ஆனது. 

0-0-0

எனது அம்மாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். இரு தரப்புமே இலங்கைக்குத் திருநெல்வேலி கட்டாரங்குளத்திலிருந்து வந்தவர்கள். என் அப்பாவும், அம்மாவும் அதற்குப் பின் வந்த மூன்று சந்ததியினரும் இலங்கையில் தான் பிறந்தார்கள். இவர்கள் இலங்கைக்கு வந்து இன்னும் ஓரிரு வருடங்களில் நூறாண்டுகள் ஆகப் போகின்றன. 

அப்படி இருந்தும் எங்களுக்குக் குடியுரிமை இருக்கவில்லை. இலங்கையில் இரண்டு மூன்று சந்ததியினர் தோற்றம்பெற்றதன் பின்னர் தமிழ்நாட்டுடனான உறவே அற்றுப் போய்விட்டது. எப்போதாவது இந்தியாவில் இருந்துவரும் அந்தப் பச்சை நிற கடிதங்களை என் பாட்டிக்கு நான் படித்துக் காட்டியிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தான் என் தந்தை என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று அங்கு வாழும் உறவுகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் எனது முதலும் கடைசியுமான பயணமும். அவருக்கும் கூட அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்தத் தொடர்புகளும் கிடைத்திருந்தன. 

இந்திய வம்சாவளியினரை விரட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், சட்டங்கள் அனைத்திலிருந்தும் தப்பி வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம். 

என் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர். அப்பாவோடும் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர் தான். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் வலுக்கட்டாயமாக நாய்களைப் போலப் பிடித்துக் கொண்டு நாடுகடத்தப்பட்ட அவலத்தை பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ள நேரிட்டது. நீண்ட பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு சுற்றிய பொலிசாரின்  கண்களில் படாமல் இருப்பதற்காகக் குறிப்பாக இரவு நேரங்களில் என் தாயாரின் மூத்த சகோதரனான எங்கள் அருச்சுனன் மாமா பல நாட்கள் மரங்களில் ஏறி இருந்து நித்திரை கொண்டதாக என் அம்மா கூறுவார். 

இந்தியா ஒரு புறம் "எங்களுக்கு இந்த மக்கள் வேண்டாம்!". "மீண்டும் வரத் தேவையில்லை!", "ஏற்கத் தயாரில்லை!" என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் "எங்களுக்கும் இந்த மக்கள் வேண்டாம்! இவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் பலாத்காரமாக நாடு கடத்தப்படுவார்கள்" என்று இலங்கை எங்களைக் கைவிட்டிருந்த காலம் அது. எந்த நாட்டுக்கும் வேண்டப்படாதவர்களாக இந்திய வம்சாவளியினர் ஆக்கப்பட்டிருந்த காலம் அது. தெரியாத தமிழ் நாட்டுக்குப் போவதை விடப் பிறந்து வாழ்ந்து வளர்ந்து, வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இதே நாட்டில் இருப்பதே நடைமுறை சாத்தியமான தெரிவு என்பதே எமது முடிவாக இருந்தது. 

எங்கள் குடும்பங்களிடம் இருந்த "சிகப்பு பாஸ்போர்ட்"களை (இந்தியக் கடவுச்சீட்டுகளை) எப்போதோ அழித்தும் விட்டனர். கேள்வி எழுப்பப்படும் தருணங்களில்; நாங்கள் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் தான் என்று கூறிக் கொள்வது வழக்கமாக இருந்தது. பிற் காலத்தில் அதிகக் கெடுபிடி இல்லாமல் இருந்தது. 

"எப்போதும் எந்த ஆவணங்களை நிரப்பும் போதும் இலங்கைத் தமிழர் என்றே நிரப்பு சரியா...?" என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். நானும் அப்படித் தான் செய்து வந்திருக்கிறேன். 

இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் 1987 யூலை 29 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக் குடியுரிமை இல்லாத இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடிகள் அனுபவிப்பவற்றை அனுபவிக்கக்கூடிய வகையில் சில சட்ட ரீதியான ஏற்பாடுகள் அமுலுக்கு வந்தது. அதன் பிரகாரம் ஒரு பிரமாணப் பத்திரமொன்றை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்துடன் பெற்று கடவுச் சீட்டையும் பெரும் வாய்ப்பு கைகூடியது. 

80களின் இறுதி என்று நினைக்கிறேன் அப்பா ஒரு நாள் என்னைக் கொழும்பு கொள்ளுபிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லச்சாமியை சந்தித்து இந்த பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தோம். அப்பா அப்போது எந்தளவு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தார் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உண்டு. இந்த வழியில் தான் நானும் கடவுச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன். இதன் அர்த்தம் உத்தியோகப்பூர்வமாகப் பூரண பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டேன் என்கிற அர்த்தமல்ல. ஆனால் 80 களுக்குப் பின் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை குறித்த கெடுபிடிகள் நிறையவே குறைந்திருந்தது. எனவே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கப் போய் அடையாளம் காட்டிக்கொள்வதன் மூலம் புதிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் அதற்கான முயற்சிகளைப் பலர் செய்துகொண்டதில்லை. நாங்களும் முயற்சிக்கவில்லை. 

என்னை முதன் முறையாக ஒரு நாடு; நீ இனி எங்கள் நாட்டுப் பிரஜை, இப்போதிலிருந்து உனக்கும் ஒரு நாடு இருக்கிறது, நீயும் இந்த நாட்டின் சகல பிரஜைகளைப் போலவே சமமான சக பிரஜை என்று எனக்கு அறிவிக்கும் போது எனக்கு வயது 39 ஆகியிருந்தது. அந்த உரிமையை எனக்கு நோர்வே என்கிற ஒரு வெள்ளைக்கார நாடு தரும் வரை நான் "நாடற்றவனே". எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து, என்னை ஆதரித்து, எனக்கு எனது நாட்டிலிருந்து எனது குடும்பத்தை அழைக்கவும், எனது அடுத்த சந்ததி நோர்வேஜியராக பிறக்கவும் அந்த நாடு வாய்ப்பைத் தந்தது. 

மூன்று தலைமுறையாக இலங்கையில் பிறந்து வாழ்ந்தும் தராத குடியுரிமையை; நாட்டுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே குடியுரிமையைத் தந்துவிட்ட நோர்வே நாட்டின் பெருந்தன்மையையும், மனிதாபிமான உணர்வையும் - ஜனநாயக நடத்தையையும் நான் கொண்டாடவே செய்கிறேன். 
1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 12 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும்   சாதிய தப்பி ஓடலின்  காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.
0-0-0 

2011ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நாட்டுக்குத் திரும்ப முடியாதவனாக நோர்வேயில் வாழ்ந்து வந்த காலம் அது. கொழும்பில் உள்ள எங்கள் வீட்டுக்கு ஒரு இளைஞன் கதவைத் தட்டினான். எனது அம்மா வெளியே வந்து  

"நீங்க யாரு தம்பி?" என்று கேட்டார். 

சித்தி தெரியலயா சித்தி... நான் முத்துகிருஷ்ணன் உங்க அக்கா மகன். என்று கதறிக்கொண்டே கிட்ட நெருங்க. அம்மாவும் அணைத்தபடி அழுதபடி அந்த அறிமுகம் நடந்தது. 

ஆம். எங்கள் சித்தி. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவர். அவரின் இளம் வயதில் அவர் இந்தியாவுக்கு பிடித்தனுப்பட்டபோது குடும்பத்தினர் எவருக்கும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. காணாமல் போன அவரைப் பற்றி தேடிக்கொண்டிருந்த போது ஒரு சில மாதங்களின் பின்னர் அவர் ஊர் வந்து சேர்ந்துவிட்டதாகத் தமிழகத்திலிருந்து உறவினர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தமிழகத்தை அறியாத எங்கள் சித்தி இலங்கையில் இருந்த குடும்பத்துடனான உறவு அறுக்கப்பட்டு தனியாக அங்கே சிக்கிக்கொண்டார். அங்கேயே பின்னர் திருமணமாகி குடும்பமானார். அப்படி தொப்புள்கொடி உறவு அறுக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட என் சித்தியின் மகன் தான் முத்துக் கிருஷ்ணன். 

கொழும்பில் தொடங்கப்பட்டிருந்த தமிழக "சூரியா ஹோட்டல்"இல் பணி புரிவதற்காக முத்து கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார். எங்கள் விலாசத்தைத் தேடி ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்து வந்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை முதற்தடவையாக என் தம்பி முத்துக் கிருஷ்ணனைச் சந்தித்து கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டேன். 

ஒட்டுமொத்த இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக நான் என்னை இடதுசாரி செயற்பாட்டாளனாக 90களில் ஆக்கிக்கொண்டேன். அதுபோல இலங்கையில் தமிழீழ மக்களின் விடுதலை சாத்தியமில்லாமல் இலங்கையில் ஒரு புரட்சிகர மாற்றமும் சாத்தியமில்லை என்று நம்பினேன். அதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டு இரகசிய, தலைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போராட்டத்தில் பொறுப்புகளையும் வகித்திருக்கிறேன். 

எதிர்காலத் தமிழீழத்தில் குடியேற விரும்பும் மலையக மக்கள் அனைவரும் வரவேற்கப்படுவார்கள் என்று எனது இயக்கம் உள்ளிட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் கூறின. தமிழீழ விடுதலை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்வதென்பது சக தேசமொன்று ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது; சமத்துவத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எவராலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, எதிர்காலத் தமிழீழத்துக்காக என்னை இப்போது கொடுத்தாலும் அங்கே நான் வந்து குடியேறப்போவதில்லை. இலங்கையே எனது நாடு அடுத்த போராட்டத்தில் எனது பங்களிப்பு தொடரும் என்றே என் சக போராளிகளுக்குக் கூறிக்கொண்டேன். 

இப்படியெல்லாம் கூறிக்கொண்ட காலத்தில் நான் பூரண பிரஜை அல்லாத ஒரு நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

நோர்வே எனக்கு ஒரு கையால் குடியுரிமையைத் தந்துவிட்டு மறு கையால் உன்னிடம் வைத்திருந்த முன்னைய குடியுரிமைத் தா என்று என்று கேட்டபோது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்கிற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. என் முன்னைய குடியுரிமையை இயல்பாகவே நான் இழப்பதாக அவர்கள் கருதிக்கொண்டதால் அவர்களுக்கு அது அவசியப்படவுமில்லை. அக்கறைப்படவுமில்லை. 

ஆனால் என்னிடம் இருந்திராத ஒரு குடியுரிமையை இழக்கப்போவதைப் பற்றிய அந்த அறிவிப்பு என்னை உலுக்கவே செய்தது. என் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்குவதான ஒரு உணர்வு எனக்கு இருக்கவே செய்தது. 

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணம் வரை எனது உடல் இங்கேயும் உயிர் எனக்கு உரித்தில்லாத என் தேசத்திலும் தான் இருந்துகொண்டிருக்கிறது. என் சக ஒடுக்கப்படும் மக்களுக்காகவே நிதமும் நினைத்தபடி இந்த எழுத்தாயுதத்தை இங்கிருந்து தவமாகச் செய்து கொண்டிருக்கிறேன். 

பிற்குறிப்பு 
“2009 ஆம் ஆண்டின் 5ஆம் இழக்க நாடற்ற ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம்” என்கிற சட்டம் 2009 பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை முன்மொழிவதில் பிரதான பாத்திரத்தை ஜே.வி.பி ஆற்றியிருந்தது. குறிப்பாக அப்போது ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சந்திரசேகர் இதனை நிறைவேற்றுவதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தார்.
1971 ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில் போது இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படை என்று வர்ணித்து இந்திய வம்சாவளியினருக்கு எ
திரான ஒரு போக்கைக் கொண்டிருந்த ஜே.வி.பி 2009 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பிராயச்சித்தத்தைத் தேடிக்கொண்டது என்றே கூறவேண்டும். இந்தச் சட்டத்தின் படி அதுவரை நாடற்றவர்களாக இருந்த அனைத்து இந்திய வம்சாவளியினரும் இலங்கைப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.
மேலும் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினர் பலரும் கூட இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெரும் வாய்ப்பைப் பெற்றார்கள். அவர்கள் இலங்கை திரும்பி இலங்கையர்களாக வாழ வழிவகுக்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 80,000 இந்திய வம்சாவளியினரில் 28,500 இலங்கை பிரஜாவுரிமை பெற விரும்பியோருக்கு விமோசனம் உண்டானது.
நன்றி - காக்கைச் சிறகினிலே
(இக்கட்டுரை என்.சரவணனின் "கள்ளத்தோணி" என்கிற நூலிலும் இடம்பெற்ற கட்டுரை)

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates