Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள சினிமாத்துறை (பவளவிழா 1947 - 2022)- என்.சரவணன்

இன்று முதலாவது சிங்கள திரைப்படமான "கடவுனு பொறந்துவ" வெளிவந்த பவளவிழா ஆண்டு (75 ஆண்டு நிறைவு) கடந்த 21 ஜனவரி 2022 ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்பட்டது. அந்த நாள் சிங்கள ஊடகங்களில் எல்லாம் செய்திகளும், கட்டுரைகளும் வெளிவந்திருப்பதைக் கண்டேன். சிங்களத் திரைப்பத்தின் ஆரம்பத்துக்கு வழிகோலிய தமிழர்களையும், தமிழ்ச் சமூகத்தையும் மறந்து தான் அந்த நினைவுகள் மீட்கப்படுவதை காண முடிகிறது.

இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree). அவர் யாழ்ப்பாணத்தில் 1869இல் பிறந்தவர். தமிழ் – பறங்கி குடும்பப் பின்னணியைக் கொண்டவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். அந்திரி இலங்கையில் அப்போது கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) மிகப் பெரிய புகைப்பட ஸ்டூடியோவாக இருந்த ஹோப்டோன் ஸ்டூடியோ (Hopetoun Studio) வை சொந்தமாக நடத்தி வந்தவர். இலங்கையின் புகைப்படத்துறை வரலாற்றில் தவிர்க்கமுடியாத நபர் அவர். ஆனால் சிங்கள மொழியில் வெளிவந்த வரலாறுகளில் ஏனோ தவிர்க்கப்பட்டவர். இலங்கையர்கள் சினிமாவை பார்க்க வைத்த முன்னோடி அவர்.

Adolphus William Andree).  அந்திரியின் “Hopetoun Studio”

“கடவுனு பொறந்துவ” வின் மூலம் சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவரும் தமிழர் தான். அத்திரைப்படம் தொடங்கும் போது முதலில் எம்.எஸ்.நாயகம் தோன்றி உரையாடுவார். அதன் பின் தான் எழுத்தோட்டம் தொடரும். (பார்க்க )

பெயர் பட்டியல் காண்பிக்கப்பட்டவுடன் முதலில் பதட்டத்துடனும், கவலையுடனும் ஒரு பெண்ணின் முகம் குளோஸ் அப்பில் காட்டப்பட்டுத் தொடங்கும். (கீழே காணொளி இணைப்பில் பார்க்கலாம்) அப்பெண் தான் இலங்கை திரைப்படத்தின் முதலாவது நாயகி. ருக்மணி தேவி என்று அழைக்கப்பட்ட டேசி டேனியல். அவரும் தமிழர். தான் தோன்றிய படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடியவர். அவரோடு கதாநாயகனாக நடித்த எடி ஜயமான்னவும் ருக்மணிதேவியும் வாழ்கையிலும் இணையர்களாக ஆனார்கள்.

83 கலவரத்தில் தமிழ் சினிமாக்கலைஞர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல சிங்கள சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தினார்கள் இனவாதிகள். இலங்கையின் சிங்களத் திரைப்படத்துறையை (இலங்கைக்கே திரைப்படத்துறையை) உருவாக்கி அறிமுகப்படுத்தியது சிங்களவர்கள் அல்லர். தமிழர்களே. சிங்கள சினிமாத்துறையை ஆரம்பித்து வைத்தது மட்டுமன்றி அதனை ஆரம்பத்தில் வளர்ப்பதிலும் முக்கிய இடத்தை தமிழர்கள் வகித்தார்கள். இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமான “கடவுனு பொறந்துவ” (உடைந்த வாக்குறுதி) 1947 ஜனவரியில் வெளிவந்தது. அதில் நடிகர்கள் பலர் சிங்களவர்களாக இருந்தாலும் அதனை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தி, தமிழ் திரைப்படங்களே ஆக்கிரமித்திருந்தன.

“கடவுனு பொறந்துவ” திரைப்படத்தைத் தயாரித்த எஸ்.எம்.நாயகம் (சுந்தரம் மதுரநாயகம்) மதுரையில் சோப்பு கம்பனி வைத்திருந்த வர்த்தகர். அவருக்கு தனியான திரைப்பட ஸ்டூடியோவும் திருப்பரங்குன்றத்தில் இருந்தது. அதில் அவர் ஏற்கெனவே திரைப்படங்களை உருவாக்கியிருந்தார். அவரின் தயாரிப்பில் 1946இல் உருவான “குமரகுரு” என்கிற திரைப்படத்தை இயக்கியவர் பெங்காலியரான ஜோதிஸ் சின்ஹா. அத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஓகஸ்ட் 15 அன்று வெளியானது.

வரலாற்றுப் பின்புலம்

உலகின் முதலாவது திரைப்படம் 1895 இல் திரையிடப்பட்டது. அது பேசாத் திரைப்படமாகத்தான் (Silent movie) வெளிவந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் தான் இலங்கையில் பேசும் பேசும் படத்தை மக்கள் கண்ணுற்றார்கள். 


ஆனால் 1925 இல் இலங்கையில் முதலாவது பேசாத் திரைப்படம் (silent movie) உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் பிரதான கதாநாயக பாத்திரத்தை ஏற்று நடித்தவர் என்.எம்.பெரேரா (பிற்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக ஆன அதே என்.எம்.பெரேரா). அவருக்கு அப்போது 20 வயது தான். இலங்கையின் முதலாவது திரைப்படக் கதாநாயகன் அவர் தான். “ராஜகீய விக்ரமய” (ராஜரீக சாகசம் - Royal Adventure) என்கிற தலைப்பிலான அந்தத் திரைப்படத்தை இயக்கியவரும் தமிழகத்தைச் சேர்ந்த குப்தா என்கிற தமிழர் தான். அதனைத் தயாரித்தவர் டி.ஏ.நூர்பாய் என்கிற போரா சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர். நூர்பாய் அதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரைப்படங்களை தருவித்து திரையரங்குகளுக்கு விநியோகித்து வந்த வர்த்தகர். இதில் உள்ள விசித்திரம் என்னெவென்றால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அந்த முதல் திரைப்படம் இலங்கையர் எவரும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அத்திரைப்படத்தை கொழும்பு பம்பலப்பிட்டியில் குதிரைப் பந்தயத் திடலுக்கு அருகாமையில் இருந்த பெரிய வீடொன்றை ஸ்டூடியோவாக உருவாக்கிக்கொண்டு படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தியாவில் இருந்து வந்து இத்திரைப்படத்தில் பணியாற்றினார். அது 1925 இல் பம்பாயிலும், சிங்கப்பூரிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் திரையிட கொணர்வதற்காக தயார் நிலையில் இருந்த போது வியாபார போட்டியின் காரணமாக அது பம்பாயில் எரிக்கப்பட்டுவிட்டது.

“கடவுனு பொறந்துவ”வை முதற் திரைப்படமாக அறியப்பட்டாலும் 1936 இல் “பலிகெனிம” (பழிவாங்குதல்) என்கிற ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது. அது 19. மே 1936 அன்று கொட்டாஞ்சேனை கெயிட்டி தியேட்டரில் முதலாவதாக திரையிடப்பட்டது. அதில் பிரதான கதாநாயக வேடத்தில் நடித்தவர் அன்றைய டவர் மண்டப நாடக நடிகரான என்.எம்.ஆர்.டயஸ். இதை இயக்கியவர் டவர் மண்டப இசையமைப்பாளராக இருந்த டபிள்யு,தொன் எட்வின். ஆனால் அது 30 நிமிடங்களை மட்டுமே கொண்ட ஒரு குறுந்திரைப்படமாக இருந்ததாலும் “ஊமைப் படமாக” அதாவது பின்னணிக் குரல்கள் அற்ற திரைப்படமாகவும் இருந்ததால் அதை ஒரு முழு நீள திரைப்படப் பட்டியலில் எவரும் சேர்ப்பதில்லை. ஆனால்  அதையே முதலாவது திரைப்படமாக பதிவு செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் இலங்கையின் முதலாவது பேசும் திரைப்படமாகவும் “கடவுனு பொறந்துவ”வைத் தான் குறிப்பிட முடியும்.

இலங்கையின் பழைய சினிமா கொட்டகை

1901இலேயே முதன்முதலாக இலங்கையில் திரைப்படம் தனிப்பட்ட ரீதியில் காண்பிக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் வெஸ்ட்  ரிஜ்வே மற்றும் “இரண்டாவது போவர் யுத்த” கைதிகளுக்காகவும் காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் அது. அதன் பின்னர் குறும் ஆவணப்படங்களாக போவர் யுத்த வெற்றி பற்றியும் விக்டோரியா இராணியின் மரணச்சடங்கு என்பவை இலங்கையில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களுக்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் சினிமாக்கொட்டகை அமைத்து “பயஸ்கோப்” காட்டும் முறை அறிமுகமானது. 1903 இலேயே நிலையான தியட்டர் “மதன் தியட்டர்” பேரில் உருவாக்கப்பட்டு இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

கெப்பிட்டல் தியேட்டரின் உரிமையாளர் அன்றைய பிரபல முஸ்லிம் வர்த்தகரான எப்.டீ.பாரூக். சிங்களத் திரைப்படமொன்றை தயாரிக்கும் நோக்கில் பாம்பே பைனியர் பில்ம்ஸ் கொம்பனி என்கிற ஒன்றை 1938இல் உருவாக்கி ஷாந்தா என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்காக சிங்கள மேடை நாடக நடிகர்களை  பம்பாய்க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கிடையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்து அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

இலங்கைக்கான பேசும் திரைப்படமொன்றை உருவாக்கும் முயற்சியில் முதலாவது ஈடுபட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எஸ்.துரைசிங்கம். 1940 களின் நடுப்பகுதியில் துரைசிங்கமும், கொலின் விஜேசூரியவும் அம்முயற்சிக்காக இந்தியாவுக்கு பயணித்தார்கள். இந்தியாவில் பிரலமாக ஓடிக்கொண்டிருந்த தெலுங்கு திரைப்படமான “லைலா மஜுனு” கதையைத் தழுவி “திவ்ய பிரேமய” என்கிற ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தனர். அதற்காக படக்குழுவுடன் மெட்ராஸ் புறப்பட்டார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இடைநடுவில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டு அனைத்தும் ஸ்தம்பிதமானது. படக்குழுவினரும் சில நாட்களில் இலங்கை திரும்பிவிட்டனர். அத்தோடு அந்த முயற்சியும் நின்றுபோனது. அது அப்போதே வெளிவந்திருந்தால் அது தான் இலங்கையின் முதலாவது பேசும் சினிமாவாக இருந்திருக்கும். ஆனால் அது பின்னர் 1948 இல் வெளியானது.

இதற்கிடையில் எஸ்.எம்.நாயகம், சாந்திகுமார் செனவிரத்ன ஆகியோர் இணைந்து சித்திரகலா மூவிடோன் (Chitrakala Movietone)  என்கிற திரைப்பட கம்பனியொன்றை ஆரம்பித்தார்கள். அதன் மூலம் கண்டி மன்னன் “ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்” அரசனின் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அதற்கான உத்தேச செலவு அதிகமாக இருந்ததால் அதைக் கைவிட்டு “அசோகமாலா” என்கிற வரலாற்றுக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார். ஆனால் அதற்கான சரியான திரைக்கதையை உருவாக்குவதற்காக ஒரு போட்டியை அறிவித்தார். அதற்காக 500 ரூபா பரிசுத் தொகையும் அறிவித்தார்.

அந்த போட்டியில் இறுதியில் சாந்திகுமார் செனவிரத்ன எழுதிய திரைக்கதை தான் வென்றது. அவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துவிட்டு திரைக்கதையை பெறுவதற்கு எஸ்.எம்.நாயகம் முன்வந்தபோதும் சாந்திகுமார் இறுதியில் உடன்படவில்லை. அக்கதையை வைத்து திரைப்படத்தை தயாரிப்பதில் முரண்பட்ட சாந்திகுமார் ‘சித்திரகலா மூவிடோன்’ நிறுவனத்திலிருந்து விலகி சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சிற்றம்பலம் ஏ கார்டினரை சந்தித்து திரைப்படத்தை உருவாக்கும் விருப்பைத் தெரிவித்தார். அவரும் திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் உடன்பட்டார். சாந்திகுமாரே அத்திரைப்படத்தை இயக்குவதற்கும் உடன்பட்டார்.

கடவுனு பொறந்துவ - ருக்மணி தேவியும், ஜயமான்னவும்

நாயகம் இதனால் சோரவில்லை. அவர் பீ.ஏடபிள்யு ஜயமான்னவை தேடி மினர்வா நாடகக் கம்பனியின் காரியாலயத்துக்குச் சென்றார். இறுதியில் அவர் முடிவு செய்த கதை தான் “கடவுனு பொறந்துவ”. இலங்கை முழுவதும் அப்போது 800 தடவைகளுக்கும் மேல் மேடையேற்றப்பட்ட நாடகக் கதை தான் அது. முதலில் இந்த முயற்சிக்காக எந்த சம்பளமும் இன்றி தான் நடித்துத் தருவதாக ஜயமான்ன கூறினாலும், இது ஒரு வியாபாரம் என்றும், இதற்காக முழு நாடகக் குழுவையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்றும். அதற்காக முழு நாடகக் கம்பனிக்கும் 25,000 ரூபாவை சம்பளமாகவும், மேலதிக செலவுகளையும் தாம் பார்த்துக் கொள்வதாகவும் பேசி முடித்தார். அது மட்டுமன்றி திரையிடலுக்குப் பின்னர் கிடைக்கும் இலாபத்தில் நூற்றுக்கு இரண்டு வீதத்தையும் தருவதாக வாக்களித்தார். ஜயமான்ன குழுவினர் முழுமையாக உடன்பட்டு 26.06.1946 அன்று இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டனர்.

மதுரை ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கும் வேலைகள் ஆரம்பமாகின. நாடகக் கதையை திரைக்கதையாக ஆக்கினார் பீ.ஏ.டபிள்யு.ஜயமான்ன. திரைப்படத்தை ஜோதிஸ் சின்ஹாவைக் கொண்டு தான் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். ஒளிப்பதிவை கே. பிரபாகர் செய்தார்.

பேர்சி ஜயமான்ன என்கிற லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகையாளர் முதலாவது திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவர் சிங்களத் திரைப்படத்தின் முதலாவது கதாநாயகனான ஜயமான்னவிடம் கண்ட பேட்டியில் ஒரு பகுதியையும் அக்கட்டுரையில் பகிர்ந்திருந்தார். 

மிகவும் சத்தமாக சிரித்துக்கொண்டு அந்தக் கதையை இப்படிக் கூறியிருக்கிறார்.

"திரைப்படம் பற்றிய எந்த அறிவும் எங்களுக்கு அப்போது இருக்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்குச் சொல்லித் தந்ததுமிலை. எனவே மேடையின் பின்னணியில் தொங்கவிடும் திரைச்சீலைகளையும், அலங்காரப் பொருட்களையும் கூட இங்கிருந்து கொண்டு சென்றோம். ஒரு நாள் எங்களை அந்த நாடகத்தை செய்து காட்டும் படி கூறினார்கள். அந்த மேடையில் ஆங்காங்கே லைட்டுகள் காணப்பட்டதால் முதலில் நாங்கள் அங்கே ஒளிப்பதிவு நடந்துகொண்டிருந்தாக நினைத்துவிட்டோம். எனவே அதற்கடுத்த நாட்களில் திரைச்சீலைகளை எல்லாம் சுருட்டிக்கொண்டு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தோம்.”

“அதன் பின்னர் தான் அவர்கள் எங்களுக்கு; ‘இதை திரைக்கதையாக்கி காட்சிகளாக பிரித்து, பிரித்து பகுதி பகுதியாகத் தான் ஒளிப்பதிவு செய்யப்படும்’ என்று தெளிவுபடுத்தினார்கள்.”

என்று சிரிப்பொலியுடன் கூறியிருக்கிறார். இன்றும் ஜயமான்ன இலங்கை சினிமாவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.

அசோகமாலாவுக்கு நேர்ந்த கதி

இதற்கிடையில் அசோகமாலா திரைப்படத்தை எடுப்பதற்காக சாந்திகுமார் செனவிரத்னவும் இந்தியாவை சென்றடைந்திருந்தார். 1946 நவம்பரில் அவர் மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரைப்படப் பணிகளை ஆரம்பித்தார். ஏற்கெனவே சாந்திகுமார் இந்தியாவில் நாட்டியக் கலையைப் பயின்றவர். அதுமட்டுமன்றி ஸ்டூடியோ வேலைகளையும் அறிந்திருந்தவர். அவர் தேசிய இசை, நாடக மரபை அறிந்திருந்தவர். அவர் அந்த ஸ்டூடியோவின் கலை இயக்குனராக இருந்த டீ.ஆர்.கோபுவுடன் இணைந்து அசோகமாலா திரைப்படத்தை இயக்கினார்.

அத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக முஹமட் ஹவுஸ் என்பவரை இணைத்துக்கொண்டார். டபிள்யு.தீ.எல்பர்ட் பெரேரா (அமரதேவ), மொஹிதீன் பேக் போன்றோர் இத்திரைப்படத்துக்கு ஊடாகத் தான் இசைக்களத்துக்குள் பிரவேசித்தார்கள். சாந்திகுமார் செனவிரத்ன அத்திரைப்படத்தில் தானே கதாநாயகனாகவும் வேடமேற்று நடித்தார். ஹெர்பி செனவிரத்ன, எமிலி திம்புலான, மைக்கல் சன்னஸ் லியனகே, தொன் எட்வர்ட் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆரம்பத்தில் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை உருவாக்குவதற்காக துரைசிங்கம் உள்ளிட்ட குழுவினரின் முயற்சி; அதன் பிரதான பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ஈ.சீ.பீ.விஜேசிங்க படத்தில் இருந்து நீங்கியதால் அப்பணிகள் இடைநின்று போனது. அதனால் அக்குழு அந்த இடைக்காலத்தில் இந்தியாவில் இருக்கும் காலத்திலேயே; அதில் நடிக்கவிருந்த குழுவினரைப் பயன்படுத்தி “கிரஹ பிரவேசம்” என்கிற தெலுங்கு திரைப்படத்தை “மன பிரயந்த” என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிடும் பணியில் வெற்றி பெற்றார்கள். அப்படி டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படம் 1947 மே மாதம் இலங்கையில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் துரைசிங்கம் புதிய நடிகர்களைக் கொண்டு மீண்டும் “திவ்ய பிரேமய” திரைப்படத்தை தயாரித்து முடித்தாலும் அது 1948 மே மாதம் தான் வெளிவந்தது.

ஆரம்பத்திலேயே திரைப்பட முயற்சியைத் தொடங்கியிருந்தாலும் “திவ்ய பிரேமய” இப்போட்டியில் தாமதமடைந்ததால் அசோகமாலாவும், “கடவுனு பொறந்துவ”வும் தான்; களத்தில் முதலாவது திரைப்படம் எது என்பதில் போட்டியிட்டன. இறுதியில் எஸ்.எம்.நாயகம் வெற்றிபெற்றார். 1947 ஜனவரி 21 “கடவுனு பொறந்துவ” திரையிடப்பட்டது. அதற்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்து தான் 1947 ஏப்ரல் 09 ஆம் திகதி அசோகமாலா திரைக்கு வந்தது. அது தான் இலங்கையின் இரண்டாவது பேசும் படம்.

“கடவுனு பொறந்துவ”வின் வெற்றி

“கடவுனு பொறந்துவ” முதலாவது திரைப்படமாக அறியப்பட்டதால் அத் திரைப்படத்தில் நடித்த பலர் முதலாவது என்கிற பெருமைக்கு உள்ளானார்கள். ருக்மணி தேவி இலங்கையின் முதலாவது திரைப்பட கதாநாயகி என்று அறியப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

பி.ஏ.டபிள்யூ. ஜயமான்ன, எடி ஜயமான்ன, ருக்மிணி தேவி, ஸ்டான்லி மல்லவாராச்சி, பீட்டர் பீரிஸ், ஹியூகோ பெர்னாந்து, பெர்ட்ரம் பெர்னாந்து, மரியம் ஜயமான்ன (குழந்தை நடிகை), டபிள்யூ. பாலசூரிய, ஜே.ஏ.பீ. ஜோ ஜயமான்ன, திமோதியஸ் பெரேரா, விசிடோர் பொன்சேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், சிகை அலங்காரன் வேடத்தில் நடித்த எடி யாப்பா, குறுகிய கால விடுப்பில் இலங்கை சென்று மீண்டும் திரும்ப முடியாமல் போய்விட்டது. அவரின் வேடத்தில்; பாடல் இயற்றவென அழைத்துச் செல்லப்பட்ட; நடிப்பைப் பற்றி எந்த அனுபவமுமற்ற ஹியூகோ மாஸ்டர் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஆறு பாடல்களை ருக்மணி தேவியே பாடியிருக்கிறார். மொத்தம் மூன்றே மாதங்களில் தயாரான திரைப்படம். இத்திரைப்படத்தின் பல பாடல்கள் அன்றைய இந்திப் பாடல்களின் மெட்டைப் பிரதிபண்ணியே உருவாக்கப்பட்டிருந்தன. 

திரைப்படத்திற்கு ஆர். நாரயண ஐயர் இசையமைத்திருந்தார். அவருக்கு உதவியாளராக ஆர்.முத்துசாமி பணியாற்றினார். (ஆர்.முத்துசாமி அப்சராஸ் இசைக்குழுவின் தலைவர் மோகன்ராஜின் தகப்பனாவார்.) ஆர்.முத்துசாமி பின்னர் இலங்கையில் வெளியான பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது காட்சி கொட்டாஞ்சேனை கிங்ஸ்லி தியட்டரில் காண்பிக்கப்பட்டபோது அன்றைய காணி அமைச்சராகவும் பிற்காலத்தில் இலங்கையின் முதலாவது பிரதமராகவும் ஆன டீ.எஸ்.சேனநாயக்கவின் தலைமையில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

கிங்ஸ்லி தியேட்டரில் அப்போது 127 நாட்கள் ஓடியது. அதுபோல ஜிந்துப்பிட்டி டோக்கீஸ் (பிற்காலத்தில் முருகன் தியட்டர் என்று பெயர் மாற்றம் பெற்றது) தியட்டரில் 42 நாட்கள் ஓடியிருக்கிறது. மைலன் தியட்டரில் 28 நாளும், மருதானை நியூ ஒலிம்பியா மற்றும் நாடெங்கிலும் அப்போது இருந்த பல தியட்டர்களிலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

கிங்க்ஸ்லி தியட்டரில் "கடவுனு பொரொந்துவ" முதற் காட்சிக்குப் பின் எஸ்.எம்.நாயகம் அவர்களுடன் கலைஞர்கள் - 21.01.1947

இனத்துவ பாகுபாட்டுக்குள்...

சிங்கள சினிமாத்துறை நெடுங்காலமாக இந்தியாவின் தயவிலேயே இருந்துவந்தது. தொழில்நுட்பத்துறை ஸ்டூடியோ பின்னணி, இசை என அனைத்துக்கும் இந்தியாவுக்கு சென்றுதான் படத்தை முடித்துக் கொண்டுவந்தார்கள். பின்னணி இசை, இசைக்கலவை, படத்தொகுப்பு கூட அங்கேயே மேற்கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டிலிருந்த பாடகர்களையே சிங்களத்தில் பாட கற்பித்து பாடவைத்தார்கள்.

முதலாவது திரைப்படம் தோன்றி முதல் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்த சிங்கள சினிமாத்துறையின் போக்கை மாற்றினார் சமீபத்தில் மறைந்த லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். 1956 இல் அவர் இயக்கிய “ரேகாவ” என்கிற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக இந்திய ஸ்டூடியோவை விட்டு விலகி இலங்கைக்கான சுதேசிய திரைப்படம் உருவாக்கப்பட்டது. 1956 என்பது “சுதேசியம்” என்கிற பேரில் நிகழ்ந்த இனத்துவ- மதத்துவஅரசியல் மாற்றங்களை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.

ஏற்கெனவே இலங்கையின் திரையரங்குகளில் ஆக்கிரமித்திருந்த தமிழ், இந்தி திரைப்படங்களால் கவரப்பட்டிருந்த நிலையில் தென்னிந்தியாவில் தயாரான சிங்களத் திரைப்படங்கள் சிங்கள மக்களின் இரசனையிலிருந்து அந்நியமாக இருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தமது சுயத்தை அங்கு காணவில்லை என்பதை உணரத் தொடங்கினார்கள். தமது பண்பாட்டிலிருந்து விலகியிருப்பதை கண்டுகொண்டார்கள். அப்போது அவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்தையும் அடைந்திருந்தார்கள். தமக்கான சிங்கள அரசை நிறுவிக்கொண்ட சிங்கள சமூகம் தமது கலை - பண்பாட்டு அம்சங்களை மீள்கண்டுபிடிப்புக்கும், மீளுருவாக்கத்துக்கும் உள்ளாக்கினார்கள். சிங்கள சினிமாத்துறை நிமிர்வதற்கு சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு அனுசரணையாக இருந்தது. அது உள் நாட்டில் தமிழ் திரைப்படத்துறையொன்றின் தேவையையும் கண்டுகொள்ளவில்லை. சுதேசிய சினிமாத்துறை என்பது சிங்கள சினிமாத்துறை தான் என்கிற மனநிலை சர்வ சாதாரணமாக குடியிருந்தது.

மறுபுறம் சிங்கள சினிமாவைப் போலவே தமிழ் சினிமாத்துறைக்கான முயற்சியும் இராட்சத இந்திய சினிமாத்துறையின் உற்பத்தியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. உள்நாட்டு உற்பத்திச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது எளிமையாகவும், இலாபகரமாகவும் இருந்தது. 70களில் சிறிமா அரசாங்கத்தால் இந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் ஈழத்து தமிழ் சினிமா கூட சற்று தலைநிமிர வாய்ப்புகளைத் திறந்தன. சிங்களத் திரைப்படங்களுக்கும் தான்.

ஈழத்து தமிழ் சினிமாவுக்கான தேவையை உணர்ந்தபோது தமிழர் தரப்பில் அதற்கான பலமும், வளமும், அனுசரணையும் இருக்கவில்லை. இலங்கையின் முதலாவது சிங்கள சினிமாவை தயாரித்தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை கிறேஷன் ஜெயமான்ன என்கிற சிங்களவர் ஒருவரே இயக்கினார். 1947 இல் வெளியான  “செங்கவுனு பிலிதுரு” (மறைந்திருக்கும் விடை), என்கிற அந்த திரைப்படம் தமிழ் மொழிமாற்று திரைப்படமாக “குசுமலதா” என்கிற பெயரில் 1951இல் வெளியானது. மொழிமாற்று என்பதால் அதை முதலாவது தமிழ் திரைப்படமாக பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” நாவலைத் தழுவி “சமுதாயம்” என்கிற பெயரில் 1962இல் வெளிவந்த திரைப்படத்தையே இலங்கையில் வெளியான முதல் தமிழ் திரைப்படமாக கொள்ளப்படுகிறது. அதை இயக்கியவரும் ஹென்றி சந்திரவன்ச என்கிற சிங்களவர் தான்.

சுதந்திரத்துக்கு முன்னர் சிங்களத்திரைப்படத்துறை தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் தங்கியிருந்தது போல பிற்காலத்தில் சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழ் திரைப்பட உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் சிங்கள சினிமாத்துறையில் தங்கிருக்கும் நிலை ஏற்பட்டது.  தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் ஈழத்து சினிமாவில் பெரும்பங்கு வகித்த போதும் ஈழத்து திரைப்படங்கள் எதுவும் சிங்களத் திரைப்படத்துறையினரின் தயவின்றி வெளிவரவில்லையென்றே  கூற முடியும்.

இனப்பிரச்சினை கூர்மைபெற்று தமிழர் கலைகள், பண்பாட்டு வெளிப்பாடுகள் நசுக்கப்பட்ட காணாமால் ஆக்கப்பட்டதன் வரிசையில் முக்கிய இடத்தை ஈழத்து சினிமா அடைந்தது. அதன் மீளுருவாக்கத்துக்கு எந்த நாதியும் இல்லாமல் போனபோது அதை ஒரு பொருட்டாக கருதுவதற்கு சிங்களத் திரைப்படத்துறையோ, அரசோ தயாராக இருக்கவில்லை. “இலங்கை சினிமா” என்பது இன்றும் “சிங்கள சினிமா” என்கிற கருதுகோள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த இடத்தில் சுதேசிய சினிமாவின் 75 வது ஆண்டை முன்னிட்டு பிரபல சினிமா கலைஞர் ஜாக்சன் அன்ரனி லேக்ஹவுஸ் பத்திரிகையான “சரசவிய” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறப்பட்ட விடயங்கள் கவனிக்கத்தக்கது.


“சிறிசேன விமலவீர ‘பொடிபுதா’ (சின்ன மகன்) என்கிற திரைப்படத்தை உருவாக்குவதற்காக புறக்கோட்டை அரசமரத்தடியில் ஒரு பெட்டிக்கடையொன்றைப் போல செய்து அதில் “சிங்கள நாட்டில் சிங்களவர்களால் உருவாக்கப்படும் முதலாவது திரைப்படத்துக்கு உதவி செய்யுங்கள்” என்று ஒரு பதாகையை தொங்க விட்டிருந்தார். தேவையான பணத்தை பத்து ரூபா பங்குகளையும் விற்பனையின் மூலமும் சேகரித்தார். பெருமளவானோரின் பங்களிப்புடன் தாராளமாக நிதி கிடைத்தது.

இலங்கையில் அத்திரைப்படம் பெரும் புளொக் பஸ்டர் ஆனது. வர்த்தக ரீதியில் பெரும் இலாபத்தை ஈட்டித் தந்த படம் அது. அவர் பங்குதாரர்களுக்கு இலாபத்தை பிரித்துக் கொடுக்க முற்பட்டவேளை அவர்கள் அனைவரும் ஒரு திரையரங்கை அமைக்க அந்தப் பணத்தை பயன்படுத்தும்படி ஏகோமானதாக அறிவித்தார்கள். சிறிசேன கிரிபத்கொட நகரில் “நவஜீவன” என்கிற ஒரு திரையரங்கை அமைத்தார். இந்திய கம்பனிகளின் அதிகாரத்தில் தான் அப்போது சினிமாத்துறை இருந்தது. அந்தக் கம்பனிகள் இதனால் வெகுண்டெழுந்து தாக்கத் தொடங்கினார்கள். சிறிசேனவின் படைப்புகளை அவர்களின் திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்கவில்லை. அவர் தனிமைபடுத்தப்பட்டதில் தோற்றுப்போனார். அரச ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. அந்த இந்திய கம்பனிகளில் பங்குதாரர்களாக சேனநாயக்கமார்களும் இருந்தார்கள். அதனால் பெரும் பணக்கார செல்வந்தர்களின் ஆதரவு அந்த சினிமா கம்பனிகளுக்கு இருந்தது.

இந்த நேரத்தில் தான் இலங்கையில் சினிமா நடிகர் சங்கங்கள் எல்லாம் உருவானது. அவர்கள் இந்திய கம்பனிகளை எதிர்க்கத் தொடங்கினார்கள். காமினி பொன்சேகா போன்றோர் இந்த விடயத்தில் இனவாதமாக நடந்துகொள்ளாது புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார்.

எனவே இதில் அரசியல் புதைந்திருந்தது. இது எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், எனது நினைவில் 60களில் ராகம நியுஜெம் திரையரங்கில் எம்.ஜீ.ஆரின் படத்தை திரையிட்ட வேளை சாணி எறிந்தார்கள். கட் அவுட்டுக்கு தார் பூசினார்கள். அப்போது இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களுடன் இலங்கை தமிழ் போராட்டங்ககளை ஊக்குவிக்கும் சினிமாக்கள் வெளியாகியது இதற்குக் காரணம்...”


83 இனப்படுகொலை ஏற்படுத்திய தாக்கம்

எந்த திரைப்பட உருவாக்கமும் பல இனத்தவர்களின் பங்களிப்போடு தான் வெளிவரமுடியும் என்கிற கருத்தை இங்கு கேள்விக்குட்படுத்தவில்லை. மையப்பிரச்சினையாக இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாட்டில் இனத்துவ காரணிகள் கலக்காத எதுவும் இல்லை என்பதால் இலங்கை சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என்பவற்றை இனத்துவ கண்ணாடிக்கூடாகக் காண்பதைத் தவிர்க்க முடியாது.

சிங்கள சினிமாத்துறைக்கு பலத்த அடி 83 கருப்பு ஜூலை சம்பவம் என்கிறார் எழுத்தாளர் நாரத நிஷ்ஷங்க. சிங்கள – தமிழ் திரைப்படங்களின் விநியோகஸ்தகராக அறியப்பட்ட காலோ பொன்னம்பலத்தின் பொரல்லை காரியாலயம் எரிக்கப்பட்டபோது நான் கையறு நிலையில் துரதிர்ஷ்டமானவனாக இருந்தேன். அந்த வீதியில் எறியப்பட்டிருந்த ஆரம்பகால அரிய சினிமா ரீல்களையும், போஸ்டர்களையும் என்னால் முடிந்த அளவு சேர்த்துக் கொடுத்தேன். சிங்கள திரைப்படத்துறையை ஆரம்பித்து, வளர்த்துவிட்டவர்கள் தமிழர்களே. ஆனால் நாடு பூராவும் உள்ள திரையரங்குகள் பல இனவாதத் தீயால் நாசமாக்கப்பட்டன. வெள்ளவத்தை சப்பாயர், தெஹிவள ட்ரியோ, நீர்கொழும்பு ராஜ், நாரஹென்பிட்டிய கல்பனா போன்ற திரையரங்குகளும் எரிக்கப்பட்டன” என்கிறார் அவர்.

இலங்கையில் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.குணரத்தினம் தனது மகள் விஜயாவின் பெயரில் ஹெந்தலயில் நடத்தி வந்த பிரபல விஜயா தியட்டர் சிங்களத் திரைப்படங்கள் பலவற்றை காட்சிப்படுத்திய தியேட்டர். அதை தீயிட்டு அழித்தது மாத்திரமல்ல இந்தக் கலவரத்தில் அங்கே இருந்த “சங்தேசய”, “தீவரயோ”, “சண்டியா”, “சூர சௌரயா” போன்ற ரீல்கள் அழிக்கப்பட்டு இன்றைய சந்ததிக்கு மீண்டும் அதனைக் காணும் வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள். இந்தத் திரைப்படங்களில் நடித்த காமினி பொன்சேகா பின்னொருகாலத்தில் ஒரு நேர்காணலில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்ட செய்தியையும் நாம் காண்கிறோம். விஜயா திரையரங்கு எரிந்து கொண்டிருந்தபோது அங்கு விரைந்த சினிமாதுரையைச் சேர்ந்த விஜயகுமாரதுங்க, நீள் ரூபசிங்க, சரத் ரூபசிங்க, பெப்டிஸ் பெர்னாண்டோ, ரவீந்திர ரந்தெனிய போன்றோர் எஞ்சியவற்றை மீட்கப் போராடியிருக்கிறார்கள்.

மருதானை டார்லி வீதியில் இருந்த கே.குணரத்தினத்தின் “காமினி ஹோல்” சினிமா தியேட்டரும் 1983 இனக்கலவரத்தின் போது யூலை 24 ஆம் திகதி முழுமையாக தீயிட்டு அழிக்கப்பட்டது. 

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறையும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதைப் பற்றி பல சிங்கள கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “சிரிபத்துல” என்றால் “புத்தரின் பாதச்சுவடு” பொருள்.  (சிவனொளிபாதமலைக்கு சென்று வணங்குவது புத்தரின் பாதச்சுவடு என்று நம்பப்படும் "சிரிபத்துல" வைத் தான்)

"சிரிபத்துல" என்கிற பெயரில் 1978இல் சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியவர் கே.வெங்கட். 83 கலவரத்தில் உயிருடன் கொளுத்தி கொல்லப்பட்டார். நிஷ்ஷங்க திவயின பத்திரிகையில் (19.03.2013) எழுதிய கட்டுரையில் “சக சினிமாத்துறை நண்பரான பாலித்த யசபால கே.வெங்கட்டை பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்திருந்தார். ஆனால் யசபால இல்லாத சந்தர்ப்பமொன்றில் கே.வெங்கட் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே கொல்லப்பட்டார் என்கிறார் அவர்.

பிரபல சினிமாத்துறை அறிஞரான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது “காந்தர்வ அபதான” என்கிற சிங்கள நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.
“1983 கலவரத்தில் ரொக்சாமி வசித்துவந்த ஹெந்தல வீட்டை சண்டியர்கள் தீயிட்டு அழித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ரொக்சாமி. சிரிபத்துல என்கிற பௌத்த திரைப்படம் உள்ளிட்ட மஹா ரே ஹமுவு ஸ்திரீய, நிலூகா, தமயந்தி, ஷீலா, கொப்பலு ஹன்ட போன்ற திரைப்பாங்களை இயக்கிய கே.வெங்கட் தெஹிவளயில் எரித்துக்கொல்லப்பட்டார். கலவரக்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய ரொக்சாமி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிக்கொண்டு அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தார். அவரின் துறையைச் சேர்ந்த சிங்கள நண்பர்கள் அவரை மீட்டார்கள். சாமபலாகிப்போன அவரின் வீட்டை மீள கட்டி குடியேற்றினார்கள். ஆனால் அவர் இறக்கும்வரை அவரால் அந்த சம்பவத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை”

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன “ரொக்சாமி – முத்துசாமி” என்கிற தலைப்பில் சிங்கள நூலையும் வெளியிட்டவர்.

பல சக தமிழ் சினிமாக் கலைஞர்களை காமினி பொன்சேகா காப்பாற்றிருக்கிறார். நாடெங்கிலும் இனவாதிகளால் அழிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றை மீள மீட்கப்படவில்லை. சில திரைப்பட உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சிலர் சகலதையும் இழந்து வேதனையுடன் இறந்தே போனார்கள். சிலர் கையறு நிலையில் இந்தத் துறையில் இருந்து நீங்கினார்கள்.

83 இனப்படுகொலையின் போது சினிமாத்துறைக்கு ஏற்படுத்திய சேதமானது சினிமா என்கிற கலைக்கு ஊடாக இணைந்திருந்த மக்களையும் பிரித்து சின்னாபின்னமாக்கியது.

சிங்கள சினிமாவின் வளர்ச்சியில் பெரும்பாற்றிய பல தமிழர்களில் என் கவனத்துக்கு வரும் முக்கிய நால்வரைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.

போதிமர நிழலில் எரிக்கப்பட்ட கே.வெங்கட்

அன்றைய நாள் பெரும் சலசலப்புடன் தான் ஆரம்பமானது. அவனின் வீட்டின் எதிரில் உள்ள வீதியில் இருந்தே அந்த சத்தங்கள் ஒலித்தன. எழுந்ததுமே அவனின் தாயார் வெளியில் போகவேண்டாம் என்று எச்சரித்தாள். ஆனாலும் கிட்டத்தட்ட 15 வயதையுடைய சிறுவனாக தாயாரின் சொல்லைக்கேளாமல் வீதியை நோக்கிச் சென்றான் அவன். அந்த வீதியில் பொல்லுகளையும், போத்தில்களையும் ஏந்திய மனிதக் கூட்டத்தினரை அவன் கண்டான். களுபோவிலை பகுதியைச் சேர்ந்த சண்டியர்கள் பலர் பௌத்த விகாரைக்கருகில் இருந்த அரச மர நிழலில் கூடியிருந்தார்கள். அவனது வீட்டில் இருந்து அந்த அரசமரம் கிட்டத்தட்ட 25-30 மீட்டர் தூரம் தான் இருக்கும். அந்த சண்டியர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்ற அனைவரையும் பரிசோதித்தார்கள். வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்தார்கள். சிலரைத் தாக்கவும் செய்தார்கள். சிலரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியாத அளவுக்கு அங்கே சலசலப்பு மிக்க சத்தம் அந்த சூழலை நிறைத்திருந்தது.


அங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவன் அந்த அரசமரத்தினருகில் சென்றான். பலரை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழராக இருந்தார் தாக்கினார்கள். வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள். சிலர் அவர்களைக் கும்பிட்டுக். கெஞ்சினார்கள். தங்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். ஆனால் அப்படி வேண்டுபவர்களை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. சிறுவனான அவனுக்கு நடப்பது என்னவென்று புரிந்தது. ஆனால் கையறு நிலையில் அவதானித்துக் கொண்டிருந்தான்.

பின்னேரம் தெஹிவளை பக்கமிருந்து ஒரு வான் அங்கே வந்துகொண்டிருந்தது. அந்த வானில் ஒரு சாரதி மட்டுமே காணப்பட்டார். அந்த சாரதி குழப்பமடைந்திருந்தார். அந்த அரசமரத்திற்கு அருகிலுள்ள சிறு பாதைக்குள் வாகனத்தைத் திருப்பினார். அங்கேயும் சண்டியர்கள் குவிந்திருந்தனர். மீண்டும் அங்கிருந்து பிரதான பாதையை நோக்கி அவர் வாகனத்தைத் திருப்பினார். இத்தனையும் அந்த சிறுவனின் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த சாரதி ஒரு தமிழர். வெள்ளை சட்டையும், வெள்ளை வேஷ்டியும் அணித்திருந்தார். நெற்றியில் திருநீறும் இருந்தது. சண்டியர்கள் இறங்கினார்கள். சாரதியை வண்டியில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அந்த சாரதி நடுத்தர வயதைத் தாண்டியவர். சண்டியர்களோ இளைஞர்கள். சாரதிக்கு இனி தப்பிக்க வழியில்லை. அவரைக் காப்பாற்றவும் அங்கு எவரும் வரப்போவதில்லை. அந்த சாரதி தன்னை விட பத்து இருபது வயது சிறியவர்களிடம் மன்றாடியதைக் அருகில் இருந்து கண்டான் அந்த சிறுவன்.

அந்த சாரதி நடுங்கியபடி தன்னை அறிமுகப்படுத்தினார். தான் தான் வெங்கட் என்றும் சினிமா இயக்குனர் என்றும் கூறினார். அந்த சண்டியர்கள் எதையும் காதில் உள்வாங்கவில்லை. வெங்கட் “சிரிபத்துல” திரைப்படத்தை இயக்கியது தான் தான் என்றும் கூறினார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய கசட் கூட வாகனத்தில் இருக்கிறது என்றும் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் அவரால் அதற்கு மேல் பேச வாய்ப்பெதுவும் இருக்கவில்லை. பெரிய கல்லொன்று அவரின் தலையை வேகமாக வந்து தாக்கியது. அவர் இரத்தவெள்ளத்துடன் அந்த போதி மரநிழலில் சுருண்டு விழுந்தார். அவரின் வெள்ளை ஆடை இரத்தத்தால் துவைந்திருந்தது. அந்தக் கொலைகாரர்கள் அவரின் மீது எண்ணெயை ஊற்றினார்கள். அது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலாக இருக்கலாம். தடிகளையும், எரியக்கூடியவற்றையும் அவரின் மேலே போட்டு  தீயிட்டார்கள்.

அந்த உடல் தீயில் வெந்து பொசுங்கிக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அவரின் கைகள் வெந்த தடிகளைப் போல ஆகிக்கொண்டிருப்பதை அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவானதும் அந்த பாதகர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்தும் எரிந்துகொண்டிருந்த அந்த உடலின் அருகில் சென்ற அந்த சிறுவன் அதனை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று இரவு நித்திரை வரவில்லை. தன் கண்முன்னே ஒரு உயிர் மன்றாடியதையும், துடிதுடிக்கச் சாகடிக்கப்பட்டதையும், உயிருடன் கருகி பொசுங்கியதையும் கண்டு பாதிக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த எவருக்கும் எந்தவித தீங்கும் இழைக்காத ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை அவனால் மறக்கவோ ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் அந்த போதி மர நிழலை நோக்கிச் சென்றான். அங்கே சாம்பலைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.  அந்த கொலைக்காக வருந்திய ஒரே ஒருவனாக அவன் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தான்.

அப்படி கொல்லப்பட்ட வெங்கட் இயக்கிய ‘சிரிபத்துல’ திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பாடல் சிங்களவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அதைப் பாடியவர் மொகிதீன் பேக். அந்த பாடல் வரிகள் இப்படி தொடங்கும்...

“மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே!”

(“மனிதனே உலகின் தெய்வமாகிறான் ... மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”)

அந்த சம்பவத்தின் நேரடி சாட்சி வேறு யாருமல்ல பிற்காலத்தில் சரிநிகர் பத்திரிகையின் கேலிச்சித்திரங்களை வரைந்தவரும், இன்று பிரபல மனித உரிமைகள் வழக்கறிஞரும், ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான டபிள்யு ஜனரஞ்சன. இந்தக் கதையை அவர் சொல்ல இன்னொரு எழுத்தாளர் எழுதி சிங்களப் பத்திரிகையில் வெளிவந்தது.


அவர் இயக்கிய இன்னொரு திரைப்படமான தமயந்தி திரைப்படத்திலும் மொஹிதீன் பேக் பாடும் அர்த்தம் நிறைந்த ஒரு பாடல் மிகப் பிரபலமான பாடல்.

"සිනහවෙන් හෝ කතාවෙන් බැහැ මනින්නට මිනිසා"

“சிரிப்பாலோ பேச்சாலோ மனிதனை அளவிட முடிவதில்லை”

கே. வெங்கட் இயக்கிய திரைப்படங்கள்.

எஸ்.எம்.நாயகம்

தமிழ்நாடு, மதுரையில் பிறந்தவர். சோப்பு, வாசனை திரவியங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை இந்தியாவிலும், இலங்கையிலும் நடத்திக் கொண்டிருந்தவர். 1940 களில் சினிமா தயாரிப்பின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது. ஸ்ரீ முருகன் நவகலா லிமிட்டட் என்கிற சினிமா கம்பனியை மதுரையில் முதலில் ஆரம்பித்து  சித்திரகலா மூவிடோன் என்கிற ஒரு ஸ்டூடியோவையும் அங்கே சொந்தமாக வைத்திருந்தார்.


எஸ்.எம்.நாயகம் 1946 இல் குமரகுரு என்கிற திரைப்படத்தை தயாரித்தார். பின்னர் 1947 “தாய் நாடு” என்கிற தேசபக்தி திரைப்படத்தை தயாரித்தார். அதை இந்திய சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இரு தமிழ்த் திரைப்படங்களும் இந்தியாவில் தான் தயாரித்தார். அதன் பின்னர் அவர் எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களையும் தயாரிக்கவில்லை. 1947 இல் இலங்கையின் முதலாவது திரைப்படத்தை வெளியிட்டதிலிருந்து 1960 க்குள் அவர் 9 பிரபல சிங்களப் படங்களைத் தயாரித்திருந்தார். 

கே.குணரத்தினம்

கே.குணரத்தினம் இலங்கை சினிமாவின் பிரபலமான இயக்குனர். அதுபோல பிரபல சினிமா விநியோகஸ்தர். இலங்கையின் சினிமாவை கொண்டிழுத்துப் பாதுகாத்த முக்கிய நிறுவனமான “சினிமாஸ்” கம்பனியை 1949 இல் உருவாக்கியவர் குணரத்தினம். மருதானை காமினி திரையரங்கை முதன்மையாகக் கொண்டு முதற் தடவையாக சினிமா காட்சி சபையை கட்டியெழுப்பினார் குணரத்தினம். 1953 இல் வெளியான சுஜாதா திரைப்படம் இலங்கை சினிமாவை வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. 


இல் பிற்காலத்தில் சிலோன் தியட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான எம்.செல்லமுத்துவும், சினிமாஸ் கம்பனி லிமிட்டட் உரிமையாளர் கே.குனரத்தினத்துடன் இணைந்து டவர் மண்டபத்தை சினிமா தியேட்டராக இயக்குவதற்காக “சினிமா டோக்கீஸ்” என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.   

1970 களில் சுதேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பலவற்றை தேசியமயமாக்கிய சிறிமா அரசாங்கமும் டவர் மண்டபத்தை அரசுடமையாக்க முடியவில்லை. டவர் ஹோல் தியேட்டர் மார்ச் 16, 1973 இல் “பயாஸ்கோப்” சினிமாவாகவே மாறியது. 1977 இல் பிரேமதாச பிரதமராக பதவியேற்றதும் 1978 இல் டவர் மண்டப உரிமையாளர் கே.குணரத்தினம் டவர் மண்டபத்தை இலவசமாக அரசுக்கு அளித்தார். அரசு அதனை அரசுடைமையாக பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையின் சிங்கள சினிமாத் துறைக்கும், கலைத்துறைக்கும் பெரும் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் செய்த கே.குணரத்தினம் 27.08.1989 அன்று தனது 72 வயதில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கே.குணரத்தினம் தனது காலத்தில் ஒரு தமிழ்த் திரைப்படங்களைக் கூட தயாரித்ததில்லை அவர் தயாரித்த 21 திரைப்படங்களும் சிங்களத் திரைப்படங்கள் தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

கே.குணரத்தினம் 1917 ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி யாழ்ப்பாணம் அத்திடியில் பிறந்தவர். அவரின் தந்தை மாணிக்கம் கனகசபை யாழ்ப்பாண வர்த்தகர். யாழ் மத்திய கல்லூரியில் கற்ற அவர் பின்னர் வியாபார ரீதியில் அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்தார். விளையாட்டில் ஈடுபாடிருந்த அவர் பல விளையாட்டுக் கழகங்களிலும் இயங்கினார். அவருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். கே.குணரத்தினத்தின் மறைவைத் தொடர்ந்து அவரின் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தியவர் அவரின் இளைய மகனான பத்மராஜா. நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகச் சமீபத்தில் வெளிவந்த “கோமாளி கிங்க்ஸ்” திரைப்படத்தை “சினிமாஸ்” கம்பனியின் பெயரில் பத்மராஜாவும் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றினார். அவரும் கடந்த 2021 மே மாதம் மறைந்தார்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட இறுதி இலங்கைத் திரைப்படம் “வீர விஜய”. அது 1960இல் வெளிவந்தது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அத்திரைப்படத்தை தயாரித்தவர் கே.குணரத்தினம். 

கே.குணரத்தினம் சிங்களத் தயாரித்த திரைப்படங்கள்

டீ சோமசேகரன்

1953 இல் தம்பையா சோமசேகரன் திரைக்கதை எழுதிய “சுஜாதா” திரைப்படம் இலங்கையில் சக்கைபோடு போட்டது. ஒரே திரைப்படத்தில் மிகப் பெரிய பெயரைப் பெற்றார் சோமசேகரன். அதுவரை இலங்கையின் திரைப்படங்களை இந்தியப் பின்னணி கொண்ட தமிழர்களே இயக்கி வந்தார்கள். சுஜாதா திரைப்படத்தின் மூலம் இலங்கைத் தமிழரான சோமசேகரன் களத்துக்கு வந்து சேர்ந்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.குணரத்தினம். அதை இயக்கியவர் டி.ஆர்.சுந்தரம். இந்த மூன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட அத்திரைப்படம் சிங்களத் திரைப்படத்துறையின் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1953 க்குப் பின்னர் சிங்களக் குக்கிராமங்கள் வரை சுஜாதா என்கிற பெயரை பெண் குழந்தைகளுக்கு சூட்டுமளவுக்கு அத்திரைப்படம் புகழடைந்திருந்தது. பிற்காலத்தில் மிகப் பிரபலமான ஜோ அபேவிக்கிரம சுஜாதா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.


சோமசேகரன் ஒரு ஆசிரியர். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளை சரளமாக அறிந்தவர். அவரின் சுஜாதா, செடசுலன் ஆகிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியர்; இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரகோன். செடசுலன் திரைப்படத்தில் ஆனந்த சமரகோன் இயற்றிய “ஸ்ரீ லங்கா... மா ப்ரியாதர ஜயபூமி” என்கிற பாடலைப் பாடியவர் சமீபத்தில் மறைந்த லதா மங்கேஷ்கார்.

சோமசேகரனின் நெருங்கிய நண்பனாக ஆனந்த சமரகோன் இருந்தார். ஆனந்த சமரகோன் தற்கொலை செய்து இறந்த வேளை பிணவறைக்கு விரைவாக சென்று சோமசேகரன் அவ்வுடலைக் கட்டிப்பிடித்து கதறிய காட்சி குறித்து பிற்காலத்தில் ஜோ அபேவிக்கிரம நினைவு கூரியிருக்கிறார். 

டீ.சோமசேகரன் இயக்கிய திரைப்படங்கள்


நன்றி - தாய்வீடு - மார்ச் 2022


முத்து கடத்தியதால் பதவியிழந்த யாழ்ப்பாண டச்சு தளபதி யொஹான் நியூஹொப் - என்.சரவணன்

யாழ்ப்பாணத்தில் இருந்து முத்து கடத்தலுக்காக தண்டனை பெற்று பதவியிழந்த யாழ்ப்பாணத்துக்கான டச்சு தளபதி யொஹான் நியூஹொப் (Johan Nieuhof - 1618 -1672 ) ). இவர் மிகவும் பிரசித்தம் பெற்ற ஒரு நாடுகாண் பயணி. ஆரம்பத்தில் டச்சு மேற்கிந்தியக் கம்பனியின் (WIC) அதிகாரியாக பணிபுரிவதற்காக பிரேசில் சென்றிருந்த அவர் பின்னர் அங்கிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1649 ஆம் ஆண்டு அங்கிருந்து புறப்பட்டு தனது நாடுகாண் பயணத்தை நிறுத்திக்கொண்டு டச்சு கிழக்கிந்திய கம்பனியில் (VOC) சேர்ந்து அதன் தலைமையகமாக அன்று இருந்த பத்தாவியாவில் பணிபுரிந்தார்.

சீனாவில் அக்கம்பனியின் பிரதிநிதியாக பணிபுரிந்துகொண்டிருந்த போது தான் அவருக்கு இலங்கையில் பணிபுரிவதற்காக பரிந்துரை செய்யப்பட்டது. 1663 ஆம் ஆண்டு அவர் தொடக்கம் அவர் யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தார். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் இலங்கையின் வட பகுதியை முத்துக்குளிப்பு, யானை ஏற்றுமதி என்பவற்றுக்கு தான் பயன்படுத்தி வந்தார்கள். அவை தான் வடபகுதியின் பிரதான ஆதாயமாக இருந்தன.

யொஹான் நியூஹொப் யாழ்ப்பாணத்தில் 1669 வரை பணிபுரிந்தார். இந்த காலத்தில் அவர் தனிப்பட்ட ரீதியில் முத்துக் கடத்தலை மேற்கொண்டதை டச்சு அரசாங்கம் கண்டுபிடித்தது. அக்குற்றத்துக்காக அவரை ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து, அவரை மீள அழைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார்கள். அப்போது டச்சு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காகவே ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறு யோஹானை மீள அழைத்தவர் Hendrik van Rheede என்கிற ஊழல் விசாரணை அதிகாரி தான்.


இலங்கையின் முதலாவது ஆங்கிலேய ஆளுநரான பிரெடெரிக் நோர்த் இலங்கையை ஆண்டபோது அவர் தனக்கென மூன்று மாடிகளைக் கொண்ட கிரேக்க கட்டிட அமைப்பிலான ஒரு பெரிய மாளிகையைக் கட்டினார். (1827 இல் அவர் இறந்தபோது அவரை கிரேக்க முறையில் தான் அடக்கம் செய்தார்கள்.) அந்த மாளிகையை அவர் கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கட்டவில்லை. அவர் மன்னார் தீவில் தான் கட்டினார். கடற்கரையில் மேடான ஒரு பகுதியை தெரிவு செய்து அதைக் கட்டினார். ஏன் தெரியுமா? முத்துக்குளிப்பு மேற்கொள்வதை கண்காணிக்கக் கூடியவாறு அந்த மாளிகையைக் கட்டினார். அப்போது இலங்கையிலேயே மிகவும் அழகான மாளிகை அதுதான் என்று பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



அந்த மாளிகை தான் இன்றும் வெறும் கட்டிட எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற மன்னார் டொரிக் பங்களா. அக்கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டிடம்  அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி கடலில் விழுந்து அழிந்துகொண்டிருக்கிறது. இன்றும் மன்னார் வாழ் மக்கள் அதனை “அல்லிராணிக்கோட்டை என்று அழைக்கின்றனர். முத்துக்குளிப்பு இலங்கையில் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது என்பதை இங்கே புரிந்துகொள்வதற்காக இங்கே கூறுகிறேன்.


யொஹான் நியூஹொப் தனது கடற்பயணம் குறித்து பின்னர் எழுதிய Het gezantschap der Neêrlandtsche Oost-Indische Compagnie, aan den grooten Tartarischen Cham, den tegenwoordigen keizer van China என்கிற நூல் பயண இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அதிகமாக தனது சீன அனுபவங்களைத் தான் பதிவு செய்திருந்தாலும் சுமார் 570 பக்கங்களைக் கொண்ட அந்த நூலில் அதற்கு வெளியிலும் பல விபரங்களைத் தந்திருக்கிறார். அந்த நூல் 1665 இல் ஆம்ஸ்டர்டாமில் வெளியானது. அதாவது அவர் யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்த காலத்தில் தான் அது வெளியானது. வெளியாகி சில ஆண்டுகளுக்குள் அதுவும் அவர் இலங்கையில் இருந்த காலத்துக்குள் பிரெஞ்சு, லத்தீன், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத்தில் வெளிவந்தது 1669 இல் தான். அதன் பின்னர் பல்வேறு மொழிகளில் அந்த நூல் வெளியிடப்பட்டுவிட்டது.

ஏறத்தாள இதே காலப்பகுதியில் இலங்கைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் பல பதிவுகளைச் செய்த பால்தேயுவின் (Philippus Baldaeus) நூலில் இடம்பெற்ற படங்களுக்கு நிகராக இவரின் நூலில் இடம்பெற்றுள்ள நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட கோட்டோவியப் படங்கள் பார்க்கப்படுகிறது. இலங்கை பற்றிய விபரங்களும் அந்த நூலில் அடங்குகின்றன. இலங்கை என்றாலே அப்போது வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது தானே. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையில் இருந்து அதைத் தானே அள்ளிக்கொண்டு சென்றார்கள். எனவே அவர் இலங்கைப் பற்றி எழுதியதில் கறுவா பற்றி அதிகமாக விதந்துரைத்திருக்கிறார். இலங்கையின் கறுவா உற்பத்தி பற்றிய ஒரு கோட்டோவியமும் அந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.


தூத்துக்குடியில் முத்துக்குளிப்பு மேற்கொண்டு முத்துக்குளிப்பவர்கள் படகுகளில் வந்து கரையிறங்கி முத்து சிப்பிகளை கடலில் கொண்டு வந்து சேர்கின்ற காட்சியைக் கொண்ட ஒரு ஓவியமும் இந்த நூலில் உள்ளது.

எகிப்திய அரசியும் பேரழகியுமான கிளியோப்பட்ரா காதினிலே அணிந்திருந்த காதணியில் முசலிக் கடலில் (மன்னார்) இருந்து கொண்டுவரப்பட்ட முத்து பதிக்கப்பட்டிருந்ததாக கூறுகிறது, 

சிலாபம் தொடங்கி பாக்குநீரிணையின் மன்னார் வளைகுடாவும், அன்றைய மலபார் கரையோரங்கள் என்று கூறப்படுகின்ற தூத்துக்குடி, கொச்சின் வரையான கடற் பரப்பு உலகின் தரமான முத்துக்களுக்கு பேர்போயிருந்தது. சங்கு குளிப்புக்கும் இப்பகுதிகள் சிறந்து விளங்கின. கரையோர வாழ் பரதவர் சமூகம் இதில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாக்கு நீரிணைக் கடற்பகுதிகளில் நிலவும் தனித்தன்மை வாய்ந்த பருவநிலையும் சூழலியலும் பல்லுயிர் வளத்துக்குச் சாதகமாக அமைந்திருக்கின்றன. உலகிலேயே கடலுயிர்ச் செறிவு மிகுந்த இடங்களின் பட்டியலில் மன்னார் கடல்பகுதி ஐந்தாவது இடத்திலுள்ளது. பவளத்திட்டுகளும் கடற்கோரைகளும் பாலூட்டி இனங்களும் இங்கே மிகுந்துள்ளன. அதுபோலவே, சங்குகளும் முத்துச்சிப்பி இனங்களும் அமைந்துபட்டன. முடியரசுகளும் காலனியரும் மிஷனரிகளும் முத்துக் குளித்துறையைக் கைப்பற்றப் போட்டியிட்டது முத்து, சங்கு, சலாபத்தை முன்னிட்டுத்தான்.

பிரபல வெனிசிய கடற்பயணி மார்க்கோபோலோ; 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரைகளில் மன்னார் முத்துக்கள் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் மாறி மாறி கடலில் முத்துக்களை வழித்து அள்ளிச் சென்றதில் முத்துகுளிப்புத் துறைகளுக்குப் பேர் போன பாக்குநீரிணைக் கடலில் முற்றாக முத்துச்சிப்பிகள் அழிந்தே போய்விட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக அன்னிய காலனித்துவ நாடுகள் தொடர்ச்சியாக சுரண்டிச் சென்ற முத்து தொழிலில் அவ்வதிகரிகளின் ஊழல் நமக்கு ஆச்சரிமளிக்காது. ஒல்லாந்தர்கள் தமது நிர்வாகத்தில் இத்தகைய துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்காகான இறுக்கமான பொறிமுறைகளைக் கொண்டிருந்தும் யொஹான் நியூஹொப் போன்ற தளபதி தரத்தில் இருந்த அதிகாரிகளே கையும்களவுமாக பிடிபட்டு பல மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து பதவியிழந்துள்ளனர்.

முத்து விடயத்தில் என்பது அப்படி சர்வசாதாரணமாக மன்னித்துவிட்டு போகும் விடயம் அல்ல என்கிற அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்த வருமானத்துறையாக அவர்களுக்கு இருந்தது.

நன்றி - ஜீவநதி - பெப்ரவரி 2022


கொழும்பு திரையரங்குகளின் தோற்றம் - என்.சரவணன் - ( கொழும்பின் கதை - 17)

கொழும்பில் உள்ள சினிமா தியேட்டர்களின் தோற்றம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறைக் கொண்டது. சுதேசிய கூத்து, நாட்டிய, நாடக வடிவங்களைக் கண்டு வந்த மக்கள் அசையும் படங்கள் ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்தபோது வியப்பாகப் பார்த்தார்கள். அதுவே பின்னர் சுதேசிய நாடக, நாட்டிய பண்பாட்டு மரபுக்கும் காலப்போக்கில் நெருக்கடிக்கும் உள்ளாக்கியது.

நாட்டிய நாடக அரங்குகளும் தகரக் கொட்டகைகளில் நடத்தப்பட்டது போலவே கொழும்பு நகரில் உள்ள பழைய திரையரங்குகளும் தகரக் கொட்டகைகளில் தான் ஆரம்பிக்கப்பட்டன. 1877ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி இலக்கம் 51 கெய்சர் வீதி, புறக்கோட்டையில், களுதந்திரிகே தொன் பஸ்தியன் ஜயவீர பண்டாரவினால் எழுதப்பட்ட முதலாவது சிங்கள நவீன நாடகம் தொடக்கம், டவர் திரையரங்கம் திறக்கப்படும் வரை கொழும்பில் உள்ள கலை / நாட்டிய / நாடக / அரங்குகள் தற்காலிக அல்லது நிரந்தரமான தகரக் கொட்டகைகளாகவே இருந்தன. புறக்கோட்டை இரயில் நிலையத்தில் இருந்து பார்த்தால் நேரெதிரில் தெரிகிற “மல்வத்தை வீதி”யில் பிளவர் மண்டபம் (Flower Hall), மலர் மண்டபம் இருந்தது.  சரஸ்வதி மண்டபம், பெவிலியன் மண்டபம், பொது மண்டபம் (Public Hall) கூடம் போன்ற பிரபல திரையரங்குகள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் தகரக் கொட்டகைகளாகவே இருந்தன.

இலங்கையில் அசையும் படத்தைக் காண்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவர் அந்திரி (Adolphus William Andree).  அந்திரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தாயார் யாழ்ப்பாணத்தையும், தந்தை ஐரோப்பாவையும் சேர்ந்தவர்கள். ஒரு புகைப்படக் கலைஞரான அந்திரி “Hopetoun Studio” என்கிற பெயரில் கொழும்பு ஸ்லேவ் ஐலண்டில் (Slave Island) ஒரு புகைப்பட ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வந்தார்.  1903 இல் கொறிக் பயஸ்கோப் (Coric Bioscope) என்கிற ஒரு திரைப்படக் கம்பனியையும் ஆரம்பித்தார். சிங்கள சினிமா வரலாற்றுப் பதிவுகளில் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டவர் இவர். அப்போது வெளிவந்த மௌனப் படங்களைக் காண்பிப்பதற்கான ஒரு புரோஜெக்டரையும் வாங்கி ஒரு மண்டபத்ததில் திரையிட்டு வந்தார். சிங்கள, தமிழ் நாடகங்களைக் கண்டுகளித்து வந்த மேற்தட்டு மக்கள் பலர் இங்கே குவிந்து வந்தார்கள். 1910 இல் அவர் இறக்கும் வரை கோட்டையில் இதனை நடத்தி வந்தார்.

Adolphus William Andree).  அந்திரியின் “Hopetoun Studio”

இவ்வாறு கடந்த நூற்றாண்டின் முற்பாதியிலேயே இலங்கைத் திரைப்படத்துறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்ட போதிலும், நாட்டில் திரைப்படத் தயாரிப்பு ஒரு வணிகமாக தோன்றவில்லை. இருப்பினும், இந்த புதிய வகை திரைத்துறை நாட்டின் பாரம்பரிய நவீன கலைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன. ஆரம்பத்தில் இலங்கையில் குறும்பட, மௌனப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.

கொழும்பின் நகரின் மிகப் பழமையான ஹோட்டல்களில் ஒன்றான கோல் ஃபேஸ் ஹோட்டலுக்கு அருகில் அசெம்பிளி ரூம்ஸ் நிறுவனத்தின் ஒரு தற்காலிக நாடக அரங்காக 1869 ஆம் ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியிருந்தது.

"பிளவர் ஹோல்" கொழும்பு புறக்கோட்டையில் உள்ள சாமஸ் தானியக் களஞ்சிய வளாகத்தில் அமைந்திருந்தது. மல்வத்த வீதிக்கும் இன்று புதிய இறைவரித் திணைக்களம் அமைந்துள்ள கட்டடத்துக்கும் நடுவில் உள்ள பகுதி தான் சாமஸ் தானியக் களஞ்சியம் இருந்த பகுதி. ஆங்கிலேய ஆளுநர் சாமஸ் (Robert Chalmers) ஆட்சிக் காலத்தில் காலத்தில் பிளேக் தொற்று உலகம் முழுவதும் பரவி பலர் மடிந்துகொண்டிருந்த போது நாட்டின் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த 1914 இல் உருவாக்கிய களஞ்சியம் தான் இது. அப்போது ஐந்து லட்சம் மூட்டை நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 1876 இல் இருந்து இந்த இடத்தில் பிளவர் ஹோல் இயங்கி வந்தது. அதுபோல இன்று சங்கிரிலா ஹோட்டல் அமைந்திருக்கிற இடத்தில் (அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகம்) 1880 இல் இருந்து த கரிசன் தியட்டர் (The Garrison Theater) இயங்கி வந்தது. அது தொடங்கி ஓராண்டுக்குப் பின் கொள்ளுபிட்டியில் லீ ஹெஜஸ் நிறுவனத்துக்கும் திரையரங்கை நடத்தும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு மல்வத்த வீதியில் 1883 இல் “பெவிலியன் கொட்டகை” என்கிற ஒரு அரங்கமும் தற்காலிகமாக இயங்கிவந்தது. மருதானை  இரயில்வே களஞ்சியத்திலும் 1884 இல் இருந்து ஒரு அரங்கம் இயங்கத் தொடங்கியது. அதே ஆண்டு ஹுனுபிட்டிய “பப்ளிக் ஹோல்” என்கிற பெயரில் ஒன்றும் ஆரம்பமானது, புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் 1889இல் “சரஸ்வதி மண்டபம்” ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மெசேஞ்சர் வீதியில் பற்காலத்தில் தொடக்கப்பட்ட “கொலீசியம் ஹோல்”, ஆமர் வீதியில் “கெப்பிட்டல் ஹோல்” கொச்சிக்கடையில் “ ஜிந்துப்பிட்டி ஹோல்”, சேதவத்தையில் “மினர்வா ஹோல்”, தெஹிவளையில் “புஷ்பா ஹோல்” என்பனவற்றை ஆரம்பகால பழமையான மண்டபங்கள் வரிசையில் குறிப்பிட முடியும்.

கொழும்பில் சினிமா கடவுட்கள் நிறுத்தப்பட்டிருந்த பிரபல இடம் மருதானை சந்தி

மருதானை டார்லி வீதியில் இயங்கிவந்த “நெஷனல் ஹோல்” தான் பிற்காலத்தில் “காமினி ஹோல்” என்கிற சினிமா தியேட்டராக ஆனது. இலங்கையில் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்த கே.குணரத்தினத்தின் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த தியேட்டர் 1983 இனக்கலவரத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்டது.இத்தனைக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட தயாரிக்காத அவர் வாழ்நாள் முழுவதும் 20  க்கும் மேற்பட்ட சிங்களத்திரைப்படங்களை மட்டுமே தயாரித்தவர்.

கே.குணரத்தினம்

1909 அளவில் லண்டன் பாரிஸ் சினமாமொகிராப் நிறுவனம் இராணி வீதியில் அமைந்திருந்த நூலகக் கட்டிடத்தில் சினிமா காட்சிகளை காண்பித்திருக்கிறார்கள். அதுபோல யுனிவேர்சல் பயிஸ்கோல் நிறுவனமும் லண்டன் பயஸ்கோப் நிறுவனமும் புறக்கோட்டை மல்வத்தை வீதியில் தமது திரைப்படங்களை திரையிட்டிருக்கிறார்கள்.

வொர்விக் மேஜர் (Warwick Majors) என்கிற ஆங்கிலேயரும் உள்ளூர் திரைப்படத் துறையில் பங்களிப்பு செய்து வந்திருக்கிறார். இவர் தற்போது ரீகல் தியேட்டர் இருக்குமிடத்தில் தகரக் கொட்டகையில் படங்களைக் திரையிட்டு வந்தார். தகரக் கொட்டகைகளில் தொடங்கப்பட்ட “பப்ளிக் ஹோல்”, “எம்பயர் தியேட்டர்” என்பவற்றின் ஆரம்ப உரிமையாளராகவும் வொர்விக் இருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் பிரபல திரைப்பட நிறுவனமான மதன் தியேட்டர்ஸ் லிமிடெட், இந்தப் புதிய துறையில் மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை உணர்ந்து கொழும்புக்கு வந்து  திரைப்பட வணிகத்தில்  இறங்கியது. திரைப்படத் தயாரிப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை கொழும்பு நகரம் முழுவதும் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தது மதன் நிறுவனம். வொர்விக்கிடம் இருந்து எம்பயர் பேலஸ், பப்ளிக் ஹோல் ஆகிய தியேட்டர்களை மதன் நிறுவனம் வாங்கியது.

இதே காலத்தில் பெவிலியன் என்கிற சிறிய திரையரங்கையும் வொர்விக் வைத்திருந்தார். இது மருதானை சந்தியில் அமைந்திருந்தது. வொர்விக் அத்தியேட்டரை புதுப்பித்து அதற்கு "பெவிலியன் பேலஸ்" என்று பெயர் மாற்றினார். மருதானையிலும் ஒரு நல்ல சினிமா தியேட்டர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான இடத்தை தேடிக்கொண்டிருந்த மதன் நிறுவனம் வொர்விக்கிடம் இருந்து “பெவிலியன் பேலஸ்” தியேட்டரை வாங்கியது. அதை நவீனமயப்படுத்தி “எல்பின்ஸ்டன் பிக்சர்ஸ் பேலஸ்” என்கிற பெயரை வைத்தது. இன்று எல்பின்ஸ்டன் என்கிற பெயரில் இருக்கிற மண்டபம் அந்த அன்றைய பயஸ்கோப் தகரக் கொட்டகை தான். ஆக 1917க்கும் முந்திய வரலாற்றைக் கொண்டது அது. ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் கொண்டது. இன்று இந்த பழமையான தகர கொட்டகை எல்பினிஸ்டன் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, இந்த சினிமாவின் ஆரம்பம் 1917 காலகட்டத்திற்கு செல்கிறது என்று தெரிகிறது.


ஜே.எப்.மதன் (J F Madan) இந்தியாவிலும், பர்மாவிலும், இலங்கையிலும் திரைப்படத்துறையின் முன்னோடியாக கருதப்படுபவர். அவர் இந்தியாவிலும் எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கொம்பனி (Elphinstone Bioscope company) என்கிற நிறுவனத்தை நடத்தி வந்தார். எல்பின்ஸ்டன் என்கிற பெயரை இந்திய நிறுவனமான மதன் நிறுவனம் வைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. பிரிட்டிஷ் ஆளுநரான எல்பின்ஸ்டன் (Mountstuart Elphinstone 1779 - 1859) இந்திய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகராக கருதபடுபவர். நிர்வாக சட்டத்துறையிலும் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் முக்கியமானவை. அவரின் நினைவாகவே மதன் அப்பெயரை தனது கம்பனிக்கும், மருதானை தியேட்டருக்கும் வைத்தார்.

எல்பின்ஸ்டன் திரையரங்கின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் 1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அப்போதைய கொழும்பு மேயர் எச்.இ.நிவ்ஹாம் (H.E.Newham) அவர்களால் மதன் திரைப்பட நிறுவனத்தின் சார்பாக நாட்டப்பட்டது. கட்டிடத்தை எச்..எப்.பில்லிமோரியா (H.F.Billimoria) வடிவமைத்தார்.

சிற்றம்பலம் ஏ கார்டினர்

சிற்றம்பலம் ஏ கார்டினர் பிற்காலத்தில் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக ஒலிம்பியா, ரீகல் போன்ற தியேட்டர்களை வாங்கிய போது, எல்பின்ஸ்டன் தியேட்டரையும் வாங்கினார்.

1980களில் ஜே.ஆர். ஆட்சியில் எல்பின்ஸ்டன் அரசுடமையாக்கப்பட்டது. அது நவீனமயப்பத்தப்பட்டு அன்றைய பிரதமர் பிரேமதாசவால் சரசவிபாய கலாசார மண்டபத்தையும் இணைத்து 1988 ஒக்டோபர் 09 அன்று அரச நிறுவனமாக மீளத் திறக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல் - 06.03.2022


செல்வந்தர்களின் புகலிடமாகிப் போன கறுவாத் தோட்டம் (கொழும்பின் கதை - 16) - என்.சரவணன்

இலங்கை காலனித்துவத்துக்குள் சிக்கிக்கொள்ள வழிவகுத்ததே கறுவா மீதான மேலைத்தேயர்களிடம் இருந்த அளப்பெரிய மோகம் தான். தாகம் தான்.

முதன் முதலில் போர்த்துக்கேயர் வழிதவறி இலங்கையில் கரையொதுங்கிய போது கறுவா வணிகத்தில் ஏகபோகமாக திளைத்திருந்தவர்கள் அரேபியர்கள். கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றதும் அதனால் தான். போர்த்துகேயர் அரேபியர்களை விரட்டிவிட்டு படிப்படியாக கறுவா வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமன்றி “கோட்டே” அரசனுடன் கறுவா வணிகம் சம்பந்தமாக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டு, தமக்கு ஒரு கோட்டையை அமைத்துக்கொள்ள அனுமதியையும் பெற்றுக் கொண்டனர். அதுவே கொழும்பு என்கிற நகரம் உருவாகவும், அதுவே இலங்கையில் தலைநகராக நிலைபெறவும் காரணமாயிற்று.


காலனித்துவ ஆட்சியாளர்கள் பிற்காலத்தில் கறுவாவை விட மேலும் பல வருமானங்களை இலங்கையில் ஏற்படுத்திக்கொண்டார்கள். இலங்கையின் வளங்களை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிச் சென்றார்கள். ஆனால் இலங்கையின் கறுவாவுக்கு இன்றும் சர்வதேசிய அளவில் ஒரு பேரு மதிப்பு உண்டு.

கொழும்பில் அன்று கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட இடம் தான் இன்று அப்படி ஒரு பயிர்ச்செய்கை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இலங்கையின் பெரும் செல்வந்தர்கள் வாழும் மையமாகவும், கட்டடங்களாகவும் காட்சியளிக்கிறது.

ஆங்கிலத்தின் சின்னமன் கார்டன் (Cinnamon Garden) என்றும் சிங்களத்தில் குறுந்து வத்த (කුරුඳු වත්ත) என்றும் அழைக்கப்படும் இந்த கொழும்பு 7இல் (கறுவாத் தோட்டப் பகுதி) வாழ்பவதை பலரும் பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள். முக்கியமான நாடுகளின் தூதுவராலயங்களும், உயர்ஸ்தானிகர்களின் இல்லங்களும் இங்கே உள்ளன.

இலங்கையில் தென்னையும் பனையும் மலிந்திருந்த ஒரு காலத்தில்; உள்நாட்டுக்குள் அத்தனை பிரபல்யமாக கருவா இருக்கவில்லை. ஆரம்பத்தில் கறுவாவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்தவர்கள் படிப்படியாக இலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் தாமே ஆனால் கரையோரப் பிரதேசங்களில் இத்தகைய தென்னைக் காடுகளை அழித்து கறுவா உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்தார்கள். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயர்களும் அதைத் தொடர்ந்தார்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் அவர்களின் பிரதானமான வருவாயாக கறுவா வணிகம் ஆனது. ஐரோப்பா முழுவதும் இலங்கை கறுவாவை ஏற்றுமதி செய்தார்கள். கறுவா திணைக்களம் என்கிற ஒரு அரச நிறுவனத்தையே ஏற்படுத்தியிருந்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தின் படையெடுப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக கோட்டை அரசன் போர்த்துகேயருடன் ஆண்டுதோறும் 250,000 இறாத்தல் கறுவாவை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டான். அதுபோல பிற்காலத்தில் கண்டி மன்னன் 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்து மன்னனுக்கு 3000 இறாத்தல் கறுவாவும், மிளகும் பரிசாக அனுப்பினான். 

போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்தில் கூட இலங்கையர்கள் கறுவாவை காட்டுப் பகுதிகளில் சென்று தான் சேகரித்தார்கள். அதில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கையர்கள் காட்டு மிருகங்களினால் ஏற்படுகிற இடையூறுகளில் இருந்து பாதுகாப்பதற்காக போர்த்துக்கேய காவலர்கள் பாதுகாப்புக்குச் சென்றார்கள். ஒரு கட்டத்தில் கறுவா குறைந்து கொண்டு வந்தபோது கறுவா செய்கையை ஆரம்பித்தவர்கள் ஒல்லாந்தர்கள் தான். 1705ஆம் ஆண்டு சேனைப் பயிர்ச்செய்கையாக அதைத் தொடங்கினார்கள்.

இமான் வில்லம் பல்க் (Iman Willem Falck - 1765-1785) என்கிற டச்சு ஆளுநரின் கீழ் தான் கறுவா பெருந்தோட்டங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டன. 1769 இல் அவர் ஒரு பரிசோதனை முயற்சியாக கிராண்ட்பாஸ் பகுதியில் செய்துபார்த்தார். ஒரு சில ஆண்டுகளில் அது பலன் தரவே கொழும்பில் கறுவாத்தோட்டப் பகுதியில் 232 ஏக்கரில் முதலில் அவரின் ஆணையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அது மட்டுமன்றி வேறெவரும் கறுவா பிடுங்கக் கூடாது என்று சட்டமியற்றினார்கள். களவாக பிடுங்கப்படுவோருக்கு எதிராக சட்டமும் இயற்றப்பட்டது. ஒரு செடிக்கு பத்து ரிக்ஸ்டொலர்கள் தண்டப்பணமாக அறிவித்தார்கள். அதை செலுத்த முடியாதவர்கள் பத்தாண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1745 ஒக்டோபர் 8 இல் வெளியான சட்டம் இது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் கறுவா செடியை பறிப்பவர்கள் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டு கேப் பொயிண்டுக்கு (Cape Point ) அனுப்பப்பட்ட பதிவுகளும் உண்டு.

டச்சு காலத்தில் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் 3826 ஏக்கர்களில் கறுவா உற்பத்தி செய்யப்பட்டதென பிற்காலத்தில் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய “பிரித்தானியர் ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon Under the British Occupation) என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

கறுவா பயிர்ச்செய்கையாக ஆரம்பமானதும் முதலாவது கறுவாத் தோட்டம் உருவாக்கப்பட்ட இடம் அன்றைய மருதானைப் பகுதி. இதன் சாத்தியம் உறுதியானதும் நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் விரிவாக்கினார்கள்.

1832 வரை ஆங்கிலேய குடியேற்ற நாட்டரசாங்கம் பெற்ற வருமானத்தில் பெரும்பகுதி கருவா வர்த்தகத்தின் மூலம் தான் கிடைத்தது. உலக சந்தையிலும் இலங்கை கறுவா உயர்ந்த தரமுடையதாக இருந்ததால் அது தனி இடத்தைப் பிடித்திருந்ததுடன் அந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் செல்வந்தர்களாக ஆனார்கள். 

அன்றைய மருதானைப் பகுதியில் முதன் முதலில் கறுவா உற்பத்திசெய்யப்பட்ட இடம் தான் கறுவா தோட்டம். இன்னும் சொல்லப்போனால் இன்றைய கறுவாத் தோட்டம் என்று அழைக்கப்படுகிற இடத்திலிருந்து யூனியன் பிளேஸ் வழியாக, சின்ன பொரளை, மருதானை, பஞ்சிகாவத்தை, நாரஹேன்பிட்டி, திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகள் வரை கறுவா தோட்டங்கள் பரந்திருந்தன.

இன்று இலங்கைப் பிரதமரின் அலுவலகம், சுதந்திர சதுக்கம், சுவடிகூடத் திணைக்களம், ரோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனம், ரூபவாகினி, ஐ.டி.என். கொழும்பு நகர மண்டபம், தாமரைத் தடாகம், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு தேசிய அருங்காட்சியகம், மாநகரசபைக் கட்டிடம், கொழும்பின் வானிலை ஆராய்ச்சி மையம் (வளிமண்டலவியல்த் திணைக்களம்) மற்றும் இலங்கை கோள்மண்டலம், பெரிய ஆஸ்பத்திரி, ஆனந்தா கல்லூரி, சங்கமித்த மகளிர் கல்லூரி, மருதானை இரயில் நிலையம் போன்ற பரந்துபட்ட இடங்கள் அன்றைய கறுவா தோட்டங்கள் என்றால் நம்ப கடினமாக இருக்கும்.

கறுவா தொழிலில் ஈடுபட்டவர்கள் இளைப்பாறும் இடமாக மருதானையில் “பரனவாடி” என்கிற இடம் இருந்தது. அதற்கருகில் உள்ள பிரதேசம் மரியக்கடை என்றும் அழைக்கப்பட்டது. பஸ் கண்டக்டர் கூட இந்த இடங்களை சொல்லி நிறுத்தும் வழக்கம் இருந்தது. இப்போது ஆனந்த கல்லூரி அருகில் நிறுத்தச் சொன்னால் தான் நிறுத்துவார்கள்.

அங்கெல்லாம் கருவாத் தோட்டங்களை உருவாக்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அதற்கு முன்னர் அது காடு. பொரளை பகுதியிலிருந்து காடு இன்னமும் அடர்ந்த காடாக இருந்தது. டச்சு ஆளுனரும் அதிகாரிகளும் இங்கிருந்து தான் வேட்டைக்கு புறப்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தான் நகர விரிவாக்கத்துக்காக இந்தக் கறுவாத் தோட்டங்கள் அகற்றினார்கள். ஆங்கிலேயர்கள் கறுவாவை விட கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்.

சலாகம சாதி

ஆரம்பத்தில் கேரளப் பின்னணியைக் கொண்ட சலாகம என்கிற சிங்கள சாதியினர் தான் கறுவா உரிக்கும் பணியை மேற்கொண்டார்கள். குறிப்பாக மூத்தவர்களே இதனை செய்தார்கள். ஆனால் போர்த்துக்கேயருக்கு அதிகளவு உற்பத்தியை பெருக்குவதற்காக அச்சமூகத்தின் சிறுவர், சிறுமிகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

ஒல்லாந்தர் காலத்தில் மகா வரி என்கிற ஒன்றை ஏற்படுத்தினார்கள். கறுவா தொழிலில் ஈடுபடுபவர்கள் பணமாகவோ, அல்லது கறுவா மூலமாகவோ வரியாக செலுத்தவேண்டும். இந்த வரியை அரவிடுவதற்காகவே பதவிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வரியால் சலாகம சாதியினர் தான் பாதிக்கப்பட்டனர். 

சலாகம சாதியினரை மட்டும் இத்தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தி வந்தார்கள். சலாகம என்கிற சாதி உயர் சாதினராகவே கருதப்பட்டு வந்தது. ஒல்லாந்தரின் வலுக்கட்டாயப் பணிகளில் இருந்தும், ஒடுக்குமுறையில் இருந்தும் தப்புவதற்காக அவர்கள் சிங்கள தாழ்த்தப்பட்ட சாதியினரை திருமணம் முடிக்கின்ற போக்கும் வளர்ந்தது. உயர்த்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரை மணமுடித்தால் அவரும் தாழ்த்தப்பட்டவராக கருதப்படுகிற சாதிய பொதுப்பண்பு நிலவிய சூழலில் அவர்கள் சாதியை மாற்றிக்கொள்வதற்காக இந்த கலப்பு திருமண வழியைக் கையாண்டார்கள் என்று வரலாற்றாசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிடுகிறார். இதற்காகவே ஒல்லாந்தரும் தாழ்த்தப்பட்ட பெண்ணை மணமுடித்தாலும் ஆணின் மூல “சாதி” மாறுபடாது என்று அறிவிப்பு செய்தார்கள். பின்னர் வேறு வழியின்றி ஏனைய சாதியினரையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினார்கள்.

“கறுவாத் தோட்டம்” போர்த்துகேயர், ஒல்லாந்தர் காலத்திலேயும் பெரும் காட்டுப் பிரதேசமாகத் தான் இருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இறுதியில் தான் 

கறுவாத் தோட்டத்து மாற்றங்களோடு தொடர்புடைய ஹெவ்லொக், (Sir Arthur Havelock) ரோஸ்மீட், (Lord Rosmead), எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes), ஜேம்ஸ் லோங்க்டன் (Sir James Longdon), டொரிங்டன் (Torrington) போன்ற முக்கிய ஆங்கிலேய ஆளுநர்களின் பெயர்களில் இங்குள்ள இடங்களின் பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காண முடியும்.

அதேவேளை பிரித்தானிய இராணியின் நினைவாக சூட்டப்பட்ட “விக்ரோரியா பூங்கா”வின் (Victoria Park) பெயர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது புத்த ஜயந்தி கொண்டாடப்பட்ட வேளை விகாரமகாதேவி பூங்கா என்று மாற்றப்பட்டதையும் இங்கே நினைவுறுத்திக் கொள்வோம். விகாரமகாதேவி; மகாவம்சக் கதாநாயகன் துட்டகைமுனுவின் தாயார் என்பதையும் அறிவீர்கள்.

அன்றைய பசுமைக் காடு, கறுவாத் தோட்டமாகி கட்டிடக் காடாக மாறிய கறுவாத் தோட்டத்தில் எஞ்சியிருக்கும் நிழல் தரும் பூங்காவாக எஞ்சியிருப்பது விகாரமகா தேவிப் பூங்கா மட்டும் தான்.



நன்றி தினகரன் - 27.02.2022
தொடரும்
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates