Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

யாழ் நூலக எரிப்பும், யாழ்ப்பாணத்தை சிதைக்கச் சென்ற யாழ் தேவியும் - சிறிமான்னவின் வாக்குமூலம்

தமிழில் - என்.சரவணன்

யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன.

“1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்குஆம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய வீட்டுக்கு வந்து தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பை எனக்கு விடுத்தார். அப்போதைய யாழ்ப்பாணத்தின் நிலைமை மோசமாக இருப்பதையிட்டு உரையாடினோம். ஆனால் அவர் ‘நீங்கள் இந்த.பணிகளில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு ஏற்கனவே இங்கே பணியாற்றி கொண்டிருக்கின்ற ஒரு நபர் நீங்கள்’ என்றார். ஒரு அரசு ஊழியனாக அதனை என்னால் நிராகரிக்க முடியவில்லை. இறுதியில் அடுத்த நாள் அதிகாலையில் குருநாகலில் இருந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டோம். பின்னர் குருநாகளில் இருந்து இரயிலில் ஒவ்வொரு கம்பார்ட்டுகளுக்குள் நாங்கள் பிரித்து ஏற்றப்பட்டோம். 

குருநாகலில் அன்று இருந்த உதவி அரசாங்க அதிபர் திசாநாயக்க என்பவர் தான் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.

இரயில் நிலையத்தில் அங்கே அன்றைய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மைக்கை எடுத்து உரத்துப் பேசினார். அவர்  எங்களிடம்;

“இப்போது நாங்கள் தேசிய வீரத்தனமான (ජාතික වීර ගමන) பயணத்துக்கு புறப்படுகிறோம். உங்களுக்காண பணிப்புகள் அங்கே கிடைக்கும். உங்களுக்கு தேவையான உதவிகள் அங்கே கிடைக்கும்” என்றார்.

அப்போது இதன் அர்த்தத்தை பூரணமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இரயிலில்  உள்ள கம்பார்ட்டுகளில் குருநாகல, வாரியபொல என பிரதேசவாரியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தான் எங்களுடன் அரச ஊழியர்கள் அல்லாதவர்களும் இருந்ததைக் கண்டோம். அவர்கள் கைகளில் பச்சைக் குத்தியவர்கள், லுங்கி அணிந்தவர்கள், விசித்திரமாக உடை அணிந்திருந்தவர்களைக் கண்டோம். அப்போதும் இவர்கள் ஏன், எதற்காக எங்களுடன் வருகிறார்கள் என்பதை உறுதியாக உணர முடியவில்லை. 

பின்னர் தான் ஒரளவு ஊகிக்க முடிந்தது. 

இரவு எட்டு மணிக்குத் தான் இரயில் யாழ்ப்பாணத்தை அடைந்தது. நாங்கள் இறங்கியதும் இராணுவம் வந்து எங்களை பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றது. எங்களுக்கு அங்கே யாழ் இந்துக் கல்லூரியில் தான் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் அப்போது ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்தது. நாங்கள் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது ஒரு மருங்கிலும் தீயால் சேதப்படுத்தப்பட்டிருந்த பலவற்றைக் கண்டோம். அடுத்த நாள் தேர்தல் ஆனால் முன்னைய நாள் அங்கிருந்த இந்த மோசமான நிலையைக் காணக் கூடியதாக இருந்தது.

அரச ஊழியர்கள் மாத்திரம் தான் உங்களோடு இருந்தார்களா? 

யாழ் இந்துக் கல்லூரியில் நாங்கள் சென்றிருந்தபோது அங்கே அமைச்சர் காமினி திசாநாயக்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, பீ.எம்.பிரேமசந்திர ஆகியோர் அங்கே வந்து சேர்ந்தார்கள். எங்களுக்கு ஐம்பது ரூபாய் வீதம் முதலில் வழங்கப்பட்டது. 

“உங்களுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கும், உங்களுக்கு தேவையான மேலதிக ஊழியர்களும், போலீசார், இராணுவம் என அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் வாக்களிப்பை ஏழு மணிக்கு தொடங்குங்கள் ஆனால் பத்து மணிக்கு நிறுத்திவிடவேண்டும். நிறுத்திவிட்டு அங்கே வாக்களிப்புக்காக வரிசையில் இருப்பவர்களை போலிசாரையும், இராணுவத்தையும் கொண்டு கலைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்கள் பொறுப்பில் இருக்கிற வாக்கட்டைகளை நிரப்பி வாக்குப் பெட்டிகளில் போட்டுவிடுங்கள்.” என்றார்

அப்போது அங்கே இருந்த இன்னொரு ஊழியர் “அப்படியென்றால் யாருக்கு புள்ளடி இடுவது”

 என்று வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் “உங்களுக்கு அதில் உள்ள விலங்கு எதுவேண்டு தெரியும் அல்லவா” அதற்கே புல்லடி இடுங்கள் என்றார். ஊழியர்கள் பலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எவரும் அங்கே மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இருக்கவில்லை. அங்கிருந்த பலருக்கு நிலைமை பற்றிய விசனம் இருந்தபோதும் எதிர்த்து இயங்கும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை.

இது மோசமான தேர்தல் மோசடி அல்லவா?

உண்மைதான் மோசமான தேர்தல் மோசடி தான். இத்தனைக்கும் அப்போது அரசாங்கத்துக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் மோசமான தேர்தளை நடத்தினார்கள்.

என்னோடு அங்கே சோமபால ஜெயவீர என்கிற அஒரு ஊழியர் இருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் அங்கே தங்கியிருந்தோம். அவர் ஒரு உதவி ஆணையாளர். அவரிடம் நான்; யாழ்ப்பாணத்தில் நான் 79ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகிறேன். அந்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க நான் துணைபோக முடியாது; எனவே இங்கிருந்து நான் தப்பிப் போகப் போகிறேன் என்றேன். அவரையும் அழைத்தேன். ஆனால் அவர்; பயமாக இருக்கிறது கைது செய்துவிடுவார்கள் என்று பயப்பட்டார்.

நாம் இருவர் மட்டும் தான் எனவே பெரிதாக பாதிக்காது இருவரும் சென்று விடலாம் என்று அவரை சமாதானப் படுத்த முயன்றேன். இறுதியில் அவரும் ஒப்புகொண்டார்.

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லோருக்கும் நியமனக் கடிதங்களைக் கொண்டு வந்து பெயர் கூறி அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அதனை எடுக்கவில்லை. தெரியாதது போல இருந்தோம். அதிகாலை பலர் தயாராகி இருக்காததால் அங்கே பலர் நியமனக் கடிதங்களை உடனடியாக எடுக்க வந்திருக்கவில்லை. எனவே பல கடிதங்கள் அங்கே தேங்கி இருந்தன. 

அங்கே காமினி திசாநாயக்க கூறினார். நியமனக் கடிதங்கள் பெற்றவர்கள் ஒரு வரிசைக்கு வாருங்கள் கிடைக்காதாவர்கள் மறு வரிசைக்கு வாருங்கள் என்றார்.

உங்கள் பெயர் ஆரியசேன என்று இருக்கலாம். அங்கே நீங்கள் கருணாசேன என்று கூறி வாக்குப் பெட்டிகளை எடுங்கள். இப்படித்தான் ஆரியசேனக்கள், கருணாசேனக்கள் ஆகினார்கள். கருணாதிலக்கக்கள் குணதிலக்கக்கள் ஆகினார்கள். இப்படித்தான் அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். பலருக்கு இதனை மறுப்பதற்கோ, எதிர்பதற்கோ திராணி இருக்கவில்லை.

ஆனால் என் மனசாட்சி இந்த நிலைமையை எற்றுக்கொள்ள மறுத்தது.

பின்னர் இராணுவம் வந்து வாயிற் கதவைத் திறந்து நியமனம் பெற்ற ஊழியர்களை வெளியே அனுப்பியது. SPO தலைமையில் இன்னொரு அணியோடு சேர்ந்து நாங்கள் இருவரும் அந்த அணியோடு இணைந்துகொண்டோம். 

 SPO வுக்கு தனது குழுவில் இருந்தவர்கள் யார் யார் என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். நாங்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சென்ற போது தாமதமாகியிருந்தது. அங்கே இருந்த குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி நாங்கள் இருவரும் அங்கிருந்து இரகசியமாக தப்பிதத்தோம்.

எங்களுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கே உள்ள நூல் நிலையத்துக்கு செல்வோம் என்று நான் கூறினேன். நான் அங்கே பணிபுரிந்த காலத்தில் நூலகத்துக்கு சென்று பத்திரிகைகளை வாசித்துவிட்டுப் போகும் வழக்கம் எனக்கு இருந்தது. அங்கே அப்போது சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் இருந்தன.

நாங்கள் நூலகத்தை அண்மித்துக் கொண்டிருந்தபோது அந்தத் திசையில் புகையைக் கண்டோம். 

நூலகம் எரிக்கப்பட்டுவிட்டதை அங்கு சென்று பார்த்தபோது கண்களில் நீர் நிறைந்திருந்தது. அங்கே அப்போதும் சிலர் அதனைப் பார்த்தபடி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர். 

அதுவரை அங்கிருந்த புலிகள் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவு இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் அந்த இயக்கங்களுக்கான ஆதரவை அதிகரித்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது நாங்கள் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சில தமிழர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் “உண்மையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா?” என்று. அதற்கு அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறார்கள். அங்கே படித்துவிட்டு கொழும்பில் வேலை பார்க்கும் கனவுகளில் இருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஈழம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

ஆனால் இந்த சம்பவமும் அதன் பின்னர் 83 கலவரங்களும் சர்வதேச ரீதியில் புலிகள் போன்ற இயக்கங்களின் இருப்புக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தின. அதற்கு முன்னர் இருந்த சிங்கள தமிழர் உறவு மோசமடைந்தன.

நாங்கள்மீண்டும் அங்கிருந்து ஐந்தாம் திகதி இரயில் புறப்பட்டோம். அந்த இரயில் அனைத்து இரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் எங்களோடு பயணித்த சிங்காவர்கள் இரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்த மரங்களில் பலாத்காரமாக மாம்பலங்களைப் பறித்து சேகரித்தார்கள். வெறும் சிலர் அங்கிருந்த கடைகளில் சிகரட்டுகளையும், இனிப்புப் பண்ட போத்தல்களையும், வேறு பொருட்களையும் பணம் செலுத்தாமல் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். இப்படியான நிலைமைகளை தமிழ் மக்கள் பீதியுடன் எதிர்கொண்டார்கள். 

வவுனியாவில் இரயில் தரித்து நின்றபோது இரயிலில் இருந்து ஒரு கும்பல் இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு கடையை கொள்ளையடித்து அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து ஆசனங்களுக்குக் கீழே மறைத்து வைத்தனர், அங்கே கடையில் இருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்த ஒருவர் “சிங்களத்தில்” அந்தக் கடை எனது கடை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பித் தராவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன். நானும் ஒரு சிங்களவன் தான் என்றார்.

சிலர் திருப்பிக் கொண்டுத்தார்கள், சிலவற்றை அந்தக் கடைக்காரரே எடுத்துச் சென்றார். இந்தக் கும்பலோடு நாங்கள் வாக்குவாதப் பட்டோம். அது மோதல் நிலையை உருவாக்கியிருந்தது. 

மீண்டும் அந்த நூலகம் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் திறக்கப்பட்டது. அந்த நூலகத்தின் மதிப்பைக் கூறுவதாயின்; இன்றும் அந்த நூலகத்துக்குள் பாதணிகளோடு உள்ளே செல்ல முடியாது, நீங்கள் வெளியில் அவற்றை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்லலாம். 

பிற்காலத்தில் இவற்றை விசாரிப்பதற்காக LLRC குழு பின்னர் நியமிக்கப்பட்டது. என்னை அவர்கள் சாட்சியமளிக்கும்படி வீட்டுக்கே தொலைபேசி மூலம் அழைத்தார்கள்.  அக்குழுவின் முன் நான் இரு தடவைகள் சாட்சியமளித்தேன். அத்துகொட என்பவர் தான் அக்குழுவின் செயலாளராக இருந்தார். நான் நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினேன். பின்னர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் யாழ் நூலக எரிப்புக்கு மன்னிப்பு கோரினார். காலம் பிந்தி என்றாலும் அதை செய்தது நல்ல விடயம்.

ஆனால் இன்றும் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இங்கிருந்து அங்கே செல்வதற்கு அழகான பாதைகளை அமைத்தால் மட்டும் போதாது. அம்மக்களின் உளக்குமுறல்களை தீர்க்கும்வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசு செய்யவேண்டிய கடமை. ஆனால் அது வாய்க்குமா? முற்போக்கானவர்கள் இந்த விடயத்தில் தொடர் அழுத்தம் கொடுத்து இதனை உரிய வகையில் தீர்க்காவிட்டால் இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பிரச்சினைகளின் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

நன்றி - தினகரன் - 15.11.2024



காணொளியின் மூலம்-: 

சரவணனின் “கள்ளத்தோணி” ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் யமுனா ராஜேந்திரன்

2022 யூன் 11ஆம் திகதியன்று லண்டனில் நடத்தப்பட்ட மலையக இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட யமுனா ராஜேந்திரன் அவர்களின் கட்டுரை இது. முதற் தடவையாக புகலிடத்தில் நடத்தப்பட்ட இத்தகைய மாநாட்டில் முழு நாள் நிகழ்விலும் சுமார் முப்பது நூல்களின் மீதான அறிமுக உரைகள் நிகழ்த்தப்பட்டன. என்.சரவணன் மலையகம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்தக் “கள்ளத்தோணி” நூலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சாகித்திய விழாவில் இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. இந்த நூலுக்கு 2023 ஆம் ஆண்டு 2019க்கான தமிழக அரசின் சிறந்த நூலுக்கான சட்டவியல், அரசியல் வகைப்பாட்டின் கீழ் விருதும் வழங்கப்பட்டது. (நன்றி - ஜீவநதி, மே 2023)
ஐந்து இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தரப்படவேண்டும். இதுவன்றி ஒரு இலட்சத்து ஐம்பதாயிம் பேரை இந்தியாவும் இலங்கையும் சமமாகப் பிரித்துக் கொண்டு குடியுரிமை தரப்பட வேண்டும். இரத்தமும் சதையும் உணர்வுமாக, இயற்கை ஜீவிகளாக வாழ்ந்த மானுட இனம் வெறும் எண்களாக மட்டுமே எஞ்சிய துயர நாட்கள் அவை.

அவர்கள் ஒரு நூற்றாண்டின் முன்பு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தால் தேயிலைத் தோட்டங்களிலும் துப்புரவுத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, காலமாற்றத்தில் மலையக மக்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

காலனியவாதிகளால், இந்திய இலங்கை அரசுகளால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

எழுபதுகளில் இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சார்ந்த ஊட்டியிலும் தேயிலையும் காப்பியும் விளைகிற கோத்தகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களிலும் குடியமர்த்தப்படுகிறார்கள்.

இவர்களில் சிறுபகுதியினர் நான் வாழ்கிற இடத்திலிருந்து குறுந்தொலைவில் போப் காலேஜ் எனும் இடம் தாண்டி ஒதுக்குப்புறமான இடத்தில் குடியமர்கிறார்கள்.

இலங்கையில் இந்தியப் பூர்வீகத் தமிழர் என விரட்டப்பட்ட இவர்கள் தமிழகத்தில் சிலோன் தமிழர் எனும் அடையாளம் இடப்பட்டு ஊர்களின், நகர்களின் ஒதுக்குப் புறத்தில் காலனி என அழைக்கப்பட்ட இடங்களில் வாழலாயினர்.

இந்திய தமிழக சாதி அடுக்கில் காலனி என்பது தலித் மக்கள் வாழம் குடியிருப்புகள். மலையகத் தமிழர் அல்லது அல்லது சிலோன் தமிழர் அல்லது நாடு திரும்பிய பூர்வீக இந்தியத் தமிழர் இவ்வாறுதான் ஓரநிலை மக்களாக இந்திய அரசினால் நடத்தப்படலாயினர்.

பள்ளிப் படிப்பு முடித்த பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஈடுபட்ட எழுபதுகளின் நாட்களில் ஒன்றில்தான், சிலோன் தமிழர் குடியிருப்புக்குச் செல்ல சேர்ந்தது. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த எம் போன்றோர்க்கு மலையகத் தமிழர் பற்றிய எமது அறிதலின் முதல் பதிவாக பொன்விலங்கு-குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை எழுதிய நா பார்த்தசாரதியின் மேகங்கள் மூடிய அந்த மலைகளின் பின்னால் எனும் குறுநாவல் அமைந்தது.

எண்பதுகளின் ஈழ விடுதலைப் போராட்ட ஊழி தமிழகத்தின் சிற்றூர்கள், பெருநகர்களைப் புரட்டிப்போட்டது. இலங்கை வாழ் வட கிழக்குத் தமிழர்-மலையகத் தமிழர்-கொழும்புத் தமிழர் என மூவகைத் தமிழர்கள் பற்றிய வாசிப்பு என்பது எமக்கு அப்போதுதான் துவங்குகிறது.

ஈழப் போராட்ட இயக்கங்களில் மலையகத் தமிழர் குறித்த ஒரு முழுமையான நுாலை மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற இயக்கமான ஈரோஸ் அன்று தமிழகத்தில் போராட்டத்தின ஆதரவாளர்களிடையே விநியோகித்தது.

பிற்பாடுதான் பி.ஏ.காதரின் நுால், தமிழோவியன் கவிதைகள், ஏ.சிவானந்தனின் நாவல், மு.நித்தியானந்தனின் நுால் போன்றவற்றைப் படிக்க நேர்ந்தது. அந்த நூல்களின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் மலையகம் குறித்த ஆய்வு நுாலான சரவணனின் கள்ளத்தோணி.

சரவணனின் நுால் மலையகத்தின் நூற்றைம்பைது ஆண்டுகால கால வரலாற்றை ஆதி துவங்கி சமகாலம் வரை தொகுத்துத் தருகிறது.

ஒரு நூலில் வாசகனுக்கு அறிந்துகொள்ள என்ன இருக்கிறது. அதிலிருந்து அவன் என்ன கற்றான் என்பதுதான் அவனது அறுதித் தேர்வாக இருக்கும். 254 பக்கங்களில் அணிந்துரையையும் முன்னுரையையும் விட்டுவிட்டால் நுாலில் 23 கட்டுரைகள் இருக்கின்றன.

கட்டுரைகளின் அடிநாதமாக நடந்து முடிந்து சிங்கள பௌத்தப் பெருந்தேசிய அரசினால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், வடகிழக்கு, மலையகம், கொழும்பு என முத்தரப்புத் தமிழரிடமும் இருந்திருக்க வேண்டிய புரிந்துணர்வு, ஒற்றுமை போன்றவற்றை அவாவும் கட்டுரைகள், அது இல்லாமல் போனதற்கான பிராந்திய, வரலாற்று. அரசியல் தனித்தன்மை சார்ந்த விஷங்களையும் அலசுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தவிர, பின்வந்த இந்திரா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி போன்றவர்கள் எவ்வாறு தமது சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்தார்கள் எனும் வரலாற்றைத் தரவுகளுடன் நிறுவுகிறது.

காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டைைமத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாக கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.

துவக்கத்தில் மைையகத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு காட்டிய வடகிழக்குத் தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு பிற்காலத்தில் சிங்கள அரசின் சேவகர்களாக மாறி அவர்களைக் கைவிட்டார்கள் என்பதையும் பேசுகின்றன.
மேலே சொன்ன தரவுகள் யாவும் இன்று மலையகம் தொடர்பாக எழுதப்படும் வரலாற்று நுால்களில் இருந்து பொதுவாகவே நாம் தொகுத்துக் கொள்ள முடிகிறவைதான்.

இந்த நூலின் குறிப்பான சிறப்பம்சமாக நான் காண்பது, இனவாதம் என்பதையும் தாண்டி மலையகத் தமிழர் பிரச்சினையில் இருக்கிற சாதி சார்ந்த தரவுகளையும் அது சார்ந்த ஒப்பீட்டுரீதியிலான தமிழர் அரசியலையும் பேசும் கட்டுரைகளை இந்த நுால் கொண்டிருக்கிறது என்பதுதான்.

மலையகத் தமிழரில் 80 சதவீதமானவர்கள் தலித்துகள்தான். 20 சதவீதமானவர்கள் சமஸ்கிருதமயமாதலை வாழ்முறையாக் தேர்ந்த இடைநிலைச் சாதியினர். தமிழகச் சாதியப் படிநிலையில் நிலவுகிற முரண்கள், அதிகார மனநிலைகள அண்மைக் காலத்தில் மலையகத்தில் வேகம் பெற்றிப்பதை குறிப்பாக இந்நூல் தரவுகளுடன் சுட்டுகிறது.

ஈழத்திலும் தமிழகத்திலும் இப்போது முனைப்புப் பெற்றிருக்கும் சைவபார்ப்பனிய, இந்துத்துவ அரசியல் கூட்டுடன் இணைவைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இது.

வரலாற்றை இடதுசாரி நோக்கில் இருந்து அணுகுபவனாக, எனக்குப் புதியன கற்பதாகவும் மகிழ்வுக்கூடியதாவும் இருந்த கட்டுரைகள் நாடு, இன. மத, நிற, சாதிய மனநிலை தாண்டிய உன்னதமான சில மனிதர்கள் குறித்த கட்டுரைகள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இலங்கை வந்து மைையகத் தமிழர் வாழ்வு மேம்பாட்டுக்குத் தம்மை ஒப்புவித்துக் கொண்ட நடேசய்யர் தம்பதிகள், இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியா வழி மலையகம் வந்து ஒரு சாகசவாதியாக வாழ்ந்து மலையகத் தமிழரின் போராட்டங்களில் பங்கு கொண்ட மார்க் அந்தனி பர்ஸ்கேடல் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கட்டுரைகள்.

எந்த உரிமைப் போராட்டமும், மிகச் சாதரணமான மனிதர்களின் அசாரணமான தருணத்தில் நிகழும் உயிரீகத்தினால்தான் அதன் கொதிநிலையை அடைகின்றன. அப்படியான ஒரு மாமனிதன் பற்றிய எழுத்து மலையைகத் தொழிலாளி வரக்கத்தின் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தன் பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை.

இறுதியாக இரண்டு பிரச்சினைகள். ஒன்று இனவாதத்தைக் கடக்க முடியாத வர்க்கப் பிரக்ஞையின் வரலாறாகவே இலங்கை இடதுசாரிகளின் வரலாறு இருக்கிறது என்பதை இடதுசாரிக் கட்சிகளின் தளும்பல்களை முன்வைத்து இந்நூல் சுட்டிச்செல்கிறது.

பிறிதொன்று, நூலின் அரசியல் தொனியின் நீட்சியாக சுய அனுபவத்தில் இருந்து தலித்தாகத் தானும் தலித் அல்லாத இடதுசாரிகளும் தமது அன்றாடத்தில் சாதிகடந்த பிரக்ஞை நோக்கி நகர்வதை மிகுந்த வலியிடன் நூலின் இறுதி மூன்று கட்டுரைகள் பேசுகின்றன.

இந்த நூலின் இருவகைப் பண்புகள் கொண்டவை.
ஒன்று ஆய்வுகளைத் தொகுத்துத் தரும் பண்பு. மலையக வரலாறு குறித்த கட்டுரைகள் அந்தப் பண்பு கொண்டன.

பிறிதொன்று நிலவும் வரலாறாக ஆய்வுகள் குறித்த மறு ஆய்வு. வரலாற்றின் பின்னிப் பிணைந்துள்ள, அதிகம் பேசப்படாத விஷயங்களை முக்கியத்துவப்படுத்தி நுணுகிச்சென்று பேசுபவை இவை. சாதியம். இடதுசாரிகள், உன்னதமான போராளிகள் பற்றியது அக்கட்டுரைகள்.

மலையகம் குறித்த பிரச்சினைகளை ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் என சரவணனின் கள்ளத்தோணி நுலைச் சொல்வேன்.

நன்றி - ஜீவநதி



யாழ் நூலகத்திற்கு தீ வைத்தவரின் வாக்குமூலம்


ருவன் எம் ஜயதுங்க என்கிற மருத்துவர் எழுதிய கட்டுரையொன்று யாழ் நூலக எரிப்பு பற்றிய மிகவும் முக்கியமான விபரங்களைக் கொண்டு வந்துள்ளது. ருவன் ஜயதுங்க ஒரு உளவியலாளர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. உளவியல் சார்ந்த அவரின் சமீபத்திய சில நூல்கள் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

இலங்கையின் அரசியல் தலைவர்கள், கலை, இலக்கியம், சமூகம் அனைத்தையும் உளவியல் நோக்கில் விசாரணை செய்பவர். “ரோஹன விஜேவீர பற்றிய உளவியல் பகுப்பாய்வு” என்கிற விரிவான கட்டுரையைப் போலவே அவர் 2002 ஆம் ஆண்டு “பிரபாகரன் பற்றிய உளவியல் பகுப்பாய்வு” (ප්‍රභාකරන් සාධකය පිලිබඳ මනෝවිද්‍යාත්මක විශ්ලේෂණයක්) என்கிற தலைப்பிலும் ஒரு தனி நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலில் யாழ் நூலக எரிப்பு பற்றிய இந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

அவர் எழுதிய விபரங்களை அப்படியே தருகிறேன்.

-என்.சரவணன்

யாழ் நூலகத்தை எரிப்பு சம்பவம் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒருவரின் மூலம் எனக்கு தெரியவந்த கதையை இங்கே எழுதுகிறேன். 

1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் பணிபுரிந்த போது இந்த நபரை சந்தித்தேன். அவர் என்னுடைய பராமரிப்பில் இருந்த நோயாளி. ஆனால் உடல் உபாதைகளுக்கு சில மருத்துவ ஆலோசனைகளும், மாற்று மருந்தும் கொடுத்ததால் அவர் என்னுடன் நட்பாக பழகினார். இவர் என்னிடம் சொன்ன கதையை சொல்கிறேன். அதன் உண்மை – பொய் பற்றிய நம்பகத்தன்மையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்வர்ட் குணவர்தன சமர்ப்பித்த 'உளவுத்துறை அறிக்கை'யின்படி, யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை புலிகள் அமைப்பின் செயல் என்றும். அந்நூலகத்தை சிங்களவர்களே எரித்தார்கள் என்று காட்டுவதன் மூலம் சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்கிறார் அவர்.)

அவரின் தொழில் நிலையைப் பற்றி நான் இங்கே குறிப்பிடப் போவதில்லை. அது சில சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும் இந்த உண்மையை ஈழத்தமிழர்கள் தங்களின் பிரச்சார யுக்திகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் தவிர்க்கிறேன். எவ்வாறாயினும் இச்சம்பவம் இடம்பெற்ற போது இந்த நபர் வடக்கில் இருந்தார்.

ஆசியாவிலேயே ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. யாழ்.அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இருந்து சென்ற குண்டர்கள் யாழ்ப்பாணத்தில் இந்த அட்டூழியங்களை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் இன நெருக்கடியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமையைக் குலைக்கவே யாழ்ப்பாண நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்துக்கு சில அரசியல்வாதிகளும் அனுசரணை வழங்கினர். இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் ‘புலிப் பயங்கரவாதிகள் தமது தாக்குதல் திட்டங்களை வகுக்க இந்த நூலகத்தைத் தான் பயன்படுத்தி வருவதாகவும்; அதனால் அவர்கள் சந்திக்கும் இடத்தை அழிக்க வேண்டும் என்றும்’ கூறப்பட்டது. அத்தோடு, தமிழர் கூட்டணியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயங்கரவாதக் குழுவொன்றினால் கொல்லப்பட்டமையினால், அமைதி சீர்குலைந்திருந்தது.

எரிக்கப்பட்ட பின்னர் யாழ் நூலகத்தின் தோற்றம்

இந்த நபர் தெரிவிக்கையில், அவருடன் இருந்த ஒரு குழுவினர் முதலில் பெற்றோல் மற்றும் மணல் நிரப்பப்பட்ட சாராய போத்தலில் திரியை அழுத்தி, அதில் தீ வைத்து எரித்து நூலகத்திற்குள் வீசியுள்ளனர். பாட்டிலில் சதுரமாக வெட்டப்பட்ட ரப்பர் செருப்பின் பகுதிகளையும் இணைக்கப்பட்டதன் மூலம் தீ தீவிரமாக எரிந்தது. இதற்கிடையில், ஒருவர் தீ... தீ... தீ... என்று சத்தம் போட்டார். அதே சமயம், முன் கூட்டியே தயாரான ஒரு குழுவினர், தீயை அணைக்கத் தண்ணீர் ஊற்றுவது போல்; பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் வாளிகளை தீயில் வீசினர். இதனால், தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நூலகத்தில் இருந்த புத்தகங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் சிறிது நேரத்தில் யாழ் நூலகம் எரிந்து நாசமானது. இருண்ட வானம்; சிவப்பு நிறமாக மாறியது. தீ அதிக வெப்பத்தை உருவாக்கியதால், தீ வைத்தவர்கள் சிறிது தூரம் சென்று இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில், யாழ்ப்பாண தமிழ் மக்கள் எரிந்துகொண்டிருக்கும் நூலகத்திற்கு அருகில் வந்து தங்கள் புலமை மரபின் ஆன்மா எரிந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட குற்றவாளிகள் மேலும் குதூகலமடைந்தனர். தீவைத்தவர்களில் சிலர் மதுப் போத்தல்களை எடுத்துச் சென்று குடித்தபடி இனவாதத்தைக் கக்குகின்ற வசைகளை வீசிக்கொண்டிருந்தனர். புலிகளுக்கு சவால்விட்டபடி கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்கள். பின்னர் போலீசார் வந்து மிகவும் மெதுவாக அவர்களைக் கலைத்தனர்.

மிகவும் அரிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்த யாழ் நூலகத்தை அழித்தது; கலாச்சார இனப்படுகொலை என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் கூறினார். யாழ்ப்பாண நூலகத்தை அழிக்க இராணுவத்தினரின் ஆதரவு இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், ஜெனரல் வஜிர விஜேரத்ன, கேணல் வைத்திய ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகளும் யாழ் நூலகத்தின் வாசகர்களாக இருந்ததால் அவர்களும் அங்கே நிகழ்ந்ததை விசாரணை செய்தனர். இந்த குற்றத்திற்கு குண்டர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், யாழ் நூலகத்துக்குத் தீ வைத்தவர்கள் குழுவில் இருந்த இந்த நபர், பின்னர் அதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினார். பதினாறு வயதிற்கு முன்பே அவருடைய ஒரே குழந்தையும் இறந்து விட்டது. இதனால் வாழ்க்கையின் மீது பற்று ஏற்பட்டு மதுவுக்கு அடிமையானார். நான் அவரை கடைசியாக 1995 ஏப்ரலில் சந்தித்தேன். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை.


யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்குண்டா? - என்.சரவணன்

யாழ் நூலக எரிப்புக்கு யூன் 1ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் நிறைவடைக்கின்றன.

யாழ் நூலக எரிப்பில் ரணிலுக்கும் தொடர்புண்டு என தோழர் நந்தன வீரரத்ன இரு நாட்களுக்கு முன்னர் என்னுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டபோது அதிர்ந்தேன். யாழ் நூலக எரிப்பு பற்றி இது வரை வெளிவந்த கட்டுரைகள், நூல்கள் பல என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அவை எவற்றிலும் இப்படி ஒரு விபரத்தைக் கண்டதில்லை. 

யாழ் நூலக எரிப்பு பற்றி பாராளுமன்றத்தில் 1981 யூன் 09, 10 ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதுவரை தமிழில் வெளிவந்த இதைப்பற்றிய நூல்களிலோ, கட்டுரைகளிலோ முழுமையான அந்த விவாதங்களை கவனித்து எழுதவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஹன்சாட் பிரதியை கொழும்பு மியூசியத்தில் இருந்து நேற்று எடுத்தேன். 09திகதி விவாதம் முக்கியமான விபரங்களைப் பதிவு செய்கின்றன. யாழ் நூலக எரிப்பின் சூத்திரதாரிகளாக இதுவரை காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ ஆகிய பெயர்களே அடிபட்டிருக்கின்றன.

அதே யூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்ந்த மாலை அமர்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க ஓரிடத்தில் குறிப்பிடும் தகவல்கள் முக்கியமானது. காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ, பெஸ்டஸ் பெரேரா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கவும் தங்கியிருந்தார்கள் என்கிற விபரத்தைக் குறிப்பிடுகிறார். இந்த தகவலை அவர்கள் எவரும் மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த ஹன்சார்டின் பக்கமும் இங்கே இணைக்கபட்டிருக்கிறது.

“நேற்று யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின்படியே அது நடந்தது. யாழ்ப்பாணம் நாக விஹாராதிபதி தேரர், பிஷப் மற்றும் பொதுமக்கள் பலரையும் அங்கு சந்தித்தேன். அமைச்சர்களான சிறில்மதிவ், காமினி திஸாநாயக்க, பெஸ்டஸ் பெரேரா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாவட்ட சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்ததாக மதத் தலைவர்களும் மக்களும் தெரிவித்தனர். தேர்தல் பயிற்சி பெற்ற நூற்றைம்பது ஊழியர்களையும் 4 ஆம் திகதி காலை யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியேற இந்த அமைச்சர்கள் உத்தரவிட்டதையும் அறிந்தோம்"


ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ் நூலக எரிப்புக்கும் உண்மையில் நேரடி தொடர்பு இருந்ததா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது என்கிற போதும்; இந்த விடயத்தில் ரணிலின் அன்றைய கண்டனங்களையோ, விமர்சனங்களையோ கூட காணக் கிடைப்பதில்லை. ஒப்பீட்டு ரீதியில் சிறில் மெத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோரைப் போல ரணில் இனவாதியாக பேர் பெற்றதில்லை என்பது உண்மையே. ஆனால் யாழ் எரிப்பின் போது சூத்திரதாரிகளுடனான ரணிலின் பிரசன்னம் மேலதிகத் தேடலுக்கு உரியது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவது என்கிற திட்டத்துடன் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவால் நேரடியாக அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த நான்கு அமைச்சர்களும். காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி அமைச்சர் காமினி திஸாநாயக்க, கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடி அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா, கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சர் சிரில் மெத்யூ ஆகியோரே அவர்கள்.


யாழ்ப்பாணத்தில் உள்ள கிங்ஸ் ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய பேயாட்டத்திற்காக குருநாகலில் இருந்து குண்டர்களை யாழ்ப்பாணத்திற்கு பஸ்களில் அழைத்துச் சென்றனர். 39 பஸ்கள் நிரப்பப்பட்டு, அவற்றை போலீசாரின் பந்தோபஸ்துடன் கொண்டுபோய் சேர்த்தனர். மே 31, 1981 கொடுமைகளானது 1983 யூலை படுகொலைகளுக்கான முன்னோட்டமான ஒத்திகை தான்.

அன்று யாழ்ப்பாணத்தில் நூலகமும், யாழ்ப்பாண எம்.பிக்களின் வீடுகளும், கடைகளும், பத்திரிகை அலுவலகங்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் நடந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2022இல் தென்னிலங்கை அமைச்சர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன என்பது தான் வரலாற்றின் அதிசயம். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் வீடும் அவரின் பெறுமதிமிக்க நூலகமும் எரிக்கப்பட்டது. இன்று அந்த நால்வரில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரதான சூத்திரதாரி காமினி திசாநாயக்க 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத்தாக்குதலில் சிதறிப்போனார்.

"ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்த நாட்டிலிருந்து விரட்டிவிடுவதற்கு வழியுண்டெனில் அதை விரும்புகிறேன். ஆனால் அதை செய்வது எப்படி"
இந்த கொடுமைகளைப் புரிந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தக் காலப்பகுதியில் காமினி திசாநாயக்க அரச ஊடகத்துக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் இப்படித் தான் குறிப்பிட்டார். கீழ்வரும் நேர்காணலில் 5.30 நிமிடத்தில் அந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்.


தகவல் தந்துதவிய கொழும்பு மியூசியம் நூலகர் சந்தரெசிக்கு நன்றிகள்.

“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி

கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படியும் ஏழை பணக்காரர் என்ற விதத்தில் நான் இரண்டாந்தரப்பிரசைதான். எனக்கு முதல் வாங்கு கிடைக்காது. அதிகமாக கடைசி அல்லது அதற்கு முன் எனவே என்னைப்போலவே இருக்கும் கறுத்த (வெய்யிலில்அலைவதால்) நாகரீக உடையில்லாத ஒழுங்காக எல்லாப்பாடங்களுக்கும் புத்தகம் கொப்பி இல்லாத அந்த குழுவுடன்தான் எனது சகவாசம் இருந்தது. நானும் அப்படித்தான்.

என் சரவணனின் கள்ளத்தோணியை படிக்கும் போதுதான் அதன் ஆழமும் நீளமும் புரிந்தது. பின்னொரு காலத்தில் நம்மவர்களும் கள்ளத்தோணியில் அவர்களுடைய நாட்டுக்குள் போகப்போவதை அப்போது யாரறிவார். அவர்கள் மீதான எமது அணுகுமுறைகளை இப்போதல்ல, அன்றே நான் வெறுப்பும் ஒரு வருத்தமும் கலந்தே பார்த்திருக்கிறேன். எமது கிராமத்தில் சரளமாக தெருவுக்குத்தெரு அவர்கள் கலந்திருந்தார்கள். அவர்களது விவசாய தொழில் நுட்பங்கள் துலாவில் ஓடி இறைத்த எம்மவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதுபற்றி நான் எனது காடுலாவு காதையில் விபரித்துள்ளேன். எமது கிராமத்துக்கு வந்து குடியேறியோர்  பெரும்பாலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே மன்னார் யாழ்ப்பாணக்கரைகளில் வந்திறங்கியவர்கள். தமக்கென காணிகளைப் பெற்று வாழ்ந்தவர்களும், நிலமுள்ளவர்களின் நிலங்களை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்தவர்களும் தத்தம் குலத் தொழிலாக செருப்பு தைப்பது வளையல் விற்பது, போன்ற தொழில்களையும் பெருமளவில் துப்பரவுப்பணிகள் செய்வோரும் இருந்தனர். இன்றும் இவர்களுடைய சந்ததியினரே இந்தப்பணியில் உள்ளார்கள்

பெரியாருடைய கொள்கைகளின் வீச்சால் கவரப்படும்வரை எமது வன்னி யாழ்ப்பாணச்சமூகம் இவர்களை தம்முள் ஒருவராக நடத்தியதே இல்லை. கள்ளத்தோணி பல அரசியல் பொருளாதார சமூக நிலைகளின் அடிப்படைகளை கிளறி விட்டாலும், எனக்கு என் சிறு வயதில் அவர்களுடன் வாழ்ந்த காலமும் நாம் அறியாமலே அல்லது எமக்குப் புரியாமலே என் கண்முன் நடந்த அநேக விடயங்கள் நினைவுக்கு வந்து என் தூக்கத்தை கெடுத்தன. இப்போதுமணி இரவு பன்னிரண்டரை தூக்கம் வருவதாயில்லை.

இந்த சம்பவங்களில் எத்தனை அரசியல்வாதிகள் குளிர்காய்ந்துள்ளார்கள். இன்றைய தமிழ்தலைவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் எவராலும் கவனிக்கப்படாத ஒரு இனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பந்தாடப்பட்டதன் பின்னணியில் எவ்வளவு தில்லு முல்லுகள் சுத்துமாத்துகள். ஏவ்வளவு காலமாக மிக கஸ்டப்பட்டு அத்தனை விடயங்களையும் ஆதாரபூர்வமாக கொண்டுவந்திருக்கும் சரவணன் இதை ஒரு ஆன்மீக சுத்தியோடு மலையக மக்களின் மாவீரர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஏப்போதாவது ஒரு பத்திரிகையின் ஒரு மூலையில் படித்த அந்த செய்திகள் இப்போது வீரியம் பெற்று நிமிர்கின்றன.

“மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்ல 

 என்மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்கமுடியவில்லை.- அடி 

 வாழ வந்த பொண்ணே என்ன மதிமயக்கிய கண்ணே 

 பூமரத்து சிட்டே என் புனுகு சாந்துப் பொட்டே

தேனே ஒன்ன பிரிந்து போக தேம்புதடி எம்மனசு

தேற ஒரு வழியுமில்லடி தேமதுரகிளியே

ஓன்ன அக்கரை இறக்க ஒட்டார் என்ன இக்கரை இறங்க ஒட்டார்

இது இமிக்கிரேசன் சட்டம் அது ஒனக்கும் எனக்கும் நட்டம்”

இது மலையகத்திலிருந்து வன்னிக்கு வந்து எமது தோட்டத்தில் கூலியாக வந்த ஓருவர் பாடிய பாடல்களில் ஒன்று. ஆக அரசாங்கமும் இனத்தில் பிறழ்சாதியினரும் மட்டுமல்ல ஒரே மொழியைப் பேசும் சக தமிழர்களால் வஞ்சிக்கப்பட்ட பலரை எனக்குத் தெரியும். குடியுரிமையற்றவர்களை கைது செய்து நாடுகடத்திய காலத்தில் ஒருநாள் எமது வீட்டின் முன்னே ஒருவரது வாகனத்தரிப்பிடத்தில் சிறு மறைப்படைத்து வாழ்ந்த ஒரு குடும்பம் குத்தகைநிலத்தில் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். திடீரென ஒரு மத்தியானப்பொழுது ஒரு பொலீஸ் வாகனம் வந்து அவர்களை குடும்பத்துடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பறந்தது. அவர்கள் கள்ளக்குடியேற்றக்காறர்களாம்  என்றார்கள். நாங்கள் ஓடிப்போய் அந்த வீட்டை எட்டிப்பார்த்தோம். சாப்பிட்ட பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன. அவர்களை எச்சிக் கைகழுவக்கூட அனுமதிக்கவில்லை. முதன்முதலாக நான் கண்ட குடிப்பெயர்வு. அது என்னைக் கலக்கியது. அதன்பின் இதே போல பல. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்களது செழிப்பான பயிர்களை தமதாக்கிக் கொள்ள முனைந்த நிலச் சொந்தக்காரர்களின் மொட்டைக்கடுதாசிகளே. 

இனக்கலவரங்களின் பட்டியல் நான் அறிந்த வரையில் 1915என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு முன்னும் நடந்த கலவரங்கள் அதன்காரணங்களோடு மிகத் துல்லியமாக தந்துள்ளது ஆச்சரியம். போராட வலுவற்ற ஒரு குழுமம் போராடியே தீர வேண்டும் என்ற அழுத்தங்களின் பின்னணியில் தன்னெழுச்சியுடன் போராடியது எனற செய்தி இதுவரை இருட்டில் கிடந்துவிட்டது. உண்மையில் கள்ளத்தோணிக்காக சரவணன் பெரும் முயற்சியை முதலீடாக்கியுள்ளார். இதற்காக மலையகம் மடடுமல்ல நாங்களும் அவருக்குத் தலைவணங்குகிறோம். 

மக்களை பங்குபோட்ட இலங்கை இந்திய அரசுகளின் பச்சோந்தித்தனத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கும் பாங்கு அருமை. ஒரு வரலாற்றை எழுதும் போது முன்பின் சாயாமல் தேதிவாரியாக நிர்ணயித்து சம்பவங்களை கோர்த்தெடுத்து வாசிப்பவர் சோர்வடையாமல் தருவது யாருக்கும் அரிதாகும். சரவணனுக்கு அது கைவந்த கலையாக படிந்திருக்கிறது. அவரிடம் தேர்ந்த அரசியற் தெளிவும் மக்களின் மீதான கரிசனமும் இதை யாருக்காக எழுதுகிறாரோ அவர்களுக்கும் புரியும் வண்ணம் இலகுநடையிலும் சொல்லியிருக்கிறார். புத்தகத்தை மூடும்போது மனம் பெரும் சுமையாகி கனக்கிறது.

இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்

நூறாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1919ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளியான ஆதிதிராவிடன் (Audi Diraviden) பத்திரிகையானது  இலங்கையின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாகும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முதலாவது பத்திரிகையாகும். இந்திய வம்சாவளியினரில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக வெளியானது. ஆதி திராவிடர் என்போர் யார். ஆதிதிராவிடன் பத்திரிகையை வெளியிட்டவர்கள் யார்? எந்த சங்கத்தால் வெளியிடப்பட்டது? அப்பத்திரிகையின் உள்ளடக்கம் என்ன? இலங்கையில் திராவிட இயக்கங்களில் வருகை? திராவிட சித்தாந்தத்தின் இலங்கை வடிவம் எப்படி இருந்தது? என்பது பற்றிய தேடலை இக்கட்டுரை ஆற்றுகிறது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியிலும், திராவிடக் கருத்துக்கள், சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு, சாதியொழிப்பு, போன்ற கருத்துக்களின் வேகமான வளர்ச்சிக்கு அன்றைய பத்திரிகைகளும், நாடகங்களும் முக்கியமான காரணங்கள். இவை பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டன.

பத்திரிகையில் சாதியெதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு எழுதியமைக்காக ப.இராகவன் என்பவர் கொலை செய்யப்பட்ட செய்தியை அயோத்திதாசர் நடத்திய “தமிழன்” என்கிற பத்திரிகையில் 1913 மார்ச்சில் வெளிவந்த இதழில் பதிவு செய்தார்.

திராவிட இயக்கங்களும், அதன் சித்தாந்தங்களும் தமிழ் நாட்டில் முளைவிட்ட வேளையில், தலித்மக்கள் தம்மை ஆதி திராவிடர் என்று அழைத்துக்கொண்டார்கள். சாதிப்பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வந்த அவர்கள் ஆதி திராவிடர்கள் என்கிற அடையாளத்துக்குள் வந்தமை ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் இந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தோன்றிய இயக்கம் தான் “இலங்கை இந்தியர் சங்கம்”. அந்த சங்கத்தினால் தான் ஆதி திராவிடர் பத்திரிகை வெளிக்கொணரப்பட்டது.

ஆதி திராவிடன் இலங்கையின் முதலாவது தலித் இதழ் மாத்திரமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிகையும் கூட. 

மலையகத்தை நாம் ஒரு தலித் சமூகமாக இனங்காண்கிறோம். மலையகம் தொடர்பாக வெளிவந்த முதல் பத்திரிகை தொழிலாளர் உரிமை சார்ந்து வெளிவரவில்லை என்பதையும், அப்பத்திரிகை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பத்திரிகையாகத்தான் வெளிவந்தது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆதி திராவிடர் கருத்தாக்கம்

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சங்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களை “தலித்” என்கிற சொல்லாடலுக்கூடாக அழைக்கத்தொடங்கியதன் பின்னர் இந்தியா முழுவதும் அந்த சொல் விரவியது. 90களில் அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் தலித் எழுச்சியைக் கொண்டுவந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் அனைத்தும் தமிழுக்குக் கொண்டுவரப்பட அந்த நூற்றாண்டு எழுச்சி காரணமானது. “தலித்” இயக்கங்கள், இலக்கியங்கள், தலித் அரசியல் கருத்தாக்கம் என அனைத்தும் வெகுஜனமயப்பட அந்த எழுச்சி காரணமானது. தலித் என்கிற பதம் அதன் பின்னர் ஆதி திராவிடர், பஞ்சமர் போன்ற பதங்களுக்கு மாற்றீடாக நிலைகொண்டது அதன் பின்னர் தான்.

தலித் என்கிற சொல்லாடல் வெறுமனே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளப்படுத்த மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டதால் அதை முற்போக்குத் தளத்தில் அனைவருமே கையாள்கிற சொல்லாட்சியாக வலுப்பெற்றது.

அம்பேத்கர் இப்படிக் கூருகிறார் “பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள்” (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467).

அதுவரை ஆதி திராவிடர் சொல்லாட்சியானது தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கிறது மேலும் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாகப் பரிணமிக்க முயன்றிருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான புறத்திலுள்ள மக்கட்பிரிவினரான பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டே அழைக்கப்பட்டனர். தீண்டத்தகாதோர், ‘தீண்டப்படாதவர்’ அருவருப்பூட்டுகிற; பயமுறுத்துகிற சொல்லாடலாக சமூகத்தில் எப்படி நிலைபெற்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.காந்தியின் “ஹரிஜன்” (‘ஹரி’யின் மக்கள்) என்கிற கருத்தாக்கமானது “ஹரிஜன்” என்கிற பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறது தென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும். ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டதென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5). 

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் பிற்காலத்தில் கலந்தது தான் ஆனால் கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராக காலனிய ஆட்சிக் காலத்தில் திரட்சி பெற்றபோது அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246). இப்படித்தான் திராவிடத்தைக் கைக்கொண்டனர்.

ஆதி திராவிடர் என்கிற சொல்லாட்சிக்கு உரியவர்கள் பறையர்கள் என்றும், பள்ளர் சக்கிலியர் ஆகிய சாதிகள் உள்ளடங்காது என்கிற வாதமும்; எங்களை அந்த சொல்லாட்சிக்குள் அடைக்காதீர்கள் என்று அல்லர், சக்கிலியர் தரப்பில் இருந்தும் ஆங்காங்கு சலசலப்புகளைக் காண முடிகிறது.பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது. ஆதி-திராவிடர் என்கிற சொல் ஆரம்பத்தில் பறையர்களால் முன்வைக்கப்பட்டாலும் அது அது தமக்கானது என்று பறையர்கள் வாதிட்டதில்லை. ஆதி திராவிடர் என பெயர் மாற்றக் கோரி சென்னையில் 1922 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அயோத்திதாசர்


அயோத்திதாசர் ஆதிதிராவிடர் கருத்தை உள்வாங்கி அதனை பின்னர் பரப்பிச் சென்றதில் முக்கிய முன்னோடி. ஆதி திராவிடர்களுக்கும் பௌத்தத்துக்கும் உள்ள உறவைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார்.  இலங்கைக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் பௌத்த தீட்சை பெற்று பௌத்தராக ஆனார். அந்த விஷயத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்ட நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது “பஞ்ச மகா விவாதங்கள்”. அந்த ஐந்து விவாதங்களின் இறுதி விவாதம் பாணந்துறையில் நிகழ்ந்தது. அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் (John Capper) பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடரானது பின்னர் பிரசித்திபெற்ற நூலாக 1878 இல் அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate – Buddhism and Christianity – face to face). இலங்கையில் ஏற்பட்ட பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. இந்த நூலை வாசித்த அமெரிக்காவை சேர்ந்த கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் இந்த நூலின் மீதும், அந்த விவாதத்தின் மீதும் அந்த விவாதத்தை நடத்தியவர்களின் மீதும் ஈர்ப்புகொண்டார்.

அதன் பின்னர் அவர் விவாதத்தில் தொடர்புடைய மிகெட்டுவத்தே குணானந்த  தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர் ஆகியோருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். இந்தத் தொடர்பு அவரை இலங்கை வருகைக்கு வித்திட்டது.

அமெரிக்காவில் முதலாவதாக பௌத்தத்துக்கு மாறியவராக அறியப்பட்டவர் அவர். இந்த நிலையில் தான் பாணந்துறை விவாதம் குறித்த நூலை அறிகிறார். இலங்கை வரத் தீர்மானிக்கிறார். 1875 ஆம் ஆண்டு அவர் நியுயோர்க்கில் பிரம்மஞான சங்கத்தை (Theosophical Society) எலேனா ப்லாவட்ஸ்கி என்பவருடன் இணைந்து தொடங்கினார்.

அதன் பின்னர் 1880, மே 17 அன்று காலியில் பெரும் வரவேற்புடன் இலங்கை வந்தடைந்தார். ஜூன் 17 இல் பிரம்மஞான சங்கத்தை காலியில் அமைத்தார். அச்சங்கத்தின் தலைமையைப் புத்தர் பிறந்த பூமிக்கு மாற்றுவதற்காக  இந்தியாவில் பல இடங்களைத் தேடியலைந்து இறுதியில் சென்னை அடையாரில் 1882 இல் பிரம்மஞான சங்கம் நிறுவப்பட்டது.

அயோத்திதாசரின் இலங்கை விஜயம்

1882 இல் ஒல்கொட், பிளாவுட்ஸ்கி அம்மையார் ஆகியோரை சாதித்த பண்டிதர் சென்னையில் ஆன்னி பெசென்ட் மற்றும் அயோத்திதாசர் ஆகியோருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களுக்கான சிறுவர் பள்ளிகளை அமைப்பதில் ஒல்கொட் ஈடுபட்டார். ஒல்கொட்டின் வருகைக்கு முன்னரே பண்டிதர் பௌத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

1890இல் அயோத்திதாசப் பண்டிதர் ஒல்கொட் மற்றும் பிளாவுட்ஸ்கி அம்மையார் ஆகியோருடன் இலங்கை சென்று அங்கு சுமங்கல தேரரின் மூலம் மூவரும் பஞ்சசீல தீட்சை பெற்று பௌத்தர்களாகினார்கள். இலங்கையிலிருந்து திரும்பிய சில ஆண்டுகளில் 1898 இல் அவர் தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தை உருவாக்கி மீண்டும் தென்னிந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார்.  அதே ஆண்டு அவர் “புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி” என்கிற நூலை வெளியிட்டார்.

“சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வ குடிகள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்கள் ஆதலின் தென்னாட்டுள் தமிழர் என்றும், வடநாட்டார் திராவிடர் என்றும், திராவிட பெளத்தாள் என்றும் வழங்கி வந்ததுமின்றி, இலங்கா தீவகத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும் சரித்திரங்களிலும் இப் பூர்வக்குடிகளைத் திராவிட பெளத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக் கொண்டும் வருகின்றார்கள்”

(தமிழன் 2:21, நவ 4, 1908.) என அயோத்திதாசர் தரும் திராவிட அடையாளம் என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, அதிலும் குறிப்பாகச் சாதிபேதமற்ற தமிழர்களையே அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்கள் இப்பத்திரிகையின் வரவில் செல்வாக்கு செலுத்தியிருந்தபோதும் அவரைப் பற்றிய எந்த விபரங்களோ கருத்துக்களோ கிடைக்கப்பட பத்திரிகைகளில் இருக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.

ஆதி திராவிடர் கருத்து இலங்கையில் நிலைகொள்ளவில்லை.

நடேசய்யர் மலையக தொழிற்சங்க விடயத்தில் பெரும் முற்போக்கு பாத்திரத்தை வகித்தபோதும் ஒரு பிராமணராகவே வாழ்க்கை நடத்தியவர். அவரின் எழுத்துகளிலோ, செயலிலோ சாதிய விடுதலைக்கான கூறுகள் இருந்ததில்லை எனக் கூற முடியும். நடேசய்யர் திராவிட அல்லது ஆதி திராவிட கருத்துகளால் கவரப்பட்டவர் இல்லை.

ஆதி திராவிட கருத்தாக்கம் மலையகத்தில் சுமார் அரை நூற்றாண்டு காலம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதற்குப் பிற்காலத்தில் 1942 ம் ஆண்டு யூன் 28 அன்று ஏ.எம் துரைசாமி; புசல்லாவையில் இலங்கை இந்திய ஆதி திராவிடர் காங்கிரஸ் என்கிற அமைப்பைத் தொடங்கியதை உதாரணமாகக் கொள்ளலாம். அது தொடர்பாக அன்று வீரகேசரியில் வெளிவந்த ஒரு செய்தி இப்படிக் குறிப்பிடுகிறது.

“இலங்கை இந்தியா ஆதித்தமிழர்களும் தற்காலம் தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோருமாகிய பல்வேறு வகுப்பினர்கள் அடங்கிய பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 கபுசலாவை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திரளாக பொது ஜனங்களும் பல பிரமுகர்களும் சமூகமளித்திருந்தார்கள். கூட்டத்திற்கு திரு ஏ எஸ் ஜேசுபாபாதம் தலைமை வகித்தார். அச்சமயம் தாழ்த்தப்பட்ட மக்களெனப்படுவோரின் பல்வேறு வகுப்பினர்களை ஒன்று சேர்ப்பதற்காகவும் அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதற்காகவும் இன்னும் அவர்களுக்காக வேண்டி எல்லாவித தொண்டுகளில் ஈடுபடவும் ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து திருவாளர்கள் கே ராஜலிங்கம் எஸ் சோமசுந்தரம் கே எஸ் எஸ்பி மற்றும் பலரும் பேசிய பின்; "இலங்கை இந்திய ஆதித் தமிழர் காங்கிரஸ்" என ஏகமானதாக ஸ்தாபிக்கப்பட்டது.”

1934 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வெளியான “ஆதி திராவிடன்” பத்திரிகையின்படி கே.சுப்பையா அவர்களால் கண்டியில் உள்ள ஆதி திராவிடன் பிரஸில் அச்சிட்டு வெளியானதாகக் கூறுகிறது. அதாவது ஒரு அச்சகம் நடத்துமளவுக்குப் பலமாக “ஆதி திராவிடன்” பத்திரிகை இருந்திருக்கிறது என்று உணர முடிகிறது. இந்த அச்சகம் இல.11. அல்லுலுவ ரோட், கண்டி என்கிற விலாசத்திலிருந்திருக்கிறது.

இதே வேளை பத்திரிகையின் உள் பக்கங்களின் கீழ் கோட்டின் கீழே பெரிய எழுத்தில் சில பழமொழிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சில “முக்குலம்” பற்றியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு

“முக்குல (திராவிடர்) வீரர் உயர்வுறல் திண்ணம்”

“ஒப்புடன் நாளும் (முக்)குல சேவை, செய்து தப்பாமல் வெற்றி சாதித்திடுக”

“ஏதும் முக்குலப் புத்திரர் இழிவுற்றிருப்பினும், சோதரரெனவே தாங்கி நடத்துக”ஆதிதிராவிட கருத்துருவாக்கமானது தாழ்த்தப்பட்ட “தீண்டத்தகாத” பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளைக் குறிப்பதற்கான சொல்லாடலாகவே பிறப்பெடுத்திருந்தது. ஆனால் முக்குலம் என்பது “கள்ளர், மறவர், அகமுடையார்” ஆகிய சாதிகளைக் குறிப்பதாக பொதுவில் பொருள் கொள்ளப்படுகிறது. மலையகத்தில் முக்குலத்தோர் என்போர் ஆதி திராவிடர்களை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கச் சாதிகளாக அடையாளம் காணப்படுபவர்கள் ஆக; இங்கே ஆதிதிராவிடர் x “முக்குலம் என்கிற முரண்பட்டதும் குழப்பகரமானதுமான அணுகுமுறைகளைக் காண முடிகிறது. அதேவேளை முக்குலத்தவரின் ஆதிக்கம் அன்றிருந்ததை விட பிற்காலத்திலேயே அதிகம் தலை தூக்கியிருப்பதையும் உணரமுடியாமலில்லை.

மேற்படி பத்திரிகையின் முதலாவது ஆசரியராக எஸ்.பி.கோபாலசாமி அது 1919 இல் தொடங்கப்பட்டபோது பணியாற்றியிருக்கிறார்.  பின்னர் அதன் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் கே.சுப்பையா இயங்கியிருக்கிறார். அவரின் கட்டுரைகளைக் கூட அதில் காண முடிகிறது. ஆனால் உள்ளடக்கத்தில் சுமார் 70சத வீதத்துக்கும் அதிகமாக தமிழக செய்திகளும், விபரங்களும், கருத்துக்களுமே உள்ளடங்கியுள்ளன. இலங்கை பற்றிய செய்திகள் குறைவாகவே உள்ளன.

எனவே ஆதி திராவிடர் பற்றிய தமிழக நிலைமைகளையும், கருத்துக்களையும் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பரப்பும் இலக்கைக் கொண்டே அது இயங்கியிருக்கிறது என்று பொருள்கொள்ளலாம்.

மலையகத்துக்குத் தாயகத் தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள்; அவர்களைத் தமிழகத்துடன் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்க உதவிற்று என்கிற நிலை இருந்தது. அவ்வப்போது தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் ஊடாகவே நடப்பு செய்திகளையும், விபரங்களையும் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆறுதலையும், ஆனந்தத்தையும் கூடவே ஏக்கத்தையும் அடைந்தார்கள்.

ஆனால் அப்பத்திரிகைகள் தோட்டத் தொழிலாளர்களிடம் நேரடியாக வந்து சேருவதற்குக் காலம் எடுத்தது. அதை விலை கொடுத்து வாங்கவும், வாசிப்பறிவு உடையவர்களும், அப்பத்திரிகையை அடையவும் சிலரே இருந்தார்கள். அவர்களிடம் சேரும் பத்திரிகை தோட்டத்தில் பொது வெளியிலும் வேலை இடங்களிலும் ஒருவர் உரத்து வாசிக்க மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கும் வழக்கமே இருந்தது. அவ்வாறு  தோட்டத் தொழிலாளர்களை வந்தடைய சில வேலைகளில் மாதங்களும் ஆகலாம். அத்தனை பழைய செய்திகள் காலம் தாழ்த்தி அவர்களுக்குக் கிடைத்தாலும். அதுவே அவர்களை இன்பமூட்டுபவையாகயும், ஆறுதல் தருபவையாகவும் இருந்தன.

அவ்வாறு தமிழகப் பத்திரிகைகளுக்குக் கணிசமான சந்தை இலங்கையில் இருந்தது.

நடேசய்யர் இலங்கைக்குப் புறப்பட்டு வந்ததே தமிழகத்தில் வெளியாகிக்கொண்டிருந்த தனது பத்திரிகைக்குச் சந்தா சேர்ப்பதற்கும், சந்தையை உருவாக்கிக் கொள்வதற்கும் தான். அப்படி வந்தவர் மலையகத் தொழிலாளர்களின் துயர் வாழ்க்கையைக் கண்டு அவர்களுக்காகச் சேவை செய்ய நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் தான் அவர். எனவே மலையகத் தமிழர்களின் இலக்கிய கலாச்சாரத்தை வளர்த்து விட்டத்திலும் அன்று இலங்கை வந்து சேர்ந்த தமிழகப் பத்திரிகைகளின் வகிபாகம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்கக் காலகட்டத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. அதுபோல இவ்விதழ் வைதீக சார்பு கருத்துக்களை வெளியிட்டு வந்த போதிலும் சாதி ஒழிப்பு மனுதர்ம எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை போன்ற குறிக்கோள்களில் எவ்விதக் கருத்தியல் சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற முதல் சாதிமறுப்பு மணம், மதமாற்றம் பற்றிய சில புதிய தகவல்களையும் ஆதிதிராவிடன் பதிவு செய்துள்ளது.

1920 மார்ச்சில் சங்கர கண்ணப்பர் எழுதிய 'நாம் சூத்திரர்களா? என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இதழில் வெளிவந்த கட்டுரைகளின் விவரம் வருமாறு, "மானிட சரீரமும் அதன் வாழ்க்கையும்”, “ஆதிதிராவிட சமூகத்தினரின் முன்னேற்றம்” “பெண்கல்வி” (தொடர்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தென்னிந்திய தமிழ்ச்சாதி அமைப்பின் அடக்குமுறைகள், இலங்கையிலும் வேறு வடிவங்களில் தொடர்ந்தன. இலங்கையின் மலையகப்பகுதிகளில் குடியேறிய தமிழர்களிடம் சாதியம் வேரூன்றியிருந்தது. குடியானவ சாதிகளான (வேளாளர், மொட்டை, சோழிய சைவ வேளாளர்) முக்குலத்தோர். (கள்ளர், மறவர், அகம், படியார்) சிறுபான்மையின செட்டி, ரெட்டி, வண்ணார், கொட்டி வண்ணார், அம்பட்டர் ஆகியோர் அடங்குவர். இக்குடியானவரான சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர், பறையர், வண்ணார் இவர்களைக் கீழான சாதிகளாகவே கருதினர். இவர்களில் 90 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தனர். இவ்வாறாக தமிழக சாதியத்தின் நீட்சி இலங்கையிலும் தொடர்ந்து நீடித்தது.

மலையகப்பகுதிகளின் சாதியக் கொடுமையைவிட இறுக்கமான சாதியமைப்பு இலங்கையின் வடபகுதி வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்களச் சமூகத்திலும் நிலவியது. தமிழகத்தில் தம்மை ஆதிக்கம் செலுத்திய சாதியினர் இலங்கையில் அத்தனை பெரிய எண்ணிக்கையில் இராதது ஆறுதலாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்குள் இருந்த படிநிலை ஒழுங்கில் இருந்த ஆதிக்கமும், எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்தன. சாதி ஒடுக்குமுறையானது தமிழக அனுபவத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் அளவிலும், பண்பிலும், வடிவத்திலும் வேறு பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு  தமிழ்ப்பகுதிகளிலும், தமிழர்கள் குடியேறிய மலையகம், கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக் கல்வி, சமய, பண்பாட்டுத் தளத்தில் நீக்கமற நிறைந்திருந்தது. வடக்கில் மோசமான தீண்டாமையும், பாரபட்சமும் உச்சத்தில் இருந்தன. அங்கே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அடிமைகளாக இருந்தனர். இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல வலுக்கத் தொடங்கின. இவ்வாறாக சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் நிகழ்ந்த காலகட்டத்தில் இலங்கையில் ‘ஆதிதிராவிடன்' இதழ் தோன்றுவதற்கான சூழல் உருவாகியது. (இரா பாவேந்தன்)

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து கூலிகளாக சென்ற தமிழர்கள் பலரும் இணைந்து, 1912 ஆம் ஆண்டு 'இலங்கை இந்தியச் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பில் இந்து தமிழர்களும், கிறித்தவத் தமிழர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த அமைப்பின் சார்பில் 1919ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆதிதிராவிடன் இதழ் வெளியிடப்பட்டது.


ஆதிதிராவிடன் இதழ் 1/8 அளவில் 16 பக்கங்களைக் கொண்ட முதல் இதழ் ஆதிதிராவிடன் ஒரு சிறந்த மாதாந்திரத் தமிழ்ப் பத்திரிக்கை என்ற வாசகத்துடன் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகியது. "தெய்வமிகழேல், சக்கரநெறிநில் ஊக்கமது கைவிடேல்” என்ற முழக்கத்துடன் கொழும்பு அல்பட்ர்ரோடு பொல்வத்தை இந்திய இலங்கைச் சங்கத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.

இந்த இதழ் கொழும்பு எண் 27, Barber Street, Robert Printers என்கிற அச்சகத்தில் அச்சிடப்பட்டு. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளி வந்துள்ளது. ஆதிதிராவிடன் இதழின் முதல் கால் பக்கத்தில் இதழின் பெயர் முழக்கங்கள் இடம் பெற்றிருந்தன. இதழுக்குப் பக்க எண்கள் தொடர் எண்களாக இட்டுள்ளனர். சில இதழ்களில் ஆதிதிராவிடர் பஞ்சாங்கம் வெளிவந்துள்ளது.

1919 தொடக்கம் 1921 வரையான ஈராண்டுகள் வெளியான ஆதி திராவிடன் இதழ்களைத் தொகுத்து 2008 ஆம் ஆண்டு இரா.பாவேந்தன் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். அத்தொகுப்பில் தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மகாத்மா ஜோதிராவ் ஃபூலே இயக்கத்தைச் சார்ந்த மன்னர் சத்ரபதி சாகு மகாராசர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமானது ஃபூலே இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஓர் அரிய ஆவணமாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.1934 ஆம் ஆண்டு 5 சதத்துக்கு விற்பனையான “ஆதி திராவிடன்” சஞ்சிகையை இலங்கை - இந்தியச் சங்கம் என்கிற அமைப்பின் மூலமாகவே நடத்தப்பட்டிருக்கிறது.

ஆரம்ப இதழ்களில் இலங்கை - இந்தியச் சங்கத்தின் கூட்ட அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் பற்றியும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விபரங்களும் கூட அதில் இடம்பெற்றுள்ளன. அத் தீர்மானங்களில் ஒன்று சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் திராவிடன் இதழை இனாமாக கொடுக்கப்படவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (மலர் 2, இதழ் 3)

இலங்கை - இந்தியர் சங்கத்தின் ஒவ்வொரு கூட்டங்களின் போதும் புதிய ஒருவர் தலைமை தாங்கும் மரபை பின் பற்றியிருக்கிறார்கள். ஆதி திராவிடன் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.பி.கோபாலசாமியும் அவ்வாறு சில தடவைகள் தலைமை தாங்கியிருக்கிறார் என்றும் அப்பத்திரிகை செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. இதன் உப ஆசிரியராக பொ.கனகசபை செயற்பட்டிருக்கிறார். (மலர் 2. இதழ் 8)

இந்த சங்கத்தின் தீர்மானங்களை இன்று பார்க்கையில்

தமிழகத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு அனுதாபக் கடிதம் அனுப்புவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றுவது,

இலங்கையிலும், தமிழகத்திலும் இறந்தவர்கள் பற்றிய அனுதாபக் கட்டுரைகளை வெளியிடுவது, பத்திரிகைக்கு நெருக்கமானவர்களின் குடும்ப திருமண நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது,

தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் ஆதிக்கச் சாதி வெறிபிடித்தவர்களை வெற்றிபெற விடாமல் செய்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு சாதகமானவர்களை வெற்றி பெறச் செய்யப் பரிந்துரைகளைச் செய்வது போன்ற விபரங்கள் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழகத்தில் இடம்பெறும் சாதியக் கொடுமைகள் பற்றிய செய்திகளும் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. சில உண்மைக் கதைகளும் பிரசுரமாகியுள்ளது.

இப்பத்திரிகையின் சாதியெதிர்ப்பு போக்குக்கு ஆதரவு தெரிவித்து ஒரு வாசகர் வாழ்த்தி பணஉதவி செய்த கடிதம் ஒன்று 1920ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

கனம் தங்கிய ஐயா பத்திராதிபர் அவர்கட்கு,

ஐயா! தாங்கள் அன்புடன் அனுப்பிய சஞ்சிகைகளும் மற்றும் சபையின் சட்டதிட்டமுதலான வகைகளையும் கண்ணுற்றேன், நம்மிந்திய சோதர சோதரிகள் தவறுதலுண்டாகுங்கால், அவர் கட்கு வேண்டிய உதவிகள் புரியுமாறு செய்திருக்கும் ஏற்பாடு களை வாசித்து அகமகிழ்ந்தேன்.

‘குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்

நடைமெலிந்தோமாரூர் நண்ணினு நண்ணுவர்'

என்னும் மூதுரைப்படி இவ்வேழை ஆதிகுலத் திருக்குலத் தாராகிய, கலிவாகு, வீரவாகு மற்றும் சக்கரவர்த்திகட்கு இத்தகைய இழிகாலமுண்டான நாள் முதல் இதுவரை ஜாதியெனும் தீராத சுழற் காற்றில் அகப்பட்டு அவதிப்படுபவர்களை ஈடேற்றுவான் வேண்டி இலங்கை இந்தியர் சங்கம் இதன் அங்கங்களாகிய தங்கங்களே! உங்கள் பெருமுயற்சிக்கு அதிக நன்றிபாராட்டுகிறேன். கடவுள் உங்களோடு இருப்பாராக.

‘ஆதி திராவிடன் நிதிக்காக' தங்கள் பேருக்கு ரூபா 8.00 இன்றையத் தினம் மணியாடர் செய்திருக்கிறேன். இவ்வுலகில் இவன் ஜீவனோடிருக்கும் வரை தமிழ் வருஷாவருஷம் ரூபா 10 பத்து சங்கத்திற்கு அனுப்பி வைப்பேன். எனையாளும் ஈசன் கிருபையுண்டாகவேணும்.

அன்பை அதிகமாக நேசிக்கும்,

எம்.எஸ்.லாசரஸ் 19, ஏப்ரல் 1920

மேற்படி கடிதத்தின்படி ஆண்டுதோறும் 10 ரூபாயை கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். பத்திரிகையின் விலை அப்போது ஐந்து சதம். மாதப் பத்திரிகை என்கிற வகையில் சந்தா கட்டினால் கூட அதற்கு ஆகும் 60 சதம் தான். தபால் செலவையும் சேர்த்து அப்போது வருடாந்த சந்தாவாக ஒரு ரூபாவை அறவிட்டிருக்கிறார்கள் எனும் போது இந்த பத்து ரூபாய் அன்றைய காலத்தில் பெரிய தொகை தான். லாசரஸ் என்கிற அந்த வாசகர் சாதி எதிர்ப்புக்காக இயங்குவதையொட்டி பாராட்டிருக்கிற விதத்தில் அன்றைய காலப்பகுதியில் அரிதான பணியாகத் தெரிவதுடன், ஒரு துணிச்சல் மிக்க ஊடக முயற்சியாகவும் “ஆதி திராவிடன்” பத்திரிகையைக் குறிக்க முடியும்.

ஆதிதிராவிடன் பத்திரிகை ஆரம்பத்தில் இருந்ததை விட போகப்போகத் தீவிரமும், கனதியும், தரமும் கொடிய பத்திரிகையாக ஆகியிருப்பதை 1934 ஆம் ஆண்டு பத்திரிகையைக் காணும் போது இனங்கண்டுகொள்ள முடியும்.

இந்த இடைக்காலத்தில் தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின் வளர்ச்சி, ஈ.வே.ரா பெரியாரின் வகிபாகம் போன்றவையும் ஊக்கியாக அமைந்திருக்க வேண்டும்.

தீண்டாமை பற்றி ஆதரவாகவும் எதிராகவும் வெளிவந்த கருத்துக்களைத் தொகுத்து “பகுத்தறிவு ஏ”, “பகுத்தறிவு பி” என்கிற உப தலைப்பிட்டு முழுப்பக்கம் வெளிவந்திருக்கிறது.

பெரியார் கூறிய

“தீண்டாமை கொண்ட மதத்திற்கும் குஷ்டரோகம் நிறைந்த மனிதனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை”

என்கிற கருத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் நீதிக்கட்சியைப் போல “தினசரி” நடத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் இதற்கு அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து உட்சாதி, மத, வர்க்கப் பாகுபாடுகளை விட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகோள் விடுத்திருக்கிறது ஆதி திராவிடன்.

'திராவிடர் இவ்வளவு முன்னேற்றமடைந்ததற்கும் அடைந்துவருவதற்கும் காரணம் அவர்களால் நடத்தட் பெற்றுவரும் 'ஐஸ்ற்றிஸ்" "திராவிடன்" பத்திரிகைகளே. அதுபோல நாமும் நம் குறைகளை கவர்மெண்டாருக்கும் எடுத்தோதி நன்மைபெற நமக்கென ஆங்கிலத்திலும், திராவிடத்திலும் தினசரி இன்றேல் வாரப் பத்திரிக்கைகள் இன்றியமைதனவாம். மேற்கூறிய விஷயத்திற்கு நம்மவ ரெல்லாரும் (பள்ளர் பறையர் சக்கிலி என்ற முப்பிரிவாகும்) எச்சமயத்தாராயினும், என்னிமையிள்ளோராயினும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடனும் விடாமுயற்சியுடனும் பிரச்சார வேலை செய்யவேண்டும். (ஆதிதிராவிடன் 15 நவம்பர் 1921)

அதுவரை காலம் பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த நிலை இருக்கும் போதும் ஆதி திராவிடன் தமிழகத்துக்கு அனுபபட்டிருக்கிறது. ஆதிதிராவிடன் இதழ் தபால் மூலம் தமிழகம், கோலார் தங்கவயல் பகுதி, பர்மா ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டாம் வருட நிறைவின் போது தபால் செலவு பற்றிய சிக்கலை எடுத்துக் கூறும் ஒரு விளக்கமான செய்தி வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழக சந்தாக்காரர்கள் தபால் செலவை கருத்திற்கொண்டு புதிய விலையை ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். (1920 ஜனவரி ஆதி திராவிடன்)

மலையகப் பகுதிகளில் ஏமாற்றிப் பிழைக்கும் சம்பவங்கள் பற்றிய எச்சரிக்கை செய்திகளும் காணப்படுகின்றன.

நோட்டீஸ்

(Dentist) பல்கட்டும் வேலை செய்கிற ஒருவன் நாளது மாதம் 1-தி யாக கலகாவில் வந்து அனேகம் ஆட்களுக்கு பல்கட்டுகிறதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஏய்த்துப் போட்டுப்போய்விட்டான். தேடியும் அகப்படவில்லை. அவன் சிங்களமனுஷன், உயரமானவன், மெலிந்தவன், சப்பாத்து கால்சட்டை உடுத்தியிருப்பான். இவன் அநேகமாய் சின்ன டவுன்களில் உலாவித்திரிந்து மனுஷரை ஏமாற்றுகிறான். ஆகையால் இப்படிப்பட்டவனைப் பற்றி எச்சரிக்கையாக விருக்கவும்.

ஏ.ஏ. ஆபிரகாம் மலர் 2 இதழ் 6 பக் 85

அதே வேளை ஆதி திராவிடன் பத்திரிகையும் “இலங்கை தேசிய காங்கிரஸ்” அமைப்பும் உருவானது ஒரே காலத்தில் தான்.

7வது இதழில் இப்படி ஒரு செய்தி காணப்படுகிறது.

“இது நிற்க, நாளது செப்டம்பர் மாதம் இவ்விலங்கையில் நடக்கும் இலங்கை நேஷனல் காங்கிரஸ்க்கு, நம்மவர்களின் நலவுரிமைகளைப் பற்றி பேசுவதற்காக மேற்படி இலங்கை இந்திய சங்கத்தின் பேரால் கனம் லாரி முத்துகிருஷ்ணா அவர்களையும், கனம் ஏ.எஸ்.சாம்ஜான் அவர்களையும் பிரதிநிதியாக அனுப்பப்பட வேண்டுமென கனம் கே.பி.சிவன் அவர்கள் கொண்டுவந்த பிரேரணையை கனம் பி.கனகசபை அவர்கள் ஆமோதித்தனர்.”

இந்த செய்தி இலங்கை – இந்தியர் சங்கம் அன்றைய முக்கிய இலங்கைத் தலைவர்கள் இணைந்து ஆரம்பித்த பிரதான அரசியல் இயக்கமான இலங்கை இந்தியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. துரதிருஷ்டவசமாக அவர்கள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துக் கதைத்திருக்கிறார்கள், யாரைச் சந்தித்தார்கள்? எப்போது, அதன் பிரதிபலன்கள் ஏதும் உண்டா என்பது போன்ற விபரங்களை அறிய முடியாத அளவுக்கு; நம்மிடம் எந்த ஆதாரங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

நம் கைவசம் கிட்டிய 1934 ஆம் ஆண்டு பத்திரிகை கண்டியில் இருந்து வெளியாகியிருக்கிறது. 1919 ஆம் ஆண்டு பத்திரிகை கொழும்பு நகரிலிருந்து வெளியாகியிருக்கிறது. இரா.பாவேந்தர் ஆதி திராவிடன் பத்திரிகையின் இரண்டாண்டு உள்ளடக்கங்களை மாத்திரம் தொகுத்து நூல் வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் வேறு வேறா அல்லது ஒரே பத்திரிகை தானா? இடையில் நின்று போனதா? பத்திரிகையின் காரியாலயம் கொழும்பில் இருந்து கண்டிக்கு மாற்றப்பட்டதா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் அதன் பெயரும், உள்ளடக்க அரசியலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பதால் இது ஒன்றாகவே இருக்கும் என்கிற ஊகத்துக்கு வர முடியும். அந்த முடிவில் இருந்தே இக்கட்டுரை பார்க்கப்பட்டிருக்கிறது.

19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழ்ப் பதிப்புத் துறை என்பது யாழ்ப்பாணத்திலேயே மையம் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி அச்சுத்துறையானது நாவலர் மற்றும், நாவலர் வழிவந்த சாதி ஆதிக்க சக்திகளின் பிடியிலேயே இருந்தது. மிஷனரிகளின் பத்திரிகைகள் சாதி இறுக்கங்கள் இன்றி ஓரளவு தளர்வாக இயங்கினாலும் கூட அவை தாழ்த்தப்பட்டவர்களுக்கான நேரடி பத்திரிகையாக இருந்ததில்லை. அப்படிப் பார்க்கும் போது ஆதி திராவிடன் பத்திரிகை ஒரு முற்போக்கானதும் துணிச்சலானதுமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

இன்று ஆதி திராவிடன் பத்திரிகையின் ஒரு  இதழைக் கூடப் பெற முடியவில்லை. குறிப்பாக இலங்கை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் ஒரு பிரதியும் இல்லை (இ.சிவகுருநாதன், 1993). அது எப்போது நின்றுபோனது? ஏன் நின்றுபோனது? போன்ற விபரங்களைக் கூட மேலதிகமாக அறிய முடியவில்லை. இக்கட்டுரையானது இந்த இடத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு அதன் தடங்களைத் தேட உந்துதலாக இருக்கட்டும்.

நன்றி - தாய்வீடு - ஏப்ரல் - 2023

Reference

  1. திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை, ஆதி திராவிடர் வரலாறு, சென்னை, விக்டோரியா அச்சுக்கூடம், 1922.
  2. D.கோபால செட்டியார், ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம். கிரநதி ராமேஸ்வாமி செட்டியார், அச்சியந்திரசாலை, சென்னை, 1920
  3. என்.சரவணன், 1915 : கண்டி கலவரம், புக்வின் பதிப்பகம், 2017
  4. ஆதி திராவிடன், ஓகஸ்ட் 1, 1934.
  5. இரா, பாவேந்தன், ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு, சந்தியா பதிப்பகம், 2008
  6. இ.சிவகுருநாதன், இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி, பாரி நிலையம், சென்னை, 1993

லண்டனில் கார்ல் மாக்ஸின் வீட்டைத் தேடி... - என்.சரவணன்

கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீடு லண்டனில் இருப்பதாகவும், அது காட்சிசாலையாக இயங்குவதாகவும் எங்கெங்கோ வாசித்துக் கடந்த நினைவு. மூன்றாண்டுக்கு முன்னர் லண்டனில் கார்ல் மாக்ஸின் கல்லறையை தோழர் ராஜா அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறார்.

கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மேலிட்டிருந்தது. ஆனால் எந்த நண்பர்களுக்கும் சிரமம் கொடாமல் இம்முறை அங்கிருந்த ஐந்து நாட்களும் பல இடங்களுக்கும் நானே அலைந்து திரிந்தேன். ஆனால் மாக்ஸின் நினைவிடம் திறந்து இருக்குமா. கூகிளில் அதற்கும் விடை இருந்தது. கூகிளில் மாக்ஸின் வீட்டைப் பார்த்த போது 24  மணித்தியாலங்களும் பார்க்க முடியும் என்று இருந்தது. அட... அந்தளவு  சேவை செய்கிறார்களா என்று வியந்து கொண்டேன்.

எனது ஆய்வுப் பணிகளுக்கு இடையூறில்லாமல் பிரட்டிஷ் நூலகம் மூடியதன் பின்னர் அங்கிருந்து செல்லலாம் என்று திட்டம். அங்கிருந்து மணித்தியாலத்துக்குள் மாக்ஸின் வீட்டை அடைந்து விடலாம் என்று இருந்தது.

நாள் - மார்ச் 30, 2023

நிலக்கீழ் இரயில் எடுத்து அங்கிருந்து சுமார் அரை மைல் தூரம் மேட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான் லண்டன் புறப்படும் போது ஒஸ்லோவில் நிறைந்த பனியும், கடும் குளிருமாக இருந்தது. ஆனால் லண்டனில் கோடைகாலமே வந்துவிட்டதைப் போல பனி குளிர் இன்றி, வெய்யிலும் வெளிச்சமுமாக இருந்தது. இலைகள் துளிர்த்துக்கொண்டு மலர்களும் மொட்டுவிடத் தொடங்கி, பச்சைப் பசேலென  இருந்தது.

முழங்கால் வலியின் கொடுமையால் இந்த மேடு, படிகள் ஏறுவது எனக்கு சிரமமான ஒன்று. ஆனால் வலியைத் தாங்கிக்கொண்டே என்வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கும் அப்படித்தான் கூகிள் வரைபடத்தின் உதவியுடன் தேடிச்சென்றேன். அந்த பகுதி பல தொடர்மாடிக் குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளையரையும் காணவில்லை. குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டவர்கள் அதிகமாக வாழும் இடமென்பதை இனங்கான முடிந்தது.

கூகிள் சரியாக ஒரு இடத்தில் கொண்டுபோய் என்னை நிறுத்தியது. ஆனால் அங்கே எந்த அடையாளத்தையும் காணவில்லை. அங்கே காருக்குள் நுழைய இருந்த ஒருவரை இடைமறித்து இந்த விலாசம் சரிதானா என்று கேட்டேன். 

"நானும் இங்கே தான் வாழ்கிறேன், சரியாகத் தான் இருக்கிறது ஆனால் நீங்கள் கூறும் நினைவு இல்லத்தைப் பற்றி அறிந்ததில்லை, சற்று முன்னே சென்று பாருங்கள்"

என்றார். சுற்றி சுற்றி பார்த்து சற்று அதனையும் கடந்து சென்றேன். பாதையோரத்து மர நிழலில் ஒரு ஆபிரிக்க தேசத்தைச் சேர்ந்த பெண்ணும் கூடவே ஒரு வெள்ளை இனப் பெண்ணும் சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று,


இந்த விலாசம் எங்கே இருக்கிறது? இந்த கூகிள் வரைபட வழிகாட்டியில் இந்த இடத்தைக் காட்டுகிறதே, கார்ல் மாக்ஸ் வாழ்ந்த வீட்டைப் பற்றி ஏதும் தெரியுமா என்றேன்.

ஹா... நானும் கேள்வி பட்டிருக்கிறேன். இங்கே எங்கேயோ அப்படி ஒரு வீடு இருப்பதாக அறிந்திருக்கிறேன். என்றார்.

அருகில் இருந்த வெள்ளைப் பெண்மணி "யார் அவர் என்றார்?" இந்தப் பெண் பதிலுக்கு;

“You know; the guy was famous poet… He lived here ” என்றதும்,

ஐயகோ, மார்க்சுக்கு வந்த சோதனை; என்று சிரிப்பதா, வருந்துவதா என்றிருந்தது.

வந்த பாதைக்கே செல்லுங்கள் என்றார்.

மீண்டும் கூகிள் காட்டிய இடத்துக்கே வந்து சேர்ந்தேன். எவரும் கண்களில் படுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு ஓரத்தில் இருந்து கூகிளில் சரியான இடத்துக்கு தானா வந்திருக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்காக மேலதிகமாகத் தேடினேன். அதில் ஒரு பிரவுன் நிற வட்டத் தகரத் தட்டில் மாக்ஸ் வாழ்ந்த வீடு என்பதை குறிக்கும் பதாகை அந்த சுவரில் இருப்பதாகக் காட்டியது.


அப்படியே நின்ற இடத்தில் இருந்து அந்தக் கட்டிடத்தின் மேலே தலையை உயர்த்திப் பார்த்தேன்.

ஆஹா... இதோ அந்தப் பதாகை. சந்தேகமே இல்லை அதுவே தான் தான் இது. கீழே, அருகில் உள்ள வாசலைத் தேடினேன். மூடிய வாசல் கதவுகளில் வலது கதவா, இடது கதவா செல்ல வேண்டியது. சரி முதலில் இடது பக்க வாசலில் இருந்து எந்த இலக்கத்தை அழுத்துவது என்று தெரியவில்லை. அடுத்த வாசுக்குள் ஒரு இளம் பையன் பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழையச் சென்று கொண்டிருந்தார். உடனே ஓடிப்போய் தடுத்து மாக்ஸின் வீடு இதில் எது? எது நுழைவுக் கதவு, எத்தனையாவது மாடி? என்று பரக்கப்பரக்க வினவினேன்.

கீழ் மாடியில் ஒரு ஜன்னல் கதவு திறந்தது. இந்தப் பையனின் தாயார் அவர். நான் அவரிடமும் விசாரித்தேன்.

“ஆமாம்.. அதோ மேலே இருக்கிற பதாகை தெரிகிறது அல்லவா? இங்கே தான் அவர் வாழ்ந்தார்.”

அங்கே எப்படி செல்வது என்றேன்.

“அப்படி ஒரு வீடு இப்போது கிடையாது... அவர் வாழ்ந்த வீடு இங்கே தான் இருந்தது. அவ்வளவு தான் என்றார்.”

தூக்கிவாரிப்போட்டது.

மீண்டும் தலையை சரித்து உயர்த்தி மேலே பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அதில் இப்படி இருந்தது.


“KARL MARX,

1818 - 1883,

PHILOSOPHER,

lived and died in a

house on this site,

1875 – 1883”

அதில் சரியாகத் தான் குறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் (Site) தான் அவர் வாழ்ந்த வீடு இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அது இல்லை.

இரண்டாவது உலகப்போரின் போது இந்தப் பிரதேசம் குண்டுகளால் அதிகம் சேதத்துக்கு உள்ளான பிரதேசம். எனவே 1950ஆம் ஆண்டு சிதைவடைந்திருந்த வீடுகளை முற்றிலும் அழித்து புதிய தொடர்மாடி வீடுகளை அரசு அமைத்தது.

அடப்பாவிகளா கூகிளில் 24 மணிநேரமும் பார்க்கலாம் என்று இதைத் தான் குறிப்பிட்டிருந்தார்களா?

அன்று கார்ல் மார்க்சை அரசு தேடத் தொடங்கியவுடன் அவர் நாடுநாடாக தலைமறைவு வாழ்வுக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனில் பிறந்த அவர் பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து என வாழ்ந்து இறுதியில் லண்டனில் அவரின் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.


1949 ஆம் ஆண்டு முதன் முதலில் லண்டனுக்கு வந்து சேர்ந்த அங்கே ஆறு வீடுகளில் இடம்மாறி வாழ்ந்தார். 1875 ஆம் ஆண்டு 41, Maitland Park Road இல் இருந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தவர் இறுதியில் அவர் இறக்கும் வரை இங்கே தான் வாழ்ந்தார். 


இந்த வீட்டில் தான் இருந்தபோது தான் உலகைக் குலுக்கிய அவரின் புகழ்பெற்ற “மூலதனம்: நூலின் இறுதி இரண்டு பாகத்தையும் எழுதி முடித்தார். அதை எழுதுவதற்காக இங்கிருந்து தான் நாளாந்தம் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு சென்று வந்தார். மூலதனத்தின் இரண்டு பாகமும் அவர் இறந்ததன் பின்னர் தான் வெளிவந்தது. மாக்ஸின் அன்புத் துணைவி ஜென்னி மாக்ஸ் இறுதியில் இறந்ததும் இதே வீட்டில் தான். மாக்ஸின் இறப்புக்கு ஈராண்டுக்கு முன்னர் தான் ஜென்னி மார்க்ஸ் இறந்தார்.

மாக்ஸின் ஏழு பிள்ளைகளில் மூவர் மாக்ஸின் வாழ் நாள் காலத்திலேயே இறந்து விட்டார்கள். அழுத தன் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல், ஜென்னியின் மார்புகளில் ரத்தம் வழிந்திருக்கிறது. பால் இன்றி இறந்துபோன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இருக்கவில்லை. 

'குழந்தை பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இல்லை; என் குழந்தை இறந்தபோது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை’

என்னும் ஜென்னியின் புகழ்பெற்ற கடித வரிகள் இன்றும் நம்மை உலுக்கும் வசனம். 

அவரின் நான்காவது மகளுக்கும் அவர் தனது துணைவி ஜென்னியின் பெயரைத் தான் சூட்டியிருந்தார். அந்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883 ஆம் ஆண்டு ஜனவரியில் புற்றுநோயால் தனது 38 வது வயதில் இறந்தார். இந்தளவு துயரத்தில் அடுத்த இரண்டாவது மாதம் மார்ச் 14ஆம் திகதி இதே வீட்டில் மார்க்ஸ் தனக்குப் பிடித்த சாய்நாற்காலியில் இறந்தபடி கிடந்தார். சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை சித்தாந்த ரீதியில் ஒன்றுபடுத்திய அவரின் இறுதி ஊர்வலத்தில் பதினோரு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பற்றி என்.சரவணன்

என்.சரவணன் 32 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் பணியாற்றிவரும் மூத்த ஊடகவியலாளர். 90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியல் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் அதன் பின்னர் தொடர்ந்து சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றியாவர். தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இஇயங்கி வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம், சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை வெளிப்படுத்தி வந்த இவர் சமீப காலமாக காலனித்துவகால அரசியல் வரலாற்றை மீள் கண்டுபிடிப்புக்கு உள்ளாக்குகின்ற எழுத்துக்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் என்.சரவணனுக்கு கடந்த பெப்ரவரி மாதம் தமிழக அரசு அவரின் “கள்ளத்தோணி” நூலுக்கு சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. மலையக நூலொன்றுக்கு தமிழக அரசு வழங்கிய முதல் நூல் இது.

 

உங்களது கள்ளத்தோணி நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பது பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கின்றீர்கள்? 

மகிழ்ச்சியாக உணருகிறேன். மலையகம் பற்றிய நூலொன்றுக்கு முதல் முறை தமிழக அரசின் விருது கிடைத்தமை மலையகத்துக்கு கிடைத்த ஒரு கௌரவமாகவும், அங்கீகாரமாகவும் உணர்கிறேன். தமிழகம் நமது முன்னோர்களின் தாயகம் அல்லவா. மேலும் இந்த விருதை தனிப்பட்ட சரவணனின் படைப்புக்கானதாக பார்க்கவில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தின் கனதிக்கானதாகவே பார்க்கிறேன். சமூக விடுதலைக்கான ஆயுதமாகவே எழுத்தை நான் பார்க்கிறேன். எனவே இந்த விருது அந்த நூலையும், அதன் உள்ளடக்கத்தையும் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவும்.

தமிழக அரசின் விருது பெற்ற முதலாவது நூலா?

அயலக நூல்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய ரீதியில் தமிழர்களையும் அவர்களின் இலக்கியப் பணிகளையும் ஒன்றிணைக்க  இந்தத் திட்டம் உதவி வருகிறது. ஏற்கெனவே அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூத்த படைப்பாளி சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களின் படைப்பொன்றுக்கும் இவ்விருது கிடைத்திருக்கிறது. 

பொதுவாக விருதுகளின் பின்னால் செல்பவர் அல்ல நீங்கள். இந்நிலையில் இவ்விருதுகள் கிடைத்திருப்பது பற்றி?

கள்ளத்தோணி நூலுக்கு விருது அறிவித்திருப்பதை அந்த பதிப்பு செய்த குமரன் இல்லத்தின் உரிமையாளர் நண்பர் குமரன் தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தகவல் தந்தார். அவர் இலங்கையில் ஆயிரம் நூலுக்கு மேல் வெளியிட்டு சாதனை படைத்தவர் என்பது மட்டுமல்ல, இலங்கையின் தரமான நூல்களை வெளியிடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். விருதுகளை இலக்கு வைத்து இயங்கும் இயல்பு எனக்கு என்றும் இருந்ததில்லை. 

பேசாப்பொருளை பேசுபொருளாக்கிக் கொண்டு இருப்பதே எனது எழுத்தியல்பு. இதற்கு முன்னர் 2018 இல் “1915 கண்டி கலவரம்” நூலுக்கு இலங்கை அரச சாகித்திய விருது கிடைத்தது. அதன் பின்னர் 2020 இல் “சிங்களப் பண்பாட்டிலிருந்து”, 2021 இல் “கள்ளத்தோணி” ஆகியவற்றுக்கும் சாகித்திய விருதின் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்களப் பண்பாட்டிலிருந்து நூலுக்கு கடந்த ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சியில் சிறந்த ஆய்வுக்கான விருதும் வழங்கப்பட்டது. என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக வெகுஜனப் பணிகளில் ஈடுபடும் போது கூட மற்றவர்களை விட அதிக உழைப்பையும் சிரத்தையையும் கொடுத்துத் தான் உரிய இடத்தைப் பெற முடிகிறது. பல ஓரங்கட்டல்களை எதிர்கொண்டு எமது எழுத்துக்களை வெகுஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு இந்த விருது அவசியப்படுகிறது. விருதுகளை நான் ஏற்றுக்கொள்வதை விமர்சித்த பலர் நமது எழுத்தைக் கண்டுகொள்ளாதவர்களே என்பதை நான் அறிவேன். எனவே விருதை எதிர்க்கும் தார்மீகத்தை இழந்த; உளச்சுத்தி அற்றவர்களை நான் பொருட்படுத்தவில்லை.

எழுத்துத் துறையில் நீங்கள் தீவிரமாக செயற்பட காரணம்? 

எழுத்து என்பது எனது அரசியல் செயற்பாட்டின் அங்கம் தான். நான் என் மண்ணில் இருந்து பெயர்க்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். களச் செயற்பாட்டில் என்னை அர்ப்பணிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டிருகிறேன். எனவே புகலிடத்தில் இருந்து என் மண்ணுக்கும், என் மக்களுக்கும் என்னிடம் எஞ்சியிருக்கும் ஆற்றலால் தான் ஆற்றமுடிகிறது. எழுத்தும் ஆய்வும் கைவரப்பெற்றதே எனது பலம். கடந்த 32 ஆண்டுகளாக அந்தப் பணியைத் தொடர்கிறேன். நான் கற்றதையும், பெற்றதையும் இப்போது பலருக்கும் கற்று கொடுத்து வருகிறேன். "செயற்கை நுண்ணறிவு ஊடகவியல்" கற்கைகளுக்கான “மெய்நிகர்” கல்லூரி ஒன்றை தற்போது நோர்வேயில் நிறுவியிருக்கிறேன். ஊடகவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், உயர்கல்வி மாணவர்களுக்கும் உதவக் கூடியவகையில் அதை கட்டமைத்து வருகிறோம்.

மும்மொழித்தேர்ச்சி எமது எழுத்துக்கள் வளம் காரணமாக அமைகின்றது. இந்நிலையில் அதனை எவ்வாறு வளர்த்துக்கொண்டீர்கள் ?

இலங்கையின் பல்வேறு ஆய்வுசார் பணிகளின் போது மும்மொழிகளை பயன்படுத்தியவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். இலங்கை சார் ஆய்வுகளை மும்மொழி உசாத்துணை இன்றி பூரணமாக சாத்தியப்படுத்த முடியாது என்பது எனது அனுபவம். குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினை, தேசியவாதம், வரலாறு, பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கு மாற்று இனத்தின் மொழி இன்றிமையாதது. தமிழிலும், சிங்களத்திலுமான  இதுவரையான ஆய்வுகளை இக்குறைபாடுள்ளவையாகவே காண்கிறேன்.

இந்தக் குறையை எனது எழுத்துக்களில் தவிர்ப்பதற்காகவே ஆரம்பத்திலேயே வலுக்கட்டாயமாக சிங்கள மொழியைக் கற்று அதனை ஆய்வின் வளமாகமாகவே கையாள்கிறேன். அப்படி மேற்கோளும் போது பல தகவல்களையும், தரவுகளையும் சரி பார்க்க முடிகிறது, உறுதி செய்து கொள்ள முடிகிறது, புதிய விபரங்களை கண்டு பிடிக்க முடிகிறது. ஈற்றில் நமது ஆய்வுகள் மேலும் பூரணப்படுகிறது. வியப்பளிக்கும் ஆய்வுகளை தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்க முடிகிறது. புதிய ஆய்வுகளுக்கான திறவுகோல்களை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடிகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ள நாடுகளில் மேலும் சிரமமானது. ஆனால் நமது நாட்டில் இரண்டே இரண்டே இரண்டு சுதேசிய மொழிகள். மிக மிக எளிமையான ஒரு வழிமுறையை நாம் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம். இரண்டு சமூகங்களும் பரஸ்பர குரோதங்களையும், வெறுப்புகளையும், பாரபட்சங்களையும் குறைக்க அடிப்படை அம்சமாக இது இருந்திருக்கும்.

புலம் பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கை சார்ந்த விடயங்களை எவ்வாறு எழுத்துக்களில் கையாளுகின்றீர்கள்?

தொடர் அவதானிப்பு, கண்காணிப்பு, நிரப்பப்படாத; அதே வேளை நிரப்ப வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அதன் மீது ஆய்வுக் கவனத்தை குவிப்பது, அதற்குத் தேவையான அடிப்படை மூலங்களையும், உசாத்துணைகளையும் தேடித் தேடிக் கண்டு பிடித்து பலம் சேர்ப்பது. இதனை மேற்கொள்வதற்கான பார்வையையும், அதற்கான அரசியல் புரிதலையும் வளர்த்துகொள்வது, கிரமமான தொடர் எழுத்துக்களுக்கூடாக பயிற்சியை மேம்படுத்தி வைத்திருப்பது. இதுவே எனது எழுத்தின் பலமாக உணருகிறேன்.

நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் பற்றியும் அதன் அனுபவங்கள் பற்றியும் சுருக்கமாக? 

இலங்கையின் அரசியலில் பெண்களும், பெண்களின் அரசியலும், தலித்தின் குறிப்புகள், 1915 : கண்டி கலவரம், அறிந்தவர்களும் அறியாதவையும், சிங்களப் பண்பாட்டிலிருந்து, கள்ளத்தோணி, பண்டாரநாயக்க கொலை போன்ற நூல்களைக் குறிப்பிட முடியும்.

நூலை எழுதுவதற்கான எனக்கான தந்திரோபாயமாக ஒரு வழிமுறையைக் கையாண்டு வருகிறேன். அதாவது பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் தொடர் கட்டுரைகளுக்கு ஒப்புக்கொண்டு விடுகிறேன். அதன் பிரகாரம் வாராந்தம் குறித்த நாளில் அக்கட்டுரையை எழுதுவதற்கான நிர்பந்தத்தை எனக்கே நான் ஏற்படுத்திக் கொள்கிறேன். இந்த நிர்ப்பந்தமே என்னை கிரமமாக எழுதத் தள்ளுகிறது. ஒரு நூலை தனியாக எழுதி முடிப்பதெனில் பல்வேறு சமாதானங்களை நாமே நமக்கு ஏற்படுத்தி ஒத்திவைத்துக் கொண்டே செல்ல நேரிடுவது என்பது எனது அனுபவம். இது வரை வெளிவந்த எனது நூல்கள் அத்தனையும் அப்படி ஏற்கெனவே வெளிவந்த தொடர் கட்டுரைகள் தான். இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஐந்து நூல்களும் கூட அவ்வாறு கட்டுரைகளாக வெளிவந்தவை தான்.

இவ்வாறு கட்டுரைகளாக வெளிவரும் போது; நூலாக வெளிவருவதற்கு முன்னரே வாசகர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள முடிவதுடன், நூலுவாக்கத்துக்கு முன்னர் மேலதிக செப்பனிடளுக்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் வெளியிட வுள்ள படைப்புக்கள் பற்றி? 

தற்போது பதிப்பில் உள்ள நூல்கள் கொழும்பின் கதை, மகாவம்சம் : புனிதங்களும் புனைவுகளும், நோற்றாண்டு துரோக வரலாறு. அதைத் தவிர “மலையகம் 200: அடிமையிலிருந்து கொத்தடிமைக்கு மாறிய வரலாறு”, 83’, ஈழத்தில் பதிப்பு பண்பாட்டின் வரலாறு என்பவை பதிப்புக்கான வேலைகள் நடக்கின்றன. இவை முடிந்தால் தான் நிறைவுக்காக காத்திருக்கும் அடுத்த சில நூல்கள் வரிசையாக வெளிவரும்.

நூல்கள் அச்சிடும் நிலைமை குறைந்து; மின்னூல் வடிவில் வடிவமைத்து வெளியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதன் தாக்கம் இனி எவ்வாறு நிகழப்போகிறது?

இலங்கையில் தான்  இதன் பாதிப்பை அதிகம் உணருகிறோம். இலங்கை எதிர்கொண்டு வருகிற பொருளாதார நெருக்கடியே கடதாசியின் மீதான இறக்குமதிச் சிக்கலையும், அதன் விலையுயர்வையும் எதிர்கொள்ள வைத்திருக்கிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல் வெளியீடுகள் அனைத்தின் மீதும் இதன் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இத்துறை சார்ந்த பணியாளர்கள் பலர் வேலை இழந்திருப்பதையும் காண்கிறோம். அச்சு உற்பத்திகளின் விலைவாசியை சமாளிக்க முடியாத வாசகர்கள் இலவச மின்னூல் வாசிப்பை நோக்கி இழுக்க இதுவே காரணம். கொரோனா  கால வெளியும் நவீன இலத்திரன் வழிமுறையை சகல தொழிற்துறைகளிலும் பழக்கியிருக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை நாம் கூட்டாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

ஆனாலும் அச்சு ஊடகம் அவ்வளவு இலகுவாக விழ வாய்ப்பில்லை. ஒரு தேக்கம் உருவானாலும் அது தன்னை நிமிர்த்திக் கொள்வதற்கான சாதகங்கள் உள்ளன. அதற்கென்று இருக்கிற இடம் இருக்கவே செய்யும். ஜனவரியில் நிகழ்ந்த சென்னைப் புத்தகக் கண்காட்சி அந்த நம்பிக்கையைத் தரும் முக்கிய உதாரணமாகக் கொள்ளலாம். அச்சு ஊடக வரலாற்று வழித்தடத்தில் நவீன முறைகள் உள் நுழைந்தபோதெல்லாம் இத்தகைய பீதி கிளம்பிய சந்தர்ப்பங்களை நாம் மீட்டுப் பார்க்க வேண்டும்.

நன்றி - தமிழ் முரசு - 12.03.2023





 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates