Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

ஒஸ்லோவில் கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான்! - என்.சரவணன்


இன்று கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை  தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஒஸ்லோ வந்திருந்தார். அவருடன் ஒஸ்லோ சமூக செயற்பாட்டாளர்கள் பலருடனான உரையாடல் ஒன்றும் ஏற்பாடாகி இருந்தது.

ஜெனிவா ஐ.நா கூட்டத்திற்கு வந்த செந்தில் தொண்டமான் அதை முடித்துக் கொண்டு நோர்வேயின் அழைப்பின் பேரில் ஒஸ்லோ வந்திருந்தார்.

ஒஸ்லோ கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்காக ஆரம்பத்தில் என்னிடமும் கேட்கப்பட்டது. நானும் அதனை விருப்புடன் ஒத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கிடையில் இந்த ஏற்பாடு வேறு சிலரின் கைகளுக்குப் போயிருந்தது. ஆனால் அவர்கள் எனக்குத் தகவல் அறிவிப்பதைக் கூட தவிர்த்திருந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அவர்கள் தகவலை அறிவித்திருந்தார்கள். அந்த நபர்களை அறிந்தபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவர்களைப் பற்றி உரிய நேரத்தில் விரிவாக எழுதுவதற்கு நீண்ட காலம் காத்திருக்கிறேன்.

நோர்வேயில் இந்திய வம்சாவளியினர் குறித்து எழுதி, பேசி, இயங்கி வரும் ஒரே ஒரு நபர் என்கிற வகையில் செந்தில் தொண்டமானின் கூட்டம் பற்றி அவர்கள் தவிர்த்திருக்கக் கூடாத முதல் நபராக நான் இருக்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த 24 ஆண்டுகளாக ஒஸ்லோவில் இருட்டடிப்புகளுக்கு நன்றாகவே பழக்கப்பட்டவன் என்பதால் ஒரு போதும் நான் புலம்பியது கிடையாது. ஆனால் இதற்கான பின்புலம் பற்றியும் நபர்கள் பற்றியும் கணிப்பை தெளிவாகக் கொண்டிருக்கிறேன். எனது கடமையும், பணிகளும், போக்கும் தெளிவாக இருப்பதால் அந்தத் திசைவழியில் எவரிலும் தங்கியிராமல் தொடர்ந்து இயங்குகிறேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.

எப்படியோ நான் நிகழ்வு பற்றிய விபரத்தை என் நண்பர் அசோக்குக்கு ஊடாக அறிந்துகொண்டே அங்கு சென்றிருந்தேன்.

செந்தில் தொண்டமான் மேடை வேண்டாம் அருகில் இருந்தே உரையாடலாம் என்று தொடங்கியதே நல்ல ஆரம்பமாக இருந்தது.

மலையகம் 200 பற்றியும் மலையகத்தின் வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக அவர் கூறி தற்போதைய அவரின் ஆளுநர் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் விடயங்களையும் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டு உரையாடலுக்கு இடம் விட்டார். பாஸ்கரன் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

இரண்டாவதாக ஆளாக எனது கேள்விகளை அவரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு கேள்வியின் இறுதியிலும்  விரிவாக பதில் அளிக்க முற்பட்டதால் எனது 6 கேள்விகளை மூன்றாகக் குறைத்து விட்டு மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டியிருந்தது. எனது கேள்விகள் இவைதான்.

1. கிழக்கில் இடம்பெறும் பேரினவாத அத்துமீறல்களுக்கு நீங்கள் துணைபோவதாகப் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக காணிக்கொள்ளை, தொல்லியல் போன்றவை. ஏற்கெனவே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து அவர் அரசின் பங்காளியாக; அரச பயங்கரவாதத்தினதும் பங்காளியாக இருந்து வந்தார் என்கிற ஒரு பார்வை ஈழத் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் அவரின் பேரனும் அதேவழியில் இயங்குகிறாரா என்கிற விழிப்புடன் தான் செந்தில் தொண்டமான் மீதான பார்வையும் இருக்கும். இந்த சூழலில் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலை உங்களுக்கு ஊடாக நிறைவேற்ற முற்படுவதை ஈழத்தமிழர் சந்தேகத்துடனே நோக்குவார்கள். ஒரு காலத்தில் இணக்க அரசியலை முற்றிலும் மறுத்து வந்த இவர்கள் இப்போது தான் இணக்க அரசியலின் சாதகமான பக்கங்களையும் ஓரளவு கவனிக்க தலைப்பட்டிருக்கிறார்கள். இணக்க அரசியலின் பேரால் கிழக்கில் பல உரிமைகளை இழக்கும் நிலைக்கு நீங்களும் காரணமாகிறீர்களா?

2. இலங்கையில் குடும்ப செல்வாக்கில் இருந்த அனைத்து கட்சிகளும் அந்த போக்கைக் கைவிட்டு ஜனநாயக ரீதியில் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு விட்டுக்கொடுத்து ஜனநாயகமயப் படுத்தியிருக்கின்றனர். ஆனால் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப செல்வாக்கின் பிடியில் இருக்கும் ஒரே ஒரு பழமையான அரசியல் இயக்கம் இ.தொ.கா மாத்திரமே. எப்போது இ.தொ.கா குடும்ப செல்வாக்குப் பிடியைத் தளர்த்தி அர்ப்பணிப்புள்ள தொண்டர்களின் கைகளுக்குச் செல்லும்?

3. இ.தொ.காவுக்குள் இருக்கின்ற சாதிய ஆதிக்கம் குறித்து நீண்ட காலமாகவே பலரும் விமர்சித்து வந்திருக்கிறார்கள். பல இடங்களில் இது பற்றிப் பதிவாகியுமிருக்கிறது. தோழர் இளஞ்செழியன் போன்றோர் நீண்டகாலமாகவே பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வந்திருக்கிறார். அப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக இ.தொ.கா தலைமையைச் சேர்ந்தவர்களால் நேரடியாகவே “முக்குலத்தோர்” சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக செந்தில் தொண்டமான் நேரடியாகவே அச்சங்கத்துடன் இயங்கி வருகிறார். முன்னர் இல்லாத சாதி சங்கங்களை இப்போது உயிர்ப்பிப்பதன் மூலம் இந்திய வம்சாவளி சமூகத்தை ஏன் சாதி ரீதியில் பிளவுபடுத்துகிறீர்கள்?

முதல் கேள்விக்கு மிகவும் சாணக்கியமாகவும், ராஜதந்திரத்துடனும் அவரின் பதில்கள் அமைந்தன. அந்த பதில் கலந்துகொண்டிருந்த பலருக்கும் கூட ஓரளவு திருப்தியை அளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் அடுத்த இரு கேள்விகளுக்கு அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. வெறும் சப்புகட்டு கட்டினார். அது எதிர்பார்த்தது தான். ஏனைய எனது கேள்விகளைக் கேட்காமல் மற்றவர்களுக்கு இடமளித்தேன். ஆனால் அவர் ஒரு நேர்காணலைத் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஏனையோரின் கேள்விகள் பெரும்பாலும் ‘இணக்க அரசியல்’, ‘நிவாரண அரசியல்’ சார் கேள்விகளாகவே இருந்தன. அதற்குச் செந்தில் தொண்டமான் அளித்த பதில்கள் அங்கிருந்த பலருக்குத் திருப்தியைக் கொடுத்திருந்தது.

சிலர் கிழக்கில் மேற்கொண்டு வரும் உதவி நடவடிக்கைகளுக்கு அரசின் ஒத்துழைப்பைக் கேட்ட போது உடனேயே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரியவர்களை இணைத்து விட்டதுடன். சில பணிப்புரைகளையும் அவ் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த இக்கூட்டம் ஒட்டுமொத்தத்தில் அங்கு வந்திருந்தவர்களை திருப்திப்படுத்திய கூட்டம் எனலாம். அங்கு அவர் வெளியிட்ட கருத்துக்களை தனியாக பதிவு செய்கிறேன்.

செந்தில் தொண்டமான் குறித்து எனக்கு நிறையவே விமர்சனங்கள் உண்டு. எனது “கள்ளத்தோணி” நூலில் ஒரு தனிக்கட்டுரை அவரைப் பற்றிய விமர்சனக் கட்டுரை. அதையும் கூறி அவருக்கு அந்த நூலைக் கையெழுத்திட்டுப் பரிசளித்தேன்.

நூலின் தலைப்பைப் பார்த்து விட்டு “பாராளுமன்றத்தில் ஒருவர் என்னைப்பற்றி ‘கள்ளத்தோணி’ என்று கூறியபோது நான் நீங்கள் வங்கத்திலிருந்து கப்பலில் வரும்வழியில் அதன்பின்னர் கன்னியாகுமரிப் பக்கத்தில் இருந்து அதே கப்பலில் ஏறியவர்கள் நாங்கள்.” என்று கூறினேன் என்று நகைச்சுவையுடன் கூறினார்.

இளம் செந்தில் தொண்டமான் அறிவுபூர்வமாகவும் அதேவேளை மிகத் இராஜதந்திரமாகவும் இயங்கி வருபவராகவே காண முடிகிறது. அவரிடம் இருந்து பெறக்கூடியத்தை அவரிடம் அதிகாரம் இருக்கும் போதே கிழக்கு மக்கள் பெற வேண்டும். மேலும் அவரின் நடவடிக்கைகளின் மீதான விமர்சனங்களைப் பகிரங்கமாக (உண்மையாக) விமர்சிப்பதன் மூலம் அவரை நேர் செய்ய முயற்சிக்கலாம். அவர் தொடர்பாக எனக்கிருந்த கடும்போக்கு அவருடனான உரையாடலின் பின் சற்று தளர்ந்திருப்பது உண்மை.







புகலிட இலக்கிய சந்திப்பு : இருப்பின் இரகசியம் - என்.சரவணன்

“உன் கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அந்த கருத்தை நீ சொல்வதற்கான உரிமையைப் பாதுகாக்க என் உயிரையும் கொடுப்பேன்”

 என்பார் பிரெஞ்சு அறிஞர் வோல்டயர். அந்த வழியில், மிகவும் எதிரும் புதிருமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களும் ஒன்று கூடி கருத்துக் களமாடும் அரங்காக இலக்கிய சந்திப்பு இருந்து வருகிறது.

1988 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனில் தொடங்கப்பட்ட இலக்கிய சந்திப்பு 36 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 51 வது இலக்கிய சந்திப்பு கடந்த மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் பாரிஸ் நகரில் நடந்து முடிந்திருக்கின்றது.



இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.

புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களை ஒன்று கூட்டும் ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.

இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. ஈழத்து தமிழ் இயங்குதளத்தில் அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து நீடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ கொள்கின்ற முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.

அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்தவொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கியதில்லை என்பதுதான். இலக்கிய சந்திப்பு என்பது ஒரு நிறுவனம் அல்ல. அதற்கென்று ஒரு நிர்வாகமோ கட்டுப்படுத்தும் யாப்போ கூட இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய  சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும். இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் திறந்த ஜனநாயகப் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.

இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்பவர்களின் தனிப்பட்ட அரசியல், நடத்தை சார்ந்த விடயங்களை விசாரிப்பதற்கோ, தண்டிப்பதற்கோ, தீர்மானம் நிறைவேற்றுவதற்கோ எந்த அதிகாரமோ இலக்கிய சந்திப்புக்கு இல்லை. விதிகளுக்கு ஊடாக கட்டுப்படுத்துவதற்கான யாப்போ அவற்றை வியாக்கியானப்படுத்துவதற்கான பொறிமுறையோ இலக்கிய சந்திப்பிடம் கிடையாது. ஆனால் சில சந்திப்புகளில் அதில் கலந்துகொள்பவர்களின் பரிந்துரைகளின் பேரில் கண்டனத் தீர்மானங்கள் சில சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்பட்டிருகின்றன. அரசுக்கெதிரான கண்டனங்கள், பரிந்துரைகள் கூட தீர்மானங்களாக சில தடவைகள் நிறைவேற்றப்பட்டிருகின்றன. 


பரா மாஸ்டர் அன்று சொன்னது
1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோர்வே வந்து சேர்ந்த நான் 2000ஆம் ஆண்டு ஜெர்மனில் – ஸ்டுட்கார்ட் நகரில் நடந்த இலக்கிய சந்திப்பில் முதற் தடவையாக கலந்து கொண்டேன். இலக்கிய சந்திப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான “சிந்தனை” சஞ்சிகை ஆசிரியர் தோழர் பரா என்று அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்களும் அங்கே கலந்து கொண்டிருந்தார். அப்போது நான் தமிழீழ, மாக்ஸிய இயக்க அரசியலில் இயங்கிய காலமாதலால் புரட்சிகர சமூக மாற்றத்துக்கு கட்சியின் அவசியம் பற்றி நான் வகுப்பெடுத்த காலமும் கூட. எனவே அமைப்பாதலின் அவசியத்தையும், அரசியலையும் நான் உறுதியாக நம்பிய காலம்.

தோழர் பரா அவர்களிடம் ‘இலக்கிய சந்திப்பை ஒரு நிறுவனமாக்காமல், ஏன் இவ்வளவு தளர்வாக வைத்திருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் விவாதித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்; இதன் இருப்பு நீடிக்க வேண்டுமென்றால் இது ஒரு அமைப்பாக ஆகாமல் இருப்பது தான் சரியானது என்று பரா உறுதியாக வாதிட்டார். அவர் தனது அனுபவத்திலிருந்து தீர்க்கதரிசனமாக அன்று கூறியது மிகச் சரியானதே என்பதை அடுத்த ஓரிரு வருட ஐரோப்பிய வாழ்க்கை உணர்த்தியது. இலக்கிய சந்திப்பு இன்று உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அது அமைப்பு வடிவம் பெறாதது தான்.

இலக்கியச் சந்திப்பானது பலவிதமான கருத்துக்களையும், பலவிதமான அரசியலையும் கொண்ட பலரையும், அவர்களின் வெளிப்பாடுகளையும் மையப்படுத்திய ஒரு இடமாக இருந்திருக்கிறது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அமைப்பாகியும், அமைப்பாகாமலும் இருந்துவந்த ஒரு செயல்பாடாக இலக்கியச் சந்திப்பு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் இது தமிழ்த்தேச அரசியலின் பிற்போக்குத்தன்மையை கண்டிப்பதாக, விமர்சிப்பதாக, அதன் மறுசீரமைப்பு தொடர்பான வாதங்களை எழுப்புவதாகவும், பல்வேறு தேடல்களை நோக்கியதாகவும் கூட அமைந்தது.

அதுவும் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டர்கள் என்பது இயல்பு. "எதையாவது செய்ய வேண்டும்" என்கிற மன நிலை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். எனவே சமூக அக்கறையுடன் திட்டவட்டமான ஒரு இலக்கு இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்தாக வேண்டும். புகலிடச் சூழலில் சுய அடையாளத்திற்கான அல்லது சுயவிளம்பரத்திற்கான போராட்டமும் சில-பல சந்தர்ப்பங்களில் கூடவே இருப்பதுவும் ஒரு காரணம். 

போராட்ட அவலங்களையும், தொடர்ச்சியான போராட்டத்தையும் எதிர்கொண்டிருக்கும்; குறிப்பான தமிழ்ச் சூழலில் இவ்வகையான அரசியல் இலக்கிய சூழலை பலப்படுத்தியிருக்கிறது. அத்துடன் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர்களை சும்மாயிருக்காமலிருக்கப் பண்ணியிருக்கிறது.


எனவே தான் இலக்கிய சந்திப்பானது வெறும் இலக்கியத்துடன் அதன் சந்திப்புகளை குறுக்கியதில்லை. மாறாக அது ஒரு மாற்று அரசியல், இலக்கிய சமூகநீதிக்கான களமாக இருந்திருக்கிறது. இச்சூழல் தம்மை புடம் போடுவதற்கான அரங்காக பலரால் ஆக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த இந்த 36 வருட காலத்துக்குள் பல்வகையான தத்துவக் கருத்தாக்கங்களும் அறிமுகமாகி முட்டி மோதி பேருரையாடலாக தமிழ் இலக்கிய பரப்புக்குள் பரப்பி இருக்கிறது. உதாரணத்துக்கு, பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், தலித்தியம் போன்றவை ஒருவகை மோஸ்தராக (Fasion) ஆகிவிட்டிருந்த காலங்களில் இச் சந்திப்புகளில் உரையாடலாக மேலெழுந்து படைப்புகளில் கலக்கச் செய்துள்ளன.

ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட பகைமை, வெறுப்பு போன்றவற்றின் பாத்திரம்; இலக்கிய சந்திப்பின் மீதான எதிர்ப்புக்கான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எதிர்ப்பிலக்கியங்கள், எதிர்ப்பரசியல், பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சியோனிச எதிர்ப்பு, பிரதேசவாத மறுப்பு, பெண்ணியம், மார்க்சியம், தேசியம், தலித்தியம், விளிம்புநிலை கதையாடல் என இலக்கிய சந்திப்பு ஒடுக்கப்பட்டோருக்கான களமாக தனது பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வகையான உரையாடல்களை உரையாடுவதற்கான கள வாய்ப்பு இலங்கையில் இருக்கவில்லை. மேலும் 80 - 90களில் புகலிடம் வந்தடைந்த இளம்பருவ ஈழ இயக்க அரசியல் போராளிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தவர்கள் பலர் தம் தேசத்துக்கான பணிகளை புகலிடத்தில் இருந்து மேற்கொள்ளவென பல்வேறு அமைப்புகளாகவும், குழுக்களாகவும் இயங்கத் தொடங்கியிருந்தனர். இலக்கிய செயற்பாடுகளுக்காக பல சஞ்சிகைகள் இக்காலத்தில் தான் எழுச்சியுற்றன. வானொலிகளை நடத்துதல், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளிக்கொணர்தல், துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், எனத் தொடங்கி ஈற்றில் தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் என்பவற்றை நடத்துவது வரை வளர்த்தெடுத்தனர்.

இத்தகையவர்களின் தாகத்தின் நீட்சியாகவே இவ்வாறான இலக்கியச் சந்திப்புகளையும் தமக்கான வடிகாலாகப் பயன்படுத்த விளைந்தனர் எனலாம். அவர்களின் அரசியல் கருத்துக்களை, தமது நினைவுகளை, தமது துயரங்களை, எதிர்காலம் பற்றிய தேடல்களை வெளிப்படுத்தும் களமாக அவர்கள் இலக்கியச் சஞ்சிகைகள் தொடங்கி அரசியல் குழுக்களாக, இலக்கியச் சந்திப்புகளாக, பெண்கள் சந்திப்புகளாக அரசியல் கூட்டங்களாக, கலை இலக்கிய நிகழ்வுகளுக்கூடாக வெளிப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் விடுதலைப் புலிகள் பலமாக இருந்து தமக்கு வெளியில் இயங்கிய அனைத்து சக்திகளையும் தமக்கு எதிரானவையாக பிரகடனப்படுத்தி இயங்கிக் கொண்டிருந்த காலம் ஆதலால், அவ்வாறு அவர்களுக்கு வெளியில் இயங்கிய சக்திகளின் மீது வன்முறையைப் பிரயோகித்து வந்த இருண்ட காலம் அது. ஒரு புறம் இலங்கை அரசுக்கு எதிராக இயங்கிக்கொண்டே மறுபுறம் விடுதலைப் புலிகளின் நசுக்குதல்களுக்கும் புகலிடத்தில் எதிர்கொள்ள நேரிட்ட காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் மாற்றுத் தளமாக ஆனது தான் இலக்கிய சந்திப்பு.

ஆரம்பத்தில் பல இலக்கிய சந்திப்புகள் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இலக்கிய சந்திப்போடு தொடர்புடன் இயங்கி வந்த சபாலிங்கம் பாரிசில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். பல நாடுகளில் மாற்று அரசியலைக் கொண்டிருந்தவர்கள் பகிரங்கமாகத் தாக்கப்பட்டார்கள்.

அப்பேர்பட்ட சூழலில் ஜனநாயகத்துக்காக ஒன்று திரளவும், குரல்கொடுக்கவும், எதிர்த்து நிற்கவும், தொடர்ந்து இயங்கவும், தம்மை அதற்கான பலமான கூட்டாக ஆக்கிக் கொள்ளவும் கூட இலக்கிய சந்திப்பு அரணாக இருந்த காலமொன்று இருந்தது. தமது அரசியல் – சமூக உணர்வின் ஓர்மத்தையும் பேணிக்கொள்ள இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது உண்மையே.

மு.நித்தியானந்தன் அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்து இலக்கிய சந்திப்புடன் தொடர்புடையவர். அவர் ஒரு கட்டத்தில் இப்படி குறிப்பிட்டார். ‘நம்மைப் போன்றோர் கலியாண வீடு, சாமத்திய வீடு, சடங்குகள் என்பவற்றில் கலந்து கொள்வதில்லை. இந்த இலக்கிய சந்திப்பு தான் நாம் ஒன்றுகூடி நமது, அன்பு, நட்பு, அறிவு எதையும் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருக்கிறது’ என்பார்.

இந்த இலக்கிய சந்திப்பு ஏற்படுத்திய நட்பு வலைப்பின்னல் பலமானது. அந்த வலைப்பின்னலில் இருந்து காலத்துக்கு காலம் சிலர் விட்டுச் சென்றிருக்கிறார்கள், மரணித்து இருக்கிறார்கள் அதேவேளை புதியவர்களால் அந்த வலைப்பின்னல் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்த வலைப்பின்னல் பேணப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வலைப்பின்னலில் எவரும் அதிகாரிகள் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

எனவே எதிர்ப்பவர்கள், மறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் எவரும் "இலக்கிய சந்திப்பின்" மீது விமர்சனம் வைக்க இயல்வதில்லை. ஏனென்றால் அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஏற்பதற்கு அங்கே அப்படி எவரும் கிடையாது. எந்த அமைப்பும் நிர்வாகமும் கிடையாது. கூடியபட்சம் குறிப்பிட்டதொரு இலக்கிய சந்திப்பை நடத்திய குழுவின் மீதோ, அல்லது அதில் கருத்து வைத்தவர்கள் மீதோ மட்டுமே விமர்சனங்களை முன்வைக்கலாம். அக்குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பு  கூட்டம் தொடர்பான அறம், ஜனநாயகம் சார்ந்த கேள்விகளுக்கு அக்குழு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அக்குழு இலக்கிய சந்திப்பை அடுத்து நடத்தப்போகும் குழுவிடம் ஒப்படைத்து கடந்துவிடும்.


ஒவ்வொரு இலக்கிய சந்திப்பின் இறுதியில் இன்னொரு நாட்டில் அடுத்த சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுப்பார். இலக்கிய சந்திப்பை நடத்தும் பொறுப்பு எந்தத் தனிநபரிடமும் ஒப்படைக்கப்படுவதில்லை. கோரியவர் அந்த நாட்டில் உள்ள இலக்கிய செயற்பாட்டாளர்களையும் சேர்த்து ஏற்பாட்டுக் குழுவொன்றை அமைத்துக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டவர்கள் தாமும் நடத்தக் கேட்டால், அங்கே வாக்குக்கு விடப்படும். அங்கு வந்திருப்பவர்கள் பெரும்பாலும் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்பவர்களாக இருப்பதால் அவர்களின் விருப்பும் அந்த வாக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டு எளிதாக முடிவெடுக்கப்படும். இலக்கிய சந்திப்பின் இந்த இறுதி நிகழ்ச்சியில் அந்த இலக்கிய சந்திப்பின் வரவு செலவு கணக்கையும் வெளியிடுவது வழக்கம். கலந்துனர்கள் இச்செலவுகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். சிலவேளை இதில் பணம் ஏதும் மிஞ்சினால் குறிப்பிட்ட ஒரு வேலைத்திட்டத்துக்கு உதவியாக அதனை வழங்க அக்குழுவால் தீர்மானம் எடுக்கப்படும். அத்தோடு அவர்களின் பொறுப்பு முடிந்தது. அக்குழு இயல்பாகக் கலைந்துவிடும். இதுவே நடைமுறை.

இன்றைய நவீன போக்கில் மாக்ஸிய இயக்கங்களின் உதிர்வுக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக, இறுக்கமான விதிகளையும், ஒழுக்க கட்டுப்பாடுகளையும் காரணமாக முன்வைத்து வருகிறார்கள். பெரும்பாலான அமைப்புகளில் அமைப்பின் மூலோபாய, தந்திரோபாயங்களை நோக்கிய வேலைத்திட்டங்கள் பற்றிய உரையாடல்கள், விவாதங்களுக்குப் பதிலாக அரைவாசிக்கும் மேற்பட்ட சக்தியும், நேரமும், உழைப்பும் அமைப்புத்துறை சார் விவகாரங்களிலேயே ஓடி விடுகிறது என்கிற விமர்சனம் இங்கு கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவாதங்கள் பெரும்பாலும் சிக்கலை தீர்ப்பதற்குப் பதிலாக ஈற்றில் உடைவுகளையே தந்திருக்கிறது என்கிற விமர்சனத்தை உதாசீனம் செய்து விட முடியாது.

குறிப்பாக புகலிடத்தில், பண்பாட்டு அமைப்புகள், சமூக, அரசியல், இயக்கங்கள் எல்லாமே குறைந்த ஆயுளைக் கொண்டதாக ஆனமைக்கும், துண்டு துண்டுகளாக சிதறுவதற்கும் அமைப்புத்துறை சார் சிக்கல்களே காரணமாக ஆகி இருக்கின்றன.

அப்பேர்பட்ட நிலையில் எத்தகைய விவாதங்களையும் நடத்தக்கூடிய களமாக மிஞ்சி இருப்பது இலக்கிய சந்திப்பு ஒன்று தான். எந்தக் கடும் விவாதங்களை நடத்துவதற்கான வாய்ப்புள்ள வேறு ஒரு களமும் தமிழ்ச் சூழலில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய காரசாரமான விவாதங்கள் இடம் இருப்பதால் தான் அது வெளியில் சர்ச்சைக்குரியதான ஒன்றாகவும் எளிதில் இனங்காணப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அத்தகைய விவாதங்களை பதிவு செய்யவும் வெளிக்கொணரவும் சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் தான் இருந்தன. அதுவும் வாரங்களின் பின்னர், அல்லது மாதங்களின் பின்னர் தான் அவை வெளிவந்தன. ஆனால் இன்று உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பே செய்யப்படுகிறது. எனவே இலகுவாக அவை கருத்தாடல் களத்துக்கு வந்து சேர்ந்து விடுகின்றன.

இம்முறை பாரிசில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் குழப்புவதற்காகவே சிலர் கலந்து கொண்டிருந்தனர். இல்லாத சாதியப் பிரச்சினையை ஊதிப்பெருப்பிக்கிறார்கள் என்பதே அவர்களின் சாரம்சம்.  ஒருவர் கருத்து கூறி, அடுத்தடுத்து கருத்து கூறுபவர்களுக்கு வழிவிட்டு தமது அடுத்த கருத்தை வரிசையில் தெரிவிப்பதற்குப் பதிலாக; கூட்ட ஒழுங்கை மீறி அவர்கள் தொடர்ச்சியாக குறுக்கிட்டுக் கொண்டிருந்ததை கட்டுபடுத்த இயலாமல் போனதைத் தொடர்ந்து அங்கே சர்ச்சை எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பரஸ்பரம் உடன்படாத கருத்தாக இருந்த போதும் அவர்களுக்கு அங்கே கருத்தைக் கூறும் உரிமையை இலக்கிய சந்திப்பு மறுக்காது. ஆனால் அவர்கள் அந்த உரிமை துஷ்பிரயோகம் செய்வதற்காகவே வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனநாயக ஒழுங்குக்கு கட்டுப்பட முடியாத, அராஜக பாணியிலான அணுகுமுறையாளர்களாக அங்கே இருந்தார்கள். எனவே கலந்துனர்கள் அவர்களின் கருத்து சுதந்திரத்தை  அல்ல அவர்களின் அற மீறலை எதிர்த்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார்கள். ஆனால் இலக்கிய சந்திப்பின் முடிவில் இந்த சம்பவம் இலக்கிய சந்திப்பின் அராஜகமாக வெளியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

சகல விதமான பன்முகப்பட்ட; மாற்றுக் கருத்துக்களுக்குமான ஜனநாயகக் களமாகவும் பேணப்படும் இலக்கிய சந்திப்பின் மீது கடும் விமர்சனங்களை வைப்பவர்கள் அதை ஒட்டு மொத்த இலக்கிய சந்திப்பின் மீதும் வைக்கும் போது; அவ்வாறு வைப்பதே ஒரு சுத்த அபத்தம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது. இவ்வாறு விமர்சிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இலக்கிய சந்திப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் இலக்கிய சந்திப்பின் மரபையும், இயல்பையும் அறிந்தவர்கள் என்பது தான் வேடிக்கை. எவரெவரெல்லாம் இலக்கிய சந்திப்புடன் தொடர்பறுந்து போனார்களோ அவர்கள் வசதியாக இத்தகைய விமர்சனங்களை வைப்பதன் உள்நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. தனி நபர்கள் மீது வைக்க வேண்டிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் இல்லாத “அமைப்பின்” மீது வைப்பது பகுத்தறிவற்ற அபத்தமே.

ஒரு முன்மாதிரியான சுதந்திர கருத்துக் களமாக தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலக்கிய சந்திப்பை பாதுகாப்பதும், பேணுவதும் தமிழ் சமுதாயத்தின் கடமையாகும்.

இதுவரையான இலக்கிய சந்திப்புகள்


நன்றி - ஜீவநதி - மே - 2024

“மகாவம்சம்” 6 ஆம் தொகுதி: தொடருக்கான அறிமுகம் - என்.சரவணன்

“மகாவம்சம்” எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த விபரங்களின் அடிப்படையிலேயே அது தொகுக்குப்பட்டு வந்திருக்கிறது.

மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு முந்திய 1100 ஆண்டுகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம்.

மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக வெளிவந்த 6வது மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வரிசையில் இறுதியாக வெளிவந்த தொகுதி 6வது தொகுதி. கடந்த 2016 ஆம் ஆண்டு அது இலங்கை அரசால் வெளியிடப்பட்டது. “மகாவம்சம்” என்கிற வரலாற்றுக் குறிப்புகளை இன்று அரசே எழுதி வைத்து வருகிறது என்பதை இங்கே முதலில் விளங்கிக்கொள்வோம். கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச்சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது. பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் அது வெளியிடப்பட்டு வருகிறது. தமிழில் வெளியிடப்படுவதுமில்லை. அதை எழுதும் அணியில் எந்த தமிழ் அறிஞர்களும் இருந்ததுமில்லை. இவ்வாறு சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதால் இதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களும் கூட தமிழர்களால் வெளிக்கொணர முடிந்ததில்லை.

மகாவம்சத்தின் தோற்றம்

கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் வழிவழியாக வாய்மொழியாக பேசப்பட்டு வந்த தகவல்கள் என்கிற போது அதன் நம்பகத் தன்மை எப்படி இருக்கும் என்பதை நாம் உணர முடியும்.

அதில் கூறப்படும் பல கதைகள் விஞ்ஞானத்துக்கு புறம்பான வரலாற்றுக் குளறுபடிகளைக் கொண்ட புனைகதைகள் உள்ளதைப் பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. அது மட்டுமன்றி ஆட்சிசெய்த அரசர்களின் வயது, ஆட்சி காலம் என்பன பல இடங்களில் நம்பத்தகுந்தவை அல்ல. அவை பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அதே வேளை மகாவம்சத்தில் உள்ள பல வரலாற்றுத் தகவல்கள் தொல்லியல் ஆய்வுகளைத் தூண்ட பயன்பட்டுள்ளன.

இதை எழுதிய மகாநாம தேரர் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மகாவம்சத்தின் அரசியல் வகிபாகம்

இலங்கையின் நவீன வரலாற்றாசிரியர்கள் கூட இலங்கையின் புராதன வரலாற்றைப் பற்றி பேசும் போது மகாவம்சத்தில் தங்கியிருக்கிறார்கள். குறைநிறைகளுக்கப்பால் மகாவம்சத்தை அடியாகக் கொண்டே மூலாதாரங்களைத் தேடும்/தொகுக்கும் ஆராய்ச்சி மரபுக்கு ஆட்படாத எந்த வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது. இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை வரலாறு தொடர்பான வெகுஜன மட்டத்திலான உரையாடல்களும் நிகழ்த்தப்படுகின்றன. பாடசாலை வரலாற்றுப் பாடங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வெகுஜன சொல்லாடல்களிலும் அரசியல் சொல்லாடல்களிலும் கூட மகாவம்சம் பாத்திரம் செலுத்துகிறது. மகாவம்சம் சித்திரிக்கும் இனவாத கருத்தேற்றப்பட்ட துட்டகைமுனுவின் கதையானது பாடசாலையில் பயன்படுத்தப்படும் சிங்கள மொழிப் பாட நூல்களிலும் பௌத்த சமய பாட நூல்களிலும் சிங்கள நாடக அரங்குகளிலும் ஜனரஞ்சக இலக்கியங்களிலும் பிரயோகிக்கப்படுகின்றன.

சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதமாக “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம் விளங்குகிறது. இந்தியாவில் இந்துத்துவ தீவிரத்தனமைக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை எவ்வாறு பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” இருப்பதாக முழுமையாக நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணமாக மகாவம்சம் பின்புல சித்தாந்தமாக இயக்கப்பட்டு வருகிறது.

மொழியாக்கம்

கி.மு 543ம் ஆண்டு இந்தியாவிலிருந்து விஜயன் என்கிற இளவரசனின் வருகை தொடக்கம், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் காலம் வரையான பதிவுகளை மகாவம்ச மூல நூல் கொண்டிருக்கிறது.

மகாவம்சம் எழுதப்பட்டு 13 நூற்றாண்டுகளாக அது சிங்கள சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. மேலும் இன்று கூட மகாவம்சத்தின் முதல் ஆங்கில பிரதி பற்றி குறிப்பிடுகிற போது கெய்கரைத் (Wilhelm Ludwig Geiger) தான்  குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் அதற்கு முன்னரே குறைபாடுகளுடனேனும் மொழியாக்கம் நடந்திருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியின் போது இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் (Sir Alexander Johnston) மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவுக்கு 1809 ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார். 1826 ஆம் ஆண்டு ஒரு தோராயமான மொழியாக்கம்  லத்தீன் மொழியில் யூகேன் பூர்னோப் என்பவரால் (Eugène Burnouf ) வெளியிடப்பட்டது. ஆனால் அதில் பல குறிப்புகளுக்கு பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்கு புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று கூட இருந்தது.

இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் நிகழ்ந்த 1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA)  என்பவரைக் கொண்டு மொழிபெயர்த்த பிரதியொன்றை அன்றைய ஆங்கிலேய அரசாங்கமே வெளியிட்டிருக்கிறது. அதில் அன்றைய தேசாதிபதி சேர் வில்லியம் ஹென்றி ஜோர்ஜின் ஆணையின் பேரில் வெளியிடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அந்தப் பணியை அன்திரிஸ் த சில்வாவிடம் அன்று ஒப்படைத்தவர் அன்றைய ஆளுநர் கிரகெரி.

இவற்றிலெல்லாம் மொழிபெயர்ப்பு குறைபாடுகள் இருந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் சிவில் சேவைத்துறையில் பணியாற்றியவரும் வரலாற்றாசிரியருமான ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். முதலியார் விஜேசிங்கவுடன் சேர்ந்து மொழியாக்கத்தில் உதவியவர் தான் ஜோர்ஜ் டேர்னர். 1889இல் அது வெளிவந்த போது அன்றைய இலங்கை தேசாதிபதி ஆர்தர் ஹமில்டன் கோர்டன் (Arthur Hamilton Gordon) இன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக முதல் பிரதியில் மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிகிறது.

அந்த மொழிபெயர்ப்பிலும் போதாமை இருந்ததை சுட்டிக்காட்டித் தான் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். மாபெல் ஹெய்னஸ் போட்


(Mabel Haynes Bode) என்பவரின் உதவியுடன் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. வில்ஹெய்ம் கெய்கர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சரி பார்த்து வெளியிட்டார். கெய்கர் மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி மகாவம்சத்தின் இரண்டாம் பாகமாக கொள்ளப்படும் “சூளவம்சம்” (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். இன்றும் கெய்கரின் மொழிபெயர்ப்பையே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பிரதியாக காண முடிகிறது. வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று அறிஞராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வரலாற்றுப் புலமைத்துவத்துடன் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதுவரை மகாவம்சத்தின் முதலாவது தொகுதி தவிர எதுவும் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த மகாவம்ச மொழிபெயர்ப்புகள் கூட தனியாரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே. தமிழில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தொகுதியை மாத்திரம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவை எதுவுமே கூட; சிங்கள மகாவம்சத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல. சொல்லப்போனால் மொழிபெயர்த்தவர்களின் சுருக்கமான - சொந்த விளக்கவுரை / பொழிப்புரை தான். இந்த ஐந்தையும் எடுத்து மூலத்துடன் பரிசீலித்தால் அந்த வித்தியாசங்களை அப்படியே உணர்வீர்கள்.


ஈழப்போராட்டம் பற்றி மகாவம்சம்?

மகாவம்சத்தை எழுதவதற்காகவே அரச கலாசார அமைச்சின் கீழ் ஒரு தனித்துறை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதற்கான வலுவான குழுவும் இதில் ஈடுபட்டு வருகிறது. அந்த குழுவில் அங்கம் வகிக்கும் 15 புலமையாளர்களைக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி தேடிப்பார்த்தபோது சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த எவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. ஏன் சிங்கள கத்தோலிக்கர்கள் கூட கிடையாது. இலங்கையில் ஆட்சி செய்தவர்கள், அந்த ஆட்சிகாலங்களின் போது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, களை இலக்கிய, விஞ்ஞான, கல்வி, மத  நிலைமைகளை பதிவு செய்வது அந்தக் குழுவின் பணி. 

இதைத் தவிர மகாவசத்தை “மஹாவம்ச கீதய” என்கிற தலைப்பில் செய்யுள் வடிவிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வரை 1815 வரையான காலப்பகுதி வரை பாளி, சிங்கள ஆகிய மொழிகளில் செய்யுளாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான பணிகள் பேராசிரியர் மென்டிஸ் ரோஹனதீர என்பவரின் தலைமையில் தனியான குழு மேற்கொண்டு வருகிறது.

2015 ஜனவரி ரணில் – மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மகாவம்ச உருவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கலாசார விவகார திணைக்களம் தமது புதிய திட்டத்ததை பாராளுமன்றத்தில் சமர்பித்தது. அதில் மகாவம்ச உருவாக்கத்தை துரிதப்படுத்தும் பரிந்துரைகள் காணப்படுகின்றன. அதன் விளைவாகவே இப்போது 6வது தொகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துக்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் “இலங்கை அரசின்” உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள தற்போது வெளிவந்திருக்கும் 2010 வரையிலான மகாவம்சத்தின் 6வது தொகுதியை நாம் கவனத்துக்கு எடுப்பது அவசியம்.

சிங்கள பௌத்தர்களால் வரலாற்றைத் திரித்து, தமிழ் மக்களை புறமொதுக்கி, புனைவுகளை தொகுத்து சிங்கள மக்களுக்கு மட்டுமே ஊட்டிவரும் ஆபத்தான சிங்கள பௌத்த ஆயுதமாக மகாவம்சம் திகழ்கிறது.

இதுவரையான மகாவம்சத் தொகுதிகள்

இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.

  1. தொகுதி  1 -  இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் (37வது அத்தியாயம் வரை) எழுதப்பட்டது
  2. தொகுதி  2 -  கி.பி  301 முதல் கி.பி 1815 வரையான (100வது அத்தியாயம் வரை) ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (இதைச் “சூளவம்சம்” என்றும் அழைப்பர்)
    1. தர்மகீர்த்தி (I) தேரரால் 37-79 வது அத்தியாயம் வரை
    2. தர்மகீர்த்தி (II) தேரரால் 79-90 வது அத்தியாயம் வரை
    3. திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் 90-100 வது அத்தியாயம் வரை
    4. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டிதர்  ஆகியோரால் 101 வது அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது
  3. தொகுதி  3 -  1815 முதல் 1936 வரை. (114 வரை வது அத்தியாயம் வரை) யகிரல பஞ்ஞானந்த தேரரால் எழுதப்பட்டது
  4. தொகுதி  4 -  1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை. (124வது அத்தியாயம் வரை) கலாநிதி நந்ததேவ விஜேசேகர தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  5. தொகுதி  5 -  1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை. (129 வது அத்தியாயம் வரை) பெல்லன ஸ்ரீ ஞானவிமல தேரரின் தலைமையிலான குழுவால் இயற்றப்பட்டது.
  6. தொகுதி  6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம்  முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை. (133 வது அத்தியாயம் வரை) அரசின் கீழ் அமைக்கப்பட்ட மகாவம்சக் குழுவால் திருமதி மாலினி எந்தகம தலைமையில் இயற்றப்பட்டது.
    1. 130 வது அத்தியாயம் - ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989) 
    2. 131 வது அத்தியாயம் - ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
    3. 132 வது அத்தியாயம் - சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
    4. 133 வது அத்தியாயம் - மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)

எந்த “சிங்கள பௌத்தத்தின்” பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும். ஆனால் இலங்கைத் தீவு சிங்களவர்களின் தீவு, சிங்கள மக்களே மண்ணின் மைந்தர்கள், 5000 வருடங்களுக்கு பௌத்தத்தை காக்க புத்தர்  அருளிச் சென்ற தீவே இலங்கைத் தீவு என்கிற தம்மதீப சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கவும் இதே மகாவம்சத்தைத் தான் இதுவரை பயன்படுத்தி வந்திருகிறார்கள். இன்றும் தொடர்கிறார்கள்.

எனவே தமிழில் மகாவம்சம் பற்றிய விரிவான ஆய்வுகள் அதி அவசியமானவை. அத்தகைய ஆய்வுகளுக்கு “மூலம்” அவசியம். அந்த “மூலத்தை” தமிழில் ஒப்படைக்கும் முயற்சியே இந்த மொழிபெயர்ப்புத் தொடர். இத்தொடர் மொழிபெயர்ப்புக்கப்பால்; தேவைப்படும் இடங்களில் மேலதிக விளக்கங்களுக்காக அடிக்குறிப்புகளோடு வெளிக்கொணர்வது எமது நோக்கம். மற்றும்படி மூலமொழியில் உள்ளபடி அப்படியே வழங்குவதே எமது இலக்கு.

(தமிழன் பத்திரிகையில் மார்ச் 3 தொடக்கம் தொடராக வெளியாகும் மகாவம்சம் 6வது தொகுதியின் மொழிபெயர்ப்புக்கான மொழிபெயர்ப்பாளர் குறிப்பு இது)

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை - என்.சரவணன்

ராகுல சாங்கிருத்தியாயன் (09.04.1893 – 14.04.1963)  என்கிற பெயரை அறியாத ஆழமான தமிழ் வாசகர்கள் எவரும் இருக்க முடியாது. அவரை இந்திய அறிஞராக மட்டுமே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரை ஆய்வெழுத்தாளராக ஆக்கியதில் இலங்கையின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அவரைப் பற்றி வெளிவந்த எந்த நூலிலும் இலங்கைப் பின்னணி குறித்த விபரங்கள் ஓரிரு வரிகளுக்குள் மாத்திரமே சுருங்கி விட்டிருப்பதை காண முடிகிறது. இக்கட்டுரை அவரின் பல நூல்களையும், அவரைப் பற்றிய பல நூல்கள், ஆவணங்கள் என்பவற்றில் இருந்தும் தேடித் திரட்டி எடுக்கப்பட்டவற்றின் தொகுப்பாகும்.

இதில் உள்ள ஆச்சரியமும், வேதனையுமான விடயம் என்னவென்றால் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரின் நூல்கள் எதிலும்; அவரைப் பற்றிய சுயசரிதைக் குறிப்புகளில்; இக்கட்டுரையில் வெளியிடப்பட்ட இலங்கையுடனான தொடர்பு பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இல்லாதது தான்.

அவருக்கு ராகுல சாங்கிருத்தியாயன் என்கிற பெயர் சூட்டப்பட்டதே இலங்கையில் தான் என்பதும், அவர் பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டு பௌத்த ஆய்வுகளில் முன்னணி அறிஞராக ஆனதிலும் அவரது இலங்கைப் பயணம் தான் என்பதையும் அறிகிற போது வியப்பே மேலிடுகிறது. அவரின் படைப்புகளில் ஓரிரு நூல்களைத் தவிர எஞ்சிய அனைத்தும் இலங்கையில் இருந்து அவர் திரும்பிய பின்னர் வெளிவந்தவை தான்.

ராகுல சாங்கிருத்தியாயனை அறியாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம், பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார். கேதார்நாத் பாண்டே என்கிற இயற்பெயருடன் இவர் தனது பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்தததன் பின் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 

ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே முறையான கல்வியாகக் கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்கிற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழையும் அறிந்து கொண்டார்.

அவர் காசியில் சமஸ்கிருதம், அரபு, பர்சிய மொழிகளை மரபுரீதியாகக் கற்றுக்கொண்டார். ஏனைய 30க்கும் மேற்பட்ட மொழிகளை அவர் சுயமாகவே கற்றுக்கொண்டார். அவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட இக்கட்டுரை போதாது. அவர் எழுதிய எண்ணற்ற டயரிக் குறிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் வாசிக்கத் தவறியிருக்காத நூல் “வால்காவிலிருந்து கங்கை வரை”. “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல் அது. அது மட்டுமன்றி மேலும் பல முக்கிய நூல்களை நமக்குத் தந்தவர். இந்த நூல் இந்திய, இலங்கை மொழிகளில் மாத்திரமல்ல ரஷ்ய, செக், போலிஷ், சீன மொழி உள்ளிட்ட பல அலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்ட நூல்.

1920களின் ஆரம்பத்தில் அவர் தீவிர அரசியல் பணிகளில் இணைத்துக்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு வடிவமான ஒத்துழையாமை இயக்கத்திற்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டு 31.01.1922 அன்று அவரை பிரிட்டிஷார் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தும் கைதிகளை விழிப்புணர்வூட்டுவதற்காக பாடல்கள், கவிதைகள், நாடகங்களை எழுதினார். அவரின் எழுத்துக்கள் சிறைக்கு வெளியில் இரகசியமாக அனுப்பப்பட்டது பிரசுரமும் செய்யப்பட்டன. அடிக்கடி கைதாகி சிறையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஜில்லா செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

அநாகரிக தமபால தொடர்பு

இந்தக் காலப்பகுதியில் தான் புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரம் இருக்கின்ற “புத்தகயா” ஆலயத்தை இந்துக்களிடம் இருந்து மீட்டு பௌத்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களின் படையெடுப்பைத் தொடர்ந்து முன்னர் இருந்த பௌத்த ஆலயம் சின்னாபின்னமாக்கப்பட்டு பிற் காலத்தில் அங்கே இருந்த புத்தரை சிவனென்று வழிபட்டு ஒரு இந்துக் கோவிலாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

இன்று பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாக கொண்டாடப்படும் அநகாரிக்க தர்மபால அப்போது இலங்கையில் இருந்து அங்கு சென்றவேளை இதனைக் கண்ணுற்று இந்துக்களிடம் இருந்து அதை மீட்பதற்காக “மகாபோதி சங்கம்” என்கிற இயக்கத்தை ஆரம்பித்து தீவிரமாக இயங்கிவந்தார். (அந்த இயக்கத்தின் அந்த முயற்சி பின்னர் வெற்றிபெற்றது. இந்த மீட்பில் ராகுலின் பங்கும் கணிசமானது.)

புத்தகயா அமைந்துள்ளதும் பீகாரில் தான். அங்கே சாப்ரா (Chhapra) என்கிற பிரதேசத்தின் காங்கிரஸ் கொமிட்டியை ராகுல் கூட்டி அங்கே புத்தகயாவை மீட்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றினார். இந்த பரிந்துரைகளை காங்கிரசின் வருடாந்த தேசிய மாநாட்டில் ஒரு தலைப்பாக சேர்க்கப்பட்டது. அங்கே அநகாரிக்க தர்மபாலாவும் தனது சார்பில் பிக்குமார்களை அனுப்பிவைத்தார். அங்கு நிகழ்ந்த பல தரப்பட்ட மொழியிலான விவாதங்களை ராகுல் மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் இது குறித்து ஆராய்வதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அமைத்த கொமிட்டியில் ராகுல் முக்கிய பங்காற்றினார். புத்தகயாவை மீட்கும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கைக்கு புறப்பட்டார்.

இலங்கை விஜயம் – பௌத்த தீட்சை – பெயர் மாற்றம்

அநகாரிக்க தர்மபாலவின் சிஷ்யரும் மகா போதி சங்கத்தின் செயலாளருமான பிரமச்சாரி தேவபிரிய வலிசிங்க இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். வித்தியாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த நாராவில் தர்மரத்ன தேரர் ஒரு  தந்தியின் மூலம் அவருக்கு அழைப்பையும் வழிச்செலவுக்கான பணத்தையும் அனுப்பி வைத்தார். அவர் லுனுபொகுனே ஸ்ரீ தம்மானந்த தேரரின் சிஷ்யர். 

ராகுல் 16.05.1927 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார். கல்கத்தாவில் மகாபோதி சங்கம் அவருக்கு உதவியது. வித்தியாலங்கார பிரிவெனாவில் அவர் சுமார் 19 மாதங்கள் (16 May 1927 to 1 December 1928) பௌத்த கல்வியைக் கற்றார்.

அவர் தேரவாத பௌத்தத்தால் மேலும் ஈர்க்கப்பட்டு லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் வித்தியாலங்கார பிரிவெனாவிலேயே பௌத்த தீட்சை பெற்று காவியுடை அணிந்து பௌத்த பிக்குவாக ஆனார். 1923 ஆம் ஆண்டு 20 வது வயதில் அவர் வைஷ்ணவ துறவு நிலைக்குச் சென்ற போது அவர் கேதார்நாத் பாண்டே என்கிற தனது இயற் பெயரை பாபா ராம் உதார் தாஸ் என்கிற பெயரை சூட்டிக் கொண்டார். பின்னர் 1930 ஆம் ஆண்டு பௌத்த துறவியாக தீட்சை பெற்றபோது அப்பெயரையும் மாற்றி “ராகுல சாங்கிருத்தியாயன்” என மாற்றிக்கொண்டார்.  ராகுல என்பது புத்தரின் மகனின் பெயர். இலங்கையில் பல பிக்குமார்கள் தமக்குச் சூட்டிக்கொண்ட பிரபலமான பெயர். இலங்கையில் சிங்கள மொழியில் ராகுல என்றே அழைப்பார்கள். ஆனால் அவர் தன்னை “ராகுல்” என்றே அழைத்துக்கொண்டார். சாங்கிருத்தியாயன் என்பது அவரின் குடும்ப கோத்திரப் பெயர். அவரின் மூல நூல்களில் எல்லாம் “Rahul Sankrityayan” என்றே இருப்பதைக் கவனிக்கலாம். அவரின் வாழ்நாள் முழுதும் இந்தப் பெயரிலேயே அவர் இயங்கினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கேணல் ஒல்கொட், ரஷ்யாவைச் சேர்ந்த பிலாவட்ஸ்கி, இந்தியாவைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதர் போன்றோர் கூட இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து பௌத்த தீட்சை பெற்று பௌத்தர்களாக ஆன நமக்குத் தெரிந்த பிரபலமானவர்கள்.

அவர் முறைசார் கல்வியை இலங்கையில் தான் கற்றார். பல பௌத்த நூல்களைப் படித்தார். இந்திய கலாச்சார வரலாறு பற்றிய தனது அறிவையும் விரிவுபடுத்தினார். இலங்கையில் Pali text society வெளியீடுகளிலும் லண்டன், பம்பாய், வங்காளம் இலங்கை ஆகிய கிளைகளைக் கொண்டிருந்த ரோயல் ஏசியாடிக் சொசைட்டியின் பருவ இதழ்களிலும் அவர் ஆர்வம் கொண்டு எழுதினார். இலங்கையில் ராகுலுக்கு தேவைப்பட்ட நூல்களை வாங்கிக் கொடுத்து உதவியர் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக, அரசபை உறுப்பினராக, அமைச்சராக எல்லாம் இருந்த சேர் டி.பி.ஜெயதிலக்க. ராகுல் இலங்கையில் சிங்களத்தையும் கற்றுக்கொண்டார்.

அவர் எழுதிய “இந்திய கலாச்சாரமும் பௌத்த விமர்சன பாதையும்” (භාරතීය සංස්කෘතිය හා බෞද්ධ විචාර මාර්ගය) என்கிற தலைப்பில் ஒரு சிங்களக் கட்டுரையைக் காணக் கிடைத்தது. அதில் இந்தியாவில் பௌத்தம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நாம் இதுவரை அறியாத விபரங்கள் அளவற்றை தந்திருக்கிறார். இக்கட்டுரை எங்கே எப்போது வெளிவந்தது என்கிற விபரங்களை அறிய முடியவில்லை. சிங்களத்தில் வெளிவந்திருப்பதால் அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒன்றா அல்லது சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றா என்பதையும் அறிய முடியவில்லை.

பிற்காலத்தில் இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாக ஆன ராஜேந்திர பிரசாத் இந்திய காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்த காலத்தில் 1927 டிசம்பரில், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்குப் சென்று விட்டு அங்கிருந்து இலங்கைக்கு விஜயம் செய்தார். அவருக்கு வழிகாட்டியாக ராகுல் இருந்தார். அவரின் பயண அறிக்கையை பத்திரிகைளுக்கு எழுதினார். அப்போது அலகாபாத்தில் இருந்து வெளியாகும் “சரஸ்வதி” என்ற ஹிந்தி மாத இதழில் இலங்கையைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இலங்கையில் சில உள்ளூர் மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுத்தார். இலங்கையில் இருந்து அவர் செல்லும் போது பௌத்த ஆய்வுகளுக்காக திபெத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் 1931 இல் இந்தியா திரும்பினார். இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டு மீண்டும் 1931 இல் இலங்கை வந்து ஓராண்டு தங்கி இருந்தார். 


இலங்கையில் சிங்களத்தையும், பாளி மொழியையும் பௌத்த இலக்கியங்களைப் பற்றி ஆழமாக கற்றுணர்ந்தார். பௌத்த புனித நூலான “திரிபீடக” (மூன்று பீடங்கள்) எனப்படுகின்ற பௌத்த கிரந்தங்களைக் கற்றுத் தேர்ந்து “திரிபீடகாச்சார்யா” என்கிற பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் “திரிபீடகாசார்ய மகா பண்டிதர் ராகுல சாங்கிருத்தியாயன்” எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே வாழ் நாள் முழுவதும் நிலைத்து நின்றது. ஒன்றரை வருடம் கழிந்து 01.12.1928 அன்று அவர் இலங்கையிலிருந்து நேபாளுக்கு பயணமானார். இந்த 19 மாதங்களில்  ஆனாலும் அவர் இலங்கையில் பாளி நூல் கழக வெளியீடுகளையும், ரோயல் ஆசியாடிக் சொசைட்டியின் லண்டன், பம்பாய், இலங்கைக் கிளைகளினால் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுச் சஞ்சிகைகளின் பழைய தொகுதிகளை கற்றார். அவர் அவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

இலங்கையில் இருந்து சென்றதன் பின்னரும் இலங்கைக்கு அடிக்கடி வந்தார். சீன, நேபாள், தீபெத் பகுதிகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது அதுவரை கண்டுபிடிக்கபடாத முக்கிய புராதன பௌத்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை வெளியில் கொண்டுவந்தார். 

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இவை முன்னர் இந்தியாவில் அழிந்துபோன நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும்.

லுனுபொக்குனு ஸ்ரீ தம்மானந்த தேரரின் கீழ் ராகுல் பௌத்த உயர் பட்டப்படிப்பை வித்தியாலங்கார பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவருக்கு அப்பல்கலைக்கழகத்தில் பௌத்த திரிபிடகம் பற்றிய கற்கையை முடித்துக் கொண்டதால் அவருக்கு திரிபீடகாச்சார்ய மகா பண்டித பேராசிரியர் என்கிற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.  அவர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் தந்தையாக ஆகியிருந்த நிலையில் இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் (இன்றைய களனி பல்கலைக்கழகம்) அவரை தம்மோடு பணியாற்றும்படி அழைத்தது. 1959 இலிருந்து 1961 வரை அவர் அங்கே பேராசிரியராக பணியாற்றினார். அது மட்டுமன்றி வித்யாலங்கார பல்கலைக்கழகம் 1959ஆம் ஆண்டு ஆரம்பித்த “தத்துவம் மற்றும் ஆராய்ச்சி” பீடத்தின் முதல் பீடாதிபதி ராகுல சாங்கிருத்தியாயன் என்பதையும் இங்கே பதிவு செய்யவேண்டும்.

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ராகுல் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

“ஹீனயான-மகாயான இருவகையான பெளத்தங்கள் முறையே வடக்கு பௌத்தம் - தெற்கு பௌத்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, இலங்கையில் பௌத்த துறவிகள் மத்தியில் நடந்த ஆழமான கோட்பாட்டு விவாதங்களில் பாரம்பரிய இந்திய தத்துவம் கிட்டத்தட்ட முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. பௌத்த பிக்குமார் இந்திய தத்துவத்துக்கு மாறாக கவிதை அழகியல் மற்றும் ஜோதிடம் என்பவற்றை சமஸ்கிருதத்தின் மூலம் கற்றனர். அந்த விவாதங்களில் இருந்து சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது தம்ம அறிவியல் (scholastic) அல்லது சமஸ்கிருத இலக்கிய மரபே. இலங்கையின் தற்கால தேரவாத மரபில் உருவாகியிருந்த இந்தத் தத்துவத் தனிமை வித்யாலங்காரத் துறவிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வித்யாலயங்காரவில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தில் அந்த சமச்சீர் தத்துவத்தை இணைத்த இரண்டு முன்னோடிகளைக் குறிப்பிட வேண்டும். அந்த இருவர் வித்யாலயங்காரா பிரிவெனவின் அதிபர் ஸ்ரீ தம்மானந்த தேரர், அடுத்தவர் இந்தியாவிலிருந்து வந்திருந்த அப் பிரிவெனவின் சமஸ்கிருத ஆசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்.

வித்யாலங்கார பிரிவெனாவில் வெளிநாட்டு அறிஞர்களின் சேவைகளை சரியான முறையில் பயன்படுத்தியதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவில் இருந்து சமஸ்கிருதம் கற்பிக்க வந்த அறிஞர் ராகுல சாங்கிருத்யாயனாரே சிறந்த உதாரணம். அவர் 1927 ஆம் ஆண்டு பிரிவெனாவில் சேர்ந்தார். வித்யாலங்கார பிரிவெனாவில் மூன்று வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் வித்யாலங்கார பிரிவெனாவின் பௌத்த துறவிகள் மத்தியில் இருந்து எழுந்த “அதிருப்தி அறிவுசார் இயக்கம்” (විසම්මුතික බුද්ධි ව්‍යාපාරය) தொடங்கிய காலமும் அதுதான். சாங்கிருத்யாயன் சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல, மேற்கத்திய தத்துவமும். பண்டைய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு செயல்பாட்டாளராகவும் இருந்த ஒரு அறிவுஜீவி. வித்யாலங்கார பிரிவெனாவில் பாலி மொழி மற்றும் பௌத்த தத்துவத்தை மேலும் கற்று, சமஸ்கிருத மொழி மட்டுமன்றி மேலதிகமாக வித்யாலங்கார பிரிவெனா வகுப்புகளின் இளம் துறவிகளுக்கு ஐரோப்பிய தத்துவம், பாரம்பரிய இந்திய தத்துவம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாக நாரவில தம்மரதன தேரர் குறிப்பிடுகிறார்.” 

இலங்கையில் வித்தியாலங்கார பல்கலைக்கழகம் பேராசிரியராக வைத்துக் கொண்டது, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகம் பௌத்த அறிஞராக (Scholar) அவரை அழைத்து அவரின் அறிவைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் அவரின் பட்டத்தை முறையான பட்டமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எந்தப் பல்கலைக் கழகமும் கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதிவரை அவரை எந்த இந்தியப் பல்கலைக்கழகமும் உரிய கௌரவித்தை அவருக்கு கொடுக்கவுமில்லை. அவர் காலமானதன் பின் அதே ஆண்டு அவருக்கு இந்திய உயர் விருதான பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது.

ஊர் சுற்றியின் யாத்திரைகள்

பயணங்கள் தருவது போன்ற அனுபவங்களையும் படிப்பினைகளையும் உலகில் வேறெதுவும் தந்துவிடாது என்பது வரலாற்று உண்மை. ராகுலும் ஒரு நாடோடியைப் போல ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். சாதாரண பயணம் அல்ல. தன் வாழ்நாளில் 50 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். அவரின் பயண அனுபவங்களைப் பற்றி அவரே தனியாக எழுதிய “ஊர்சுற்றிப் புராணம்” என்கிற நூல் அனைவரும் வாசித்து இன்புற வேண்டிய நூல். இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என்று இன்றும் அழைக்கப்படுபவர் ராகுல்.

அவர் எழுதிய பயணக் கட்டுரை தொகுப்பு நூல்களில் ஊர்சுற்றிப் புராணம் மட்டுமே தமிழில் வெளிவந்திருக்கிறது என்பதையும் இங்கே கூறியாக வேண்டும். இதை விட கின்னர் தேஷ் (Kinnar Desh) என்கிற நூலை எழுதினார். அது ஹிமாலய பகுதிகளுக்கு பயணம் செய்து அவர் கண்டெடுத்த தொல்லியல் ஆதாரங்களையும், அனுபவங்களையும் வைத்து எழுதப்பட்ட நூல். அதை விட அவர் திபெத் பயணம் செய்து அதுபோன்றே பலவற்றை கண்டு பிடித்த அனுபவங்களை திபெத் யாத்ரா (Tibbati Yatra) என்கிற நூலை எழுதினார். சோவியத் யூனியன் பயணம் பற்றிய அனுபவத்தை (Soviyat Bhumi) என்கிற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இரண்டு தொகுதிகளும் சேர்ந்தே சுமார் 1200 பக்கங்கைக் கொண்டது. இதை விட அவர் "ராகுல் யாத்ராவளி” (Rahul Yatravali) என்கிற இரண்டு பெரிய தொகுதிகளைக் கொண்ட நூலை வெளியிட்டார். இது 1949 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நூலின் முதலாம் பாகம் இந்திய உபகண்டத்தில் அவர் பயணித்த இடங்களைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளை எழுதியுள்ளார். 425 பக்கங்களைக் கொண்ட அந்நூலில் பல அத்தியாயங்களும் அவற்றுக்குள் பல உட் தலைப்புகளையும் கொண்டிருக்கிறது. இந்த நூலில் இரண்டாவது அத்தியாயத்தில் அவர் அதற்கு முன்னர் எழுதிய “லங்கா” நூலின் உள்ளடக்கத்தை அப்படியே உள்ளடக்கியிருக்கிறார்.

ராகுல் யாத்த்ராவளி நூலின் இரண்டாம் பாகத்தில் பயணவியல் தொடர்பான தத்துவக் கட்டுரைகளின் தொகுப்பாகும். 


இதுவரை வெளிவராத “லங்கா” நூல்

“லங்கா” நூலை அவர் இலங்கைக்கு முதல் தடவை வந்த அதே ஆண்டிலேயே வெளியிட்டார் என்பதையும் கவனிக்குக. இலங்கையில் அவர் பெற்ற அனுபவங்களை விபரித்து “லங்கா” (लंका) நூலை அவர் எழுதி முடித்தார். இக்கட்டுரைக்காக அந்த நூலை தேடிக்கண்டுபிடிக்க முடிந்தது. 1935 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஹிந்தி எழுத்துக்களில் சமஸ்கிருத மொழியில் 240 பக்கங்களைக் கொண்டது. அதில் உள்ள பக்கங்களை தோராயமாக மொழிபெயர்த்து அதன் உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள முடிந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை கொழும்பு இடங்களைப் பற்றிய விபரிப்புகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பல புகைப்படங்களையும் உள்ளடக்கிய அந்த நூல் இதுவரை தமிழ், சிங்கள அல்லது வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை என்பதையும், இலங்கை எழுத்துலகில் அதைப் பற்றி எங்கும் அறியப்படவில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. 1950 இலிருந்து வெளியான அவரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்கிற தலைப்பில் வெளியான 6 தொகுப்புகளில் முதலாவதில் “லங்கா” உள்ளடக்கப்பட்டிருக்கிறது. 

உலகப் பிரசித்தி பெற்ற நூலாக பிற்காலத்தில் ஆன “ஊர்சுற்றிப் புராணம்” போன்ற பயண அனுபவ நூலை எழுதிய அவர்; இலங்கையில் அவர் வாழ்ந்த சொற்ப காலத்துக்குள் அவர் பயணித்த இடங்களையும் அவற்றின் பின்னணி, வரலாறு மக்களின் வாழ்வியல் என்பவற்றையும் அழகாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பின்வரும் ஏழு தலையங்களில் அவர் அதனை எழுதியுள்ளார்.

1. அனுராதபுரம் : இலங்கையின் தலைநகரம்

2. பொலன்னறுவை அலது புலஸ்தியபூர் (புலஸ்திகம)

3. கண்டி

4. கொழும்பு சுற்றுப் பயணங்கள்

5. இலங்கை மக்களும், பௌத்த துறவிகளும்

6. இலங்கையில் இந்துக்கள்

7. Adam’s peak (சிவனொளிபாதமலை)

பண்டைய இலங்கை நாகரிகம், பௌத்த மரபு, காலனித்துவம், மக்களின் வாழ்வியல், தென்னிந்தியத் தொழிலாளர்கள், அன்றைய அரசியல் சூழல் என பலவற்றை அவர் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்துக்கு ஏராளமான படைப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பது உண்மை. இந்தி என்பதாலோ என்னவோ இது வரை “லங்கா” கண்டுகொள்ளப்படவில்லையோ தெரியவில்லை.. அது மட்டுமன்றி ராகுல் பற்றி சிங்களத்தில் இதுவரை ஒரு சிறிய கட்டுரையைக் கூட என்னால் இனங்காண முடியவில்லை. இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர்களை விட சிங்கள பௌத்தர்களால் கொண்டாடப்படவேண்டியவர் ராகுல். வால்காவிலிருந்து கங்கை வரை நூல் மாத்திரம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. 

“சிங்கள வீர புருஷர்கள்”

இதை விட “சிங்கள வீர புருஷர்கள்” என்கிற இன்னொரு இந்தி மொழி நூலையும் அவர் எழுதியிருப்பதை அறிய முடிகிறது. “சிம்ஹல் கே வீர் புருஷ்” (सिंहल के वीर Simhal ke Vir Purush) என்கிற அந்த நூலின் பிரதியை தேடி எடுக்க முடியவில்லை; ஆயினும் அந்நூல் இந்தி மொழியில் இன்றும் ஒன்லைனில் விற்பனைக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது. இந்த நூலில் பிரதானமாக

  1. துட்டகைமுனு மன்னன்: இலங்கையை ஒருங்கிணைத்து சோழர்களின் படையெடுப்பை முறியடித்தவர். 
  2. முதலாம் பராக்கிரமபாகு: சிங்களப் பேரரசை விரிவுபடுத்தி பொற்காலத்தை நிறுவிய சக்திவாய்ந்த அரசன்.
  3. விஜயபாகு I: போர்த்துக்கேயர்களுக்கு எதிரான சிங்கள எதிர்ப்பை வழிநடத்தியவர்

போன்ற விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1961 என்பதால் இந்த காலத்தில் தான் அவர் இலங்கையில் பேராசிரியராக பணியாற்றிய காலம் என்பதையும் கருத்திற் கொண்டால் இந்த நூல் இலங்கையில் இருந்து போது எழுதபட்டிருப்பதை நம்மால் அனுமானிக்கலாம்.

பன்முக ஆய்வாளர்

வர்னாசிரமதர்ம எதிர்ப்பு, வர்க்க விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, பிற்காலத்தில் பொதுவுடைமை கொள்கையில் தீவிரம், அம்பேத்காருக்கு ஆதரவு, இட ஒதுக்கீட்டு விடயத்தில் காந்தியின் மீது கடுப்பு, பாகிஸ்தான் பிரிவினை தொடர்பில் “அம்மக்களின் கருத்துக்கே முன்னுரிமை” போன்ற அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இன்றும் வியக்கவைப்பவை.

தனது பத்து வயதிலேயே காசியை விட்டுக் கிளம்பும் ராகுல சாங்கிருத்தியாயன் அதிலிருந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் பெரும் பயணங்களில் தனது வாழ்வைக் கழித்தார். அவரின் காலத்தில் அவரளவு பயணங்களை மேற்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. அதுவும் அந்தப் பயணங்கள் அவரை புடம்போட்ட விதத்தை அவரின் எழுத்துக்களில் வாயிலாக அறியமுடியும். தத்துவம், இலக்கியம், வரலாறு, தொல்லியல், ஆன்மிகம், அரசியல் விஞ்ஞானம், மெய்யியல் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் அவரது எழுத்துக்கள் விரிந்திரிப்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். அவர் எழுதி பதிப்பிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியலே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளை அவரின் வெளிவராத எழுத்துக்கள் இன்னும் எத்தனையோ உண்டு. அவர் இந்தி, சமஸ்கிருதம், பாளி, ஆங்கிலம் என இன்னும் பல மொழிகளை கற்றிருந்தாலும், அவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் இந்தி மொழியிலேயே வெளிவந்திருக்கிறது. அவற்றில் பல நூல்கள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில நூல்கள் இந்தி எழுத்துக்களின் மூலம் சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார். 

இலங்கையில் இருந்து அவர் பௌத்தராக திரும்பியதன் பின்னர் அவர் முக்கிய ஆறு பௌத்த நூல்களை முதன்முதலாக இந்தி மொழியில் எழுதி வெளியிட்டார்.

1. Buddha-Charya (பௌத்த சரியா) 1930

2. Dhammapada (தம்மபதம்) 1933

3. Majjhima-Nikaya (மஜ்ஜிம நிக்காய) 1933

4. Vinaya Pitaka (வினய பீடகம்) 1934

5. Dirgha Nikaya (தீர்க நிக்காய) 1935

6. Tibbat mein Bauddha Dharma (திபெத்தில் பௌத்தம்) 1935 

7. Bauddha Sanskriti (பௌத்த கலாசாரம்) 1952

இப்பட்டியலில் மஜ்ஜிம நிக்காய உள்ளிட்ட நூல்கள் பிரகிருதி மொழியில் இருந்து ராகுலால் இந்தி மொழியில் கொண்டு வரப்பட்டவை என்பதை கவனிக்குக.

அநகாரிக தர்மபாலவால் தொடங்கப்பட்ட “The Maha – Bodhi” சஞ்சிகையில் 1936 ஆம் ஆண்டு இதழ்களில் ராகுல சாங்கிருத்தியாயன் பற்றிய விபரங்களைக் காண முடிகிறது. அவரை “Tiripitakachariya Bhikshu Sri Rahula Sankrityayana” என்றே அவ்விதழ் விளிப்பதைக் காண முடிகிறது. காஷ்மீர் ஸ்ரீநகரில் அவர் செய்த பௌத்த உரைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதில் மெச்சுகிறது. 

இன்னோர் இடத்தில் “வஜ்ஜிரயான” அறிமுகப்படுத்தப்பட்டதனாலேயே இந்தியாவிலிருந்து பௌத்தம் இல்லாமல் போனமைக்கான காரணம்” என ராகுல விபரித்திருப்பதை குறிப்பிடுகிறது.

பிக்கு ஜகதிஷ் காஷ்யப (Bhikkhu Jagadish Kasyapa, M.A.) என்பவர் எழுதிய கட்டுரையொன்றில்

“நம் ஹிந்தி இலக்கியம் இத்துறையில் கிட்டத்தட்ட வெறுமையாகவே ஆகி விட்டமை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ராகுல சாங்கிரித்யாயன் அவர்களின் கடினமான உழைப்பின் விளைவாக  தீக நிக்காய, மஜ்ஜிமா நிக்காய, புத்தச்சரிய, வினய பீடகம் போன்ற பல மதிப்புமிக்க புத்தகங்கள் எங்களிடம் இப்போது உள்ளன. அவர் தம்மத்துக்கும் இந்தி இலக்கியத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளார்.” என்கிறார்  

(தீக நிக்காய என்பது திரிபீடகத்தின் ஒரு பகுதியாகும். 34 சூத்திரங்களைக் கொண்ட அந்த நூல் புத்தரின் சமகாலத்து தத்துவ ஞானிகளின் கருத்துகளை உள்ளடக்கியதாகும் )

அதே 1936 டிசம்பரில் வெளியான இதழில் திபெத்துக்கு போகும் வழியில் (On way to Tibet) என்கிற ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எழுதியிருப்பதைக் காண முடிகிறது. அக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே “நேபாளில் இருந்த இரண்டு மாதங்களில் “தீக நிக்காய” நூலின் எழுத்து சரிபார்ப்பை நிறைவு செய்துவிட்டேன். அதில் தவரவிடப்பட்டிருந்த மூன்று அத்தியாயங்களும் இப்போது அதில் சேர்க்கப்பட்டுவிட்டது.” என்கிறார். மொத்தம் பத்து பக்கங்களைக் கொண்ட அந்த பயண அனுபவக் கட்டுரையின் இறுதியில் “தொடரும்...” என்று காணப்படுகிறது. மீண்டும் அடுத்த இதழில் 16 பக்கங்களில் அந்தக் கட்டுரையின் அடுத்த பாகம் வெளிவந்திருக்கிறது.

ஒரு மாக்ஸியவாதியாக

பிற்காலத்தில் அவர் மாக்ஸிய இலக்கியங்களைக் கற்று ஒரு மாக்சியவாதியாக ஆனார். இந்திய பல்கலைக்கழகங்கள் அவரைக் கண்டுகொள்ளாத காலத்தில் அவரின் புலமையைக் கண்டு லெனின்கிராட் பல்கலைக்கழகம் இரு தடவைகள் அவரை பணியாற்ற அழைத்தது.


பவுத்தப் பயிற்சி அவரை இயல்பாகவே மார்க்சியத்தின்பால் அவரை கொண்டு செலுத்திற்று. 1935 ஆம் ஆண்டு சோவியத் தேசம் சென்றார். அங்கே தத்துவஞானப் பயிற்சியும் விடுதலை வேட்கையும், மாக்ஸிய அமைப்புக்களோடு கொண்ட தொடர்பும், இடை விடாத போராட்டமும்; விஞ்ஞான சோஷலிசமே மனித சமூகத்தைக் கடைத்தேற்ற உறுதியான வழி எனக்காணத் துணை செய்தன. எனவே கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினரானார். 

ராகுல் தனது தொடர்ச்சியான சமூக விஞ்ஞானத் தேடல்களுக்கு ஊடாக மாக்ஸிய சிந்தனையால் கவரப்பட்டார். மாக்சியவாதியாகவே ஆனார். பீகார் சோசலிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தராக அவர் இருந்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆரசு இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தபோது அதை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி சிறை வாழ்க்கை அனுபவித்தார். அதன்பின்னர் அவர் பௌத்தத்தை மாக்சியத்துக்கூடாக எப்படி அணுகவேண்டும் என்று “மாக்சிய அணுகுமுறையில் பௌத்தம்” (Buddhism: The Marxist Approach) என்கிற நூலை எழுதினார். அதை விட மேலே குறிப்பட்ட “சோவியத் தேசம்” என்கிற பெரு நூலும் முக்கியமானது. மேலும் அவர் ஸ்டாலின் (1954), லெனின் (1954), கார்ல் மார்க்ஸ் (1954) மாஓ சேதுங் (1954) ஆகிய மாக்சிய தலைவர்களைப் பற்றிய சுயசரிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் மாக்சிய பாத்திரம் குறித்து பல கட்டுரைகளும் ஆய்வுகளும் உள்ளன. அந்த வரிசையில் “Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue” என்கிற கட்டுரை குறிப்பிடத்தக்கது..

இலங்கையில் இருந்த காலமே அவரின் உடல்நிலை குன்றிப் போன காலமாக அமைந்தது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என ஒன்றன்பின் ஒன்றாக வந்து இறுதியில் அவர் நினைவாற்றலையும் இழந்தார். ஏழு மாதங்கள் சோவியத் யூனியனில் சிகிச்சை பெற்று 1963 ஏப்ரல் 9 ஆண்டு நாடு திரும்பினார். இந்தியா திரும்பி ஐந்து நாட்களில் ஏப்ரல் 14 அன்று அவர் டார்ஜிலிங்கில் காலமானார். இறுதி இரண்டாண்டுகள் அவர் நினைவாற்றலை இழந்தே இருந்தார்.  

ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய சுமார் பதினைந்து நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம். குறைந்தபட்சம் அவர் இலங்கை பற்றியும், பௌத்தம் பற்றியும் எழுதிய எஞ்சிய நூல்களாயினும் முதலில் தமிழ் மொழியில் வெளிக்கொணர முடியுமாயின் தமிழ் ஆய்வுலகுக்கு இன்னும் பேருதவியாக அமையும்.

மேலதிக உசாத்துணை

  • Prabhkar Machwe, Rahul Sankrityayan, Sahitya Akademi, 1978
  • Johannesbeltz, Mahar, Buddhist And Dalit, Religious Conversion and Social-Political Emancipation in Contemporary Maharashtra, Manohar Publishers, 2005
  • Alaka Atreya Chudal – “Rahul Sankrityayan and the Buddhism of Nepal” - European Bulletin of Himalayan Research 46: 62-87 (2015)
  • The Buddhist Vol – VI-VII, Krishta Kunj, 1937
  • பிரபாகர் மாச்வே- இந்திய இலக்கிய சிற்பிகள் ராகுல் சாங்கிருத்யாயன் – ராகுல் சாங்கிருத்தியாயன் – 1986
  • Rahul Sankrityayan – “Lanka” – Sahitya sevak sangam, 1935
  • கலாநிதி கஹாவத்தே சிறி சுமேத ஹிமி – “புராதன இந்தியாவின் முதல் பௌத்த விகாரை” – திவயின (01-10.2014)
  • Ven. Dr. Khammai Dhammasami, "The Twentieth century: Early Efforts" - Rahula Sankritayan: The Buddhist-Marxist Dialogue, (Teaching Dhammain New Lands), Academic Papers presented at the 2nd IABU Conference Mahachulalongkornrajavidyalaya University, Main Campus Wang Noi, Ayutthaya, Thailand, 2012
  • මහාචාර්ය ජයන්ත අමරසිංහ, “සොමිබර පවර නිසයුර නුවණ සුරගුර ලුණුපොකුණේ ශ්‍රී ධර්මානන්ද නා හිමියෝ”, සිළුමිණ, 27.01.2024
  • Anoop Tiwari, Rahul Sankrityayan – The Forgotten Musafir of India, https://medium.com/
  • https://medium.com/@anoop_tiwari/rahul-sankrityayan-the-forgotten-genius-10768ae7a8e3
  • Maya Joshi, Rahul Sankrityayan's Journeys of the Self, Studies in Humanities and Social Sciences, 2009, Indian Institute of Advanced Study Rashtrapati Nivas, Shimla.
  • ලුණුපොකුණේ ශ්‍රී ධර්මානන්ද නා හිමි (1869-1945) - ආචාර්ය උදය මල්ලවාරච්චි (இக்கட்டுரை வெளிவந்த நூல் எது என்பதை அறிய முடியவில்லை.)
  • ஜனவரி 08, 2020 அன்று களனிப் பல்கலைக்கழகத்தின் 60வது ஆண்டு விரிவுரைத் தொடரின் 1வது விரிவுரையாக வரலாற்றுப் பிரிவில் ஆற்றிய உரையின் திருத்தப்பட்ட வடிவமே இந்தக் கட்டுரை. இதை சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) பின்னர் நூலாக வெளியிட்டது.
  • The Maha-Bodhi - Vol 44, December, 1936
  • ஆர்.பார்த்தசாரதி, ராகுல சாங்கிருத்தியாயன் (ராகுல்ஜி) வாழ்க்கைக் குறிப்பு, சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 

பிற்குறிப்பு:

இன்னொரு சுவாரஷ்யமான தகவலையும் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழிலோ ஆங்கிலத்திலோ கூட அத்தகவல் இல்லை. ராமர் கோவில் பற்றிய உரையாடல்கள் நிகழும் இந்த நேரத்தில் இதைப் பகிர்வது பயனுள்ளது.

கரப்பாத்ரி என்கிற ஒரு இந்து வெறியர் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” என்கிற ஒரு நூலை வெளியிட்டதாகவும் அதை எதிர்த்து ராகுல்ஜியும் “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூலை எழுதியதாக ஆர்.பார்த்தசாரதியின் “ராகுல சாங்கிருத்தியாயன் வாழ்க்கைக் குறிப்பு” என்கிற நூலில் காணக் கிடைத்தது.

இதைப் பற்றி அறிவதற்காக தேடினால் முதலில் கரப்பாத்ரி என்பதை ஆங்கிலத்தில் எப்படி எழுதித் தேடுவது. எப்படி எல்லாமோ தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலை ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன். “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” அப்படி ஆங்கிலத்தில் தேடித் பார்த்தேன் எதுவும் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் இதனை மொழிபெயர்ப்பு உதவியுடன் இந்தியில் அச்சொற்களை எடுத்து தேடினேன். இதோ கிடைத்துவிட்டது. அந்த இரு இந்தி மொழி நூல்களையும் pdf இல் தரவிறக்கிக் கொண்டேன். (Ramrajya Aur Marksvad (रामराज्य और मार्क्सवाद), Marxvad Aur Ramarajya (रामराज्य और मार्क्सवाद)).

இதற்காகத் தான் எனது நூல்களில் நபர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றை நிச்சயமாக ஆங்கிலத்திலும் அடைப்புக் குறிக்குள் இட்டு விடுவேன். அடுத்த கட்ட ஆய்வாளர்களுக்கும் தேட விரும்புபவர்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.

பின்னர் கரப்பாத்ரி என்பவரின் பெயரை ஆங்கிலத்தில் Karpatri என்று அறிந்து கொண்டேன். அவரைப் பற்றித் தேடினால் அவரை சுவாமி கர்பாத்ரி என்று அழைப்பதை கண்டுகொள்ள முடிந்தது. மிகத் வெறித்தனமான இராம பக்தர். இந்து மத சாஸ்திரங்கள் சார்பாக பல சமய கண்டன விவாதங்களை நடத்தியவர். ஆனால் சுமார் 900 பக்கங்களைக் கொண்ட அவரின் “மார்க்சியமும் ராமராஜ்யமும்” நூலில் அது வெளிவந்த ஆண்டு இருக்கவில்லை. அதேவேளை சாங்கிருத்தியாயன் அதற்கு வினையாற்றி கண்டன விவாதமாக கொண்டுவந்த “ராமராஜ்ஜியமும் மாக்சியமும்” என்கிற நூல் 1959 இல் வெளிவந்திருக்கிறது. எனவே தீவிர தேடலின் பின் கரப்பாத்ரியின் நூல் 1956இல் வெளிவந்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.

ராம ராஜ்ஜியம் குறித்த கருத்தாக்கத்துக்கு எதிராக அதுவும் முக்கிய இந்துத் தலைவரின் நூலுக்கு எதிராக 70 ஆண்டுகளுக்கு முன்னரே ராகுல்ஜி எழுதியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சுமார் 100 பக்கங்களுக்குள் அடங்கிய இந்த நூல் தமிழில் வெளிவரவில்லையே என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.


ராகுல் சாங்கிருத்யாயன் படைப்புகள்

இலக்கியம் - இந்தி

நாவல்கள்

1. பய்ஸ்வின் சாதி 1923?

2. ஜினெ கே லியே 1940

3. சிம்ஹ சேனாபதி 1944

4. ஜெய் யவ்தேயா 1944

5. பாகோ நஹீன், துனியா கோ பாத் லோ 1944

6. மதுர் ஸ்வப்ன 1949

7. ராஜஸ்தானி ராணிவாஸ் 1953

8. விஸ்ம்ரித் யாத்ரி 1954

9. திவா தாஸ் 1960


சிறுகதைகள்

10. சாத்மி கே பச்சே 1935

11. வால்கா ஸே கங்கா 1944

12. பகுரங்கி மதுபுரி 1953

13. கனெய்லா கி கதா 1955-56


சுயசரிதை

14. மேரி ஜீவன் யாத்ரா (5 பாகங்கள்) I-1944, II-1950 (3 பாகங்கள் அவரது மரணத்திற்குப்பின் பிரசுரமாயின.)

வாழ்க்கை வரலாறு

15. சர்தார் பிருத்வி சிங் 1955

16. நயே பாரத் கே நயா நேதா 1942 (2 பாகங்கள்)

17. பச்பன் கி ஸ்மிரிதியான் 1953

18. அதித் ஸே வர்த்தமான் (முதல் பாகம்) 1953

19. ஸ்டாலின் 1954

20. லெனின் 1954

21. கார்ல் மார்க்ஸ் 1954

22. மா – சே-துங்  1954

23. கூமாக்கார் சஸ்வாமி1956

24. மேரா ஆஷாயோக் கே ஸாதி 1956

25. ஜின்கா மேய்ன் கிரிதாஜ்னா 1956

26. வீர் சந்திரசிங் கார்வாலி 1956

27. சிங்கள கூமாக்கார் ஜெய்வர்தன் 1960

28. கப்தான் லால் 1961

29. சிங்கள கே வீர் புருஷ் 1961

30. மகா மானவ் புத்த 1956


பயணநூல்

31. மேரி லடாக் யாத்ரா 1926

32. லங்கா 1926-27

33. மேரி யுரோப் யாத்ரா 1932

34. மேரி திபெத் யாத்ரா 1937

35. யாத்ரா கே பன்னே 1934-36

36. ஜப்பான் 1935

37. ஈரான் 1935-36

38. ரூஸ் மே பச்சீஸ் மாஸ் 1944-47

39. கின்னர் தேஷ் 1948

40. திபெத் மே ஸவா வர்ஷ் 1931

41. கூமாக்கார் சாஸ்த்ரா 1949

42. ஆசியா கே துர்காம் பூ-கந்தோன் மே 1956

43. சீன் மே க்யா தேக்கா? 1960


கட்டுரைகள்

44. சாகித்ய நிபந்தாவளி 1949

45. புரதத்வ நிபந்தாவளி 1986

46. திமாகி குலாமி 1937

47. துமாரி க்ஷாயா 1937

48. ஆஜ் கி சமஸ்யாயன் 1944

49. சாம்யவாத் ஹாய் க்யோன்? 1934

50. அதித் ஸே வர்த்தமான் (2-ம் பாகம்) 1953


போஜ்புரி

51. தீன் நாடக் 1942

52. பாஞ்ச் நாடக் 1942


திபெத் மொழி

53. திபெத்தி பால் சிக்ஷா 1933

54. பதாவளி (1,2,3 பாகங்கள்) 1933

55. திபெத்தி வியாகரண் 1933


இதர நூல்கள் இந்தி

அறிவியல்

1. விஸ்வ கி ரூப்ரேகா 1942


சமூகவியல்

2. மானவ் சமாஜ் 1942


அரசியல்

3.சோவியத் நியாய1939

4. ராகுல்ஜி கா அப்ராத் 1939

5. ஆஜ் கி ராஜ்நீதி 1949

6. கம்யூனிஸ்ட் க்யா சாஹ்தே ஹைன்? 1953

7. க்யா கரேன்? 1937

8. சீன் மே கம்யூன் 1960

9. சோவியத் கம்யூனிஸ்ட் பார்டி கா இதிஹாஸ் 1939

10. ராம்ராஜ்யா அவுர் மார்க்ஸ்வாத்


தத்துவம்

11. வைஞ்னானிக் பௌதிக்வாத் 1942

12. தர்சன் - திக்தர்சன் 1942

13. பௌத்த தர்சன் 1942


சமயம்

14. புத்த சரியா 1930

15. தம்மபத 1933

16. மாஜ்ஹிம—நிகாய 1933

17. விநய பீடக 1934

18. தீர்க நிகாய 1935

19, திபெத் மே பௌத்த தர்ம 1935

20. பௌத்த சன்ஸ்கிருதி

21. இஸ்லாம் தர்ம கி ரூப்ரேகா 1923


பயண நூல்

22. சோவியத் பூமி

23. சோவியத் மத்ய ஆசியா

24. டார்ஜீலிங் பரிச்சய 1950

25. குமாயுன் 1951

26. கார்காவால் 1952

27. ஜாவ்ன்சார் -டேராதுன் 1955

28. ஆஜாம்கார் கி புராகதா

29. இமாசல் பிரதேஷ் 1954 (பிரசுரமாகவில்லை)

30. நேபாள் 1953


அகராதி மற்றும் லெக்சிகள்

31. ஷாஸன்-ஷப்த- கோஷ் 1948

32. திபெத்தி-இந்தி கோஷ் (முதல் பாகம்) 1974


இலக்கிய வரலாறு

33. இந்தி காவ்யதாரா (அப்பிரம்ஷா) 1944

34. தாக்கினி காவ்யதாரா 1952


நாட்டார் பாடல்

35. ஆதி இந்தி கி கஹானியா அவுர் கீதன் 1950


ஆய்வு

36. சாராஹ்பாத் கிரித் தோகா கோஷ் 1954


வரலாறு

37. மத்ய ஆசியா கா இதிகாச (1,2 பாகங்கள்) 1952

38. ரிக்வேதிக் ஆரிய 1956

39.அக்பர்

40. பாரத் மே ஆங்ரேஸி ராஜ்ய கா ஸன்ஸ்தாபக் 1957

41. பாலி சாகித்ய கா இதிகாஸ்


தொகுப்பு

42. துளசி ராமாயண் சங்க்ஷேப் (தொகுத்தது) 1957

43. சூத்ர கிரிதங்கா (பதிப்பித்தது) சம்ஸ்கிருதம்

44. சம்ஸ்கிருத காவ்யதாரா 1955 சம்ஸ்கிருதம்

45. பாலி காவ்யதாரா (வெளிவரவில்லை) பாலி


மொழிபெயர்ப்பு

46. சைத்தான் கி அங்க் 1923

47. விஸ்மிரிதி கி கர்ப் மே 1923

48. ஜாடு கா முல்க் 1923

49.சொனே கி தன் 1923

50. தாகுந்தா 1947

51. ஜோ தாஸ்தே 1947

52. அநாத் 1948

53. ஸன்விதான் கா மஸவ்தா 1948

54. ஆதினா  1951

55. சுத்கோர் கி மௌத் 1951

56. ஷாதி 1952


சமஸ்கிருதம் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வு

57. சம்ஸ்கிருத பதமாலா (5 பாகங்கள்) 1928

58. அபிதர்ம கோஷ் 1930

59. விஜ்னாப்திமாத்ரத சித்தி 1934

60. ஹேது பிந்து 1944

61. சம்பந்த பரிக்க்ஷா 1944

62. நிதான – சூத்ர (பரிக்க்ஷா) 1951

63. மகா பரிநிர்வாண சூத்ர 1951

64. வாத-நியாய

65. பிரமாண-வார்திக 1935

66. பிரமாண-வார்திக பாஷ்ய 1935-36

67. பிரமாண-வார்திக விருத்தி 1936

68. பிரமாண-வார்திக ஸ்வவிருத்தி 1936

69. பிரமாண-வார்திக-ஸ்வவிருத்தி-திகா 1937

70. அத்யார்த்த-சாதக 1935

71. விக்ரக வியாவர்த்தினி

72. விநய சூத்ர 1943


மேற்படி நூல்கள் பற்றிய பட்டியல் ஆதாரம்

Prabhakar, Machwe Rahul Sankritiyayan – Sahitya Akademi, New Delhi, 1978

நன்றி - தாய்வீடு

ராகுல சாங்கிருத்தியாயனை பௌத்த பிக்குவாக ஆக்கிய இலங்கை 

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates