Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவத்துக்கு சங்கூதியவர்கள் யார்? - என்.சரவணன்


சுமார் ஒரு மாதகால இழுபறிகளின் பின்னர் மனோ கணேசன் தேசியப் பட்டியலின் மூலம் தெரிவாகிவிட்டார். சென்ற தடவை போல இம்முறையும் நூலிலையில் கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவம் தப்பியிருக்கிறது. அதுவும் இம்முறை தேசியப் பட்டியலின் தயவால். 2001 தொடக்கம் 2024 வரை மனோ கணேசன் சுமார் 18 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார். கொழும்பில் அதிக காலம் தமிழ் அரசியல் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருபவர் மனோகணேசன்.

அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதைப் பற்றி சூரியன் சேனலுக்கு அளித்த நேர்காணலில் “கொழும்பு தமிழ் மக்கள் பாரிய தவறிழைத்துவிட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அவரே குறிப்பிடுவதைப் போல கொழும்பைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம்கள் (தேசியப் பட்டியல் உட்பட) தெரிவாகியிருக்கிறார்கள். கொழும்பின் சனத்தொகையில் முஸ்லிம்களை விட தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழர்கள் தெரிவாகாததன் காரணம் தமிழர்களுக்கான அரசியல் தலைமை இல்லையென்பது தான். முஸ்லிம்களுக்கு குறிப்பான அரசியல் தலைமை கொழும்பில் இல்லாத போதும் அச்சமூகம் தம்மை ஒரு சமூகமாகவும், கூட்டாகவும் உணரச் செய்யும் கூட்டு மனநிலை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

குறைந்தது மூன்று தமிழர் பிரதிநிதிகளாவது தெரிவு செய்யப்பட வேண்டிய கொழும்பில். ஒன்றுக்கே ஊசலாடும் நிலை ஏன் தோன்றியது. கொழும்பு பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியலில் யாசகம் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்ததன் வரலாறு எங்கு தொடங்கி எங்கு வந்தடைந்திருக்கிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2024 பொதுத் தேர்தலில் 225 ஆசனங்களுக்காக 22 மாவட்டங்களிலும் மொத்தம் 8,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பாக 5,564 பெரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 3,257 பெரும் இவ்வாறு போட்டியிட்டிருந்தனர்.

இதில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 27 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன. ஆக தலா 21 வேட்பாளர்கள் வீதம் மொத்த 46 பட்டியலிலும் சேர்த்து மொத்தமாக 966 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதாவது நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 11% வீதமானோர் கொழும்பிலேயே போட்டியிட்டிருக்கின்றனர். இந்த 966 வேட்பாளர்களில் 66 வேட்பாளர்களே தமிழர்கள் என்பதை நம்ப முடிகிறதா? இது மொத்த வேட்பாளர்களில் 6.83% வீதமே. 

இதில் 19 பேர் 19 சுயேட்சைக் குழுக்களில் அடங்குபவர்கள். எஞ்சிய 47 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பாக போட்டியிட்டிருக்கிறார்கள்.

இவற்றில் கொழும்பில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரதான ஐந்து கட்சிகள்; அவர்கள் கொழும்பில் நிறுத்திய தலா 21 வேட்பாளர்களில் தமிழ் வேட்பாளர்கள் எத்தனை பேர் எனப் பார்ப்போம்.

கொழும்பின் 66 தமிழ் வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள். (அதைத் தனித்து இன்னொரு பார்ப்போம்). இன்னும் சொல்லப்போனால் கொழும்பில் மொத்த 966 வேட்பாளர்களில் 13 பேர் (1.35%) மட்டுமே தமிழ்ப் பெண்கள்.

கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்கான தேவை உணரப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் பிரதான கட்சிகள் எவையும் இதன் தேவையை உணர்ந்ததாக இல்லை என்பதை மேற்படி தரவுகளில் இருந்தும் புரிந்து கொள்ளலாம். அதனை உணர்த்துவதற்கான அரசியல் சக்திகள் எதுவும் களத்திலும் இல்லை என்பது தான் அவலம்.

இலங்கையில் இனங்களாக எடுத்துக் கொண்டால், சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய வம்சாவழித் தமிழர் (இந்தியத் தமிழர்) என்கிற அடிப்படியிலேயே பதிவு பெற்ற தேசிய இனங்களாக கருத்திற் கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதில் இந்திய வம்சாவளியினரிலிருந்து, மலையகத் தமிழர்களாக பிரித்துக்கொண்டு விலகிச் செல்கிற ஒரு போக்கை சமீப காலமாக காணமுடிகிறது.

அவ்வாறு நிகழும் போது மேற்படி நான்கு இனங்களுக்குள்ளும் அடங்காத பிரிவினராக ஆக்கப்பட்டவர்கள் தான் மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்கள். இன்னும் சொல்லப்ப்போனால் வடகிழக்கும், மலையகப் பகுதிகளுக்கும் வெளியில் வாழும் லட்சோப (இந்திய வம்சாவழி) மக்கள் தமக்கான அடையாளமிழந்து நிற்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வாழ்வது மேல்மாகாணத்திலேயே.

இறுதியாக குடித்தொகை மதிப்பு எடுக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 11.5% வீதம் மட்டுமே கொழும்பின் தமிழர் சனத்தொகை என்கிறது. இதில் 1.5% வீதம் மட்டுமே இந்தியத் தமிழர் என்றும் ஏனையோர் இலங்கைத் தமிழர் என்றும் குறிப்பிடுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர் பலர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தம்மை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்கிற பழக்கத்தைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளலாம். அதுமட்டுமன்றி சிங்கள சமூகங்களுடன் கலந்துவிட்ட கணிசமான தமிழர் சிங்களவர்களாகக் கூட பதிவு செய்யத் தொடங்கி விட்டார்கள் என்கிற புதுப் போக்கும் அலட்சியப்படுத்துவதற்கில்லை. தற்போதைய கொழும்பின் தமிழர் சனத்தொகை நான்கு லட்சத்தை எட்டலாம் என்று ஊகிக்கலாம்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திற்கும் வெளியில் அதற்கடுத்ததாக தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணம் மேல் மாகாணம். அதிலும் கொழும்பில் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் இந்திய வம்சாவளிப் பின்னணியையுடைய தமிழர்கள்.

கொழும்பைப் பொறுத்தளவில் பெருமளவு இந்திய வம்சாவளி மக்களும், வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து போருக்கு முன்னரும், போர் காலத்திலும் இடம்பெயர்ந்த தமிழர்களும், மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுமாக பெருமளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். கொழும்பு பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்கிற பல தமிழ் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் உள்ள போதும். வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சகல தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு இதுவரை காலம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் இ.தொ.க அதில் சிறிய அளவு பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது என்ற போதும் மலையகத்தில் தொழிற்சங்க அரசியலை செய்து கொண்டே அதற்கு வெளியில் இன்னொரு அரசியலையும் முன்னெடுப்பதில் வெற்றியடையவில்லை. ஆனால் வடக்கு கிழக்குக்கு வெளியில் அந்தந்த தளங்களில் அரசியலை மேற்கொண்டு வந்த சக்திகள் ஓரணி திரண்டு அப்படியான ஒரு தேவையை இனங்கண்டு அதனை ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கான கூட்டணியை நிறுவின. அதன் விளைவே தமிழ் முற்போக்கு கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியைத் தோற்றுவித்தன. பெரும்பாலும் இந்திய வம்சாவளி பின்னணியைக் கொண்டவர்களை இலக்காகக்கொண்ட கூட்டணியாக இருந்தும் "இந்திய" அல்லது "மலையகம்" போன்ற பதங்களைக் கட்சிப் பெயரில் இணைத்துக்கொள்ளாததன் காரணம் பரந்துபட்ட அனைவரையும் இணைக்கும் நோக்கில் தான்.


மனோ கணேசன்

கொழும்பு பிரதிநிதித்துவத்துக்கான தேவை குறித்த விழிப்புணர்வும் 2000 வரை இருக்கவில்லை. இப் பிரச்சினையைச் சரியாக இனங்கண்டு அதனை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுக்க எவருமற்ற சூழலில் தான் மனோகணேசனின் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவரை தமிழர்களின் வாக்கு வங்கி மோசமாகச் சிதறியே இருந்தது. பெரும்பான்மை கட்சிகளே அவர்களுக்கு இருந்த தெரிவாக இருந்தது. இ.தொ.க இந்த நிலைமையை சற்று மாற்றியிருந்தது. கண்டியைச் சேர்ந்த மனோகணேசன் கொழும்பு சூழலுக்கு புதியவரல்லர். மேல் மாகாணத்துக்கான தமிழர் அரசியல் விவகாரத்தை ஒரு கருத்தாக்கமாக விளங்கிக்கொண்டு அதற்கான இயக்கமொன்றின் தேவை குறித்தும் மனோகணேசனின் தரப்பு கருதியது.

இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் மேல்மாகாண மக்கள் முன்னணி தொடக்கப்பட்டது. பின்னர் அது மேலக மக்கள் முன்னணியாக மாறியது. அதுவே அதற்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியாகி இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியோடு ஐக்கியமாகியிருக்கிறது. ஈற்றில் அக்கூட்டணி ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு சேர்ந்ததில் எந்த மேல்மாகாண தமிழர்களுக்கான அரசியல் இயக்கமாக ஆரம்பித்தாரோ அது கலந்து கரைந்து காணாமல் போய்விட்டது என்று கூறினால் அது மிகையல்ல.

மனோ கணேசன் 2001 இல் 54,942 விருப்பு வாக்குகளைப் பெற்று முதற் தடவை பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார். 2004ஆம் ஆண்டு தேர்தலிலும் 51,508களைப் பெற்று வெற்றிபெற்றார். அதே தேர்தலில் ஐ.தே.க சார்பில் தியாகராஜா மகேஸ்வரனும் கொழும்பில் போட்டியிட்டு வெற்றியடைந்திருந்தார். 2010 தேர்தலில் மனோகணேசன் கொழும்பு மாவட்டத்தை விட்டு கண்டியில் போட்டியிட்டு 28,033 வாக்குகளை மட்டுமே பெற்று அங்கே தோல்வியடைந்தார். 

தேசியப்பட்டியலின் மூலம் ஐ.தே.க. பாராளுமன்றத்துக்கு அனுப்பும் என்கிற எதிர்பார்ப்பும் அப்போது கைகூடவில்லை. இந்த மூன்று தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான "ஐக்கிய தேசிய முன்னணி (UNF-United National Front)"யிலேயே அவர் போட்டியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத இக்காலகட்டத்தில் 2011 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மனோ கணேசனின் தலைமையில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு 28,433 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே கட்சியின் சார்பில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற போதும் 28,558 வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டு சுமார் 69,064 வாக்குகள் பெற்று மீண்டும் பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றினார் மனோ கணேசன். இதுதான் இலங்கை வரலாற்றில் ஒரு தமிழ் வேட்பாளர் கொழும்பு மாவட்டத்தில் பெற்ற அதிகூடிய வாக்குகள். அதற்கான அரசியல் முனைப்பும், கட்சியின் திட்டமிட்ட பணிகளும் நிச்சயம் காரணமாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணங்களில் ஒன்று புதிய நல்லாட்சிக் கூட்டணியின் உருவாக்கமும் தான். இன்றைய தேசிய மக்கள் சக்தி அலைக்கு சற்று நிகரான அலை போல மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக எழுந்த அலையும் ந.ஐ.தே.மு.வின் வாக்குகளை அதிகரிக்கச் செய்திருந்ததையும் கணக்கில் எடுத்தல் அவசியம்.

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக போட்டியிட்டு 62,091 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது நடந்துமுடிந்த 2024 தேர்தலில் வெறும் 19,013 வாக்குகளை மட்டுமே பெற்று கொழும்பு மாவட்டத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் அவர் இதுவரை பெற்ற வாக்குகளிலேயே குறைந்த வாக்குகள் இதுவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பதவி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கக்கூடாது என்று பரவலான எதிர்ப்புகள் இருந்த நிலையில்; இறுதியில் அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார்.

இப்போதுள்ள கேள்வி அவர் யாரால் கைவிடப்பட்டார் என்பது தான். ஏன், எதற்காக படுதோல்வியடைந்தார். 

அகலக் கால் வைப்பு, தன் சொந்த மக்களுடன் அவர் இல்லாதது, ஊடக, சமூக வலைத்தள சுய ஊதிப்பெருப்பில் காட்டிய அக்கறையை அவரால் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கான அடித்தளத்தைப் பலப்படுத்துவதில் கிஞ்சித்தும் பணிபுரியவில்லை. நிவாரண அரசியலில் காட்டிய அக்கறை நிரந்தர அரசியலுக்கான கொள்கைவகுப்பை செய்வதிலோ, அதற்கான மக்கள் திரட்சியை ஏற்படுத்துவதற்கான மூலோபாய, தந்திரோபாய பணிகளின் மீது நிச்சயம் அவர் அக்கறை காட்டவில்லை. தனக்கடுத்த தலைமையை அவர் உருவாக்க அவர் விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டுடன் அவரை விட்டு நீங்கியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் முற்போக்கு முன்னணியில் மலையகத்துக்கான தனது பங்களிப்பைக் காட்டிய அளவுக்கு அதே முன்னணியின் தலைமையை கொழும்பு தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றிணைப்பதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தமிழ் உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட மேல் மாகாண தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே அரசியலில் குதித்தது. இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்டவர்களின் வாக்கு வங்கி உண்டு என்கிற ஒற்றைப் புரிதல் மட்டுமே அவர்களிடம் இருந்தது.

கடந்த காலங்களில் கொழும்பில் தெரிவான அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ,தே.க வின் தயவின்றி தெரிவானதில்லை என்பது கவனிக்கத்தக்கது. யானைச் சின்னத்துக்கும், பச்சை நிறத்துக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் மலையக மக்கள் மாத்திரமல்ல. கொழும்பு வாழ் தமிழர்களும் தான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லச்சாமி 1989 ஒரு தமிழராக கொழும்பு மாவட்டத்தில் இ.தொ.க சார்பில் போட்டியிட்டுத் தெரிவானார். அதற்கு முந்திய 1977 தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார். ஆனாலும் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் உரிமை, பிரதிநிதித்துவம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் அரசியல்வாதி அவர் தான். இந்த இடைவெளியில் இ.தொ.கா.விலிருந்து பிரிந்து இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். 1994இல் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இ.தொ.க வில் இணைந்து தேசியப் பட்டியலின் மூலம் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2001 தேர்தலில் தோற்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவாகி 2010 வரை அங்கம் வகித்தார்.

1994 பொதுத் தேர்தலில் கொழும்பிலிருந்து ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் கிடைத்த இரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட புலிகளின் தயவில் கிடைத்தது என வேடிக்கையாகக் கூறுவது வழக்கம். ஏனெனில் 1994 பொதுத் தேர்தல் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் தொட்டலங்கயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டைத் தொடர்ந்து கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற பிரதிநிதிகளான ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து; தேர்தலில் அவர்களுக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் அதிருஷ்டம் கிட்டியிருந்தது. இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.

யோகராஜன் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருந்த மாரிமுத்து இராஜினாமா செய்து கொண்டதால் யோகராஜனுக்கு அந்த இடம் கிடைத்தது. 2001 தேர்தலிலும் போட்டியிட்டு தோற்றுப்போனார். ஆனால் மீண்டும் அவர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தெரிவானார். அதற்கடுத்த 2004 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2015இல் கொழும்பு மாவட்டத்தை விட்டுவிட்டு நுவரெலியாவில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். யோகராஜன் இதுவரை எந்தவொரு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறாத ஒருவராகவே இறுதிவரை இருந்திருக்கிறார்.


சேர் பொன் அருணாச்சலத்துக்கு துரோகம்

கொழும்பு மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவ தேவை குறித்து இன்று நேற்றல்ல இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், அருணாசலம் மகாதேவா, எனத் தமிழர்கள் அன்றைய சட்டசபையில் படித்த இலங்கையரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அவர்கள் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தார்கள். சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரும் பிற்காலங்களில் கொழும்பில் பிரதிநிதித்துவம் வகித்தனர்.

வரலாற்றில் நேரடி தமிழ்த் தேசியக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தொடக்கம் கொழும்பு தான். இந்திய வம்சாவளியினரின் பழமையான தொழிற்சங்கங்கள் உருவானது இங்கிருந்து தான். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முதலில் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் வழக்கம் கொழும்பிலிருந்தே ஆரம்பமானது என்பதும் வரலாற்றுப் பதிவு.

1918 இல் இலங்கை தேசிய காங்கிரசை (Ceylon National Congress) அமைப்பதற்காக சேர் பொன் அருணாச்சலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இங்கு நினைவு கொள்வது அவசியம். சேர் பொன் அருணாச்சலம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றக் கூடாது என்றும் (கொழும்பை உள்ளடக்கிய) மேல் மாகாணத்துக்கென தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டில் அவ் ஒப்பந்தத்தை மீறியதுடன் 

"இலங்கை சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது" 
என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

இதுவே முதலாவது தமிழர் – சிங்கள ஒப்பந்த மீறலாக பதிவு செய்யப்படுகிறது. சிங்களத் தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.

ஆகவே நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே கொழும்புக்கான தமிழர் பிரதிநிதித்துவ கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதும், நூறாண்டுகளாக தீர்க்கப்படாத சிக்கலாக தொடர்ந்து வருவதும் நிதர்சனம்.

70களின் பின்

கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட சதி அன்று மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பல தடவைகள் மேற் கொள்ளப்பட்டன. சோல்பரி அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதி கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி எனத் துண்டாடப்பட்டன. 1977க்கு முன்னர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் அமுலிலிருந்த போது சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்காது இருப்பதற்காகக் கொழும்பு மத்தியானது பின்னர் பல அங்கத்தவர் தொகுதியாக (மூன்று) (Multi member contituencies) மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அதனால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 1947 இலிருந்து ஒரு பிரதிநிதியும் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டதில்லை.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் திட்டத்தின் மூலம் முன்னைய தொகுதிவாரி பிரதிநிதித்துவமும், பல அங்கத்தவர் தொகுதி முறையும் நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விகிதாசார முறைமை கூட இது விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வையளிக்கவில்லை.

இது வரை காலம் கொழும்பில் தமிழர்களது வாக்குகள் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பது தெரியாததொன்றல்ல. ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லை, அல்லது விதிவிலக்குகளை கணக்கிலெடுக்கவில்லை. தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தமிழர்களால் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மத்திய வர்க்கத்தையும், கீழ் மத்திய தரவர்க்க உழைப்பாளர்களுமாவர். அரசியல் அனாதைகளாக ஆகியுள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் தமது இன அடையாளத்தை இழந்து சிங்கள இனத்துடன் கரைந்து போகும் அவல நிலை தூரத்தில் இல்லை. அவர்களுக்கான எதிர்கால அரசியல் வேலைத்திட்டம், கொள்கை, நிகழ்ச்சிநிரல், மூலோபாயங்களை தமிழ் அரசியல் வாதிகள் தவறவிட்டுவிட்டார்கள். மனோ கணேசன் போன்றோர் ஒன்றில் தாம் இந்நிகழ்ச்சிநிரலுக்குத் தலைமை தாங்கவில்லை என்று அறிவித்து விலகிநின்று மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அல்லது வேறு நிகழ்ச்சிநிரல்களில் அகலக் கால்வைக்காமல் இதன் பாரதூரமுணர்ந்து செயற்படவேண்டும்.

கொழும்பில் தமிழர்களை ஒன்றிணைத்து பிரக்ஞையூட்டுவதற்கான  அரசியல் பணி தொடங்கிய வேகத்திலேயே முற்றுபெற்றது துயரகரமானது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த தேவை குறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் போதியளவு ஏற்படுத்தப்படவில்லை. 

இலங்கையின் அரசியலில் இனத்துவ அரசியலும், பிரதேச அரசியலும் தவிர்க்க முடியாத அங்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களும், வேட்பாளர்களும் இந்த இன, பிரதேச அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். எனவே அரசியல் குரலுக்கான தேவையின் நிமித்தம் தமிழர்களையும் அந்த இன அடையாள அரசியலுக்குள் நிலைநிறுத்துவது தவிர்க்க இயலாததாகியுள்ளது. எனவே அந்த நுண்ணரசியலின் வழியிலேயே போய் சமகால தமக்கான அதிகார சமநிலையை வேண்ட வேண்டியிருக்கிறது.

நன்றி - தினகரன் 15.12.2024

இலங்கையில் நாடற்றவர் எதிர்காலம் ! - செ.வைத்திலிங்கம்

 

செ.வைத்திலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமன்றி ஒரு தமிழர் விடுதலைக்காக பல வழிகளிலும் தனது கருத்துக்களை உலகலாவிய ரீதியில் கொண்ட சென்ற ஒருவர். 1958 ஆம் ஆண்டு கலவரம் பற்றி அவர் எழுதிய "இலங்கையில் 16000 தமிழர் கப்பலேறிய கதை" நூல் 1966 இல் வெளியானது. அதில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி எழுதிய பகுதி இது. பிற்காலத்தில் செ.வைத்திலிங்கம் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டார். அவரைப் பற்றி தமிழ்ச் சமூகம் அவ்வளவாக பதிவு செய்தததாகத் தெரியவில்லை. ஆனால் அவரின் செயற்பாடுகளும், எழுத்துக்களும் போற்றத்தக்கவை.

இலங்கையில் நாடற்றவர்கள் எதிர்கால வாய்ப்பிலும் ஒரு துயருதவியும் இல்லை 

இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் இடுக்கண் நிலை இலங்கையில் நாடற்றவர்கள் பிரச்சனையை எல்லோ ரும் தட்டிக் கழிப்பதும் தவருகக் கருதுவதும், இலங் கையில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் 62 பூர்வீகக் குடிமக்கள்! என்பதால், அஃதன்றி இன்று அல்லது பண்நெடுங்காலமாக இருப்பவர்களுடைய தந்தை தாத்தா அந்த தாத்தாலின் தாத்தாக்கள் கூட இந்திய துணைக் கண்டத்திலிருந்து சென்று குடியேறியவர்கள் தாம் அவ்வாறு இலங்கையிலுள்ள பல இலட்ச மக்களாகிய இந்திய குடிமக்கள் நிரத்தரமாக வாழ்ந்து வருபவர் எல்லாம் இலங்கையிலேயே பிறந்து-தேயிலை புதரிலும் ரப்பர் மரங்க ளிடையே வளர்ந்து வந்தவர்தாம். அத்தகையவருள் பல்லாயிரக்கணக்கானவர், அவர் தம் முன்னோர்களின் தாய அத்தைச் கண்டதுமில்லை - வந்ததுமில்லை என்பதைக்காட்டிலும், அவர்கள் கொழும்புக்கு வரும்போது (அதுவும் பண மிருக்கிறவர்களாயிருப்பின்) கடலைப் பார்க்கும் போது தான் அப்பக்கத்தில் தமது தாயகம் இருப்பதாக அறிந்திருப்பரே தவிர மற்றபடி அல்ல!

ஆனால், அவர்களுள் சிலர் சுற்றுப் பயணத்திற்கென் றும், புண்ணிய பயணம் செய்வதற்கென்றும், மதவழக்குப் படி தமது நோம்புக்காக கோயில்களுக்கு வருவதற்கென்று தென்னிந்தியாவிற்கும் வந்ததும் உண்டு அஃதும், அடை யாளச் சீட்டு அல்லது செல் சீட்டு (Pass Ports) கட்டளைப் படி--சட்டப் பிரிவுப்படி தவிர, ஆதீனம் அல்லது பண்ணை அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும்கூட ஆள் அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும் கூட தடை விதிக்கப்பட்டுவிட்டது அதன் மூலம், இலங்கை வாழ் இந்தியர்தம் மூதாதையர் காலந்தொட்டு வந்த தம் உறவுமுறை அத்துணையும் இழக்க வேண்டியதாயிற்று என்பதோடல்லாது அவர்தம் உழைப்பு முழுதையும், வாழ் நாள் இறுதிவரை இலங்கை மண் செழிப்புறவே காணிக்கை யாக்கினார்கள் என்றால் மிகையல்ல!

1949 ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் குடிமை சட்டப்படியும், 1948-ம் ஆண்டின் குடிபுகல் - குடியேற்றம் சட்டப்படியும் இலங்கை வாழ் இந்தியர்கள் இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையே சென்று வருகின்றதை பெரிதும் தடுத்து விட்டன !

1952-ல் இந்திய பேரரசு ஆதின தொழிலாருக்கான சட்டத்தை கொண்டு வந்ததைக் கொன்டு ஆதின உரி மைச் சீட்டு பெற்று வந்ததுங்கூட இப்போது செல்லாததாகிவிட்டது. இந்தியாவுக்கு வரவேண்டுமாயிலும் 63 கொழும்பு நகரத்திலிருக்கும் இந்திய ஹைகமிஷனரிடமோ அல்லது இலங்கை குடிபுகல் கட்டுப்பாடு அதிகாரியிடமோ பயண அமைதி -உரிமைப் பத்திரம் பெறவேண்டியது அவசியமாகப்பட்டுவிட்டது அவ்வாறு பயண அனுமதி பத்திரம் வழங்குவதற்குக்கூட இலங்கை நிர்வாகத்துறை விரும்பவில்லை, ஒருகால அவ்வாறு வழங்கப்படுகின்ற பயண அனுமதி உரிமை பத்திரம் அவர்களை இலங்கை குடிமக்களுக்கு சமமாக கருத இடமளித்துவிடுமே என்ற உள்கருத்துடன்தான் அஃதும் வழங்கப்படாது மறுக்கப்பட்டன மற்றோர்புறம் இந்திய ஹைகமிஷன், தனது பாட்டாளி அல்லது அப்பாவி மக்கள் - அவர்களுடைய நியாயமான (பிரஜா) உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாட்டிற்கு அவர்கள் செலுத்துகின்ற - செலுத்தித்தீர வேண்டிய சுங்கத்தை தட்டிக்கழிக்க முடியாததைக் கண்டு பொறாதலால், போக மட்டுமே ஒரு வழி பயண அமைதி மட்டும் கொடுத்து வர முன் வந்தது இதன் பொருட்டே இலங்கை வாழ் இந்தியர் பெரும்பாலோர் இந்தியாவை கண்டறியாதவர் ஆயினர்.

1939 க்கு பிறகு இலங்கையில் புதிதாக வந்து குடியேறவில்லை.

மேலே குறிப்பிட்ட ஒரு துறை பயண அனுமதி சீட்டுகூட ஹை கமிஷன் கொடுக்க முன் வந்ததென்றால் இந்திய நாட்டுரிமையை வலுக கட்டாயமாக அல்லது தானாக முன்வந்து கோரியவர்களுக்கு, இந்திய நாட்டுரிமைமை பெற்றே தீரவேண்டும் என்ற முடிவு செய்துல் வதை மெய்ப்பிக்கும் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே இந்திய குடிமக்களின் கைத்திரன் பெற்றவர் மட்டும் (ஆதீனத் தொழிவாளர்) இந்திய குடியுரிமை கோரியவர்களுக்கும் இந்திய ஹைகமிஷன் ஒரு துறை பயண அனு மதிச் சீட்டு வழங்கியது. பெரும்பான்மையோர் மட்டும் உலகமெங்கிலும் [பேசப்படுகின்ற தமிழ் மக்களிடையும் தம்மிடையும் பல நூற்றண்டுகளாக வளர்ந்து உறவுகொண் டுவிட்ட பண்பாடு கலை -மதக் கோட்பாடுகள் தவிர. மற்ற தொடர்பு-உறவை துணித்துக் கொண்டு தமது வாழ்விடமாக இலங்கையை ஆக்கிக்கொண்டு நிலைத்துவிட்டனர்.

நாடற்றவர்கள் எனப்படும் இந்திய குடி மக்களுள் பெரும் பான்மையோர் குடியேற்றும் குடியுரிமை சட்டப்பிரகடனத்திற்குப் பிறகு, மேற்குறிப்பிட்ட சிறிதளவு உறவினையும் முழுக்க விடுத்தனர். மேலும், 1939-ல் திறனற்ற தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதை தடை விதித்த பிறகு, புதியதாக இலங்கைக்கு வந்து குடியே றியவர்கள் யாரும் இல்லை! ஆகவே, இலங்கை தேயிலை ரப்பர் தோட்டத் தொழிலாளராகயிருக்கும் இந்திய குடி மக்கள் எல்லாம், குறைந்தது 1939 லிருந்தே தமது தாயகமாக்கிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்களாவர் என்பதை நாம் ஏற்றுத் தீரவேண்டும்.

மூவகை !

இலங்கைத் தீவில் குடியேறிய இந்திய குடிமக்களை பெருவாரியாக மூவகைப்படுத்தலாம். முதல் வகை இலங்கையிலேயே பிறந்து வளர்ந்து இந்தியாவுடன் தொடர்பு கொள்ளாது அங்கேயே வாழ் நாள் கழித்து வருபவர்கள் என்பதால் குடியுரிமை பெறும் தகுதி படைத்தவர்கள். இரண்டாம் வகை, இலங்கைக்கே தம்மை காணிக்கையாக்கிவிட நினையாது இருப்பவர்கள், தமக்கு குடியுரிமை பெறாதவர்கள் ! மூன்றும் வகை: கடைசிவரை இலங்கையிலேயே இருப்பதா அல்லது இந்தியா செல்வதா என்ற முடிவுக்கு வராதவர்கள்.

முதல் வகையினருள் 1949-ம் ஆண்டின், இந்திய பாக்கிஸ்தான் (தங்குகிறவர்கள்) குடியுரிமை சட்டத்தின் படி, எட்டு லட்சம் மக்களுக்குமேல் தம்மை இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கக் கோரி மனுச் செய்துக் கொண்டதில் இரண்டு லட்சம் மக்கள் மட்டுமே இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கப்பட்டனர். மற்றவர் நாடற்றவராக்கப்பட்டனர். இரண்டாம் வகையினருள் இரண்டு லட்ச மக்களுக்குமேல், இலங்கையிலிருந்து முடிவாக வெளியேறிலிட்டவர்கள் குத்துமதிப்பாக பார்த்தால் 60,000 லிருந்து 70,000 இந்திய குடிமக்கள் மட்டுமே இன்னும் அங்கு இருப்பவர்கள். 1948ல் கொண்டு வந்த குடிபுகல் குடியேற்றம் திட்டத்தின் கீழ், எதிர்வரும் நாளில் - அடுத்த சில ஆண்டுகளுள்- இந்த அறுபதிலிருந்து எழுபதாயிரம் பேர் மட்டுமின்றி மொத்தத்தில் 2 00,000 பேரை வெளியேற்றப்படவிருக்கின்றார்கள் ஆனால் இதற்கு இந்தியப் பேரரசு எந்த நியாய விசாரணையையும் மேற்கொள்ள முடியாது மொத்தத்தில் ஏனெனில் இந்திய பேரரசு இலங்கை அரசு விரும்பும் வரை இந்திய குடிமக்கள் அங்கே இருந்து வரலாம் என்ற இலங்கை அரசின் கோட்பாட்டுக்கு இணங்கிவிட்டது.

மூன்றாம் வகையினருள் குறைந்த சதவிகிதத்தினர் தாம் இலங்கைத் தீவில் படும் இன்னலை தாங்கொணாதபடியால் இந்திய குடியுரிமை பெற முனைந்தும் - பெற்று இந்தியாவுக்கே திரும்பவும் முயன்று வருகின்றனர் மீதமுள்ள வர்கள், குடியுரிமை பதிவு அதிகாரியினால் தமது இலங்ககை குடியுரிமை கோரிக்கையை மறுக்கப்பட்டதால் நாடற்றவர்களாக்கப்பட்டவர்கள்.

இன்றுள்ள சிக்கலான பிரச்னை எல்லாம், இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுக்கு என்ன நேருமோ என் பதைக் காட்டிலும், அங்குள்ள 8,00,000 மக்கள் தம் குடியுரிமைப் பிரச்னையே ஒரு நிலையற்றதாக உள்ளதுதான். இலங்கையைப் பொறுத்தமட்டில் அவர்கள் இயற்றிய சட்டத்தினால் அங்குள்ள இந்திய குடிமக்களை நாடற்றவர்களாக்கிவிட்டது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில், மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசினராலேயே நாடற்றவர்கள் எனக் கருதி ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான் இந்த எதிர்பார்த்தல் - இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டவர், இந்தியக் குடியுரிமையையேனும் பெற்றளர்களாக கருதப்படாதவர்களாயினர் ஆகவே மேற்குறிப்பிட்ட மூவகை இந்திய குடிமக்கள்தாம் 'நாடற்றவர்கள்' எனப்படுபவர். இந்நிலைமை உறுவாகுமென்று இந்தியா அல்லது இலங்கையிலுள்ள யாரும் எந்த தலைவருமே எதிர்பார்த்ததில்லை பார்த்திருக்கமுடியாது! 1940-ம் ஆண்டு தொடக்கத்தில், குடியேற்ற அரசின் துணைத் தலைவரும், அரசவைத் தலைவருமாகவிருந்த காலஞ் சென்ற திரு, டி.எஸ் சேனநாயகா அவர்கள் டில்லியில் கூடி சந்தித்த குழுவிற்கு 65 தமை வகித்த சர்.கிரிஜா சங்கர் பாஜ்பாய் அவர்களுடன் தொடங்கிய பேச்சு வார்த்தையில் எடுத்த முடிவானது இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுள் குறிப்பிட்ட எண்ணிக்கைவரை இலங்கை குடிமக்களாக்கிக் கொண்டு மீதமுள்ளவரை அவர்கள், பணி-தொண்டு இலங்கைக்கு தேவையில்லை என்னும்போது இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்பதாகும்! ஆனால் அந்த நிலமையை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற திரு சாலமன் டயஸ் பண்டாரநாயகாவின் 'புதிய சகாப்தம்' என்ற நூலில் 559.ம் பக்கத்தில் குறிப்பிடுள்ளார். அந்த, அந்த நோக்கம்தான் திரு. டி. எஸ். சேனநாயகாவால் 1953 மார்ச் திங்கள் 2-ம் தேதியன்று!

"எவ்வகையிலும் இலங்கையிலிருந்து நான்கைந்து லட்சம் மக்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று, இந்தியாவில் உயர் பதவிலிருந்தவர். 1940-ல் நடந்த பாஜ்பாய்-சேனநாயகா பேச்சில் கண்ட முடிவினை எடுத்துரைத்தார். காலஞ்சென்ற திரு. பண்டாரநாயகா! இந்திய துணைக் கண்டத்தில் மக்கள் தொகையுடன் இலங்கையில் நாடற்றவர்களாக கருதப்படும் மக்கள் கடலில் ஒரு துளி போன்றது எனலாம். அதே நேரத்தில் இந்தியர் திருப்பி அழைத்துக் கொள்ள மறுப்பதை மதிப்பதை போன்று இலங்கை சர்க்கார் தமிழர்களை அங்கேயே நீடிக்க வைத்திருப்பது தன் நாடு செழிப்புற! அந்த செழிப்புக்கு உழைக்க நாடற்றவர்கள் என்ற பெயரோடு மற்ற பெறவேண்டிய உரிமைகள் அனைத்தும் இழந்துவிட்டு இருக்க!

புதிய அரசியல் பண்பாட்டுப் பேரலையும்! இனிவரும் சவால்களும்! - என்.சரவணன்

 

“ஒரு மனநோயாளியின் கைகளில் இந்த நிறைவேற்று ஜனாதிபதவி கிடைத்து விட்டால் என்ன ஆவது?”

என்று அப்போது கேள்வி எழுப்பினார் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா.

சுதந்திரத்துக்குப் பின்னர் சுமார் 46 ஆண்டுகள் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் தான் நாம் வாழ்ந்திருக்கிறோம். இதற்கு முன்னர் அப்பதவியை வகித்த 8 பேரில் அப்பத்தவியை துஷ்பிரயோகம் செய்யாத ஜனாதிபதிகள் எவரும்  இல்லை. இவர்களில் ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆகிய மூவரைத் தவிர ஏனைய ஐவரும் அந்த ஜனாதிபதிமுறையை நீக்குவதாக வாக்குறுதியளித்து அதற்கான மக்கள் ஆணையையும் பெற்று ஜனாதிபதியாக தெரிவான்வர்கள். ஆனால் அந்த நிறைவேற்று அதிகாரத்தில் ருசி கண்டு எவருமே அதை நீக்காமலே அதனை சுவைத்து அனுபவித்துவிட்டு ஓடிவிட்டவர்களே. அந்த மாற்றத்தை இவ்வாட்சியில் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தோற்றம் பெற்றது. அடுத்த ஆண்டே அது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1951 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் 1956 ஆம் ஆண்டே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டது. 2016 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜேவிபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சுமார் 60 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

ஒருபுறம் அக்கட்சியை ஒரு கொம்யூனிசப் பேயாகவே சித்திரித்து வந்த வலதுசாரி தேசியவாத ஆட்சியாளர்கள் இரு முறை தடை செய்தார்கள். அதன் விளைவாக இரு முறை தலைமறைவு அரசியலுக்குள் தள்ளப்பட்டதுடன் இரு முறை ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

முதல் மூன்று தசாப்த காலம் அதிகார வர்க்கத்தின் நெருக்குதல்களுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் பலியாக நேரிட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களாகத் தான் அரசியல் அழுத்தங்களையும் பாதுகாப்பு நெருக்கடிகளையும் எதிர்கொண்டபடி முற்றிலும் பாராளுமன்றவாதப் பாதையில் பயணித்து இறுதியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 

தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்கு அதன் கொள்கைகளும், உள்ளக வெற்றிகளும் மட்டும் காரணமில்லை. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, வீதிகளுக்கு வந்த மக்கள் பட்ட துன்பங்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரகலய போராட்டம் என்பன இவ்வெற்றிக்கான முக்கிய உடனடிக் காரணங்கள் என்பது மறுப்பதற்கில்லை. மாறாக இலங்கையில் ஏனைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டக் கோரி இன, மத, வர்க்க, சாதிய வேறுபாடின்றி மக்கள் தந்த ஆணை என்றே இந்த அரசியல் மாற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உலக வரலாற்று சாதனை

மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஒரேயடியில் 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான ஆட்சியை நிறுவியது. உலகில் வேறெங்கும் இப்படியான உதாரணங்கள் இல்லை.இதுவோர் பிரமாண்ட பாய்ச்சலே. இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம். 

2/3 பெரும்பான்மை ஆபத்தா?

1977 தேர்தலில் ஜே.ஆர். அரசாங்கம் 5/6 பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தது. அந்த யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை. இலங்கையின் வாக்களிப்பு மரபின் பிரகாரமும், இனப் பரம்பல் காரணிகளும் இனி ஆட்சியமைபவர்கள் எவரும் 2/3 பெரும்பான்மை பலத்தை பெறமுடியாதபடியான விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அந்த அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தினார். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதியொருவருக்கான உச்சபட்ச அதிகாரத்தையும் அந்த அரசியலமைப்பின் மூலம் நிறுவினார். அதன் பிரகாரம் அந்த அரசிலயமைப்பை மாற்றுவதாக இருந்தால் கூட 2/3 பெரும்பான்மை இன்றி மேற்கொள்ள முடியாது என்று ஜே.ஆர். மட்டுமல்ல பல அரசியல் வல்லுனர்களும் இதுவரை ஆரூடம் கூறி வந்திருக்கிறார்கள். அந்த ஆரூடத்தை சுக்குநூறாக்கியது தற்போது நடந்து முடிந்த 2024 தேர்தலில் தான். அந்த நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜே.ஆர். 1989 வரை ஆட்சி செய்தார்.

வரலாற்றில் இதுவரை 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த ஆட்சிகளின் போது தான் நாடு அதிக அராஜகத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், பல நாசங்களும் ஏற்பட்டுள்ளன. 70ஆம் ஆண்டு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த சிறிமா மேற்கொண்ட நாசங்களின் விளைவாகவே ஜே.ஆர். இலகுவாக 5/6 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த இருவர் ஆட்சியிலும் மேற்கொண்ட அதிகார அராஜகத்தின் விளைவாக இரு ஆயுதக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. போதாததற்கு தமிழர் பிரதேசங்களில் ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜே.ஆரின் ஆட்சியின் போது 1980 யூலை  வேலைநிறுத்தத்தின் போது லட்சக்கணக்கானோரை அரச உத்தியோகங்களில் இருந்து நீக்கினார். பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால சட்டம் என்பவற்றை பயன்படுத்தி புதிய வடிவத்தினாலான அரச பயங்கரவாதத்துக்கு வழிவகுத்தார். 1982 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுத் தேர்தலை மேலும் ஏழு வருடங்களுக்கு தள்ளிவைத்தார். 83 யூலை படுகொலைகளை பின்னின்று புரிந்து விட்டு அதற்கு சம்பந்தமே இல்லாத மூன்று கட்சிகளைத் தடை செய்தார். தனது அராஜகங்களை மீறுவோரை இலகுவாக நீக்கும் வகையில் தனது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை முன் கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்.

யுத்தத்தில் வென்றதை மூலதனமாக வைத்து 2010 தேர்தலில் 2/3 பெரும்பான்மை பலத்தை வென்ற மகிந்த ராஜபக்சவின் 2010 - 2015 வரையான  ஆட்சி காலப்பகுதியில் மகிந்த ஏற்படுத்திய நாசங்களின் விளைவுகளையும், ஊழல் அராஜகம், துஸ்பிரயோகம் என்பவற்றின் விலை இன்று முழு நாடும் அனுபவிக்கிறது என்பதையும் அறிவோம். அவ்வாட்சியில் மகிந்த ராஜபக்ச தனது 2/3 பலத்தைப் பயன்படுத்தி 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் தனது ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் அதிகரித்துக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தனது அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை எதிர்த்த பிரதம நீதியரசர் ஒருவரை பதவி நீக்கியதுடன் விசேட பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவிக்கான கால வரம்பையும் நீக்கியது. அவ்வாட்சியானது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சுயாதீன நிறுவனங்களையும் பலவீனப்படுத்தியது.

“இந்த நிறைவேற்று அதிகாரம் ஒரு பைத்தியக்காரனின் கரங்களுக்கு சென்றால் என்ன ஆகும்” என்று அன்றே கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா எச்சரித்திருந்தார். வரலாற்றில் அதை சகல ஜனாதிபதிகளும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

தம்மிடம் 2/3 பெரும்பான்மை பலத்தைத் தந்தால் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதாகவும், நிறைவேற்றி ஜனாதிபதிமுறையை அகற்றுவதாகவும் கூறி கடந்த மூன்று தசாப்தங்களாக பல ஆட்சிகள் வந்து விட்டன. 2/3 ஐப் பெற்ற ஆட்சிகளோ அதனை செய்யவில்லை. 2/3 பெறாத ஆட்சிகளோ தம்மோடு ஏனைய கட்சிகள் சேர்ந்தால் தேசிய அரசாங்கம் அமைத்து அதனை செய்வதாக கூறின. அதுவும் நடந்ததில்லை.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மேலதிகமாகவே 2/3 ஐ விட அதிகமான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். ஒரு நெருக்கடி காலத்து அரசாங்கத்துக்கு இந்தளவு அதிகாரம் அவசியமானதே. தேசிய மக்கள் சக்தியே எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள். அது அவர்களே கூறிய “system change” க்கு எந்தளவு வாய்ப்பளிக்கப்போகிறது என்பதைத் தான் இப்போது அனைவரும் கவனித்து வருகிறார்கள்.

மறுபக்கம் எதிர்க்கட்சிகள் வலுவிழந்திருப்பது ஜனநாயக ஸ்திரத்தனமைக்கு ஆபத்தான சமிக்ஞை என்கிற கருத்தையும் பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ்?

1989 ஆம் ஆண்டு தேர்தலில் தான் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழான பாராளுமன்றத் தேர்தல் முதன் முதலில் நடத்தப்பட்டது. அதன் மூலம் தெரிவான முதலாவது ஜனாதிபதி பிரேமதாச. அதே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் முதன் முதலில் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலும் அவ்வாண்டு தான் நடத்தப்பட்டது.

மேற்படி விபரங்களின் பிரகாரம் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் இலங்கையில் முதன் முதலில் தனியொரு கட்சி அதிகப்படியான ஆசனங்களை வென்றது இந்த 2024 தேர்தலில் தான். 1977 இல் ஜே.ஆர். மொத்த ஆசனங்களில் 83.33 % வீதத்தை வென்றார். 2024 தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தம் 159 ஆசனங்களை (61.56% வீத ஆசனங்களை) பெற்றிருக்கிறது. 2010 (144), 2020 (145), ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியானது முறையே 144, 145 (64% வீத) ஆசனங்களைப் பெற்று கொண்ட போதிலும் அது தனியொரு கட்சி பெற்ற ஆசனங்கள் அல்ல. அது பல கூட்டணிக் கட்சிகளின் ஆசனங்களையும் உள்ளடக்கியதே.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 3% வீதத்தைப் பெற்றிருந்த அனுர குமார திசாநாயக்க ஐந்தே ஆண்டுகளில் 42% வீதத்தை தாண்டினார்.  ஒரு மாதத்தில் நடந்த பாராளுமன்றத்த் தேர்தலில் 3 ஆசனங்களில் (1.33%) இருந்து 159 ஆசனங்களை (70.67%) அடைந்தார்.  இந்தளவு குறுகிய காலத்தில் ஒரேயடியாகத் தாண்டிய எந்த ஒரு கட்சியும் உலகில் இல்லை என்றே கூறலாம். அதேவேளை சென்ற தேர்தலில் 145 ஆசனங்களைக் கொண்டு ஆட்சியமைத்திருந்த பொதுஜன பெரமுன இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

வாக்களிப்பு குறைந்தது ஏன்?

65.02% மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட (5,325,108) வாக்காளர்கள் வாக்களிப்பில் இருந்து தவிர்த்து இருக்கிறார்கள். அப்படியாயின் வாக்களித்தவர்கள் யார்? வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டவர்கள் யார்?

இந்தத் தேர்தலில் இதற்கு முன்னர் பிரதான கட்சிகளுக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிற அதேவேளை அவர்களில் எஞ்சிய பலரே வாக்களிப்பை தவிர்த்திருக்கிறார்கள் என்று பலர் கணிக்கிறார்கள். அதாவது இந்தப் பாரம்பரியக் கட்சிகளை வெறுத்தவர்களின் “விரக்தி வாக்குகள்” – “அதிருப்தி வாக்குகள்” – “அலட்சிய வாக்குகள்” என்றே கருத இடமுண்டு.

மேலும் இம்முறை யாரெல்லாம் தெரிவாக வேண்டும் என்பதை விட யாரெல்லாம் தெரிவாகக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருந்துள்ளனர்.

வரலாற்றில் முதலாவது இடதுசாரி அரசாங்கம்?

இலங்கையில் மிதவாத வலதுசாரி தேசிய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அதிகளவிலான கட்சிப் பிளவுகளையும், உடைவுகளையும் இடதுசாரிக் கட்சிகளில் தான் ஏற்பட்டுள்ளன. இத்தகைய இரு வேறுபட்ட பிளவுகளில் உள்ள வித்தியாசம் யாதெனில்; இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகளில் பெரும்பாலானவை கொள்கை ரீதியான வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவையே. ஜேவிபி யும் கடந்த 60 ஆண்டுகளில் பெரிய சிறிய பிளவுகள் என பல்வேறு பிளவுகளை சந்தித்து வந்திருக்கிறது. அதையெல்லாம் தாண்டி அது தாக்குப்பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது என்றால் அது மகத்தான வரலாற்று வெற்றி என்றே கூறவேண்டும்.

மேலும் இலங்கையில் தற்போது உள்ள கட்சிகளிலேயே உயர்ந்தபட்ச கட்சி ஒழுங்கைக் கொண்டுள்ள முதன்மைக் கட்சியாக ஜேவிபியைக் குறிப்பிட முடியும். புதிய உலக ஒழுங்கின் கீழ் இடதுசாரிய மரபிலான; கறாரான கட்சி ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்க முடிவதில்லை. இதனால் உலகம் முழுவதும் மரபான கட்சி விதிகள், கட்சி ஒழுக்கங்கள் என்பவற்றின் மீது தளர்வை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் சகல இடதுசாரி இயக்கங்களுக்கும் ஏற்பட்டிருப்பது உண்மையே. அந்தப் போக்குக்கு ஜேவிபியும் விதிவிலக்கில்லை. ஆட்சிகளை புரட்சியின் மூலம் கைப்பற்றுவதோ, அதனை தடையின்றி பேணுவதோ நவீன உலகில் கற்பனாவாதமாகவே நோக்கப்படுகிறது. பூர்ஷ்வா தாராளவாத முறைமைக்குள் கிடைக்கிற வெளியை தந்திரோபாய ரீதியில் கையாள்வதே இன்றைய இடதுசாரி இயக்கங்களின் முன்னால் உள்ள தெரிவாகும். அதன் மூலம் ஆட்சியமைக்க முடியும் என்று நிறுவிய முக்கிய தேர்தல் இதுவாகும். ஆனால் பூர்ஷ்வா அமைப்புடன் தற்காலிகமாக பல்வேறு சமரசங்களை தற்காலிகமாகவேனும் செய்துகொள்ள நேரிடும்.

இனப்பிரச்சினை: சமரசம்! சரணடைவு!?

அதேவேளை இத்தகைய பூர்ஷுவா அமைப்பு வெறும் வர்க்க அமைப்புடன் மாத்திரம் சமரசம் செய்துகொள்ள நிர்ப்பந்திப்பதில்லை. மாறாக பல்வேறு சமூக எற்றத்தாழ்வுகளுடனும், சமூகச் சிக்கல்களுடனும் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கும். உதாரணத்துக்கு இலங்கைச் சூழலில் மையப் பிரச்சினையாக பல தசாப்தங்களாக நீண்டு கொண்டிருக்கும் இனப் பிரச்சினையை அதே சமரசத்துக்குள் கொண்டு வைத்து விடுகின்றன. பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளை சவாலுக்கு இழுக்கும் துணிச்சல் தேசிய மக்கள் சக்திக்கு உண்டா என்றால் அது இல்லை என்றே உணர்ந்து கொள்ளலாம்.

அடிப்படை பேரினவாத கட்டமைப்புடன் மோதுண்டால் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவோ, அல்லது மீண்டும் அதிகாரத்துக்கு வரவோ முடியாது என்கிற கணிப்பை யதார்த்தமாக எவரும் உணர முடியும். பெரும்பான்மை வாக்கு என்பது சிங்கள பௌத்த தேசியவாத வாக்குகளே. அந்த சிங்க பௌத்த வாக்கு வங்கியை யார் தக்கவைத்துக் கொள்வார்களோ அவர்களாலேயே ஆட்சியைக் கைப்பட்ட முடியும் என்பதே இலங்கையின் தேர்தல் பண்பாட்டு மரபின் யதார்த்தமாக எஞ்சியுள்ளது. அவ்வாக்கு வங்கிக்கான போரை கூர்மை படுத்துவதற்காகவே பல தேசியக் கட்சிகள் தமக்குள் போட்டி போட்டு யார் சிறந்த சிங்கள பௌத்த தேசியவாதிகள் என்பதை நிறுவ முற்பட்டதன் விளைவே இலங்கையின் இனப்பிரச்சினையின் இன்றைய வடிவம்.

இன்று இலங்கை என்கிற தேசமானது சிங்கள - பௌத்த பேரினவாதமயப்பட்ட தேசமே. அரசு என்பது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பே. அதில் எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அரசின் நிகழ்ச்சிநிரலையும், அதன் நீட்சி மரபையுமே பேணிக்கடக்கின்ற தற்காலிக சக்திகளே. தேசிய மக்கள் சக்தியும் அதில் விதிவிலக்காக ஆகப் போவதில்லை. ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை வந்த அரசாங்கங்களில் இருந்து வேறுபடும் ஒரே விடயம் கொள்கையளவில் இனவாதத்துக்கு எதிரான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருகிறார்கள் என்பதும். அதற்குரிய ஒரு ஒழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தான் நமக்கு இருக்கிற ஆறுதல்.

அவர்களால் மத சார்பற்ற ஒரு அரசை நிறுவ முடியும் என்று நம்புவதற்கில்லை. சிங்கள பௌத்த தரப்பையோ, கட்டமைப்பையோ  திருப்திபடுத்தாமல் ஆட்சியை இலகுவாக கொண்டு செல்ல முடிவதில்லை. முன்னைய ஆட்சி முறைகள் கைகொண்ட சிங்கள பௌத்த ஆதரவில் இருந்து சற்று தளர்வுகளை சிலவேளைகளில் காண முடியும். பல முக்கிய அரச வைபவங்களில் மதச் சடங்குகளை தவிர்த்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஜனாதிபதியின் சிம்மாசனப் பிரசங்கத்தின் போது கூட வழமையான மத அனுஷ்டானங்கள், சடங்குகள் இருக்கவில்லை.


இன்றைய சிங்கள பௌத்த தேசியவாத வடிவம்

மக்கள் அரசாங்கத்தை மாற்றி இருக்கிறார்கள் அரசை மாற்றவில்லை. அரசுக்கு என்று சில இயல்புகள் உள்ளன. 1833 இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட அரச கட்டமைப்பு முறையானது பல யாப்பு சீர்திருத்தங்களுக்கு ஊடாகவும் நிர்வாக ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் பல மாற்றங்கள் கண்டு 1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கையர்களுக்கு கைமாற்றப்பட்டு வேறு வடிவம் பெற்று அரச கட்டமைப்பு இயங்கி வந்திருக்கிறது.

இனத்துவ, மதத்துவ, சாதிய, நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க ரீதியிலான பண்பாட்டுக் கூறுகளையும் தாங்கிக் கொண்டு தான் இந்த அரச கட்டமைப்பு தன்னை வளர்த்துக்கொண்டு வந்துள்ளது. இந்த இயல்பை முற்போக்குக் கூறுகளுடன் வளர்த்தெடுப்பது இலகுவானதல்ல. அதை மாற்றுவதற்கு நூறுவீதம் தயாராக இருக்கும் எந்த அரசாங்கத்தாலும் கூட அதனை மாற்றிவிட முடியாது. ஏனென்றால் 

அரச கட்டமைப்பின் இயல்புகளாக ஆக்கப்பட்டுள்ள அந்த நாசகர ஆதிக்க இயல்புகளோடு தன்னை வளர்த்துக்கொள்ள அதிக காலத்தையும், உழைப்பையும், சக்தியையும் செலவழித்திருக்கிறது.

அதை ஒரேயடியில் மாற்றும் மாயாஜாலர்கள் எவரும் இதுவரை நமக்கு வாய்த்ததில்லை. இனியும் வாய்க்கப் போவதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாதத்துக்கு ஒரு வடிவம் உண்டு, அதற்கு என தன்னளவில் வளர்த்து வந்த சித்தாந்தம் உண்டு. அதைக் கொண்டு இயக்க பல சிவில் அமைப்புகளும், கட்சிகளும் நிறுவனங்களும் உள்ளன. அதனை பலப்படுத்தவென சிவில் நிர்வாகத்துறை இறுக்கமாக உள்ளது. ஈற்றில் அது நிறுவனமயப்பட்ட ஒன்று என்கிறோம். அதை மாற்றுவதாயின் மீண்டும் பெரு விலை கொடுத்தே அக் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு தேசிய மக்கள் கட்சி குறைந்தபட்ச அடிப்படையையாவது ஏற்படுத்தும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். அத்தகைய ஆரம்பத்தை ஏற்படுத்துவதற்கான  பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.

கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்கள் இதனை சரிசெய்யாமல் நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சியை  முன்நகரத்த முடியாது என்கிற உண்மையை உணர்த்த போதுமான சிங்கள சக்திகள் இல்லை. தமிழர் தரப்பும் துருவமயப்பட்டு சமரசத்துக்கு சற்றும் அருகில் நெருங்க தயாரில்லாத எதிர்ப்பரசியலை மட்டுமே செய்து வருவதை பெரும்போக்காகக் (mainstream) கொண்டிருக்கிறது. சமரசம் என்றால் சரணாகதி என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது. அரச தரப்பிடம் இருந்து சமரசத்தை எதிர்பார்ப்பது போலவே தமிழர் தரப்பிலும் விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக வேண்டியது காலத்தி கட்டாயம். சமரசம் என்பது இரு தரப்பு நெகிழ்ச்சியையும் முன்நிபந்தனையாகக் கொண்டதே.

இனி வரும் நாட்களில் இனப்பிரச்சினை குறித்த அணுகுமுறைகளைக் கண்காணிப்பதும் அது குறித்த வினையாற்றலை செய்யும் கடமை சிறுபான்மையினருக்கு உரியது.

முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி விவகாரம்

தேசிய மக்கள் கட்சியை ஆதரித்த பல முஸ்லிம்கள் அமைச்சரவையில் முஸ்லிம் எவரும் தெரிவாகவில்லையே என்கிற அதிருப்தியை முன்வைத்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் முஸ்லிம்கள் அல்லாத அமைச்சரவை என்று விமர்சித்தனர். முஸ்லிம் ஆதரவாளர்கள் பலருடன் சந்திப்பை நடத்திய அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு பதில் அளித்த போது

“இதை வைத்து இனவாதிகளாக எங்களை விமர்சிக்க முயற்சிக்காதீர்கள். முஸ்லிம்களுக்கு நியாயம் கோரி பல தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் நாங்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பாடசாலை முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் உடைக்கான துணி வகைகளை வழங்கக் கோரி அமைச்சரவைப் பத்திரம் வழங்கியதும் சிங்கள நான் தான். முஸ்லிம் அமைச்சர்கள் அல்லர். முஸ்லிம் ஒருவர் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. இம்முறை  அம்பாறையில் முஸ்லிம்கள் எவரும் தெரிவாகவில்லை. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அங்கே அவசியம் என்பதற்காக தேசியப் பட்டியலின் மூலம் ஆதம் பாவா என்கிற ஒரு முஸ்லிம் உறுப்பினரை அங்கே தெரிவு செய்தோம். மேல் மாகாணத்துக்கான ஒரு கவர்னராக முஸ்லிம் ஒருவரையே தெரிவு செய்தோம்....” என்றார்.

அமைச்சரவை 25க்குள் சுருக்கப்பட்டுவிட்டதால் முக்கிய அமைச்சர்கள் கட்சியின் சிரேஷ்டர்கள், முக்கிய துறைசார் நிபுணர்கள் என்போரையே தெரிவு செய்ய நேரிட்டது என்றும் இன, மத அடிப்படையில் தெரிவான அமைச்சரவை அல்ல இதுவென்றும் இது விடயத்தில் பதிலளிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் நீண்ட கால தலைமை வகித்து வரும் பல சிரேஷ்ட தலைவர்களிடம் உங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையே என்கிற கேள்வியை ஊடகங்கள் கேட்ட போது. எங்கள் கடமைகளை செய்ய அமைச்சுப் பதவிகள் எங்களுக்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் கட்சி தெரிவு செய்யும். என்றே பதில் அளித்து வருகின்றனர்.

இதேவேளை இனவிகிதாசாரம் பேணப்படவேண்டியதும் கூட சட்டப்படி அரசின் கடமையே என்பதை கடந்த கால அரசாங்கங்கள் தெரிந்தே தவிர்த்தன. இந்த அரசாங்கத்துக்கு அதை அழுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது.


"இது “சேர்” மாரின் அரசாங்கம் அல்ல. தோழர்களின் அரசாங்கம்."!

புதிய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை சேர் என்று அழைக்க வேண்டாம் என்றும் பெயர் கொண்டோ அலது தோழர் என்றோ அழையுங்கள் என்று தெரிவித்து வருகிறார்கள். சேர், மாண்புமிகு, போன்ற சொல்லாடல்களால் மேலே தூக்கி வைத்ததன விளைவே இதற்கு முந்திய ஆட்சியாளர்களை அதிகாரத்துவத்துக்கு இட்டுச் சென்றது என்று தெரிவிக்கின்றனர்.

இந்தத் தேர்தலும் புதிய ஆட்சியையும் ஒரு புதிய அரசியல் பண்பாட்டை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது என்றே பல நோக்கர்களும் தெரிவிக்கிறார்கள்.

புதிய அமைச்சரவையில் பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து பேரைத் தவிர ஏனைய அனைவரும் அமைச்சரவைக்குப் புதியவர்கள். அந்த ஐவரும் 2004 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியின் போது அமைச்சர்களாக சிறுது காலம் இருந்தவர்கள்.

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் தமது சம்பளத்தை எடுப்பதில்லை என்றும், பொது நிதிக்கே அச் சம்பளத்தை வழங்குவது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் வசதிகள், சலுகைகள் பலவற்றை பெறுவதை தவிர்த்து இருக்கிறார்கள். இதுவரை ஒவ்வொரு உறுப்பினருக்கும், அமைச்சர்களுக்கும் என பாதுகாப்புக்கு பொலிசார், இராணுவம், உதவியாளர்கள், வீடு, பராமரிப்புக்கென ஏகப்பட்ட செலவுகள் எல்லாவற்றையும் அனுபவித்து வந்தார்கள். சேவை செய்ய வந்தவர்களுக்கு இத்தனை வசதிகள் தேவையில்லை என்பதே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. அமைச்சர்களுக்கு கூட முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பல வசதிகள் கூட வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

கைத்தொழில் அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட அன்று சுனில் ஹந்துநெத்திக்கு வந்த ஒரு தோலைபேசி அழைப்பை தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அழைப்பென மகிழ்ச்சியுடன் நான் அமைச்சர் ஹந்துநெத்தி பேசுகிறேன் என்றபோது மறுமுனையில் கறாராக உங்கள் தொலைபேசி கட்டணப் பாக்கி 22 ஆயிரத்தைக் கடந்துவிட்டது நாளைக்குள் கட்டாவிட்டால் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று எச்சரித்து விட்டு அப்பெண் வைத்து விட்டதாகவும். தனக்கு வந்த முதல் அழைப்பே இப்படித்தான் என்றும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி இருந்தார்.

எல் போர்ட் (L Borad) அரசாங்கம் என்று ரணில் சமீபத்தில் கேலி செய்திருந்தார். முன்னாள் தேர்தல் ஆணையார் மகிந்த தேஷப்பிரிய ஊடக மாநாட்டில் “கலியாணம் கட்டுவதற்கு முதல், அனுபவம் பெற்றுவிட்டு வரவேண்டும் என்கிறீர்களா?” என்று வினவியிருந்தார். இந்த அமைச்சர்கள் ஒரு கட்டுக்கோப்பான கட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவிற் கொள்வோம்.

அமைச்சரவையில் ராமலிங்கம் சந்திரசேகரனும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்ற பிரதீப், அருண் ஆகியோரும் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

பாராளுமன்றத்தில் 22 பெண்கள், தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்புரிமை எல்லாம் புதிய ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டுக்கான தொடக்கம்.

இதுவரையான அரசாங்க மரபில் மாற்றமும் மறுமலர்ச்சியும், புதிய அரசியல் பண்பாடும் ஆரம்பிக்கிறது என்று உணர முடிகிறது. மக்களுக்கு இதுவோர் புதிய அனுபவம். இவ்வாறு சாத்தியமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இனி வருபவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான உதாரணமாக இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தேசிய மக்கள் சக்தியினர். 

நாம் எவரும் விரும்புகிற, நாம் எவரும் கனவு காண்கிற ஒரு ஆட்சியை எவராலும் ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு வித கனவு utopian மனநிலையில் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதை விட கடந்த 76 ஆண்டுகளில் காணாத முற்போக்கான - முன்னுதாரண மாற்றங்களைக் காண முடியும் என்றே ஊகிக்க முடிகிறது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் அது லேசானது அல்ல. அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஏகாதிபத்தியம், கார்பரேட்டுகள், முதலீட்டாளர்கள், ஊழல் மாபியாக்கள் , வலதுசாரி தேசியவாத வங்குரோத்து அரசியல் எதிரிகள், இனவாதிகள், இதுவரை லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம், விரயம் என்பவற்றுக்குப் பழகிய சிவில் நிர்வாகத் துறை என ஏராளமானவற்றை எதிர்கொள்ள நேரிடும். இதுவரை இருந்த அரசாங்கங்கள் அத்தகையவற்றுக்கு சமரசம் செய்து கொண்ட -விலை போனவையாக இருந்தன.

அது இந்த அரசாங்கத்தில் நடக்காது. காரணம் இங்கே அத்தகைய நிலைமையை கண்காணித்து சரிசெய்யும் பொறிமுறை உண்டு. கடந்த காலங்களைப் போல அரசியல் லாபத்துக்காக கூட்டுக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களில் தங்கியிராத அரசாங்கம். தனிநபர்வாதம், அதிகாரத்துவம் என்பவற்றை கொண்டிராமல் கடமைக்கே முன்னுரிமை என்கிற அரசாங்கம். இதுவரை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெருமளவு சலுகைகள் இராது. அவர்கள் ஊதியத்துக்கு வேலை பார்க்க வந்தவர்கள் அல்லர். கடமையை நிறைவேற்ற வந்த செயற்பாட்டாளர்கள். குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. அதனை சரி செய்வதற்கான பொறிமுறை அங்கு உண்டு என்பதே நமக்கு பேராறுதல். இந்த ஆட்சியானது ஒரு கட்டுக்கோப்பான கட்சிக்கு கட்டுப்பட்டது என்பது இலங்கை ஆட்சிமுறைக்கு புதியது என்பதை கவனிக்க வேண்டும்.

76 ஆண்டுகாலம் பொறுத்திருந்த நமக்கு இந்த ஐந்து ஆண்டுகளை சரியாக முறையாக செய்ய ஒத்துழைப்பை நாடியிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரோ அடுத்த மாதமே வந்து ‘சொன்ன சொல் எங்கே...’ “தீர்வெங்கே...!”என்று அரசியல் செய்யத் தொடங்கி விடுவார்கள். அதற்குரிய ஒழுங்குக்கு அவகாசம் கொடுப்பதும் நமது கடமை. அதேவேளை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது நமது உரிமை. மக்கள் விரோத அரசாங்கமாக மாறினால் அதனை தூக்கியெறிவதையும் மக்களால் செய்ய முடியும் என்பதையும் இதே அரசாங்கம் தெரிவான முறைக்கு ஊடாக காட்டப்பட்ட சிறந்த உதாரணம்.

மக்கள் இதனை மறுமலர்ச்சி என்கிற வார்த்தை கொண்டு அழைக்கிறார்கள் பெருவாரி மக்கள். அந்த நம்பிக்கைக்கு நியாயம் செய்யுமா தேசிய மக்கள் கட்சி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

சில சிறப்பம்சங்கள்

  • இலங்கையின் சனத்தொகை 22 மில்லியன்கள். இதில் இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 17,140,354 அதாவது மொத்த சனத்தொகையில் 77.91%.
  • அதில் அளிக்கப்பட வாக்குகளின் எண்ணிக்கை 11,148,006. (மொத்த வாக்காளர்களில் 65.02%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 667,240. (அளிக்கப்பட்ட வாக்குகளில் 5.99%)
  • தெரிவு செய்யப்பவர்களின் கட்சிகளைச் சேர்ந்த 12 மற்றும் ஒரு சுயேச்சை குழு ஆகியவற்றுக்குமாக 10,457,009 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
  • எஞ்சிய 690,997 வாக்குகளும் தெரிவாகாத கட்சிகளுக்கும், சுயேட்சை குழுக்களும் வழங்கப்பட்டுள்ளன. இது சுமார் 6 வீத வாக்குகளாகும்.
  • 17,710 வாக்குகளைப் பெற்ற இலங்கை தொழிற்கட்சிக்குக் கூட ஒரு ஆசனம் கிடைத்திருகிறது என்றால் இப்பயன்படாத வாக்குகளின் பெறுமதியை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.
  • கடந்த 2020 தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களில் முதலாவது இடம் மகிந்த ராஜபக்ச. அவர் 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தில் இருந்தவர் சரத் வீரசேகர. அவர் மொத்தம் 328,092 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
  • மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த சரத் வீரசேகர இம்முறை முற்றிலும் குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.
  • இவ்வாறு கிட்டத்தட்ட இனவாதத்துக்கு நேரடி தலைமைத்துவத்தைக் கொடுத்து வந்த பலர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 167 பேர் இழந்துள்ளனர். புதிதாக 176 உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு.
  • இலங்கையின் வரலாற்றில் முதற்தடவை அதிகளவிலான பட்டதாரிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தருணம்.
  • 1978 இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் தனியொரு கட்சி மூன்றில் பெரும்பான்மை பெற்ற முதல் சந்தர்ப்பம்.
  • இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
  • வரலாற்றில் முதற் தடவையாக தமிழர்களின் கோட்டையாக கருதப்படுகிற யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சியாக அல்லாத ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
  • முதற் தடவையாக 22 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கிறார்கள்.
  • முதற் தடவையாக சானு நிமேஷா என்கிற திருனர் (இலங்கை சோசலிசக் கட்சி) தேர்தலில் பங்குபற்றியிருக்கிறார்.
  • முதற் தடவையாக பாராளுமன்றத்துக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேசிய மக்கள் சக்தி தமது தேசியப் பட்டியலின் மூலம் சுகத் வசந்த டி சில்வா என்கிற பார்வையற்ற பட்டதாரி ஒருவரே அவ்வாறு தெரிவு செய்தது. 

  • பொ.ஜ.மு – பொதுஜன முன்னணி
  • ஐ.ம.சு.கூ. – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
  • ஐ.தே.க – ஐக்கிய தேசியக் கட்சி
  • ஐ.ம.ச – ஐக்கிய மக்கள் சக்தி
  • ஸ்ரீ.ல.சு.க – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
  • ஸ்ரீ.ல.பொ.பெ – ஸ்ரீ லங்கா போது ஜன பெரமுன
  • ஜே.வி.பி. – மக்கள் விடுதலை முன்னணி
  • தே.ம.ச – தேசிய மக்கள் சக்தி
கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு சஞ்சிகையில் (ஒக்டோபர் 2024) விரிவாக வெளிவந்த இக்கட்டுரையின் சுருக்க வடிவம் 01.12.2024 அன்று வெளியான ஞாயிறு தினகரன் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இரு ஊடகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புதிய அரசியல் பண்பாட்டுப் ப... by SarawananNadarasa

மலையக மக்களின் முகவரி பிரச்சினை : ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய நிலை - எம்.எம்.ஜெயசீலன்

வரலாறு நெடுகிலும் உரிமை மறுப்புகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உள்ளாகி வந்துள்ள மலையக மக்கள், 21ஆம் நூற்றாண்டிலும் முகவரியற்ற மனிதர்களாக வாழும் துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது. இன்னும் தோட்டங்களில் வாழ்பவர்கள் இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். காணி உரிமை இன்மை, வீட்டு உரிமை இன்மை முதலான காரணங்களால் சொந்தமான முகவரியற்றவர்களாக இரு நூற்றாண்டைக் கடந்து வந்துள்ளார்கள். 

சொந்த முகவரி இன்மையால் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வந்துள்ளன. திடீரெனப் பேசப்படுவதும் பின்னர் எவ்விதத் தீர்வும் இன்றி அப்படியே அமிழ்ந்துபோவதும் வழமையாக இடம்பெற்றுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, மலையக மக்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளில் நிரந்தர முகவரியைப் பெற்றுத்தரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் அம்முயற்சிகளால் முகவரி பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. மலையக மக்களின் முகவரி பிரச்சினையானது வீட்டு இலக்கம் வழங்குதல், தெருவுக்குப் பெயரிடுதல் என்றளவில் மட்டும் சுருங்கியதில்லை. அது நில உரிமையோடும் பெருந்தோட்டக் கட்டமைப்போடும் தொடர்புடையதாக விளங்குகிறது. அதனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுத்த செயற்பாடுகளால் முழுமையான தீர்வுகளை எட்டமுடியவில்லை.

மலையகம் 200 ஐ ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளால் அம்மக்களின் முகவரி பிரச்சினை மீண்டும் பேசுபொருளானது. சமூக அக்கறைமிக்க செயற்பாட்டாளரான ஜீவரத்தினம் சுரேஷ்குமார் பொதுநல வழக்கின் மூலம் நீதிமன்றம் வரை இப்பிரச்சினையைக் கொண்டு சென்றார். அதனால் மலையகத் தமிழரின் முகவரி பிரச்சினை பொதுவெளியில் பரவலான கவனிப்பைப் பெற்றது. பலரும் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் தேவையை வெவ்வேறு தளங்களில் எடுத்துரைத்தனர் – எடுத்தரைத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எவ்விதத் தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

தோட்டங்களில் வாழ்பவர்களுக்குத் தனியான முகவரி கிடையாது. லய அறைகளுக்கெனத் தனியான இலக்கங்களோ தோட்டங்களுக்குள் தெருக்களின் பெயர்களோ பயன்பாட்டில் இல்லை. தோட்டத்தின் பொது முகவரியே எல்லோருக்குமான முகவரியாக விளங்குகிறது. ஆட்பெயர் மட்டுமே வேறுபடும். நான் பிறந்து வளர்ந்த தோட்டமான நிவ்டிவிசனை எடுத்துக்கொண்டால் ரங்கலை, நிவ்டிவிசன் என்பதே அங்குள்ள அனைவருக்குமான முகவரியாகும். ரங்கலை பெருந்தோட்டத்தின் ஒரு பிரிவாக நிவ்டிவிசன் விளங்குகிறது. ரங்கலை, பூடல்கொல்ல (பொடவகொல), நிவ்டிவிசன், கிளவர் டிவிசன் (கிழவன் தோட்டம்), பெரு டிவிசன், கல்டூரியா எனும் ஆறு பிரிவுகளை ரங்கலை பெருந்தோட்டம் கொண்டுள்ளது. அதனால் என் தோட்டத்திலுள்ளவர்களின் முகவரியில் தோட்டத்தின் பெயரும் அதன் பிரதான நிர்வாகத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளன. காலனியக் காலத்தில் பெருந்தோட்ட அமைப்பு தனி ராஜ்ஜியமாக இயங்கியதன் வெளிப்பாடாகவே இம்முறைமை அமைகிறது. 

பெருந்தோட்டங்கள் நீண்டகாலமாக அரச தலையீடுகளுக்கு அப்பால் சுயாதீன அமைப்பாக இயங்கியுள்ளன. தோட்ட நிலத்தைப் போலவே தோட்டங்களில் கூலி வேலை செய்தவர்களும் தோட்ட உரிமையாளரின் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தொழிலாளர்களின் சகல நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்துள்ளன. அவர்கள் சுதந்திரமான அசைவற்றவர்களாகவும் தோட்ட நிர்வாகத்துடன் பிணைக்கப்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்குத் தோட்டங்களில் எவ்வித உடைமையும் இருக்கவில்லை. தோட்ட உடைமையாளர் சர்வ வல்லமை கொண்டவராக விளங்கியுள்ளார். அவர் நினைத்தால் ஒரு தொழிலாளியைத் தொழிலில் அமர்த்திக்கொள்ளலாம் அல்லது தொழிலிலிருந்து நீக்கி, தோட்டத்தைவிட்டே வெளியேற்றலாம். இந்நிலை தொழிலாளர்களுக்கான தனி முகவரி என்பதை அழித்து, தோட்டத்தையே – தோட்ட நிர்வாக அமைப்பையே அம்மக்களின் முகவரியாக்கியுள்ளது. 

காலனிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலைபெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும், வெள்ளைத் துரைகள் யாவரும் நாட்டைவிட்டுச் சென்ற பின்பும் காலனியக் காலப் பெருந்தோட்டக் கட்டமைப்பு இன்னும் மாற்றம்பெறவில்லை. அதன் தொடர்ச்சி வெவ்வேறு தளங்களில் பேணப்பட்டு வருகிறது. தோட்டங்களில் வழக்கில் உள்ள பொது முகவரி அதன் ஒரு வெளிப்பாடாகும்.  

முகவரி பிரச்சினையால் கடிதங்கள் கிடைக்கப்பெறாமை, உரிய நேரத்தில் கடிதங்கள் கிடைக்கப்பெறாமை ஆகியன இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் சொந்த முகவரி இன்மை கௌரவ சிக்கலையும் தோற்றுவிக்கிறது. இவை வெளிப்படையான சிக்கல்களாகும். இவற்றுக்கு அப்பால் மலையக மக்களின் இருப்பற்ற நிலையின், வீடு, காணி முதலியன உரித்தற்ற நிலையின் வெளிப்பாடாகவும் இலங்கையின் முழுமையான பிரஜையாக இன்னும் உள்வாங்கப்படாமையின் குறியீடாகவும் இப்பிரச்சினை விளங்கிவருகிறது. அதனால் சொந்த முகவரியானது மலையக மக்களின் இருப்பினதும் அவர்கள் இலங்கையின் முழுமையான பிரஜையாதலினதும் வெளிப்பாடாக அமைகிறது.

எங்கள் பகுதியில் 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் கடிதங்கள் யாவும் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து நேரே தோட்டத்தின் பிரதான காரியாலயத்துக்குக் (ரங்கலை) கொண்டுசெல்லப்பட்டன. அங்கிருந்து ஒவ்வொரு தோட்டப் பிரிவுக்கும் (மேலே சுட்டிக்காட்டிய ஆறு பிரிவுகள்) அனுப்பப்பட்டன. ஒவ்வொரு தோட்டங்களில் இருந்தும் பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்தினைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்பவர் (சாக்குக்காரர் - சாக்கு) அல்லது கொழுந்து லொறியின் சாரதி கடிதங்களைத் தோட்டங்களின் கணக்கப்பிள்ளையிடம் வழங்குவார். சில தோட்டங்களில் தபாலுக்குப் பொறுப்பாக ஒருவரைத் தோட்டமே வைத்திருக்கும். பிரதான காரியாலயத்தில் இருந்து தோட்டத்துக்குக் கடிதங்கள் கொண்டுவரப்பட்டதும் கணக்கப்பிள்ளை ஒவ்வொரு நாளும் பெரட்டில் வைத்து (தொழிலாளர்களுக்கான வேலைகளைக் காலையில் பங்கிட்டுக் கொடுத்தல்) கடிதங்களை வழங்குவார் அல்லது கடிதங்கள் கிடைக்கப்பெற்ற அன்றே மாலையில் கொழுந்து நிறுக்கும்போது வழங்குவார்.

கடிதங்களைத் தொழிலாளர்களுக்குக் கையளிப்பதில் மேற்படி நடைமுறையைத் தோட்டங்கள் பொதுவாக பின்பற்றிவருகின்றன. நீண்ட காலமாக இம்முறையே வழக்கிலிருந்து வருகிறது. அதனால் கடிதங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். ஒரு தோட்டம் பல பிரிவுகளைக் கொண்டிருப்பதால் கடிதங்கள் வேறு தோட்டப் பிரிவுகளுக்கு வழங்கப்படுதல் அடிக்கடி இடம்பெறும். வீட்டு இலக்கம் இன்மையால் ஒரே பெயரைக்கொண்ட நபர்கள் ஒரு தோட்டத்தில் இருந்தால் கடிதங்கள் யாருக்குரியவை என்பதைக் கண்டறிய முடியாது. கணக்கப்பிள்ளை அல்லது தபால்காரர் கடிதம் யாருக்குரியது என ஊகிக்கிறாரோ அவருக்குக் கடிதத்தை முதலில் வழங்குவார். அவர் அதனை உடைத்துப் பார்த்து, தனக்குரியது இல்லை என்றால் மீளக் கையளிப்பார் அல்லது உரிய நபருக்கு வழங்குவார். சிலவேளைகளில் அவ்வாறு மாறி கொடுக்கப்படும் கடிதங்கள் உரிய நபரின் கரங்களை எட்டுவதுமில்லை. இவை கடிதம் கொண்டிருக்கும் இரகசியத் தன்மையைப் பேணுவதிலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.

அவசரக் கடிதங்களும் தாமதமாகவே கிடைத்தன. பதிவுத் தபாலில் வருகின்ற கடிதங்கள் மிகுந்த தாமதத்துக்கும் சிரமத்துக்கும் பின்னரே பெற்றுக்கொள்ளப்பட்டன. பதிவுத் தபால் வந்திருந்தால் அச்செய்தியை அஞ்சல் அலுவலர் துண்டுச் சீட்டில் குறிப்பிட்டு, தோட்டத்தின் பிரதான காரியாலயத்துக்கு அனுப்புவார். வழமையாகக் கடிதங்கள் அனுப்பப்படும் செயன்முறையில் அத்துண்டு வந்துசேரும். அதனைப் பெற்றுக்கொண்ட நபர் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனைக் கொடுத்து, தனக்கான பதிவுத் தபாலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தோட்டத்தில் வேலை செய்பவர் ஒருநாட் கூலியைத் தியாகம் செய்தால் தான், ரங்கலை நகரிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் தபாலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையால் அவசரமாக அனுப்பப்படும் தகவல்கள் தாமதமாகவே கிடைக்கப்பெற்றன. நேர்முகத் தேர்வுகளுக்காகக் காத்திருப்பவர்கள் நேரடியாகத் தோட்டக் காரியாலயத்துக்குச் சென்று தமக்கான கடிதங்கள் வந்துள்ளனவா என அடிக்கடி பரீட்சித்துக்கொள்வர். இந்நடைமுறையால் சிலர் தமக்கான அரிய வாய்ப்புகளை இழந்துள்ளனர். நான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில், புலமைப் பரிசில் ஒன்றுக்காக எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் அவ்வாறு காலதாமதமாகி, அப்புலமைப் பரிசில்  வழங்கும் நிகழ்வு முடிவடைந்த பின்பே கிடைத்தது.

கடிதம் வழங்குதலில் 2008ஆம் ஆண்டில் தான் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எங்கள் தோட்டத்துக் கடிதங்களை நேரடியாக வழங்குவதற்குத் தபால் உத்தியோகத்தர் ஒருவர் அரசால் நியமிக்கப்பட்டார். பெருந்தோட்டப் பகுதிகளில் வதியும் மக்களின் வீடுகளுக்குச் சென்று கடிதங்களை ஒப்படைக்கும் புதிய முறையை ஏற்படுத்துவதற்காகக் கடித ஒப்படைப்புச் செய்யும் (தோட்டப்பகுதி அஞ்சலர்களை) இணைத்துக் கொள்ளல் என்ற திட்டத்தை அரசு கொண்டுவந்தது. எம்.எஸ். செல்லசாமி அதன்போது தபால் துறைக்கான பிரதி அமைச்சராக இருந்தார். 400 தோட்டப்பகுதி அஞ்சலர்களை உள்வாங்குவதாக இருந்து முதலில் 386 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. மலையக வரலாற்றில் – மலையக மக்களின் முகவரி பிரச்சினையைத் தீர்க்கும் செயன்முறையில் இதுவொரு முக்கியமான அடைவெனலாம். தமக்கான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள பெருந்தோட்ட நிர்வாக அமைப்புக்குள் தங்கியிருந்த மக்களை இத்திட்டமே முதன்முதல் அந்நிலையிலிருந்து விடுவித்து, கடிதங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள வழிசமைத்தது. இதன்மூலம் காலதாமதமாதல் தவிர்க்கப்பட்டாலும் சொந்த முகவரி இன்மையால் ஏற்பட்ட ஏனைய பாதிப்புகள் எவையும் நீங்கவில்லை. தோட்டங்களுக்குள் கடிதங்களை ஒப்படைக்கும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத தோட்டங்கள் பலவும் உள்ளன. அவை கடிதங்களை வழங்குவதில் மரபார்ந்த முறையையே பின்பற்றி வருகின்றன.

தற்காலத்தில் பெரும் நெருக்கடியைத் தந்துவரும் இம்முகவரி பிரச்சினை, கடிதங்களை உரிய நபருக்கு, உரிய காலத்தில் வழங்குவதில் உள்ள மட்டுப்பாடுகள் முதலானவை குறித்த காலனியக் கால ஆவணங்களை அவதானிக்கும்போது அவை மிகுந்த நெருடலையும் அயர்ச்சியையும் தருகின்றன.

இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை அஞ்சல் அலுவலக அதிபர் தோட்டத்துரைமார் சங்கத்துக்கு அனுப்பிய தகவலில், முழுமையான முகவரி – சரியான முகவரி இன்மையால் 1922 ஆம் ஆண்டு 20 572 கடிதங்களும் 1923 ஆம் ஆண்டு 26 484 கடிதங்களும் தோட்டத் தொழிலாளர்களிடத்தில் கையளிக்க முடியாது இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சாதாரணமானதல்ல. 1921ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி 6 06 921 இந்தியத் தமிழர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் 87.4 வீதத்தினர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு (ஏறக்குறைய ஐந்து லட்சம்) வந்த கடிதங்களுள் 26 000 கடிதங்கள் மீள இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உரிய நபருக்குக் கையளிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்ட கடிதங்கள் எத்தகைய செய்திகளைச் சுமந்திருக்கும், அவற்றுள் துயரச் செய்திகள் எத்தனை, மகிழ்ச்சியான செய்திகள் எத்தனை, யார் யாருக்கு எழுதிய கடிதங்கள் அவை, கடிதங்களுக்குப் பதில் இன்மையும் கடிதங்கள் மீள இந்தியாவுக்கே அனுப்பப்படுதலும் கடிதங்களை அனுப்பியவருக்கு எத்தகைய உணர்ச்சி மோதல்களைத் தோற்றுவித்திருக்கும், அனுப்பப்படும் கடிதங்களுக்குப் பதில் கடிதமோ தமிழக உறவுகளிடமிருந்து வேறு கடிதங்களோ கிடைக்கப்பெறாதபோது நாடுவிட்டு நாடுவந்து உழைப்பே வாழ்வாகக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தகைய உள நெருக்கடிகள் தோன்றியிருக்கும்,  கடிதப் பரிமாற்றத்தில் நிலவிய சிக்கல்களால் எத்தனை உறவுகளின் தொடர்புகள் அறுந்திருக்கும் என்பனவற்றையெல்லாம் நினைக்கும்போது எம்மூதாதையரின் துயரம் நெஞ்சை அடைக்கிறது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அஞ்சல் அதிபர் தோட்டங்களை அண்மித்த அஞ்சல் அலுவலகத்திற்குத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு வழங்காதவிடத்து தொழிலாளர்கள் பயன்படுத்துகின்ற பெயர், முழுமையான முகவரி ஆகியவற்றைக் கடிதங்களில் இடம்பெற செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகக் கடிதங்களைக் கையளிப்பதில் ஏற்பட்டு வந்த சிக்கல்களும் கையளிக்க முடியாத கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அஞ்சல் அதிபரின் இந்நடவடிக்கைக்குக் காரணமெனலாம். இத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறியமுடியவில்லை. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை எனலாம். அதனாலேயே அஞ்சல் அதிபர், “தோட்டங்கள் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அச்சிடப்பட்ட முகவரி கொண்ட கடித உறைகளை வழங்கி, அவற்றைக் கடிதங்களுடன் வைத்து இந்தியாவுக்கு அனுப்பி, பதில் கடிதங்களை அவற்றில் பெறலாம்” என்ற மார்க்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழிமுறை ‘ஒன்றிணைந்த மலேசியாவில்’ முன்வைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள அஞ்சல் அதிபர், மலேசிய அறிக்கையில் இடம்பெறும் அப்பகுதியையும் இணைத்துள்ளார். அப்பதிவில் “உரிய நபருக்குக் கையளிக்க முடியாமல் திருப்பி அனுப்பப்படும் கடிதங்களுள் 50 வீதமானவை இந்தியத் தொழிலாளர்களுக்கு உரியவை என்றும் 1923ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 20 000 கடிதங்கள் இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே, பெருந்தோட்டத் தொழிலுக்காகப் புலம்பெயர்ந்த நாடுகள் யாவற்றிலும் இம்முகவரி பிரச்சினையும் கடிதங்களைக் கையளிக்க முடியாத நிலையும் இருந்துள்ளன. அவற்றால் புலம்பெயர்ந்து தோட்டத்தொழிலில் ஈடுபட்டவர்களும் இந்தியாவிலிருந்த அவர்களது உறவுகளும் மிகுந்த நெருக்கடிகளுக்கும் உணர்ச்சி மோதல்களுக்கும் உள்ளாகியிருப்பர் என்பது வெளிப்படை யதார்த்தமாகும்.

தோட்டத்துரைமாரும் அஞ்சல் அதிபரும் கடிதங்கள் கிடைக்கப்பெறாத தொழிலாளர் நிலையில் இருந்து இப்பிரச்சினையை அணுகுவதற்கு முனையவில்லை என்பதை அவர்களின் கருத்துக்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கடிதங்களைக் கையளிக்க முடியாமையும் மீள இந்தியாவுக்கே அனுப்புவதும் அஞ்சல் திணைக்களத்துக்குச் சுமையாக இருந்துள்ளன. அதனாலேயே தோட்டத்துரைமார் சங்கத்தின் மூலம் அப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண அஞ்சல் அதிபர் முயற்சி செய்துள்ளார். ஆனால், தோட்டத்துரைமார் அப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. அவர்களின் கருத்துக்கள் தமக்கான கடிதங்களைத் காலதாமதமின்றிப் பெற்றுக்கொள்வதிலேயே மையங்கொண்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை கொழும்பை வந்தடையும் ஆங்கிலக் கடிதங்கள் வழமையாகத் திங்கட்கிழமை மாலை கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. அக்காலதாமதத்தை விரும்பாத தோட்டத்துரைமார், திங்கட்கிழமை காலையிலேயே அக்கடிதங்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவ்வாறு அனுப்புவது செலவினை அதிகரிக்கும் என அஞ்சல் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தோட்டத்துரைமார் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கடிதங்களைத் தாமதமின்றி அனுப்புவதற்குத் தேவையான நிதியினை ஒதுக்குமாறு கேட்கவேண்டும் என முடிவு செய்துள்ளனர். தமக்குரிய கடிதங்கள் சிறிய கால தாமதமாவதையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், தொழிலாளர்களின் கடிதங்கள் கால தாமதமாவதையோ உரிய முகவரி இன்மையால் கடிதங்கள் திருப்பி அனுப்பப்படுவதையோ கவனத்தில் கொள்ளவில்லை. அவர்களைப் போலவே சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் அரச மற்றும் தனியார் தோட்ட நிர்வாகிகளும் அம்மக்களின் முகவரி பிரச்சினையைத் தீர்ப்பதில் கரிசனை கொள்ளவில்லை. 

மலையக மக்கள் இலங்கையில் குடியேறிய காலம் முதல் இந்த முகவரி பிரச்சினையை எதிர்கொண்டு வந்துள்ளனர் என்பதை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இப்பிரச்சினையினால் ஏற்படுகின்ற நிர்வாகம் சார்ந்த இடர்பாடுகள் மட்டும் உணரப்பட்டுள்ள போதிலும் அப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலான உரிய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. இன்று அம்மக்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் கடந்த பின்பும் அப்பிரச்சினை தீர்க்கப்படாது தொடர்கிறது.

உலக அரங்கில் இலங்கைத் தேயிலை - சிலோன் டீ மூலம் இலங்கைக்கான அடையாளத்தை - முகவரியைப் பெற்றுத்தந்த அம்மக்கள், தமக்கெனச் சொந்த முகவரி அற்று வாழும் அவலம் நீடிக்கிறது. இந்த அநீதி இலங்கையின் ஆட்சியாளர்களதும் தோட்ட நிர்வாகிகளதும் மனங்களை இன்னும் அசைக்கவில்லை; இலங்கையின் ஏனைய இனங்கள், மலையக மக்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முகவரியற்ற வாழ்வையோ அதனால் அவர்கள் முகங்கொள்கின்ற நெருக்கடிகளையோ இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை; இரு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் பிற்படுத்தப்பட்ட இவ்வாழ்க்கை நிலைமை மனிதஉரிமை காவலர்களது கண்களை இன்னும் உறுத்தவில்லை. இவற்றையிட்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆளுந் தரப்புகளும் மலையக மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்ட - சொல்லிக் கொள்ளும் அரசியல் வாதிகளும் முதலில் வெட்கப்பட வேண்டும். மூன்றாவது நூற்றாண்டின் விடியலில் கால்பதித்துள்ள அம்மக்கள் இந்நூற்றாண்டிலேனும் இப்பிரச்சினையிலிருந்து விடுபட்டு, இலங்கையின் முழுப் பிரஜையாக வாழ்வதை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும். 

நன்றி  - வையம் நவம்பர். 2024


தேசிய இனப் பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கியமான ஆரம்பம்! - கலாநிதி சர்வேந்திரா

தேசிய மக்கள் சக்தி தோழர்களுக்கு ஒரு மடல்!

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே நான் வாக்களித்த முதலாவது தேர்தல். இத் தேர்தலில், அப்போது நவசமஜமாஜக் கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காராவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத் தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும் எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை.

நான், வாசுதேவா நாணயக்ககாரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத் தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை என அவரும் அவரது கட்சியும் எடுத்த நிலைப்பாடு சார்ந்துமே அவரை ஆதரித்தேன். பின்னர் அவர் நிலை மாறிப் போனது வரலாற்றுத் துயரம்.

என்னைப் பொறுத்தவரை எனது அரசியல் முடிவுகளில் கொள்கை நிலைப்பாடே முன்னிலைப்படும். இதில் இன, மத, சாதி, பால் வேறுபாடுளுக்கு இடமளிப்பதில்லை. அந்த தார்மீக உணர்வுடன்தான் இதனை எழுதுகிறேன்.

நான் போர் காரணமாக புலம் பெயர்க்கப்பட்டு நோர்வே வந்தடைந்தவன். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து, போர் நெருக்கடி உந்தித் தள்ள தாயக மண்ணை விட்டு வெளியேறியவன். இவ் வெளியேற்றம் தந்த குற்ற உணர்வுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு தனிமனிதனாக, எனது உணர்வின் நிலை நின்று இப் பதிவை எழுதுகிறேன். என் போன்ற உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

புலப்பெயர்வு வாழ்க்கை எம்மை புதியதொரு நாட்டின் குடிமக்கள் ஆக்கினும், நான் பிறந்து வளர்ந்த மண்ணை எனது தாயகமாக உணர்கிறேன். இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர் தேசத்தின் அங்கமாக என்னை இனங் கண்டு, நாடு கடந்த சமூக வெளியில் தாயகத்துடன் உறவுகளைப் பேணிய வண்ணம் வாழ்ந்து வருகிறேன். இதனால், ஏற்படும் ஈடுபாடு, அக்கறையின் காரணமாகவே இம் மடலை எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை, இலங்கைத்தீவு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களை/ தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதும், அதற்கான அங்கீகாரமும், தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்திரவாதமும் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். 

இனங்களுக்கிடையேயான சமத்துவம் பேணப்பட்டு, இலங்கைத்தீவில் வாழும் தேசிய இனங்கள் ஐக்கியமாகவும் நட்புணர்வுடனும் வாழும் சூழல் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகையதொரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 

இப்போது எதோதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. நீண்ட போர் நடந்து முடிந்து விட்டது. தமிழர் தாயகத்தில் பெருங்குருதி சிந்தப்பட்டு விட்டது. இழப்பின் வலியும், குருதியின் கனதியும் இதுவரை ஆட்சிபீடம் ஏறிவர்களுக்குப் புரிந்திருக்காது. தேசிய மக்கள் சக்தி தோழர்களே. உங்களுக்கு இவை நன்கு புரியும் என நம்புகிறேன். எனினும் சிந்தப்பட்ட குருதியில் உங்களின் பங்கும் உண்டு என்பது ஒரு வரலாற்று முரண்நகை அல்லவா! 

தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றியின் பின்னும்கூட தேசிய இனப்பிரச்சினை குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. சமத்துவமாக அனைத்து மக்களும் நடாத்தப்படுவார்கள் என்பதுவும், இதில் இன, மத பேதம் இருக்காது என்பதுவும், இனித் தமிழ் மக்கள் இன அடிப்படையில் போராட வேண்டிய தேவை இல்லை என்பதுவும் தேசிய மக்கள் சக்தியின் கருத்து எனப் புரிந்து கொள்கிறேன்.

மன்னிக்க வேண்டும், தோழர்களே! இவ் விடயத்தில் எனது பார்வை வேறுபட்டது. இலங்கைத் தீவின் தற்போதய சூழலில், மக்களுக்கிடையேயான சமத்துவம் வருவதற்கு தேசிய இனங்களின் இருப்பு அங்கீகரிக்கப்படல் அவசியமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

வர்க்க மேலாதிக்கமும், ஒடுக்குமுறையும் உள்ள ஒரு நாட்டில், நாம் எல்லாரும் சமத்துவமானவர்கள் எனக் கூறி, தொழிலாளர் இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ,

ஆண் மேலாதிக்கமும், பெண் ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் ஆண், பெண் எல்லோரும் சமம் என்று கூறி பெண்ணிய இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ,

சாதிப் பாகுபாடும், ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் மனிதர்கள் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் ஒரு வாக்கு என்ற ரீதியில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று கூறி, சமூக நீதிக்கான இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ,

அதேபோல்,

எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள தேசிய இனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் நாடாளுமன்றம், அரச இயந்திரம், நீதிமன்றங்கள், ஊடகம் ஆகியன உள்ளதொரு நாட்டில், 

அந்த மேலாதிக்கத்தின் ஊடாக எனைய தேசிய இனங்களை ஒடுக்கிய வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில்,

இவ் ஒடுக்குமுறைகளின் விளைவாகத் தோற்றம் பெற்ற போரில் இலட்சக்கணக்கான மக்களும், போராளிகளும் உயிரிழந்த வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில்,

தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத ஒரு நாட்டில்,

நாம் அனைவரும் சமம்: அனைத்து மக்களும் சமமாக நடாத்தப் படுவார்கள்; ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தமது உரிமைகளுக்காகக் போராடுவது அவசியம் இல்லை எனக் கூறுவதும் அந்தளவுக்கு அபத்தமானதாக எனக்குத் தெரிகிறது.

மக்கள் எல்லோரும் சமமாக உணர்வதற்கு அவர்களது அரசியற் தலைவிதியை அவரவர்கள் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். இன்றைய சூழலில், அரச கட்டமைப்பை பெரும்பான்மை இன மக்கள் மட்டுமே தீர்மானித்தல் தொடரும் நிலையில் அர்த்தபூர்வமான சமத்துவம் எவ்வாறு உருவாக முடியும்? இது பற்றிச் சிந்திக்கும் போது ஒரு உவமானம் நினைவுக்கு வருகிறது.

ஒரு குடியிருப்பில் வாழும் வெவ்வேறு உணவுப் பண்பாடு கொண்ட மக்கள் மத்தியில், எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்டவர்கள் தீர்மானிக்கும் அதிகாரத்தை தமது கைகளில் வைத்துக் கொண்டு, தமக்கு விருப்பமான உணவுகளையே சமைத்து அதனை எல்லோருக்கும் பரிமாறி, நாமும் இதனைத்தான் உண்கிறோம், நீங்களும் இதனையே உண்கிறீர்கள். நாம் எல்லோரையும் சமத்துவமாகத்தான் நடத்துகிறோம் எனக் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தமாகவே தற்போதய சூழலில் இலங்கைத்தீவில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற கூற்றும் எனக்குத் தெரிகிறது.

நீங்கள் எல்லோரும் சமத்துவமானவர்கள் எனக் கூறும் போது தமிழ் மக்களுக்கு அச்சம் தரும் இன்னொரு விடயமும் உண்டு. நாம் எல்லோரும் இலங்கையர்கள்; எல்லோரும் எங்கும் குடியேறி வாழலாம். இதில் பாகுபாடு எதுவும் காட்ட மாட்டோம் எனக் கூறி அதனை நீங்கள் ஊக்குவித்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களை இழந்து விடும் அபாயம் உண்டு. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மிக அடிப்படையாக இருந்தது திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்களே. 

ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கடலில் வாழும் எல்லா மீன்களும் ஒன்றை ஒன்று விழுங்கி உயிர் வாழலாம்; அதுதான் சமத்துவம் என்றால், நடைமுறையில் பெரிய மீன்தான் சிறிய மீனை விழுங்கும். சிறிய மீனால் பெரிய மீனை விழுங்க முடியாது. அதேபோல், எல்லோரும் எங்கும் குடியேறலாம் என்பது அரச கொள்கையாக வந்து, அது ஊக்குவிக்கப்பட்டால் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமான சிங்கள மக்கள் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் குடியேறி தமிழர் பகுதிகளை விழுங்கி விடல் சாத்தியமானது. ஆனால், எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்கள் எவ்வளவுதான் பரவிப் பரந்தாலும் சிங்கள மக்களின் தாயகப் பிரதேசங்களை விழுங்கி விட முடியாது. இதனால் இத்தகைய சமத்துவத்தால் தமது பாரம்பரியத் தாயகப் பிரதேசம் பறி போய் விடும் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு உண்டு.

தேசிய மக்கள் சக்தி தோழர்களே! 

இவற்றயெல்லாம் சுட்டிக் காட்டும் அதேவேளை உங்களுடனான உரையாடலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம். 

இன, மதரீதியில் சிந்திக்காது நாம் இலங்கையராக/ சிறிலங்கராக சிந்திப்போம் என்கிறீர்கள். உங்கள் சிந்தனை எமக்குப் புரிகிறது. 

அப்படி இலங்கையர் எனச் சிந்திப்பதற்கு இன, மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு தேச நிர்மாணம் நிகழ்திருக்க வேண்டும். அத்தகையதொரு தேச நிர்மாணம் இலங்கைத் தீவில் நிகழவில்லை. சிங்களத் தேசிய இனத்தின் மேலாதிக்கம் ஏனைய தேசிய மக்கள் மக்கள் மீது அரச கட்டமைப்பின் ஊடாகத் திணிக்கப்பட்டது. இதனால், பேரினவாத ஒடுக்குமுறையை எதிர் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தம்மைத் தேசமாக சிந்திக்கும் எண்ணம் வலுப்பட்டது.

மதரீதியாகவும் அரசு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாகத்தான் இப்போதும் உள்ளது. இன, மத சமத்துவம் பேசும் உங்களாலும் அரசை மதசார்பற்ற அரசாக மாற்றுவோம் என்ற அறிவிப்பை இன்றுவரை செய்ய முடியாமல் இருக்கிறது. இந் நிலை இருக்கும் போது எங்கிருந்து சமத்துவம் வரும்? 

நாங்கள் இனவாதிகள் இல்லை என்கிறீர்கள். அதுவும் எமக்குப் புரிகிறது. தனிப்பட்ட மனிதர்களாக, இனவாதிகளாக இல்லை என்று நீங்கள் கூறுவதை நாம் மறுக்கவில்லை. நீங்கள் தனிப்பட்ட முறையில் இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் உங்கள் அமைப்பின் செயற்பாடுகள் இனவாத அழுக்கு கொண்டவையாக அமையவில்லை என உங்களால் உரத்துக் கூற முடியுமா? 

மேலும், நீங்கள் தற்போது தலைமை தாங்கும் அரசு பேரினவாத மேலாதிக்கம் கொண்ட கட்டமைப்பாக உள்ளது. இக் கட்டமைப்புத்தான் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளைப் புரிந்தது. இவ் ஒடுக்குமுறைகள் இனவழிப்புப் பரிமாணம் கொண்டவை என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு எழுந்தது. 

நாம் அரசியலில் பேசும் பேரினவாத மேலாதிக்கம் என்பது தனிமனிதர் சார்ந்ததல்ல. அது அரசியலமைப்பைச் சார்ந்தது. அரச கட்டமைப்பைச் சார்ந்தது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் சமத்துவமும், சம உரிமையும் தனி மனிதர் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்தத் தனிமனித சமத்துவமும், சுதந்திரமும் பேரினவாத அரச கட்டமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், இது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை ஏனைய மக்கள் மீது திணிக்கும் ஒரு பொறிமுறையாக அமைந்து விடுகிறது. மாறாக, நாம் எதிர்பார்ப்பது மக்களாக எமது கூட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே. தமிழ் மக்களாக நமது தலைவிதியை நாமே நிர்ணயித்து வாழ உரித்துடைய ஓரு தேசிய வாழ்வையே. அதற்கான ஓர் அரசியல் ஏற்பாட்டையே.

எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. . சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்தும், உருவாக்கிய அச்சங்களில் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுபடுவது இலகுவானதல்ல, தோழர்களே!

இலங்கைத்தீவில் வாழும் மக்களின் தேசிய இனத் தகைமையினை அங்கீகரித்து, சிறிலங்கா அரச கட்டமைப்பு பேரினவாத மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, எத்தகைய ஏற்பாடுகளின் மூலம் தேசிய இனங்களுக்குடையில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியம் என ஆராய நீங்கள் விரும்பும் பட்சத்தில் உரையாடலுக்கான அரங்கு இலகுவில் உருவாகி விடும்.

குறைந்த பட்சம், இலங்கைத்தீவில் தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று உண்டு; அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என நீங்கள் திறந்த மனதுடன் ஆராய விரும்பபின் உரையாடல் வெளி விரியும்.

இலங்கைத்தீவின் தேசியப் இனப் பிரச்சினயை அங்கீகரித்து, இதற்குப் பேரினவாத மேலாதிக்க அரச கட்டமைப்பைத்தான் காரணம் என்பதையும், இவ் ஒடுக்குமுறையில் கடந்த காலத்தில் நாங்களும் பங்குபற்றியிருக்கிறோம்; அது தவறு என்பதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த காலடியை முன் வையுங்கள். அது ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்கும். 

நன்றி - தினகரன்


வரலாற்றில் இருவேறு ஜே.வி.பி.க்களும் ரணில் விக்ரமசிங்கவின் திரிபும் - என்.சரவணன்

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா -இந்திரா ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு ஜேவிபி அன்று எதிர்த்ததாகவும், மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் இயங்கியதாகவும் ரணில் விக்கிரமசிங்க 10ஆம் திகதியன்று நுவரெலியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். இன்றைய ஜேவிபி அதற்காக மலையக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவ்வுரையின் போது காட்டமாகக் கூறியிருந்தார்.

இது ஒரு கயமையான ஒரு பிரச்சாரம். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் அரசியல் சூழ்ச்சிக்காக வரலாற்றுத் திரிபுகளை செய்யக்கூடியவராக இதற்கு முன்னர் இனங்காணப்படாத நபர். ஆனால் தற்போதைய அரசியல் வங்குரோத்துத் தனம் அவரை அதையும் செய்யத் தூண்டியிருக்கிறது என்றே கூறவேண்டும்.

மலையக மக்களுக்கான குடியுரிமை பிரச்சினைகள் 1948 ஆம் ஆண்டளவில் எழுந்தபோது ஜேவிபி தோற்றம் பெற்றிருக்கவில்லை. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் அதே ஆண்டு அதாவது 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 இல் செய்து கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1965 ஆம் ஆண்டு தான் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள 300,000 இந்திய தோட்டத்  தொழிலாளர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்குவதும், 525,000 பேரை  இந்தியாவுக்கு அனுப்புவதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய  எஞ்சிய 150,000 இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வதுமே சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சமாக இருந்தது.

1974 ஜூன் 28, அன்று கையெழுத்திடப்பட்ட சிறிமா – இந்திரா ஒப்பந்தத்தின் படி மீதமுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவிதியை தீர்மானிப்பது பற்றியும் பேசப்பட்ட ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தம் செய்துகோள்ளப்பட்ட 1974 இல் ஜேவிபி அரசியல் களத்திலேயே இல்லை. 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அது  ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கம். மேலும் அக்கிளர்ச்சியின் போது பலர் படுகொலை செய்யப்பட்டும், எஞ்சிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு அரசியல் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்த காலம் அது. அக்கட்சியின் தலைவர்கள் 1977 இன் பின்னர் தான் விடுதலையாகி மீண்டும் அக்கட்சி மெதுமெதுவாக அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது. எனவே 1974 ஒப்பந்தத்தின் மீது வினையாற்ற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் விட்டுவைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை ரணில் அறியாமல் இல்லை. ஆனால் இந்த அரசியல் புழுகு மலையக மக்கள் மத்தியில் எடுபடும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வந்தது. மலையக மக்களின் அரசியல் அறிவை குறைத்து மதிப்பிடும் ஒருவராக ரணிலைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நயவஞ்சகமாக மலையக மக்களிடம் சென்று அவர்களை ஜேவிபிக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி அதை நம்பவைக்க இந்த விஷமப் பிரச்சாரத்தில் ரணில் ஈடுபட்டிருந்தார்.

இன்றைய ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி) இந்திய வம்சாவளியினர் குறித்த கடந்தகால பார்வைகள் ஆரோக்கியமானதல்ல என்பது உண்மையே. அது இந்திய வம்சாவளியினருக்கு எதிரான கருத்து நிலையில் இருந்து உருவானதள்ள. அது இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். அக்கருத்தாக்கம் நாளடைவில் இந்திய வம்சாவளியினரையும் பாதித்தது உண்மை. ஆனால் 1989 இல் அழிக்கப்பட்டு மீண்டும் அரசியல் களத்துக்கு வந்ததன் பின்னர் குறிப்பாக கடந்த 35 வருடங்களாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான எந்த இனவாத போக்கையும் கொண்டதில்லை. மாறாக குடியுரிமை பிரச்சினையை முற்றிலும் தீர்க்க எந்த தேசிய கட்சியோ, மலையக கட்சியோ, தமிழ் கட்சியோ முன் வராத போது 2003 ஆம் ஆண்டு யூலை மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து இனி மேல் குடியுரிமையற்ற எந்தவொரு இந்திய வம்சாவழித் தமிழரும் இலங்கையில் இல்லை என்கிற நிலையைக் கொண்டு வந்தது ஜேவிபியினரே. அவர்கள் பிரேரித்த அந்த அந்த சட்டம் 2003 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பிரசாவுரிமை (திருத்தச்) சட்டம் என்கிற சட்டமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த கால சிறு தவறுகளுக்குமான பிராயச்சித்தமாக அந்த மாபெரும் தீர்வு அமைந்தது என்பதே நிதர்சனம்.

50களில் இயங்கிய இன்னொரு ஜேவிபி

இதேவேளை அவர் அதற்கு முன்னர் இருந்த ஜேவிபி என்கிற கட்சியைத் தான் இங்கே திரித்து தொடர்புபடுத்தினாரா என்று சந்தேகிக்க வேண்டிருக்கிறது.

1950 – 1960களில் கொடிகட்டி பரந்த கட்சிகளிள் ஒன்று கே.எம்.பி.ராஜரத்னவின் தேசிய விடுதலை முன்னணி கட்சியாகும். சிங்களத்தில் அக்கட்சியை ஜாதிக விமுக்தி பெரமுன (JVP) என்று அழைக்கப்பட்டது. இக்கட்சியின் சார்பில் கே.எம்.பி ராஜரத்னவும் (வெலிமட தொகுதி) அவரது மனைவி குசுமா ராஜரத்னவும் (ஊவா பரணகம தொகுதி) பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏக காலத்தில் அங்கம் வகித்தார்கள். நான்கு தடவைகள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவர் குசுமா.

குசுமா ராஜரத்னவுடன் கே.எம்.பி ராஜரத்ன

1957 ஆம் ஆண்டு தேர்தல் முறைப்பாடொன்றைத் தொடர்ந்து கே.எம்.பி.ராஜரத்னவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதும் வெலிமட தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரின் மனைவி குசுமா ராஜரத்ன போட்டியிட்டு 11,000 அதிகபடியான வாக்குளில் வென்றார். அதுபோலவே 1960 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த இருதேர்தல்களிலும் குசுமா வென்றார். அவர் வென்று பாராளுமன்றத்துக்கு சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறித்த வாகத்தில் கோலாகலமாக அழைத்து வரப்பட்ட்டார். சிங்களம் மட்டும் சட்டத்தைத் தொடர்ந்து 1958 இல் சிங்கள ஸ்ரீ எழுத்து வாகனங்களின் இலக்கத் தகடுகளில் பொரிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் அதனை எதிர்த்து தமிழ்ப் பிரதேசங்களில் அப்போது அதற்கு பெரும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்ப் பிரதேசங்களில் அதனை எதிர்த்து தமது வாகனங்களில் தமிழ் “ஸ்ரீ” எழுத்து பொறித்த வாகன இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தினர். தமிழ் “ஸ்ரீ” எழுத்து பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும்  ஏன் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடும் கண்டனத்தையும், அழுத்தத்தையும் கொடுத்த வந்தார் குசுமா.

தமிழ்ப் பிரதேசங்களில்  சிங்களத்தைப் போல தமிழும் அரச கரும மொழியாக இருக்கும் என்கிற சட்டத்தை நீக்கும்படி அவர்கள் கடும் அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வந்தார்கள். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப் போகிறார்கள் என்றும் அதைப் பார்த்துக் கொண்டு ஐ.தே.க. அமைதியாக இருக்கிறது என்றும். அது மட்டும் நிகழ்ந்தால் சிங்களவர்களை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம் என்று அவர் கூறினார் குசுமா. 

குசுமா ராஜரத்ன ஒருமுறை யூகோஸ்லாவிய தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு குரலெழுப்பினார். யூகோஸ்லாவிய தூதுவர் ஜோன்ன் கொஸ்வின் சமசமாஜ தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து தமிழ் கத்தோலிக்க சோசலிச அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறார் என்று அவர் அப்போது குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்டதும் சமசமாஜக் கட்சியினர் கொந்தளித்தனர். இறுதியில் தூதுவரும் நாடு திரும்ப வேண்டியதாயிற்று. அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்திய முதலாவது பெண் குசுமா ராஜரத்ன என்று கூறலாம்.

சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட அரசு ஆதரவு தொழிற்சங்கத் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமானும் முஸ்லிம் இனத்து அசீஸும் இந்திய இராணுவத்தின் உளவாளிகள் என்றும், ஒன்றரை மில்லியன் கள்ளத்தோணிகளை நாட்டிற்குள் படையெடுப்பதற்கு வழிகளை ஏற்படுத்துவதே அவர்களின் திட்டம் என்றும் குசுமா வாதிட்டார்.

1950 களின் நடுப்பகுதியில் பண்டாரநாயக்கவை சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுத்த சக்திகளில் ஒன்றான சிங்கள பாஷா பெரமுனவைச் சேர்ந்த எப்.ஆர்.ஜெயசூரிய, கே.எம்.பி.ராஜரத்ன ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்டது தான் ஜேவிபி எனப்படும் “ஜாதிக விமுக்தி பெரமுன”. 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஆளுங்கட்சியில் இருந்து விலகிய கே.எம்.பி.ராஜரத்ன ஐந்து நாட்களாக தொடர்ந்த சாகும்வரை  உண்ணாவிரதப் போராட்டம் அன்று சிங்கள பௌத்த தரப்பை அதிகமாக தூண்டியது ஈற்றில் பண்டாரநாயக்கவின் வீடு வரை சென்று அவ்வொப்பந்தத்தை கிழிக்கவைத்தனர். அவ்வாறு சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி உருவாக்கப்பட்டது தான் அவரி ஜே.வி.பி. கட்சி.

1958 கலவரத்த்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

தமிழரசுக்கட்சி 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்த போது தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை இந்த ஜாதிக ஜாதிக விமுக்தி பெரமுன பரப்பியது. 1958 ஆம் ஆண்டு இந்த வதந்தியே இனக் கலவரத்துக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தது. அது மட்டுமல்ல 1958 மே மாதம் திகழ்ந்த கலவரத்துக்கான பழியை சுமத்தி அன்றைய பண்டாரநாயக்க அரசாங்கம் இரு கட்சிகளை தடை செய்தது. ஒன்று தமிழரசுக் கட்சி அடுத்தது இந்த ‘ஜேவிபி’. அவ்வாண்டு ஒக்டோபர் 27 வரை இத்தடை நீடித்தது. 1958 இல் தமிழ் மொழி விசேட சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது  யூன் மாதம் தமிழரசுக் கட்சியின் எம்.பி.களையும் ஜே.வி.பி. கட்சியின் எம்.பி ராஜரத்னவையும் வீட்டுத் தடுப்புக் காவலில் வைத்தது அரசு.

இந்த காலப்பகுதியில் தீவிர இனவாத செயல்களில் ஈடுபட்ட மூன்று அமைப்புகளை ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். தர்ம சமாஜ கட்சி (D.P), ஜாதிக விமுக்தி பெரமுன (JVP), சிங்கள மகாஜன பெரமுன (SMP).

“இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு பெரும் பொருளாதாரத் தலையிடி. அவர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்” என்று இந்த தேசிய விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யினர் வெளிப்படையாக கூறி வந்தார்கள். (Ceylon Daily News, January 15, 1964)

“தமிழர்களின் தோலில் செருப்பு தைத்து அணிவேன்” என்று குரூரமாக இனவாதத்தை வெளிப்படுத்திய கே.எம்.பி.ராஜரத்னவும் கூட்டரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.

1960 ஆம் ஆண்டு யூன் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. 1965 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தில் பங்கேற்றது. வேடிக்கை என்னவென்றால் கே.எம்.பி.ராஜரத்னவின் ஜேவிபியும், தமிழரசுக் கட்சியும் பங்காளிக் கட்சிகளாக அந்த தேசிய அரசாங்கத்தில் இருந்தன. 1970 ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தில் ராஜரத்ன மீண்டும் ஒரு கெபினட் அமைச்சராக ஆனார்.


கே.எம்.பி.ராஜரத்ன 2011ஆம் ஆண்டு மரணமான போது அவரின் நினைவாக பாராளுமன்றத்தில் பலர் நீண்ட உரையை ஆற்றினர். அன்று உரையாற்றியவர்களின் உரைகளில் சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தன, ரணில், சூரியப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் உரைகள் கவனிக்கப்படவேண்டியவை. இவர்களில் சூரியப்பெரும தனது உரையில் “அந்த ஜே.வி.பி. கட்சியின் முதலாவது பொதுச்செயலாளர் நானே. எப்.ஆர்.ஜெயசூரிய, பேராசிரியர் திலக் ரத்னகார, கலாநிதி ஹரிச்சந்திர விஜேதுங்க, பெசில் சில்வா போன்றவர்களும் தலைமையில் இருந்தார்கள் என்கிறார். அன்று ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய நினைவு உரையின் இறுதியில் “அவர் அன்று ஆரம்பித்த ஜாதிக விமுக்தி பெரமுன”வின் மூலம் தான் முதற் தடவையாக ஜே.வி.பி. என்கிற பெயரும் புழக்கத்துக்கு வந்தது என்கிறார். (24.06.2011 ஹன்சாட்). அதே உரையில் பண்டா செல்வா ஒப்பந்தம், சிங்களம் மட்டும் சட்டம் என்பவற்றின் போது ராஜத்னவின் வகிபாகத்தையும் குறிப்பிடுகிறார் ரணில். அப்படி குறிப்பிட்ட ஒருவர் நுவரெலிய கூட்டத்தில் மாத்திரம் தற்போதைய ஜேவிபியுடன் அவற்றை கோர்த்துவிட்டதன் அரசியல் மோசடியை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பல அரசியல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு கூட சில வேளைகளில் இந்த இரண்டு ஜேவிபி க்களையும் சரியாக இனங்காண முடியாமல் போயிருப்பதை காண முடிகிறது. ஆனால் சுமார் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவத்தைக் கொண்ட ரணில் போன்ற தலைவருக்கு அந்தக் குழப்பம் எப்படி வர முடியும்.

உசாத்துணை:

  • தோட்ட மக்களிடம் ஜே.வி.பி மன்னிப்பு கேட்க வேண்டும் (ரணில் விக்ரமசிங்க  ජවිපෙ වතුකරයේ ජනතාවගෙන් සමාව ගත යුතුයි - රනිල් වික්‍රමසිංහ) The Leader, 11.11.2024.
  • அரசாங்கத்தைச் சார்ந்திராத குசுமா ராஜரத்ன ( ආණ්ඩුවට කුසුමක් නොවුණ කුසුමා රාජරත්න) லங்காதீப – 15.12.2017
  • Rohan Gunaratna Lost Revolution no.56, p.82; 
  • 24.06.2011 ஹன்சாட்
  • A. Jeyaratnam Wilson, Politics In Sri Lanka 1947-1973, The Macmillan Press 1974
  • Citizenship (Amendment) Act, No. 16 Of 2003, Government Publications Bureau, Colombo
  • Federal Party in Ceylon Politics Towards Power or Wilderness ?, Economic and Political Weekly, Vol. 4, No. 20 (May 17, 1969),
  • Tarzie Vittachi, Emergency '58: The Story of the Ceylon Race Riots.. London,  Deutsch,  1958
  • மகாசங்கத்தினரின் அரசியலமைப்பு முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் ராஜரத்ன முன்வைத்தார் (මහා සංඝ රත්නයේ ව්‍යවස්ථා යෝජනා රාජරත්න සභාගත කරයි), 2016/01/18 திவயின

நன்றி தினகரன் - 13.11.2024



 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates