Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு



களனிவெளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நானுஒயா எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் 375 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆரம்ப காலம்முதல் இலவசமாக மாதாந்தம் வழ்ங்கி வந்த தேயிலை தூள் இடையிறுத்தப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் தோட்டத்தில் சுகாதார வசதி போக்குவரத்து வசதி வீடமைப்பு வைத்திய சேவை நலன்புரி திட்டங்கள் வயது வந்தவர்களுக்கான வேலைவாயப்பு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கான முறையான தீர்வ வழங்கப்படாதவரை தாம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணிபகிஸ்கரிப்பு நடைபெற்ற தோட்டத்திற்கு சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் ராதாகிருஸ்ணன் ராஜாராம் தோட்ட முகாமையாளர் உஜித்த தென்னகோன் உதவி முகாமையாளர் நதுன் இருள் ஆராச்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் குறித்தவிடயம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு சார்பான தீர்மானம் ஒன்றை தலைமைக்காரியாலயத்துடன் கலந்துரையாடி பெற்றுத்தருமாறு வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் சந்பந்தப்பட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக தன்னிடம் தெரிவித்ததாக ராஜாராம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.தொழிலாளர்கள் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.இன்றைக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக முகாமையாளர் உஜித்த தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்வும் துயரமும்


1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும், தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய மக்களை இனரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை சரியாக செய்தார்கள். தங்களது கிருஸ்த்துவ மதத்தை இலங்கையில் விதையாக தூவ ஆரம்பித்தார்கள். பௌத்த மதத்தை ஏற்ற சிங்களர்கள் கிருஸ்த்துவத்தை ஏற்க மறுத்தனர். இனால் தமிழர்களோ யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, மலைநாடு பகுதிகளில் இருந்த மக்கள் வர்ணாசிரம கொடுமை, வறுமையால் ஓடிப்போய் சேர்ந்தார்கள். கிருஸ்த்துவ மதத்துக்கு வந்தால் கல்வி, வேலையில் முன்னுரிமை என பாதிரியார்கள் கூறியது மற்றொரு காரணம். பிசாசு வாழறயிடம் எனச்சொல்லி கோயில்களையும் இடிக்க ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆரசு.

ஆங்கிலேய மிஷினரிகளில் கல்வி கற்ற தமிழர்களின் பிள்;ளைகள், பிரிட்டிஷார் பேசிய ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாகவும், அரசு பணி செய்யவும் செய்தனர். இது சிங்கள மக்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இதனால் ஆங்கிலேயரை அதிகமாக எதிர்த்தனர் சிங்கள மக்கள். அப்படியும் ஆங்கிலேயர்க்கு சிங்கள மக்கள் மீது தான் ஆதிக ஈடுபாடே. காரணம் தீவில் அதிகளவில் வாழ்வோர் சிங்கள மக்கள் தான் என்பதாலும் பிற்காலங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வந்தால் சிங்கள மக்கள் துணை வேண்டும் என்பதாலே எதிர்த்தவர்களை நண்பர்களாக கையாண்டனர்.

இலங்கையை வாணிப நோக்கில் ஆராய்ந்த ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் புகையிலை, நெல்பயிரும், குடநாட்டில் யாழ்ப்பாண சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு-தெற்கு, தென் தமிழக பகுதிகளின் வரவேற்பு அதிகம் என்பதை அறிந்தனர். அதனல் அவைகளை ஏற்றுமதி செய்தனர். போதிய வருமானம் வராததால் இலங்கை மலை பகுதிகளில் குறிப்பாக குடநாட்டில் காபி பயிரிடலாம் என எண்ணிய ஆங்கிலேயே கம்பெனி பயிர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளிகளை அடிமைகளாக கொண்டு வர முடிவு செய்தனர்.

1820ல் இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் தமிழக பகுதிகளில் மக்கள் பசியால் இறப்பதை கண்டு ஆங்கிலேய கம்பெனி அதிக கூலி, குறைந்த வேலையென மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்களிலிருந்த மக்களிடம் பிரச்சாரம் பண்ணி ஏழை மக்களை இலங்கைக்கு கொண்டு போயினர். 1824ல் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 16 குடும்பங்கள் மலையத்தில் தங்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. எதிர்பார்ப்போடு தமிழகத்திலிருந்து கிளம்பிய மக்களை “நடராஜா சர்வீஸ்” மூலம் தனுஷ்கோடி அழைத்து வந்து அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாரில் இறக்கினர். அங்கிருந்து கண்டி பகுதியில் உள்ள மலைபிரதேசங்களுக்கு மீண்டும் நடராஜா சர்வீஸ். 150 மைல் நடந்து போனதில் போகும் வழியிலேயே பசி, காட்டுவிலங்கு, நோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். அதில் தப்பி குடியேற்றப்பட்டவர்கள் தான் மலையக தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பூர்வீக தமிழர்களிடம்மிருந்து பிரித்து காட்டவே அந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்படுகிறார்கள்.

மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.

1867ல் ஜேம்ஸ் ரெய்லர் என்ற ஆங்கிலேயர் இலங்கையில் தேயிலை பயிரை அறிமுகப்படுத்தினார். இது நல்ல வரவேற்ப்பு பெற்றதால் தேயிலை பயிர் செய்ய தமிழகம், கேரளா பகுதிகளில் இருந்து இந்து, முஸ்லீம் இன தமிழர்களை மீண்டும் மலையகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மீண்டும் துயரம் தமிழகத்தில் வறுமையால் வாடிய 120 பேரோடு ஆதிலட்சுமி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணமாகும்போது கப்பல் கடலில் மூழ்கி 120 பேரும் இறந்தனர். அதேபோல் 1867ல் தலைமன்னார் டூ கண்டி டூ மலைநாட்டுக்கு அனுராதபுரம், தம்பளை, கண்டி என ஓரு வழியும், ஆரிப்பு, புத்தாளம், கண்டி என மற்றொரு வழியும் ஊண்டு. இரண்டுமே காட்டு வழி. 1867ல் 639 பேர் கொண்ட தமிழக பிழைப்பு குழு முதல் பயணவழியில் மலையகம் புறப்பட்டது. 150 மைல் கடந்ததில் கடைசியாக மலையகத்துக்கு 186 பேர் மட்டுமே போய் சேர்ந்தனர். 453 போர் வழியில் இறந்தனர். இப்படி ஏராளமான செய்திகள் உண்டு மலையக மக்களிடையே. 1877ல் மட்டும் 1,45,000 பேர் மலையகத்தில் இறந்துள்ளனர். கடல் பயணத்தில், காட்டில், நோயால் இறப்பது கணக்கில்லை

அதோடு மலையக மக்கள் நாட்டை விட்டு மக்களை விட்டு, உறவுக்காரனை விட்டு வயித்து பாட்டுக்காக பிழைப்பு தேடி வந்து பிரிட்டிஷ் முதலாளிகள் அமைத்து தந்த லயர்களில் 3 இண் 1 பெண், 5 இண்கள் 2 பெண்கள் என தங்க வைக்கப்பட்டனர், மக்களை மேற்பார்வை செய்யும் கங்காணிகள் (கண்காணிப்பாளர்), தோட்ட துரைகள் பெண்களின் கற்ப்பை களவாடவும், சூறையாடவும் செய்தனர். எதிர்த்த ஆண்களை ஊயிரோடு எரித்தனர் - உயிரோடு புதைக்கப்பட்டனர். இந்த கங்காணிகள் தமிழகத்தில் வரிவசூலும், ஆங்கிலேயரின் எடுபிடிகளாகவும் இருந்தவர்கள். இலங்கைக்கு மலையக தமிழர்களை கண்காணிக்க வந்து கற்பை சூறையாடினார்கள். அதிகமான கூலி, குறைந்த வேலை என அழைத்து வந்து பெண்களை மிரட்டி, அடித்து தங்களது இச்சையை தீர்த்துக்கொள்வது பற்றியோ, எதிர்ப்பவர்களின் உயிரை எடுப்பது பற்றி தொழில் செய்யும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கவலைப்படவில்லை.

அந்த நிலையில் தான் மலையக இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து வர தமிழகத்தின் தஞ்சை பகுதியிலிருந்து காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்பட்டார் நடேசய்யர்.  துணி வியாபாரியாக மலையக தோட்டங்களுக்குள் புகுந்து அவர்களின் நிலையை கண்டு தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியவர் 1929ல் தேசபக்தன் என்ற இதழையும் அவர்களுக்காக நடத்தினர்.

1893ல் தஞ்சையில் பிறந்தவர் நடேசய்யர். பெரியார் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். திரு.வி.கவின் தெழிற்சங்க பத்திரிக்கையில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது  கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் 1915 ஆம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கொழும்பு வந்தார். விழா முடிந்ததும் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் இருந்து வேலைக்காக கொண்டு வந்த தனது மக்களை காண மலையகம் போக எண்ணினார். ஆனால் தோட்ட துரைமார்களாக இருந்த ஆங்கிலேயர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றார்கள் கொழும்பு தமிழர்கள். மீறி போனால் கிரிமினல் குற்றம் ஆகிவிடும் என எச்சரித்ததால் துணி வியாபாரி வேடம் அணிந்து மலையகம் போனார். ஆங்கு தோட்ட துரைமார்கள், காங்காணிகளால் தன் மக்கள்க்கு நடக்கும் கொடுமைகளை கண்டு கேட்டு கலங்கி போனார். தமிழகம் திரும்பியதும் தான் பார்த்ததை, கேட்டதை அறிக்கையாக்கி தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிடம் தந்தார். அந்த அறிக்கை அப்படியே கிடந்ததால் பொறுத்து பார்த்தவர் இனி என் வாழ்க்கை அம்மக்களோடு தான் என முடிவு செய்து விட்டு 1920ல் கொழும்பு வந்தார்.


இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களான டாக்டர் ஈ.வி.ரட்சனம், எம்.ஏ.அருளானந்தம் ஆகியோரை வெளியீட்டாளராக கொண்டு தேசநேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தார். அப்போது இலங்கையில் தொழிலாளர்களுக்காக முறையான அமைப்புயென்று எதுவும்மில்லை. தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருந்த பதிவு பெறாத தொழிற்சங்க தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து 1921 ல் பல போராட்டங்களை நடத்தினார். இவரின்; போராட்ட வீரியத்தையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் கண்ட தொழிலாளர்கள் குணசிங்காவை விட இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும், ஆதரவும் இருந்தது. இந்த ஆதரவு இலங்கை தொழிலாளர் யூனியன் சங்க துணை தலைவராக அவரை உயர்த்தியது. 

1921ல் பிஜி தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டாக்டர்.மணிலால் இலங்கை வந்தார். தீவிர கம்யூனிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடேசய்யர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினார். நடத்திய போராட்டங்கள் எல்லாம் தீவிரமாக இருந்ததால் மணிலாலை கண்டு பயந்த பிரிட்டிஷார் லாலை நாடு கடத்தினர். போராட்டவாதிகளான ஏ.ஈ.குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் மோதல் அதிகமானது. குணசிங்கா இந்திய தொழிலாளர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார் நடேசய்யர். இந்த முரண்பாட்டால் இணைந்திருந்த இருவரும் பிரிந்தனர். பிரிந்து போன நடேசய்யர் 1931 சனவரி 13 ல் இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை தொடங்கினார். அதன் பின் நிறைய அமைப்புகள் தொழிலாளர்களுக்காக என்று தோன்றியது. ஆனால் சட்டப்படி தோன்றிய முதல் அமைப்பு நடேசய்யர் துவங்கிய அமைப்பு தான்.

1936ல் நடந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தார். ஏற்கனவே 1929 ல் நடந்த தேர்தலில் தோற்றவர். பின் 1936ல் நடந்த பொது தேர்தலில் தொழிலாளர்களை நம்பி களம்மிறங்கினார் வெற்றி பெற்றார். தொழிலாளர்களுக்காக சம்பள உயர்வு வேண்டியும், மருத்துவ வசதி வேண்டியும், உரிமைகள் வேண்டியம் போராட்டம் நடத்தி பெற்றும் தந்தார். அதனால் 6 ஆண்டுகள் சட்ட நிருபன சபையில் உறுப்பினராகவும், 16 ஆண்டுகள் சட்டசபையிலும் உறுப்பினராகயிருந்தார். இலங்கையில் வயது வந்தவர்கள்க்கு வாக்குரிமை உண்டு என ஆங்கிலேய அரசு சொன்னபோது இலங்கையில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள்களுக்கு சந்தோஷம் நமக்கென்று ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம். அவர் மூலம் நமக்கு ஒரளவு சந்தோஷமான வாழ்க்கையும், பசங்களுக்கு படிப்பும் கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். அதன்படி 7 இந்திய வம்சாவழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது சிங்கள வெறியர்களான ஏ.ஈ.குணசிங்கா, டி.எஸ்.சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்துக்கு சலுகைகளை அப்போதே வாரி வழங்கினார்கள். அதேபோல் மலையக மக்களிடையே இடதுசாரிகள் கோலோச்சினர். 1947ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக பகுதியில் 20 தொகுதியில் இடதுசாரிகள் வெற்றி பெறும் அளவுக்கு இடதுசாரிகளை மக்கள் நம்பினர்.

அதுதான் சிங்கள அரசியல்வாதிகளை குறிப்பாக தொழிலாளர்களுக்காக போராடுகிறோம் என்ற குணசிங்க, சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. இவர்கள் வளர்ந்தால் உரிமைகளை தந்தால் ஆட்சி அதிகாரத்தில் ஏறி நம்மை கேள்வி கேட்பார்கள் என எண்ணினர். அதன் விளைவு அபாயகரமானதாக இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஆட்சியமைத்த சிங்கள மூலைகளில் அரசியல் கணக்கும் ஓட்டு கணக்கும் போட்டதின் விளைவு, 1948 முதலே தோட்ட தொழிலாளர்களுக்கு தொல்லை ஆரம்பமானது.

1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி பாராளமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழி சட்டம் என்பது சிங்களம் பேசுபவர்கள், இலங்கை தமிழர்களுக்கு வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15 க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்க்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்ற நிலை. 


இது மறைமுகமாக பல லட்சம் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கள அரசியல்வாதிகள் கையாண்ட நரி திட்டம். அதற்க்கு அரசியல் காரணமும் உண்டு. பொது தேர்தல்களில் தோட்ட பகுதிகளில் சிங்கள அரசியல்வாதிகளால் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களே வென்றார்கள். இது வருங்காலங்களில் பிரச்சனையாகிவிடும் என்பதாலே தான். சட்டதின் மூலம் மலையக மக்களை துரத்த முடிவு செய்தார்கள். இந்த சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு 1949ல் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாடாளமன்ற சீர்த்திருத்த சட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் சுமார் 9 லட்சம் தமிழ் மக்கள் நாடற்ற நிலைக்கு ஆளானார்கள். பிரச்சனை பெருசானது.

தோட்டதொழிலாளர்கள் தானே என அப்போதைய இலங்கை தமிழ் அரசியல்தலைவர்கள் இதில் தலையிடாமல் விட்டு விட்டனர். இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் 1964 அக்டோபர் 30 ந்தேதி இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை அதிபர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இடையே சாஸ்திரி-ஸ்ரீமா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அரசின் கணக்கெடுப்பின் படி இங்குள்ள 9 லட்த்து 75 ஆயிரம் தோட்டதொழிலாளர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வது என்றும், 3லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தருவது என்றும் முடிவானது. மீதி நிற்க்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்க்கு மற்றொரு ஒப்பந்தம் இருநாடுகளும் போட வேண்டும் என்றது. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்;குள் நிறைவேற்றப்படவேண்டும் என்றது.

ஓப்பந்தம் நிறைவேற காலதாமதமானது. இதனால் சிங்களர்கள் மலையக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தொடங்கினர். பிறந்த மண்ணை விட்டு வந்து இரண்டு நூற்றாண்டாக தங்களது வியர்வையை நீராக்கி, மானத்தை அடகு வைத்து காணிகளின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தினை கலவரங்களின் போது மலையக மக்கள் குடியிருந்த லாயம் எனப்படும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர் உழைக்க தெம்பில்லாத சிங்களர்கள். தடுத்த தோட்ட தொழிலாளர்களை லாயங்களோடு வைத்து எரித்தனர். உரிமைக்காக போராடிய தோட்ட தொழிலாளர்கள் யார் என்பதை தோட்ட துரைமார்கள் காட்டி தந்தனர் அவர்களையும் குறிவைத்து கொன்றது சிங்கள படை. பதுளை, மொனராகலை, களத்துறை, கேகாலை, இரத்தினாபுரி, மத்தாளை பகுதிகளில்யிருந்த தோட்ட தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் வெறுத்துபோன பெரும்பாலான மக்கள் உலகின் வேறு நாடுகளான பிரான்ஸ், கனடா, ஆஸ்திரியா, போன்ற நாடுகளில் போய் அகதிகளாக குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் திரும்பவும் தாயகத்துக்கே திரும்பியவர்களையும் அகதிகள் என்ற அடைமொழியல் சேர்த்துவிட்டது இந்திய அரசு.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் 1974 ல் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவுக்கும் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்க்கும் இடையே தோட்ட தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய குடியுரிமை வேண்டி 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இலங்கை குடியுரிமை வேண்டி 4 லட்த்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்தியா, குடியுரிமை வழங்க காலதாமதம் செய்தது. 1982 ல் 86 ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்தது, குடியுரிமை வழங்கப்பட்ட 90 ஆயிரம் பேர் இன்னும் இலங்கையில் உள்ளனர். அதனால் இனி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது, ஓப்பந்தம் செல்லாது என அறிவித்தது இந்தியா.

திரும்பிப்பார்க்கின்றேன் : ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம் - முருகபூபதி

சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை  ஏந்திய  எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம்.  ராமையா

                                                                                                   
இயற்கைச்  சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்க – கலை - இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள் இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம் நிலை    என்றுதான்   மாறுமோ ?     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்     என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது.

ஒரு கூடைக் கொழுந்து
மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.   தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார். நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை    அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.     அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன்.

அமைதி - அடக்கம் - பணிவு – மறந்தும்    சுடுசொல்    பாவிக்கத்    தெரியாத அப்பாவித்    தனமான   குண    இயல்புகள்  -  எதனையும்    ரசித்துச்   சிரிக்கும் பொழுது  குழந்தைகளுக்கே  உரித்தான    வெள்ளைச் சிரிப்பு இவ்வளவற்றையும்   தன்னகத்தே    கொண்டிருந்த  அந்த   வித்தியாசமான மனிதரிடத்தில்    நல்ல    ரஸனையைக்  கண்டேன்.     தர்மாவேசத்தை என்றைக்கும்  கண்டதில்லை.

நாம்    அவரை   இராமையா    என்று     அழைப்பது   அபூர்வம்.    அவரது முதல்     எழுத்துக்கள்தான்     இலக்கிய     உலகில்     பிரபலமானவை. மலைநாட்டு     எழுத்தாளர்     சங்கத்தின்     தலைவராக     விளங்கிய போதும்கூட   தலைவர்களுக்கே     உரித்தான    கம்பீரம்   காத்து   இமேஜ் தேட முயலாமல்    எளிமையாக     வாழ்ந்தவர்.

ஈழத்து    மலையக   இலக்கிய    வரலாற்றில்    என்.எஸ்.எம்.  அவர்களுக்காக சில     அத்தியாயங்கள்     உண்டு.     மலையக    மக்களின்     ஆத்மாவை   இவரது    கதைகளில்    கண்ணுற்றேன்.

சென்னை    வாசகர்   வட்டம்    தொகுத்தளித்த     அக்கரை    இலக்கியம்   நூலில்     இவரது    வேட்கை    சிறுகதையும்     இடம்பெற்றது.    பல   தரமான வானொலி    நாடகங்களின்   சிருஷ்டி    கர்த்தா    இவர்.

மலையகத்தை    விட்டு    அவர்    எப்போது     கொழும்புக்கு    வந்து நிரந்தரமானாரோ     நான்     அறியேன்.  மலையகத்தில்    அவர் மேற்கொண்ட   தொழிலும்     தெரியாது.    எனினும்     நானறிந்த    என்.எஸ்.எம்     கொழும்பில்   -    சோனகத் தெருவில்    ஒரு   இரும்புக்கடையில்    கணக்கெழுதியவர்தான்.    நேரம்    கிடைத்த   பொழுது இலக்கியம்    படைத்தார்.

அந்த   - நேரம் -  சீராகக் கிடைக்கவில்லையே    என்பதுதான்  ஈழத்து இலக்கிய     உலகிற்குக் கிட்டிய    பெரிய நட்டம்.    எனினும்      அவரது    -  ஒரு கூடைக் கொழுந்து  -    உட்பட    பல    சிறுகதைகள்    இன்னும்   பல தலைமுறை    காலத்திற்கு   நின்று    நிலைத்துப் பேசும்.

1973   ஆம்   ஆண்டு -மலைநாட்டு   எழுத்தாளர்   சங்கத்தின்    ஆண்டுப்     பொதுக் கூட்டம் ஹட்டனில்.  கூட்டத்துடன்   ஆண்டுவிழா.    வீரகேசரி     பிரசுரமான    கோகிலம்     சுப்பையா    எழுதிய    தூரத்துப் பச்சை   நாவல்    வெளியீட்டு நிகழ்வும்     இடம்பெற்றது.     தமிழகத்திலிருந்து     பிரபல     இடதுசாரித் தலைவர்     தோழர்    பாலதண்டாயுதமும்    வருகை    தந்து   கலந்து கொண்ட நிகழ்ச்சி.

இவ்விழாவில்     கலந்து  கொண்ட    ஒரே    அரசில்     அங்கம்    வகித்த அமைச்சர்    குமாரசூரியரும் -     ஜ.தொ.கா.    தலைவர்    அஸீஸ_ம்   மேடையில்     கருத்து     ரீதியாக    பகிரங்கமாக     மோதிக் கொண்டார்கள்.

தொழிலாளர்களின்     பிரச்சினைக்கு   இடைத் தரகர்கள்    (தொழிற்சங்கங்கள்)    அவசியமில்லை    என்ற    தோரணையில்    மிகவும் சிறுபிள்ளைத்தனமாக     அமைச்சர்    பேசினார்.

நீண்ட    காலம்   தொழிற்சங்க    வாழ்வில்   ஈடுபட்டுள்ள    அஸீஸ்   சும்மா இருப்பாரா?    அவரைப்    பொறுத்தவரையில்    இந்த    அமைச்சர்      நேற்றுப் பெய்த   மழைக்கு   இன்று   முளைத்த    காளான்   அல்லவா? வெகுண்டெழுந்தார்.     மலையக     தொழிற்சங்கங்கள்     வென்றெடுத்த உரிமைகளைப்     பட்டியலிட்டுப்    பேசினார்.


தோழர்    பாலதண்டாயுதம்     அனுபவமிக்க     பழுத்த    அரசியல்வாதி. குழம்பியிருந்த     மக்களுக்குத்     தெளிவு    ஏற்படும்    விதமாகப் பேசி   பாராட்டுப் பெற்றார்.   நிறைகுடங்கள்     தழும்புவதில்லை.    அந்த  நிகழ்ச்சி முடிவுற்றதும்    என்.எஸ்.எம். மிடம்    கேட்டேன்.    (அன்று    அவர்தான் மலைநாட்டு    எழுத்தாளர்    சங்கத் தலைவர்)

என்ன   -   இது - ?  இலக்கியவாதிகளின்    கூட்டத்தில்   அரசியல்வாதிகள் ஆதாயம்    தேடுகிறார்கள் ?

என்.எஸ்.எம்    அமைதியாக  -   நண்பரே  -   உங்கள்     கேள்வியிலேயே   பதில் உள்ளது.    தோழர்     பாலதண்டாயுதம்     தக்கபதில்    சொல்லிவிட்டார். இருந்தாலும் - இந்த    அரசாங்க    அரசியல்   வாதிகளை   அழைத்தால் இதுதான்    நடக்கும்   என்பதும்    தெரியும்.

இப்பொழுது    இவர்களின்    அரசு     பதவியில்.    எமது  சங்கம்   இவர்களை அழைத்திருக்கிறது.    வேறு    ஒரு   அரசாங்கம்   இப்போதிருந்தால்  அதனைச்    சார்ந்தவர்கள்    வந்திருப்பார்கள்.   ஒரு   அமைப்பின் தலைவராக    இருக்கும்போது     எனது     விருப்பு     வெறுப்புகளுக்கு   ஏற்ப தன்னிச்சையாகச்     செயற்பட முடியாது.     அமைப்பின்    தீர்மானங்களுக்கு நானும்      கட்டுப்பட வேண்டியுள்ளது     என்ன    செய்வது ?  என்றார்.

பின்னாளில் -   சில    வருடங்களுக்குப் பிறகு   – அரசாங்கம்    மாறியது. தொண்டமான்     அமைச்சரானார்.    இ.தொ.கா. தேவராஜ்   அரசியலில் பிரபலமானார்.

இதே  மலைநாட்டு    எழுத்தாளர்    சங்கத்தின்    சார்பில்   கொழும்பு   - தப்ரபேன்    ஹோட்டல்    மண்டபத்தில்    கூட்டம்.     என்.எஸ்.எம்.   தலைமை.    அமைச்சர்    தொண்டமானும்   தேவராஜூம்    பேசினார்கள்.

கூட்ட   முடிவில்    என்.எஸ்.எம்     என்னைப்    பார்த்தார்.   நான்    வாய் திறப்பதற்கு     முன்பு   -   பூபதி    உமக்கு    அன்றே     சொன்னதைத்தான் மீண்டும்    சொல்லலாம்   -   எனக் கூறி    அமைதிக்கு    வழி தேடினார்.

ஈழத்து  இலக்கிய   உலகம்     பதவியில்    உள்ள    அரசை    அல்லது அதிகாரத்தில்    உள்ள     இயக்கத்தை    அனுசரித்தே    இயங்குகிறது என்பதற்கு     ஈழத்தின்     தெற்கும்   வடக்கும்    ஒரு காலகட்டத்தில் உதாரணமாக  விளங்கின.

அதிகாரத்தில்    அமருவோரை    அனுசரித்துப் போகும்   சமரச   மனப்பாங்கு, கலை  -  இலக்கியவாதிகளிடம்     இருக்கும்    வரையில்    இரு  தரப்புக்கும் சங்கடம்    இல்லைத்தான்.     யார்  -   யார் - எந்தெந்த     சந்தர்ப்பங்களில் எத்தகைய     சூழ்நிலையில்    இவ்வாறு     மேடைகளில்    தோன்றுகிறார்கள் என்பது    விமர்சனத்துக்குரியதுதான்.

இன்றைய     காலகட்டத்தில்    பல     மாற்றங்கள்     நிகழ்ந்துள்ளன. இலக்கியவாதிகளாகவும்      ஆத்மீகவாதிகளாகவும்     விளங்கியவர்கள் அரசியல்வாதிகளாகிவிட்டனர்.       அதனால்     தவறொன்றும்   இல்லை. ஆனால்     இலக்கிய    மேடைகளில்    தமது   அரசியல்     ஆதாயம் தேடுவதற்கு     முனையும்பொழுதுதான்     பிரச்சினைகள்    தலைதூக்கும்.

அரசியல்வாதிகள்    இலக்கிய   மேடையில்    ஏறினால்   என்ன நடக்கும் ? என்பது    அனுபவபூர்வமாகத்   தெரிந்தமையினால்தான்  2011   இல்   நாம் கொழும்பில்       நடத்திய    முதலாவது     சர்வதேச     தமிழ்    எழுத்தாளர் மாநாட்டில்    அரசியல்வாதிகளுக்கு   மேடைதரவில்லை.     அத்துடன் பூமாலைகளையும்      பொன்னாடைகளையும்     வெற்றுப்புகழாரங்களையும் முற்றாக     புறக்கணித்தோம்.

மாநாட்டின்     பின்னர்     அதுபற்றி    எழுதிய    ஒரு   இலக்கிய நண்பர் அரசியல்வாதிகள்     இனிமையாக    பழிவாங்கப்பட்ட      மாநாடு எனக்குறிப்பிட்டார்.

என்.எஸ்.எம்    வாழ்வில்    சோகமான     அத்தியாயங்கள்தான்     அதிகம். எத்தனை    சோகங்கள்    அவருள்    முகிழ்த்திருந்த     போதிலும்     சாந்தமான அவரது    முகத்தில்     மாற்றத்தினைக்   காண   முடியாது.    சலனங்கள் அற்ற     முகத்துக்குச்     சொந்தக்காரர்   அவர்.

அவர்  -  ஏழு   நாட்களுக்குள் - அடுத்தடுத்து    தனது   இரண்டு    பெண் செல்வங்களை     நோய்    அரக்கனுக்குப்    பலி     கொடுத்த   பரிதாபத்தை இங்கு    எழுத    வார்த்தைகள்    இல்லை.   அவரைப்   படைத்தவன் - அவரை இப்படியாக     கோரமாக     வஞ்சித்திருக்கக்கூடாது.    மரணத்தின் கொடுமையை   அதுவரும்     போதுதான்  நாம்    உணர்கின்றோம். அக்கொடுமைக்கு     என்.எஸ்.எம்.    ஆளாகியவர்.

இனவாத     பெருநெருப்பு    தென்னிலங்கையில்     கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்த   (1983)  காலம் .   25   மைல்     தூரத்திலிருந்த    எனக்கு    என்.எஸ்.எம்.மின்    பிள்ளைகள்     இருவர்    நோயினால்   பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து     இறந்துவிட்டார்கள்     என்ற    சோகமான     செய்தி தாமதமாகவே    கிடைத்தது.

நண்பர்     தெளிவத்தை    ஜோசப்    மூலம்     இச்செய்தி    அறிந்து    நண்பர் மு.கனகராசனுடன் -   ராமையாவைத்     தேடி    அவர்    பணிபுரிந்த இரும்புக்கடைக்கே     ஓடினோம்.    அங்கே    என்.எஸ்.எம்   அமைதியாக அமர்ந்து    கணக்கு    எழுதிக் கொண்டிருக்கிறார்.

நான்   இயல்பாகவே    மரணத்தை    வெறுப்பவன்.   அதிலும்   பச்சிளம் பிள்ளைகளின்    மரணத்தைத்   தாங்கும்   வலிமை    அற்றவன்.  அன்று ராமையாவைக்     கண்டபோது    நெஞ்சில்    அடைத்து  பொங்கிய  சோகத்தை    அடக்க    மிகவும்    சிரமப்பட்டேன்.

அருகே    இருந்த     அம்பாள்கபேயில்   போய்    அமர்ந்து    அவருடன்   துயரம் பகிர்ந்து    கொண்டோம்.    அந்த    பரபரப்பான   வியாபார   பிரதேசத்தில்   நாம் அமைதியாக    அமர்ந்து     பேச பொருத்தமான   இடம்    அந்த   அம்பாள்கபே தான்.

பின்னாளிலே     ராமையாவை –  பாபர்   வீதியில்    அமைந்த  சாயி இல்லத்தில்     அவர்   மேற்கொண்டிருந்த        பணியைக் கண்டு திகைத்துப்போனேன்.   ஒரு   அன்பரை      காண்பதற்காக    நான்    சாயி   இல்லம்   சென்றிருந்த    வேளை    அங்கு    பஜனை   ஆரம்பமாக விருந்தது.

சாயி  பஜனைக்காக    அங்கு    குழுமியவர்களின்   பாதணிகளை   பக்குவமாக   வாங்கி   அங்கிருந்த   ராக்கைகளில்   சீராக   அடுக்கி வைத்துக் கொண்டு     நிற்கிறார்    எங்கள்    ராமையா.

மலையக       மக்களின்     ஆத்மாவைப்     பிரதிபலித்த  -  அற்புதமான சிருஷ்டிகளைப்    படைத்த    அந்த    மணிக்கரங்கள் - சோனகத்   தெருவில் இரும்புக்கடையில்    கணக்கு   ஏட்டை     புரட்டிக் கொண்டும்    பாபர் வீதி சாயி    இல்லத்தில்     பக்தர்களின்    செருப்புகளை     ஏந்தி    பத்திரப்படுத்திக் கொண்டுமிருக்கிறதா?

என்ன    விந்தையான    மனிதர்   இவர் ?

எனது    திகைப்பை   புரிந்து    கொள்ளாமலே   -  வாருங்கள்  -  செருப்பை  இங்கே    தாருங்கள்  -  என்றார்.

அந்த   மணிக்கரங்கள்    என்    செருப்பை   ஏந்தக் கூடாது.    நானே   எடுத்து ராக்கையில்   வைத்தேன்.    தேடி    வந்த    அன்பர்   பற்றிய    நினைவை மறந்து  -   ராமையாவின்    பணி  கண்டு   சிலிர்த்துப் போனேன்.

 நான்   இன்றைக்கும்கூட  ஒரு   சாயி   பக்தன்  அல்லன் -  ஆனால்   அந்த பிரார்த்தனையில்    அமைதியும்   மனச்சாந்தியும்    கிட்டுவதை உணர்ந்தேன்.    என்.எஸ்.எம்    தனது     வாழ்வின்   சோகங்களுக்கு - இந்தப் பிரார்த்தனையின்     மூலம்தான்     அமைதியையும்    மனச்சாந்தியையும் தேடுகிறார்     என்பதை     புரிந்து கொள்ள  முடிந்தது.

இது    பற்றி    பிறகு     வீரகேசரி    வாரவெளியீட்டில்    இலக்கியப் பலகணி யிலும்     எழுதினேன்.

அவுஸ்திரேலியாவுக்கு    நான்     வந்ததன்   பின்னர் - இராமையா    உடல்  நலம்     குன்றி    மருத்துவ சிகிச்சைக்கு   உட்படுத்தப்பட்டுள்ளார்    என்ற தகவலை    நண்பர்    டொமினிக்ஜீவா      மல்லிகையில்    எழுதித்தான் தெரியும்.

இந்தக்   கவலையை   சிட்னியில்     இருக்கும்    மாத்தளை    சோமுவுடன் பகிர்ந்து கொண்டதுடன்    நின்றுவிடாமல்    என்னாலியன்ற    சிறு   உதவியை    கொழும்பில்    நண்பர்    ராஜஸ்ரீகாந்தன்   ஊடாக வழங்கியபொழுது     சலனங்களைக்    காட்டாத     அம்மனிதரின்   கண்கள் கலங்கி    விட்டதாக     நண்பர்   எனக்கு    எழுதியிருந்தார்.

ராமையாவும்     அன்போடு   எனக்கு   கடிதம்    எழுதினார்.  இன்றும் அக்கடிதம்    என்னிடத்தில்    பத்திரமாக  உண்டு.

ஒரு   நாள்   இரவு   நண்பர்  பிரேம்ஜியுடன்   தொலைபேசியில்   கதைக்கும்  பொழுது   அன்று   பகல்   இராமையா    இறந்து   விட்டதாக   அறிந்து அதிர்ந்தேன்.

( ராமையா     இறந்த    செய்தியை    அன்று      எனக்குச்சொன்ன      பிரேம்ஜியும்     இந்தப்பத்தியை       எழுதிக்கொண்டிருக்கும்    பொழுது     இறந்துவிட்டார்     என்ற சோகத்துடன்தான்      இதனை    பதிவுசெய்கின்றேன்.)

தாமதமின்றி     சென்னையில்    வசிக்கும்    எம்  இருவரதும்   நண்பர் பத்திரிகையாளர்   எஸ்.எம்.கார்மேகத்துக்கு   தகவலைக் கூறி    இருவரும் தொலைபேசியிலேயே    துயரம்   பகிர்ந்து    கொண்டோம்.   பின்பு – எஸ்.எம்.கார்மேகம்    அவர்கள்  -  ராமையாவைப் பற்றி    உருக்கமான  கடிதம் ஒன்றை    எனக்கு   எழுதியிருந்தார்.

ராமையாவின்   மறைவையடுத்து     இறுதிச்சடங்கில்   அமைச்சர்கள்- அரசியல் - கலை  -  இலக்கிய  பிரமுகர்கள்    கலந்து   கொண்டதைப் பார்த்த ராமையாவின்    வீட்டின்   அயல்வாசிகள்  -   இப்படியும்   ஒரு   பிரபலமான மனிதர்  -   இங்கே   எமக்கருகில்    வாழ்கிறார் - என்பதை   அறியாமல் இருந்திருக்கின்றோமே    என    மூக்கில்   விரல்    வைத்து   வியந்தார்களாம்.

கண்களுக்கு     அருகே     இமை     இருந்தாலும்    அந்தப் பாதுகாப்பு  கவசம் கண்களுக்குத்    தெரிவதில்லை   அல்லவா?

அந்த   மலையக    இலக்கிய    மேதையின்    மறைவின்    பின்னர்   அவருக்காக இரங்கலுரை    நிகழ்த்திய    அரசியல்  பிரமுகர்கள்   -   அவர்   வாழும் காலத்தில்   அவரைப் பற்றி   சிந்தித்ததே    இல்லை.   பத்திரிகை செய்திகளினாலும் - விளம்பரங்களினாலும்    பிரபலம்     தேடிக் கொண்ட மனிதர்    அல்ல    ராமையா.     படைப்பாளுமை    மிக்க    அமைதியான   இலக்கிய கர்த்தா.

தமிழகத்தின்    அக்கரை   இலக்கியம்   தொகுப்பு    இனங்கண்டு  கொண்ட அளவிற்குத்தானும்    மலையக    அரசியல்      தொழிற்சங்க    உலகம்    இவரை   இனங்     காணவில்லை.      இந்தப் புறக்கணிப்புகளைப் பற்றி என்றைக்குமே     அக்கறை    கொள்ளாத    நண்பர்   மு.நித்தியானந்தன் - மலையக    இலக்கிய     உலகிற்கு    ஆக்கபூர்வமாக   பங்களிப்பு    நல்கினார் என்பதை     இச்சந்தர்ப்பத்தில்   கூறுதல்   பொருத்தம்.

மு.நித்தியானந்தன்

மு.நித்தியானந்தன்     இல்லையென்றால்    இராமையாவின்   ஒரு  கூடைக் கொழுந்து    (1980   இல்    தேசிய    சாகித்திய    விருது    பெற்றது)  சிறுகதைத் தொகுப்பை   தமிழ்   இலக்கிய   உலகம்  கண்டிருக்காது.   நித்தி  -  தெளிவத்தை ஜோசப்பின்    நாமிருக்கும்   நாடே –  ஸி.வி.வேலுப்பிள்ளையின்   வீடற்றவன்    முதலானவற்றையும்    தனது   வைகறை   வெளியீடாகக்    கொணர்ந்தார்.

என்.எஸ்.எம்   மாத்திரம்   அல்ல – அவரைப்   போன்ற   பல   அற்புதமான மலையக - இலக்கிய   கர்த்தாக்கள் - மலையக   அரசியல்   இயக்கங்களினால் - அவற்றின்   தலைவர்களினால்    கண்டு   கொள்ளப்படவில்லை.   அவர்கள் கண்டுகொள்ள   முயலவுமில்லை.

இறந்த பின்பு – பத்திரிகைகளுக்கு  அஞ்சலி  -  அனுதாபச் செய்திகள்  வழங்கி தமது    இருப்பை  க்காட்டிக்     கொண்டவர்களை    இனம்    காணவேண்டிய அவசியமும்    எமக்கு   இல்லை.

எனினும்    இராமையாவை -    அவரைப் பீடித்திருந்த    வறுமையிலிருந்து - இந்த   மலையக அரசியல்   சக்திகள்    காப்பாற்றவில்லையே    என்ற    ஆத்திரம்   மனதை   பாரமாக   அழுத்துகிறது.

தனது    முப்பது   வருட   (1961 -1990)   இலக்கிய   வாழ்வில்    பதினான்கு சிறுகதைகளையே   ராமையா   எழுதியிருப்பதாக    தெளிவத்தை  ஜோசப் தன்னுடைய     மலையகச்சிறுகதை     வரலாறு   நூலில்    பதிவு  செய்துள்ளார்.   ( துரைவி  வெளியீடு 2000)

குறைந்த    எண்ணிக்கையில்    கதைகள்     எழுதியிருந்தபோதிலும்    ராமையா    இலக்கிய   உலகில்    பிரசித்தமாகவே    அறியப்பட்டவர். அவரது     கதைகளின்    சிறப்பும்   தரமும்தான்   அதற்குக்காரணம்.

செ.யோகநாதன்    தமிழ் நாட்டில்    தொகுத்து    வெளியிட்ட ஈழத்துச்சிறுகதைகள்    தொகுப்புகளில்    ஒன்றின்     பெயர்    ஒரு கூடைக்கொழுந்து     என்றே     அச்சிடப்பட்டிருக்கிறது.

10-10-1989 ஆம்   திகதி    ராமையா   எனக்கு    எழுதியிருந்த    சிறிய    கடிதத்தின் இறுதியில் - அங்கு    இலங்கை    நண்பர்கள்    பலர்    இருப்பதாக    அறிந்தேன். எல்லோரையும்    நமது   மண்ணிலே    (இலங்கையில்)   சந்திக்கும்    வாய்ப்பு கிட்டும்   என்றும்    நம்புகிறேன்.    என்று    எழுதியிருந்தார்.

நம்பிக்கைதான்     வாழ்க்கை    என்பார்கள்.    ஆனால்     அவர்  நம்பிக்கையோடு    காத்திருந்த    என்னைப்போன்ற    பலரை   பார்க்காமலேயே    விடைபெற்றுவிட்டார்.

நன்றி - தேனீ

பிரேம்ஜிக்கு அஞ்சலி


எமது பாராம்பரியத்தின் ஜனநாயக முக்கியத்துவத்தினையும் அதனுள் இழையோடும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தையும் ஸ்தாபன ரீதியாக உணர்ந்து செயற்பட்டவர் பிரம்ஜி. மனிதவர்க்கத்தின் நன்மைக்காகவும் , மனிதர்களின் ஆன்மாவில் ஓர் அழகிய உலகத்தை படைப்பதற்காகவும் பல விய+கங்களையும் தாண்டி செயற்பட்டவர். இந்த உண்மையின் பின்னணியில் நீதிக்கான சமூகமாற்றப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வதே மறைந்த இம் மனிதருக்காக நாம் அற்றும் உண்மையான அஞ்சலியாகும் என புதிய பண்பாட்டுத் தளம் சார்பில் லெனின் மதிவானம் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: விஜயகுமார்


ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மூன்றாவது தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக அமைவதோடு ஆட்சியாளர்களிடத்தில் போர்க்குற்ற பீதியையும் வலுத்துள்ளது. இந்நிலையில் வழமை போலவே சர்வதேச அழுத்தங்களை தமது அரசியல் ஸ்திரத்துக்கு பயன்டுத்துவதற்கு ஏற்ற வகையில், மார்ச் மாதம் கடைசியில் தேர்தல் வரும் வகையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அதன் ஆட்சி காலம் முடிடைவதற்கு முன்னமே கலைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு உள்ளூரில் தமக்கு கிடைக்கும் தேர்தல் வெற்றிகளை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. எனவே ஜனாதிபதி அண்மைகாலமாக பல கூட்டங்களிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு பரப்புரைகளை செய்து வருகிறார். அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திகள் யார் தடை விதித்தாலும் தொடரும் என்று குறிப்பிட்டதோடு தனது அரசாங்கத்தின் கீழ் ஹெரோயின், எத்தனோல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு நுவரெலியாவில் நடந்த பொங்கல் விழாவில் தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று இல்லாமல் எமது அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

தோட்டங்கள் தொடர்பான இக் கருத்து போர் முடிந்தவுடன் ஜனாதிபதி குறிப்பிட்ட எமது நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற இனங்கள் இல்லை என்று சொன்னதற்கு ஒப்பானதாகும். அத்தோடு ஒரு வகையில் ஹெரோயின், எத்தனோல்களை இன்றைய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது போல் தோட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் நகரங்கங்கள் உள்ள பாரபட்சத்ததை ஏற்று வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் பிரச்சினை என்னவேனில் ஹெரோயின், எத்தனோல் கொண்டு வந்தது யார் என்பதை அரசாங்கத்தினால் கண்டு பிடிக்க முடியாமல் போனது போல் மலையக மக்கள் அபிவிருத்தியில் உள்ள பாரபட்சமும் இரு நூறாண்டு தாண்டியும் நீளுமா என்பது. உண்மையிலே தோட்டங்கள் கிராமங்கள் நகரங்கள் போல் சமத்துவமாக சகல விடயங்களிலும் நடத்த எந்த அரசாங்கமாயினும் எந்த தலைவராயினும் அதனை செய்வார்களாயின் அது பாரட்டத்தக்கது. விரும்பத்தக்கது. மலையக மக்களும் அதனை எதிர்பார்த்திருக்கின்றனர் எனினும் அது நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.

மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கு இனையான அபிவிருத்தி என்பது அவர்ளுக்கான தனித்துவப் பிரச்சினைகளை நேர்மையோடு அணுகுவதன் மூலமே கிடைக்கப் பெறும். அவ்வாறு நோக்கும் அரசியல் தலைமையினாலே அது சாத்தியப்படும். அது வெறுமனே அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தோட்டங்களில் நடைபெறுவதனாலோ, அல்லது தோட்டங்களில் உள்ளவர்களில் உள்ளவர்கள் மின்சாரத்தைப் பெறுவிடுவதனாலேயோ வரப்போவதில்லை. ஏனெனில் மலையக மக்களின் அபிவிருத்திப் பிரச்சினைகள் தனித்துவமிக்கதாகும்.

இன்று மலையக மக்கள் முகம் கொடுத்திக்கும் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பவைகள் பல. அவற்றில் பிரதானமானது இன்றும் முகவரி அற்றவர்களாக இருக்கின்றமை. ஒரு தோட்டத்தை எடுத்துக் கொண்டால் தோட்ட நிர்வாக பீடத்தின் முகவரியே அத்தோட்டத்தில் முழு தோட்ட மக்களுக்குமாக உள்ளது. இது வெறுமனே கடித போக்குவரத்திற்கான முகவரியை வழங்குதல் என்ற சிறு பரிமாணம் கொண்டதல்ல. மாறாக ஒட்டு மொத்த தோட்டக் கட்டமைப்பின் வடிவத்தோடும் தொடர்புடையப் பிரச்சினையாகும். அதாவது தோட்டங்கள் தனி இராஜ்யங்களாக பிரித்தானியர்களும் அவர்களின் தனியார் கம்பனிகளும் ஆட்சி செலுத்தியமையின் பிரதிபலிப்பாகும். இன்று பல்தேசிய பொருந்தோட்டக் கம்பனிகள் அந்த ஆட்சியினை தொடர்கின்றனர், இவர்களும் முழு பெருந்தோட்டக் குடியிருப்புகளையும் குத்தகைக்கு பெற்று அதற்கு சொந்தக்காரர்களாகியுள்ளனர். இதன் விளைவு தோட்டங்கள் இன்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தைப் போன்றே தனி ஆளுகை பிரதேசம். நாட்டின் வேறு இடங்களில் இருந்து வேறுபட்ட நிர்வாக முறைமை இங்கு காணப்படும். இந்த முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் அடிப்படை கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் இன்றி நிலைபெற்று வருகிறது.

பெருந்தோட்டங்களில் அரசாங்கம் எந்த வித நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகளின் அனுமதியை பெற்றாக வேண்டும். இவ்வாறான நிலைமைக்கு ஒப்பான இடங்களாக சுதந்திர வர்த்தக வலையங்கள் காணப்படுகின்ற போதும் அவற்றுக்கு பெருந்தோட்டங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. சுதந்திர வர்த்தக வலையங்கள் ஒரு பொருளாதார பிரதேசம். அங்கு மக்கள் குடியிருப்பு என்பது இருக்காது. அரசின் பொதுவான தொழில் நிபந்தனைகளே (சட்டங்களே) அங்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. எனினும் பெருந்தோட்டங்களைப் பொருத்தவரை முழு குடியிருப்புமே பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உட்பட்டதாக இருப்பதனால் தொழில்தருநர் என்று வகிபங்கை மீறி மக்களின் செயற்பாடகளில் தலையிடும் நிலை காணப்படுகிறது.

பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து நிலங்களும் உற்பத்திக்குரிய பிரதேசமாகவே கருதப்படுகின்றன. மக்களின் வாழ்வுக்கும் உற்பத்திக்குமான இடங்கள் என்று பிரிவினைக் கிடையாது. அதாவது பயிர் செய்யகை

பிரதேசம் குடியிருப்பு பிரதேசம் என்ற வேறுபாடு இல்லை. இதனாலேயே தன் பாட்டன் வைத்து வளர்த்த எந்த வகை மரமாயினும் அது பேரனுக்கோ தோட்ட மக்களுக்கோ சொந்தமானது அல்ல. தோட்டத்துக்கே சொந்தம் என்று அதனை அபகரிக்கப்படுகிறது. வீட்டில் இட வசதி போதாது என்று மேலதிக அறைகளை கட்டவேண்டுமாயினும் அதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். கால் நடை வளர்க்க கொட்டில் கட்டுவதாக இருந்தாலும், ஏன் மலசல கூடம் அமைப்பதாக இருந்தாலும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும் தோட்டத்தில் உள்ள ஒருவர் ஒரு சுய தொழிலை ஆரம்பிப்பதாக இருந்தாலும் மின்சாரம் பெறுவதாக இருந்தாலும் அதற்கு கிராம உத்தியோகத்தர் முகாமையாளரின் அனுமதியைப் பெற்ற பின்னரே தனது அனுமதியை வழங்கின்ற நிலைமை காணப்படுகிறது. இவற்றில் இருந்து தோட்டங்கள் என்பது இன்றும் ஒரு தனி இராஜ்சியத்திற்கு உட்பட்ட பிரதேசங்கள் என்பதை மறுக்க முடியாது. இவை அரசாங்கத்தின் பாதை எழுச்சித்திட்டத்தினாலோ அல்லது கிராம எழுச்சி அபிவிருத்தி திட்டங்களுக்கு உட்பட்டவையல்ல.

எனவே முகவரிக்கான பிரச்சினை என்பது வீட்டுரிமைக்கான பிரச்சினையையும் காணி உரிமைக்கான பிரச்சினைகயையும் தன்னகத்தே கொண்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி பிரதேசங்களும் குடியிருப்பு பிரதேசங்களும் தனித்தனியாக வரையறுக்கப்பட்டு குடியிருப்பு பிரதேசங்கள் தோட்ட நிரவாகத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவைகள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்படுத்தி அவற்றை அரச கட்டமைப்புக்கு இணைப்பதே இதற்கான தீர்வாக அமைய முடியும். இதன்போது தோட்ட மக்களுக்கு காணியுரிமையையும் வீட்டு உரிமையையும் உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். வீடு, காணி உரிமையை மறுத்து மலையக மக்களுக்கான முகவரியை பெறுவது என்பது அபத்தம்.

மேற்குறித்த தீர்வினை வழங்குவதால் இலங்கை அரசாங்கம் எதனையும் இழக்கப் போவதில்லை. எனினும் இதனை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகள் வழியுறுத்துவதாயில்லை. இது ஏன் என்று மலையக மக்களுகள் சிந்திப்பது இன்று அவசியமாகியுள்ளது. இந்த தீர்வு மலையகத்தில் இன்றளவும் மக்கள் மத்தியிலும் பொதுவில் இலங்கை மக்களிடத்திலும் போதிய கருத்தாடல்களுக்கு உட்டபட்டவில்லை. அரசாங்கம் சாரா நிறுவனங்கள் இது தொடர்பாக பேசுகின்ற போதும் அவைகள் இதனை மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனை அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கச் செய்வதில் அவர்களிடம் உள்ள மனத்தடையே இதற்கு காரணம் என்பது நோக்குனர்களின் கருத்தாகும்.

மலையக தலைமைகளே மலையக மக்களின் பிரச்சினைகளை அரசியல் பிரதிநித்துவத்திற்கான மற்றும் அபிவிருத்திகான பிரச்சினையாகவோ அல்லது அடையாளப் பிரச்சினையாகவோ அதாவது மலையக தேசியத்திற்கான பிரச்சினைகளாகவே அல்லது இவை இரண்டின் கலவையாக நோக்கும் போக்கே காணப்படுகிறது. இதனை கடந்து மலையக மக்களின் வேராக உள்ள பொருந்தோட்ட பொருளாதாரம் அதனால் ஏற்பட்ட கட்டமைப்பை விளங்குவதற்கான முயற்சிகள் மிகவும் குறைவே. மலையக மக்களின் பொருளாதார உரிமைக்கான போராட்டங்களே அவர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்களுக்கான வெளியை அமைத்தன வெற்றிகளையும் பெற்றுத்தந்தன. மலையக மக்களின் பொருளாதார உரிமை மறுப்பதற்காகவே அரசியல் உரிமைகள் பல மறுக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த உண்மையை நேர்மையாக நோக்குவதும் இல்லை.

இப்பின்னணியிலேயே மலையக அரசியல் தலைவர்கள் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக சொல்லி வருகின்றனர். அந்த தீர்வுகளை ஆளும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு வருகின்றனர். எனவேதான் மலையக மக்களின் பொருளாதார உரிiமைகளுக்கான போராட்டங்களை (சம்பள உயர்வு போராட்டங்கள்) மலையக தலைவர்களுக்கிடையிலான போட்டிகளாக மாற்றி இறுதியில் அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் வாய்ப்பாக தீர்த்து வைக்கின்றனர். இதனூடாக தங்களின் அரசியல் வெற்றியை நிலைநிறுத்துகின்றனர்.

எனவே மலையக மக்களுக்கான முகவரிக்கான பிரச்சினை என்பது தோட்டங்களில் உள்ள லயன் அறைகளுக்கு இலக்கங்களை வழங்கி தனி முகவரிகளை வழங்குவது என்ற குறுகிய வரையறைக்கு உட்பட்டதல்ல. மாறாக அவை ஒரு கட்டமைப்பு ரீதியான பாரபட்சத்தின் வெளிப்பாடு என்ற வகையில் பரந்த அடிப்படைகளைக் கொண்டது. எனவே அவை முழுமையாக நோக்கப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அரசாங்கமோ அதில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகலோ தீர்வு யோசனைகளை முன்வைக்கும் முயற்சிகளையன்றி அதனை கருத்திற் கொள்ள தயாராக இருப்பதாக தெரியவில்லை. எனவே மலையக மக்களே தமது முகவரியை எழுத வேண்டும் என வரலாறு நிற்பந்திக்கின்றது.

நன்றி - http://ndpfront.com/

தெளிவத்தை ஜோசப் அவர்களின் மூன்று நூல்கள் அறிமுகமும் அமுதவிழா நிகழ்வும்

தெளிவத்தை ஜோசப் 
மலையகத்தின் அடையாளமாக இருந்து கடந்த ஐம்பதாண்டு காலமாக எழுத்துலகில் முத்திரைப்பதித்து வெற்றிநடைபோடும் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களின் இரண்டாவது சிறுகதை நூலான 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்'  வெளியீடும், அவரது ஏனைய இரண்டு நூல்களின் அறிமுகமும் பாராட்டு விழாவும்  எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்
1960 களில் இருந்து தொடர்ச்சியாக ஐம்பது வருடமாக எழுதி வரும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள், 1979 ஆம் ஆண்டு பேராசிரியர் மு.நித்தியானந்தன் தனது அவர்களின் வைகறை பதிப்பகம் ஊடாக வெளியிட்ட 'நாமிருக்கும் நாடே' தொகுதிக்குப் பின்னர் நூலுருப் பெறவில்லை. அந்தக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக மல்லியப்புசந்தி திலகரின் 'பாக்யா பதிப்பகம்', 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' எனும் மகுடத்தில் 17 கதைகளை தொகுத்து வெளியீடு செய்துள்ளது. இதன் வெளியீட்டு விழா அன்றைய தினம் கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கோ.நடேசய்யர் அரங்க அமர்வில் நடைபெறவுள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளரும், முன்னாள் அமைச்சுச் செயலாளருமான எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நூலினை மூத்த பத்திரிகையாளர் திருமதி.அன்னலடசுமி ராஜதுரை வெளியிட்டு வைக்க, புரவலர் ஹாசிம் உமர், பேராசிரியர் சோ.சந்திரசேகரன், திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் காப்பாளர் அமரசிங்க குடகல்லார ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். நூலாய்வுரையை திறனாய்வாளர் லெனின் மதிவானம் நிகழ்த்தவுள்ளார்.

இளவயதில் தெளிவத்தை

மீன்கள்
தமிழகத்தின் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரபல படைப்பான 'விஷ்ணுபுரம்' பெயரில் இயங்கும் வாசகர் வட்டத்தினரே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு 'விஷ்ணுபுரம்' விருதினை வழங்கி விழாவெடுத்திருந்தனர். அதே விழாவில், இன்னுமொரு பரிசாக தெளிவத்தையின் 9 சிறுகதைகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தொகுப்பாசிரியராக 'மீன்கள்' எனும் மகுடத்தில் வெளியிட்டு தெளிவத்தைக்கு கௌரவம் செய்தார். தெளிவத்தையின் 'கூனல்' என்ற சிறுகதையை உலகப்பெருமை மிக்க சிறுகதையென எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். தெளிவத்தையின் 'மீன்கள்' எனும் சிறுகதையை தமிழில் வெளிவந்த முதல் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகன் பட்டியலிட்டுள்ளார். அந்த 'மீன்கள்' தொகுப்பின் அறிமுக நிகழ்வு மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அரங்க அமர்வாக 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் நடராஜா, பேராசிரியர் தை.தனராஜ், கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் இரகுபதி பால ஸ்ரீதரன், சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் கமல் பெரேரா ஆகியோர் பெற்றுக்கொள்ளவுள்ளனர். நூலாய்வுரையை கவிஞரும் சிறுகதையாசிரியருமான அல்அஸுமத் ஆற்றவுள்ளார்.

குடைநிழல்
தேசிய கலை இலக்கிய பேரவையும் - சுபமங்களாவும் இணைந்து நடாத்திய போட்டியில் பரிசு பெற்ற நாவலான தெளிவத்தை  ஜோசப்பின் 'குடைநிழல்' கொடகே பதிப்பகத்தினரால் ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாவலின் பெறுமதி; கருதி அதனை மறுபதிப்பு செய்து தமிழகத்தின் 'எழுத்து' பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். விஷ்ணுபுரம் விருது விழாவில் இன்னுமொரு பரிசாக அமைந்த இந்த மறுபதிப்பு நூல் இவ்விழாவில் மலையக சிறுகதை முன்னோடி என்.எஸ்.எம்.இராமையா அரங்க அமர்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நூல் தமிழகத்தில் வெளிவருவதற்கு பங்களிப்பை வழங்கிய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் எழுத்தாளரும் கலைஞருமான அந்தனிஜீவா நூலினை வெளியிட்டு வைக்க துரைவி பதிப்பக உரிமையாளர் துரைவி.ராஜ்பிரசாத், சட்டத்தரணி சோ.தேவராஜா, கவிஞர் மேமன்கவி மற்றும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஹேமசந்திர பத்திரண ஆகியோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பாராட்டு 
திருமணமானபுதிதில்
தமிழகத்தில் 'விஷ்ணுபுரம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் மூலம், தமிழக மக்களுக்கு மலையக மக்கள் பற்றிய காத்திரமான செய்தியினை எடுத்துச் சென்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆளுமையை பாராட்டி மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கௌரவம் செய்யவுள்ளது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவரான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் மன்றத்தின் இணைச் செயலாளர்களான ஜி.சேனாதிராஜா, இரா.சடகோபன் ஆகியோருடன் இலக்கிய செயற்பாட்டாளர் மு.தயாபரன் மற்றும் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிப்புதீன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர்.

நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை  மல்லியப்புசந்தி திலகர் மேற்கொள்ள, சுப்பையா கமலதாசன் வரவேற்புரை நிகழ்;த்தவுள்ளார். அமுதவிழா காணும் தெளிவத்தை ஜோசப் அவர்களின பிறந்த நாளான அன்று  அவரது வாழ்க்கைப் பயணத்தினை தொகுப்பாக ஆவணப்படுத்தும் காணொளியும், தேநீர் விருந்தும் சிறப்பு நிகழ்வாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமுத விழா காணும் தெளிவத்தை ஜோசப் - பாராட்டு விழா


தனது 80 அகவையை அடையும் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் பிறந்த நாள் அன்று மூன்று நூல்களின் அறிமுகமும் 'மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்' நடாத்தும் பாராட்டு விழாவும்.





இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் பற்றிய கருத்தரங்கம்


மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன!


கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும், ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள்.)

ஆங்கிலேயர் அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால், வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947, 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்.

1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லை, அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.

உலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன்
மனித உரிமை மீறல்கள்

UDHR, ICCPR, ICESCR உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் உள்ளப்போதும் மனித உரிமைகளை பேணிப்பாதுகாப்பது என்பது கடினமாக உள்ள நிலையில் இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை சர்வதேச பொருந்தனை, உடன் படிக்கைளுடன் சேர்த்து பொருட்கோடல் செய்துள்ளேன்.

Genocide Convention உடன் ICCPR இன் உறுப்புரை 27ஐ சேர்த்து வாசிக்கும் போது வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம் அதே வேளை நேரடியாகவே ICCPR உறுப்புரை 6 ‘ஒவ்வொரு மனிதப்பிறவியும் பிரித்தெடுக்க முடியாத வாழும் உரிமையைக் கொண்டுள்ளனர் அது சட்டத்தின் பாதுகாப்புக்கு உரித்துடையது’ என்பதுடன் ஏதேட்சதிகாரமாக பறிக்கப்பட முடியாது’ என்கின்றது.

வாழும் உரிமை என்பது உடல் ரீதியான பாதுகாப்பு மட்டுமன்றி தனித்துவத்தை பேணுவதற்கு அத்தியாவசியமான மத, கலாசார, மொழி பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான நிறுவனங்கள் உட்பட எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் கடப்பாட்டை அரசு கொண்டுள்ளது. இதற்காக அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினருக்கு போதுமான பங்களிப்பும், உச்ச வளங்களை பயன்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

சிறுபான்மையினர்
· தனது தனித்துவத்தை பேணுவதற்கும், இன ஒழிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
·உயிர் வாழ்வதற்கான தேவைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை
·பாரபட்சம் காட்டாமை, ஒதுக்கிவைக்கப்படாமை
·தனது சொந்த மொழியினை பயன்படுத்தும் உரிமை
·தனது பிரதேசம் தொடர்பாக தேசிய, பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில், சட்டவாக்கங்களில் பங்கு பற்றும் உரிமை
போன்ற விசேட உரிமைகளுடன் ஏனைய பொதுவான உரிமைகளை அனுபவிக்க உரிமைக் கொண்டள்ளனர்.

அரசின் தேசிய கொள்கை, நிகழ்ச்சித்திட்டங்கள் வகுத்தல் அமுல் படுத்தலின் போது சிறுபான்மையினர் நியாயமான நவன்களை பற்றி கவனம் செலுத்துதல் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளல் அரசின் கடமையாகும்(Art 5 Minority Declaration 1992) எமது அரசியலமைப்பில் சிந்தனை செய்யும் சுதந்திரம், தனது மனசாட்சி, மதத்தின்படி ஒழுகுவற்கு, பின்பற்ற உள்ள சுதந்திரம் சட்ட முரணாக கைது செய்யப்படாமலிருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பினை பெறவும், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை பிறப்பு ஏனைய பின்புலத்தின் படி ஓரங்கட்டப்படாமலிருக்கும் உரிமை, எனும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன கருத்து வெளியிடும், தகவல் பெற்றுக் கொள்ளும் உரிமை, அமைதியாக ஒன்று சேர்வதற்கும், ஒருங்கு சேர்வதற்குமான உரிமை, தொழில் செய்யும் உரிமை, நடமாடும் உரிமை போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன இவை பொருளாதார உரிமைகளோடு தொடர்புடையன.
அரசியல் உரிமைகள் பொருளாதார தேவைகளை அடையக் கூடிய தகவல்களையும் கருத்துக்களினையும் தரக்கூடியன பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுவதனால் ஏற்படும் தீங்கு பாரதூரமானது. இந்தியாவில் 2/6 பங்கு மக்களின் பொரளாதாரம் மிகவும் மோசமானது அவர்கள் மீது சாதி வேறுபாடுகள், பொலிஸ் அவர்களை மோசமாக நடாத்துதல், வாக்குரிமை பறிக்கப்படல் (தலித்துக்கள்) இழிவான கொடூரமான நடத்துகை, பெண் சிசுக்கொலை, குழந்தைகளை விற்றல் எனும் மிகவும் கொடிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.

இதே வேளை மத்தியகிழக்கு நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி காணப்பட்டாலும் அரசியல் உரிமைகள், சுதந்திரம் வழங்கப்படாமையானது பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பிராந்தியத்திற்கோ நாட்டிற்கோ பொருந்தக்கூடியதல்ல மாறாக எல்லா நாடுகளுக்கும், சமூக, அமைப்பு, இனத்திற்கும் பொதுவானதே.
இலங்கையில் மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவதன் அடிப்படை அரசியல், பொருளாதார உரிமைகள் ஒழுங்காக வழங்கப்படாமையே இவர்களது உரிமை மீறல் பற்றி சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அதை மூடி மறைக்கும் திரையாகவும், சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தடையாகவும் இலங்கையின் இனப்பிரச்சினை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Bagawati C.J ‘உயிர் வாழும் உரிமை தனியானதல்ல பல உரிமைகளுடன் சேர்ந்தே அமைகின்றது’ என்றார் UDHR Article 3 – வாழும் உரிமையும், சுதந்திரம் பாதுகாப்பு பெறுவதற்கான உரிமையும் உண்டு இது பரிக்கபட முடியாது எனவும் ((Article 2) சட்டத்தின் முன் சமனாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் (Article 7)கூறுகின்றன. எனவே வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளையும், சுதந்திரத்தையும் கொண்டதே வாழும் உரிமை எனவே இது ஏனைய எல்லா உரிமைகளுடனும் தேவைகளுடனும் தொடர்புபடுகின்றது.

மலையக தமிழ் மக்களுக்கு முழுமையாக பிரஜாவுரிமை வழங்கப்படாமையாலும், பிறப்பு அத்தாட்சி, அடையாள அட்டைகள் இல்லாமையாலும் இவர்கள் அரசியல் உரிமைகள் பொருளாதார உரிமைகள் இழந்தவர்களாக உள்ளனர். குறைந்த நாட்கூலி அதிகரித்த சுரண்டல், போதியளவில் ஓய்வு வசதிகள் இன்மை, வேலை செய்யக்கூடிய சுமுகமான சூழல் இன்மை, தொழில் தளங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்காமை, ஏமாற்றப்படுகின்றமை போன்ற பல தொழில் சார் பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர் கொள்கின்றனர்.
தொழில் செய்யும் உரிமை, தொழில் முயற்சியில் ஈடுபடும் உரிமை, என்பன போதியளவிலான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமையையும் சேர்த்தே கருதும், ஆயின் இதற்காக போதியளவு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்காமல் இருப்பதும், அரசாங்க நிர்வாக சேவைகளை பெருந்தோட்ட தனியார் தோட்ட முகாமைத்துவத்திடம் வழங்குவதும் மலையக தமிழ் மக்களின் உரிமை மீறப்படுவதற்கான படிகள்
வேலை இல்லையேல் பணம் கிடைக்காது, நிரந்தர வேலை இல்லாமலும், தொழில் உத்தரவாதம் இல்லாமலும், குறைந்த சம்பளத்துக்கான சுரண்டல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதனால் மக்களின் ஆயுள் குறைவடைந்துச் செல்கின்றது.

ஓப்பீட்டளவில் மலையக மக்களின் ஆயுள் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் 60 வயதோடு நிற்க்கின்றமையும் ஏனைய இனத்தினருடைய ஆயுள் 70-75 வரை உயந்து காணப்படுகின்றமையும் இதற்கான சான்றாகும். இது அரசு மக்களின் வாழும் உரிமையை பேணுவதற்கு தவறியுள்ளது என்பதை கூறியுள்ளது.

1820 காலப்பகுதியிலிருந்து வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை இன மக்களுக்கு காணி உரிமையோ, சொத்துரிமையோ இல்லை இவர்கள் சுயமாக இயங்க முடியாத Captive Workers ஆக நடாத்தப்படுகின்றனா.; தான் வாழும் வீடுகள் கூட சொந்தமில்லாமல் புதைப்பதற்கான மண் பகுதியையேனும் சொந்தமில்லாத மக்களாக இவர்கள் வாழ்கின்றனர். ஏனைய இன மக்கள் அனுபவிக்கும் இந்த உரிமைகள் மலையக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டமை பாரபட்சமாகும். இதற்கு 99 வருட குத்தகை ரீதியில் பெரும் தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய போதே மக்களையும் கொத்தடிமைகளாக வழங்கியமையே காரணம் (Under the Concept of Roman law)
தனது வசிப்பிடத்திற்கு முகவரி இல்லை, அங்கு மின்சாரம், நீர், உட்கட்டமைப்பு, வசதிகள் சீராக இல்லை இவற்றை பெற்றுக் கொள்ள தோட்ட முகாமையாளர் கடிதம், அனுமதி பெற வேண்டியுள்ளது.

தோட்ட முகாமையாளர் தனியார் கம்பனியின் ஊழியர் அவர் எவ்வாறு அரசாங்க நிர்வாக கடமைகளை செய்ய முடியும்? தோட்ட முகாமையாளர் வாக்காளர் அட்டை விண்ணப்பம், வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க (வேண்டிய) கூடிய அதிகாரம் கொண்டுள்ளார் இவ்விடத்திலே அவர் அரசாங்க முகவரா? அல்லது மக்கள் அவர்களின் அடிமைகளா? எனும் கேள்விகள் எழும்புகின்றன.
நன்றி -The independent


என்று நிற்கும் இந்த அவலம் - தமிழ்நாடு திரும்பிய மலையகத்தவர் நிலை - தவமுதல்வன்


நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படங்கள் ஈழத்தில் நடந்து முடிந்த போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தோ , ‘மதயானைகூட்டம் ‘ தாக்குதலால் , சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட இடங்களில் இருந்தோ எடுக்கப்பட்ட படங்கள் அல்ல இவை . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பர்ன்சைடு என்கிற தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டி குடியிருந்த தோட்ட தொழிலாளிகளின் வீடுகள் இவை . நாற்பது வருடங்களுக்கு மேல் ஆறு .மற்றும் ஓடை பகுதிகளில் தாங்களாகவே கட்டிக்கொண்ட வீடுகள் இவை .குடிசை, மண்வீடு , தகரவீடு , ஓட்டு வீடு என குருவி கூடு கட்டுவதைபோல கட்டப்பட்ட வீடுகள் இவை .நேற்று மாலை அந்த தோட்டத்தின் பகுதி முழுதும் கண்ணீரும் .கதறலுமாக , ஒப்பாரியாக மரண ஓல சத்தம் நிலவ அவர்கள் கண் முன்னே அரசு அதிகாரிகள் . தோட்ட நிர்வாக உதவியுடன் இடிக்கப்பட்டது .உடலை மூலதனமாக கொண்டு உழைப்பை மட்டுமே நம்பி இந்த மலைக்கு வந்தவர்களுக்கு கிடைத்த இடங்களே அவை . பள்ளி ,கல்லூரி போகும் இன்றைய இளைய தலை முறையினர் ” நேற்று இரவு கொட்டும் பனியில் தேயிலை காட்டில் எஞ்சிய பொளுளை பாத்துகிட்டு கிடந்தோம் ” என்று கண்ணீர் மல்க கூறியபோதும், ” ஏதோ கொஞ்சம் நாங்களும் இந்த ஊர்ல பிழைச்சிகிட்டோம் என நம்பிக்கையாக இருந்தோம் எல்லாம் போச்சி ” என வாழ்வின் நம்பிக்கை தகர்ந்து பேசியபோதுநமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை . சுற்றுசூழல் பாதுகாப்பு , ஆறு ஓடைகள் ,நீர்பிடிப்பு பகுதிகள் பாதுகாப்பு என அரசு காரணம் சொல்லி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நியாயமான காரணம் இருப்பதுபோல , தொழில் , பிள்ளைகளின் கல்வி ,ஒன்றாக சேர்ந்து வாழும் நிலை போன்றவற்றால் மாற்று இடங்களுக்கு தொழிலாளிகள் போக மறுப்பதற்கும் காரணங்கள் உள்ளன .தொழிலாளிகளிடம் இப்படி கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் சட்டம் தன் கடமையை செய்வதாக சொல்லும் இவர்கள் வனத்தை ஆக்கிரமித்து … குடியிருப்புகளையும் கட்டியிருக்கும் தோட்ட நிர்வாகதின்மேல் எந்த நடவடிக்கையும் இல்லையாம் .தங்களை இப்படி காலி செய்ய அதிகாரிகள் நடந்துகொள்வதற்கு தோட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாக பலரும் வேதனையில் கூறுகின்றனர் .மீண்டும் பழைய நிலைமைக்கு போன தங்கள் வாழ்வை இனி மீட்டு எடுப்பது எளிதான காரியம் இல்லை . இருப்பினும் பிள்ளைகளின் கல்வி . அவர்களில் வேலை பாதிக்காத வகையில் அங்கேயே மாற்று இடம் கொடுத்து அரசே வீடும் கட்டி கொடுக்க வலியுருத்துவொம் . பல நூற்று ஆண்டுகளாய் தொடரும் இந்த அவலம் நிற்பது எந்நாளோ .?????

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புலியால் தாக்கப்பட்டு இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர் . மேலும் பலரை தாக்கக்கூடும் என்கிற அச்சமும் ,பீதியும் தொட்டபெட்டா வை ஒட்டியுள்ள கிராமங்களான ..தூனேறி , இடுஹட்டி . குந்தசப்பை , அகலார் , கொதுமுடி என இருபத்தைந்து கிராமங்களை கவ்வி உள்ளது . பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ,வனத்துறை காவல்துறை கூட்டு நடவடிக்கையும் ,தேடுதல் வேட்டையும் தொ…டர்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது , சுட்டு கொள்வது என இருவேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன .பெரும்பாலான மக்கள் புலியை சுட்டுகொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதை அவர்களின் கோபத்திலிருந்து உணர முடிகிறது. விலங்குகளால் எந்த மனித உயிரும் பலியாவதை நான் ஆதரிக்கவில்லை. அதே வேலை, மலை மாவட்டமான ,நீலகிரி ,வால்பாறை போன்ற இடங்களில் இது தொடர் நடவடிக்கை தான் . யானை .சிறுத்தை , காட்டுஎருமை போன்ற விலங்குகளால் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பலியாகாத ஆண்டுகளே கிடையாது . குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பின் , ரியல் எஸ்டேட் தொழிலின் விரைவான வளர்ச்சிக்குபின் மலைகளை குறி வைத்து அதன் ‘ உல்லாச தேடலின் ‘ ‘அமைதியின் உறைவிடமாக ‘ திகழ ஆரம்பித்தது . தனியார் மயத்தின் தரகர்கள் , ‘பெரும்புள்ளிகள் . ரியல் எஸ்டேட் அதிபர்கள் . திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோரின் அந்தப்புர இடங்களாக மாளிகைகள் , ரிசார்ட்டுகள் . சுற்றுலாவாசிகளின் விடுதிகள் வனத்தை நோக்கி நகர்ந்தன .பார்வைக்கு வானம்போல தோற்றமளிக்கும் பல இடங்களில் உள்ளே புகுந்தால் பல ‘வெள்ளைமாளிகைகளை ‘ காண முடியும் . அதை சுற்றி மின்வேலிகள். சில இடங்களில் ஓடைகளை மறித்து கட்டிடங்கள்; பொய்க்கும் பருவமழை; வறண்டு வரும் நீர்நிலைகள் ; அழிந்துவரும் விலங்குகளின் உணவான புல்லினங்கள் ; இவை எல்லாம் வனத்தை விட்டு விலங்குகள் வெளியில் வர காரணங்களாக உள்ளன . அவைளை தடுக்கவும் ,மனித உயிர் பலிகளை நிறுத்தவும் வேண்டும் கீழ் கண்ட நடவடிக்கைகள் முக்கியம் என கருதுகிறேன் .







1. வனத்தை ஒட்டி உள்ள விடுகளை ரத்து செய்து, ஆக்கிரமிப்பாளர்களின் கடுமையான நடவடிக்கை எடுப்பது

2.சுற்றுலா என்கிற கருத்தாக்கத்தை நிறுத்தி முதுமலை போன்ற இடங்களுக்குள் பொதுமக்களை அனுமதிப்பதை நிரந்தரமாக நிறுத்துவது .

3, நிரந்தரமாக தாங்காமல் வெறுமனே கட்டிடம் கட்டி வைப்பதை அனுமதிக்காமல் இருப்பது .

4. வனங்களுக்குள் விலங்குகளுக்கு தேவையான நீர் தொட்டிகளை உருவாக்குவது .

5.விலங்குகளுக்கு தேவையான பழ ,புல் மரங்களை வளர்ப்பது .

6. மனிதர்களை பலிகொண்ட புலியை மயக்க ஊசி செலுத்தி ,பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விடுவது .

இவை என் தாழ்மையான கருத்துக்கள் .
————————————————————————————————————————–
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இங்கிருந்துதான் அரிசி ,பருப்பு ,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்வது எல்லோரும் அறிந்ததே . கள்ளத்தனமாக கடத்தப்படும் ரேசன்அரிசி தமிழக -கேரளா எல்லையான கோவை வாளையாரில் சோதனை சாவடியில் அடிக்கடி பிடிபடுவதை செய்தி ஏடுகளில் படித்திருப்பீர்கள் . நிலைமை இப்படி இருக்க, முல்லை பெரியார் அணை யிலிருந்து நமக்கு தண்ணீர் தர மறுத்த கேரளாவுக்கு எத…ிராக கொந்தளித்த ‘இனஉணர்வாளர்கள் ‘ பலர் பக்தியின் பெயரால் சபரிமலைக்கு இடுமுடியில் பதுக்கி தலைக்கு ரெண்டு கிலோ வீதம் பல லட்சம் கிலோ அரிசி கடத்த புறப்பட்டுள்ளனர் .

எங்கள் ஊரில் தாயகம் திரும்பிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள், மதுக்கடை , மருத்துவமனை , மேல்மருவத்தூர் , கந்துவட்டி போன்றவற்றிற்கு ‘அழுதது ‘ போக குருவிபோல சேர்த்த சீட்டுப்பணம் , மேலும் கந்துவட்டி …இதுபோக ‘கைமாத்து ‘ வாங்கிகொண்டு வருசம்பூர ஏறுகிற மலை போதவில்லை என்று சபரி மலைக்கு கிளம்பிவிட்டனர் . இதில் இலங்கை இலிருந்து இங்கு வந்து தங்கி பல ஆசாமிகள் போகின்றனர் .

இத பார்க்கும்போது எனக்கும் மனசு புண்படுது .
——————————————————————————————————————

இந்த வருடத்தின் முன்பனி காலத்தில் கடல் கடந்து இரண்டு ஆளுமைகளை சந்திக்க நேர்ந்த்தது . ஒன்று நான் நீண்ட நாளாக அவதானித்து வந்த வல்லினம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரும் , எழுத்தாளருமான நண்பர் கே .பாலமுருகன் அவர்கள். இன்னொன்று பள்ளிக்காலம் தொட்டு நான் தேடி தேடி வாசித்து வருகிற எங்கள் மலையகத்தின் எழுத்து ஆளுமை அய்யா எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள். நண்பர் பாலமுருகன…ோடு ஒரு நாள் முழுதும் குன்னூர் தொடங்கி மலை ரெயிலில் பயணித்து கொண்டே மலேசியாவின் இலக்கிய செயல்பாடுகள் , மக்களின் வாழ்வியல் ..தமிழ் தேசிய போராட்டங்களின் நிகழ்வுகள் ..எதிர்வினைகள் …உணர்ச்சிகர கோசங்கள் … போன்றவை குறித்து விரிவாக பேச முடிந்ததது … அரசியலிலும் இலக்கிய செயல் பாடுகளிலும் எனது நிலைபாடுகளை அவரும் இணக்கமாக கொண்டிருந்த்தது கொண்டிருந்ததது மகிழ்வை தந்தது .அவரின் படைப்புகளான சிறுகதை .கவிதை என இரண்டு நூலின் சொற்களோடு மலேசியாவை,வாழ்வை காணுகிறேன் . தன் அனுபவத்தில் கண்ட வாழ்வை , சிக்கலை . நுட்பமான உண்மைகளை அதில் காண்கிறேன் ….விரிவாக பயணித்து எழுதுவேன் ….நன்றி 2013 வருடத்தின் முன்பனி காலமே .

————————————————————————————————————

இனிமே அந்தம்மா காபி வாங்கிவந்த குடிக்க மாட்டோம் . நாங்க வேற அவங்க வேற ” என்று இருபது வருடமாக ஒன்றாக இருந்த தேயிலை தோட்ட தொழிலாளியான பெண்கள் பிரிந்து விட்டதாக
அந்த தோட்டத்தின் இன்னொரு பணியாளர் கூற வந்த வேதனை இன்னமும் சீரணிக்க முடியவில்லை . இன்னும் சில
இடங்களில் …” சாவுக்கு அவங்களுக்கு சொல்லகூடாது , நாமளும் யாரு வீட்டுக்கும் போக கூடாது , ஒரே பூசாரி வைக்க கூடாது , நாமளும் அப்படி நம்ம ஆளுகள தவிர யாரு வீட்டுக்கும் போககூடாது ” இப்படி மலையக மக்கள் மத்தியில் விஷம் பரவ ஆரம்பித்திருக்கிறது . குறிப்பாக தாயகம் திரும்பியோர் அதிகம் செறிந்து வாழும் கூடலூரில் . இப்படி பேச வைத்தது யார் தெரியுமா ? ‘ ஈழத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருப்பவர்கள் ‘ ‘அண்ணன் வழியே எங்கள் வழி ‘ புலியை முறத்தால் அடித்து விரட்டிய ….புறநானூற்று வீரம் பேசியவர்கள் .அடுத்த கட்ட போருக்காக தயாராக இருப்பவர்கள் ‘- நீலகிரி மாவட்ட தமிழ் சங்கம் .

சாதிகறை படியாமல் ஒற்றுமையாக இருந்த மக்களை முத்திரையர் சாதிசங்கதின் பெயரால் கூறுபோட ஆரம்பித்திருக்கின்றனர் . நேற்று புலிக்கொடி : இன்று சாதிசங்கசிங்ககொடி ; நேற்று தமிழினம் இன்று முத்திரையர் இனம்;
நேற்று ஓவியர் புகழேந்தி , கவி அறிவுமதி , கவி காசி ஆனந்தன் . பாவணன் .ஆகியோர் விருந்தினர் இன்று பா .ம .க பேச்சாளர் ; என்ன செய்யலாம். என் உறவுகளேயே உதறி துண்டறிக்கை …. கண்டன கூட்டம் என எதிர்வினை தொடர்கிறது . எல்லாம் தோழமை சார்ந்த உறவுகளின் மேல் … புத்தகம் .. எழுத்து …. மேல் உள்ள நம்பிக்கை தான்.

2013 இல் தேயிலை உற்பத்தி 339 மில்லியன் கிலோ- வருமானம் 1.6 பில்லியன் ரூபா

உற்பத்தியை அதிகரித்தோம் - எங்கள் வயிற்றை சுருக்கிக்கொண்டோம்

நாட்டில் 2013 ஆம் ஆண்டில் 339 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி வரலாற்றுடன் ஒப்பிடுகையில் இது பாரிய சாதனையாகும். இதன்மூலம் நாட்டுக்கு 1.6 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாத்தறை கொட்டபொல மொரவக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 328 மில்லியன் கிலோ தேயிலையே உற்பத்தி செய்ய முடிந்தது. தேயிலை செய்கைக்கு வழங்கப்படுகின்ற உர மானியம் காரணமாகவே தேயிலை உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது.

2013 ஆம் ஆண்டு 70 வீதமான தேயிலை சிறு தேயிலை உரிமையாளர்களினாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிறு தேயிலை தோட்டங்களுக்கு பல்வேறு வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலைக்கு உலகம் முழுவதும் உயர்வான கேள்வி ஏற்பட்டுள்ளது.

தேயிலை செய்கைக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டெயருக்கு 350000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. 3500 ரூபா பெறுமதியான 50 கிலோ கொண்ட உரம் 1500 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றது. 

ஒரு காலத்தில் ஒரு கி.கி தேயிலை கொழுந்தின் விலை 25 ரூபாவாக குறைவடைந்தது.

ஆனால் தற்போது 90 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. எனினும் தேயிலை செய்கைக்கு வழங்குகின்ற நிவாரணங்களை அரசாங்கம் குறைக்கவில்லை.

எமது நாடு சிறிய நாடாகும். எனவே நிலத்தை விரிவுபடுத்திக்கொள்ள முடியாது. இருக்கின்ற தேயிலை செய்கையை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.

இலங்கையை பொறுத்தவரையில் 206104 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் 70 வீதமானவை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.அதாவது 397223 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 120664 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 15 இலட்சம் பேர் தங்கிவாழ்கின்றனர். இலங்கையில் தனிநபர் தேயிலை பாவனையானது 1.3 கிலோ கிராமாகும். 14 மாவட்டங்களில் சிறு தேயிலை உற்த்தியாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இரத்தினபுரி காலி மாத்தறை போன்ற மாவட்டங்கள் அவற்றில் முன்னணியில் உள்ளன.

நன்றி - வீரகேசரி

மலையமும் தமிழ்மொழியில் பொது நிர்வாகமும்; - ச. ஜேசநேசன்;. சட்டத்தரணி


வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும். இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர். நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே. மாத்தளை மாவட்டத்தில் 19.48, கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர். முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர். இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர். அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர். அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.

இந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அது நியாயமாகவேபடுகின்றது. தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர். இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை "மலையகத் தமிழர்' என்று அழைக்கின்றனர்.

மலையகத்தில் கற்றோர், கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்து வருகின்றனர். சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது. அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை. மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

இவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்தி விடுவோம். அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்குள் அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர். ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை. பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் மந்தைகளைப் போல நடத்தப்படுகின்றார்கள். குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரை லாயம் எனப்படும். இவை வரிசையாக இருக்கும். இதைப் போன்ற லயங்களில்தான் (LINES) மலையக மக்களும் வாழ்கிறார்கள். இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து (LINE) வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. 1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்களாக (BRITISH SUBJECTS) இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர். அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார். 

அவர்கள் தமது மரபுவழித் தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை. அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை. எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும், அவரைத் தட்டிக் கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் "விதி' என்றே கூறலாம். நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழரைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை! இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை!. சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது. 

1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார். உண்மையில் அடிப்படை உரிமை, மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை. 17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்ட மாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதி தொகையை நிர்ணயித்துக்கொண்டனர். எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது. 1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன. எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர். (வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.)

இன்று மலையகத் தமிழ் மக்கள் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்களின் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக் குறைவு. இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (PARALLEL, CO OR EQUAL LANGUAGE OF ADMINISTRATION) அரசாங்க வர்த்தமானிகள் (GOVT. GAZETTE) ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை. இதில் அக்கறை கொள்ள வேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற் சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.

1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999 I) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும். அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும். II) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.

2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003. I) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள். II) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள். அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (FOUR GRAVETS), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல் வேண்டும். 

14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம்! வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. 

தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு "கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை. மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது "உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனை விடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத் தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது. இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன. 

மேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.

 ச. ஜேசுநேசன் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates