Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையின் இறுதி அரசன் காட்டிக்கொடுக்கப்பட்டு 200 வருடங்கள் - என்.சரவணன்

 

சில நிகழ்வுகள் வரலாற்றில் மீண்டும் மீண்டும் அதே போல் நிகழ்வதுண்டு. கண்டியரசன் கதையோடு ஒட்டிய நிகழ்வுகளும் அப்படி பலவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன.

இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு பெப்ரவரி  18ஆம் திகதியோடு 200 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் என்று சிங்களவர்கள் கூறுவார்கள். இலங்கையை இறுதியாக ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழன் என்று தமிழர்கள் கூறிக்கொள்வார்கள். இவை அனைத்துமே உண்மைதான்.

பின்புலம்
கண்டி நாயக்கர் என்போர் இலங்கையின் கண்டி அரசை ஆண்ட, தென்னிந்திய நாயக்கர் அரச மரபைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த இவர்கள் கண்டியைத் தலை நகராகக் கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்தனர். இவர்கள் தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் பாளையக்காரராக இருந்து பின்னர் சுதந்திர அரசமரபை உருவாக்கிய மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த தெலுங்கர்கள் ஆவர். கண்டிய அரசமரபினருடன் செய்துகொண்ட மணத்தொடர்புகளின் வழியாகவே இவர்களுக்குக் கண்டியரசின் அரசுரிமை கிடைத்தது. இம் மரபைச் சேர்ந்த நான்கு அரசர்கள் கண்டியை ஆண்டுள்ளனர். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் பின்னர் பௌத்தர்களாக மதம் மாறினர். இலங்கையில் பௌத்தமதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.

கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம் மரபில் 
  • ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 – 1747 – இவரும் அரசியின் சகோதரன் என்பது கவனிக்கத்தக்கது),
  • ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782),
  • ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 - 1798),
  • ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 - 1815)
ஆகியோர் கண்டியை ஆண்டு வந்தனர். 

கண்டி அரச மரபினர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கண்டி அரசன்  ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  (1782 - 1798) ஐந்து மனைவிமார் இருந்தும் ஒருவருக்கும் பட்டத்துக்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள அதிகாரிகளும், பிரதானிகளும், திசாவமார்களும் தருணம் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் வாரிசின்றி இறக்க நேரிட்டது. தனக்குப் பின் அரசாட்சியை மேற்கொள்ளவென மூத்த மனைவியின் தம்பி முத்துசாமியையே இறப்பதற்கு முன் முடிக்குரிய இளவரசனாக நியமனம் செய்திருந்தார் மன்னார். ஆனால் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அரசாட்சியில் கண் வைத்துக்கொண்டிருந்த கண்டி மந்திரிகளில் ஒருவரான பிலிமத்தலாவ அரசாட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்குப் பின் முத்துசாமியை நியமிக்க விடவில்லை. மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமியை மதுரையில் இருந்து அழைத்து வந்து அரசனாக்கினான். கண்ணுசாமி “ஸ்ரீ விக்ரமசிங்க” என்கிற பெயரில் 1798இல் மகுடம் சூட்டப்பட்டார்.

நாட்டை விட்டு துரத்தப்பட்ட மன்னரின் மூத்த மனைவியும் சகோதரன் முத்துசாமியும் ஆங்கிலேயர்களிடம் தஞ்சமடைந்தனர்.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஆட்சியின் போது இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவ அரசாட்சியை கைப்பற்றுவதற்காக நயவஞ்சகமாக கண்டியரசனைப் பிரித்தானியருக்கு எதிராகத் தூண்டி பிரித்தானியரின் மூலம் கண்டியை கைப்பற்றி தானே ஆட்சியமைக்கலாம் என்று நம்பினான். ஆள்பதிக்கு அது குறித்து தெரிவித்து உதவியையும் கோரினான். ஆங்கிலேயர்கள் அதற்கு இணங்க மறுத்த நிலையில்  இரு தரப்புக்கும் இடையில் சண்டையை மூட்டிவிடுவதில் இறங்கினான். கரையோர மாகாணங்களில் உறுதியான நிலையில் இருந்த பிரித்தானியருடன் போரில் ஈடுபடும்படி பிலிமத்தலாவ ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைத் தூண்டி விட்டான். 1803 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. பிரித்தானியர் எதிர்ப்புக்கள் இன்றிக் கண்டிக்குள் நுழைந்தனர். கண்டி அரசன் தலைமறைவாக இயங்க நேரிட்டது. இந்த இடைவெளியை பயன்படுத்தி யாழ்ப்பாணக் கோட்டையில் பாதுகாப்பளிக்கப்பட்டு வந்த முத்துசாமியை (முடிக்குரிய இளவரசன்) 08.07.1803 அன்று ஆங்கிலேய ஆள்பதி மெக்டோவல் மன்னனாக பிரகடனம் செய்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிலிமத்தலாவ ஆள்பதிக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த ஆள்பதி சில நிபந்தனைகளை முன்வைத்தார். அதிலொன்று பிலிமத்தலாவையை அரசனாக்குவதானால் முத்துசாமியை வன்னிப் பகுதிக்கு அரசனாக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. 

வெள்ளைக்கொடி விவகாரம்
ஆனால் இதற்குள் ஆங்கிலேயப் படைகள் போரில் பலவீனமுற்றுக்கொண்டு போவதை அறிந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மீண்டும் அரண்மனைக்கு வந்து போரை முன்னெடுத்தான். ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டார்கள். கூலிக்கு போர்புரிந்த மலாயர் படை கண்டியரசன் தரப்புக்கு சார்ந்தது. ஆங்கிலேயப் படையினர் ஒருவனின் வெள்ளைத் தலைப்பாகையைத் தடியில் கட்டித் தூக்கிக்கொண்டு வந்து சரணடைந்தனர். போரும் ஓய்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நடந்தன. மேஜர் டேவியுடன் ஒரு “புரிந்துணர்வு உடன்படிக்கையும்” செய்துகொள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளில் முக்கியமாக பாதுகாப்பாக திரும்பிப் போக உதவுவது, முத்துசாமியை மீண்டும் அழைத்துக்கொண்டு போவது உள்ளிட்ட அந்தக் கோரிக்கைகள் அதில் உள்ளடக்கம். இவை ஏற்றுக்கொண்டு பலர் விடுவிக்கப்பட்டாலும் பின்னர் மேஜர் டேவியின் படையை சேர்ந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காயப்பட்ட ஒருவன் மாத்திரம் இறந்ததைப்போல நடித்து பின்னர் தப்பி காடு,மலை எல்லாம் கடந்து மாத்தளை அடைந்து நடந்தவற்றை சொன்னான். படையிலிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவன் ஒருவனே தப்பினான். அந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் சரணடைந்த ஒருவரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். கண்டியப் படைகளால் அப்படி நிர்மூலமாக்கப்பட்ட நாள் 26.05.1803. என்ன! “முள்ளிவாய்க்கால்” நாள் நினைவுக்கு வருகிறதா.

பிலிமத்தலாவ அதற்கு முன்னரும் இரு தடவைகள் அரச கவிழ்ப்பு சதி முயற்சிகளில் ஈடுபட்டமை அறியப்பட்டாலும் மன்னிக்கப்பட்டான். ஆனால் மூன்றாவது தடவையும் அவன் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான்.

“தமிழரிடமிருந்து சிங்களவர்களை மீட்கும் யுத்தம்”
ஆனாலும் கண்டியரசனுக்கு எதிரான சதி அத்தோடு முடியவில்லை. பிலிமத்தலாவைக்குப் பதிலாக அவனது இடத்துக்கு மருமகனான எஹெலப்பொல அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அவனும் தனது மாமனைப் போலவே அரசனுக்கு எதிராகச் செயற்பட்டுக் குழப்பங்களைத் தூண்டி விட்டான். இக்குழப்பங்கள் அடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எஹெலப்பொல தப்பி கொழும்பில் பிரித்தானியருடன் தஞ்சம் புகுந்தான். தனது குடும்பத்தை கொன்று விட்டதாகக் கூறி தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது புலம்பினான்.

இதற்கிடையில் கண்டியரசனின் அரசவை குழப்பங்களால் நிறைந்தது. மன்னன் பலரை நம்பவில்லை. பல இடங்களில் மக்கள் கலகம் செய்ய தூண்டப்பட்டனர். நித்திரை இழந்து நிம்மதியையும் இழந்தான் மன்னன்.
இந்த தருணம் பார்த்து எஹெலப்பொலவின் வழிகாட்டலில் பிரித்தானியர் மீண்டும் 1815 பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். போர் பிரகடனம் செய்யப்பட்டு ஆள்பதி ரொபர்ட் பிரவுன்றிக் (Robert Brownrigg) தலைமையில் படையெடுக்கப்பட்டது. அந்த யுத்தப் பிரகடனம் வசீகரமானமான முறையில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. “சிங்கள மக்களைத் தமிழ் மன்னனிடம் இருந்து மீட்பதற்கான யுத்தம் இது” என்று பிரவுன்றிக் பிரச்சாரம் செய்தான். 

காட்டிக்கொடுப்பும் கைதும்
கண்டி மண்ணனுக்கு உறுதுணையாக இருந்த மொல்லிகொட உட்பட பல பிரதானிகள் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர். இதனால் மீண்டும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தலைமறைவாக பணிபுரிய நேரிட்டது. 18.02.1815 அன்று மெதமகாநுவரவில் மன்னனின் மறைவிடத்தை காட்டிக்கொடுப்பின் மூலம் அறிந்த ஆங்கிலேயப் படைகள் சுற்றிவளைத்தனர், ஒரு வீட்டிற்கு வெளியில் இரு பெண்களையும், எறிவேலைக் கையில் ஏந்திய காவலர்களையும் தாக்கி விட்டு நுழைந்தனர். ஆயுதங்கள் இருந்தால் வெளியே எரியுமாறு சத்தமிடப்படவே அறையின் உள்ளேயிருந்து கைத்துப்பாக்கிகளும் உடைவாள்களும் எறியப்பட்டன. மன்னன் வைத்திருந்த பொன் வாளை மன்னன் எரியவில்லை. கதவை உடைத்துக்கொண்டு சென்ற படையினர் உள்ளே மன்னரும் இராணிகள் இருவரும், மன்னரின் தாயார் சுப்பம்மாவும் இருந்ததைக் கண்டனர். பெண்களை சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் அதிகாரி ஜோன் டொய்லியின் ஆணையின் பேரில் அவர்கள் அனைவரும் அரச மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டனர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தனது தாயாரையும், மனைவியரையும் டொய்லிக்கு முறையாக அறிமுகம் செய்துவைத்தார்.

மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனையும் குடும்பத்தினரையும் 06.03.1815 அன்று கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் போதிய வசதிகளுடன் வீட்டுக் கைதியாக வைத்திருந்தனர். 24.01.1816 அன்று குடும்பத்துடன் கொன்வோலிஸ் எனும் கப்பலின் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். போகும் வழியில் கப்பலிலேயே ஒரு மனைவி இறந்து போனார். வேலூரில் திப்புசுல்தானின் மைந்தன் இருந்த அரண்மனையில் இருத்தப்பட்டனர். அங்கேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மனைவி ரெங்கம்மாளுக்கு ஊடாக மன்னருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆங்கிலேய அரசு வழங்கிவந்த சிறிய தொகை பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இறுதியில் நீர்வீக்க நோயால் 30.01.1832 அன்று தனது 52வது வயதில் இறந்தார் மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். அவருக்காக ஒரு கல்லறையையும் வேலூரில் அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அவரின் துணைவியையும் விடுவித்துவிட்டது ஆங்கிலேய அரசு. அரசு வழங்கி வந்த மானியத் தொகையும் நின்றுவிட்டதன் பின்னர் வறுமையில் தள்ளாடிய அந்த குடும்பம் தெருவுக்கே வந்துவிட்டது. அவரது வாரிசுகள் இப்போதும் தமிழ்நாட்டில் வறுமையில் வாடுவதாக செய்திகள் வெளியாகின.

புதிய திரிபுகள்
அவர் மன்னராக முடிசூட்டப்பட்டது 18வது வயதில். அவர் அரசாட்சி புரிந்தது 17 ஆண்டுகள். சிறைவாசம் வாழ்ந்ததும் 17 ஆண்டுகள்.

கண்டியரசன் கைதுசெய்யப்பட்டு 200ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாள் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானித்த நாள். முழு நாடும் காலனித்துவத்துக்குள் கொண்டுவரப்பட்ட நாள். சூரியன் அஸ்தமிக்காத ஆங்கிலேய சாம்ராஜ்யத்துக்குள் இலங்கையும் கொண்டுவரப்பட்ட நாள். சிங்கள – தமிழ் அரசுகளை ஒன்றாக்கி “ஒற்றையாட்சி”க்கு கீழ் கொண்டுவர நேரிட்ட நாள். சுதேசிகளின் ஆட்சி கைநழுவிப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் அந்நியர் கட்டுப்பாட்டுக்குள் போன நாள். அன்று தொடக்கம் 133 ஆண்டுகள் இந்த நாட்டை அதிகாரம் செலுத்தி சுரண்டி, சூரையாடிவிட்டுப் போனார்கள் ஆங்கிலேயர்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வணங்கும் வழக்கம் கூட இருக்கிறது. அவரை ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இறுதிவரை போராடிய ஒரு சிங்கள அரசனாகவே கருதுகிறார்கள். ஆனால் இன்றைய பேரினவாத அரசியல் போக்கானது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை ஒரு சிங்கள அரசனாக போற்றுவதில்லை. அவரை தமிழனாகவும், வடுகனாகவும் திரித்து புனைவதுடன் ஆங்கிலேயர்களுக்கு நாட்டை காட்டிக்கொடுத்த ஒரு வழிதவறிய அரசனாகவே பிரசாரப்படுத்திவருகிறது. சென்ற ஆண்டு இலங்கையில் வெளியான “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற திரைப்படம் அப்படி கண்டியரசனை மோசமாக சித்திரிக்கும் திரைப்படம்.

200ஆண்டு நிறைவு குறித்து சில சிங்கள ஊடகங்கள் மட்டுமே கவனிப்புக்கு உள்ளாக்கின. ஆனால் கண்டியரசனின் கதை பல இனவாத மேடைகளில் இன்றும் பயன்படுத்தியே வருகின்றனர். விமல் வீரவங்ச சமீப காலமாக பல மேடைகளில் இப்படி குறிப்பிடுகிறார். “அன்றைய எஹெலபொல இன்றைய மைத்திரிபால, அன்றைய பிலிமத்தலாவ இன்றைய சம்பிக்க ரணவக்க, அன்றைய ஜோன் டொய்லி இன்றைய அமெரிக்க தூதுவர்”. அதாவது அதே வரலாறு மீண்டும் திரும்ப வந்துவிட்டது என்கிறார். காட்டிக்கொடுப்புகள், அரச கவிழ்ப்பு சதி, ஏகாதிபத்திய சதி அனைத்துமே அன்றைய வரலாற்று அனுபவம் என்கிறார் அவர்.

கண்டியரசன் காட்டிக்கொடுப்பின் நினைவு நாளில் பேரினவாத சித்தாந்தவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா திவய்ன பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார். “ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசனை ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைத்து இன்றுடன் 200 ஆண்டுகள். மகிந்த ராஜபக்சவை ஆங்கிலேயர்களுக்கு ஒப்படைக்கப்போவது எப்போது. அதைத் தடுப்பதற்காகத் நாங்கள் பாடுபடுகிறோம்.”

கண்டி அரசன் குறித்து தமிழில் போதிய எழுத்துக்கள் வெளிவரவில்லை என்றே கூற வேண்டும். அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். பல புனைவுகளை அது உடைக்கும். சமகால இனப் பிரச்சினை குறித்த கதையாடல்களில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் வகிபாகம் எப்பேற்பட்டது என்பதை உற்று நோக்கவேண்டும்.

யார் இந்த டொய்லி
கண்டியரசனின் முடிவுக்கு பின்புலத்தில் இயங்கிய சூத்திரதாரி ஜோன் டொய்லி. ஆங்கில அரச அதிகாரியாக கடமையேற்று 1801இல் இலங்கை வந்த டொய்லி அரச சேவையில் சிங்களம் கற்றிருக்கவேண்டியதன் நிபந்தனையை ஏற்று சிங்களம் மட்டுமன்றி பாளி மொழியையும் கற்று பிற்காலத்தில் சிங்களத்தில் கவிதை எழுதுமளவுக்கு தேர்ச்சி பெற்றவர். 1815கண்டி ஒப்பந்தத்தின் சிங்களப் பிரதியை தயார் செய்ததும் டொய்லி தான். கண்டியில் புத்த பிக்கு வேடத்திலும், பிச்சைக்காரர் வேடத்திலும் பல ஒற்றர்களை வழிநடத்தியவர். கண்டி பிரதானிகளுடன் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருந்ததுடன் எஹெலபொல, பிலிமத்தலாவ போன்றோருடன் தொடர்புகளை பேணிக்கொண்டு இருந்தவர்.
கண்டி தலதா மாளிகைக்கு பின்னால் அமைந்துள்ள நூதனசாலையின் வாயிலில் உள்ள ஜோன் டொய்லியின் சிலை 
1800களில் நடந்த நிகழ்வுகளை ஆராய்பவர்கள் ஜோன் டொய்லியின் நாட்குறிப்புகளையும் அவரின் நூல்களையும் தவிர்த்துவிட்டு ஆராய்வதில் பயனில்லை. 1811இல் ஆள்பதியாக ரொபர்ட் பிரவுன்றிக் தெரிவானதோடு டொய்லியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிராக தன்னாலான அனைத்து சதிகளையும் முடுக்கிவிட்ட டொய்லி தம்பி முதலி எனப்படும் முஸ்லிம் ஒருவரை மன்னரை கொலை செய்யும் முயற்சிக்கு பயன்படுத்தியதாக அறியக்கிடைக்கிறது. பிற்காலத்தில் இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்த தம்பி முதலி என்பவரின் வழித்தோன்றல் என்பது இன்னுமொரு கிளைக்கதை. அதனை அடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் தனியாக பார்ப்போம்.
மன்னரை மதுபோதைக்கு பழக்குவதற்காக பிரதானிகளில் ஒருவரான மொல்லிகொடவை ஏவி விட்டதும் கூட டொய்லி தான். மன்னரை பிடிப்பதில் பிரதான பாத்திரமேற்று நிறைவேற்றியதால் விருதுகளை பெற்றார். மன்னர் பிடிபட்டதன் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொத்துக்களைத் தேடி கையகப்படுத்தும் வேலையும் டொய்லியால் சாத்தியப்பட்டது.
25.05.1814 அன்று டொய்லி காய்ச்சலால் மரணமாகும்போது அவருக்கு வயது 49. கண்டி கெரிசன் மயானத்தின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இலங்கையில் மரணமான ஆங்கிலேயர்களுக்காக கண்டியில் அமைக்கப்பட்ட கெரிசன் மயானத்துக்கு சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் வந்து மரியாதை செலுத்தி விட்டு போன செய்தி அறிந்ததே. அந்த மயானத்தை இன்னமும் இங்கிலாந்து அரசாலேயே முகாமை செய்யப்பட்டு வருகிறது. தலதா மாளிகைக்கு உயரமான இடத்தில் இருப்பதால் அந்த மயானம் அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சிங்கள பௌத்த தரப்பினரால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.  டொய்லி எழுதிய A Sketch of The Constituton of The Kandyan Kingdom என்கிற நூல் முக்கியமான நூல்.
மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கல்லறை


கொழும்பு கோட்டையில் ஆங்கிலேயரால் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்
நன்றி - தினக்குரல்
கண்டி மன்னன் குறித்து மோசமாக சித்திரித்து 2014இல் வெளியான
"எஹெலபொல குமாரிஹாமி" திரைப்படம்

தெளிவத்தை ஜோசப் - ராஜலட்சுமி சிவலிங்கம்


இலங்கை மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவரும், தமிழ் இலக்கிய ஆய்வாளருமான தெளிவத்தை ஜோசப் (Thelivathai Joseph) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

* தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் பெயருடன், தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டார்.

* 1960-களில் தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்து, பலராலும் அறியப்படும் படைப்பாளியாக மாறினார். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினார். பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.

* இலங்கை மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்கிற அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலவரங்களை இவரது படைப்புகள் எடுத்துக் கூறின.

* ‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20-ம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக அடையாளம் காட்டின.

* தனது படைப்புகள் மூலம் மலையக எல்லையைக் கடந்து இலங்கை அளவில் பேசப்படும் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியாகத் திகழ்கிறார். பல்வேறு பத்திரிகைகளுக்காக பல புனைப்பெயர்களில் இலக்கிய கட்டுரைகள், இலக்கிய குறிப்புகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியத் தகவல்களை அளித்துள்ளார்.

* பல பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை சாகித்ய விருதை வென்றுள்ளார். இவரது ‘குடைநிழல்’ புதினம் 2010-க்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதை வென்றது. 2013- க்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.

* இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் இவரை அழைத்து கவுரவித்துள்ளன. சிறந்த இலக்கிய விமர்சகர், வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் இவரிடம் பலர் தங்கள் நூல்களுக்கான முன்னுரைகளைக் கேட்டுப் பெறுகின்றனர்.

* மலையகத்தின் மூத்த எழுத்தாளராகத் திகழும் இவர் 1960 முதல் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றிவருகிறார்.

* 1960-களில் இலக்கியப் பயணத்தை தொடங்கிய இவர், 66 சிறுகதைகள் உட்பட ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த எழுத்தாளர் என்ற பெருமையுடன் வலம் வருகிறார்.

நன்றி - தி ஹிந்து

வீட்டுரிமையை வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்


பொதுத்தேர்தலை எதிர்கொண்டுள்ள மலையக மக்களும், கட்சிகளும் - கிருஸ்ண பிரசாத்


நாடு அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது. பொது மக்கள் அடுத்த பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதேபோன்று பாராளுமன்றத்துக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் பல கட்சிகளும் தலைவர்களும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்ட மக்களும் இந்தத் தேர்தலை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இது பொது மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் பாராளுமன்றத்தில் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சிகளும் அரசியல் தலைவர்களும் முழுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இறுதியாக 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 பேரும் ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 பேருமாக தெரிவாகியிருந்தனர். அதில் அதி கூடுதலான வாக்குகளை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பெற்றிருந்தார்.

அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 60,997ஆகும். தேர்தலில் தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் 54,083 வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களான பெருமாள் ராஜதுரை 49,228 வாக்குகளையும் நவீன் திசாநாயக்க 43,514 வாக்குகளையும் ஆர்.எம்.சி.பி. ரத்நாயக்க 41,345 வாக்குகளையும் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட தற்போதைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் 39,490 வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறி ரங்கா ஜெயரத்னம் 33,948 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றிருந்தனர். அத்துடன் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.

அந்தத் தேர்தலில் 37,236 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதேவேளை, 66.38 வீதமானோர் வாக்களித்திருந்தனர். பதிவு செய்யப்பட்டிருந்த 4,57,137 வாக்குகளில் 3,03,470 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 1,53,667 பேர் வாக்களித்திருக்கவில்லை. 1,90,903 வாக்குகள் எந்த ஒரு உறுப்பினரையும் சென்றடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இறுதி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் இம்மாவட்டத்தில் அதிகரித்திருந்ததுடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்திருந்தன. இது மக்கள் தெளிவாக வாக்களித்திருந்தமையையும் எடுத்துக் காட்டுகின்றது.

மலையக அரசியலை பொறுத்த வரையில் கட்சித் தாவல்கள் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வந்த ஒன்றாகும். ஆனால் இது அண்மைய காலத்தில் அதிகரித்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த ஆறு பேரில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய பட்டியலில் தெரிவாகியிருந்த முத்து சிவலிங்கம் ஆகியோர் இ.தொ.கா.வில் தொடர்ச்சியாக அங்கம் வகிக்கின்றனர்.

இ.தொ.கா.விலிருந்து வெளியேறிய வே. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியிலும் பி.இராஜதுரை முதலில் தொழிலாளர் தேசிய சங்கத்திலும் பின்னர் ஐ.தே.க.வுக்கும் மாறினார். பி.திகாம்பரம் தொ.தே. சங்கத்திலும் உள்ளார்.

இதுவே நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் உறுப்பினர்கள் கட்சி மாறியவிதமாகும். தொடர்ந்து சில மாதங்களில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற நிலையில் யார் எந்த அணியில் இருக்கப் போகின்றனர் என்பது இன்றைய அரசியல் நிலையில் அவ்வளவு இலகுவாக கூற முடியாதுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதையடுத்து தேசிய ரீதியில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இ.தொ.கா.வைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் தொடர்சியாக ஆரம்பம் முதல் முன்னாள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்கினர். ஆனால் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக ஆரம்பத்தில் தெரிவித்த தொ.தே. சங்க பாராளுமன்ற உறுப்பினரும் ம.ம. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி மாறி பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினர்.

தேர்தலின் பின்னர் மக்களின் மனநிலையில் ஓரளவு மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. தற்போது 100 நாள் வேலைத்திட்டம் மலையக மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அத்தோடு அது பாராளுமன்ற தேர்தலிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டங்களுக்கு சென்று பிரதிநிதிகள் கூறுவதை செவிமடுத்தாலும் அவர்கள் பெற்று தரும் அற்ப சலுகைகளை மனமுவந்து பெற்றுக் கொண்டாலும் பொதுமக்களிடம் தனி தெளிவு ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது.

அரசியலில் தற்காலத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் திருப்பங்களும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக் கூடிய நிலை உள்ளதால் புதிய நபர் வந்தாலும் புதிய சின்ன ங்கள் வந்தாலும் அவர்களை தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது. எனவே, மக் களின் எதிர்பார்ப்புக்கேற்ப செயற்படுபவர் களை தெரிவு செய்யும் நிலையே தோன்றியு ள்ளது. எனவே, வெற்றியும் தோல்வியும் வேட்பாளர்களாக களம் இறங்க காத்திருக்கும் நபர்களின் எண்ணத்திலும் செயற்பாடுகளிலு மேயே தங்கியுள்ளது.

நன்றி  வீரகேசரி 15.02.2015

இலங்கை தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது - முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை

உலக நாடுகளின் தேயிலை தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கூறுகிறார்

உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளை விட இலங்கையிலுள்ள தோட்ட தொழிலாளருக்கு அதிக சம்பளமும் பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் சுமார் இரண்டரை டொலர்கள் மாத்திரமே நாளாந்த சம்பளமாக தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், இலங்கையில் நாளாந்த சம்பளமாக நான்கரை டொலர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.

கேள்வி: 2015 மார்ச் மாதத்துடன் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையேயான சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. அடுத்த ஒப்பந்தத்திற்கு தயாராகி விட்டீர்களா? தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கமுடியும்?

பதில்: உண்மையிலேயே இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலையில் 95 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. தேயிலை விற்பனையில் இலங்கையை போல் இந்தியா, கென்யா, சீனா போன்ற நாடுகளும் உலக சந்தையில் இருக்கின்றன. இது இலங்கையின் தேயிலையாக இருந்தாலும் உலக சந்தையிலேயே விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாங்கள் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகின்றோம், தேயிலை உற்பத்தி செலவு போன்றவை உலக சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டே அமையவேண்டும்.

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகமாவே இருக்கின்றது. இந்தியா, கென்யா போன்ற நாடுகள் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக இரண்டு டொலர்களை (சுமார் 260 ரூபா) வழங்குகின்றனர். இலங்கையில் நாங்கள் சுமார் நான்கரை டொலர்களை வழங்குகின்றோம். இதேபோல் ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளை விட இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. தோட்ட தொழிலாளர்களுக்கு நாம் வாங்கும் சம்பளமே உலகின் ஏனைய தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மிக அதிகமாகவுள்ளது.

ஏனைய நாடுகளில் நாளாந்தம் தோட்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் தேயிலையை விட நாமே குறைவாக உற்பத்தி செய்கின்றோம். கென்யாவில் நாளாந்தம் இரண்டரை டொலர் சம்பளம் பெறுவதற்கு 48 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் இரண்டு டொலர்கள் சம்பளம் பெற குறைந்தது 27கிலோக்களாவது பறிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் நான்கரை டொலர் நாளாந்த சம்பளத்திற்கு ஆகக்கூடியது 18 கிலோ தேயிலை பறித்தால் போதுமானது. தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இலங்கையிலேயே தேயிலை உற்பத்திச் செலவு அதிகரித்து காணப்படுகின்றது.

தேயிலை விலை உலக சந்தையில் கிலோ 400 ரூபாவாக இருக்கும் போது உற்பத்திச் செலவு 500 ரூபாவாக இருக்கின்றது. வருடாந்தம் 300 நாட்களாவது தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற ஷரத்தும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஒப்பந்தத்தில் உள்ளபடி தோட்டத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்: இல்லை , இல்லை. 300 நாட்களுக்கு மேலாகவே வேலை வழங்கியுள்ளோம். தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால் எமக்கொன்றும் செய்யமுடியாது.

கேள்வி: கடந்த வருடம் மாத்திரம் 90 சதவீத தொழிலாளர்களுக்கு 16 நாட்களுக்கு குறைவாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: இந்த புள்ளிவிபரங்கள் எதிலிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், எங்களிடம் தான் புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. இணையதளங்களில் பெறப்படும் புள்ளிவிபரங்கள் சரியானவையல்ல. உதாரணத்திற்கு எமது நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் 300 நாட்களுக்கு அதிகமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்குவது பிரச்சினையல்ல. அவர்கள் வேலைக்கு வருவதில் தான் பிரச்சினை இருக்கின்றது. ஹட்டன் பகுதியிலுள்ள தோட்டங்களில் கடந்த வருடம் 300 நாட்களுக்கு மேலாக வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தோட்டங்களில் குறிப்பிட்டளவு வேலை வழங்கியுள்ளோம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் 76 சதவீத நாட்கள் வேலை வழங்கவேண்டுமென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்கள் வழங்கினால் தான் 140 ரூபா அவர்களது நாளாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கூற்று சரியானதா?

பதில்: நான் அதை தெளிவுபடுத்த வேண்டும். இயற்கை அனர்த்தங்கள் இல்லாவிட்டால் வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கவேண்டும். வரட்சியான காலத்தில் மாதாந்தம் 22 நாட்கள் வேலை வழங்க முடியாவிட்டால் அதற்காக நாங்கள் சம்பள முற்பணம் வழங்குவோம். சில மாதங்களில் ஐந்து அல்லது ஆறு நாட்களே வேலை வழங்கக் கூடியதாகவும் இருக்கும். இந்நாட்களில் நாங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம் வழங்குவோம். அதிகமாக வேலை வழங்கப்படும் மாதங்களில் அந்த சம்பள முற்பணத்தை தவணை ரீதியில் அறவிட்டுக் கொள்வோம்.

கேள்வி: 2015 கூட்டு ஒப்பந்தத்திற்கு இவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா?

பதில்: இதுவரை கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை. முத்தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தேயிலை முகாமைத்துவ நிறுவனங்கள் தாங்கிக் கொள்ளும் தொகையையே நிர்ணயிக்க வேண்டும். இறப்பர் தோட்டத் தொழிற்றுறை இப்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. தேயிலை கொழுந்து கொள்வனவு செய்து தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் தேயிலை தொழிற்சாலைகள் நஷ்டம் என்ற காரணத்தால் இப்போது மூடப்பட்டுள்ளன. ஆனால், தோட்டங்களில் இப்படிச் செய்ய முடியாது. தேயிலைத் தோட்டங்களில் நிரந்தரமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு வருடாந்தம் 300 நாட்கள் வேலை நாட்கள் வழங்க வேண்டும். சம்பளம் உட்பட இதர வசதிகளையும் வழங்கித்தான் ஆகவேண்டும்.

கேள்வி: தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் குறிப்பிட்ட தொழிற்சங்கங்களுக்குமிடையே தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இப்போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைத்துக் கொள்ளப்படுமா?

பதில்: 40 சதவீத அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றலாம். இருந்தும் இந்தமுறை இதற்கு தகுதியான தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

கேள்வி: புதிய அரசின் இடைக்கால வரவு–செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசின் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக வழங்கப்பட்ட 3,000 ரூபாவுடன் இம்மாதம் 5,000 ரூபா சேர்த்து 8,000 ரூபா வழங்கப்படுகின்றது. எஞ்சிய தொகை ஜூலை மாதம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் தனியார் துறை ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 2,500 ரூபாவாவது சம்பள அதிகரிப்பு வழங்கும்படி அரசாங்கம் தனியார் துறை வேலை கொள்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள அதிகரிப்பு வழங்க முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்: எந்த தொழிற்றுறையாக இருந்தாலும் அந்த தொழிற்றுறை இலாபமீட்டும் வகையில் செயற்பட வேண்டும். தற்போது ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு கிட்டத்தட்ட 500 ரூபாவாக இருக்கின்றது. தேயிலை உலக சந்தையில் 400 ரூபாவிற்கே விற்பனையாகிறது. நாங்கள் உலக சந்தையில் தேயிலை விற்பனையாகும் தொகையை அடிப்படையாக கொண்டே சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்கும்படி கூறினாலும் அதை எம்மால் செய்ய முடியாது.

கேள்வி: தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து விரிவாக கூறுவீர்களா?

பதில்: ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்கால கொடுப்பனவு, இலவச வைத்திய சிகிச்சைகள், இலவச வீடு ஆகியன தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 20 வருடங்களில் நாங்கள் 20,000 வீடுகளை புதிதாக நிர்மாணித்துள்ளோம். நாங்கள் வீடமைப்புக்கு இலவசமாக காணிகளை வழங்கியுள்ளோம். இதேவேளை, பழைய லயன் அறைகளை பெரும் பொருட்செலவில் புதுப்பித்துள்ளோம். லயன் அறைகளுக்கு புதிதாக கூரைத்தகடுகளை வழங்கியுள்ளோம். இதற்காக எமது நிறுவனங்கள் ஐம்பது சதவீதத்தை வழங்கியுள்ளன. எஞ்சிய 50 சதவீதத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் செலவிட்டது.

கேள்வி: தேயிலை ஏற்றுமதி வரி, தேயிலை ஏற்றுமதி மீதான செஸ் வரி மற்றும் தேயிலை விற்பனை தொடர்பான விளம்பரத்திற்காக அறவிடும் (Promotion) வரி ஆகியவற்றை அரசாங்கம் நீக்கினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கணிசமான தொகை சம்பள அதிகரிப்பு வழங்க முடியாதா?

பதில்: மொத்தமாக ஒரு கிலோ தேயிலைக்கு 13 ரூபா 50 சதத்தை வரியாக செலுத்தி வருகின்றோம். இவ்வரிகளை இரத்துச் செய்தாலும் கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது. கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் தேயிலையின் விலை அதிகரித்தால் மட்டுமே சம்பள அதிகரிப்பை வழங்கமுடியும்.

கேள்வி: இப்போது தேயிலை தோட்டங்களில் வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. முன்னர் இவையனைத்தையும் தோட்ட உரிமையாளர்களே செய்துவந்தனர். எனவே இப்போது உங்களது இலாபம் அதிகரித்திருக்கும் அல்லவா?

பதில்: இப்போதும் ஒருசில தோட்டங்களில் இப்பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். முன்னர் தோட்டங்களில் குடியிருக்கும் தொழிலாளர்கள் கட்டாயமாக தோட்டங்களில் வேலை செய்ய வேண்டும். இப்போது அந்த நிலையில்லை. தொழிலாளர்கள் மிக சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் வேலை செய்துகொண்டு தோட்டங்களில் குடியிருக்க முடியும். அவர்களுக்கு இன்று வேலை செய்ய முடியவில்லையென்று தோன்றினால் அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள். தோட்டங்கனை தேசிய மயமாக்கும் போது சுமார் நான்கரை இலட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். இப்போது இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் மாத்திரமே இருக்கின்றனர்.

இது குறித்து குறை சொல்ல முடியாது. தோட்டங்களில் கல்வி மேம்பட்டுள்ளது. பலர் நகரங்களில் தொழில் புரிகின்றனர். இதன்காரணமாவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தோட்ட மக்களின் முன்னேற்றத்தை குறை சொல்ல முடியாது. தோட்டத் தொழிலாளியான பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது போன்ற அனைத்திற்கும் தோட்ட நிர்வாகமே செலவிடுகின்றது. குழந்தை பிறந்து ஏற்பு ஊசி முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்குத் தேவையான தடுப்பு ஊசிகளை ஏற்ற தாயாருக்கு சம்பளத்துடனான குறிப்பிட்ட நேர விடுமுறை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவுகள் அதிகரித்து வந்த போதும் தேயிலையின் விலை உயரவில்லை. செலவுகள் அதிகரிக்கின்றனவே தவிர தோட்டங்களின் வருமானங்கள் அதிகரிக்கவில்லை.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது சாத்தியப்படுமா? ஜே.வி.பியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றது. இது குறித்து ஆராயப்படுமா?

பதில்: உலகில் எந்த நாட்டிலுமே விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்குவதில்லை. பெருந்தோட்டத் துறைக்கும் இது பொருந்தும். அதாவது, உற்பத்தியளவு நிரந்தரமாக இருக்கும் தொழிற்றுறைகளுக்கு மாதச்சம்பளம் வழங்கலாம். நிரந்தர உற்பத்தியை எதிர்பார்க்க முடியாத விவசாயத்துறைக்கு எவ்வாறு மாதச்சம்பளம் வழங்குவது? பலதரப்பினர் மாதச்சம்பளம் வழங்கும்படி கோரிக்கை விடுக்கலாம். அது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். வருடம் முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை இருந்தால் விவசாயத்துறை தொழிலாளர்களுக்கும் மாதச்சம்பளம் வழங்கமுடியும்.

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்திலுள்ள அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடமைப்புக்கென ஏழு பேர்ச்சஸ் காணி பெற்றுத் தருவதாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தார்கள். திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் வேலாயுதம் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி அவர்கள் பிரசாரம் செய்த வேட்பாளரை வெற்றியடையச் செய்தனர். மலையக மக்களின் வீடமைப்பிற்கு ஏழு பேர்ச்சஸ் காணியை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தயாரா?

பதில்: தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே வீடமைப்பிற்கு ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இதுவொன்றும் புதிதல்ல. தொழிலாளர்களுக்கு அரசாங்கமோ வெளிநாடுகளோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ வீடுகளை அமைத்துக் கொடுக்கத் தயாராகவிருந்தால் அதற்கான காணியை வழங்க முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே கொள்கையளவில் தயாராகவேயிருந்தது. நாங்கள் காணியை தரமாட்டோம் என ஒருபோதும் கூறவில்லை. எமது தொழிலாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டோம்.
நன்றி  வீரகேசரி 15.02.2015

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படுமா? – மைக்கல் ஜோக்கிம்


பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகி வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. தற்போது பெருந்தோட்ட மக்கள் சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு ஆகியன கிடைத்துள்ளன. அத்துடன் தோட்டக்கம்பனிகளும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் வீடமைப்புக்கு காணி வழங்குவதற்கு ஆதரவான மனப்பாங்கினை கொண்டிருக்கின்றனர். இந்த சூழலை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது மக்களினதும் பதவியிலுள்ளவர்களினதும் பொறுப்பாகும்.

முதலில் ஏற்கனவே வீடுகளை கட்டிக்கொண்டுள்ளவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் வீடமைப்புத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதேவேளை அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக காலம் எடுக்கும். இந்தப் பின்னணியில் தமது சொந்த செலவில் வீடுகளை கட்டிக்கொள்ளும் வசதியுள்ளவர்களுக்கு காணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதும் அவசியமானதாகும்.

இந்த விடயத்தில் பாதிப்புக்குள்ளான ஒரு பகுதியினர் தொடர்பாக இதுவரை சமூகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை. இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றவர்களாவர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும் பல சலுகைகள் பெருந்தோட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு பெற்றவர்கள் திரும்பி வந்த பின்னர் அவர்களுக்கு வீடமைப்புக்கடனை பெறும் உரிமை உள்ளது. கிராம மற்றும் நகரப்பகுதிகளில் இருந்து வெளிநாடு சென்று திரும்பிய பலர் பணியகத்தால் வழங்கப்படும் கடனை பெற்று தாம் வெளிநாட்டில் உழைத்த பணத்தையும் பயன்படுத்தி தமக்கான சொந்த வீடுகளை அமைத்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு வீடமைப்புக்கடன் பெறுவதற்காக முக்கிய தகுதியான காணி உரிமை உண்டு.

ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று திரும்பி வருபவர்களுக்கு காணி உரிமை இல்லாத காரணத்தால் வீடமைப்புக்கடனை பெற முடிவதில்லை. பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தமக்கு வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று திரும்பிய பலரின் சொந்த வீடு கட்டிக்கொள்ளும் கனவை நனவாக்க முடியவில்லை. தமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விடயத்திற்கு முதலீடு செய்ய முடியாததால் அவர்கள் உழைத்த பணம் அநேகமான சந்தர்ப்பங்களில் பயனற்ற பொருட்களில் முதலீடு செய்யப்பட்டு வீணாக்கப்படுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து தொழில் வாய்ப்புப் பெற்று வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பிரிடோ நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாடு சென்றவர்களுக்கு காணி உரிமை இல்லாததால் அவர்களுக்கு வீட்டுக்கடனை கொடுப்பதில் தமக்கு சிக்கல் இருப்பதாக அமைச்சினாலும் பணியக உத்தியோகத்தர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. காணி உரிமையை உறுதிப்படுத்துபவர்களுக்கு மட்டுமே வீட்டுக்கடன் வழங்கப்பட முடியும் என்ற கொள்கை இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கையை விரிக்கின்றனர்.

எனினும், பெருந்தோட்டங்களிலிருந்து வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தோட்ட கம்பனி தமக்கு காணி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று உறுதி அளிக்கும் (No objection) கடிதம் வழங்குமானால் தாம் கடன் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அநேகமான தோட்ட கம்பனிகள் இவ்வாறான கடிதத்தை கூட கொடுக்க முன்வருவதில்லை என்றும் கூறும் அதிகாரிகள், அதனால் தம்மால் கடன் வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு சென்று உழைப்பவர்கள் நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வரும் முக்கியமான பங்களிப்பை செய்வதாலேயே அவர்களுக்கு பணியகம் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. எனவே பெருந்தோட்டப்பகுதியில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்பவர்களும் மற்றைய துறையைச் சேர்ந்தவர்களை போலவே வீட்டுக்கடன் உட்பட மற்றைய சலுகைகளை பெறும் சம உரிமை உண்டு என்பதை அவர்கள் உணரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

காணி உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பணியகம் வழங்கும் வீடமைப்புக்கடன் போன்ற மற்றைய உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

எனவே, மலையகத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் தோட்டக் கம்பனிகளுடன் பேசி வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பி வருபவர்களுக்கு காணி பெற்றுக் கொடுப்பதற்கான கொள்கை ரீதியிலான இணக்கத்தை பெற்றுக் கொள்வது மலையகத் தலைவர்களின் பொறுப்பாகும். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமக்கான வீடுகளை தாமே சுயமாக அமைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனவே, புதிய அரசு மக்களின் வீடு காணிக்கான உரிமை தொடர்பாக சாதக மான முறையில் செயல்பட்டுள்ளது என் பதை மக்கள் முன் உறுதிப்படுத்த உதவும்.

நன்றி  வீரகேசரி 15.02.2015

மத்திய மாகாணத்தில் மீண்டும் தமிழ் கல்வியமைச்சு; எதனால் வழங்கப்பட்டது? - செழியன்



யாரும் எதிர்பார்க்கவே இல்லை! ஆனால், எதிர்பாராத நேரத்தில் எந்தவிதமான ஆரவாரமுமின்றி தமிழ்க் கல்வி அமைச்சு தமிழ் பிரதிநிதி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாட்களாக தமிழ்க் கல்வியமைச்சையும் தனது பிடிக்குள் வைத்திருந்த மத்திய மாகாண முதலமைச்சர் திடீரென அதனை தமிழ்ப் பிரதிநிதி ஒருவரிடம் கையளித்ததன் காரணம் என்ன ?

ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஹரீன் பெர்னாண்டோ தலைமையிலான ஐ.தே. க. ஆட்சிப்பொறுப்பினை ஏற்றது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஊவா தமிழ் மக்கள் ஹரீன் பெர்னாண்டோவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர். இதனை முதலமைச்சரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு நன்றிக்கடனாகவே ஊவா தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் தமிழ்க்கல்வி அமைச்சை ஏற்படுத்தி அதனை மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் கையளித்தார்.

இந்த செயற்பாடு ஒட்டு மொத்த மலையக இந்திய வம்சாவளி மக்களினதும் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றது. மலையக அரசியலுக்கு ஒரு முன் மாதிரியான இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒரு நேர்மையான மனிதராக முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பார்க்கப்படுகிறார்.

10 வருடங்களுக்கு முன்னர் பறிக்கப்பட்ட ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு தமிழ் பிரதிநிதியிடமே வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.கூ. ஆட்சி நிலவிய காலத்திலேயே ஊவாவில் தமிழ்க்கல்வி அமைச்சும் இந்து கலாசார அமைச்சும் பறிக்கப்பட்டது. இது ஊவாவில் மட்டும் பறிக்கப்படவில்லை. இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழும் மத்திய மாகாணத்திலும் இல்லாமல் செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவினால் தோட்ட மக்களின் நலனுக்காக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் கூட ஐ.ம.சு. கூ. ஆட்சியில் இல்லாமல் செய்யப்பட்டமை வேறு விடயம்.

மத்திய மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலம் வரை மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு நீடித்தது. மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக அனுஷியா சிவராஜா கடமையாற்றினார்.

ஆனால் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஐ.ம.சு. கூட்டமைப்பு வெற்றி பெற்றது. பல பிரபல மலையகத் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசுடன் இணைந்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் 14 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மீண்டும் மாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஐ.ம.சு. கூட்டமைப்பு இ.தொ.கா. உறுப்பினரான எம். ராமுக்கு விவசாயம் உள்ளிட்ட அமைச்சை மட்டுமே கொடுத்தது.

அவரிடம் மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அரசாங்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கமும் மாகாண சபையும் அதன் முதலமைச்சரும் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.

தொடர்ச்சியாகக் கேட்டு கிடைக்காத நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளும் மக்களும் அலுத்துப்போயிருந்தனர். மத்திய மாகாணத்தில் தமிழ் கல்வியமைச்சு இல்லாததால் கல்வித்துறையில் பாரிய பிரச்சினை நிலவியது. ஆனால் இதுபற்றி எவரும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் ஊவாவில் தமிழ்க்கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தமை மத்திய மாகாண சபையின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் தமிழ்க்கல்வி மீதான அக்கறையீனத்தையும் வெளிப்படுத்தியது. பலர் பகிரங்கமாகவே மாகாண சபையையும் மத்திய ஐ.ம.சு.கூ. ஆட்சியையும் விமர்சித்தனர்.

மட்டுமன்றி, ஊவாவைப்போன்று மத்திய மாகாணத்திலும் ஒரு மாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது. மாகாண முதலமைச்சராகவுள்ள சரத் ஏக்கநாயக்கவை அந்தப் பதவியிலிருந்து அகற்றி விட்டு அதே கட்சியைச் சேர்ந்தவரான திலின பண்டார தென்னக்கோன் என்பவர் முதலமைச்சராகும் முயற்சியில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அவருக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆதரவு வழங்க முன்வந்திருந்தனர்.

குறிப்பாக பல தமிழ் உறுப்பினர்கள் ஐ.தே.க. ஆதரவு நிலையைக் கொண்டிருந்தவர்கள் திலின பண்டார தென்னக்கோனுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் அமைச்சராக்கப்பட்டு அவரிடம் தமிழ்க்கல்வி அமைச்சும் வழங்கப்படும் நிலைமையே காணப்பட்டது.

இந்த நிலையில் இ.தொ.கா. வின் எட்டு உறுப்பினர்களினதும் ஆதரவைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளது. எனவே இ.தொ.கா. வைத் திருப்திப்படுத்தி தமக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ்க்கல்வி அமைச்சை விவசாய அமைச்சர் ராமிடம் ஒப்படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும்.
எவ்வாறெனினும் தமக்குக் கிடைத்த தமிழ்க் கல்வியமைச்சை மாகாண அமைச்சர் ராம் சிறப்பாக முன்னெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எந்தவொரு பிரச்சினையையும் தீர்மானத்தையும் சிந்தித்து முடிவெடுப்பதில் அவர் எப்போதும் தவறியதில்லை. கல்வித்துறையைச் சார்ந்தவர்களுடன் நல்ல உறவினைக் கொண்டுள்ள அவர், அத்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.

இதேவேளை, ஊவாவில் தமிழ்க் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் வடிவேல் சுரேஷ் அனுபவமுடையவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதி சுகாதார அமைச்சராகவும் பணியாற்றிய அவர் ஊவா மாகாண கல்வி அபிவிருத்திக்கு நிறையவே செய்ய வேண்டியுள்ளது. மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான, கணிதக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை மிக மிக அவசியமாகும். பசறை மற்றும் பதுளையிலுள்ள மத்திய கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதுடன் லுணுகலை, பண்டாரவளை பகுதிகளிலும் தமிழ்க் கல்வி அபிவிருத்தி முக்கியமானதாகும்.

மத்திய அரசின் கல்வி இராஜாங்க அமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் செயற்பட்டு வருகிறார். மலையகத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் தேசிய அளவில் கடமையாற்றும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அதனை முன்னெடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே மத்திய மாகாண சபை கல்வியமைச்சராக இருந்த அவருக்கு கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் பற்றி நன்கு தெரியும்.

மத்திய மாகாணத்தில் விஞ்ஞான, கணித பாடப்பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஊடாக மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர்கள் தேவையான வளங்களையும் ஆசிரியர்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கட்சி ரீதியான முரண்பாடுகள், பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கப்பால் சமூக நோக்கத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு நிலைமையும் காணப்படுகின்றது.

உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் தேசிய பாடசாலைகள் எதுவும் இல்லையென்று நீண்ட நாட்களாக சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.
புஸல்லாவை சரஸ்வதி தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இருந்தும் அங்கு ஆசிரியர்கள் வளங்கள் இல்லாமையால் அப்பிரிவு மூடப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது போலவே பதுளை பசறையிலும் நிலைமை காணப்படுகிறது.

இதேவேளை மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் சிறப்பாக இயங்குவதனையும் சிரேஷ்ட கல்வியதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 80 வீதமான மாணவர்கள் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார். மட்டுமன்றி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் போன்றவற்றின் வளர்ச்சியையும் கல்வி செயற்பாட்டையும் அவர் உதாரணமாகக் காட்டினார்.

மத்திய மாகா ணத்தில்.....
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இயங்கும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதை விடுத்து புதிதாக சகல வளங்களையும் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவதே சிறந்ததாக அமையும் என்கிறார். முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் மத்திய கல்வி அமைச்சு தலையீடு செய்ய முடியாது எனவும் இணக்கப்பாட்டுடன் திட்டங்களை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

மத்திய இராஜாங்க கல்வியமைச்சும் மாகாண தமிழ் கல்வியமைச்சும் சில விடயங்களில் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றன.

இங்கே ஈகோ பிரச்சினை கட்சி அரசியல் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு சமூகத்தின் கல்வி அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாடு அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளதென்பதை மறந்து விடக்கூடாது.

தற்போது கல்வித்துறைக்கும் மக்களுக்கும் செய்யும் சேவையினூடாகவே மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடியும். அதை விடுத்து ஒருவரையொருவர் குறைகளை கூறிக்கொண்டிருப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.

நன்றி - வீரகேசரி 15.02.2015

சொந்த வீட்டில் குடியிருப்பதே சுதந்திரம் – பானா. தங்கம்



இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. வருடந்தோறும் கோலாகலமான கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் மலையக மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள்.

இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆந் திகதி சுதந்திரமடைந்த பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆந் திகதி மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு முதலாவது சோதனை காலம் ஆரம்பமாகியது. ஆமாம், 1947 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் 7 பேர் இருந்த நாளையைத் தொடர விடக் கூடாது என்ற கரிசனையில் 1948 சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய வம்சாவளி மக்களுக்கு இருந்த பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 1977 ஆம் ஆண்டு வரை கேள்விக் குறியாகவே இருந்து வந்தது.

1963 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அமரர் ஏ. இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நாடற்றவர் மறுப்பு மாநாட்டின் போது இனக் கலவரமே மூண்டிருந்தது. அதன் எதிரொலியாக இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி அன்று இருந்த சுமார் 10 இலட்ச இந்திய வம்சாவளி மக்களில் இந்தியா 5 ¼ இலட்சம் பேரையும், இலங்கை 3 ¼ இலட்சம் பேரையும் எடுத்துக் கொள்வதென ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், மிகுதியிருந்த 1½ இலட்சம் பேர் நாடற்றவர்களாகவே இருந்தார்கள். அவர்களை காலப்போக்கில் இந்தியாவும் இலங்கையும் சரிசமமாக ஏற்றுக் கொள்வதெனவும் 1975 ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் பின்னர் 1988 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் மேற்கொண்ட பிரார்த்தனைப் போராட்ட நடவடிக்கையின் பயனாக சத்தியக் கடதாசி மூலம் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது எனினும், இந்தியாவுக்குப் போவதற்காக விண்ணப்பித்திருந்த மக்களின் நிலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாமல் பிரஜாவுரிமை இன்றி அப்படியே இருந்தார்கள் அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ காலத்தில் அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க இணக்கம் காணப்பட்டது. இறுதியாக 2003 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது, ஜே..வி.பி. யின் ஆதரவோடு அனைவருக்கும் பிராஜாவுரிமை வழங்கப்பட்டு நாடற்றோர் நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது.

இவ்வாறு இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை பெற்று வாக்களித்து வருகின்றார்கள். அதன் பயனாக இன்று அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் நாட்டின் தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அரசாங்கங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மலையக மக்கள் இருந்து வருகின்றார்கள் அவர்கள் வாக்குரிமை பெற்றுள்ள காரணத்தால் தேசியக் கட்சிகளுக்கும் அவர்களின் வாக்கு பலம் தேவையாக இருந்து வருவதைக் காண முடிகின்றது.

மலையக மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கின்ற போதிலும் அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை இன்று வரை சுவாசிக்க முடியாத குறைப்பிரசவக் குழந்தைகளாகவே இருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு சொந்தமான காணி உரிமையோ வீடுகளோ இல்லாத நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இருநூறு வருட பாரம்பரியம் மிக்க “லயன்களிலே’ தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். இன்று கல்வி கற்ற சமூகமாக மாறி வருகின்ற போதிலும் அடிப்படை உரிமைகள் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள ஏனைய பிரஜைகளுக்கு இருக்கின்ற உரிமைகளும் சலுகைகளும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் தமது தலைமைகளுக்கும் கட்டுப்படாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் காணி உரிமையுடன் கூடிய தனி வீட்டுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு வாக்களித்துள்ளார்கள். அதற்கு ஏற்ற வகையில் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் அமைச்சர்களான பி. திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், கே. வேலாயுதம் ஆகிய மூன்று பேரும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளமை நம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினையான வீடமைப்புத் திட்டம் நிறைவேறி சொந்த வீடுகளில் குடியிருக்கும் நிலைமை உருவாகும் போதுதான் அவர்கள் இந்த நாட்டின் உண்மையான சுதந்திர பிரஜைகளாக மாறுவார்கள் என்பதே உண்மையாகும்.

நன்றி - வீரகேசரி

பாசிசத்தின் அடுத்த பாய்ச்சல் - என்.சரவணன்


மீண்டும் பொதுபல சேனா துணிந்து களத்தில் இறங்கியுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை மட்டுமே நம்பி அதன் இருப்பு இதுவரை தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அதனை வளர்த்தெடுத்த கோத்தபாய தரப்பு கைவிட்டதன் பின்னர் பொதுபல சேனா கையறு நிலைக்கு தள்ளப்பட்டது. “மைத்திரிபால அலை”யின் போக்கு பொதுபல சேனாவுக்கு நெருக்கடியை தந்திருந்தது. அவர்கள் பொதுபல சேனாவை நேரடியாக எதிர்த்தார்கள். கண்டித்தார்கள். எச்சரித்தார்கள். பொதுபல சேனாவின் போட்டிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமய பொதுபல சேனா தலைதூக்குவதை விரும்பியிருக்கவில்லை. இக்கட்டான காலகட்டங்களில் பொதுபல சேனாவை பாதுகாத்த ஜாதிக ஹெலறுமயவை சேர்ந்த சம்பிக்க, ரதன தேரர் போன்றோரை நேரடியாகவே தாக்கிப் பேசினார் ஞானசார தேரர்.

ஆனால் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா சற்று அடங்கியிருந்ததாகவே பலர் கருதினார்கள். ஆனால் ஏனைய சக்திகளைப் போல அல்ல அவர்கள். பொதுபல சேனாவின் இருப்பு பேரினவாதத்திலேயே தங்கியிருக்கிறது. வரலாற்றில் சிங்கள பௌத்த பேரினவாதம் சற்று தளர்வதை போல தெரிந்தால், அந்த இடைவெளியை நிரப்ப ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளோ திடீரென்று தோன்றி பேரினவாத செயற்பாடுகளில் முழு மூச்சில் இறங்கும். அதில் ஏதாவது நின்றுபிடிக்கும் ஏனைய அமைப்புகள் காணாமல் போய்விடும். ஆனால் அதில் உள்ளவர்கள் மாத்திரம் மீண்டும் தருணம் பார்த்து வேறு அமைப்புகளின் பெயர்களில் மீண்டும் வெளிவருவார்கள். அப்படித்தான் இந்த சிறிய இடைவெளியை பயன்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் “சிங்கள தேசிய முன்னணி” என்கிற பெயரில் ஒரு அமைப்பும் உருவானது.

பொதுபல சேனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனது இருப்புக்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. பல உயிர்களை காவு கொண்டும், பல சொத்துக்களை அழித்தும், சேதம் செய்தும், சண்டித்தனத்தை நிலைநாட்டியிருக்கிறது. அதன் வலைப்பின்னலையும், பிரசார இயந்திரத்தையும், கிளைகளையும் உருவாக்கி பலப்படுத்தி வந்திருக்கிறது. எனவே இடையில் எந்த ஒரு அமைப்பும் பொதுபல சேனாவின் இடத்தை கைப்பற்றுவதை பொதுபல சேனா தடுத்தே தீரும். “சிங்கள தேசிய முன்னணி”யின் தோற்றம் அப்பேர்பட்ட ஒரு சமிக்ஞையை தந்திருக்கிறது என்றே கருத முடிகிறது. எனவே புதிய அரச தரப்பின் எச்சரிக்கையை எதிர்கொள்வதைத் தவிர அதற்கு வேறு தெரிவில்லை.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் இனவெறுப்பை கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 10ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை கூட்டி பலவற்றை அறிவித்தது. 

“இனி பொறுத்தது போதும்... நாங்கள் மீண்டும் ‘கூரகல’யில் இருந்து ஆரம்பிக்கப்போகிறோம். ராஜபக்ச அரசாங்கமும் கைவிட்டது. இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஒரு மாதத்திற்குள் நாங்கள் போய் அந்த பள்ளிவாசலின் சகல கற்களையும் கழற்றிக்கொண்டு வருவோம்.” என்று எச்சரித்துள்ளது.

எதிர்வரும் பௌர்ணமியன்று அதாவது மார்ச் 05 அன்று பலாங்கொட கூரகல பள்ளிவாசலை முற்றகையிடப்போவதாக இன்னொரு போஸ்டர் மூலமும் அறிவித்துள்ளது. பல்லாண்டு காலமாக இருந்துவந்த ஜெய்லானி பள்ளிவாசல் உள்ள பகுதி புராதன பௌத்த புனித பிரதேசமென்று கூறி பல தடவைகள் ஹெல உறுமய மற்றும் இன்னும் பல அமைப்புகள் அங்கிருந்த முஸ்லிம் பள்ளிவாசலை அகற்ற முயற்சி செய்தனர். பின்னர் 2013 ஏப்ரல் மாதம் கோத்தபாய ராஜபக்ச 400க்கும் மேற்பட்ட பிக்குமார் சகிதம் சென்று முற்றுகையிட்டார். அந்த பள்ளிவாசலை அகற்றுவதென்று தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தீர்மானித்து உள்ளதென்று கூறி அங்கு மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் ஒரு பதாகையை நட்டு விட்டு வந்தார். அத பதாகையில் ஜனாதிபதியின் ஆசியுடன் இது நிகழ்வதாக அறிவித்திருந்தது. இது ஒரு மோசமான மிரட்டல் என்று அசாத் சாலி பின்னர் அறிவித்திருந்தார். பள்ளிவாசலை சேர்ந்தவர்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கும் வந்தது தொல்பொருள் திணைக்களம். இந்த நிலையில் மீண்டும் பொதுபல சேனா அந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ளது.

பொதுபல சேனா 10ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருகிறது. அந்த அறிக்கையில் இப்படி குறிப்பிட்டுள்ளது.

பொதுபல சேனா அறிக்கை
“பெப்ரவரி மாத முற்பகுதியில் அல்கைதா, தலிபான் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களையும், அமைப்புகளையும் தடைசெய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்டமூலமொன்றை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் லக்ஸ்மன் கிரிஎல்ல மூலம் சமர்ப்பித்திருந்தார். இதன் மூலம் நாங்கள் இதுவரை கூறிவந்தபடி இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை புதிய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது... அரசாங்கத்தின் முதல் 30 நாட்களுக்குள் சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த விடயத்தில் நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அரசுக்கு எதிராக ஜெனிவாவுக்கு அனுப்பிய 50 பக்க அறிக்கையில் சம்பிக்க ரணவக்க “அல் கைதா” பற்றி நூலை எழுதியது குற்றமாக காட்டியிருந்தார். இதன் மூலம் அவரும் அல் கைதாவுக்கு ஆதவளிக்கும் ஒருவர் என்று நிரூபணமாகிறது. ஹக்கீம் மீதான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
அல் கைதா தலைவன் பின் லாடனுக்கு சூரா சபை ஆலோசனை வழங்கி வந்திருக்கிறது. இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சூரா சபையின் உருவாக்கம் குறித்தும் அதன் நிதிமூலம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கனடாவில் ஹலால் சான்றிதழ் வழங்கும் “கனேடிய முஸ்லிம் சங்கம்” அல்கைதாவுக்கு நிதிவழங்கி வந்துள்ளது. இங்கும் அத்தகைய ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனம் குறித்து விசாரிக்கப்படவேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் “முஸ்லிம் வலயம்” உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை குறித்து ஆராயப்படவேண்டும். ரிசாத் பதியுதீன் அரேபிய நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கூடாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற நடவடிக்கைகளின் நிதிமூலம் ஆராயப்படவேண்டும். குறிப்பாக இந்த முஸ்லிம் வலயம் எதிர்காலத்தில் அல்கைதாவின் பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து தேடப்படவேண்டும்.
மத்ரசா என்கிற பெயரில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பாகிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளன. இலங்கையில் கல்வி அமைச்சின் கட்டுப்பாடின்றி மேற்கொள்ளப்படும் இவற்றை ஆராய வேண்டும்.
முகத்தை மூடுகின்ற உடையணிந்து பயங்கரவாத ஆயுதங்கள், குண்டுகளை காவித்திரிய வாய்ப்புள்ள அந்த உடைகளை பகிரங்க இடங்களில் அணிவதை தடை செய்தல் வேண்டும்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் போதைவஸ்து கடத்தல், விற்பனைக்குப் பின்னால் அல் கைதா போன்ற பயங்கரவாதிகளுக்கு தொடர்புண்டா என்பதை ஆராய வேண்டும்.
பயங்கரவாதம் நமது நாட்டில் புற்று நோயாக பரவுவதற்கு முன்னர் அதனை அடையாளம் கண்டு நாட்டு மக்களை காப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் அரசுக்கு பொதுபல சேனா ஒத்துழைப்பு நல்கும்.”
(சிங்களத்தில் வெளியான பொதுபல சேனாவின் அறிக்கை)

இந்த அறிக்கை பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் மேகொண்டு வரும் விஷப் பிரசாரங்களின் தொடர்ச்சியே இது. ஏற்கெனவே, முஸ்லிம்களின் சனத்தொகை செயற்கையாக அதிகரிப்பதாகவும், சிங்கள மக்களை மலட்டுத்தனமாக்கும் சதி நிகழ்வதாகவும், மாடுகளை வெட்டுவதாகவும், பள்ளிவாசல்கள் அதிகரிப்பதாகவும், ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் பெண்கள் புர்கா  அணிவதை தடை செய்ய வேண்டும் என்றும் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ளது. இந்த வெறுப்புணர்ச்சியை (Islamofobia) மேலும் அதிகரிப்பதற்கு சாதகமாக தற்போது மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் இஸ்லாத்தின் பேரால் நடத்தப்பட்டு வரும் மனித விரோத செயல்கள் ஆகியுள்ளன.

முஸ்லிம் நிருவனங்களை சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புறுத்தியும், “வஹாபிசம்” பற்றிய பீதியை கிளப்பியும் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் கடந்த காலங்களை விட இப்போது அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு கால முஸ்லிம் விரோத போக்கின் ஆரம்பம் வர்த்தக மோதல்களில் இருந்து தொடங்கினாலும் கூட, காலப்போக்கில் அது மத சகிப்பின்மையால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கூடவே சிங்கள பௌத்த தூய்மை வாதம், சிங்கள பௌத்த ராஜ்ஜிய உருவாக்க சித்தாந்தம் என்பவற்றால் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த வெறித்தனம் போரின் பின்னர் முஸ்லிம்களின் பக்கம் திரும்பி மையம் கொண்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான புனைவுகளும், ஐதீகங்களும், மாயைகளும் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

பொதுபல சேனாவின் பிரச்சார இயந்திரத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆயிரக்கணக்கான சமூக ஊடக தளங்களை அவர்களின் ஆதரவாளர்களைக் கொண்டு நடத்தி வருகிறார்கள். தமது பிரசாரங்களை நாளாந்தம் வேகமாக பரப்பி வருவதுடன், பல விவாதங்களில் புகுந்து தமது எதிரிகளை மோசமாக தாக்குகின்றனர். அவர்களின் பலத்துக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் பலர் விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். இறுதியில் பெரும்பாலான இடங்களில் இவர்களின் கருத்தே ஆதிக்கம் செலுத்தும் நிலைமை உருக்கப்பட்டுவிடுவதை காணக் கூடியதாக இருக்கிறது. எனவே பேரினவாத சித்தாந்தம் நிறுவனமயப்பட நிறுவனமயப்பட இனங்களுக்கு இடையிலான இடைவெளியும் பெருகி ஒரு சிறிய தீப்பொறிக்காகக் காத்திருகிறது ஒரு தீக்காடு.

மீண்டும் பாசிச முகத்துடன் களமிறங்கியிருக்கும் பொதுபல சேனாவின் புதிய வியூகம் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்டு வருகிறது தற்காப்பு நிலையிலிருந்து அதனை பொறுமையுடன் எதிர்கொண்டு வரும் மக்களின் “எல்லை வரம்பு” உரசிப் பார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. உரிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுக்காது போனால் விபரீதங்கள் மோசமாக இருக்கும் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்கின்றன.

இன மத குரோதங்களை வெளியிடும் சக்திகளின் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ் பேச்சாளர் பகிரங்கமாக அறிவித்திருந்த போதும் ஞானசார தேரர் போன்றோர் பகிரங்கமாக பொலிசாரை சவாலிடும் வகையில் இனக்குரோத கருத்துக்களை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். உரிய சட்ட நடவடிக்கையின் மூலம் மட்டுமே இந்த போக்கை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும். பூனைக்கு மணி கட்டுவது யார்.

ஏனைய அணிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீள உயிர்பிப்பதில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில போன்றோருக்கும் இன்று எஞ்சியிருப்பது இனவாதமே. “விடுதலைபுலி”, மற்றும் “டயஸ்போரா” பீதியை கிளப்பி அரசியல் லாபமடைய முயல்பவர்கள் அவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுக்கு கிடைத்த வாக்குகள் சிங்கள பௌத்த வாக்குகள் என்றும் அவற்றை தக்கவைத்து கொள்வதிலேயே தமது அரசியல் வெற்றி தங்கியிருப்பதாக நம்புபவர்கள் அவர்கள். போதாததற்கு தமக்கு கிடைக்காமல் போன எஞ்சிய சிங்கள பௌத்த வாக்குகளை கைப்பற்றுவதே எதிர்வரும் தேர்தலில் அவர்களின் இலக்காகவும் அமையும். தமிழ்-முஸ்லிம் வாக்குகளுக்காக சிரத்தைகொள்வதில் அர்த்தமில்லை என்பதும் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். எனவே அவர்கள் புலிப்பீதியை கிளப்ப நிச்சயம் தற்போதைய மைத்திரிபால அரசின் மீது அவதூறுகளை தொகுக்கவேண்டும். அந்த வரிசையில் அவர்கள் வடக்கில் அபிவிருத்தி வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு வருகிறார்கள். மாகாணசபை ஆளுநர் மாற்றத்தைக் கூட கடுமையாக விமர்சித்தார்கள். வடக்கில் இராணுவக் குறைப்பு, உயர் பாதுகாப்பு வலய குறைப்பு, முகாம்களின் குறைப்பு, நிலங்களை மீள கையளிப்பது போன்ற பேச்சுக்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். கூடவே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதையும் எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் 11ஆம் திகதி “தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே” என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் அது ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதும் தெற்கு சிங்கள பேரினவாதத் தரப்புக்கு பெரும் அரசியல் லாபத்தைத் தந்திருக்கிறது. விமல் அணி உட்பட அனைத்து பேரனவாத சக்திகளும் இதனை பெருமளவு பயன்படுத்த வாய்ப்புண்டு. புலிப்பீதியை கிளப்பி விட அவர்களுக்கு வழிதிறந்துவிட்டுள்ளது. டயஸ்போரா சதி, என்.ஜி.ஓ சதி, மேற்கின் சதி என்றும் தேசபக்தர்களை ஜெனீவாவில் காவு கொடுக்கபோகிறார்கள் என்றும், அரசு அதற்கு உடந்தை என்றும் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக பாவிக்க வாய்ப்புண்டு. அவர்களிடம் எஞ்சியுள்ள மிகப் பெரும் ஆயுதம் அதுவே. வட மாகாண சபைத் தீர்மானம் அந்த வகையில் அரசாங்கத்தை இக்கட்டில் மாட்டிவிட்டது என்றே அரச ஆதரவு சக்திகள் புலம்பி வருகிறார்கள். வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் இது தம்மை பாதிக்கும் என்றும் நம்புகிறது அரச தரப்பு. ஆக, மகிந்த ஆதரவு அணி கையிலெடுத்திருக்கிற இனவாத பிரச்சாரம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் அழுத்தமாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

ஜாதிக ஹெல உறுமயவின் “சிங்கள பௌத்த தனத்தின்” மீது ஏனைய சிங்கள பௌத்த சக்திகள் சவாலிடத் தொடங்கியிருக்கிறார்கள். மத்தியில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் செய்வது குறித்து எப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதோ. அதே போன்ற கண்டனங்கள் ஜாதிக ஹெல உறுமயவின் “இணக்க அரசியல்” மீதும் கடும் சிங்கள பௌத்த போக்காளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெரும்போக்கு மைய அரசியலில் நாம் அசட்டையாக இருக்கும் விடயம் பேரினவாதத்தின் பாத்திரம், இருப்பு, போக்கு, திசைவழி, மூலோபாயம், தந்திரோபாயம் பற்றியது. இலங்கையின் இனத்துவ அரசியலை தீர்மானிப்பதில் இவற்றின் வகிபாகம் உறுதியானது. பலமானது. சிங்கள சிவில் சமூகத்தை தமது சித்தாந்த கட்டுக்குள் வைத்திருப்பதில் கணிசமான பத்திரத்தை ஆற்றி வருபவை. அரசியல் நிகழ்ச்சி நிரலில் இவற்றை தவிர்த்து விட்டு கடந்து போகமுடியாது.

நன்றி - தினக்குரல் 15.02.2015

மலையக மகளிர் மேம்பாட்டில் மகளிர் விவகார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் - ஏ.டி. குரு


இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தை ஈட்டித் தருவதில் பெருந்தோட்ட தேயிலை செய்கை முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் பெண்கள் ஆண்களை போலவே கடின உழைப்பாளிகளாக காணப்படுகின்றனர். காடு, மலையுச்சி என்று ஏறி இறங்கி தேயிலை கொழுந்து பறிப்பது தொடங்கி தேயிலை மலைகளை துப்புரவு செய்தல், பாரம் சுமத்தல் என்ற பல இன்னோரன்ன கடின வேலைகளையும் செய்து வருகின்றனர்.

150 சதுர அடிக்குள் அமைந்த லயன் அறைகளுக்குள் தங்களது வாழ்நாளை கழித்து வரும் மலையக பெண் தொழிலாளர்கள், அதிகாலையில் எழுந்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கி வேலைத்தளம் சென்று பணிகளை முடித்து விட்டு மீண்டும் மாலையில் வீடு வந்தும் இயந்திரமாகவே செயற்பட்டு தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
கடந்த காலங்களை போலன்றி மலையக பெண்கள் கல்வி கற்று அரச துறையில் ஆசிரியர்களாகவும் எழுது வினைஞர்களாகவும் கிராம சேவை உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர். அதேபோன்று தனியார் துறையிலும் பல்வேறு வகையிலான தொழிற்துறைகளில் கால் பதித்துள்ள இவர்கள் ஆளுமை மிக்கவர்களாக சமூகத்தில் மிளிர்ந்துள்ளனர். எனினும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் அவர்கள் பல்வேறு சமூக அடக்கு முறைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.

பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியும் பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே கடந்த இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். விதிவிலக்காக ஒருசில இடங்களில் பெண்களின் குரல் ஓங்கி ஒலித்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் கருத்து சுதந்திரம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

பாடசாலை கல்வியை க.பொ.த. சாதாரண தரம், உயர்தரத்துடன் நிறைவு செய்து கொள்ளும் அதிகமான மலையக யுவதிகள் கூடுதலாக நகரங்களிலேயே தொழில் வாய்ப்பை தேடிக்கொள்கின்றனர்.

ஆடைத் தொழிற்சாலைகளிலும் புடவை விற்பனை நிலையங்களிலும் ஏனைய வர்த்தக நிலையங்களிலுமே தொழில் புரிகின்றனர்.

அதிகமான யுவதிகள் தலைநகரிலும் ஏனைய பிரதான நகரங்களிலும் இவ்வாறு தொழில் புரிவதன் மூலமாக தோட்டப் புறங்களிலும் ஒரு வகையான புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. இள வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதோடு குறுகிய காலத்தில் விவாகரத்து கோரி நிற்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

ஆடைத் தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் அதிகளவில் தொழில் புரியும் யுவதிகள் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாலியல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். முறையான குடும்ப திட்டமிடல்கள் இன்றி நடைபெறும் இளவயது திருமணங்கள் காரணமாக பிறக்கின்ற குழந்தைகளும் உடலியல் குறைபாடுகளுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

காலங்காலமாக தலைநகரிலும் ஏனைய செல்வந்தர் வீடுகளிலும் பணியாளர்களாகவும் மலையக சிறுமிகளே அமர்த்தப்பட்டு வருகின்றனர். மலையகத்திலுள்ள இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் பெற்றுக்கொண்டு பொது விடயங்களை அறிந்திராக பெற்றோரை கபடத் தனமாக ஏமாற்றுகின்றனர்.

இதன் காரணமாக இளவயது சிறுமிகளின் எதிர்காலம் பாழ்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் வீட்டு பணிப்பெண்களாக தலைநகரில் கடமை புரிந்த இளவயது பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களின் இறப்பிற்கான உண்மையான காரணங்கள் மறைக்கப்பட்டு வேறு காரணங்களை கூறி சடலங்கள் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரும் இன்றும் கூட தலைநகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள செல்வந்தர்களின் வீடுகளில் மலையகத்தை சார்ந்த இளம்பெண்கள் பணிப்பெண்களாக கடமையாற்றி வருவது கவலைக்குரிய விடயமாகும்.

2000ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மலையக குடும்ப பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்லும் தொகை அதிகரித்து வருகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொள்ளாது தவறான தகவல்களுடன் கடவுச்சீட்டுக்களை பெற்றுச் செல்லும் இவர்கள் தாம் பணி புரியும் வீடுகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு இடைநடுவே நாடு திரும்புகின்றனர். எவ்வித முன்பதிவையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்டு செல்லாமையால் இவர்களுக்கான இழப்பீடுகளும் கிடைக்காமல் நிர்க்கதி நிலையை அடைகின்றனர்.

தொடர்ந்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவினை மேற்கொள்ளாது தங்களது சேவைக்காலத்தை நிறைவு செய்யும் வேளையில் முறையான கொடுப்பனவுகளை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். இள வயதுடைய குடும்ப பெண்களே அதிகளவில் வெளிநாடு செல்வதால் அவர்களுடைய பிள்ளைகளை பராமரிப்பதிலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. வெளிநாடு சென்றவர்களின் பிள்ளைகள் முறையாக பாடசாலை கல்வியை தொடராது இடைவிலகலில் ஆர்வங் காட்டுவதையும் அவதானிக்க முடிகின்றது.

மலையக பெண்களை மையமாகக் கொண்ட அமைப்பு ரீதியான செயற்பாடுகள் மந்த நிலையை அடைந்துள்ளன. தொழிற்சங்கங்கள் ரீதியான மகளிர் அணிகளே தற்போது தேர்தல் கால செயற்பாடுகளை மையமாக கொண்டு தோட்டங்களில் இயங்கி வருகின்றன. நாட்டின் ஏனைய மாகாணங்களில் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் பயிற்சி நெறிகள், பெண்கள் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் தலைமைத்துவ மற்றும் குடும்ப திட்டமிடல் செயற்பாடுகள் என்பன மலையகத்தில் மிகவும் பின்னடைவை கண்டுள்ளன.

இதன் காரணமாக மலையகத்தில் அமைப்பு ரீதியான பெண்களின் செயற்பாடு பின்னடைவை கண்டுள்ளது. ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் அரசியல் பங்குபற்றலும் சமூக அபிவிருத்தி தொடர்பான அமைப்பு ரீதியான பங்குபற்றலும் பூஜ்ஜியமாக உள்ளது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால் மலையக பெண்களின் உரிமைகளுடன் கூடிய எதிர்கால பயணம் கேள்விக்குறியாகி விடக்கூடிய நிலை உருவாகி விடும்.

புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் மகளிர் விவகார பிரதி அமைச்சராக திருமதி விஜயகலா மகேஸ்வரன் பதவியேற்றுள்ளார். தான் அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே பெண்கள் அபிவிருத்தி தொடர்பான பல ஆரோக்கியமான விடயங்களில் அக்கறை செலுத்தி நகர்வுகளை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வடக்கு கிழக்கு வாழும் சிறுபான்மை தமிழ் பேசும் பெண்களை போலவே மலையக பெண்களும் பெண்ணியம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை நிலைவரத்தை மலையகத்தை மையப்படுத்தி இயங்கி வரும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசியல் தொழிற் சங்கங்களும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன் கொண்டு செல்ல வேண்டும்.

மலையக பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளை வகை பிரித்து ஆய்வு ரீதியாக புள்ளிவிபரங்களுடன் பிரதியமைச்சுகளுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் மலையக பெண்கள் நலன் பேணல் தொடர்பாக நல்ல பல ஆரோக்கியமான தீர்மானங்களை அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்த ஒருவர் மகளிர் விவகார அமைச்சராக இருப்பதால் சமூக அக்கறையுடன் மலையக பெண்களை அமைப்பு ரீதியாக தலைமைத்துவம் ஏற்று செயற்பட வைக்கும் பணிகளில் அவர் முன்னின்று ஆதரவு வழங்குவார். ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திலும் மலையக பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும்.
நன்றி - வீரகேசரி 08.02.2015

கண்ணீரில் மூழ்கி இருந்த மீரியபெத்தை மக்கள் முகத்தில் மகிழ்ச்சி! - பழனி விஜயகுமார்


இலங்கையை மாத்திரமன்றி முழு உலகத்தையும் மலையகத்தின் பக்கம் திருப்பிய திருப்புமுனை சம்பவம் என்றால் அது 40 உயிர்களுக்கும் மேல் மண் காவுகொண்ட மீரியபெத்தை மண்சரிவு சம்பவம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீரியபெத்தை மக்களுக்காக முழு உலகமும் கண்ணீர் வடித்ததை எம்மால் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. இந்த மண்சரிவால் மீரியபெத்தை என்ற தோட்டமே அழிந்து போயுள்ளது. அங்கு வாழ்ந்த மக்களின் நிலையோ இன்று அதோ கதியாகியுள்ளது. 

கண்ணீரையே தங்களது சொத்தாக வைத்துக் கொண்டு மீரியபெத்தை தோட்ட மக்கள் இன்னும் மாக்கந்தை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்துக்கு ஐந்தடி காம்பராவில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். எட்டுக்கு எட்டு மாட்டுக் கொட்டில் போலிருந்த லயத்தில் இருந்து அதைவிட மோசமான நிலைக்கு இந்த மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். 

ஆனால் இந்த மக்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் அளவிற்கு மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் சம்பவங்கள் இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு நட்டஈடாக தலா ஒரு லட்சம் ரூபா ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெனாண்டோ தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதைவிட இந்த மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயற்திட்டங்களும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீரியபெத்தை மக்கள் மண்சரிவில் அழிந்தபோது முழு மலையகமும் காணி, வீட்டு உரிமைக்காக வீதிக்கு இறங்கி போராடத் தொடங்கியது. அதற்கு புதிய அரசாங்கத்தின் ஊடாக ஓரளவு திருப்தி தரக்கூடிய பலன் கிடைத்துள்ளது. அதுதான் மீரியபெத்தை மக்களுக்கான புதிய அரசாங்கத்தின் தனி வீட்டுத் திட்டம்.  முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் ரா.ஆறுமுகன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் இணைந்து மீரியபெத்தை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவென ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை மக்கள் விரும்பவில்லை. அது பாதுகாப்பற்ற இடம் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியபோதும் அதிகாரிகள் அதனை கணக்கிலெடுக்காது தாங்கள் நினைத்தது போல மாடி வீடு கட்ட நடவடிக்கை எடுத்தனர். 

எனினும் இன்று அரசாங்கம் மாறியுள்ள நிலையில் புதிய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரின் கூட்டு முற்சியில் மீரியபெத்தை மக்களுக்கு அவர்களுக்கு விருப்பமான பாதுகாப்பான இடத்தில் தனி வீடு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி பூணாகலையை அடுத்து உள்ள 'மக்கள் தெனிய' சந்தியில் உள்ள பெரிய மலைகள் அற்ற ஓரளவு சமதரை காணியொன்றில் மீரியபெத்தை மக்களுக்கு 7 பேர்ச் காணியுடன் தனி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடு கட்டுவதற்கான காணியை தோட்ட நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்கும் கடமையை இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் முன்னெடுக்கும் நிலையில் அந்த இடத்தில் வீடுகளை கட்டி முடிக்கும் பொறுப்பை அமைச்சர் ப.திகாம்பரம் ஏற்றுள்ளார். 

கடந்த வாரம் மீரியபெத்தை சென்ற தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள், தோட்;ட நிர்வாகிகள் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மீரியபெத்தை மக்கள் காட்டிய இடங்களை பார்வையிட்டு அதில் 'மக்கள் தெனிய' சந்தியில் உள்ள இடத்தை மிகவும் பொறுத்தமான பாதுகாப்பான இடமாக அறிவித்தனர். 

அதன்பின் வெள்ளிக்கிழமை மீரியபெத்தைக்கு விஜயம் செய்த அமைச்சர் திகாம்பரம், மாக்கந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய தனி வீடு கட்டிக் கொடுக்க உறுதி அளித்தார். மேலும் பல பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். 
அதன்பின் கொட்டும் மழையையும் பாராது அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஸ், மாகாண சபை உறுப்பினர் உருத்திரதீபன் உள்ளிட்ட குழுவிவினர் தோட்ட நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்களும் மக்கள் தெனிய பகுதிக்குச் சென்று தனி வீடு கட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்;வையிட்டு எதிர்வரும் 27ம் திகதி தனி வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட திகதி குறித்தனர். 

இங்கு உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் ஆகியோர், மலையக வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களுக்கு உறுதிப் பத்திரத்துடன் கூடிய 7 பேர்ச் சொந்த காணியில் தனி வீடு கட்டப்படவுள்ளதாக அறிவித்தனர். மேலும் 'மக்கள் தெனிய' பகுதியில் புதிய மீரியபெத்தை கிராமம் சகல வசதிகளுடனும் மீள கட்டியெழுப்பப்படும் என தெரிவித்தனர். 

அதன்பின் மலையகத்தில் தற்போது தேவையாகவுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினர். காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் போது அது வீட்டில் உள்ள ஆண், பெண் இருவரது பெயரிலும் வழங்கப்படும் என்றும் நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

சொந்தங்களை மண்ணுக்குள் தொலைத்துவிட்டு எப்போது விடிவுவரும் என்று இருளுக்குள் காத்திருக்கும் மீரியபெத்தை மக்களுக்கு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை மகிழ்ச்சியே. இதேபோன்ற மலையக மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் லயன்வீட்டு முறை ஒழிக்கப்பட்டு சொந்த வீடு சொந்த காணி வழங்கப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய மக்கள் தலைமைகள் முன்வர வேண்டும்.

ஆனால் மலையகத் தோட்டத் 7 பேர்ச் காணி போதுமா? இல்லையா? என்ற கேள்வி, விமர்சனம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் காணி உரித்துடையவர்களாக மாறப்போகும் மலையக மக்களிடமே இது தொடர்பான விவாதத்தை விட்டு விடுவோம்...! தனி வீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விழித்திருப்போம்...! 




 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates