Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் - 2) - சிலாபம் திண்ணனுரான்


அன்று சந்திரிக்கா அம்மையாரு க்கு ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. பொ.ஜ.ஐ.முன்னணி 105 உறுப்பினர்களுடனும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 உடன் இணைந்தும் ஆட்சி அமைக்க இயலாத கட்டத்திலேயே மலையக மக்கள் முன்னணித் தலைவர் அமரர். பி.சந்திரசேகரன் கிங்மேக்கராக உருவெடுத்து மலையக மக்களின் வாக்கு பெறுமதியை இந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடையாளப்படுத்தினார். இது மலையக வரலாற்றில் அரசியல் சாதனை யாகும். மலையக அரசியல் தலைமைகளை மட்டுமல்லாது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சிந்திக்க வைத்த கிங்மேக்கரா னார்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வீரன் சென்னன் (41683 வி.வா) வெற்றி பெற்றார். இவருடன் ஐ.தே.கட்சி பட்டியலில் இடம்பெற்ற மற்றுமொரு வேட்பாளரான எம்.கே.சுப்பையா (39,650 வி.வா), பெற்று 643 வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் தோல்வி அடைந்தார். இந்நிலையில்

அமரர் எஸ்.தொண்டமான், ஏ.எம்.டி.ராஜன் ஆகியோர் ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள். அமரர் பி.சந்திர சேகரன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக நியமனம் பெற்றார்.

இந்நிலையில், 1994ஆம் ஆண்டு கொழும்பு தொட்டலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஓசி அபேகுணசேகர, வீரசிங்க மல்லிமாராச்சி ஆகிய இருபாராளுமன்ற உறுப்பினர்களும் மரணம் அடைய ஆர்.யோகராஜன், பி.பி.தேவராஜ் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்கள்.

2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் (61,779 வி.வா), முத்து சிவலிங்கம் (வி.வா 55,673), எஸ்.ஜெகதீஸ்வரன் (வி.வா 50,735) ஆகியோர் பொ.ஐ.ஐ.முன்னணியின் வேட்பாளர் பட்டிய லில் இடம்பெற்று வெற்றிபெற ஐ.தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட பி.சந்திரசேகரன் (54,681 வி.வா), எஸ்.சதாசிவம் (48,126 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். பொ.ஜ.ஐ. முன்னணியின் தேசியப் பட்டியலில் கே. மாரிமுத்து (இ.தொ.கா)வும் ஐ.தே.கட்சி தேசிய பட்டியல் மூலமாக கணபதி கனகராஜ், பி.பி தேவராஜ் ஆகியோர் தெரிவானார்கள். இத்தேர்தலில் பதுளை, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்திய வம்சாவளி யினர் போட்டியிட்டும் வெற்றிபெற இயலாது போனது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 12ஆவது பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (1,21,545 வி.வா), பி.சந்திரசேகரன் (1,21,421 வி.வா), முத்துசிவலிங்கம் (1,07,338 வி.வா.) ஐ.தே.கட்சியில் போ ட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றனர்.

இத்தேர்தலின் முடிவுகளில் பெருந்தோட்ட மக்களின் அரசியல் தெளிவு தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. இத்தேர்தலில் பொ. ஜ.ஐ. முன்னணியில் இம்மாவட்டத்தில் போட்டியிட்ட வி.புத்திரசிகாமணி (10,261 வி.வா), எஸ்.ராஜரத்தினம் (10,028 வி.வா), கணபதி கனகராஜ் (9,878 வி.வா), கணபதிப்பிள்ளை (3,535) ஆகியோர் தோல்வி அடைந்தனர். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட முருகன் சச்சிதானந்தன் (39,749 வி.வா) வெற்றி பெற்றார். இத்தேர்தலில் இ.தொ.கா வேட்பாளர்கள் ஐ.தே.கட்சி பட்டியலில் கண்டி, கொழும்பு, மாத்தளை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை.

ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியலில் பி.இராதாகிருஷ்ணன், ஆர்.யோகராஜ், பொ.ஜ.ஐ. முன்னணியில் எஸ்.சதாசிவம், மக்கள் விடுதலை முன்னணியில் ராமலிங்கம் சந்திரசேகரனும் தெரிவானார்கள்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற 13ஆவது பாராளுமன்ற த்துக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத் தில் ஐ.தே.கட்சி பட்டியலில் இணைந்து போட்டியிட்ட இ.தொ.கா. வின் வேட்பாளராக ஆறுமுகன் தொண்டமான் (99,783 வி.வா), முத்து சிவலிங்கம் (85,708 வி.வா), எஸ்.ஜெகதீஸ்வரன் (81,386 வி.வா), வெற்றி பெற மலையக மக்கள் முன்னணி மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு பி.சந்திரசேகரன் (42, 582 வி.வா) வெற்றிபெற்றார்கள். பதுளை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா. எம்.சச்சிதானந்தன் (44,937 வி.வா), வடிவேலு சுரேஷ் (40,820 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் தேசியப்பட்டியலில் ஐ.ம.சு.முன்னணியின் பட்டியலில் ம.வி.முன்னணியின் சார்பில் ராமலிங்கம் சந்திரசேகரனும் ஐ.தே.கட்சியின் பட்டியலில் (இ.தொ.கா), எம்.எஸ்.செல்லச்சாமி, பி.பி. இராதாகிருஷ்ணன் (ம.ம.மு), வி.புத்திரசிகாமணி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானார்கள்.

13வது பாராளுமன்றத்தின் இறுதி வருடங்களில் மலையக அரசியல் என்றுமே இல்லாத பெரும் மாற்றம் நிலவியது. மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் ம.வி.மு.உறுப்பினர் இராமலிங்கம் சந்திர சேகரனைத் தவிர ஏனைய 9 உறுப்பினர்களும் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்திருந்தனர். இரண்டு அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் இருந்தனர். இது மலையக மக்களின் சாதனையா? அல்லது அரசியல்வாதிகள் சுயநலம் கொண்டு இப்பத விகளை பெற்றனரா என்பது கேள்வியாகவே இன்றும் வாழ்கின்றது.

2 அமைச்சர்கள்

1. ஆறுமுகன் தொண்டமான்

(இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சர்)

2. பெ.சந்திரசேகரன்

(சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர்)

7 பிரதி அமைச்சர்கள்

1. முத்து சிவலிங்கம்

(தோட்ட உட்கட்டமை ப்பு பிரதி அமைச்சர்)

2. எம்.எஸ்.செல்லச்சாமி

(தபால், தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சர்)

3. எஸ்.ஜெகதீஸ்வரன்

(தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்)

4. எம்.சச்சிதானந்தன்

(பிரதிக் கல்வி அமைச்சர்)

5. வடிவேல் சுரேஷ்

(பிரதி சுகாதார அமை ச்சர்)

6. வி.புத்திரசிகாமணி

(நீதி சட்ட மறுசீரமைப்புபதில் அமைச்சர்)

7. பெ.இராதாகிருஷ்ணன்

(வாழ்க்கை தொழில் பயிற்சி பிரதி அமைச்சர்)

மலையகத்தின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது இலங்கையின் அரசியல் வரலாற் றில் மலையக மக்கள் பிரதிநிதிகளில் இவ்வாறான சாதனை இனி எதிர்வரும் காலங்களில் இடம்பெறபோவதில்லை. இது அரசியல் அவ

தானிகளின் தகவல்களாகும். காலம்தான் பதில் தர வேண்டும்.

14ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் இ.தொ.கா. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்து நுவரெலியா, கண்டிமாத்தளை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் (60,997 வி.வா), எஸ். இராதாகிருஷ்ணன் (54,083 வி.வா), பி.இராஜதுரை (49,228 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஐ.தே.கட்சியின் பட்டியலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பழனி திகாம்பரம் (39,490 வி.வா), பிரஜை கள் முன்னணி செயலாளர் ஸ்ரீரங்கா ஜய ரத்னம் (33,948 வி.வா) ஆகியோர் வெற்றி பெற்றனர். ஏ.எஸ்.அருள்சாமி (5,855 வி.வா)வி.புத்திரசிகாமணி (2,896 வி.வா), எம்.உதயகுமார் (30,928 வி.வா), எஸ்.சதாசிவம் (24,152 வி.வா), எல்.பாரதிதாசன் (7,705 வி.வா) ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியைத் தழுவ ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட இ.தொ.கா. வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியுற்றனர். ஐ.ம.சு. முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக முத்து சிவலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தெரிவான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ 2014ஆம் ஆண்டு ஊவாமாகாண சபைக்கு தெரிவானதையடுத்து கே.வேலாயுதம் பதுளை மாவட்டத்திற்கான ஐ.தே.க. உறுப்பினராக தெரிவானார். இன்று பி.திகாம்பரம் அமைச்சராகவும் வே. வேலாயுதம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றது.

இவ்வாறு மலையக அரசியல் பெரும் இன்னல்களை தொட்டு வாழ்கின்றது.

விருப்பு வாக்கு கொண்ட தேர்தல் மூலமே பெரும்பாலும் மலையக பிரதிநிதிகளை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 1989 இல் நுவரெ லியா மாவட்டத்தில் விருப்பு வாக்கு மூலமாக ஒரு பிரதிநிதியையாவது பெற இயலாமை போனது இச்சமூகத்தின் துரதிஷ்டமேயாகும். பின்னர் வந்த தேர்தல்களில் பதுளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் பிரதிநிதிகளை பெற்றிருந்தாலும் அரசியல் போட்டி கள் காரணமாக பிரதிநிதித்துவம் இழந்துள் ளதைக் காணலாம். மலையகத்தின் அனைத்துக்கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத் தால் இன்றைய விகிதாசார மாவட்ட தேர்தல் பிரதிநிதித்துவம் மூலமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 14 முதல் 16 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பெறலாம். எதிர்காலத்தில் தேர்தல் மாற்றம் பெறுகையில், மலையக பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

மலையக மக்களின் இருப்பை குறைப்பதற்காக மறைமுகமாக தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு அவைகள் பெரும்பான்மை இன மக்களைக் கொண்ட பகுதிகளுடன் இணைக்கப்படலாம். இதனால் மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதிகளை பெற இயலாத சூழலை உருவாக்கலாம். 90 ஆயிரம் மக்களைக் கொண்ட பகுதி இன்று தேர்தல் தொகுதியாக நிர்ணயிக்கப்படுகின்றது. அவ்வாறு நுவரெலியா தொகுதி பிரிக்கப்பட்டால் நிலைமை மாறிவிடும்.

இரு பிரதான கட்சிகளும் பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பூரணமாக வழங்க இதுவரை முன்வரவில்லை. இதுவரை காலமும் இருகட்சியினரின் ஆட்சியில் சலுகைகளே வழங்கப்படுகின்றன. உரிமைகள் வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட மக்களின் தனித்துவத்தை தேர்தல் மாற்றத்தின் மூலமாகவும் சிதறிடிக்கப்படலாம்.

30.10.1964 இல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தமும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாதிருந்திருந்தால் இன்று கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலிருந்து விகிதாசார தேர்தல் முறையில் குறைந்தது 35 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் இருந்தது. அது அரசியல் வழிப்பறி கொள்ளையால் தடுக்கப்பட்டு விட்டதை நாம் மறக்க இயலாது. இவ்வாறு இன்று பலருக்கு அரசியல் முகவரியை கொடுத்தவர்கள் பெருந்தோட்ட மக்களும் அவர்களின் சத்தியப் போராட்டங்களுமேயாகும்.

மலையக அரசியலுக்கு வரலாறு உண்டு.

தேர்தல் முறை மாற்றத்தால் அது தொலைந்து போய்விடக்கூடாது. இவ் அரசியல் அடையா ளத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். இதுவரை கடந்து வந்த பாதையை விட இனி கடக்க போகும் பாதை மிக எளிதா னதாக தெரியவில்லை. (முற்றும்)

நன்றி - வீரகேசரி

தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்


சுமார் இரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய தேசத்திலிருந்து இலங்கைத் தீவிற்கு கூலித்தொழிலாளிகளாக அடிமை இனமாக ஆங்கிலேயர்களால் நாம் கொண்டு வரப்பட்டோம்.

எமது ஏழ்மையையும் வறுமையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எம்மை இலங்கைத்தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்டங்களில் காற்றோட்டமில்லாத லயன் காம்பிராக்களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்வையை, எமது உதிர த்தை எமது ஊதியத்தை எல்லாம் கபடமாக கொள்ளையடித்தனர்.

அந்த சோகக்கதை எல்லாம் தற்போது பழங்கதையாகி நாம் மறந்தும் மரத்தும் போய்விட்டோம். எமது விசுவாசமான உழைப்பு, உண்மை, நேர்மையான மனப்பா ங்கு, கடுமையான முயற்சியின் மூலமாக நாம் தற்போது வெற்றியாளர்களாக தலை நிமிர்ந்து நிற்கும் அளவு உயர்ந்து விட் டோம்.

இது எமக்கு சற்று நிம்மதியளிக்கும் நிலையாகும். தற்போது நம்மவர்கள் வியாபாரிகளாக, வாகன உரிமையாளர்களாக சொந்த காணி வீடு உள்ளவர்களாக மேலும் அரச தனியார் துறைகளில் உயர் அதிகாரிகளாக பதவி வகித்து வருவது எமது சமூக வளர்ச்சி மேம்பாட்டுக்கு ஒரு தெம்பை ஊட்டுவதாக உள்ளது.

மலையக சமூகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பதற்கும் வளங்களை சுரண்டுவதற்கும் அவர்களை மேலும் மேலும் கடனாளியாக்குவதற்கும், பல தனியார் நிறுவனங்களும், தனியார் வர்த்தகர்களும் வட்டமிடுவதை காணக்கூடியதாக உள்ளது. அவசர தேவைகளுக்கு பணத்தை பெற்று கொள்வதற்கும் தங்க நகைகளை அடமானம் வைக்கவும் அருகிலுள்ள தனியார் அடகுச்சேவையாளர்களையும், அடகு நிறுவனங்களையும் நாடி செல்கின்றனர் நம் மக்கள். குறித்த நிறுவனங்களும் நகையின் பெறுமதிக்கு ஏற்ப பணத்தை கொடுக்கின்றன.

அரச வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைக்க செல்லும் பொழுது குறைந்த அளவான பணமும் சில சட்ட திட்டடங்களுக்கும் கட்டுப்பட வேண்டியுள்ளதால் பலர் அரச வங்கிகளுக்கு செல்வதில்லை. ஆனால் இதன் பாதிப்பை பலர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

அரச வங்கிகளில் தங்க நகை ஒன்றை சுமார் 1000 ரூபாவுக்கு அடகு வைத்தால் வருட இறுதியில் வட்டியும் முதலுமாக சுமார் 1150 ரூபாவை செலுத்தி நகையை மீட்டு விடலாம்.

ஆனால் தனியார் அடகுச்சேவை நிலையங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது 1000 ரூபாவுக்கு நகையை அடகு வைத்தால் நகை அடகு வைக்கும் போதே முதல் மாத வட்டி பணத்தை எடுத்து கொள்வார்கள். மேலும் ஒரு வருடத்தின் பின் நகைகளை மீட்கும் போது வட்டியும் முதலுமாக 1000 ரூபாய்க்கு 1500 ரூபா வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இரண்டு வருடங்களுக்குள் திருப்பாது விட்டால் வட்டிக்கும் வட்டி சேர்க்கப்பட்டு இறுதியில் நகைகள் கிடைக்காத நிலைமை ஏற்படுகிறது. ஆனால் அரச வங்கிகளில் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதில்லை. அரச வங்கிகளில் அடகு வைக்கும் நகைகளுக்கு போதிய ஈட்டுக் கடன் கிடைக்கா விட்டாலும் குறைந்த வட்டி வீதம், மீண்டும் நமது நகைககளை பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளது. அடுத்தபடியாக பலர் வாகனம் ஒன்றை வைத்திருப்பதற்கு விரும்புவது இயற்கை.

அதற்காக வருடக் கணக்கில் சேமித்து சுமார் 10 லட்சம் வரை கையில் வைத்துக்கொள்கின்றனர். பின் தனியார் நிதி நிறுவனங்களிடம் சென்று மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று (finance) வாகனத்தைப் பெற்றுக் விடுகின்றனர். இதற்கு மாதாந்தம் வட்டி 24% முதல் 30% வரை. கணக்கிட்டுப் பார்க்கும் போது மாதம் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறு மூன்று மாதம் தவணைப் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் (finance company) வாகனத்தை பலவந்தமாக எடுத்துச்சென்று விடுவார்கள். அதன் பின் எந்தக் கொடுப்பனவும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நீங்கள் வாகனத்திற்கு முதலிட்ட 10லட்சம் ரூபாவும் அதோகதிதான்.

பின் வாகன ஆசை நட்டத்தில் தோல்வி யில் முடிந்து விடும். அத்தோடு பலர் மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தியுற்று குடிகாரராக, மன நோயாளர்களாக மாறி ஈற்றில் வாழ்க்கையை இழந்த சோகக் கதைகளை நாம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.

ஆனால் சில கட்டுப்பாடுகளுடனும் சிரமங்களுக்கும் மத்தியில் அரச வங்கிகளில் வாகனத்துடன் பெற்றுக் கொள்ளும்போது குறைந்த வட்டி விதத்தில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டு உறுதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம் அல்லது அரச உத்தியோகஸ்தர்களின் பிணையின் மூலம் அரச வங்கிகளில் வாகனக்கடன் வியாபாரக்கடன் சிறு கடன் மனை திருத்த புதிய மனை நிர்மாணிக்க கடன் பெறலாம். கடனை குறைந்த வட்டியில் நீண்ட தவணையில் பெற்றுக் கொள்ள முடியும்.

நிறுவனங்களின் மூலமாக எம்மைத்தொடர்கின்றன. ஆயுள் காப்புறுதி என்ற போர்வையில் எம்மை ஏமாற்றி அவ்வளவு பணம் கிடைக்கும் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று எம்மை ஏமாற்றிக் காப்புறுதி செய்யத்தூண்டுவர்.
முறி முதிர்ச்சியடைந்து நாம் தொகை யைக் கோரும் போது நாம் செலுத்தியதை விடக் குறைவாகவே எமக்குக் கிடைக்கும் காரணம் கேட்டால் இது ஆயுள் காப்புறுதி ஆயுளுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் மாத்திரமே முழுமையாக கிடைக்கும் என்று கூறி எம்மை ஏமாற்றுவர். செத்தபின் கைலா யம் செல்ல விரும்புவது போன்றதே ஆயுள் காப்புறுதியாகும்.

காப்புறுதி நிறுவனங்கள், தோட்ட நிருவாகிகள், இலிகிதர், ஏனைய மேலாளர்களுக்கு போனஸ் சலுகைகள் வழங்கி தோட்டத் தொழிலாளர்களைக் காப்புறுதி செய்யத் தூண்டுமாறு கட்டளை இடச் செய்
வர். காப்புறுதி செய்வதை விட காணி, தங்க நகை போன்றவற்றில் முதலீடு செய்வது லாபம் அளிப்பதாகும். மது விற்பனை நிலையங்களைப் பற்றி நாம் நினைவூட்டத் தேவையில்லை. தற்போது தொடர்ச்சியாக அதன் தாக்கம் பற்றிப் பேசப்படுகின்றது.

எமது தாய்மார்கள் வீதிக்கு இறங்கி மதுச்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வது பாராட்டத்தக்கதாகும். மேலும் தோட்ட மதுச்சாலைகள் பல எமது அரசியல் தலைவர்களினாலேயே நிர்வகிக்கப்படுகின்றன என்பதை எமது மலையகக் குழந்தைகள் கூட நன்கு அறியும்.

மதுச்சாலைகளை ஒழிக்க பாராளுமன்றத்திலும் குரல்கள் ஒலிக்கின்றன. ஆகவே மலையகத்தில் வாழும் படித்த இளைஞர் யுவதிகள், ஆசிரியர்கள், கல்விச் சேவையாளர்கள் இயன்றவரை எமது மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். இயன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

எம்மில் அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிலையங்கள் எமது மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட் டுக் கொள்கின்றோம்.

நன்றி - வீரகேசரி

மலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் - அருட்தந்தை மா.சத்திவேல்


நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அகிம்சை முறையில், ஜனநாயக வழியில் தமது வாக்குப் பலத்தை நாடறியச் செய்தனர். தேர்தல் தொடர்பாக மக்கள் எடுத்த தீர்மானம் அரசியல்வாதிகளையும் விழிப்படையச் செய்தது. ஆனால், மலையகத்தின் ஏகபோக உரிமையை தமதென நினைத்த அரசியல்வாதிகள் இருட்டுக்குள்ளே சுகம் கண்டனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம், புதிய அரசியல் பயண ஆரம்பம் இவற்றுக்கிடையில் மலையக மக்கள் வாழ்வில், குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் பொருளாதார, அரசியல், சமூக ரீதியில் மாற்றம் நிகழுமா? இதுவே இன்றைய பிரதான கேள்வியாகவுள்ளது.

மலையகத்தின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்தக்காணி, தனிவீடு தொடர்பான கோஷங்கள் கடந்த ஒக்டோபரில் மீரியபெத்தையில் நிகழ்ந்த அனர்த்தத்தினைத் தொடர்ந்து மலையகமெங்கும் எதிரொலித்தன. இது மலையக அரசியல் தலைமைகளையும் திரும்பிப் பார்க்க செய்ததோடு, அவர்களின் அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் ஆதிக்கத்தை செலுத்தியது எனலாம்.

இதனைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர்களுக்கென சொந்த காணி, வீடு தொடர்பில் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகளும் அரசும் உறுதியாக இருப்பதைப் போன்று தோன்றுவதோடு அதற்கான அடிக்கல்லும் மீண்டும் நடப்பட்டுள்ளது. காணி, வீடு தொடர்பாகவும் அதன் அமைவிடம் சம்பந்தமாகவும் அமைச்சு மட்டங்களிலும் அதிகாரிகள், தோட்டக் கம்பனிகள் போன்றவற்றோடு பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மேலும், அமையப்போகும் வீடும், காணியும் 7 பேர்ச்சுக்குள் அடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் மத்தியிலே உடன்பாடற்றதும் தெளிவற்றதுமான தன்மையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் மக்களை கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும்.

வீடு கட்டும் போது கட்டுமான பணிகளை வீட்டுரிமையாளரே செய்ய சுதந்திரம் உள்ளதா? முழுப்பணமும் அவர்களது வங்கியில் இடப்படுமா? தனது வீடு தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இம்மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? நிர்மாணிக்கப்படும் வீடுகள் தொடர்பில் அதன் கட்டுமான பணிகள் விடயத்தில் தமது கருத்தினை தெரிவிப்பதற்கும், தலையீடு செய்வதற்கும் இவர்களுக்கு உரிமை உள்ளதா? எச்சந்தர்ப்பத்திலும் காணி தொடர்பிலோ, வீடு தொடர்பிலோ கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுவார்களா? சுதந்திர இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரஜைகளுக்கான கௌரவம் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற காணி, வீடு தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தொழிலாளி ஒருவர் “இந்திய வம்சாவளி என்பதை எடுத்து விடட்டும், இந்நாட்டின் சுதந்திர பிரஜைகள் எனும் கௌரவத்தை வழங்கட்டும். காணி வீட்டை நாம் பெற்றுக் கொள்வோம்” என்றார். மக்கள் விழித்துள்ளார்கள் என்பதே இதன் மூலம் தெரியவருகின்றது,
நிறுவனங்களோ, அரசோ கொடுப்பதை அப்படியே மக்களிடம் கொடுப்பது அதிகாரிகளின் கடமை. அதேவேளை, அரசியல் ரீதியில் தேசிய வாழ்வோடு இணைந்து பயணிக்க ஏற்ற வகையில் மக்களுக்குத் தேவையான அரசியல், சமூக உரிமைகளை பெற்றுக் கொள்ள மக்களுக்கு வலிமை சேர்ப்பதே அரசியல்வாதிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஆட்சியாளர்களோடு இணைந்து இருந்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதும், தமது குரலுக்காக மக்களை திரட்டி சக்தியாக வைத்திருப்பதும் இவர்களின் இன்னுமொரு பொறுப்பாகும். இதனையே மக்கள் மலையக அரசியல்வாதிகளிடமும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வீட்டுத் திட்;டங்கள் நடைமுறைப் படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவையெல்லாம் முழுமை பெறவில்லை. இதற்கு கட்சி அரசியல் சாயம் பூசப்பட்டதும் ஒரு காரணம் என்பது கவலைக்குரிய விடயமே. நடைமுறைப் படுத்தப்படும் புதிய திட்டம் இவற்றுக்குள் சிக்கிவிடாது, மக்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியலை மையப்படுத்தி வாழ்வை பாதுகாக்கும் திட்டமாதல் வேண்டும். மலையக மக்கள் வாழ்வின் அடிப்படை அரசியல், சமூக உரிமைகளை முழுமையாக பெற்று இந்நாட்டின் சுதந்திர கௌரவ பிரஜைகள் என்ற நிலைக்கு உயர்வடைதல் வேண்டும். அதாவது இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளை இம்மக்களும் அனுபவித்தல் வேண்டும். இதற்கு போதுமான அளவு சொந்தக் காணியும் தாம் விரும்பியவாறு அடிப்படை தேவைகளுடனான வீடும் அமைதல் முக்கியமாகும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனிவீடு, காணி தேவை என்பன புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத் திற்கு உட்படுத்தாது, நடைபெறப் போகும் பொது தேர்தலில் மலையக மக்களின் வாக்குகளை பகற் கொள்ளையடிக்கும் கவர்ச்சி திட்டமாக்காது, மலையக மக்களை வாக்களிக்கும் தொடர் இயந்திரங்களாக்காது சுயமரியாதையுள்ள கௌரவமிக்க, தனித்துவமான பிரiஐகளாக வளர்ச்சி பெறும் நோக்கோடு தனிவீடு, காணி திட்டம் அமுலாக்கப் பட வேண்டும். இதன் மூலமே எனது காணி, எனது வீடு, எனது நாடு எனும் சிந்தனையோடும் உணர்வோடும் இந்நாட்டின் பிரiஐகளாக வாழவும், வளரவும் முடியும். இதுவே தாம் பாதுகாப்போடு வாழ்கின்றோம் எனும் மனவுறுதியையும் ஏற்படுத்தும்.

இன்று தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சுகவீனம் போன்ற காரணங்களுக்காக தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடிவதில்லை. தொழிலாளர்களின் தொகை குறைப்பு காரணமாகவும், புதிதாக தொழிலாளர்கள் இணைந்து கொள்ளாததன் காரணமாகவும், போதிய வருமானம் இன்மையாலும் வருமானத்தைத் தேடி நகர்ப் புறத்திற்கு செல்வதும், வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் தேடி வெளியேறுவதும் இவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலும், கடைகளில் சிப்பந்திகளாகவும், காவலர்களாகவும் சேவையாற்ற தள்ளப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவோ, சகாய நிதியோ கிடைப்பதில்லை. நிரந்தர தொழிலாளர்களாக அநேகமானோர் தொழில் புரிவதுமில்லை. இன்னும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கியும் படையெடுக்கின்றனர்.

நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று உழைத்தாலும் உழைப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே தொடருகின்றது. அது மாத்திரமல்ல உழைக்கும் காலத்தில் மலையகத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக வாழ்வதால் இவர்களின் குடும்ப மற்றும் சமூக, கலாசார வாழ்வும் சிதைவடைகின்றது. மலையக வாழ்விற்கு எதிரான ஒரு வாழ்வு முறை இவர்களால் மலையகத்திற்குள் நுழைக்கப்படுகின்றது. இதன் மூலம் மலையக தனித்துவ அடையாளம் காக்கும் சமூக பற்றில்லாத சமூகமொன்று வளர்வதை அவதானிக்கலாம். இது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளில் ஒன்று. இறுதியில் நோயாளியான சமூகமொன்றே மலையகத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இந்நிலையில் இருந்து மலையகம் விடுதலைபெற வேண்டுமாயின், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருளாதாரத்தை தமதாக்கக் கூடிய காணியும், வீடும் சொந்தமாதல் வேண்டும்.

ஒரு திட்டமிட்ட காணிக் கொள்கை மூலம் புதிய வாழ்வுக் கலாசாரத்தை மக்கள் தமதாக்கும் போது தொழிலாளர்களின் அரசியலிலும், மலைகயத்திலும் புதிய அரசியல் யுகம் பிறக்கும். மக்கள் தொகைக்கேற்ப பிரதேச சபைகளும், நகர சபைகளும் உருவாகும். புதிய தலைமைத்துவங்கள் தலையெடுக்கும். மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக அல்லாது தேசிய அரசியல் நீரோட்டத்திலும் பங்கு பற்றுவதோடு, பொருளாதாரத்தில் தன்னிறைவையும், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பங்கு ஏற்கவும் வழிவகுக்கும்.

ஆதலால் மலையக மக்களுக்கு கிடைக்கப் போகும் வீடும், காணியும் சுய பொருளாதாரத்தை வளர்க்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்யவும், மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தனித்துவமான இனமாக தமது அடையாளத்தோடும், பாதுகாப்போடும் வாழவும் துணை செய்தல் வேண்டும். ஆனால், தற்போது மலையில் தொழில் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குள் நுழைவோர் தொடர் கூடுகளில் (லயன்களில்) அடைந்து விடுகின்றனர். இனி தொழில் செய்துவிட்டு தனித்தனி கூடுகளில் அடைந்துவிடும் நிலைக்கு (புதிய 7 பேர்ச் காணி  வீட்டுத்திட்டம்) அமைந்துவிடும் என்பதில் தான் சமூக பயம் ஏற்படுகின்றது.

இவ்வாறான திட்டம் அமுலாக்கப்பட்டால் அது நவீன காலனித்துவ தனிவிட்டு சிறைக் கூடங்களாக அமைவதோடு, தோட்டக் கம்பனிகளிடம் மாதாந்தம் கைநீட்டி சம்பளம் வாங்கும் நிலையே தொடர்ந்திருக்கும். தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகமும் சம்பள உடன்படிக்கையில் கைசாத்திடுவதால் தொழிற்சங்கங்களின் பிடிக்குள்ளேயே சிக்கி தொழிற்சங்கங்களின் கைப்பொம்மைகளாகவே காலத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி பதவியேற்ற புதிய அரசாங்கம், அரச பணியாளர்களுக்கு 10,000 ரூபா அதிகரித்ததோடு, தனியார் துறையினருக்கு 2,500 ரூபா அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரியது. மலையக தொழிலாளர்களுக்கு இவ்வதிகரிப்பு கிட்டுமா? அல்லது இந்நிலை தொடர்ந்து இன்னுமொருவரின் தேயிலைக்கு உரமாகி அவர்களின் சுகபோக வாழ்விற்கு உயிர்ப் பலியாக வேண்டுமா?

மஹிந்த அரசாங்கத்தால் வரவு  செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தையும், தரிசு நிலமாக இருக்கும் 37 ஆயிரம் ஹெக்டெயர் காணியை பெற்றுக் கொள்வதற்கும் மலையகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படாதது ஏன்? மலையக கட்சிகளினதும், தொழிற்சங்கங்களினதும் அரசாங்க சார்பு நிலையே, இதற்குக் காரணமாகும்.

1930 – 1987 வரையான காலப்பகுதியில் 105 ஆற்று வடிநில அபிவிருத்தி திட்டங்களாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம், 1 லட்சம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, 1980 காலகட்டத்தில் 1 இலட்சத்து 65 ஏக்கர் பெருந்தோட்ட காணி 55 ஆயிரம் குடும்பங்களுக்கு (குடும்பத்திற்கு சராசரியாக 3 ஏக்கர்) பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்குமிங்குமாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கு காணி கிடைத்தனவே தவிர சமூகமாக மலையக மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு காணி பெற்றுக் கொண்டவர்கள் இரண்டு, மூன்று பரம்பரையினராக ஒரே காணியில் தொடர்ந்து வாழ்வதோடு விவசாயத்திலும், வீட்டுத் தோட்டத்திலும ஈடுபடுகின்றனர். மலையக பிரதேசத்தில் காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தேயிலை செய்கையோடு, மா, பலா, வாழை, தென்னை மரங்கள் நட்டுள்ளதோடு ஆடு, மாடு கோழிகளை வளர்ப்பதையும், வேறும் பலர் கோப்பி, மிளகு என்பவற்றோடு பயன்தரும் மரங்களை வளர்ப்பதையும் காணலாம்.

இதனடிப்படையிலேயே இவர்களிடையே குடும்பப்பற்றும், சமூகப்பற்றும், பிரதேசப்பற்றும், இனப்பற்றும், தேசப்பற்றும் மேலோங்கி வளர்வதை அவதானிக்கலாம். மேலும், ஒன்றிணைந்த சமூகமாக தமது அடையாளங்களை பேணுவதற்காக உரிமை குரல் எழுப்புவதையும அவதானிக்கின்றோம்.

மலையக மக்களாகிய நாமும் இந்நாட்டின் பிரஜைகள். சுய கௌரவத்தோடும், சுய மரியாதையோடும், சமூகப்பற்றோடும், தேசப்பற்றோடும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் காணி வீட்டுக்கான புதிய கொள்கை மலையகத்திற்கென வகுக்கப்படல் வேண்டும். இக்கொள்கை மூலம் மலையக மக்களுக்கு காணி வழங்கப்படுகின்ற போது பாரம்பரிய தொழிலில் ஈடுபடுவதோடு, தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி முன்நகர்வதற்கும், சமூகமாகவும், கூட்டாகவும் எதிர்காலத்தை திட்டமிடவும் முடியும். மேலும், கிராமிய பண்பாட்டில் சமூகமாக வாழும் போது மலையகத்திற்கே உரிய தனித்துமான இனத்துவ அடையாளங்களை பாதுகாத்து தமது இருப்பையும் பாதுகாக்க முடியும்.

தற்போது மலையகத்தில் மாற்றத்திற்காக தலைமைத்துவத்தை ஏற்றிருக்கின்ற புதிய அரசியல் தலைவர்கள் ஒன்றித்த சக்தியாக இயங்க தொடர் முயற்சியில் ஈடுபடல் வேண்டும். அவ்வாறு இயங்க எடுத்திருக்கின்ற முயற்சி வரவேற்கத்தக்கதே. இது வெறுமனே தேர்தல் அரசியலுக்காக அல்லாது மலையக மக்களின் சுதந்திர கௌரவ வாழ்விற்கான கூட்டாக இருத்தல் வேண்டும்.

ஆதலால் மலையகத்தில் மண் மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கான காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

பகிர்ந்தளிக்கப்பட கூடிய காணிகள் அளந்து அடையாளமிடப்படல் வேண்டும்.
பொதுத் தேவைகளுக்கான காணி வேறாக்கப்படல் வேண்டும் (கோயில், சிறுவர் பாடசாலை, விளையாட்டுத் திடல், மாயனம்…)
காணி தேவையானோர் கண்டறியப்பட விண்ணப்பங்கள் கோரப்படல் வேண்டும்.
காணி உறுதிப் பத்திரம் கொடுக்கப்பட ஆவன செய்தல் வேண்டும்.
இதற்கான கால எல்லையையும் நிர்ணயித்தல் வேண்டும்.

அரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும் தமது எல்லைகளைக் கடந்து மலையகத்தின் எதிர்காலம் கருதி திறந்த மனதுடன் செயற்பட முனைவதோடு, புத்திஜீவிகளையும் இணைத்துக் கொள்ளல் நலமானதாக அமையும்.

மலையகத்தின் எதிர்கால நலன் கருதி பெருந்தோட்ட மக்களுக்கான சொந்தக் காணி, வீட்டுரிமை தொடர்பாக செயல்படும் மலையகத்திற்கு வெளியிலுள்ள அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூகங்களோடும் கைகோர்ப்பதன் மூலமே வெற்றியைக் காண முடியும்.

மலையகத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்பதற்காகவும், தமிழர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்டு அடிமைகளாக இருக்கும் வரை நாட்டின் ஜனநாயகமும், சுதந்திரமும், நல்லாட்சியும் இருட்டுக்குள்ளேயே இருக்கும்.

நன்றி - வீரகேசரி

புதிய கூட்டு ஒப்பந்தம் : நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தருமா? - எம்.நேசமணி


கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அரசியல் மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை கௌரவம் பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் முன்வைக்கவும் வேண்டும். மாறாக, ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களையும் அறிக்கைகளையும் விட்டு கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை குழப்பியடிக்கக் கூடாது. 


பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படும் ஓர் உடன்படிக்கையாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைடைந்தது. எனவே அடுத்த இரு வருடங்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.
புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டு கமிட்டி போன்றவற்றை சேர்ந்த பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முதலாளிமார் சம்மேளனம் வழமைபோல் தமது பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அதனை செவிமடுத்த தொழிற்சங்க பிரதிநிதிகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொகை பற்றி இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமல் புதிய கூட்டு ஒப்பந்த்துக்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நிறைவடைந்தாலும் அப்பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்படும் சம்பள உயர்வு ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நிலுவையுடன் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதே வழமை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடுத்த இரண்டு வருடங்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயிக்கும் புதிய கூட்டு ஒப்பந்தத்தினை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேவேளை, தொழிற்சங்கங்களும் சில அரசியல் கட்சிகளும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருவதுடன் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்திலேயே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பானது தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் மத்தியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை பொறுத்த வரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர்த்தப்பட வேண்டிய நாள் சம்பளத்தை ஆரம்பத்திலேயே முன்வைத்தது கிடையாது. இவ்வாறான நிலையில் இம்முறை தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற இ.தொ.காவின் அறிவிப்பு அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்களும் அந்த அறிவிப்பு பற்றிய தமது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் முன்வைக்கத் தொடங்கின. அந்த வகையில் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு அடுத்தபடியாக உள்ள தொழிற்சங்கமாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம், இ.தொ.கா. ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்தால் மலர் தூவி வரவேற்போம் என்று அறிவித்தது.

அதேபோன்று மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இந்த சம்பள உயர்வு விடயம் பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடத் தொடங்கின. குறிப்பாக தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே எல்லா தொழிற்சங்கங்களும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிப்பை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆயிரம் ரூபாவை நாட்சம்பளமாக கம்பனிகளால் வழங்க முடியுமா? அவ்வாறு வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகள் உளள்னவா? இப்படியான கேள்விகளும் இன்று பலர் மத்தியில் நிலவுகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்த வேண்டும் என்று கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அந்த தொகையானது அடிப்படை சம்பளத்துடனா அல்லது கொடுப்பனவுகள் அடங்கிய தொகையா என்று அறிவிக்கவில்லை.

கொடுப்பனவுகளுடன் கூடிய ஆயிரம் ரூபா நாள் சம்பளம் என்றால் அடிப்படை சம்பளம் எவ்வளவு, கொடுப்பனவுகள் எவ்வளவு, என்னென்ன நிபந்தனைகள் போன்றவற்றையும் அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஏற்கெனவே மேற்கூறிய கேள்விகளுக்கு உரிய பதில் வழங்க முடியாது. எது எப்படியோ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அநேகமானோரின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பதவிகளை வகித்த காலத்தில் செயற்பட்ட விதத்திற்கும் தற்போது செயற்படும் விதத்திற்கும் இடையில் சற்று வித்தியாசத்தை காணமுடிகிறது. அதனை இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் காணமுடிகிறது.

எது எப்படியாக இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விடயத்தை அரசியலாக்காமல் உரிய முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, திரைமறைவில் ஒன்றும் மக்களுக்கொன்றுமாக கருத்துக்களை கூறி சுய இலாபம் தேட முற்படக்கூடாது.

முதலாளிமார் சம்மேளனம் எப்போதும் கம்பனிகளை பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றியும் பேசி கூடுமானவரை அவர்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை செய்துகொள்ள முயற்சிக்கும் அதேவேளை, தொழிற்சங்கங்களோ தொழிலாளர்களைவிட கம்பனிகளின் நலன்களிலேயே அக்கறை செலுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசியல் மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை கௌரவம் பார்க்காது ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் முன்வைக்கவும் வேண்டும். மாறாக, ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை குழப்பியடிக்கக் கூடாது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திகழ்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவர்களது பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்வாதாரம் போன்றன குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

நன்றி  - வீரகேசரி

மலையக கூத்துகளின் நிகழ்காலமும் எதிர்காலமும்


தாய் உறவு " மலரும் தாயகம் திரும்பியோர்"



இலங்கையில் இருந்து சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையின்படி தாயகம் திரும்பிய 20 லட்சம் பேர் தமிழ் நாட்டிலும் தென் மாநிலங்களிலும் வாழ்கின்றனர்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 50 வருடங்கள் ஆனது தொடர்பில் ஒரு மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட உள்ளது. மலருக்கு தாயகம் திரும்பியோர் குறித்த படைப்புகள் வரவேற்கபடுகின்றன

அனுப்ப வேண்டிய முகவரி 
வழக்கறிஞர் தமிழகன், 117 F, மண்டபம் தோப்பு, 
முத்தரசநல்லூர் , திருச்சி 620 101.
9487303484.
tamilagan@gmail.com

LELLOPITIYA ESTATE, RATNAPUARA.

துரைவி ஞாபகார்த்த ஆய்வுக் கட்டுரைப் போட்டி - 2016


நோக்கம்
துரைவி பதிப்பக நிறுவுனர் அமரர் துரை.விஸ்வநாதன்  ஞாபகார்த்தமாக அன்னாரின் 85வது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கையின் தமிழ் நாவல்கள் பற்றிய முழுமையான ஆய்வினை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி.

தலைப்பு-தொனிப்பொருள்
ஈழத்து பிராந்திய நாவல் இலக்கியம்” 

ஆய்வுக்கட்டுரைக்கான பரப்பு
“ஈழத்து பிராந்திய நாவல் இலக்கியம்” எனும் தொனிப்பொருளில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையானது, பின்வரும் நான்குப் பிராந்தியப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு  பிரிவை மட்டுமே மையமாகக் கொண்டு ஆய்வாளர்  ஒருவரால் ஒர் ஆய்வுக்கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பிராந்தியப் பிரிவுகள் பின்வருமாறு

1) வடக்கு (வட மாகாணம், வடமேல் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியது)
(2) கிழக்கு (கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிவற்றை உள்ளடக்கியது)
(3) மலையகம் (மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் 
   ஆகிவற்றை உள்ளடக்கியது)
(4) தென்னிலங்கை(மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கியது)

தகமை
போட்டியாளர் இலங்கையின் எந்த பிரதேசத்தை சேந்தவராகவும் இருக்கலாம். ஆனால் தான் ஆய்வுக்காகத் தெரிவு செய்யும் பிராந்தியத்தை தெளிவாக குறிப்பிட்டு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தல் வேண்டும்.

* போட்டியாளருக்கு வயதெல்லை கிடையாது.

முறைமை
  • கட்டுரைகள் 12 Point Bamini Font யில் கணிணியில் அச்சிடப்பட்டு 12 முதல் 15 தாள்களுக்கு (A4) மட்டுப்படுத்தப்பட்ட வடிவில் இருத்தல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • கட்டுரையாளர்  பற்றிய எந்தவொரு குறிப்பும் பெயர்  உட்பட சமர்ப்பிக்கப்படும் கட்டுரைப் பிரதியில் குறிப்பிடலாகாது.
  • கட்டுரையாளர் பற்றிய அறிமுகக் குறிப்பு ஒன்றை ஒரு பக்கத்திற்கு மேற்படாத வகையில் தனியான தாளில் எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். 
  • மேற்கூறிய முறையில் அச்சடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் மூன்று பிரதிகள் தபாலில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • போட்டியில் தெரிவுச் செய்யப்படும் கட்டுரைகள் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்குப்  பின் மேற்கூறிய முறையில்;(12 Point Bamini Font) MsWord யில் வடிவமைக்கப்பட்டு கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசு விபரம்

துரைவியின் 85வது ஜனனதின நினைவை முன்னிட்டு 85000/=மொத்தப் பரிசுத்தொகையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

  • ஒவ்வொரு பிராந்திய ஆய்வுக்குமாக சிறந்த கட்டுரையொன்றுக்கும், ஆறுதல் பரிசொன்றுமாக இரண்டு பரிசுகள் வீதம் எட்டு பரிசுகள் வழங்கப்படும்.
  • சிறந்த கட்டுரைக்கான பரிசாக 12250/= பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்

ஆறுதல் பரிசாக 9000/=  பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்

முடிவுத் திகதி
போட்டிக்கான ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முடிவுத் திகதி- 30-09-2015

முடிவுகள்
போட்டி முடிவுகள் ஊடகங்கள்  ஊடாக அறிவிக்கபடுவதோடு தெரிவுச் செய்யப்படும் போட்டியாளார்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

முகவரி
Duraivi,   
C/o Vijaya General Stores, 
85, Wolfendhal Street  
Colombo-13.


மேலதிகத் தொடர்புகளுக்கு
மேமன்கவி-0778681464, திலகர்-077239765, துரைவி அலுவலகம்-011-2327011, மின்னஞ்சல்-duraivi1931@gmail.com

மலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ்


இலங்கையின் சனத் தொகைக்கு ஏற்ப மலையக தமிழர்கள் சார்பாக குறைந்தது 16 உறுப்பினர்களாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கான சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தெரிவித்தார்.

19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் கூட்டமொன்றை அட்டன் மலையகம் ஆய்வகம் அட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாட லில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில் கிட்டத்தட்ட 200 வருடங்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், நாடு சுதந்திரமடைந்த பின்னர் குறிப்பாக 1970ஆம் ஆண்டு வரை, அரசியல் பிரதிநிதித்துவம், நிர்வாக ரீதி யான ஏற்பாடுகள் முறையாக வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கான தேர்தல் தொகுதிகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்டச் செயல கங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் அனைத்தும் அவர்களின் சனத்தொகை மற்றும் புவியியல் பிரதேசத்துக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கள மக்களுக்கு நூற்றுக் கணக்கான தேர்தல் தொகுதிகளும், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களும் காணப்படுகின்றன. அது போலவே, வட கிழக்குத் தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சனத்தொகை செறிவுக்கு ஏற்ப உள்ளன. ஆனால், சுமார் 15 இலட்சம் மலையகத் தமிழ் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களது சனத் தொகைக்கு ஏற்ப புவியி யல் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்து வம் ஏற்படுத்தப்படவில்லை.

1947ஆம் ஆண்டு தேர்தலில் 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அன்றைய பாராளுமன்றத்தில் எமக்கு 8 உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை இல்லாது போய்விட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இன்றைய பாராளுமன்றத்தில் 2015இல் 7 பேர் மாத்திரமே இருக்கின்றார் கள். இன்று எமக்குள்ள சனத் தொகைக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

1947இல் இருந்த 95 தேர்தல் தொகுதிக ளில் நுவரெலியா மாவட்டத்தில் 4 தொகுதி களும், பதுளையில் 2 தொகுதிகளும், கண்டியில் 2 தொகுதிகளும், மொத்தமாக 8 தேர் தல் தொகுதிகள் காணப்பட்டன. இன்றைய சனத்தொகை அதிகரிப்பில் 1947 இல் 8 ஆக இருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்று 16 ஆக உயர்ந்திருக்க வேண்டும். அதேநேரம், கண்டியிலும், பதுளையிலும் அன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்க ளைத் தெரிவு செய்த நிலைமை இன்று காணப்பட வேண்டும். இன்று 160 தேர்தல் தொகுதிகள் காணப்பட்டாலும் 3 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தேர் தல் தொகுதி ஒன்று மாத்திரமே இருக்கின்றது.

இலங்கையில் காணப்படும் 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும், ஏனைய 5 மாவட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மலையகத் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென ஒரு தேர்தல் மாவட்டம் கிடையாது. வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு 24 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. மொத்தமாக உள்ள 160 தொகுதிகளில் மலையகத் தமிழ் மக்களுக்கென நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி மாத்திரமே உள்ளது.

இப்போதுள்ள தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 196 பாராளுமன்ற உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக 5 பேரும், 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 2 பேரும் மாத்திரமே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதிலும் உள்ள 560 மாகாண சபை உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக மத்திய மாகாணத்தில் 14 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், சப்பிரகமுவ மாகாணத்தில் 2 பேரும், மேல் மாகாணத்தில் 2 பேருமாக மொத்தம் 23 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். இந்தத் தொகை 30 – 35 ஆக இருக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் மொத்தமாக 335 இருக்கின்றன. அவற்றில் உள்ள 271 பிரதேச சபைகளில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகள் மாத்திரமே மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. 43 நகர சபைகளில் அட்டன் – டிக்கோயா நகர சபை மாத்திரமே மலையகத் தமிழ்ப் பரதிநிதித்துவதுடன் காணப்படுகின்றது. 23 மாநகர சபைகளில் ஒன்று கூட மலையக மக்களுக்கு இல்லை.

தற்போது தேர்தல் தொடர்பான யாப்புச் சீர்த்திருத்தங்கள் பற்றி வெகுவாக சிலாகிக் கப்பட்டு வருகின்றன. தொகுதிவாரியாகவும், விகிதாசார ரீதியாகவும் கலப்புத் தேர்தல் முறை பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. அதேநேரம், இப்போதுள்ள 225 பாராளு மன்ற உறுப்பினர்களின் தொகையை 250 ஆகா அதிகரிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எந்தத் தேர்தல் முறை வந்தா லும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்து வத்துவம் காக்கப்பட வேண்டும். இன ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக சமூக ஆர்வலர்களைத் திரட்டி மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

நன்றி - வீரகேசரி

தேர்தல் நெருங்குவதால் இம்முறை முக்கியத்துவம் பெறும் கூட்டு ஒப்பந்தம்


தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வை அலட்சியப்படுத்த முடியாத நிலையில் மலையக தொழிற்சங்கங்கள், கட்சிகள்
தோட்டத் தொழிலாளர் களின் கூட்டு ஒப் பந்தம் கடந்த மாதம் 31 ஆம் திகதி காலாவதியானது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பல தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டு வருகின்றன.

முதலாவது கூட்டு ஒப்பந்தம் 17 வருடங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டளவில் கைச்சாத்திடப்பட் டது. இது இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஒன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம். மற் றையது தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்கள். கடந்த காலங் களில் நலன் சார்ந்த விடயங்கள் கைவிடப்பட்ட நிலை யில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இம்முறையும் வழமை போலவே முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கொழும்பு ராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம் பமானது. வழமை போலவே தொழி ற்சங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு, அடிப்படை வசதிகள், வேலை நாட்கள் போன் றவற்றை முன்வைத்தன. அதே போன்று முதலாளிமார் சம்மேள னமும் தங்களுக்கு உள்ள சிரமங்கள் நஷ்டம் போன்றன குறித்து பழைய புராணமே பாடியதாக தெரிவிக்கப் படுகிறது.

மலையகத்தின் பாரிய தொழிற் சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு ஏனைய தொழிற்சங்க பேச்சு வார்த்தைகளை விட இம் முறை மிகவும் அழுத்தம் நிறைந்த மிக சவால் மிக்க ஒரு பேச்சு வார்த்தை யாக இது உள்ளது. தோட்டத் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை இ.தொ.காவுக்கு உள்ளது. காரணம் கூட்டு ஒப்பந்தம் ஆரம் பிப்பதற்கு முன்னரே நடைபெற வுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழி லாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா. அறிவித்து விட்டது.

ஏனைய தொழிற்சங்கங்கள் அனை த்தும் ஆயிரம் ரூபா சம்பள உயர் வினை பெற்றுக்கொடுக்க தாமும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து விட்டன. இந்நிலையில் இ.தொ.கா.வுக்கு 1000 ரூபா சம்பள உயர்வினை பெற் றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் சவாலும் கூடவே உள்ளன என்று தான் கூறவேண்டும்.

அதேவேளை இதற்கு முன் நட ந்த பேச்சுவார்த்தைகளிலெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு அமைச்சுப் பதவிகள் இருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு எந்த ஒரு அமைச்சுப் பதவியும் இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு இந்த கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று இப்போது கூற முடியாது. அத்தோடு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற் கான வாய்ப்பு உள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காவிட்டால் தேர்தல் மேடையில் சம்பள விடயம் தொடர்பாக சாடும் விடயங்களும் அதிகரித்தே காணப்படும். அத்துடன் இது தேர்தலில் வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பதுடன் அது இ.தொ.கா.விற்கு பாதகமாகவே அமையக்கூடும்.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கில்லை. இதற்கு இணையாக பாரிய சவால்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரத்திற்கும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சரான வேலாயுதம், மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை ஆகிய அனைவருக்கும் உள்ளன. ஏனென்றால் தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம் இருக்கிறார். அத்துடன் ஆளும் கட்சியில் இவர்கள் தொழிலாளர்களின் நன்மை கருதியே இணைந்ததாக பல இடங்களில் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சம்பள உயர் விற்காக பல போராட்டங்களையும் செய்துள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கியுள்ளதால் தொழிலாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதேநேரம் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தி யிலேயே வாழ்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் பொருளாதார சுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் அதிகமானவர்கள் குறைந்த போஷாக்கு மட்டத்தில் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின் றன. இதனால் கல்வி, சுகாதாரம் போன்றனவும், பாதிப்புக்குள்ளாகியுள் ளன. இந்நிலையில் இந்த சம்பளத் தினைப் பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இதேபோன்று தான் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களில் ஒன்றாக மலையக மக்கள் முன்னணி உள்ளது. அதில் அரசியல் துறைப் பொறுப்பா ளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் உள்ளார். அத் துடன் மத்திய மாகாணத்தில் பல வருடங்கள் கல்வி அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் அவருக்கும் இதில் பாரியளவில் பொறுப்பு இருக் கின்றது என்றே கூறவேண்டும்.

பதுளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் வேலாயுதம் தொழிற்சங்க வரலாற்றில் பாரிய அனுபவமும் பல பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த வருமாக காணப்படுகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக இருப்பவராக அவர் இருக்கிறார். எனவே, தொழிலாளர்களைப் பற்றி நன்கு உணர்ந்தவர் என்ற வகையில் இந்தச் சம்பளம் மற்றும் தொழிலா ளர்களின் நலன் விடயங்களை முன் னெடுக்க வேண்டிய பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலே இவரும் இருக்கிறார்.

பெருந்தோட்டத்துறையினை பொறுத்த வரையில் பலர் வேலையின்றி உள்ள துடன் அடிப்படை வசதிகள் இன்றி எத்தனையோ தோட்டங்கள் உள்ளன. பல தனியார் தோட்டங்கள் படுமோச மான நிலையில் உள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நலன் சார்ந்த விட யங்களிலும் சம்பள விடயத்திலும் கூடிய அளவில் அக்கறை செலுத்த வேண்டியது பாரிய சவாலாகும்.

மனோகணேசன் பிரதமருடன் நெருக்கமான உறவைப் பேணிவருபவர்.

தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் சம்பளமே அவர்களின் முக்கிய விடயம். பிரதமர் தொழிலாளர் களின் நலன் விடயத்தில் மிகவும் அக்கறையுடையவர். எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான சம்பளத்தினைப் பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சவால் இவர்கள் அனை வருக்குமே உள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய் யப்பட்டுள்ளது. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வும் தனியார் துறையினரின் சம்பள உயர் வையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை நிவர்த்தி செய்து நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாக காணப்படுகிறது.

சுமார் 17 வருடங்களில் எட்டுத் தடவைக்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இன்னமும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் கூட உயர்த்த முடியாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இனிவரும் காலங்களில் வரவு செலவுத் திட்டத்திலேயே அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதார நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குவது என்பது பொருத்தமற்றதாகவே உள்ளது. பொதுத் தேர்தலினை கருத்தில் கொண் டும் தோட்டங்களில் உள்ள அடிப்படை வசதிகளை கருத்தில் கெண்டும் தோட்ட மக்களின் பொருளாதார சுமையினை நீக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மலையக தொழிற்சங்கங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் தொழிற்சங்க தலைமைகளுக்கும் உள்ளது.

மலைவேலன்

நன்றி - தினகரன்

தலைவிதி! - ஜே.ஜி.ஸ்டீபன்


மலையகத்துக்குள்ளும் மலையக அரசியலுக்குள்ளும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிகவும் ஆழமாகவும் அக்கறையாகவும் பேசப்பட்டு வருகின்ற விடயம் தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்கின்றதான நலன்புரி விடயங்களுடன் கூடிய கூட்டு ஒப்பந்தமாகும்.

கூட்டு ஒப்பந்தம் என்றதுமே அதில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களையும் முதலாளிமார் சம்மேளனத்தையுமே யாரும் நினைவு கூருவர். அதுமாத்திரமின்றி விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைப்போர் முதலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மீது விரல் நீட்டியதன் பின்னரே ஏனைய பங்காளிகள் மீதும் முதலாளிமார் சம்மேளனத்தின் மீதும் கடிந்து கொள்கின்றனர்.
இது புளித்துப் போன விடயம் என்றாலும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களுக்கும் சரி நலன் விரும்பிகளுக்கும் சரி இன்னும் கூறப்போனால் சில அரசியல்வாதிகளுக்கும் கூட புரிதல்கள் இல்லாதிருப்பது தெளிவாகத்தெரிகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தரப்புகளே முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயதானங்களைப் பேசி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை என்ற பேரில் ஒப்பந்தமும் கைச்சாத்திட்டு வருகின்றனர்.

இதனை மாத்திரமே நன்கு புரிந்து வைத்துள்ள தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இணைந்து கொண்டு ஏன் ஏனைய தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தோட்டத்தொழிலாளர் சம்பள விடயத்தைப் பேசுவதற்கு கூட்டு ஒப்பந்த அணியில் இணைந்து கொள்ளக்கூடாது என்ற கேள்விகளை தொடுத்து வருகின்றனர். இவ்வாறு கேள்விகள் எழுவது நியாயமானதொன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனினும் இதனை சற்றுப் பின்னோக்கி அல்லது ஆழமாக தோண்டிப்பார்க்கும் போது தோட்டத் தொழிலாளரின் தலைவிதியை இலங்கை அரசியலே தீர்மானித்திருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதனினதும் தலைவிதியை படைத்தவனே நிர்ணயிக்கிறான் என்று வேதம் கூறுகின்ற போதிலும் தோட்டத்தொழிலாளி என்றதொரு சமூகத்தின் தலைவிதியை மாத்திரம் அரசியலும் அரசியல்வாதிகளுமே நிர்ணயித்திருக்கின்ற நிலைமைதான் இங்கிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தின் போது பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்தவர்தான் காமினி திசாநாயக்க. அவரது காலப்பகுதியில் தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் வகையிலான கூட்டு ஒப்பந்தம் என்ற தோற்றப்பாட்டுக்கு அத்திவாரம் இடப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் 200 வருட கால அடிமைகளாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களது சம்பளத்தை நிர்ணயிப்பதற்கென அமைக்கப்பட்ட பொறிமுறைதான் இந்த கூட்டு ஒப்பந்த பொறியாகும்.

மலையகத்தின் தொழிற்சங்கங்களில் இருந்து அறுபதாயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தொழிற்சங்கமே முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் என்றதொரு சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதாவது அரசாங்கத்தின் வசமிருந்த பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டதையடுத்தே தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதி கூட்டு ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது.

இதன் விளைவாக அன்றைய கால கூட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் அதற்கு அடுத்த படியாகவிருந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. இந்த இரு தொழிற்சங்கங்களுமே அன்று இலட்சக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்டிருந்தமையால் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதைப் போன்று கம்பனிக்காரர்களுடன் சமமாக மேசையில் அமர்ந்து பேரம் பேசுவதற்கான அந்தஸ்தினை நேரடியாகப் பெற்றுக் கொண்டன. எனினும் ஏனைய சிறு தொழிற்சங்கங்களுக்கு அதிர்ஷ்டமில்லாததால் அவ்வாறான தொழிற்சங்கங்களால் நேரடியாக கூட்டு ஒப்பந்த அணிக்குள் நுழைய முடியாது போனது.

இருந்த போதிலும் முயற்சியைக் கைவிடாத விக்கிரமாதித்தன் போன்று செயற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் சில கூடிப்பேசி சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஒருவாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்கி 60 ஆயிரம் உறுப்பினர்கள் தமக்கு இருப்பதாக உறுதிப்படுத்தி கூட்டு ஒப்பந்த பேச்சுக்களில் தம்மை உள்வாங்கிக்கொண்டமை சிறப்புமிக்க விடயம் தான்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் மற்றும் ஏனைய விடயங்களை தீர்மானிக்கின்ற பேச்சுவார்த்தைகளின் போது மேற்படி மூன்று தரப்புக்களே பங்குபற்ற முடியும் என்பதும் ஏனைய தொழிற்சங்கங்கள் நுழைய முடியாதென்பதும் சட்டத்தால் ஆக்கப்பட்டுள்ள விதியாகும்.

இந்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கோ மலையக மக்கள் முன்னணிக்கோ இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிக்கோ தொழிலாளர் விடுதலை முன்னணிக்கோ கூட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மேடைக்கு செல்ல முடியாது.

மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில் அவையனைத்தும் தோட்டத் தொழிலாளர்களை சார்ந்தும் அவர்களையே நம்பியும் இருந்து வருகின்றன. அப்படியானால் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் பற்றியும் அவர்களது பொருளாதார விடயங்கள் குறித்தும் தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயத்தில் விரிவான கலந்துரையாடல்கள் ஆலோசனைகளை உள்வாங்குதல் வெளிப்படை தன்மைகள் என்பன முக்கியத்துவம் பெற வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில் மலையக மக்களின் விடயங்களை ஆராய்ந்து முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களில் நிச்சயமாக ஏனைய தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை உள்வாங்கி அதனையும் செயலுருவாக்கம் செய்வதற்கு முயற்சிக்கப்படுமானால் அது வரவேற்கக்கூடியதாக விருக்கும். எனினும் தங்களது அரசியல் சுய தேவைகளின் நிமித்தம் தோட்டத்தொழிலாளர்கள் பழி வாங்கப்படுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தக்கூட்டணியில் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து கொள்ள முயற்சிக்கப்பட்ட போது பல்வேறு காரணங்களைக் கூறி அது தட்டிக் கழிக்கப்பட்டது.அரசியல் காரணங்களுக்காகவும் தங்களது இருப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவுமே செயற்பட்டு வருகின்ற மலையக தொழிற்சங்கங்கள் காலை முதல் மாலைவரை காடுமலை ஏறி உழைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுமறியா அப்பாவித் தொழிலாளர்களை ஏமாற்றிப் பிழைப்பது மிகவும் மோசமான மோசடியாக இருக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற மூன்று தொழிற்சங்கத்தரப்புக்களுடன் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ள முடியாது என்பது சட்டமாக இருந்து வருகின்ற காரணத்தாலும் ஏனைய தொழிற்சங்கங்களை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாது தட்டிக் கழிக்கப்பட்டு வருவதாலும் சந்தேகமான கருத்து ஒன்றும் நிலைத்து நிற்கிறது.

இதனை இன்னும் விபரமாக விபரிப்போமானால் கூட்டு ஒப்பந்தம் எனும் போது அங்கு குறிப்பிட்ட தரப்பினரே பேச்சுவார்த்தை மேசையில் அமர்கின்றனர். இரண்டுக்கு மேற்பட்ட சுற்றுப் பேச்சுக்களும் இடம்பெறுவது வழக்கமாக இருக்கின்றது.

அது மாத்திரமன்றி பேச்சுவார்த்தைகளின் போது பேசப்படுகின்ற விடயங்கள் வெளி வருவதும் இல்லை. வெளிப்படுத்தப்படுவதும் கிடையாது. பேச்சுவார்த்தை மேசையில் அமர்கின்றவர்களால் எத்தகைய எடுத்துரைப்புகள் முன்வைக்கப்படுகின்றன என்பதும் புரிவதில்லை. ஏதோ பேசப்படுகிறது காலம் கடத்தப்படுகிறது மீண்டும் பேசப்படுகிறது. தேவைப்பட்டால் மேலும் காலப்பகுதிகள் எடுக்கப்படுகின்றன. இதன் பின்னர் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ஒப்பந்தம் நல்ல முறையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்டதொரு தொகையைக் குறிப்பிட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவுமே இது வரையில் வெளிப்படுத்தப்பட்டு வந்த விடயங்களாகும். இந்த இடத்தில் தான் சந்தேகம் கிளர்ந்து பேச்சுவார்த்தை மேசையில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு தான் என்ன என்றும் இங்கு இடம்பெற்ற டீல் தான் என்ன என்பதும் தொடர்பிலும் ஏனைய தரப்புகளால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதில் தவறும் இல்லையென்றே கூற வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளின் போது தான் அரசியல்வாதிகளால் எழுதப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதி புதுப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை ஒரு நாள் சம்பளமாகப் பெற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறி வருகிறது. அதே போன்று தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளமாக 750, 800 ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இ.தொ.கா. கூறுவது போல் 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுத்தால் தோட்டத் தொழிலாளி மட்டுமல்ல முழு மலையகமே பூரிப்படையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் இது சாத்தியப்படாத விடயமாகும். தோட்டத் தொழிலாளர் ஒருவரின் ஒரு நாட் சம்பளம் 1000 ரூபா என்பது வாய்ப்பேச்சளவில் மட்டுமே சாத்தியமாகுமே தவிர நடைமுறையில் சூனியமே. எனவே தோட்டத் தொழிலாளர்களை இவ்வாறு ஏமாற்றத்துக்குட்படுத்துவது பொருத்தப்பாடற்ற விடயமாகும்.

1000 ரூபா கோரிக்கை நியாயமாக இருப்பின் அது வழங்கப்படா விட்டால் தவறுதான். நியாயமே இல்லாத கோரிக் கையை சாத்தியமே இல்லாத ஒரு செயற்பாட்டை அரங்கேற்ற போலியாக முயற்சிப் பதும் சாத்தியமாகாத பட்சத்தில் திசைதிருப்பல் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதும் தகாத விடயங்களாகும்.

மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கின்றது. ஆனாலும் கூட்டு ஒப்பந்த பங்காளித் தொழிற்சங்கம் ஆளும் கட்சியாகவும் அதன் பொதுச் செயலாளரானவர் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராகவும் இருப்பதால் அவரால் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கி அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியும்.

நாட்டின் வருமானத்துறையில் கணிசமான பங்கினை வகித்து வரும் தோட்டத்தொழிலாளர்களின் வருமானம் பொருளாதார நலன்புரி அடிப்படை சுகாதார விடயங்களில் கம்பனிகளை நோக்கி விரல் நீட்டி விட்டு அரசாங்கம் சும்மா இருந்து விட முடியாது.

ஆட்சியை நிர்ணயிக்கத் துணை நின்று வாக்களிக்கும் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் பொறுப்பும் கடமையும் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் நாள் சம்பள விடயத்திலும் அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.மேலும் கூட்டு ஒப்பந்தத்தில் தற்போது கைச்சாத்திட்டு வருகின்ற தொழிற்சங்கங்கள் மாத்திரமன்றி மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

தொழிலாளர்கள் சார்பிலான கை ஓங்கி நிற்கும் பட்சத்தில் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தங்கள் அதிகரிக்கப்படுகின்ற அதே வேளை இணக்கப்பாடுகளும் சாதகமாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவே கம்பனிகள் கூறி வருகின்றன. இது காலா காலமும் இடம்பெற்று வருகிறது. இதனை ஒரு போதும் ஏற்க முடியாது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறப்படுகின்றதே தவிர அது செயலுருவில் காட்டப்படுவது கிடையாது. இதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

தோட்டங்கள் நட்டமடைவதாக சுட்டிக்காட்டுகின்ற கம்பனிகள் இலாப மீட்டுவதை வெளிப்படுத்துவது கிடையாது.அத்துடன் கம்பனிகள் பெருந்தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே பராமரிப்பு பணிகள் முற்றாக கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் உண்மைகளை மூடி மறைத்து இங்கு ஒருவித அரசியல் விளையாட்டுக்களையே முதலாளிமார் சம்மேளனம் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான நிலைமைகள் அனைத்தும் தூசு தட்டப்பட்டு உண்மைத்தன்மை வாய்ந்ததும் வெளிப்படையானதுமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்கும் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்கின்ற தொழிற்சங்கங்களைத் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்களையும் கூட்டு ஒப்பந்த அணியில் இணைத்துக் கொள்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தேவையேற்படும் பட்சத்தில் சட்டத்திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை சட்டமாக்குவதன் மூலம் எதிர்கால நிர்ணயங்களை உறுதிப்படுத்தவும் முடியும். மீண்டும் மீண்டும் பொய்க்கதைகளைப் பேசியும் மூடி மறைப்புக்களை மேற்கொண்டும் மலையகத் தொழிற்சங்கங்கள் செயற்படக் கூடாது. முதலாளிமார் சம்மேளனம் கூறுவதை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் இல்லை என்பதை இனிவரும் காலங்களில் உறுதிப்படுத்தல் அவசியம். இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் ஒன்று வரப்போவதை மனதில் இருத்தி செயற்பட்டால் நன்மை இல்லையேல் மக்களைச் குறை கூறி நிற்பதில் பயன் இருக்காது.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates