Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“பெண்கள்” - கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 3 | என்.சரவணன் (ஒஸ்லோ)

நெருக்கடி காலங்களில் முதலாவது பாதிக்கப்படுபவர்களும் பெண்களே, இரண்டாவது பாதிப்பக்கப்படுபவர்களும் பெண்களே என்று ஒரு பழமொழி உண்டு.

இயற்கை அனர்த்தங்கள், போர்க் காலங்கள் மட்டுமன்றி வீடுகளில், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் வரை இது தான் நிலைமை. அதிக சுமைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாபவர்கள் அவர்கள் பெண்கள் தான். இது பண்டைய பெண்வழிச் சமூகமல்ல. இது ஆணாதிக்க சமூக அமைப்பு. ஆண் குடும்பத் தலைவனாகவும், சகலவற்றுக்கும் தலைமை ஏற்க தகுதியுள்ளவனாகவும் கற்பிதம் செய்யப்பட்ட சமூக அமைப்பு இது. ஆண்கள் பண்டைய பெண்வழிச் சமூக அமைப்பிடம் இருந்து இதை எப்படி கைப்பற்றிக்கொண்டது என்பது தனியான பெரிய கதை.

குடும்பத் தலைவனாக ஆண் நிறுத்தப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கும் பொறுப்பை பெண்களே சுமந்து வருகிறார்கள். முதியவர்களும், நோயாளிகளுமே கொரொனோ தொற்றுக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக கணிக்கப்பட்டுள்ளார்கள். இத்தகையவர்களை வீடுகளில் பராமரிப்பவர்கள் ஆண்களல்ல பெண்களே.

வீடுகளில் அனைவரும் அடைந்து கிடக்கும் இந்த நாட்களில் வீட்டில் மூத்தவர்களை மட்டுமன்றி, வீடுகளில் தற்போது இருக்கும் குழந்தைகளையும், கணவரையும் பராமரிக்கும் பொறுப்பை அவர்களே சுமக்கிறார்கள். சாதாரண மத்திய தர வர்க்க, மற்றும் ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் உணவுத் தட்டுப்பாடு, பணத்தட்டுப்பாடு என்பவற்றை சமாளித்துக்கொண்டு சிக்கனமாகவும், பட்டினியின்றியும், ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் கடமைகளை பெண்களே ஆற்றுகின்றனர்.
தமது குழந்தைகளையும் மூட்டைகளையும் சுமந்துகொண்டு, காலில் செருப்பு கூட இன்றி பல மைல்களாக நடந்து ஊருக்குத் திரும்பும் தாய்மார் பற்றிய செய்திகளை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள்.

கொரொனோ ஆபத்திலிருந்து இன்று உலகையே இரவு பகலாக தமது உயிரை பணயம் வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் மருத்துவ சேவையில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் பெண்களே. குறிப்பாக பெருமளவு தாதிமார்கள் பெண்களே. உலக மருத்துவ சேவையாளர்களில் 70 வீதமானோர் பெண்கள். சீனாவில் கொரோனா தொற்றை நீக்குவதற்கான பணிகளில் ஈடுபட்ட மருத்துவ சேவையாளர்களில் 90 வீதமானோர் பெண்கள். இதுவே இன்றைய அமெரிக்காவில் 78 வீதம் பெண்கள்.

2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் நோய் தோற்றி பலர் மடிந்தார்கள். அப்படி மடிந்தவர்களில் அதிகமானோர் பெண்களே. அதிலும் 21 வீதமானோர் பெண் சுகாதார சேவை பணியாளர்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம். சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் தோற்றால் மடிந்தவர்களில் அதிகமானோரும் பெண்கள் தான். அங்கு வீடுகளில் நோயாளர்களை பராமரிப்பவர்களாக பெண்களே இருந்தார்கள். அதுபோல ஆப்பிரிக்காவில் பெண்கள் தான் இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தி இறுதிக் கடமைகளை செய்யும் பொறுப்பை வகித்திருந்தார்கள்.

அதே வேளை இம்முறை கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆண்களே என்பது இன்னொரு செய்தி. சீனா, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் தரவுகளில் இருந்து இது துல்லியமாகத் தெரிகிறது. மார்ச் 20 ஆம் திகதி தரவுகளின் படி ஆண்களின் இறப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 70 வீதமாக காணப்படுகிறது.  ஆனால் மருத்துவ கடமையின் போது கொரோனா நோயாளர்களிடம் இருந்த நோய் தொற்றி தாமும் பாதிப்புக்குள்ளாகி இறந்துகொண்டிருக்கும் மருத்துவ சேவையாளர்களில் பலரும் கூட பெண்களே.

இன்றைய நிலை; உலகில் இதுவரை காணாத பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் இந்தளவு நெருக்கடியை இப்போது தான் எதிர்நோக்கியிருக்கிறது. சாதாரண எந்தக் கண்களுக்கும் புலப்படாத எதிரி பேரழிவை செய்துகொண்டிருக்கிறது. அருகில் வரும் யாரோடு அந்த எதிரி மறைந்திருக்கிறார் என்பதை அறியாமல் மனிதரை மனிதர் சந்தேகிக்கும் ஒரு துயரத்தை எதிர்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களை பத்திரமாக பாதுகாக்க தலைப்படுவது போல அவர்களை சில நேரங்களில் ஆளையாள் சந்தேகிக்கும் நிலைக்கும் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு கொடுமையான காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நெருக்கடிகளின் வடிவம் தனித்துவமானது. அவை இந்தப் பெருங்கதையாடல்கள் மத்தியில் பேசுபோருளாவதில்லை.

இதே வேளை இந்த ஊரடங்கு கால கட்டத்தில் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நிகழ்வதாக பல செய்திகளையும் காண முடிகிறது. கடந்த வாரம் இலங்கை செய்திகளில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலும் இதே எச்சரிக்கையைத் தரும் செய்திகள் பதிவானது.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பெண்களின் நலன்களை பாதுகாக்கும் முக்கிய கடமையும் பொறுப்பும் ஆண்களுக்கு இருக்கிறது. பெண்களின் நலனில் தான் ஆண்களின் நலன்களும் தங்கியிருக்கின்றன என்பதை உணர்ந்தாவது ஆண்கள் தமது கடமைகளை சரிவர ஆற்ற வேண்டிய நெருக்கடியான காலம் இது. அவர்களை உடல் - உள ரீதியில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவேண்டியது ஆண்களின் கடமை. வேலைப்பகிர்வை மட்டுமன்றி, பொறுப்புப் பகிர்வுக்கும் தம்மைப் பழக்கிக் கொள்ள ஆண்கள் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒரு புறம் பெண்கள் உலகையும் காத்து மறுபுறம் தம்மையும் தற்காத்து, தம் வீட்டு பெண்களையும், சிறுமிகளையும் தற்காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மானுட அவலம்.

இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்
உலகம் – 1,095,930 (58,786), நோர்வே -5366 (60), இலங்கை 151 (3)

“பெண் விடுதலையே சமூக விடுதலையின் அறிகுறி” – ரோசா லக்சம்பேர்க்
(இக்கட்டுரை 5.4.2020 ஞாயிறு தினகரன் பத்திரிகையில் “கொரோனாவுக்கு பெரும் விலை கொடுப்பவர்கள் பெண்கள்” என்கிற தலைப்பில் வெளிவந்தது.)

“நோர்வே” - கொரோனா டயரீஸ் – ஏப்ரல் 4 | என்.சரவணன் (ஒஸ்லோ)

கொரோனா பீடிப்பை கவனமாக கையாண்டு வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக நோர்வே திகழ்கிறது. மார்ச்  26 ஆம் திகதியன்று நோர்வேயில் முதல் தொற்று நோர்வேயின் வடபகுதி பிரதேசமான ட்ரொம்சோவில்  அடையாளம் காணப்பட்டது . ஏப்ரல் 3ஆம் திகதியாகும் போது மொத்த தொற்று 5295 ஆகவும் இறப்புத் தொகை 56 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

சகல விமான நிறுவனங்களும், பயணிகள் கப்பற் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக இயங்கிவந்த நோர்வேயின் புகழ் பெற்ற பயணிகள் உல்லாச கப்பல் நிறுவனமான “Stena Line” அந்த சேவையையே நிரந்தரமாக நிறுத்திவிட்டது. விசா இன்றி, அல்லது வீசா காலாவதியாகி இருப்பவர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருக்கிறது. வெலிநாஉகலில் இயங்கும் நோர்வேகிய தூதுவரகங்கள் அனைத்தும் விசா விநியோகிப்பதை நிறுத்தி வைத்துள்ளன. அத்துடன் உள்நாட்டுக்குள் நோர்வேஜியர்களும், நோர்வேயில் பணிபுரிய அனுமதிபெற்றவர்களும் மாத்திரமே மீண்டும் நாட்டுக்குள் நுழைய முடியும். அப்படி நாட்டுக்குள் வந்தவர்கள் முதல் 14 நாட்களுக்கு வீட்டுக்குள் தம்மை சுயதனிமைக்கு உள்ளாக்கி கண்காணிக்கவேண்டும். எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் கடமையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா தோற்று சிறிய அளவில் இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் அவர்களை வீட்டிலேயே இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படியானவர்கள் 51,000 பேரைத் தாண்டியிருக்கிறது. அவர்களை தொலைபேசியில் வீடியோ மூலம் அடிக்கடி உரையாடி அவர்களின் நிலையைக் கண்காணித்து ஆலோசனைகளையும், சிகிச்சை முறைகளையும் வழிகாட்டி வருகிறார்கள். அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக எண்ணினால் அவர்களை கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்துவிடுகிறார்கள்.

முதல் இரு வாரங்கள் நடந்ததும் நோர்வே சுதாகரித்துக் கொண்டது. மார்ச் 13 அன்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. அன்றைய தினம் தான் முதலாவது நபரின் இறப்புச் செய்தியும் வெளியானது. அன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 996ஆக ஆகியிருந்தது. உலக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிலைமைகளை கணித்து நோர்வேயைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை அன்று விரைந்து எடுத்தது. ஆனால் இன்று வரை நோர்வே ஊரடங்குச் சட்டம் போன்ற எதையும் பிரகடனப்படுத்தவில்லை.

மாறாக முக்கிய பொது இடங்கள் அத்தனையையும் மூடியது. பாடசாலைகள், நாட்டின் அனைத்து தரத்திலான பாடசாலைகள், சிறுவர் நலக் காப்பகங்கள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், மட்டுமன்றி சினிமா தியேட்டர்கள், அனைத்துவித கலை கலாச்சார நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. தலை முடி திருத்தும் சலூன்கள், மசாஜ் நிலையங்கள்,  சலூன்கள், நீச்சல் தடாகங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.

தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், கொரோனாவிளிருந்து பாதுகாப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் தரப்படுத்தியிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நோர்வேயிலும் பிரகடனப்படுத்தியது. எங்கெங்கும் மக்களே சுய கட்டுப்பாட்டுடனும், சுய பாதுகாப்புடனும் தங்களை வீடுகளுக்குள் சுருக்கிக் கொண்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் நோர்வே எதிர்கொள்ளும் மாபெரும் அவசர நிலை இதுதான்.

இதே வேளை நோர்வேயின் முக்கிய பல பெருநிறுவனங்கள் வீழ்ச்சிகண்டன. ஒரு லட்சம் பேர் வரை தற்காலிகமாக வேலை நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு நோர்வே நிவாரணமளிப்பதாக அறிவித்தது. வேலை இழந்தவர்களுக்கும், தற்காலிகமாக வேலையின்றி வீடுகளில் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கமே சம்பளப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. நோர்வேயின் “இறையாண்மை செல்வ நிதி” (sovereign wealth fund) என்று அழைக்கப்படும் எண்ணெய் நிதியம் (Oil Fund) இலிருந்து பெருந்தொகையை கொரோனா நிலைமைகளை சமாளிப்பதற்கான கொரோனா பொதி “Korona-Pakke” ஒன்றை அறிமுகப்படுத்தியது. நோர்வே தனது எதிர்காலத்துக்காக பெருந்தொகை பணத்தை இந்த நிதியத்தில் சேகரித்துக்கொண்டு வந்தது. நோர்வேயின்  பிரதான வருமானமான எண்ணெய் உற்பத்தியில் சம்பாதித்துவந்த பெருந்தொகை பணம் இந்த நிதியத்தில் இட்டு வந்தது.

ஒரு புறம் கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகவும், சமூக நிவாரணத்துக்காகவும் பில்லியன் கணக்கான பணத்தை இறைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை எண்ணெய் விலையின் வீழ்ச்சியால் மேலும் மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. சென்ற வருடம் ஒரு அமெரிக்க டொலர் 7.5 குரோனர்களாக இருந்த பண மதிப்பு இந்த மாதம் 12 குறோணர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நோர்வேயின் பணப்பெறுமதியின் வரலாறு காணாத வீழ்ச்சியின் மத்தியிலும் பெருந்தொகையை செலவிட்டு நாட்டு மக்களின் நிவாரணத்துக்காக பெரும் விலை கொடுத்துக் கொண்டு வருகிறது நோர்வே. சிறிய, மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் இழப்பீட்டை சரி செய்வதற்காக மாத்திரம் 100 பில்லியன் குறோணர்களை (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஒதுக்கியிருப்பதாக பிரதமர் ஆர்ன சூல்பேர்க் கடந்த மாதம் 15 திகதி அறிவித்தார்.

ஆனால் இத்தனை பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் நோர்வே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக பல மில்லியன் குறோணர்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்கியது.இந்த ஆண்டு மாத்திரம் நோர்வேயின் வரவு செலவுத் திட்டத்தில் 5.5 பில்லியன் குரோனர்களை சர்வேதேச உதவிகளுக்காக ஒதுக்கியிருக்கிறது.

மக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக வருமானம் அவர்களுக்கு தடைபடாது. அது போல போதியஅளவு திட்டமிடப்பட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள், மக்களின் சு கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி என்பவை எல்லாமே சேர்ந்து கொரோனா பரவலையும், நோயாளிகளின் தொகையையும், இறப்பு எண்ணிக்கையும் குறைத்திருகிறது. இதுவே நாட்டு மக்களின் கொரோனா பீதியை தனித்திருக்கிறது என்று கூறவேண்டும். பெருமளவான நாடுகளோடு ஒப்பிடும் போது உளவியல் ஆரோக்கியம் இதனால் பேணப்பட்டிருக்கிறது. ஆனால் பரவும் வேகத்தையும், தாக்கத்தையும் இதை வைத்து கணித்து விட முடியாது. இனி வரும் நாட்கள் தான் அதிக ஆபத்தான நாட்கள் என்று எச்சரிக்கப்படிக்கின்றன.

இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்
உலகம் – 1,173,660 (63,943), நோர்வே -5553 (62), இலங்கை 166 (5)

எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்
சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க
நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே?
- பட்டினத்தார்
(இக்கட்டுரை 5.4.2020 தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)

“வயோதிபர்கள்” - கொரோனா டயரீஸ் - ஏப்ரல் 2 | என்.சரவணன் (ஒஸ்லோ)


1.5 மில்லியன் மக்கள் நோர்வேயில் கொரோனாவினால் பாதிக்கக் கூடியவர்களாக கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த 1.5 மில்லியன் மக்களில் யார் அடங்குகிறார்கள். இருதய நோய் உள்ளவர்கள், சுவாச நோயுள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் என ஒரு அந்தப் பட்டியல் தொடர்கிறது. இத்தகைய பிரச்சினைகள் அதிகம் உள்ளவர்கள் வயோதிபர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே இயல்பாகவே அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரையான இறப்புச் செய்திகளும் அந்தக் கணிப்பை உறுதி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்படி உடல் உபாதைகள் உள்ள வயோதிபர்கள் அல்லாதவர்களும் இதற்கு இலக்காகி வருகிறார்கள் என்பது உண்மை.

இந்த நாட்களில் எனக்கும் இருதயம், சுவாசம், நீரிழிவு இந்த மூன்று சிக்கலும் உள்ளதால் என்னை அதிகம் கவனமாக இருக்கும்படி டொக்டரும், நெருக்கமான நண்பர்களும் என்னை எச்சரித்து வருகிறார்கள். கடந்த மாதம் எனக்கு ஒரு இருதய சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் டொக்டர் தொலைபேசியின் மூலம் அழைத்து எனக்கு மீண்டும் ஒரு ஒப்பரேசனை செய்ய வேண்டும் என்றார். இருதயத் துடிப்பு குறைவாக இருப்பதை கடந்த சத்திரசிகிச்சையின் போது இனங்கண்டதாகவும் எனவே pacemaker மெசினை பொருத்தியாக வேண்டும் என்று அறிவித்தார். அடுத்த நான்காவது நாளே அதைச் செய்யப்போவதாகவும் நாள் குறித்துத் தந்தார். ஆனால் கொரோனா நிலைமைகள் காரணமாக நாட்டின் பல சத்திரசிகிச்சைகள் ஒத்திப்போடப்பட்டதால் இதுவும் ஏப்ரல் மாத இறுதிக்கு ஒத்தி வைப்பதாக மீண்டும் எனக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த கொரோனா காலத்தில்; கொரோனாவுக்கு அகப்படாமலேயே கொரோனா ஏற்படுத்திய பக்க விளைவுகளுக்கு பலியாவோர் தொகை கணக்கில் வருவதில்லை.
--0--

இன்று நானும் துணைவியும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம். திரைப்படத்தின் பெயர் “பாரம்”. மிகவும் துடிதுடித்துப் போனோம். தமிழ்நாட்டு கிராமங்களில் முதியவர்களை பிள்ளைகளே “தலைக்குத்து” என்கிற முறையின் மூலம் கொன்றுவிடுகிற மகா அவலத்தைத் பற்றிய திரைப்படம். தமது வீட்டில் தாய், தகப்பன் அல்லது தாத்தா, பாட்டி அல்லது வேறும் உறவினர்கள் முதியவர்களான பின் இயலாமல் போகிற காலத்தில் அவர்களை வைத்து பராமரிப்பது சுமை என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர். கொலைக் குற்றத்துக்கு அகப்படாமல் அவர்களை வேறு வழிகளில் கொன்று விடுகின்றனர். "எண்ணெய் வைத்து, இளநீர் கொடுத்து, தலையில் தண்ணீர் ஊற்றி கொல்லும் “தலைக்குத்து” என்கிற வடிவம் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை செய்வதற்காகவே கிராமங்களில் நிபுணர்கள் இருக்கிறார்கள்.

“தலைக்குத்து” மட்டுமன்றி இப்படி கொலை செய்வதற்கு 26 வகைகள் இருப்பதாக அந்தத் திரைப்படத்தில் ஒரு சம்பாசனை வருகிறது. இந்தத் திரைப்படத்தில் வயோதிபத்திலும் வைராக்கியத்துடன் செக்கியூரிட்டி தொழிலை செய்துகொண்டிருகிறார் திடகாத்திரமான தகப்பனார். அவர் வேலை முடிந்து, பேத்தியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு மகனின் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். வரும் வழியில் ஒரு மோட்டார் சைக்கிள் அவரை மோதிவிட்டு கடந்து விடுகிறது. விழுந்தவர் முதுகெலும்பு முறிந்து துடிக்கிறார். அவருக்கு சத்திர சிகிச்சை செய்தால் சுகப்படுத்தலாம் என்று டொக்டர்கள் கூறுகிறார்கள். அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்கிறான் மகன். தாசில்தாரிடம் கடிதம் வாங்கிக் கொண்டு போய் அரசாங்கத்திடம் கொடுத்து சிகிச்சைக்கான பண உதவியைப் பெறலாம் என்றும் அறிவுரை கூறுகிறார் டாக்டர். ஆனால் நான்கு நாட்கள் அலைந்துவிட்டு வந்து அவர்களுக்கெல்லாம் வரிசையாக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது நான் ஊரிலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று தகப்பனாரை அழைத்துக் சென்று விடுகிறான்.

இத்தனைக்கும் மகன் நல்ல தொழிலில் இருக்கும் நடுத்தர வாழ்க்கையை அனுபவிக்கும் ஒருவன். ஊரில் மருமகளின் வெறுப்புக்கும், கொடுமைக்கும் மத்தியில் துவண்டு போகிறார் கட்டிலில் கிடக்கும் தகப்பன். தனக்கு ஒப்பரேசனை செய்யுமாறும், மீண்டதும் அதற்கான பணத்தைக் கூட திருப்பித் தந்துவிடுவதாக தகப்பன் கெஞ்சுகிறார். ஆனால் இப்படியான கொலைகளைச் செய்யக்கூடிய ஒரு கும்பல் மகனை அணுகி சாகடித்துவிடலாம் என்று பேரம் பேசுகிறது. மகனின் ஏற்பாட்டுடன் தகப்பன் கொல்லப்பட்டுவிடுகிறார்.

அவரின் மருமகன் நியாயம் கோரி; இதற்குப் பின்னால் உள்ள மாபெரும் சதிகளை அறிவதற்கு புறப்படுகிறார். அங்கே அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்களை அறிகிறான். இறுதியில் இது ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க முடியாது என்று அரசியல் தலைவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர். போலீசார் நீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டு போகாமல் விசாரணையைக் கைவிடுகின்றனர். நிறுவனமயப்பட்ட அந்த பாரம்பரியச் சடங்கை எவரும் சவாலிட முடியாது என்பதாக கதை முடிகிறது.

விஜயகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தில் மனோரமாவை வில்லன் இப்படி “தலைக்குத்து” முறையில் கொல்வதாக ஒரு காட்சியை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அதுபோல இரு மாதங்களுக்கு முன்னர் “கே.டி என்கிற கருப்பு துரை” என்கிற ஒரு திரைப்படத்தையும் பார்த்தேன்.

அதில் கருப்புத்துரை தாத்தா கொலை முயற்சியில் இருந்து தப்பிப் போய் இன்னொரு அனாதைச் சிறுவனை சந்திக்கிறார். சொத்தை எழுதிக் கொடுக்காமல் தப்பிச் சென்று விட்ட தந்தையை தேடி கையெழுத்தை பெற்றுவிட்டு கொன்றுவிடுவதற்காக கூலிக்கு ஆளமர்த்துகிறார்கள் பிள்ளைகள். அவர்களிடமிருந்து ஒவ்வொருமுறையும் தப்பிச் சென்று அவர் வாழ் நாளில் அனுபவிக்க ஆசைப்பட்டவற்றை எப்படி அனுபவிக்கிறார் என்பது கதை. இறுதியில் தானாகவே மகனிடம் சென்றடைகிறார். சொத்தை எழுதிக்கொடுத்துவிட்டு அவர்கள் கொல்வதற்கு முன்னர் தப்பிச் சென்று விடுவதாக கதை முடியும்.

இப்போது மீண்டும் கொரோனா விடயத்துக்கு வருகிறேன்.

பாரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தப்பி வந்து தொழில் செய்து தன்னை தானே பார்த்துக்கொள்ளும் ஒரு முதிய தாய் கூறுவார்.
“என் மகன் ஒரு தினக்கூலிக்காரன் இனி அவனால் பார்க்க முடியாது. அவன் கையால் சாவதற்குப் பதில் நானே வெளியில் வந்து விட்டேன்.” என்பார்.

இன்னொரு இடத்தில் ஒரு முதியவர் “சில நேரங்களில் இருமவும் பயமாயிருக்கு, தும்மவும் பயமாயிருக்குப்பா... இனி இவர்களால் முடியாது என்று நினைத்து கொன்று விடுவார்கள் என்பதால் சாதாரண விசயங்களையும் ஒளித்து மறைக்க வேண்டியிருக்கிறது.” என்பார்.

இந்த நிலை தான் இப்போது ஏறத்தாள கொரோனா விடயத்திலும் காண முடிகிறது. முதியவர்களிடம் இருந்து தள்ளியே நில்லுங்கள் என்று உலகம் முழுவதும் ஆங்காங்கு பகிரங்கமாக எச்சரிக்கின்றனர். தமது பிள்ளைகளே பெற்றோர்களை கொலைஞர்களாக நடத்தும் நிலைமை இனியும் நிகழக் கூடாது. தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொண்டோ, அல்லது பிள்ளைகளால் தனிமைப்படுத்தப்பட்டோ பலர் இருக்கின்றனர். தமக்கு நேரும் சிறு சிறு உபாதைகளின் போதும்; கொரோனா தொற்றி விட்டதோ என்கிற பீதிக்கு உள்ளாகி கொரோனாவை விட மோசமாக சாகடிக்கும் உளவியல் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சென்ற வாரம் பெல்ஜியத்தைச் சேர்ந்த Suzanne selflessly என்கிற ஒரு வயோதிபப் பெண் தனக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ வசதியை (ventilator) மறுத்துவிட்டார். தான் வாழ்ந்து அனுபவித்த வயது, அதனால் வசதிகளும் பற்றாக்குறையும் நிலவும் இந்தக் காலத்தில் தன்னை விட இளமையானவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும்படி கூறி விட்டு மூச்சுத்திணறலை ஏற்றுக்கொண்டு இறப்பைத் தழுவிக்கொண்ட செய்தி நெஞ்சை நோகடித்தது.

வயோதிபர்களுக்கு முன்னெப்போதையும் விட அதிகமாக பராமரிப்பையும் அன்பையும் கொடுக்க வேண்டிய காலம் இது தான். இன்றைய வயோதிபர்களின் இடத்தில் நாளை நாங்கள். இன்றைய நமது பிள்ளைகள் நாளை நமது இடத்தில்.

இன்றைய கொரோனா : மொத்த தொற்றும் மரணமும்

உலகம் – 1,013,156 (52,982), நோர்வே -5160 (60), இலங்கை 151 (3)
"கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதி ஒன்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன"

சிங்களப் பண்பாட்டிலிருந்து (அணிந்துரை) - தில்லைநாதன் கோபிநாத்


வரலாறு கடந்த காலம் பற்றியது மட்டும் என்றால் மீண்டும் மீண்டும் எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால் வரலாற்றைக் கொண்டே நாம் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்கிறோம். எதிர்காலத்தைத் திட்டமிடுகிறோம். அவ்வகையில் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த நிகழ்காலத்தில் கடந்தகால வரலாறு அதிகாரங்களால் கட்டமைக்கப்படுகிறது.

இவ்வாறாக அதிகாரங்களால் கட்டமைக்கப்படுகின்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மாற்று வரலாறுகள் அவசியமாகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் எவற்றைக் கட்டமைக்கிறார்கள், எவற்றைக் கொண்டாடுகிறார்கள், எவற்றை மறைக்கிறார்கள், எவற்றைத் தவிர்க்கிறார்கள், எவற்றை அழிக்கிறார்கள் என்ற புரிதலும் அதற்கு மாற்றாக நாம் முன்வைப்பவை வேறு என்னவகையான அதிகாரங்களை உருவாக்கிவிடக்கூடும் என்ற கவனமும் மாற்று வரலாற்றுச் செயற்பாட்டாளர்களுக்கு அவசியமானவை.

வரலாறு ஒற்றைப் பரிமாணமுள்ளதல்ல. புதிய அறிதலுக்கும் அனுபவத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவகையில் வரலாறு தொடர்பான புரிதல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நூல், ஒரு பக்கம் அல்லது ஒரு வசனம் கூட இதுவரை நாம் புரிந்து கொண்டவற்றை முற்றிலும் மாற்றியமைப்பவையாக இருக்கலாம். அதனை ஏற்பதற்கான ஆய்வுநேர்மை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதேவேளை ஒன்றுக்கு மேற்பட்ட வரலாறுகள் நேர்மையானவையாக இருக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்டவை வேறொரு கோணத்தில் முற்றிலும் புதிய அர்த்தங்களைத் தரலாம்.

வரலாறு என்பது அடிப்படையில் நாம் அறிந்துள்ள தகவல்கள், அவற்றுக்கான ஆதாரங்கள், தகவல்களிலுள்ள இடைவெளிகள், அந்த இடைவெளிகளில் நாம் இட்டு நிரப்பும் தகவல்கள் அல்லது கற்பனைகள், அவ்வாறு தொகுத்துக் கொள்ளும் தகவல்களை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பதாக விரிவடைந்து செல்கிறது.

பல்வேறு ஒடுக்குமுறைகளையும் அகச்சிக்கல்களையும் எதிர்காலந் தொடர்பான தடுமாற்றங்களையும் எதிர்கொண்டு நிற்கும் ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தமது வரலாறுகளக் காய்த்தல் உவத்தலின்றிப் புரிந்துகொள்வதே அவர்களது எதிர்காலத்தைச் செதுக்குவதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.


இந்த நிலையிலேயே ஈழத்துத் தமிழ்ச் சமூகங்கள் தொடர்பான மாற்று வரலாற்றாசிரியர் எனும் பெரிய பொறுப்பினைத் தன்மேற் சுமத்திக் கொண்ட இடையறாத செயற்பாட்டளாரகச் என். சரவணன் மேலெழுகிறார்.

ஒரு வரலாற்றாசிரியராகச் சரவணன் தவிர்க்க முடியாத ஆளுமையாக அமைவதற்குப் பின்வருவன முக்கிய காரணங்கள் ஆகின்றன.
1. அவர் மாக்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ்த் தேசியம் தொடர்பான தீவிர எழுத்துச் செயற்பாட்டாளர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்போராலேயே ஒடுக்கப்படும் குரல்களை அவர் முன்வைத்து வருகிறார். அவ்வகையில் ஒரு மாற்று வரலாற்றாசிரியருக்குத் தேவையான சிந்தனை முறை அவருடையது.

2. தீராத விடாயுடன் தேடலே வாழ்க்கையாகத் தகவல்களைத் தேடும் ஓர் ஆவணக ஆய்வாளராக அவர் இருக்கிறார். ஓர் ஆய்வுக்கு அல்லது கட்டுரைக்குத் தேவையான தகவற் சேகரிப்புடன் அவர் நின்றுவிடுவதில்லை. ஒரு தகவலை நிறுவுவதற்குப் பல்வேறு ஆதாரங்களைச் சளைக்காமல் தேடி அவற்றை முன்வைப்பவராக இருக்கிறார். அவ்வகையில் தவறுகளைத் திருத்தவும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சவும் அவரால் முடிகிறது.


3. முன்முடிவுகளுடன் தகவல்களை அணுகாமல் மாற்றுச் சாத்தியங்களையும் கவனிக்கும் நேர்மை அவரது அணுகுமுறையாக இருக்கிறது. அவ்வகையில் அவர் எந்தத் தரப்புக்கும் விசுவாசியாக இல்லை. தான் எடுத்துக் கொண்ட பணிக்கே நேர்மையானவராக இருக்கிறார்.

4. தமிழையும் ஐரோப்பிய மொழிகளை மட்டுமில்லாமல் சிங்களத்தையும் நன்கறிந்தவராக இருக்கிறார். அவ்வகையில் பெரும்பாலான தமிழ் வரலாற்றாசிரியர்களுக்குக் கிடைக்காத தகவல் வளங்களை ஆராய்ந்து தம் முடிவுகளை அவரால் முன்வைக்க முடிகிறது.

5. சளைக்காத செயற்பாட்டாளராக இருக்கிறார். வாரந் தவறாமல் அவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு பெரிய பணியினை எடுத்து நிறைவுசெய்வதற்கான ஓர்மத்தைக் கொண்டிருக்கிறார்.
இத்தனை தகுதிகளுடன் அவர் வந்தாலும் அவர் நினைக்கும் துறைகளில் நினைக்கும் வேகத்தில் இயங்குவதற்கான புலமைத்துவச் சூழல் இதுவரை உருவாகவில்லை. ஏனெனில் அவர் எதிர்கொள்வது ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளை அல்ல; வரலாறே இல்லாத வெற்றிடங்களை. ஈழத்துத் தமிழ்ச் சமூகங்கள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள், திருப்பங்கள், நிகழ்வுகள் தொடர்பில் தமிழில் ஓரிரு கட்டுரைகளுக்கு மேல் எதுவுமே இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. அவ்வகையில் பல சமயங்களில் பாதைவெட்டிப் பயணம் செய்யும் நிலையையே அவர் எதிர்கொள்கிறார்.

சரவணனின் அடிப்படை ஆர்வமாக ஈழத்தின் அரசியல் வரலாறே அமைகிறது என நான் நினைக்கிறேன். காலனித்துவம், கொட்டாஞ்சேனைக் கலவரம், கண்டிக் கலவரம், நூற்றாண்டுத் துரோகம், சிங்களம் மட்டும் சட்டம், ஈழப்போருக்குக் காரணமாக அமைந்த இனவன்முறைகள் என்பதாக அவரது தேடலும் எழுத்துக்களும் விரிவடைகின்றன. இந்த எழுத்துப் பணியினை அவர் தொடர்ந்து சென்றால் காலனித்துவக் காலம் முதல் ஈழப்போரின் முடிவு வரையான முழுமையான வரலாறு ஒன்றினை அவரால் கட்டமைக்க முடியும்.

ஆயினும் அரசியல் வரலாற்று வெளியேயும் ஆழமான ஆய்வுகளை அவர் செய்தே வருகிறார். அவ்வகையில் சமூக, பண்பாட்டு வரலாற்றாசிரியராகவும் அவரது பங்களிப்பு விரிவடைந்திருக்கிறது.

”சிங்களப் பண்பாட்டிலிருந்து” என்ற இந்த நூல் அவ்வகையில் சரவணனின் எழுத்துச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைகிறது. இக்கட்டுரைகளில் சிங்களச் சமூகங்களில் சாதியத்தின் தாக்கம், பெண்களின் நிலை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இசை, திருமணச் சடங்குகள், பாலியல் வழக்குகள், அதிகாரப் போட்டிகள், பொருளாதாரம், இலக்கியம் எனப் பல்வேறு சமூக, பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்படுகின்றன.

சிங்களத் தேசியம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைப் புரிந்துகொள்வதற்குச் சரவணனின் இந்த எழுத்துக்கள் முக்கிய பங்களிப்புச் செய்யும் என நான் நம்புகிறேன். அத்துடன் அவர் செய்ய வேண்டிய பெரும் பணியொன்றின் தொடக்கமாக மட்டுமே இந்தத் தொகுப்பு அமைகிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும். தகவல் இடைவெளிகளை நிரப்ப வேண்டும். எழுதியவற்றை நூல்களாகத் தொகுத்துத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

சரவணனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

நூல்: சிங்களப் பண்பாட்டிலிருந்து
ஆசிரியர்: என். சரவணன்
பதிப்பகம்: குமரன் புத்தக இல்லம்

கொரோனா டயரீஸ் – ஏப்ரல் .1 - “குழந்தைகள்” | என்.சரவணன் (ஒஸ்லோ)

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. இன்றுடன் மூன்று வாரங்களுக்கு மேலாக நாங்கள் நால்வரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறோம். இன்றிலிருந்து இந்த நாட்குறிப்பை பதிவு செய்வது என்கிற முடிவுக்கு வந்ததற்குக் காரணம் நான் மட்டுமல்ல சில நண்பர்களின் வேண்டுகோளும் தான்.

எங்கள் வீட்டு கதவுகளும், ஜன்னல்களும் வெளியில் இருந்து காற்று கூட உட்புகாதபடி இறுக்கி மூடப்பட்டிக்கின்றன. குளிர் நாடென்கிறபடியால் பொதுவாகவே குளிரிலிருந்து பாதுகாக்க இப்படி குளிர் வராத அளவுக்கு மூடியிருப்பது எங்களுக்கு புதிதில்லை. ஆனால் இப்போது கொரோனா பீதியும் சேர்ந்து அந்தத் தேவையை இரட்டிப்பாக்கியிருக்கிறது.

உணவு
உணவின் சிக்கனத்தையும், உற்பத்தியையும், தன்னிறைவையும், அதன் தரத்தையும், பற்றி உலகமே உரையாடிக்கொண்டிருக்கும் ஒரு காலத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கிற காலத்தில் மலிவாகவும், வீட்டிலேயே இலகுவாக தானிய முளைப்பயிர் உற்பத்தி செய்வது குறித்த எனது அனுபவத்தை இன்று ஒரு காணொளியாக செய்து Youtube இல் ஏற்றி முகநூலின் மூலம் பகிர்ந்துகொண்டேன்.
ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, செரிமானத்துக்கு உதவக் கூடிய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய, இதய நோயுள்ளவர்களுக்கு உதவக் கூடிய ஒரு உணவு வகை இது. எளிமையான செலவு குறைந்த ஒரு உணவும் கூட. அதன் முக்கியத்துவத்தை சிலர் மெச்சினாலும் அந்தக் காணொளி பகிரப்படாதது சற்று வியப்பை அளித்தது. 

குழந்தைகள்
சுறுசுறுப்பாக எப்போதும் ஓடியாடி விளையாடும் என் குழந்தைகள் இருவரும் கூட வீட்டுக்குள்ளேயே சைக்கில் ஒட்டி விளையாடுகிறார்கள். இன்று 6 வயது ஜென்னியும் 3 வயது சோபியாவும் வீட்டுக்குள்ளேயே துணிகளை விரித்து அதில் பிளாஸ்டிக் உணவுப் பண்டங்களையும், விளையாட்டுப் பொருட்களையும் வைத்து பிக்னிக் போவதாக விளையாடுகிறார்கள்.

ஜென்னி பாடசாலையில் முதலாம் ஆண்டு வகுப்பை கடந்த ஓகஸ்ட் மாதம் தொடங்கினாள். கடந்த மார்ச் 13ஆம் திகதியிலிருந்து நோர்வேயில் பள்ளிகூடங்கள் மூடப்பட்டுவிட்டன. முதலில் இரு வாரங்களுக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அது ஏப்ரல் 13 வரை என்று நீடிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டிலேயே இங்கு Ipadஐ கொடுத்து விடுகிறார்கள். ஆரம்பத்தில் நான் கூட இதனை ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை. குழந்தைகளின் எழுதும் ஆற்றலை பலவீனப்படுத்தப் போகிறது, Ipad க்கு அடிமையாகப் (addict) போகிறார்கள், விளையாட்டுகளிலும், அவர்கள் விரும்பிய App களை நுழைத்து வீணாகப் போகிறார்கள் என்றெல்லாம் பயம் இருந்தது.

ஆனால் இதன் பயன்கள் நம் எண்ணத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறது. மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் அவர்களுக்கான பாடங்கள் அதில் உள்ளன. நோர்வேஜிய, ஆங்கில மொழிகள், கணக்கு, ஓவியம், இயற்கை உள்ளிட்ட பல வீட்டுப்பாடங்களையும் அவர்களுக்கு அதில் அனுப்பி விடுகிறார்கள் வீட்டில் இருந்து அதைச் செய்து முடித்ததும் நட்சத்திர அடையாளம் இட்டுவிட்டால் அது வகுப்பாசிரியருக்கு கிடைத்து விடுகிறது.

குழந்தைகள் வீட்டிலிருக்கும் இந்த நாட்களில் பாடசாலை இயங்குகிறது என்று தான் கூறவேண்டும். நாளாந்தம் குழந்தைகளுக்கான பாடங்கள் அனுப்பப்படுகின்றன. முடித்தவற்றை உடனடியாகவே பார்த்து ஆசிரியர் பதிலளித்துவிடுகிறார். அது மட்டுமன்றி அவர்களுக்கான உடல் பயிற்சிக்குரிய பாடங்களும் உண்டு. ஆசிரியர் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வீடியோ பதிவில் பகிர்கிறார். மாணவர் அதனை அப்படியே செய்து மீண்டும் வீடியோ பதிவாக திருப்பி அனுப்ப வேண்டும். இன்று Toilet Paper சுருளை வாளி ஒன்றில் மூன்றடி தள்ளியிருந்து பாதங்களில் வைத்து சரியாக வீசி இடுவதை செய்து அனுப்பியிருந்தார். ஜென்னியும் அதை அப்படியே செய்வதை வீடியோவாக எடுத்து அனுப்பினேன். கொடுக்கப்பட்ட பயிற்சிகள் உரிய நேரத்துக்குள் பாடங்கள் கிடைக்காவிட்டால் பெற்றோருடன் தொடர்புகொள்கிறார் ஆசிரியர்.

அரச தொலைக்காட்சியை தினசரி 9 -11 வரை பார்க்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு இந்த கொரோனா நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில் ஒன்று. தொலைக்காட்சியில் முதலாம், இரண்டாம் ஆண்டு கற்கும் குழந்தைகளுக்கு பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கதைகள், பாடல்கள், கேள்வி பதில்கள், கைப்பணிகள் செய்வது, சில எளிமையான விஞ்ஞான முயற்சிகள் எல்லாம் அதில் அடங்குகின்றன. இன்று ஆடுவதற்கான சில ஸ்டெப்களும் அதில் உள்ளடங்கியிருந்தது.

வகுப்பாசிரியர் புதன் கிழமைகளில் பெற்றோரோடு உரையாடுகிறார். வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு மாணவர்கள் அனைவருடனும் சேர்ந்து குழுவாக வீடியோ சம்பாசணை செய்கிறார்.

வகுப்பாசிரியருக்குப் பதிலாக பெற்றோர்களே பிள்ளைகளுக்கு வகுப்பாசிரியர்களின் இடத்தில் இருந்து கவனிப்பதால் பெற்றோர்களின் நேரமும் அதில் கடந்து விடுகிறது. சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கு இப்படி நேரம் போக்க வழி கிடைத்திருப்பது அவர்களை சோர்வில் இருந்தும் மீட்கிறது. குழந்தைகளுடன் இருக்கும் நேரம், அவர்களுடனான தொடர்பாடலை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு எல்லாம் நிறைவேறுகிறது.

நானும் துணைவியும் மாறி மாறி கற்பித்தல் உதவியை செய்து வருறோம். அதன் பின்னர் தான் சமையல். பெரும்பாலும் இந்த நாட்களில் கூட்டுச் சமையல் தான்.

சுயவதை நாடி...
ஆனால் செய்திகளை அடிக்கடி ஓடிச்சென்று பார்த்துவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்திக்கொள்வது விரும்பாமலே நடக்கும் கட்டாயப் பணி. ஒரு வகையில் சுயவதை தான்.  நிதமும் செய்திகளைப் பார்த்து உங்களை உளவியல் நோயாளியாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்கிற எச்சரிக்கையை அடிக்கடி பலரும் சொல்லத்தான் செய்கிறார்கள்.

எந்த நேரமும் இருக்கும் நாட்டின் நிலைமை குறித்து தேடச் செய்கிறது. கொரோனா எந்தளவு எங்களை அண்மித்துக் கொண்டிருக்கிறது என்கிற பீதியை கணக்கிட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.அடுத்தது உலக நிலையை அறிவது. அடுத்தது நம் சொந்த நாட்டின் நிலையை அறிந்து கொள்வது. உடல் இங்கிருந்தாலும் உயிர் நம் தேசத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறது. பின்னெப்படி ஆபத்தின் அளவையும், வடிவத்தையும், அளவிடாமல் இருப்பது. எனவே இந்த சுயவதையை தெரிந்தே செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய கொரோனா: மொத்த தொற்றும் மரணமும்
உலகம் - 932,613 (46,809), நோர்வே -4878 (44), இலங்கை 146 (2)
“நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அடுத்த கனமும் நகர்கிறோம்! நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்”

மலையகமும் கொரொனா நிவாரணங்களும் - மல்லியப்புசந்தி திலகர்


இது கொரொனா காலம். இந்த கொரொனா காலத்தில் மலையக மக்கள் நோக்கிய கவனம் அதிகம் திரும்பியுள்ளது. அதற்கு பிரதான காரணமாக சொல்லப்படுவது அவர்கள் நாட்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது. உண்மைதான். ஆனால் சாதாரணமான “நாட்கூலி” எனும்போது ஒரு உழைப்பாளர் தனது உழைப்பை வழங்கிய அன்றைய நாள்முடிவில் அதற்கான சன்மானமான கூலியைப் பெற்றுக்கொள்ளும் நிலை. ஆனால் தொட்டத்தொழிலாளர்கள் நிலை மாறானது. குறித்த மாதத்துக்கான தனது முதலாவது நாட்கூலியை நாற்பதாவது நாளே பெறும் முறைமை. ஒவ்வொரு மாத சம்பளமும் அடுத்த மாதம் 10 ம் திகதியே அவர்கள் கைக்கு வந்து சேரும். அத்தகையதொரு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறைமை நூறாண்டு காலத்திற்கு மேல் அங்கு நடைமுறையில் உள்ளது. இடையில் குறித்த மாதத்தின் 20 ஆம் நாள் ஒரு முற்பணம் வழங்கப்படும். அதில்தான் சம்பளம் கிடைக்கும் நாள்வரையான செலவுகளை சமாளிக்க வேண்டும். எனவே வழமையான சொல்லாடலில் மாதச்சம்ளக்காரர்களின் பொருளாதார கையறு நிலையைக் குறிக்கும் “மாதக்கடைசி” தோட்டத் தொழிலாளர் விடயத்தில் “மாதத்தின் முதல்வாரம்” என்பதே உண்மை. 1 முதல் 10 ம் திகதி வரையான அந்த நாட்கள் கடுமையானதாக இருக்கும்.

இந்த கொரொனா காலத்தில் அத்தகைய நாட்களை நெருங்கப்போகும் தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்த வாரம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. கடந்த மார்ச் 19 முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்த நாள் என்பது அவர்கள் “அட்வான்ஸ்” ( முற்பணம்) பெறும் காலகட்டம். அப்போதே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்ற புரிதலோடு ஆங்காங்கே நிவாரண விநியோகம் ஆரம்பித்தாயிற்று. அவை தொண்டு நிறுவனங்கள் செய்யும் அரசியலாகவும் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தனிநபர்கள் செய்யும் தொண்டாகவும் இருந்திருக்கலாம். எதுவானாலும் அவர்களது எண்ணம், முயற்சி பாராட்டுக்குரியது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அந்த உதவிகளுக்கு “மலையக மக்களுக்கு உதவி” எனும் மகுடம் வரும்போது மட்டுமே சில கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. எந்தவொரு தொண்டுநிறுவனமும் அல்லது அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தனி நபர்களோ இந்த மலையகம் முழுவதற்குமான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கும் வல்லமை கொண்டனவா? எனும் கேள்வி, அவர்களது நல்லெண்ண முயற்சிகளுக்கு அப்பால் ஒரு விமர்சனப் பார்வையோடு இதனை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தே இந்த பார்வையே தவிர அவர்கள் செய்வது தவறான செயல் என்பதல்ல.

இதில் தொண்டு நிறுவனங்களையும் பரோபகாரிகளையும் ஒரு புறம் வைப்போம். அவர்களது எல்லை அவர்களது பார்வை சார்ந்த பிரதேசம். அவை ஏதேனும் காரணங்களால் தெரிவுக்குள்ளாகி இருக்கலாம்.அந்த பிரதேசத்துக்கு செய்வதன் ஊடாக அவர்கள் ஆத்ம திருப்தி அடையலாம்.

ஆனால், அரசியல் யந்திரம் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகள் அத்தகைய அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல் தனிநபர்கள் அல்லது அமைச்சு அல்லது அரசினால் அதிகாரம் கொண்டவர்களாக நியமணம் பெற்றவர்கள் குறிப்பிட்ட எல்லைப் பிரதேசத்தைச் சார்ந்து மட்டும் நிவாரணம் வழங்குவது அந்த மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போர் என்ற வகையில் அதன் தார்மீகத்துக்கு உரியதா எனும் பெரும் கேள்வியை ஏற்படுத்துகிறது.

அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியோ எதிர்கட்சியோ அரசுடன் செயற்படும் வல்லமை கொண்டன. ஆளுந்தரப்பாக இருந்தால் அரச இயந்திர பொறி முறைகளையும் நிதி வளத்தையும் கொண்டு சேர்க்கும் வல்லமையும், அதுவே எதிர்கட்சியாயின் அவற்றைக் கேட்டு குரல் எழுப்பும் வல்லமையும் கொண்டிருத்தல் வேண்டும்.

மலையகப் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இந்த அரச இயந்திர பொறிமுறை – நிதிவளம் நீக்கப்பட்டு தோட்டக் கம்பனிகளிடம் தங்கியிருக்கும் நிலை அதன் வரலாறு தொட்டே இருந்து வருவது. குறிப்பாக சுதந்திர இலங்கையில் 1948 ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டதோடு சட்டம் ஊடாகவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் தொழில் செய்யும் தோட்ட நிறுவனங்களே அதன் சமூக யந்திரமும் என்ற நிலை. அரிசி – மா- மண்ணெண்ணை – மாசி – பருப்பு முதல் வீட்டிற்கு வெள்ளையடிக்கும் சுண்ணாம்பு மற்றும் கல்வி சுகாதாரம் வரை. அவற்றை எல்லாம் தோட்ட நிர்வாகத்திடம் பெற்றுக்கொடுக்கப் போராடுவது தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த மக்களுக்கு “தொழிற்சங்கங்களே” துணை. அந்த பழக்கம் பண்பாடுதான் இன்றுவரை.

எனினும் காலத்தின் போக்கில் பறிக்கப்பட்ட வாக்குரிமை கிடைக்கப்பெற்றதோடு பாராளுமன்ற பிரதிநிதிகளாகி அமைச்சர்களாகி அரச யந்திர பொறிமுறையை நிதி வளத்தை அந்த மக்களுக்காககப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை பெற்று இன்று நாற்பது வருடங்களாகின்றன. கிராமிய கைத்தொழில், உல்லாசப்பயணம், புடவைக்கைத்தொழில், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, தபால், கைத்தொழில் பயிற்சி, நீதி, சமூக அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, புதிய, அரச கரும மொழிகள், இந்து கலாசாரம் என இன்னோரன்ன அமைச்சுப் பதவிகளையெல்லாம் அமைச்சர் அந்தஸ்துடனோ அல்லது அரை குறையாக ராஜாங்கம், பிரதியாகவோ அந்த மக்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டு நான்கு தசாப்தங்கள் ஆகின்றன. ஆனாலும் இன்னும் தொண்டு நிறுவனங்கள் துணையோடு தான் அவசர நிவாரணங்கள், தோட்டத்துரையோடு பேசித்தான் அமுலாக்கல் படிமுறைகள் என்றால் அவர்களின் அரசியல் கேள்விக்குரியதாக அமைவது வாஸ்தவமே.

இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்ட அரசியல் அணியாக அடையாளம் காணப்பட்டதே தமிழ் முற்போக்கு கூட்டணி. நாற்பதாண்டு கால அமைச்சுப்பதவிசார் அரசியலில் நான்கு வருடங்களே கூட்டணிக்குச் சொந்தம். இந்த நான்காண்டுகள் என்பது அரச யந்திர பொறிமுறையை பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கொண்டு செல்லுவதற்கு தடையாக இருந்த பிரதேச சபைச் சட்டத்தை திருத்தத்தை கொண்டுவந்ததும், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய கிராமங்களை அமைப்பதற்கான அதிகாரசபை சட்டத்தை நிறைவேற்றியதும் மாபெரும் வெற்றியே. இந்த இரண்டு தவிர்ந்த ஏனைய பல அடைவுகள் உண்டெனினும் இந்த அவசர நிலையில் இந்த இரண்டையும் எடுத்துக் கொள்வோம்.

பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர் தோட்டப்பகுதிக்கும் சேவையாற்றவேண்டிய பிரதேச சபைகள் அனைத்தும் அதனை உள்வாங்கிக்கொண்டனவா? அல்லது அதற்கு போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றனவா? நோர்வூட், கொட்டகலை பிரதேச சபைகள் பெருந்தோட்டப் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது போன்று மாத்தளை மாவட்டத்தில், மொனராகலை ( உதாரணமாக) மாவட்டத்தில் ஏன் குறைந்தபட்சம் நுவரஎலியா மாவட்டத்தின் ஹங்குராங்கத்தை பிரதேச சபையைக் கொண்டு அதனைச் செய்வதற்கான அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்த முடிகின்றதா?

அதிகார சபை சட்டத்தைக் கொண்டு வந்தமை பெரும் வெற்றி என்றால் இந்த இக்கட்டான கொரொனா இடர் காலத்தில் அந்த அதிகார சபையைக் கொண்டு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் என்ன? . உடனே ஒரு பதில் வரலாம். அது இன்னும் நிறுவப்படவில்லை. அதன் கிளைகள் இல்லை. அதன் நிர்வாகம் முறைமைப்படுத்தப்படவில்லை. இத்யாதி காரணங்கள். அப்படி இல்லை. தற்போதைய சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் வர்த்தமானி ஊடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரகாரம் அந்த நிறுவனத்தை இயக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிகார சபை இயக்கம் பெறுவதற்கு மிகப் பொருத்தமான காலகட்டம் இதுவேயாகும். காரணம், இத்தகைய இடர் என்றவுடன் எல்லோரும் கவலைப்படும் அந்த “மலையகம்” அல்லது “பெருந்தோட்டப் பிராந்தியம்” எதுவென அதிகார சபை சட்டத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.( 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்கச்சட்டம்)

“ பெருந்தோட்டப் பிராந்தியம் என்பது, தேயிலை, றப்பர்,தெங்கு மற்றும் பாம்ஒயில் எந்தத் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றனவோ அந்தத் தோட்டங்களில் வதிவுள்ள தொழிலாளிகள் வாழ்கின்ற , மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமத்தி மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் அடங்குகின்றவையுமான இடப்பரப்புகள் என்று பொருளாகும்”.

இந்த வரைவிலக்கணம் மூலம் “மலையகம்” எனும் பகுதி எது என சட்டத்தினால் அடையாளப்படுத்தப்படுவதோடு மலையகம் என உணரும் பிரதேசங்களில் அரச பொது நிர்வாகப் பொறிமுறையைக் கொண்டு வருவதற்கு அதிகார சபைச் சட்டம் இடம் அளிக்கிறது.

இந்த அதிகார சபையின் இரண்டு குறிக்கோள்கள் இங்கு பிரதானமாக சுட்டிக்காட்டப்படவேண்டியது.

1.பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் குறித்த இடத்தில் ( தோட்டத்தில் ) உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக நீரோட்டத்தில் சேர்ப்பதனை உறுதி செய்தல் .

குறித்த இடத்தில் ( தோட்டத்தில் ) உள்ள பெருந்தோட்ட சமுதாயத்தினர் தேசிய அபிவிருத்தி செயல்முறைக்கு பங்களிப்புச் செய்வதனை இயலச்செய்யும் பொருட்டு சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு அதிகாரமளித்தல்.( Empower)

இத்தகைய குறிக்கோள்கள் கொண்ட அதிகார சபையின் நிர்வாகக்கட்டமைப்பு பின்வருமாறு அமைகிறது

  1. விடயதானம் குறித்து ஒதுக்கப்படும் அமைச்சின் செயலாளர்( தற்போது சமூக வலுவூட்டல் அமைச்சு ) இந்த அமைச்சரினால் நிதி மற்றும் மாகாண நிர்வாக அனுபவம் கொண்ட நிபுணர்கள் அறுவரில் ஒருவர் பெருந்தோட்டத்துறை கம்பனிகள் சார்ந்தவையாகவும் இருப்பார். இந்த அறுவரில் ஒருவரே நிர்வாக சபைத் தலைவராகவும் இருப்பார்.
  2. நிதி அமைச்சின் செயலாளர்
  3. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர்
  4. அரச பொது தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளர்
  5. மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
  6. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர்
  7. காணி அமைச்சின் செயலாளர்.
மேற்படி அமைச்சு செயலாளர்களை அமைச்சுக்களுக்கு நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியது. எனவே அதிகார சபையின் நிர்வாக சபையைக் கூட்டினால் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர்கள் அல்லது அவரது பிரதிநிதி தீர்மானம் எடுக்கும் நிலை அங்கு உள்ளது. அவர்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக அறிக்கையிடும் சூழல் உருவாகலாம். அதிகார சபையின் செயற்பாட்டுப் பிரதேசம் எதுவென்றும் சட்டத்தில் குறிப்பிடப்படுவதால்,

இன்றைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு கீழ் நேரடியாக இயங்கக்கூடிய சட்டரீதியான நிறுவனமாக “மலையக அதிகார சபை “ இருக்கின்ற பொது முழு மலையகத்துக்கும் ( சட்ட வரைவிலக்கணப்படி) நிவாரணம் வழங்க வேறு ஒரு பொறிமுறை இல்லை என்பதே உண்மை.

அதிகார சபையின் நிதி அதிகாரங்களைப் பொறுத்தமட்டில் “அதிகார சபையானது தனது சொந்த நிதியத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியையும், அதிகார சபையின் அதிகாரத்தைக் கொண்டு திரட்டக்கூடிய நிதிகளும், எம்மூலத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய கடன்கள், நன்கொடைகள், மற்றும் மானியக் கொடைகள் போன்றவற்றை அதிகார சபையின் நிதியாகக் கொள்ள முடியும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மலையக மக்கள் மீது அக்கறை கொண்டு கொடை வழங்க முன்வரும் யாரிடமும் அதனைப் பெற்று அரச யந்திரப் பொறிமுறையையும் நிதிவளத்தையும் கூட கையாண்டு பிரதேச செயலகங்கள் ஊடாக பெருந்தோட்டத்துறை சமுதாயத்துக்கு (அவர்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும்) கொரொனா காலத்தில் உதவக்கூடிய வழிமுறை, அதிகார சபையை முறையாக கையில் எடுப்பதே.

இந்த ஏப்ரல் மாதமும் அடுத்துவரும் மே மாதமும் கொரொனாவின் தாக்கம் மலையகப் பகுதிகளில் பெரும் வாழ்வாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அப்போது, இப்போது கொடை வழங்கும் தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட அரசியல் நபர்களும் தமது பணி நிறைவுபெற்றுவிட்ட உணர்வோடும் பெருமிதத்துடனும் இருக்கக் கூடும். ஆனால் உண்மை அதுவாக இருக்காது. மார்ச் மாதம் “அட்வான்ஸ்” பணத்தில் ஓடியவர்கள் கொரொனா அச்சத்தில் குறைவாக வேலை செய்தவர்கள் பொருளாதார ரீதியாக பெருஞ்சிரமங்களை எதிர்கொள்ளும் நாட்கள் நம்முன்னே.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

பரந்துபட்ட மலையகத்துக்கு ஒரு வரைவிலக்கணமும் அதன் எல்லைப் பிரதேசமும் சட்ட முறைப்படி எழுதப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு, அதுவே அரசாங்கத்தின் அமைச்சு செயலாளர்களுடன் இணைக்கப்பட்ட ( நிதி அமைச்சு உட்பட) நிர்வாக கட்டமைப்பையும் கொண்ட அதிகார சபையாகவும் உருவாக்கப்பட்ட பின்னரும் அதனைப் பயன்படுத்த ஆளும் அரசாங்கத்தில் அதிகாரம் கொண்ட மலையகத் தரப்பு முன்வராவிட்டால், அதற்கு போதுமான அழுத்தத்தை தற்போதைய (மலையக) எதிர்கட்சிகள் வழங்காமல் விட்டால் வரலாறு ஒரு போதும் இந்த மக்களின் அரசியல் தலைமைகளை மன்னிக்காது.

நன்றி - தினக்குரல்

இலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா

இக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர்களால் 1980இல் வெளிக்கொணரப்பட்ட பொதிகை ஆண்டு மலரில் வர்த்தகமானி 1ம் வருட மாணவர் மா. நாகராஜா எழுதிய கட்டுரை.
அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்கள் இலங்கையிலுள்ள பல்வேறினங்களிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையும் ஒரு தேசிய இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அது பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதே சமயத்தில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இம் மக்கள் எத்தகைய பொருளாதார அடிப்படையையும், எவ்வாறான சமூக இருத்தலையும், அரசியல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டுளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றது

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடிப்படையில் பிரித்து ஆராய்ந்து பார்க்கலாம் அப்பிரிவினை அவர்களின் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.
1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வரட்சியின் பாதிப்பினால் நேரடியாக யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.

2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைந்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.
இப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களின் வாழ்க்கையினைப் பொருளாதார அடிப்பபடைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது. உண்மையில் அதுவே அடிப்படையாக அமைகின்றது அத்துடன் இவர்களிடமும் வர்க்க முரண்பாடு காணப்படுகின்றது. இவ்வர்க்க முரண்பாடு இந்தியாவிலிருந்து வரும்போதே உடன் இந்த வர்க்க முரண்பாடாகும். ஏனெனில் இந் தியாவிலிருந்து வந்த ஒரு சாரார் கூலித் தொழிலாளர்களாகவே வந்தனர். இக் கூலித் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மலையகத்துப் பெருந்தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏனையோர் உதிரிகளாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நகர்ந்தனர். இந்திய மலையாளிகள் தனிநபர்களாகவே இங்கு வந்தனர். இதனுல் இங்குள்ள சமூகங்களுடன் இணேவது அவர்களுக்கு இலகுவானதாக அமைந்தது. ஏனையவர்கள் குடும் பங்களாகவே இங்கு வந்தனர். இவர்களைச் சுரண்டப்படும் வர்க்கத்திற்குள்ளேயே அடக்கப்படவேண்டியதாகும். பிறிதொரு சாரார் சிறு தொகையினராக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகவே மூலதனத்துடன், இங்கு வந்தவர்களாகும். இவர்களைச் சுரண்டும் வர்க்கத்திற்குள் உள்ளடக்கப்படவேண்டியதாகும். எனவே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களிடையேயும் வர்க்க முரண்பாடுகள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.

இங்கு வடபகுதியில் வசிக்கும் நிரந்தர இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அடிப்படை வாழ்க்கை அமைப்பில் வர்க்க முரண்பாட்டுடன், சாதி அமைப்பு முறை யில் சில எச்சங்களும் காணப்படுகின்றன. இங்கு நகர சுத்திகரிப்புப் போன்ற தொழில்களைச் செய்யும் இந்திய வம்சாவளித் தமிழினமக்கள் இந்தியாவிலிருந்துவந்த ஹரிஜன மக்களாவர். இங்கும் அவர்கள் தமது பாரம்பரியத் தொழிலையே செய்கின்றனர். நாடு மாத்திரம், பெயர்ந்துள்ளனர். அத் துடன் இந்தியாவில் எப்படியயன சமூக மட்டத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்ட்டார்களோ அதிலிருந்து எள்ளளவும் அவர்கள் நிலை வடபகுதியிலும் மாறவில்லை. அதேவிதமான அடக்குமுறை தான் இங்கும் பயன்படுகிறது. அத்துடன் பிராஜா உரிமையற்ற மக்களாக இருப்பதனால் பொருளாதார ரீதியில் அதிகளவில் தாக்கப்படுகின்றனர்.

இந்த ஹரிஜன மக்களைவிட, மற்ற இனக் கீழ்மட்ட வகுப்பினர், இங்கு பல் வேறு தொழில்களைச் செய்கின்றனர். அவர்களும் இங்கு கூலித் தொழிலாளர் களாகவே இருப்பதுடன் உதிரிகளாகவே உள்ளனர். நிரந்தரமான இக்கூலித் தொழி லாளர்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்யமுடியாத மட்டத்திலேயே காணப்படுகின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான போராட்டம் முடிந்தபாடில்லை. இதனால் சுரண்டப்படும் தன்மை மிக அதிகளவில் இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது.

அடிப்படைத் தேவையில் ஒன்றான குடியிருப்புக்கள் நிரந்தரமானவையாகவோ, உரிமையுடையனவாகவோ காணப்படுவதில்லை. அத்துடன் அடிக்கடி இடம்பெயர்ந்து தான் இவ்வம்சாவளி மக்கள் வசிக்கின்றார்கள். மலையகத்து மக்களுடைய வாழ்விடங்கள் எந்த மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுகின்றனவோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான நெருக்கமான இடப் பற்றாக்குறை கொண்ட இருண்ட வாழ்விட வசதிகளையே இவர்களும் கொண் டிருக்கிருர்கள். அத்துடன் இவ்வம்சாவளி மக்கள் இப்பிரதேசத்தை நிரந்தரமான வாழ்விடப் பிரதேசமாகக் கொள்ளவில்லை. ஏனெனில், இப்பிரதேசத்தின் இலங்கை வம்சாவளித் தமிழின மக்களுடன் இன்னமும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இங்கு தமிழ்மொழி பேசப்பட்டாலும் இதனையும் அந்நியப் பிரதேசமாகவே கருதுகின்றனர். அத்துடன் அரசியல் ரீதியிலான இனப் பிரச்சினை, இனக் கலவரங்களினால் வடபகுதியையும் நிரந்தரமற்ற வாழ்விடப் பிரதேசமாகக் கருதி, இந்தியா செல்லவே பலர் விரும்புவதனுல் இலங்கைப் பிரஜாவுரிமை பற்றிய விபரங்களில் அதிக அக்கறை கொள்வதில்லை. இதனால் இங்கிருக்கும் வரை எப்படியாவது எத்தொழிலைச் செய்தாவது இருந்துவிட்டு, இற க் கும் நாளுக்காக இந்தியா செல்வோம் என்னும் மனப்பாங்கு அவர்களின் அடிப்படை வாழ்விடப் போராட்டத்தை இன்னமும் முடிந்தபாடாக இல்லை" இந்நிலையில் சொந்தக் காணி பெற்றுக்கொள்வதை நினைத்துப் பார்க்கமுடியாது.

மேலும் வடபகுதியில் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் தொழில் ரீதியில் இழிவுக் கூலி மட்டத்திலும் பார்க்கக் குறைவான கூலியையே பெற்றுக்கொள்கின்றனர். ஒரு சாரார் ஒரளவு வருமானம் பெற்றாலும் அப்படைத் தேவைகளும் போதுமானதாகவில்லை. வரத்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் கணக்குப்பிள்ளை, தச்சுவேலை செய்வோர். நகைத் தொழிலாளர் போன்ருேர் இம்மட்டத்தவர்களாவர். இதனைவிடக் கடைகளில் சிப்பந்திகளாகவும், வீடுகளில் வேலைக்காரர்களாகவும் தொழில்புரியும் நபர்கள், மலையகத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழின மக்களாவர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் வடபகுதியில் வாழும் நிரந்தரமான இந்திய வம்சாவளி மக்களிலும் பார்க்க வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர். அதாவது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இப்பிரதேசத்தின் மக்களுடன் தொழில் ரீதியில் சார்ந்திருக்கும் தன்மை காணப்பட சிப்பந்தி ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள் இப் பிரதேசத்தின் மக்களுக்குக் கீழ்ப்பட்டு அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. அதே சமயத்தில் இந்திய வம்சாவளிப் பிராமணர்கள் இப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய மக்களாக இங்குள்ள பிராமணர்களிலும் பார்க்க மேம்பாடுடையவர்கள் எனப் போற்றப்படுகிறர்கள். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இதற்குக் காரணம் இங்குள்ள சாதிக் கருத்துக்களே. அரசாங்கத் தொழில்களைப் பொறுத்தவரையில் பிரஜாவுரிமையற்ற காரணத்தினுல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் வடபகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின் மக்கள், அடிப்படையில் போதியளவு உணவு, நிரந்தர இருப்பிட, உடை, வசதிகனையோ, கொண்டிருக்கவில்லை. தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங் களைக் கொண்டிருப்பதனல் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்ககை இன்னமும் அடிமட்டத்து உயிர் வாழ் தற்கான போராட்டமாகவே உள்ளது. இதற்குப் பிரஜாவுரிமையற்றவர்கள் என்பதும், பிரதேச மக்களுடன் இன்னமும் ஒரு மட்டத்திலானவர்கள் என்ற நிலைப்பாடும் இல்லாதவர்களாகும்.

இவ்வம்சாவளி மக்களின் சமூகவுணர்வு இவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளி ஞலும், பிரதேசத் தமிழ் இன மக்களின் செயற்பாடுகளினலும் உருவாக்கப்படுகின்றது. இவ்வடிப்படைப் பொருளாதார அமைப்பு இலங்கையிலும், இந்தியாவிலேயும் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச ரீதியில் முதலாளித் துவ ஏகாதிபத்தியமும், அதனுடைய கால னித்துவக் கொள்கையும், இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிரதேச மக்களின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.

இவர்கள், இங்கே வடபகுதியில் அநாதரவான நிலைமையையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இச்சமூகம், பல்வேறு சாதி, தொழில், குழுக்களாகப் பிரிந்து, பிரதேச மக்களுடன் சேரமுடியாத சமூகப் பிரிவுணர்வுகளுடன், அரசியல் ரீதியில் பிரஜாவுரிமை அற்றவர்களாக, நாடு அற் றவர்களாகத் தவறுசெய்த கைதி போன்ற குற்றவுணர்வுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பதைக் காணலாம். இவ்வுணர்வுகள் பிரதேச மக்களிலிருந்து பிரிந்து வாழும் மனப்போக்கையே பிரதிபலிக்கின் றன. உதாரணமாக, ஒரு சம்பவத்தில் அவன் குற்றவாளியாயிருந்து, பிரதேச மக் களிற் பல ரா ல் தாக்கப்படும்பொழுது தான் நாடற்றவன் என்பதினல், "அடித்தால் யாரும் தட்டிக்கேட்பதற்கு முடியாது, அதுதான் பலர் சேர்ந்து அடிக்கிறார்கள்" எனக் கருதுகின்ருன். உண்மையில் அச்சம் பவத்தித்கு யார் பொறுப்பாக, குற்றவாளி யாக இருந்தாலும், இவ்வாறே தாக்கப்படுவார்கள் என்பதனை அவன் உணர்வதில்லை. இது அவனிடமுள்ள தாழ்வுமனப்பான்மை யினுல் ஏற்பட்டதாகும்.

இத்தாழ்வு மனப்பான்மை மாத்திர மல்ல, அவர்களிடமுள்ள மரபு ரீதியிலான புழக்கவழக்கங்கள்கூட அருகிவருகின்றன, ன்கவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் விருப்பமின்மை என்பதல்ல. அவர்களின் அடிப்படைத் தேவையின் உக்கிரமான போராட்டமும், பிரதேசச் சூழலும் மரபுகளைப் போற்றுவதற்கோ அல்லது பின் பற்றுவதற்கோ இடமளிப்பதில்லை. அத்துடன் அவற்றைக் கைக்கொண்டாலும் பல பிரதேசப் பழக்கவழக்கங்களையும் கையாண்டிருப்பதைக் காணலாம்.

இம்மக்களின் குடும்ப உறவுகள் சிதைவடைந்தே காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வரும்யொழுதே கணவனைப் பிரிந்து வந்த மனைவி, மனைவியைப் பிரிந்துவந்த கணவன், சகோதரர்களைப் பிரிந்து வந்தவர்கள், உறவினர்களைப் பிரிந்து வந்தவர்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. இங்கு வந்த பின்னர், இங்கு வந்த சாதி உறவுகளுக்குள் புதிய உறவுகள் ஏற்படுத்தப்ப டன. அவ்வுறவுகளின் சேர்க்கைகள் பின் னர் மீண்டும் உடைந்து, குடும்ப நபர்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழும் தன்மை ஏற்பட்டது. இதனல் அவர்களின் குடும்ப உறவுகள் இறுக்கமான பாசப் பிணைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. திருமண உறவுகளின் எதிர்பார்ப்புக்கள் இவர்களிடம் அதிகளவு ஆர்வத்திற்குரியதாக, இலட்சியமானதாக, கனவு காணக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. ஆண் பெண் திருமண உறவுகளை அவதானிக்கும்போது பல வேறுபாடுகளைக் காண முடியும் வயோதிபமடைந்த ஆண், வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்யும்போது அவனுடைய முதல் மனைவி பிறிதொரு நபருடன் வாழும்பொழுதும் மூத்த மகனே அல்லது மகளோ தன்னுடைய குழந்தைகளுடன் தகப்பனின் இத்திருமணத்தை நடத்திவை பார்கள். அது மாத்திரமல்ல, சாதியை பாதுகாக்கப் பெண்களுக்கு இளம் வயதிலும் திருமணம் செய்யப்படும், சிறுவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் வாலிபப் பருவம் வந்தவுடன் திருமணங்கள் முடிந்துவிடும். அவை காதல் திருமணங்கள் என்றோ பெற்றோர்கள்  பார்த்தவை என்றே, சீதனம் பெற்றுக்கொண்டோ நடைபெறுபவையல்ல. மாறாக அப்போதிருந்த சூழ்நிலையின் வசதியில் இவை முடித்துவிடப்படுகின்றன. இதனுல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தமும், அவற் றுக்கான விளக்கங்களும் இவர்களின் திரு மண விடயங்களில் இவர்களினால் ஆராயப்படுவதில்லை. அவை பற்றி அக்கறை செலுத்தப்படுவதுமில்லை. இத்துரதிர்ஷ்டங்களுக்கு யார் பொறுப்பாளிகள்? அத்துடன் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், இப் பிரதேச மக்களுடன் மேற்கொள்ளுகின்ற திருமண உறவுகளும் ஒருபக்கச் சார்புடை யதே ஆகும். அதாவது இவ்வம்சாவளி மக் களின் ஆண்கள் தான் இலங்கை வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். பிரதேச இலங்கை வம்சாவளி ஆண் கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் இங்கு நிலப்பிரபுத்துவத்தின், சொத்துடைமையின் எச்ச சொச்சங்கள் பெண்களுக்குச் சீதனப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனால் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் ஆண்கள் பிரதேசத்தின் இலங்கை வம்சாவளிப் பெண்களைச் சீதனம் இன்றி, அல்லது குறைந்தளவில் சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். இவை இலங்கைப் பிரஜை உரிமை பெறுவதற்காகவும் நடைபெறலாம். ஆனால் இத்திருமணங்கனை எடுத்துப்பார்த்தாலும் அ வை சிதைந்து போன உறவுகளிலிருந்தே ஏற்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள் ஆண் துணையற்ற குடும்பங்கள், விதவைகள், கீழ்மட்டத்துப் பெண்களாகவே அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் பிரதேச இலங்கை வம்சாவளி ஆண்கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத திருமணம் செய்துகொள்ளாமைக்கு அவையே காரணங்களாகவுள்ளன. திருமணம் செய்வதாக இருந்தால் சீதனம் இவர்களால் கொடுக்க முடியாது. அத்துடன் திருமணம் நடை பெற்றாலும் அடிமட்ட இலங்கை வம்சாவளி ஆண்களுக்கும், மனைவி அற்றவர்களுக்கும் வயோதிபம் அடைந்தவர்களுக்கும் மட்டுமே நடைபெறும். ஆகவே, இல்வினத்தைப் பொறுத்தமட்டில் திருமணம், விருப்பங்களையோ, ஆசைகளையோ பொறுத்ததல்ல. மாறாகப் பொருளாதாரங்களைப் பொறுத்ததாகும்.

மேலும் இம்மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமையினல் குடும்பத்தில் உள்ள சகலரும் தொழில்களில் ஈடுபடும் நிலை உள்ளது. சிறுவர்கள் தங்களுக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாகச் சிறு வயதில் சமூகப் பாதுகாப்பின்மையினல் வெம்பி முதியவர்கள் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்குரிய கல்வி வசதி கிடைப்பதில்லை. பெற்றோர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சில பாடசாலைகள் இவர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. படித்தும் பயன் இல்லை என்பதனல் சிறு வயதிலேயே தொழிலுக்கு அனுப்பப்படுகின் றனர். அத்துடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலுக்குப் போகின்றனர், எனவே பொருளாதாரத் தேவை அவர்கள்

எல்லோரையும் உழைக்கும் நிர்ப்பந்தத்திற் குள் தள்ளிவிடுகிறது. இதனல் இவ் இந்திய வம்சாவளி மக்களின் சமூக உணர்வானது இந்தப் பிரதேசத்தைத் தனக்குச் சொந்த மானது என்னும் மனப்பான்மையை ஏற் படுத்தவில்லை. அத்துடன் இவர்களிடம் எம் பொழுதுமே விரக்தி மனப்பான்மையே காணப்படுடுறது. தாங்கள் தனிமைப்பட்டவர்கள் என்பதாகவும், தாங்கள் பின்தங்கியவர்கள் என்பதாகவும் கருதுகின்றனர். இவர்களைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியின ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந் நாடுகளின் இந்திய வம்சாவளியினர், அந் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்பன கிடைப்பதஞல் அந்நாடுகளைத் தங்களுடைய சொந்த நாடாகவே கருதுகின்றனர். அவர்கள் பொருளாதார நிலையும் உயர்வானது. ஆனல் அவ்வுணைர்வு வடபகுதியில் வாழும் இந்திய வம்சாமளியினரிடம் இல்லாதிருப்பதைக் குறித்து வியப்படைவதற்கொன்றுமில்லை.

இவ்வின மக்களிடமிருந்து கலையுணர்வுகளையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியாது. இற்றைவரைக்கும் வடபகுதி இந்திய வம்சாவளி மக்களால் படைக்கப்பட்ட எந்தவித நாவ்லகளேயோ, சிறுகதைகளையோ, வேறு இலக்கிய வடிவங்களையோ இனங்காணமுடியாது. ஆனால் மலையகத்து இந்திய வம்சாவளி மக்களிடமிருந்து பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றியிருப்பதை அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் அவர்களும் பிரஜரவுரிமை அற்றவர்களாக இருந்தாலும், பொருளா தார ரீதியில் ஓர் அடிப்படையான அமைப்பையும், தங்களுக்கிடையில் தங்களையே அங்கீகரித்துக்கொள்ளும் பலமான சமூக அமைப்பையும் கொண்டுள்ளதால் கலை, இலக்கிய வடிவங்கள் உருவெடுக்கின்றன. ஆனால் வடபகுதி இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் ஓர் அடிப்படையான பொருளாதாரத்தையோ தங்களுக்குள் தங்களையே அங்கீகரிக்கும் செயற்பாட்டையோ கொண் டிருக்கமுடியாத அளவில் உதிரிகளாகக் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்

வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியதான ஒரு செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான போராட்டங்களை அரசியல் ரீதியிலான போராட்டங்களாக மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இவர்களால் நடாத்தப்படவில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்ட சில அமைப்புக்கள் கூட அரசியல் ரீதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. மாறாகப் பொருளாதார நலன்களைக் குறுகிய வட்டத்திற்குள், குறித்த சமூகத்திற்கு மாத்திரம் நிறைவேற்றிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவையாகும். இதனால் இவ்வகை அமைப்புக்கள்கூட வெற்றிகரமாக இயங்கவில்லை. அத்துடன் அரசியல் ரீதியிலான சில நடவடிக்கைகளை இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்கைகளையுடைய பிரதேச ரீதியிலான கட்சிகளின் அடிமட் டத்து ஊழியர்களாகவே செயற்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள் சில அரசின் நிறுவனங்களில் மேல்மட்டச் செயற்பாடுகளி லும் அதிகளவு அக்கறையுடன் செயற்பட்டனர், நாடற்றவர்கள் என்பதனால் அரசியலில் பிரவேசிக்க முடியாத தன்மையினுல் பிரதேசத்தின் எந்தவொரு அரசியல் கட்சிகளும் இம்மக்கள் பால் எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே சமயத்தில் இவ் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இந்நாட்டின் அரசியலின் பாலும், இப்பிரதேச அரசியல் கட்சிகளின் பாலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலையிலும் அக்கறை செலுத்தாது, தென்னிந்திய7வின் பிரதேச ரீதியிலமைந்த கட்சிகளின் மீது அக்கறை கொண்டிருந்தனர். அங்குள்ள சூழ்நிலைகளிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தினர்.

மேற்கூறிய நிலைமைகள், வடபிரதேசத் தில் (யாழ்க் குடாநாட்டில்) வாழும் இந் திய வம்சாவளித் தமிழின மக்களின் போக்குகளாகும். அதே சமயத்தில் இப்பிரதேசத்தின் ஏனைய இடங்களில் வாழும், குறிப்பாக வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற இடங்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் மலையகத்திலிருந்து குடியேறிய மக்களாகும். இம்மக்கள் பெருந்தோட்டத்தில் கூலிவேலை செய்தவர்கள் இங்கு விவசாயத் தொழிலைச் செய்கின்னர். அத்துடன் அத்துமீறிய காணிகளிலேயே பெருமளவு குடியேறியுள்ளனர். இங்கும் இம்மலையகத்து இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் இலங்கை மக்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகே தொழில் செய்கின்றனர். இம்மலையக இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் கடின உழைப்பாளிகள் என்பதனலும், கல்வியறிவு அற்றவர்கள் என்பதனாலும், சொத்துடைமை அற்றவர்கள் என்பதனாலும் இவர்களை வடபகுதியின் வன்னிப்பகுதி செறிந்து கொண்டது. இவர்களினல் எந்தவிதமான பிரச்சினைகளும் தமக்கு ஏற்படாது என்பதனால் இப்பிரதேசங்களின் விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளர்களாக இவர்களைப் பயன்படுத்தப்பட்டனர். இங்கும் இம்மக்கள் அடிமட்டத் தேவைக்கான உயிர் போராட்டத்தையே நடத்துகின்றனர் இவர்களின் சமூக உணர்வும், செயற்ப பாடும் நிரந்தரமற்ற பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உதிரிகளாக வாழும் இந் இந்திய வம்சாவளித் தமிழினத்தவர்களை விட வன்னிப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் பயன்லயகத்தின் எவ்வாறு தொழில் ரீதியில் ஒன்றிணைந்திருந்தனரோ அதே போன்று இங்கேயும் விவசாயத்தின் கூலித் தொழிலாளர்களாக ஒன்றிணைந்துள்ளனர். இதனால் சில நடவடிக்கைகளை இவர்கள் துணிந்து மேற்கொள்ளமுடிகின்றது. இதனாற் தான் ,மலையகத்தில் வேரூன்றிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இப்பகுதிகளிலும் இம் மக்களினூடாகத் தொழிற்சங்க அமைப்புக்களை ஏற்படுத்தி அவை ஊடாக இப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் ஒரளவு அக் கறை செலுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழினத்திற்குள்ள நிலை மையைவிடச் சா த க ம ன ஒரம்சமாகும்.

இவ்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் மத்தியில் இன்று இளைஞர்களின் செபற்பாட்டினூடாகப் புதிய தொரு விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. ஏனெனில் இல்விளைஞர்கள் இந்நாட்டில் பிறந்தவர்களினுதலினல் இந்நாட்டையே தங்களுடைய சொந்த நாடாகக் கருதுவதுடன் தங்களை ஒதுக்கிவைத்திருக்கும் நாடற்றவர்கள் என்னும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளி மக்களுடன் சேர்ந்து தங்களுக்குரிய பொருளாதாரச் செயற்பாடு களை மேற்கொள்வதற்கும், அதனை அரசியல் ரீதியான போராட்டமாக முன்வைத்துச் செல்வதுடன் மாத்திரம் இந்த நாட்டில் புதியதொரு சமுதாய மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும். ஸ்தாபன ரீதியிலான அமைப்பு முறையை ஏற்படுத்த விழைகின்றனர். ஏனெனில் ஸ்தாபன அமைப்பே பிரதேச மக்களுடன் இணைவதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் ஒரு பாலமாக அமையும். இந்த ரீதியிலான மாற்ற உணர்வுகளே இன்று வளர்ந்துவரும் பேர்க்காகும். எனவே வட பகுதியின் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் விடிவும், மலையகத்து இந்திய வம்சாவளியினரின் விடிவும், பிரதேசத்தின் இலங்கை வம்சாவளியினரின் விடிவும், ஏன் இலங்கையில் வாழும் சுரண்டப்படும் வர்க் கங்களின் விடிவும் இளைய தலைமுறையின ரிடயே விடப்பட்டுள்ளது எனலாம்.
"தமிழ் ஐக்கிய முண்ணணி ஆதரவாளர்கள் எல்லோருமே வகுப்புவாதிகள் அல்ல. ஆகவே வகுப்பு வாதிகள் மிகச் சிறுபான்மையினரே என்பது உறுதியாகவில்லையr ? இது மகிழ்ச்சிக்குரிய விடயமில்லையா” - சி. சிவசேகரம்.
யாழ்ப்பாண வளாக 1977-ம் ஆண்டு 1 மாணவர் சங்க மாணவர்சங்க தேர்தலும் மலையகத் தமிழ் மாணவர்களும் (ஆவணங்களிலிருந்து).
தொகுப்பு- மூக்கையா நடராஜா.

யாழ் வேளாள குல உருவாக்கமும் அதிகாரத்துவமும் - ச.தில்லைநடேசன்

யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப்படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமானங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.
யாழ்ப்பாண சமூகம் பற்றிய புறவயமான சமூகவியல் பார்வை கொண்ட ஆய்வுகள் மிகவும் குறைவு. இருப்பவைகளும் சமூக அமைப்பை விவரிக்கின்றதேயன்றி சமூக, பொருளாதார, வரலாற்று வழி நின்று சமூக உருவாக்கம் பற்றியவையோ அதன் அசைவியக்கம் பற்றியவையோ அல்ல. யாழ்ப்பாண சமூகத்தின் மையமாக கொள்ளப்படுபவர்கள் வேளாளர் என்பது ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த வேளாளர் என்பவர்கள் யார்? இவர்கள்தான் எப்போதும் மேலாதிக்க சக்தியாக இருந்தவர்களா? இவர்களின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது? தமது அதிகாரத்தைக் காலமாற்றங்களுக்கு ஏற்ப பேணுவதற்கு இவர்களுக்கு உதவும் கட்டுமானங்கள் எவை?

யாழ்ப்பாண வேளாளர் சமூகம் ஒரு சாதியா? இதனை மறுக்கின்றார், 1957இல் யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்த பேங்ஸ். வேளாளர் பகுதி என்றே இவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சமூகத்தை ஆய்வு செய்கிற எவரும் இதனை ஒப்புக் கொள்ளுவார்கள். வேளாளர் ஒரு சாதியல்ல. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து ஐரோப்பியர் காலத்தினூடு விவசாய நிலத்தை மையமாகக் கொண்டு உருவான குழுமம். இதில் பல சாதிகள் பங்குபற்றியுள்ளன.

வேளாளர் - வெள்ளாளர் 
தமிழக-ஈழ சூழலில் வேளாளர், வெள்ளாளர் என்ற இரு சொற்களும் வழக்கில் உண்டு. இவை இரண்டும் ஒன்றுபோல் கருதப்பட்டாலும் இரண்டு சொற்களின் தோற்றுவாயும் வெவ்வேறு மூலங்கள் கொண்டது.

வேளாளர் 
இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும். இச் சொல்லுக்கு மூலத் திராவிட மொழியில் விருப்பம், தலைமை, ஒளிவிடு என்ற பொருள் உண்டு. யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.

வேள் என்பது மன்னனுக்கும் வேந்தனுக்கும் இடையிலான அதிகாரப் படிநிலைச் சொல். வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). கால் நடையுத்தத்தில் வணிக மையங்களைக் கைப்பற்றும் பூசல்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வேள்கள்’ ஆனார்கள். ‘வேள்’ என்பது குறிப்பிட்ட அதிகாரப் படிநிலைக் குரிய சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாளருக்கும் விவசாயத்துக்கும்  ஆரம்பத்தில் எதுவிதத் தொடர்பும் இல்லை என நிறுவுகின்றார் நெல்லை நெடுமாறன்.  தமிழகத்தைப் போல் ஈழத்திலும் இச்சொல் சமகாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிராமிக் கல்வெட்டுகளிலும் மட்பாண்ட சாசனங்களிலும் இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச்சொல் இலங்கையில் பாவிக்கப்படுவதற்கு இலங்கை பெருங்கற்கால மக்கள் திராவிடராக இருந்ததே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அத்துடன் தமிழக வாணிபத் தொடர்பும் காரணமாகச் சொல்லப் படுகின்றது.

இலங்கையில் ‘வேள்’ என்ற சொல் வாணிபத் தலைவர் களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டாலும் அரச அதிகாரச் சொல்லா கவும் வழக்கில் இருந்துள்ளது. அரசு நிலைபெற்று வேந்தர்கள் தோன்றிய பின்பு வேள்கள் படைத்தலைவர்களாக, சமாந்தகர்களாக, வன்னிபங்கனாக மாறினார்கள். இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.

வெள்ளாளர் 
தமிழ் இலக்கிய சமூகப் பார்வை நிலங்களை ஐந்திணை களாகப் பார்த்தது. இவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை எனக் குறிக்கப்படும். முல்லை நிலத்திலேயே பயிர்ச் செய்கை தொடங்கியபோதும் செம்மைப்படுத்தப்பட்ட விவசாயம் மருத நிலத்திலேயே உருவானது. பெருங்கற்காலத்தில் இரும் பின் அறிமுகத்துடனும் குளநீர்ப்பாசன வசதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட இவ்விவசாயம் செய்த மக்களை உழவர் என இலக்கியங்கள் குறிக்கும். இவர்களின் தலைமக்களை ஊரன், மகிழன், கிழான் எனக் குறிப்பர். மழைநீரை நம்பிய இவ்விவசாய மக்களை காராளர் எனவும் குறிப்பர். கி.பி. 4ம், 5ம் நுhற்றாண்டில் ஏரி, ஆறு, நதி நீர்ப்பாசன முறைகள் பெருவளர்ச்சி கண்டது. வாய்க்கால்களில் ஓடி வரும் வெள்ளத்தை (நீர்) தேக்கி வைத்து விவசாயம் செய்தவர்கள் வெள்ளாளர்கள் ஆனார்கள். இவ்வெள்ளாளர் மருதநிலத்து தலைமாந்தரில் இருந்து தோன்றினார்கள் என்பதே யதார்த்தம். நீர்ப்பாசனத்தை அவர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். பின்பு நீர்ப்பாசன அதிகாரம் முற்றுமுழுதாக அரச நிர்வாகத்துக்குள் சென்றது.

ஈழத்திலும் நீர்ப்பாசனமுறை சமகாலத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அல்லது இலங்கையின் வடபகுதியில் இது விருத்தியடையவில்லை. அதற்கான ஆறுகள், நதிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இல்லை. உண்மையில் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் என்ற சாதியே தோன்ற வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஈழத் தமிழரும் வேள்களும் 
தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்களது அரசுருவாக்கம் நடந் தேறிய பிரதேசமாக யாழ்ப்பாணமே உள்ளது. பல்வேறு குறுநில வன்னிபத் தமைமைகள் இலங்கையில் வன்னி, கிழக்கு பிரதேசங்களில் உருவாகி இருந்தாலும் ஓரளவு வலிமையான அரசுரு வாக்கம் யாழ்ப்பாண அரசுருவாக்கமே.

யாழ்ப்பாண இராச்சியம் கி. பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது எனக்கொள்ளப்பட்டாலும், அதற்கு முன்னோடியாக ஆட்சி அதிகார மையங்கள் இலங்கையின் வடபகுதியில் இருந்துள்ளன. நாகதீபம் எனும் ஆட்சிப் பிரதேசம்பற்றி பாளி நுhல்கள் தகவல் தருகின்றன. அது உண்மையென ‘வல்லிபுர பொன் ஏடு’ நிரூபிக் கின்றது. தொல்லியல் சாசன சான்றுகளின்படி ஆனைக்கோட் டையில் கிடைத்த ‘கோவேத’ முத்திரை, பூநகரி வேளான் சாசனம், வல்லிபுர ஏட்டில் உள்ள ‘ராய’ என்ற குறிப்பு, இவைகள் ஆட்சி அதிகாரத்துடன் தொடர்புடைய சொற்கள் ஆகும். வன்னிப் பிரதேசத்திலும் வேள் ஓட்டைக் கொண்ட சாசனங்கள் மகாவம்சம் குறிப்பிடும் வேள்நாடு, வேள்கம, வடபகுதி தலைவர் பற்றிய குறிப்புகள் ஆட்சி அதிகார மையங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஆகும். இதனுடன் வெடி அரசன் பற்றிய ஐதீகமும் கவனிக்கப்படவேண்டியது.

யாழ்ப்பாண இராச்சியமும் - வேளாந்தலைவர்களும்
யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிக்கப்படும் அரசு 13ம் நுhற்றாண்டில் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் உருவானது என்பது ஆய்வாளர்கள் நிறுவிய ஒன்று. எனினும் இதற்கு முன்னோடியாக நாகதீப அரசு, சோழர் அரசு, கலிங்க மகான் அரசு, சாவகன் அரசு ஆகியன இருந்தன. சோழர்கள் இலங்கையில் ஆட்சியை நிறுவியபோது முன்பிருந்த ஆட்சி அலகுகளை நிலமானிய கட்டுமானங்கள் மூலம் பலப்படுத்தினார்கள். ஊர், பற்று, நாடு, வாணிபம், வளநாடு போன்ற ஆட்சிக் கட்டுமானங்கள் ஈழத்திலும் உருவானது.

யாழ்ப்பாண அரசு உருவானபோது ஆரியச் சக்கரவர்த்தியின் படைத் தளபதிகள், பிரதானிகள், வடஇலங்கை நிர்வாகிகளாக, முதலிகளாக, வன்னிபன்களா, உடையார்களாக பதவி பெற்றார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் சி. பத்மநாதன். இவர்களே வேளாந் தலைவர்கள் எனவும் வன்னியர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள். இப்படைத் தளபதிகள் பல்வேறு குல, சாதிகளில் இருந்து உருவாகி வந்தவர்கள். இதற்கு கைலாய மாலையும் யாழ்ப்பாண வைபவமாலையும் வையா பாடலும் சான்று தருகின்றது.

இலக்கியங்கள் குறிக்கும் 24 வேளாளர் தலைவர்களில், மழவர்-9, தேவர்-2, பாணர்-2, உடையார்-1, செட்டியார்-1, முதலிகள்-2, மீதி 6 வேளாந்தலைவர்களின் சாதி தெரியவில்லை என்கிறார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை (யாழ்ப்பாணக் குடி யேற்றம்).

முதலி, பிள்ளை
முதலி, பிள்ளை என்பனவும் பதவிநிலைப் பெயர்களே. இவை ஊர், பிரதேசத் தலைவர்களைக் குறிக்க தமிழகத்தில் வழக்கில் இருந்தது. தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் (சோழநாடு, தொண்டைநாடு) முதலி என்ற பெயரும், தெற்குப் பகுதியில் (பாண்டிநாடு) பிள்ளை என்ற பெயரும் வழக்கில் இருந்தது. ஈழத்தில் சோழர் வழக்கான முதலி என்ற பெயரே வழக்குக்கு வந்தது. எனினும் பிள்ளை என்பது சாதிப்பெயராக வழக்கில் உண்டு.

தமிழக வேளாளரும் - ஈழ வேளாளரும் 
தமிழகத்தில் சாதிய வடிவம் காலகட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்றே வந்துள்ளது. தொழில்வழிக் குழுக்களாக இருந் தவை, அகமணம் மூலம் சாதியாக நிறுவனப்படுத்தப்பட்டதும் ஏறுவரிசையில் சமூகத்தில் அவை கட்டமைக்கப்பட்டதும் நெடுங்கால சமூக இயக்கத்தில் நடந்தேறியது. சாதியத்தின் உச்ச வடிவம் விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலேயே நிகழ்ந்தது. ஆட்சிமொழி வேறுபாடு, பார்ப்பனிய செல்வாக்கு அதிகரிப்பு, வைணவமதம் அரசமதமாக மாறியது போன்றவை நிகழ்ந்த இக்காலத்தில் பூர்வீக வேளாளர் (பூர்வீக குறுநிலத் தலைவர்கள் + வெள்ளாளர்) சைவத் தமிழ் இறுக்கத்தைக் கொண்டு வந்ததும் மடங்கள் அமைத்து செயற்படத் தொடங்கியதும் நடந்தது. இக்காலத்தில்தான் வேளாளர் + வெள்ளாளர் இணைப்பு அல்லது கலப்பு தமிழகத்திலே முழுமை பெற்றது.

ஈழத்தில் வேறுமாதிரியான இயக்கம் நிகழ்ந்தது. யாழ்ப்பாண இராச்சியம் விஜயநகர மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் தனது தனித்துவத்தைப் பேணியது. போர்த்துக்கேயர் வந்து தலையிடும்வரை சுதந்திர அரசாகவே யாழ்ப்பாண அரசு இயங்கியது. அதன் அரசர்களாக ஆரியச் சக்கரவர்த்தி பரம்பரை திகழ்ந்தாலும் அதன் தூண்களாக இருந்தவர்கள் வேளான் முதலிகளே. இவ் வேளான் முதலிகள் பல்வேறு சாதிகளில் இருந்து வந்திருந்தாலும் தங்கள் அதிகாரத்தைப் பேணுவதற்கு தங்களுக்குள் திருமண உறவுகளைப் பேணிக் கொண்டார்கள். அத்துடன் யாழ்ப்பாண அரச குடும்பத்துடன் திருமணம் செய்து தங்கள் அந்தஸ்தையும் பறைசாற்றிக் கொண்டார்கள்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிட்ட போது பல்வேறு நெருக்கடிகளை யாழ்ப்பாண அதிகார வர்க்கம் சந்தித்தது. அரச குடும்பத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு மூத்த அரச குமாரர்கள் மரணத்தைத் தழுவ சங்கிலியன் ஆட்சிபீடத்தில் ஏறினான். பரநிருபசிங்கன் போர்த்துக் கேயர் பக்கம் சாய்ந்தான். முதலிகள் சங்கிலியன் சார்பானவர்கள். பரநிருபசிங்கன் சார்பானவர்களை இரு பகுதியாகப் பிரித்தார்கள். போர்த்துக்கேயரால் பரநிருபசிங்கனுக்கு அரச பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனாலும் கி. பி. 1591இல்  யாழ்ப்பாண இராச்சியத்தை தங்கள் மேலாதிக்கத் துக்குள் கொண்டு வந்தபொழுது பரநிருபசிங்கன் வாரிசுகளுக்கு (பேரன்மாருக்கு) யாழ்ப்பாணத்தின் முக்கிய ஊர்களின் முதலி பதவிகளை வழங்கினார்கள். ஏற்கனவே முதலிகளாக இருந்தவர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கள். அரச குடும்ப முதலிகள் (மடப்பள்ளி வேளாளர்) ஓ வேள முதலிகள் முரண் இக் காலத்தில் உருவாகத் தொடங்கியது.

யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாக போர்த்துக்கேயர் கையில் கி. பி. 1619இல் விழுந்தபோது முடிக்குரிய அரச குடும்பம் நாடு கடத்தப்பட்டு கோவாவுக்கும் போர்த்துக்கல்லுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மற்றைய அரச குடும்பத்தவர்களுக்கும் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டது. இவர்களும் இவர்கள் சார்ந்த குடும்பத்தவருமே பின்பு மடப்பள்ளி வேளாளர் என அழைக்கப்பட்டார்கள். இவர்களைச் சார்ந்து போர் மறவர்களான கள்ளர், மறவர், அகம்படியார், மலையாள அகம்படியார் (நாயர், தீயர், பணிக்கர்), கரையார், சிவியார் செயல்பட்டதாகத் தெரி கின்றது.

போர்த்துக்கேயர் காலம் யாழ்ப்பாண வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. தோம்புகள் எழுதப்பட்டு காணிகள் விற்கப்பட்டன. இதனைப் பொருளாதார பலமுள்ள சாதிகள் வாங்கின. இத்தோம்புகளை எழுத உதவியவர்கள் வேளான் முதலிகளே. இத்தோம்புகளிலேயே விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ‘வேளாளர்’ என முதன்முதலில் குறிக்கப்பட்டார்கள். வேளாளர் தலைமையில் மடப்பள்ளி வேளாளருக்கு எதிரான குழுமம் அணி திரண்டது. பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ‘வேளாளர்’ எனப் பதிவுரீதியில் அங்கீகரிக்கப்படல் இதன்மூலம் நடந்தது.

ஆரம்பத்தில் தோன்றிய இவ்வேளாள குழுமத்துக்குள் பாணர், மழவர், தேவர், உடையார், செட்டி, சீர்பரதர், வேளாள சாணார் போன்றோர் கலந்தனர். இவ்வேளாள குழுமம் ஒல்லாந்தர் வருகையை ஊக்குவித்தது. ஒல்லாந்தரும் இவர்கள் விசுவாசத் துக்குத் தக்கபடி பதவிகளை வழங்கினார்கள். இதனால்தான் மடப்பள்ளி வேளாளனான பூதத்தம்பி முதலி போர்த்துக்கேயருடன் இணைந்து சதி முயற்சியில் இறங்கினான். அது மேலும் ஆபத்தில் முடிந்தது. இருந்த பதவிகளும் பறிபோனது. இதனைத் தங்களுக்குச் சார்பாக்கிய வேளான் முதலிகள் மக்களைச் சுரண்ட ஒல்லாந்தருக்குத் துணை போனார்கள். மக்கள் நேரடியாக ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளும் வழிகளைத் தடுத்து தமது அதிகாரத்தினைப் பேணினர்.

மடப்பள்ளியினரும் மற்றவர்களும் தங்களுக்குப் பதவிகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். வேளான் முதலிகளிடம் முழுப் பதவிகளும் இருப்பது ஆபத்தென உணர்ந்த ஒல்லாந்தர் கி. பி. 1694இல் மடப்பள்ளியினருக்கும் ஏனையோருக்கும் பதவிகளை வழங்கினர். இதனை எதிர்த்து வேளாளர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கி. பி. 1694க்குப் பின்பு முதலி பகுவகித்த சாதிகள்:

1. வேளாளர்,
2. மடப்பள்ளி வேளாளர்,
3. செட்டிமார்,
4. பரதேசி (கள்ளர், மறவர்),
5. மலையாளி (மலையாள அகம்படியார்),
6. கரையார்,
7. தனக்காரர்,
8. சிவியார்

இம் முதலி பதவி வகித்த சாதிகளுக்கும் நிலமானியங்கள் கிடைத்தன. இது இவர்கள் பின்பு வேளாள குழுமத்துக்குள் கலக்கக் காரணமாக இருந்தது. வேளாள ஒ மடப்பள்ளி வேளாள மோதல் ஆங்கிலேயர் கால முற்பகுதிவரை நீடித்தது. கி. பி. 1833இல் ககூல்புறூக் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டபோது ஒன்றுபட்ட இலங்கை உருவானது. தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவருக்கு வேலைவாய்ப்பு, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர் எனில் உத்தியோகங்களுக்கு முன் னுரிமை கொடுக்கப்பட்டது. பணப்பயிர் செய்கை ஊக்குவிக்கப் பட்டது. இது சமூக மட்டத்தில் பலத்த தாக்கத்தைச் செலுத் தியது.

ஒன்றுபட்ட இலங்கை, ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய சூழல், முதலாளித்துவ சமூகக் கட்டுமானம் என்ற பின்புலத்தில் வேளாள ஒ மடப்பள்ளி வேளாள முரண் காணாமல் போனது. இவர்களுடன் கள்ளர், மறவர், அகம் படியார், மலையாள அகம்படியார், தனக்காரர், செட்டி, தவசிகள், சிவியார் (வேளாள சிவியார்) என்பவர்கள் இணைந்த வேளாளர் குழுமம் ஆங்கிலேயர் காலக் கடைசியில் தோன்றி இருந்தது. இதற்கு ஆங்கிலக்கல்வி முறைகளும் உத்தியோகங்களும் நிலஉடைமையோடு சேர்ந்து உதவியது.

மறுபுறத்தில் கி. பி. 1810இல் கொண்டு வரப்பட்ட இலவச சேணுமுறை தடைச்சட்டம், கி. பி. 1844இல் கொண்டு வரப்பட்ட அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் என்பன நடுத்தர தலித் மக்களை நகர வைத்தது. இவர்களும் ஆங்கிலக் கல்வியை உத்தியோக வாய்ப்புகளை நாடினர்.

அதிகாரத்துவமும் கருத்தியலும்
யாழ்ப்பாண வேளாளர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணு வதற்கு பல காரணிகள் துணை நின்றன.
1. பொருளாதாரம்
2. எண்ணிக்கை
3. கலாச்சாரம்
4. சமயம்
5. சட்டம்
6. கோயில்
7. பள்ளிக்கூடம்
8. இலக்கியம்
9. அரசியல்

பொருளாதாரம்
விவசாய நிலத்தைப் பொருளாதார மையமாகக் கொண்டு சுழலும் வேளாள குழுமம் பல்வேறு சாதிகளின் இணைவில் தோன்றி இருந்தாலும் இவர்களின் இணைவைச் சாத்தியமாக் கியது நிலமே ஆகும். இவர்களது மேலாதிக்கத்துக்கு காரண மாக உள்ளவற்றில் நிலத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

எண்ணிக்கை
1957ம் ஆண்டு பாங்ஸ் கொடுத்த புள்ளி விபரத்தின்படி வேளாளர் எண்ணிக்கை 50% ஆகும். இது வேளாளரை எண்ணிக்கை அடிப்படையில் வலிமையானவர்களாக மாற்றுகின்றது. இது எப்போதும் இருந்த நிலைமையில்லை என்பதுவும் உண்மையாகும். கி. பி. 1690க்கு முன்பு யாழ்ப்பாணச் சனத்தொகையில் வேளாளர் வீதம் கிட்டத்தட்ட 10ம% ஆகும். கிபி 1990இல் 30ம% ஆகவும் 1830இல் 40% ஆகவும் 1950 அளவில் 50% ஆகவும் மாறியது. இது வேளாளர் பல சாதிகளை உள்ளிழுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது வெள்ளிடைமலை. இதன் மூலம் வேளாளர் பாராளுமன்றம் முதல் உள்ளுராட்சிச் சபை வரை தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. வேளாள குழுமம் உள்ளுர எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதனை வெளித் தெரியாமல் மறைப்பது இதனால்தான்.

கல்வி
அரசர் காலம் தொடக்கம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயர் காலம்வரை கல்விபெற்ற சமூகமாக வேளாள குழுமமே இருந்தது. அத்துடன் கல்வியை மற்ற சமூகங்களுக்கு மறுத்தவர்களாகவும் வேளாளர்கள் உள்ளார்கள். கல்விமூலம் கிடைத்த பதவிகளைத் தக்க வைக்கும் சமூகமாகவே வேளாளர் இருந்தனர். வேளாளர் பாடசாலைகள் நிறுவியபோதும் ஆரம் பத்தில் மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கலாச்சாரம்
கலாச்சார ரீதியில் தீண்டாமையையும் புறம் ஒதுக்கலையும் மற்றைய சமூகங்களுக்கு வழங்கிய வேளாளர் கலாச்சாரத் தளத்தில் மற்றையவரை விளிம்புநிலையில் வைத்திருக்கவே விரும்பினர். உடை, பாவிக்கும் பொருட்கள், கலாச்சார சின்னங்கள் போன்றவற்றை மற்றையவர்களுக்குத் தடைசெய்தார்கள். 

சமயம்
யாழ்ப்பாண வேளாள குழுமத்தை பொதுவாக சைவத்துடனும் தமிழுடனும் இணைத்துப் பார்க்கும் போக்கு உள்ளது. உண்மையில் இதுவும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். இதனைக் கட்டமைத்தவர் ஆறுமுக நாவலர் (1822-1879). இந்துத்துவத் திற்கு எதிராக நாவலர் இதனைக் கட்டமைத்தார். இதன்மூலம் சைவ சித்தாந்தத்தையும் ஆகமநெறிகளையும் தூக்கிப் பிடித்தார். இது மறுபுறத்தில் சாதிய ஒடுக்குமுறை உக்கிரம் பெறவும் உதவியது. 

போர்த்துக்கேயர் காலத்தில் கி. பி. 1638இல் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக் கராக இருந்தார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கி. பி.1671இல் டச்சு அறிக்கையின்படி 142357 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்ததாகவும் அதில் 141456பேர் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர் கால ஆரம்பத்தில் கி. பி. 1802க்குப் பின்பே பலர் இந்துமதத்திற்குத் திரும்பினர். எனினும் 1812க்குப் பின்பான மிசனரிமாரும் 1833க்குப் பின்பு புரட்டஸ்தாந்து கிறிஸ் தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைத்ததும் கல்விக்காவும் உத்தியோகத்துக்காகவும் பலர் மதம் மாறத் தொடங்கினர். இதற்கு எதிராக, கி. பி. 1842இல் சைவவேளாளரின் எதிர்வினையாக ‘சைவத்தமிழ்’ கருத்து வைக்கப்பட்டு அது வேளாளர் கருத்தியலாக மாறியது.

சைவவேளாளர் நவீனத்துவத்தை ஆதரித்தார்கள். ஆனால் அதனை மற்றையவர்களுக்குச் சுவற விடுவதற்குத் தயாராக இல்லை. இதுவே ஆறுமுக நாவலர் தொடக்கம் சேர் பொன் இராமநாதன்வரை தொடர்ந்தது. இதற்கு இவர்கள் தேசவழமைச் சட்டத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்.

சட்டம்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் வேளாளர் மேலா திக்கத்தைப் பேண வழிவகை செய்தது தேசவழமைச் சட்டமே. போர்த்துக்கேயர் காலத்தில் தேச வழமைகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் அவை தொகுக்கப்பட்டு எழுதப்பட்டது.

கோயில்
யாழ்ப்பாண சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க அரசர் களுக்கும் பின்பு வேளாளருக்கும் கோயில்களும் உதவியது. ஒல்லாந்தர்கால நடுப்பகுதியில் கோயில்கள் தோன்றத் தொடங்கினாலும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஆகம முறைப் படுத்தல் முறையாக அமுல்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல கோயில்களில் சாதிமுறையில் திருவிழா கொடுக்கப்பட்டது. இறங்கு வரிசைப்படி வெளிகள் பங்கீடு செய்யப்பட்டதும் நடைமுறையில் இருந்தது. இன்னும் இருக்கின்றது. இதனை எதிர்த்த நடுத்தர சாதிகள் தங்களுக்கு கோயில்கள் கட்டிக் கொண்டன. (கிறிஸ்தவர்களிலும் இது நடந்தது). கோயில்களில் நடந்த ஒதுக்கல்களுக்கு எதிராக பின்பு போராட்டங்கள் வெடித்தன. இன்னும் தலித்துக்கள் உள்நுழைய முடியாத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டு.

இலக்கியம்
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் தோன்றிய இலக்கியங்கள் அரசை நிலைநிறுத்தும் இலக்கியங்களாகவும் அரசுக்கு கருத்து நிலை அந்தஸ்தை வழங்கும் இலக்கியங்களாகவும் இருந்தது. அவ்விலக்கியங்களில் வேளாளர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புலமைத்துவ விளையாட்டு உண்டு. ஒல்லாந்தர் காலத்தில் ஆக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ மாலையும், தண்டி கனகராயன் பள்ளும், கரவை வேலன் கோவையும் வேளாளரைச் சிறப்பிக்கத் தோன்றியவையே.

அரசியல்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தரகு முதலாளிகளாக மாறிய யாழ்ப்பாண வேளாள ஆதிக்க சக்திகள் இலங்கை அரசியலில் முக்கிய சக்தியாகச் செயற்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் ஆங்கிலக் கல்வி கற்ற வேளாள குழுமம் இலங்கை, இந்தியா, தென்னாசியா, தென்கிழக்காசியா, தென்னாபிரிக்கா, மொறி சியஸ் போன்ற இடங்களில் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்களாக மாறினார்கள்.சென்ற இடமெங்கும் அதிகாரத்தைப் பேணும் முயற்சியில் அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்குத் துணைபோய் தங்கள் மேலாண்மையைப் பேணிக்கொண்டார்கள். இதன் சமூக, அரசியல் விளைவுகள் பின்பு பலமாகவே எதிரொலித்தது.

குறிப்பு 1:
வேளாளர் என்னும் குழுமத்திலே சோழர்காலம் துவக்கம் படைத் தளபதிகளாக, பிரதானிகளாக, நிர்வாகிகளாக வந்தவர்கள் படைவீரர்கள். போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலங்களில் முதலிகளாக மாறி நிலமானியம் பெற்றவர்கள் என பல சாதிகள் இணைந்தனர். அவையாவன: மழவர், பாணர், தேவர், செட்டி, கள்ளர், மறவர், அகம்படி, மலையாள அகம்படி (நாயர், தீயர், பணிக்கர்) கணக்கர், மடப்பள்ளி வேளாளர், சீர்பரதர், பட்டினவர், தனக்காரர், தவசிகள், வேளாள சாணார், (சாணாரில் இருபகுதிகள் உண்டு) சிவியார் (சிவியாரில் இருபகுதிகள் உண்டு)

குறிப்பு 2:
கரையார்கள் தொடர்ந்து கடலோடு தொடர்பு கொண்டி ருந்ததால் அவர்கள் கடல் சார்ந்தவர்களாக மாறினார்கள். சில சாதிகள் கரையார் சமூகத்திலும் கலந்தனர். தேவர், சீர்பரதர், பட்டினவர். மயிலிட்டிக் கரையாரின் பூர்வீகம் தேவர்கள் என்று தெரிய வருகின்றது.

குறிப்பு 3:
யாழ்ப்பாண வேளாளரில் இப்போது உட்பிரிவுகள் உண்டு.
1. ஆதிசைவவேளாளர் - பிள்ளைமார் 
2. கார்காத்த வேளாளர் - மழவர் 
3. மடப்பள்ளி வேளாளர் - மடப்பள்ளி 
4. செட்டி வேளாளர் - செட்டி 
5. அகம்படி வேளாளர் - அகம்படியார்

குறிப்பு 4:
ஈழத்து வன்னிப தலைவர்களும் பல்வேறு சாதிகளில் இருந்து வந்தவர்களே. வன்னிபம் என்பது பதவிப் பெயரே. மலைய மான்கள், வன்னியர், முக்குவர், படையாட்சி, பாணர் தேவர் போன்றவர்களே வன்னிப பதவிகளை வகித்தனர்.

உசாத்துணை நுhல்கள்:
1. யாழ்ப்பாணக் குடியேற்றம் - முத்துக்குமாரசாமிப்பிள்ளை 
2. வையாபாடல் 
3. கைலாயமாலை 
4. யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகன புலவர் 
5. யாழ்ப்பாண வைபவ கெளமுது - க. வேலுப்பிள்ளை 
6. யாழ்ப்பாண சரித்திரம் - தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
7. யாழ்ப்பாணம் - சமூகம் - பண்பாடு - கருத்துநிலை - பேராசிரியர் கா. சிவத்தம்பி, 
8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி 
9. இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கா. இந்திரபாலா 
10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் - பேரா. சி. பத்மநாதன்
11. சமூக விஞ்ஞானம் - தொல்குடிகள் - ஆர். பூங்குன்றன்
12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - கலாநிதி வ. புஸ்பரட்ணம்
13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு - கலாநிதி முருகர் குணசிங்கம்

நன்றி = ஆரையம்பதி http://www.arayampathy.lk/
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates