Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கொழும்பின் பழைய – புதிய நகர மண்டபங்கள் (கொழும்பின் கதை - 37) - என்.சரவணன்

கொழும்பின் அதிகம் அறியப்படாத வரலாற்று நினைவுச்சின்னங்களில், புறக்கோட்டையில் உள்ள பழைய நகர மண்டபம் (Old Town Hall) முக்கியமான வரலாற்று பின்புலத்தைக் கொண்டுள்ளது. பழைய கோதிக் தேவாலயம் போன்ற மாளிகையின் தோற்றத்தில் அது காணப்படுகிறது. இலங்கையிலேயே அதிக சனநெரிசல் கூடிய மையமான இந்தப் பகுதியைக் கடக்கும் சுதேசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இதனை ஒரு தடவை நிமிர்ந்து பார்க்காமல் எவரும் கடந்திருக்க மாட்டார்கள். ஆனால் பெறுமதிமிக்க பண்டைய வரலாற்றின் சின்னமாக இது திகழ்கிறது.


இது புறக்கோட்டையின் இதயம் என்று கூறலாம். அதுபோல கொழும்பின் அன்றைய கோட்டைச் சுவர்களின் நுழைவாசல் இதற்கு அருகாமையில் சுமார் 50 மீட்டர் தொலைவில் தான் கைமன் கேட் என்கிற பெயரில் இருந்தது. சுறுசுறுப்பும், பரபரப்பும் மிகுந்த சந்தைப் பகுதி இது. ஐந்து லாம்பு சந்தியின் மையத்தில் இது அமைந்திருக்கிறது. ஐந்து பாதைகள் பிரியும் இடமிது. மெயின் வீதி, செட்டியார் தெரு, டாம் வீதி, ஸ்ரீ போதிராஜ மாவத்தை, சென்ரல் வீதி, செக்கட்டித் தெரு ஆகியவற்றுக்கு பிரியும் வீதி என முக்கிய சந்தியாக இது திகழ்கிறது. இலங்கையின் முக்கிய சந்தியும், சந்தையும் உள்ள இடமெனலாம்.

இந்த பழைய நகர மண்டபம் தான் மாநகர சபைக் கூட்டங்களை நடாத்தும் நகர மண்டபமாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவானது. ஆம் 2023 இல் இதன் வயது ஒன்றரை நூற்றாண்டை எட்டுகிறது.

1865 இல் கொழும்பு மாநகர சபை உருவான கதையை ஏலவே பார்த்தோம். மாநகர சபைக் கூட்டத்தை நடாத்துவதற்கு நிலையான ஒரு கட்டிடத்தின் தேவை உணரப்பட்டது.  அதன் விளைவாக இந்தக் கட்டிடம் 1873 இல் அப்போதைய ஆளுநர் வில்லியம் கிரகரி ஆட்சியில் கட்டப்பட்டது, இது பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தரால் (J. G. Smithers) வடிவமைக்கப்பட்டது, அவர் இந்த நகர சபை தரத்துக்கு பொருந்தக்கூடிய தளபாடங்களையும் வடிவமைத்தார், மேலும் இது கொழும்பில் திறக்கப்பட்ட முதலாவது பொதுக் கட்டிடமாகும் (Civic Building). ஒரு இடைக்கால ஐரோப்பிய தேவாலயத்தின் சாயலில் இருக்கிறது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1924 வரை நகராட்சி தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நகர சபைக் கட்டடத்தோடு ஒரு மண்டபமும் ஒரேயடியாக கட்டப்பட்டது.

1870 இல் இலங்கைக்கு பிரித்தானிய எடின்பர்க் அரச குடும்பத்தினர் வருகை தந்திருந்தார்கள். ஏப்ரல் 22, 1870 அன்று இந்த எடின்பர்க் சந்தைக்கான அடிக்கல்லை எடின்பரோவின் அல்பிரட் டியூக் (Alfred Duke of Edinburgh) நாட்டினார். இந்த சந்தை தொடங்கிய காலத்தில், கட்டிடத்தின் உட்புறம் எரிவாயு விளக்குகளின் மூலம் வெளிச்சம் பெறப்பட்டது. எடின்பர்க் பிரபுவின்  ததால் அதன் நினைவாக இந்த மண்டபத்துக்கு எடின்பர்க் மண்டபம் (Edinburgh Hall) என்று பெயர் சூட்டப்பட்டது.

அதில் தெரு நாடகங்கள், நாடகங்கள், நடன நிகழ்வுகள் என பல கலை நிகழ்ச்சிகளும் இங்கே இடம்பெற்றன. கலை வளர்ச்சிக்கு அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்ட மண்டபம் இது. மிகவும் நேர்த்தியான கட்டிடக்கலை அம்சங்களுடன் கட்டப்பட்ட அந்தக் கட்டிட அமைப்பின் கலை வடிவத்தை இன்றும் பார்க்கலாம். அது மட்டுமன்றி இந்த மண்டபம் அன்று நீதவான் நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த ஜி. பர்ட்டன் (G. Burton) வழங்கிய ஒரு வடிவமைப்பை முதலில் சபை ஏற்றுக்கொண்டது. ஒரு அருங்காட்சியகம், நூலகம், மண்டபம், நீதிமன்ற இல்லம், தரைத்தளத்தில் நீதவாங்களுக்கான அறை, ஒரு சபைக் கூட்ட மண்டபம். குழு அறைகள், மேல் மாடியில் செயலாளருக்கும் பணி கண்காணிப்பாளருக்குமான அலுவலகங்கள் போன்றவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டிடத்தைக் கட்டுவது தான் ஆரம்ப யோசனையாக இருந்தது. இதைக் கட்டுவதற்காக பர்ட்டனால் மதிப்பிடப்பட்டிருந்த செலவு 15,400 பவுன்களாகும். ஆனால், இந்தத் தொகை அதிகம் என்று முடிவு செய்த அரசு, திட்டத்தை சுருக்க வேண்டியதாயிற்று.


இறுதியில் அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜே.ஜி. ஸ்மித்தர் வழங்கிய 7000 பவுன்களில் முடிக்கப்படக் கூடிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் கொழும்பு மியூசியத்தையும், கொழும்பு துறைமுகத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் (The Grand Oriental Hotel) போன்ற கட்டடங்களை வடிவமைத்தவர் ஜே.ஜி. ஸ்மித்தர். இந்த நகர சபைக் கட்டடம் 1873 ஆம் ஆண்டில் ஆளுநரால் திறக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடம் பற்றி அப்போதைய பிரதமர் பிரேமதாசவின் கவனத்திற்கு வந்தது, அவர் 1984 ஆம் ஆண்டளவில் அதனை புனரமைத்து கொழும்பின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாற்றினார். பிற்காலத்தில் எடின்பர்க் மண்டபம்; பழைய நகர சபையை நினைவுபடுத்தும்  அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதன் நாளா பக்கங்களிலும் திறந்த   வளாகமாக அது இருந்தது. நகர சபைக் கட்டிடமானது “பழைய நகர மண்டபம்” (Old Town Hall) என்று அழைக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் போது மக்களுக்கும், போது நிறுவனங்களுக்கும் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டது. இன்று வரை அது தொடர்கிறது. மேலும் எடின்பர்க் மண்டபத்தைச் சூழ சந்தை பெருகியதால் அதை எடின்பர்க் சந்தை என்று அழைத்தார்கள்.


பழைய நகர மண்டப அருங்காட்சியகம் இன்றும் திறந்த ஒன்றாகத் இயங்கி வருகிறது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறியாது பலரும் கடந்து போவதும், சந்தையைச் சூழ உள்ளவர்கள் அதன் தொல்லியல் முக்கியத்துவத்தை அறியாது பாழ்படுத்துவதையும் அவதானிக்கலாம். அங்கே நூற்றாண்டுக்கு முன் வரை பயன்படுத்தி வந்த தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் என்பவற்றையும் பார்வையிட முடியும்.

இந்த மண்டபத்தை சுற்றிக் காட்ட பராமரிப்பாளர் ஒருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் உங்களை மாடிக்கு அழைத்துச் செல்வார். நீங்கள் படிக்கட்டுகளின் உச்சியை அடைந்ததும், மையத்தில் ஒரு மாநாட்டு மேசை உள்ள  ஒரு பெரிய திறந்த அறையில் இருப்பீர்கள். இங்கே 15 ஆண்கள் (மாதிரிப் பொம்மைகள்) மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல சுதேசிய பல்லின உருவங்களையும் உடையவர்களின் உருவங்கள் அந்தக் கதிரைகளில் சுற்றி வர அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம்.






காவலாளர்கள் / பணியாளர்கள் இருவர் மாதிரி பொம்மைகளாக நிற்க வைக்கப்பட்டிருப்பார்கள். சுவரில்  பழைய புகைப்படங்கள் காணப்படுகின்றன. அங்கே தெரியும் ஜன்னல்களிலிருந்தும் நகரத்தைப் பார்க்கலாம். குறிப்பாக விறுவிறுப்பான ஐந்துலாம்பு சந்தியின் மையத் தோற்றத்தை அங்கிருந்து காணலாம். இன்னோரிடத்தில் பழைய தட்டச்சுப்பொறிகள், பழைய ரேடியோக்கள் போன்ற பழங்கால பொருட்களின் சேகரிப்புகளையும்,  1785 காலத்து கொழும்பின் வரைபடத்தையும் காணலாம்.

கீழே அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்கள் உள்ளன; பழங்கால இயந்திரங்கள், பழைய மரக் கம்பத்தில் பொருத்தப்பட்ட பழைய உலோகத் தெருப் பலகைகள், பழங்கால கொதிகலன்கள், கடிகாரம், பழைய நூலக வாகனம் போன்றவற்றைப் பார்வையிடலாம்.


புதிய நகர சபை கட்டிடம்

இட நெருக்கடியாலும், வாகனப் போக்குவரத்துக்களின் சத்தங்களாலும், சந்தைப் பகுதியில் அதிகரித்த தூசுகளின் பெருக்கத்தாலும் இந்த நகர மண்டபம் கைவிட ஆலோசிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக கட்டவேண்டிய கட்டிடத்தையும் இதனைச் சூழ எங்கேயும் கட்ட வாய்ப்பிருக்கவில்லை. அதற்கான காணியும் இருக்கவில்லை. அமைதி நிறைந்த சூழலும் இருக்கவில்லை. வேறு இடத்தில் புதிய டவுன்ஹால் கட்டப்பட வேண்டும் என்று 1907 டிசம்பர் 13ஆம் தேதி நகர சபைக் கூட்டத்தில் முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. 1914 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்தது. விவாதங்களும் நீண்டன.

முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மாநகர சபையின் தலைவர் இ. எம். டி கோர்சி ஷோர்ட் (E. M. de Courcy Short), 1907 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில்,  நகரத்தின் தேவைகள், நகராட்சி அலுவலகங்கள், உச்சபட்ச திறன் வரை நீண்டு, வழங்கக்கூடிய இடவசதியை முற்றிலுமாக விஞ்சிவிட்டது என்று குறிப்பிட்டார். ஒரு புதிய நகர சபைக் கட்டிடத்துக்கான தேவை மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது என்று அவர் வலியுறுத்தினார். 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், புறக்கோட்டை பிரதேசத்தில் இதனை விரிவுபடுத்துவது சாத்தியமற்றது என்பதுடன், ஒரு  புதிய இடத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை மாநகர சபை அங்கீகரித்தது. 

"கொழும்பு மாநகரசபையின் அலுவல்கள்" பற்றி விசாரிப்பதற்காக ஆளுநரால் 1914 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இப்பிரச்சனையை முழுமையாக ஆராய்ந்து தனது பரிந்துரையை வழங்கியது. ஆர். ஸ்கெல்டன் (R. Skelton) தனது சாட்சியத்தின் போது, ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டுவது அவசரமான விடயம் என்று கூறினார். தலைவர், செயலாளர், நகர துப்புரவு பொறியாளர், கணக்காளர் போன்றோர் கட்டிடத்தில் நிறைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மதிப்பீட்டாளர் பொறுப்பில் இருந்தவர் கட்டிடத்துக்கு வெளியே உள்ள கடையொன்றில் இருந்தபடி தனது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னும் சில அலுவலகர்கள் மாளிகாகந்தையில் அலுவலகம் நடத்தி வந்தார்கள்.

புறக்கோட்டை கட்டிடம் ஒரு நகரசபைக்கு பொருத்தமற்ற இடமாக இருந்தது. அதே வேளை ஒரு மதிப்புமிக்க நிலமாகவும் இருந்தது. விற்கப்பட்டால் ஒரு புதிய நகரசபைக் கட்டிடத்துக்கான செலவையும் ஈடு செய்து மிகுதி பணமும் மிஞ்சும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது ராயல் கல்லூரி இருந்த இடமான சென் செபஸ்தியான் மேட்டில் (அதாவது இன்று உயர் நீதிமன்ற வளாகம் உள்ள இடத்தில்) நகர சபைக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முன்மொழிவு கூட நகராட்சி மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்று ஸ்கெல்டன் கூறினார். சிறந்த கட்டிடக்கலை தகுதி கொண்ட ஒரு கட்டிடத்தை அமைபதாயின் அதற்கான நிலம் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகெங்கிலும் நகர சபைக் கட்டிடங்கள் நகரத்தின் மிக முக்கியமான கட்டிடமாக இருக்கிறது என்றார். இறுதியில் முழு திட்டத்திற்கும் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் செலவாகும் என்று திரு. ஸ்கெல்டன் கூறினார். 

ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவின்படி பணிகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அதற்குள் முதல் உலகப் போர் வெடித்ததால், இக்கட்டிடப் பணிகள் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் போர் முடிந்ததும் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 

1921 ஆம் ஆண்டில், கொழும்பு நகரத்தின் திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரும் நகர திட்டமிடலாளருமான பேராசிரியர் பெட்ரிக் கெடிஸ் (Patrick Geddes), தற்போது கொழும்பு நகர சபைக் கட்டிடம் அமைந்திருக்கும் பகுதி அதற்கு ஏற்றது என்று பரிந்துரைத்தார். அதற்கு அவர் விரிவான விளக்கத்தைக் கொடுத்தார். மக்கள்தொகை கொண்ட பகுதியின் மையத்தில் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட நகரத்தின் மையத்தில் இருந்தது விக்டோரியா பூங்கா. இந்த மக்கள் செறிவில்லாத நிலம் அதற்கு ஏற்றது என்று அரசும் ஒப்புதல் அளித்ததால், பேராசிரியர் கெடியின் முன்மொழிவின்படி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்பின் எழுந்த பிரச்சினை, டவுன்ஹால் கட்டுவதற்கான திட்டம் தயாரிப்பது. அதற்கான போட்டியும் நடத்தப்பட்டது. மொத்தம் 32 வடிவமைப்புத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதியில் மூன்று பெரிய வெளிநாட்டு கம்பனிகள் இப்போட்டியில் தகுதி பெற்றிருந்தன. அந்த கம்பனிகளில் சிங்கப்பூரின் ரல்ப் பூட்டி கம்பெனி (S J. Edwards of Ralph Booty & Co. of Singapore) சிறந்த வடிவமைப்பை கொடுத்து முதலிடத்தைப் பெற்றது. சமர்ப்பித்த திட்டமும், கட்டிடத் திட்டத்தின் தனித்தன்மையும், உள்ளே இருக்கும் அலுவலகங்களின் விசாலமான தன்மையும், உச்சியில் அரைக்கோளக் கோபுரத்துடன் கூடிய கட்டிடத்தின் கவர்ச்சியும் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படையாக இருந்தது.


இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அப்போது கொழும்பு மேயராக இருந்த டி.ரெய்ட் (T. Reid) 1924ஆம் ஆண்டு மே  24 அன்று நாட்டினார். இந்தக் கட்டிடத்தை 1924 இல். கெமன் என்கிற கமனியால் (A. A. Gammon & Co) மூலம் நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது தற்போதைய நகரசபைக் கட்டிடம். இதக் கட்டு முடிப்பதற்கு அப்போது ரூ 1,500,000 செலவாகியது. இதற்கான செலவை மத்திய அரசிடமிருந்து எந்தக் கடனும் வாங்காமல் நகரசபையின் வருவாயிலிருந்தே பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்த பின்னர், 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபம் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இன்று கொழும்பின் மிகவும் அழகானதும், பிரமாண்ட மிடுக்கோடும் நகர சபைக் கட்டிடம் கொழும்பின் கவர்ச்சிகரமான அடையாளமாகவும், அமெரிகாவில் வோஷிங்க்டனில் உள்ள கெப்பிடல் கட்டிடத்தின் சாயலில் நிற்கிறது.

உசாத்துணை

  • H. A. J. Hulugalle, Centenary Volume of the Colombo Municipal Council, 1865-1965, Colombo Municipal Council, 1965 - Colombo (Ceylon)
  • CEYLON Report of the Commission on the Constitution Presented by the Secretary of State for the Colonies to Parliament by Command of His Majesty, July, 1928, Printed And Published By His Majesty's Stationery Office, LONDON: 1928.
  • Lopamudra Maitra Bajpai, Stories of the Colonial Architecture: Kolkata-Colombo  Doshor Publication, 2019
  • ආර්. මහීෂ්වර, ලක්ෂ පහළොවක වියදමින් ඉදි වුණු කොළඹ නගර සභා ගොඩනැගිල්ල දිනමිණ, (16. 07. 2021)
  • හර්ෂිනී පුෂ්පමාලා ආරච්චිගේ, කොළඹ යනු ඓතිහාසික පුරවරයකි, දිනමිණ, (08. 10. 2011)
  • Tuan M. Zameer Careem, Ceylon’s First Royal Tour,  (https://www.colombotelegraph.com/index.php/ceylons-first-royal-tour/) 21,07.2019
நன்றி - தினகரன் 21.08.2022


கொழும்பு நகரசபையின் உருவாக்கம் ( கொழும்பின் கதை - 37) என்.சரவணன்

இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனம் தான் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலை விட பழமையைக் கொண்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலானது முதலாவது இடம்பெற்றது 1911 இல் தான் என்பதை அறிவீர்கள். இலங்கையின் ஆளுநராக 1865 -1872 காலப்பகுதியில் ஆட்சி செய்த சேர் ஹர்கியூலிஸ் ரொபின்சனின் (Hercules Robinson) காலத்தில் தான் இலங்கைக்கான உள்ளூராட்சி நிருவாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இலங்கையின் ஆட்சி அதிகார நிர்வாகத்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பங்காற்றியவர்களில் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் பங்கு முக்கியமானது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் முழு நாடும் ஆவதற்கு முன்னரே; ‘பிரித்தானிய அரசியலமைப்புக்கு ஏற்றார்போல யாப்பு முறை இலங்கையிலும் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் கொடுத்தவர் அவர் தான். அவர் பின்னர் இலங்கையின் முதலாவது நீதியரசராக ஆனார்.

1809 இல் அப்போதைய வெளியுறவுத்துறை செயலரிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்து இப்படிக் கூறினார்:

"இந்தத் தீவில் வசிப்பவர்களின் வாழ்க்கை – நடத்தைக்கும், மதச் சூழலுக்கு ஏற்ற, பிரிட்டிஷ் அரசியலமைப்பின்படி இலங்கைக்கு ஒரு ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும்."

அப்படித்தான் 1833 இல் கோல்புரூக் கமிஷனின் முன்மொழிவுகளும் ஒரு சுதந்திர அரசாங்கத்தின் தேவையை பரிந்துரைத்தன. 1848 இல் இலங்கையில் வெடித்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக, இலங்கைக்கு ஏதாவது ஒரு சுயராஜ்யத்தை வழங்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. இந்தக் காரணங்களின் விளைவாக, 1850 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் கொழும்புக்கு ஒரு நகர சபை முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

1865 இல் புதிதாக ஆளுநர் பதவியேற்ற சேர் ஹர்கியூலிஸ் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் இதற்கான யோசனையை அரசாங்க சபையில் சமர்பித்தார். இதன்படி 1865 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் கொழும்பு நகர சபை நிறுவப்பட்டது. அதுமட்டுமல்ல 1866ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இயங்கக் கூடிய வகையில் கொழும்பு, கண்டி ஆகிய இரு நகர சபைகளும் உருவானது அதுபோல நகரசபை எல்லைகளும் தீர்மானிக்கப்பட்டது. கொள்ளுப்பிட்டி, கொம்பனிவீதி, கொழும்பு கோட்டை, புனித செபத்தியன் வீதி, புறக்கோட்டை, செயின்ட் போல்ல் பிளேஸ், கொட்டாஞ்சேனை, நியூ பஸார் மற்றும் மருதானை ஆகியவை அதன் அப்போதைய நகர எல்லைகளாகும்.

நகராட்சி உறுப்பினர்களாக தெரிவாக தகுதிபெற்றவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்வதற்கான விசேட கூட்டம் 1865 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதி கச்சேரியில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏ. எம்.பெர்குசன், டாக்டர். எஃப். டபிள்யூ. வில்ஸ் ஃபோர்டட், சீ.ஏ.லோரன்ஸ், ஜே. டி. அல்விஸ், சி. டயஸ், எஸ்.சண்முகம். ஒசின் லெப்பை, அபுதுல் காதர் மரிக்கார் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். இந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் 14 நாட்களுக்கு கொழும்பு கச்சேரியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களைத் தெரிவு தெரிவுசெய்வதற்கான கூட்டம் ஏற்பாடாகும் என்றும் பத்திரிகைகளிலும், வர்த்தமானி அறிவித்தலாகவும் அறிவிக்கப்பட்டது.

நகராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் கூட்டம் 1866 ஜனவரி 12, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. கூட்டங்கள் எனப்படுகிற இந்தத் தேர்தல்; ஒன்பது தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டன. கொழும்பு நகரில் வரி செலுத்துபவர்கள் வாக்காளர்களாக தகுதி பெற்றிருந்தார்கள். இதற்கு மக்கள் மத்தியில் தனி ஆர்வம் இருந்ததையும் உணர முடிகிறது. கொழும்பு நகர சபைக்கு ஆசன மட்டத்தில் முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு.

  • சி. எல். பெர்டினாண்ட்ஸ் (கொள்ளுப்பிட்டி)
  • கலாநிதி எஃப். டபிள்யூ. வில்ஸ்ஃபோர்ட் (கொம்பனி வீதி)
  • ஜே. டபிள்யூ. வென் (கோட்டை)
  • எஃப். ஜே. த. சேரம் (சென்ட்செபாஸ்தியன்)
  • டாக்டர் ஜே. டபிள்யூ. வான் கேசல் (புறக்கோட்டை)
  • எஸ். தம்பையா (சென்ட் போல்)
  • சி. ஏ. லோரன்ஸ் (கொட்டாஞ்சேனை)
  • ஜே. டி. அல்விஸ் (நியூ பஸார்)
  • எம். சி. லோஸ் (மருதானை)

ஜனவரி 5 , 1866 இல், பின்வரும் ஐந்து பேரை நகராட்சி கவுன்சிலர்களாக ஆளுநர் நியமித்தார்.

  • சி. பி. லெயார்ட் (அரச அதிபர், மேல் மாகாணம்)
  • கலாநிதி டபிள்யூ. பி. சார்லி (தலைமை சிவில் மருத்துவ அதிகாரி)
  • எச். ஏ. எவட் (நெடுஞ்சாலை ஆணையர், தலைமை பொறியாளர்)
  • டி. பெர்விக் (பிரதி சட்ட மா அதிபர்)
  • ஜே. ஜே. கிரின்ளிண்டன் (நில அளவையாளரின் உதவியாளர்)


இதே வேளை அதிகாரப்பூர்வமாக தலைவராக தெரிவானவர் சி. பி. லெயார்ட். அதாவது இலங்கையின் முதலாவது மேயர் அவர். இன்றும் கிராண்ட்பாசில் லெயர்ட்ஸ் புரோட்வே என்கிற வீதி அவரின் நினைவாகத் தான் இருக்கிறது. சாமுவேல் கிரேனியர் செயலாளராக தெரிவானார். இந்த ஐந்து உறுப்பினர்களும் பின்னர் நைட் பட்டம் பெற்றனர். சி. பி. லெயார்ட் இலங்கை சிவில் சேவையின் மூத்த உறுப்பினராக இருந்தார் அது மட்டுமன்றி 30 வருட காலமாக மேல் மாகாணத்துக்கான அரச அதிபராகவும் இருந்தவர். கோல்ப்ரூக் கமிஷனின் உறுப்பினராக இருந்த சி. எச். கமரூனின் மகன் எச். எச். கமரூன் கொழும்பு நகர சபையின் முதலாவது முழுநேரத் தலைவராக ஆனார்.

1887 இல் இயற்றப்பட்ட நகர சபை கட்டளைச் சட்டத்தின்படி ஆங்கில மொழி தெரியாத எவரும் நகர சபை பிரதிநிதியாக நியமிக்கப்படக் கூடாது. மேலும், ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்தின் உரிமை அல்லது ஆண்டுக்கு ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாத அசையாச் சொத்தின் உரிமை இருத்தலே; ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதியாக இருந்தது. 1887 ஆம் ஆண்டு ஆணைச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் எழுந்ததால் எழுந்த சர்ச்சையால் மீண்டும் ஒருமுறை அவசரச் சட்டம் திருத்தப்பட்டது . 1910 ஆம் ஆண்டின் நகர சபைச் சட்டம் இல. 06இன் மூலம், தற்போதுள்ள நகராட்சி எல்லைகள் மேலும் விரிவாக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டு யாப்பின் பிரகாரம் கொழும்பு நகரை ஆளுவதற்கு முதல் முறையாக மேயர் மற்றும் துணை மேயர் என இரண்டு புதிய பதவிகளை உருவாக்கியது. மேலும், இந்த புதிய யாப்பின் மூலம் நகர்ப்புற பிரிவுகளின் எண்ணிக்கை 20 ஆக விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, கொழும்பு நகர சபையின் புதிய பிரிவுகள், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, மருதானை வடக்கு, மருதானை தெற்கு, வடக்கு சென்ட் போல் , தெற்கு சென்ட் போல், கிழக்கு புதிய பஸார் , மேற்கு புதிய பஸார், கோட்டை, புறக்கோட்டை, வடக்கு கொம்பனி வீதி, தெற்கு கொம்பனி வீதி, சென்ட் செபஸ்தியான், தெமட்டகொட, திம்பிரிகசாய மற்றும் கறுவாத்தோட்டம் என்கிற நகரசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 1943 இல் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அப்பிரிவுகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டது. கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, திம்பிரிகசாய, ஹெவ்லொக் டவுன், தெற்கு வெள்ளவத்தை, கறுவாத்தோட்டம், பொரளை , தெமட்டகொட, முகத்துவாரம், மாதம்பிட்டிய, கிழக்கு கொட்டாஞ்சேனை, மேற்கு கொட்டாஞ்சேனை, நியூ பஸார், கிராண்ட் பாஸ், கொம்பனிவீதி, ஹூனுபிட்டி, வேகந்த, மாளிகாவத்தை, சென்ட் போல், சென்ட் செபஸ்தியான், கொச்சிக்கடை, புதுக்கடை, புறக்கோட்டை போன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

1946ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் வாக்காளர், வேட்பாளர் ஆகியோரின் தகுதிகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்படி 21 வயதுக்கு குறையாத பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. (அப்போது இலங்கையர்கள் என்றால் பிரித்தானிய முடியாட்சியின் குடிகள் தான்) மீண்டும் 1953 ஆம் ஆண்டின் 25 ஆம் எண் நகரசபைச் சட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்ட போது இலங்கை பிரஜைகளுக்கு மட்டும் வாக்காளர்களாக ஆகும் தகுதியுண்டு என்று மாற்றப்பட்டது. 1963 இல் உள்ளூராட்சி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு நகர சபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரிக்கப்பட்டது.

1978 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, நகராட்சி நிர்வாக அமைப்பு மற்றும் சட்ட விதிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்படி, 1979 ஆம் ஆண்டு விகிதாசார வாக்குப்பதிவு முறையில் தான் மாநகர சபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மாநகர சபை சட்டம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.


1866 இல் கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1937 வரை கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாடு 71 வருடங்கள் முழுமையாக ஐரோப்பியர்களின் கைகளிலேயே இருந்தது. கொழும்பு மாநகர சபையின் முதலாவது இலங்கை மேயர் என்ற பெருமை திரு ரட்ணஜோதி சரவணமுத்து அவர்களுக்கே உண்டு. அதுபோல அவரின் மனைவி திருமதி நேசம் சரவணமுத்து இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் பிரதிநிதி ஆவார். பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க 1940 இல் கொழும்பு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் மூன்றாவது சுதேசிய மேயர் எனக் கூறலாம். இந்நாட்டின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும் போது இலங்கையின் ஜனாதிபதியாகவும் , பிரதமராகவும் , அதிகாரமிக்க அமைச்சர்களாகவும் பதவி வகித்த பலர் கொழும்பு மாநகர சபையின் ஊடாகவே அரசியல் களத்திற்கு வந்தவர்கள் என்று கூட கூற முடியும். கொழும்பு மாநகர சபையானது இந்நாட்டின் தேசிய அரசியலில் வலுவான செல்வாக்கு செலுத்திய ஒரு மையம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

1869 இல், கொழும்பு நகர சபையை இல்லாது செய்யும்படி நகரவாசிகள் சிலர் சமர்ப்பித்த மனு காலனித்துவ செயலாளரால் சட்ட சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

1905 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை 256 ஆக இருந்தது. ரிக்ஸாக்களின் எண்ணிக்கை 2369. சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வண்டிகளின் எண்ணிக்கை 1676 ஆகும். குதிரை வண்டிகளின் எண்ணிக்கை 191.

1905 இல் கொழும்பு நகரில் மின்சார டிராம்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 6,555,338 என மதிப்பிடப்பட்டுள்ளது. மைல்களின் அடிப்படையில், அந்த ஆண்டு ஓட்டப்பட்ட மைல்களின் எண்ணிக்கை 814,725 ஆகும். மின்சார டிராம் பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ஒன்றரை மைல்களுக்கு 025 சென்ட் ஆகும். இதேவேளை, வடக்கு கிழக்கிலிருந்து கொழும்புக்கு செல்லும் பிரதான பாதையான விக்டோரியா பாலம், அந்த வருடம் கொழும்பு மாநகர சபைக்கு 92,676 ரூபா வருமானமாகப் பெற்றுள்ளது.

1899 இல், கொழும்பு நகரசபை மாநகர சபையானது, கொழும்பு நகரில் ஒரு விளக்கைப் பராமரிப்பதற்கான கட்டணமாக வருடத்திற்கு 45 ரூபாய் செலுத்தி 2000 விளக்குகளை நிறுவ எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதே ஆண்டில் பொது போக்குவரத்துக்காக மின்சார ட்ராம் போதுப்போக்குவரத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது.

1920 இல் கொழும்பின் மக்கள் தொகை 300,000 ஆக இருந்தது . 1939 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கொழும்பின் சனத்தொகையில் 25% பேர் சேரிகளில் வசிப்பதாகவும், இதேபோன்ற மற்றொரு சதவீதத்தினர் இதேபோன்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டன.

1943 ஆம் ஆண்டில், Bousted நிறுவனத்திற்கு 3,663,443 ரூபாவை செலுத்திய பின்னர் , டிராம் வண்டிச்சேவை கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமானது. 1954 இல், கட்டணப் பேருந்து சேவை தொடங்கப்பட்டவுடன், அதுவரை இருந்த டிராம் ரயில்கள் அகற்றப்பட்டன. 1895 ஆம் ஆண்டில், Baustead நிறுவனம் வணிகரீதியாக மின்சாரம் தயாரித்து, கோட்டைப் பகுதி மற்றும் முக்கியமான அரசாங்க கட்டிடங்களை வெளிச்சமாக்குவதற்கு போதுமான மின்சாரத்தை வழங்கியது. 1927 இல், பவுஸ்டட் நிறுவனத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தை அரசாங்கம் வாங்கியது. அதே நேரத்தில், அரசு மின்சாரத் துறையும் தொடங்கப்பட்டது. 1946 இல் அரசாங்க மின்சார திணைக்களம் 372,848 ரூபாயை இலாபம் ஈட்டியுள்ளது.

கொழும்பில் வாழும் நாய்களும் நகர சபையால் விதிக்கப்பட்ட வரிக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1905 ஆண்டளவில், நாய்களை வளர்க்கும் ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஒரு நாய்க்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் அந்த வருடத்தில் மாநகர சபையின் வருமானமாக ரூபா 5382/= கிடைத்தது. மேலும் அந்த ஆண்டில் 2072 தெருநாய்கள் மாநகர சபையின் பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டு அவற்றில் 1374 நாய்கள் அழிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபையால் தெமட்டகொட மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் இரண்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வந்தன. 1905 ஆம் ஆண்டு மனித நுகர்வுக்காக இந்தக் கடைகளால் கொல்லப்பட்ட செம்மறி ஆடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை 86,956 ஆகும் . அதிலிருந்து கிடைத்த மாநகர சபையின் வருமானம் 46,614 ரூபாவாகும். மேலும், அந்த ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அளவு 227,206 இறாத்தல்களாகும்.

1905 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், நகரசபை குப்பைகளை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுடன், அந்த முதல் வருடத்திற்கான செலவு 33,000/= ரூபாவாகும்.

கொழும்பில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, கோடை காலத்தில் நகர வீதிகளை தண்ணீரால் நனைப்பதான் மூலம், நகரின் தூசியை குறைக்கலாம் அப்போது எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக 1905 இல் செலவிடப்பட்ட தொகை 10,799 ரூபாய்கள் ஆகும்.

1879 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் விலங்குகளை அறுப்பதற்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை அதிகரித்ததற்கு எதிராக கொழும்பு இறைச்சிக் கடைக்காரர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போதைய நாளிதழ்களில் இது பெரிதாக பேசப்பட்டன. அப்போதெல்லாம் வேலைநிறுத்தங்கள் இலங்கைக்கு அந்நியமானதாக இருந்தது. இலங்கை மக்களும், அரசாங்கமும் அதற்கு எதிர்கொண்டது கிடையாது. “கத்தலிக் மெசேஞ்சர்” நாளிதழ் "தொழில்முறை குழுவொன்று தமது கோரிக்கைக்காக தமது வியாபார ஸ்தலத்தை மூடிய முதல் சந்தர்ப்பம் இது என்றது. 

இலங்கையின் இறைச்சிக் கடைக்காரர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இலங்கையின் வரலாற்றில் பெரிதாக ஆராயப்படாத ஒன்று. அச்சுத் தொழிலாளர் போராட்டம் கூட 1893 இல் தான் நிகழ்ந்தது என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். “மகாராணியின் பிரஜைகள் மரக்கறி சொதியுடன் உணவு உன்ன வைத்துவிட்டார்கள்.” என்று சிலோன் டைம்ஸ் பத்திரிகை நையாண்டியுடன் கட்டுரை தீட்டியது.

கொழும்பு மாநகர சபையின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். மாநகர சபைக் கட்டிடம் எங்கே இயங்கியது. எப்படி உருவானது. எப்படியெல்லாம வளர்ச்சி பெற்றது என்கிற சுவாரசியமான தகவல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி - தினகரன் - 07.08.2022

தெவட்டகஹ பள்ளிவாசல்: அதிசயம் நிகழ்ந்த மஸ்ஜீத்? (கொழும்பின் கதை - 36) - என்.சரவணன்

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள லிப்டன் சுற்று வட்டத்துக்கு அருகில் உள்ள தெவடகஹ ஜும்மா மஸ்ஜித் கொழும்பு நகரின் மிக முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். கொழும்பின் மையத்தில், பலரால் கவரக்கூடிய முக்கிய பிரதேசத்தில் இது அமைந்திருக்கிறது. மிகப் பழமையான பள்ளிவாசலும் கூட. முஸ்லிம்கள் மட்டுமன்றி வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் பலரும் கூட ஒன்றுகூடி வணங்கிச் செல்லும் இடமாக அது திகழ்கிறது. பல அரசாங்க பெரிய ஆஸ்பத்திரிகளும் இதைச் சூழ இருப்பதால் பலர் நோய்கள் தீர வேண்டி வணங்கிச் செல்லும் இடமாகவும் இது இருக்கிறது. எனவே பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்த பள்ளிவாசலுக்கு வந்து செல்கிறார்கள்.

1802ஆம் ஆண்டு இங்கே முஸ்லிம் புனித யாத்திரிகரான ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் அவர்களின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டதாக பல முஸ்லிம் மூல தகவல்கள் தெரிவிக்கின்றன.  அரேபியாவில் உள்ள அராஃபத்திலிருந்து ஆதாமின் சிகரத்திற்கு புனித யாத்திரையாக வந்த வேளையில் அவர் மறைந்தார். அவர்  இங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். இந்த பள்ளிவாசலின் முக்கிய அம்சமாக அதனைக் குறிப்பிட முடியும்.

"தெவட்டகஹ பள்ளிவாசல்" என்று அழைக்கப்படுவதைப் போல “ஷேக் உஸ்மான் வலிஉல்லாஹ் தர்கா மஸ்ஜீத்” (Sheik Usman Vali-ulah Darga Mosque) என்றும் இன்று இதனை அழைக்கிறார்கள். அதிசயம் நிகழ்ந்ததாக நம்பப்படும் கதைகளைக் கொண்ட தர்காக்கள் இலங்கையில் சிலவற்றைக் குறிப்பிட முடியும் அவற்றில் இது முக்கியமானது.

இந்தப் பள்ளிவாசலைக் கடந்துசெல்லும் “எந்த முஸ்லிம்களும் தமது மரியாதையை செலுத்தாமல் தாண்டுவதில்லை.” என்கிற பொது அப்பிப்பிராயமும் உண்டு.


அதுமட்டுமன்றி பெண்களும் உள்ளே சென்று வணங்கிச் செல்லும் வணக்கஸ்தலமாக அது திகழ்கிறது. கொழும்பில் வெள்ளியன்று ஜூம்மா தொழுகை முடித்துச் செல்ல பலர் ஒன்று திரளும் இடம். எனவே தான் முஸ்லிம் மக்கள் தமது தமது எதிர்ப்புக் கூட்டங்களையும் அதிகமாக நடத்தும் இடமாக இது திகழ்கிறது.

அரேபியாவின் அரபாத்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்து; ஆதாமின் சிகரத்திற்குச் (அதாவது பௌத்தர்கள் சிறிபாத என்றும், இந்துக்கள் சிவனொளிபாத மலை என்றும் அழைக்கப்படும் மலைக்கு) சென்று, பின்னர் இலங்கையில் தங்கிவிட்ட முஸ்லிம் சமயத் துறவி செயிதினா அஸ்-ஷேக் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மானின் கல்லறை இருக்கும் 150 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் அது. இந்த மஸ்ஜித் உருவான வரலாறு பற்றி ஒரு சுவாரஸ்யமான பின்னணி கதையொன்று உள்ளது. வாய்மொழிக் கதையாக இந்த கதை மிகவும் பிரபலமானது.

200 ஆண்டுகள் பழமையான கதை அது. 

1820 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த கறுவாத்தோட்டப் பகுதி மரங்கள் நிறைந்த வனாந்திரப்  ஒரு எண்ணெய் விற்கும் சிங்களப் பெண், தனது குடும்பத்தை உழைத்துக் காக்கும் ஒரே ஒரு பெண்.அவர் நாளாந்தம் பம்பலப்பிட்டியிலிருந்து கறுவாத்தோட்ட காட்டு வழியாக மருதானைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இந்த காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த வேளை அவர் ஒரு முந்திரி மரத்தின் வேரில் தடுக்கி விழுந்தார். அப்படி விழுந்ததில் அவரின் மண் பானை துண்டு துண்டாக உடைந்தது. அதைத் தாளாமல் கதறி அழுதார். “என் குடும்பத்திற்கு இன்று உணவு இல்லை. என்னுடைய ஒரே வருமானம் அழிந்து விட்டது. ஐயோ! எனது குடும்பம் இன்று பட்டினி கிடக்க வேண்டுமே” என புலம்பி அலுத்துக் கொண்டிருந்தார். அந்த அழுகையிலேயே களைத்துப் போய், அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டார் அந்தப் பெண். அப்போது ஒரு குரல் அவரை எழுப்பியது. அது ‘விரக்தியடைய வேண்டாம்..,விரைவில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று அவருக்கு உறுதியளித்தது. அப்பெண் நிமிர்ந்து பார்த்தார், அங்கே யாரையும் காணவில்லை, விரக்தியில் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருந்தார்.

மீண்டும் அந்தக் குரல் உறுதியளிக்கும் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னது. அப்பெண்ணால்  இதை நம்பமுடியாததாக இருந்தது. ஏனென்றால் அந்த அடர்ந்த காட்டில் அவர் எந்த மனிதனையும் அங்கே காணவில்லை. திடீரென்று பச்சை நிற ஜிப்பா அணிந்த ஞானி போன்ற தோற்றத்தில் ஒரு முதியவரைக் அப்பெண் கண்டார். அம்மனிதனின் தோற்றத்தால் அப்பெண் உற்சாகமாக நோக்கினார்.

"நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை," என்று அவர் அப்பெண்ணிடம் கூறினார். “உன் எண்ணெயை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். எனக்கு ஒரு பானை மட்டும் கொண்டு வா” என்றது அந்தக் குரல்.

அந்தப் பெண் மருதானை நோக்கிப் புறப்பட்டு, வழக்கமான தனது வாடிக்கையாளரான மாமினா லெப்பை என்ற முஸ்லிம் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அவரது தாயிடம் ஒரு புதிய பானையைக் தரும்படிச் சொன்னார். வழக்கத்துக்கு மாறான இந்த வேண்டுகோளைக் கேட்ட மமினா லெப்பை அதுபற்றி அப்பெண்ணிடம் வினவியபோது; அவர்களிடம் "நான் திரும்பி வந்து நடந்ததைச் சொல்கிறேன்" என்று கூறி பானையுடன் காட்டிற்குத் திரும்பிய அப்பெண் முதியவர் ஒரு `தெவட்ட' மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள். தேவதா மரம் என்பதை தமிழில் “அந்திமிரியம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். முதலில் உடைந்த இடத்தில் பானையை வைக்கச் சொன்னார். அம்மனிதர் தன் பாதத்தை தரையில் அழுத்தினார் அத்தரையில் இருந்து எண்ணெய் குமிழியாக பொங்கி வழிந்தது வெளிவந்தது.

அந்தப் பெண் திகைப்புடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு முந்திரி மரத்திலிருந்து சில இலைகளைப் பறித்து, அவற்றைக் கொண்டு எண்ணெயை அள்ளி அப்பானையை பானையை நிரப்பச் சொன்னார். அந்தப் பானை நிரம்ப எண்ணெய் கிடைத்தது. "இனி உன் தொழிலைச் செய்யலாம்," என்று அவர் அப்பெண்ணிடம், மேலும் அம்முதியவர் இதைப் பற்றி முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும்படியும், அவர் அங்கே தோன்றிய இடத்தை அவர்களுக்குக் காட்டவும் கேட்டுக் கொண்டார். நன்றி அப்பெண் அந்தப் பெரியவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்று விடைபெற்றார்.

இந்தச் சம்பவத்தை கூறுவதற்காக அப்பெண் மருதானையிலுள்ள மமினா லெப்பையின் வீட்டுக்குக்கு விரைந்தார். அவர் உடனே பெரிய பிச்சை, மீரா கனீ ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு கறுவாத்தோட்டத்துக்கு விரைந்தார். அங்கு அந்த அற்புத அடையாளங்களை அவர்கள் நேரிலேயே கண்டனர். அதாவது உடைந்த குடம், சிந்திய எண்ணெய், மரமுந்திரிகை மரம், எண்ணெய்யை அள்ளியெடுத்த இலைகள், தெவட்டமரம் என்பன அங்கே காணப்பட்டன.

அந்த ஞானி யார் என்று அவர்களால் அறியமுடியவில்லை. ஆனால், “யாஸீன் சூறா” வையும், “பாத்திஹா” வையும் ஓதிய பின் “வொலியுல்லாஹ் அவர்களே! தங்கள் அற்புதங்களை காணச் சந்தர்ப்பம் அளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் எங்களுக்குத் தாங்கள் யார் என்பதைக் காட்டித்தருவானாக.” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அங்கே சூழ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அந்த இடத்தில் அறங்காவலராக மமினா லெப்பை நியமிக்கப்பட்டார்.

இந்தக் வாய்மொழிக் கதையின் நம்பகம் ஒருபுறம் இருக்க அதனை மறுப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மேலும் சமாதி வழிபாடுகளை மறுக்கும் முஸ்லிம் சமூகத்து பிரிவினரும் இந்த பள்ளிவாசலை விமர்சிக்கவே செய்கிறார்கள்.

1847 இல், இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்துக்கு மொரோக்கோ - மஃரிப் தேசத்தைச்சேர்ந்த அஷ்ஷெய்கு அலி ஜபருத் மெளலானா என்னும் மார்க்கப்பெரியார் இலங்கை வந்தார். கொழும்பு மருதானை மசூதியிலேயே அவர் தங்கினார். தவட்டகஹா அதிசயம் பற்றியும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையன்று, ஜும்மா தொழுகைக்குப் பிறகு, கதீப் ஹஸன் லெப்பை, ஷெய்கு அப்துல் காதிர், போன்ற சிலருடன் ஸயாரத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பாத்திஹா ஒதினார்கள். அலி ஐபரூத் மௌலானா அவர்கள் அந்த வலியுல்லாஹ் சமாதிக்கு முன்னால் தன்னை ஒரு அவர் தனது ஜுப்பா' (அங்கி) மூலம் தன்னை மூடிக்கொண்டு, கல்லறையில் மண்டியிட்டு,  தொழுதார். இறுதியில் அவர் போர்வையிலிருந்து வெளிப்பட்டபோது அவரது முகம் தெய்வீக ஒளியால் பிரகாசித்தது. கூடியிருந்த முஸ்லிம்களுக்கு அவர் இப்படி உபதேசித்தார்கள்.

"ஓ, எல்லாம் வல்ல அல்லாஹ், இது மிகவும் மரியாதைக்குரிய புனிதர். அவரது பெயர் செயத் உஸ்மான் சித்திக் இப்னு அப்துர்ரஹ்மான், ஆதாமின் சிகரத்திற்கு புனிதப் பயணமாக இந்தத் தீவுக்கு வந்து சில காலம் அருகாமையில் வாழ்ந்த பிறகு இங்கேயே மரணமடைந்தார். பின்னர் கதீப் தம்பி லெப்பை பக்கம் திரும்பி, “இது எந்த மாதம்?” என்றார்.

பெண்கள் இந்த பள்ளிவாசலின் பிரதான தொழுகை மண்டபத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் அவர்களுக்கென தனியான தொழுகைப் பிரிவு அங்கு உள்ளது. இது இலங்கை முழுவதும் உள்ள மசூதிகளில் பொதுவான அம்சமாகும்.

பள்ளிவாசலின் கட்டட வரலாறு

இந்தப் பள்ளிவாசல் இருந்த நிலம் ஆரம்ப காலத்தில் ஒரு கண்ணகி கோவில் (சிங்களத்தில் பத்தினி தெய்யோ) இருந்த இடம் என கூறும் சிங்களவர்கள் உள்ளார்கள். அதற்கான பழங்கால ஓவியங்கள், பாடல்கள் என்பவற்றையும் கூட கட்டுரைகளாகவும், நூல்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இருக்கலாம். அப்படியே இருந்தாலும் கூட அது அழிக்கப்பட்டுத் தான் இது கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. மேலும் இது மமினா லெப்பையின் காலத்திலேயே ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரங்களும் உண்டு.

1848 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கம் வீதி அபிவிருத்திக்காக சில நிலங்களை கையகப் படுத்தியது. அதில் மமினா லெப்பையின் நிலமும் அடங்கும். அதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க ஒத்துக் கொண்டது. அப்போது மரணப் படுக்கையில் இருந்தார். இழப்பீடாக தற்போது பள்ளிவாசல் உள்ள நிலத்தைத் தரும்படி மமீனா லெப்பை கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய ஆங்கிலேய ஆளுநர்  சேர் சார்ல்ஸ் ஜஸ்டின் மெக்கார்த்தியால் (Sir Charles Justin McCarthy)1863 ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி இந்த நிலம் அக்கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்டது. (கொழும்பு கச்சேரி பதிவிலக்கம் No.A/16/381)

பிரதான வீதியோடு சேர்ந்தார் போல் அமைந்திருக்கும் இந்த பெரிய பள்ளிவாசல் முகலாய கட்டட அமைப்பின் சாயலில் வட்டக் கூரை வடிவத்திலான கோபுரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த குவிமாடம் 1885 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, 1905 ஆம் ஆண்டு ஒரு தமிழ் ரத்தின வியாபாரி தனது திருடப்பட்ட நகைகளையும் ரத்தினங்களையும் கண்டுபிடிக்க நேர்த்திக் கடன் வைத்து அது நிறைவேறியதும் 1905 ஆம் ஆண்டில் மசூதியை ஒட்டி யாத்ரீகர்களுக்கான தங்குமிடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.

இரு உயரமான பெரிய வட்டக் கோபுரங்களில் ஒன்று 500 துளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது அவற்றில் பல புறாக்கள் வந்து தங்குவதைக் காணலாம். நாளாந்தம் கூடும் பெருமளவு புறாக்களுக்கு அங்கே தீனி போடும் வழிபாட்டாளர்களையும் அங்கே காணலாம். அங்கிருக்கும் நீர் தடாகத்தில் அவை நீர் அருந்திக் குளித்துச் செல்வதையும் காணலாம்.

அருகிலேயே இருக்கிற கொழும்பு நகரசபை மண்டபக் கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் கட்டும் போது இந்த குவிமாடத்தின் சாயலில் தான் கட்டினார்கள் என்கிற ஒரு நம்பிக்கையும் கூட பரவலாக இருக்கிறது.

தம்பிலிங்கம் செட்டியார் சமாதிக்கு அருகில் நிரந்தரமாக எரியும் எரிவாயு விளக்கை அமைத்துக் கொடுத்தார். எஸ்.தம்பி முதலியார் இந்த பள்ளிவாசலின் வாயில் பகுதிகளை அமைத்துக் கொடுத்தார். பல முஸ்லிம் தனவந்தர்கள் இதன் கட்டுமானப் பணிகளுக்காக நிறைய உதவியிருக்கிறார்கள்.

1983 ஆம் ஆண்டு அன்றைய போக்குவரத்து, முஸ்லிம் அலுவல்கள் கலாசார அமைச்சராக இருந்த எம்.எச் முஹமட் அவர்களால் இந்த மஸ்ஜீத்தின் முன்னர் இருந்த தோற்றம் புதுப்பிக்கப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. ஆனால் பிரதான கட்டிடம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மாற்றப்படாமல் அப்படியே பேணப்பட்டு வருகிறது. கொழும்பு வரும் உல்லாசப் பிரயாணிகள் பலர் இதனை தேடிக் கண்டு அனுபவித்துச் செல்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் இந்த மசூதியில் கூடுகிறார்கள்.

இந்த பள்ளிவாசலின் கட்டடக் களையும், அங்கே உள்ள மொசைக் கற்களின் அலங்காரமும் சிறப்பாக பேசப்படுகின்றன. 



றோயல் கல்லூரி : இலங்கையின் முதலாவது அரசாங்க பாடசாலை (கொழும்பின் கதை - 35) -என்.சரவணன்

இலங்கையின் முன்னணி கல்லூரியாக திகழ்வது கொழும்பு றோயல் கல்லூரி (Royal College). தமிழில் வேத்தியர் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இது தான் இலங்கையின் முதலாவது அரசாங்க பொதுப் பாடசாலை. 1835ஆம் ஆண்டு இது நிறுவப்பட்ட இக்கல்லூரி இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையாக திகழ்ந்தாலும் ஒரு தனியார் கல்லூரியின் வடிவத்தைத் தருவதற்குக் காரணம் இலகுவில் மாணவர்களை சேர்க்கமுடியாத அளவுக்கு போட்டியும், அதன் காரணமாக இறுக்கங்களும் அதிகம் உள்ள இலங்கை பாடசாலை இது தான்.

இக் கல்லூரியில் தமது பிள்ளைகளை சேர்த்துவிட கனவு காணாத பெற்றோர் அரிதென்றே கூறலாம். இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலர் இங்கே தான் கற்றார்கள்.

இலங்கையின் பணக்காரர்களின் கோட்டையாக அறியப்படும் கறுவாத்தோட்டப் பகுதியில் 15.5 ஹெக்டேர் பரப்பில் பெரிய விளையாட்டு வளாகம், நீச்சல் தடாகம் என பல வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு நூற்றாண்டை எட்டப்போகும் இந்தக் கல்லூரியின் பின்புலம் முக்கிய வரலாற்றுப் பாத்திரத்தையும் கொண்டிருக்கிறது.


ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இலங்கையில் தமது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல மாற்றங்களை செய்யத் தொடங்கினார்கள். கோப்பி, தேயிலை போன்ற பணப்பயிர்களின் உற்பத்தி வேகம் தொடங்கப்பட்டதும் புதிய பாதைகளை உருவாக்குதல், இலங்கைக்கான அடிப்படை உட்கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்வதற்காக பல விடயங்களைத் தொடங்கினார்கள். 1833இல் கோல்புறூக் தலைமையிலான ஆணைக்குழு இந்த மாற்றங்களை செய்வதற்கான பரிந்துரைகளை செய்தது. அதன் மூலம் தான் இலங்கைக்கான யாப்பும் முதற்தடவை உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பரிந்துரை தான் பிரித்தானிய பொதுப் பள்ளிக்கூடங்களைப் போல அரசாங்க பள்ளிக்கூடங்களை தொடக்குவதற்கான தொடக்கமாகும்.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான மிஷனரி பாடசாலைகள் அப்போது ஆரம்பமாகியிருந்தன. இலங்கையின் முதலாவது பிரிட்டிஷ் ஆளுநரான பிரெடிரிக் நோர்த் (Frederick North) காலத்தில் 1800 இல் யாழ் குடா நாட்டில் மாத்திரம் கிறிஸ்தியான் டேவிட் பாதிரியாரைக் கொண்டு 47 மிஷனரி பாடசாலைகளை தொடக்கினார். ஆனால் அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஆளுநர் மெயிற்லான்ட் (T. Maitland) 1805 இல் அவற்றை நடத்துவதற்கான வளங்கள் போதாதென்று மூடிவிட்டார்.  1812 இல்  பப்டிஸ்ட் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றை நடத்த அரசு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அவற்றை நடத்த அனுமதியளித்திருந்தது. 1833 இல் 15 பப்டிஸ்ட் பள்ளிகளும், 90 வெஸ்லியன், 78 அமெரிக்கன் மிஷன் மற்றும் 53 மிஷனரி சொசைட்டி பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜோசப் மார்ஷ் பாதிரியார்

1835 ஆம் ஆண்டு றோயல் கல்லூரி தொடக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் 1831 இல் மெட்ராசிலிருந்து வந்த ஜோசப் மார்ஷ் (Joseph Marsh) பாதிரியாரால் அது தனிப்பட்ட ரீதியில் தான் தொடங்கப்பட்டது. அரசாங்கத்துக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 28 வயதேயான ஜோசப் மார்ஷ் பாதிரியார் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர். கோட்டேயில் இருந்த சேர்ச் மிஷனரி சொசைட்டியின் பணியாளராக அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். குறிப்பாக கணக்கியல், ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்காக அவர் அனுப்பட்டிருந்தார். 1835 ஆம் ஆண்டு அவர் புறக்கோட்டை, புனித பவுல் தேவாலயத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இங்கே தான் றோயல் கல்லூரிக்கான ஆரம்பம் இடப்பட்டது.

Rev. Joseph Marsh, Sir robert Wilmot horton, John Barnabas Cull

1837ஆம் ஆண்டு அவர் நூலகத்தைத் தொடங்கினார். பாடசாலை சஞ்சிகை ஒன்றையும் தொடங்கினார். இலங்கையின் முதலாவது பாடசாலைச் சஞ்சிகையாக அது தான் கருதப்படுகிறது. அவர் ஒரு அச்சகத்தையும் நிறுவினார். பரிசளிப்பு நிகழ்வுகளையும் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தார். அப்போதே கிரிக்கெட் விளையாட்டையும் ஊக்குவித்திருக்கிறார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கடும் சுகவீனமுற்றார். 1838 ஆம் ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் அவரின் நாட்டுக்கே திரும்பினார். ஆனால் அவர் தாய்நாடு போய் சேரவில்லை.  1839ஆம் ஆண்டு கடல் பயணத்தின் போதே அவர்  சென்ற கப்பலிலேயே காலமானார்.  ஆனால் அவரின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்தனர். அவர் அப்போதைய கொழும்பு மாவட்ட நீதிபதி அன்ரூ வோக்கரின் சகோதரியைத் தான் மணமுடித்திருந்தார்.

ஜோசப் மார்ஷ் பாதிரியாரின் மகள் அக்னஸ் ஜேனின் கணவர் பார்குரோப்ட் போக் (ஜோசப் மார்ஷ்) பின்னர் இப்பாடசாலையின் அதிபராக ஆனார். றோயல் கல்லூரியின் வரலாற்றில் அதிக காலம் அதிபராக இருந்தவர் அவர் தான். அவர் பதவி வகித்த 1842 – 1870 காலப்பகுதிக்குள் தான் தங்குமிடம் (Boarding House) உருவாக்கப்பட்டது. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரியாக ஆக்கப்பட்டது. அதுபோல கொழும்பு அக்காடமி; குயின்ஸ் கல்லூரியாக ஆக்கப்பட்டது. மிகவும் கண்டிப்பான அதிபராக இருந்ததுடன், மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கிய ஒருவர். இலங்கையின் சுதேசிய மதங்களான பௌத்தம், சைவம் போன்ற மதங்களின் மீது அவரின் காட்டமும் இருந்தது பற்றிய குறிப்புகளையும் காணக் கிடைக்கிறது.

றோயல் கல்லூரியின் முதல் இடம்

முதன் முதலில் இந்தப் பாடசாலை எங்கே தொடங்கப்பட்டது என்கிற தகவல் வியப்பாக இருக்கும். புறக்கோட்டையில் ஐந்து லாம்பு சந்தியில் இன்றும் இருக்கிற புனித போல் (Chaplain of St Paul’s Church) தேவாலயம் இருக்கிறதல்லவா அந்த தேவாலயத்தின் வராந்தாவில் தான் இருபது மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. அப்போது இந்த இடம் வுல்பெண்டால் வீதி (22, Wolfendhal Street) என்று அழைக்கப்பட்டது. அந்த றோயல் கல்லூரியின் ஆரம்பப் பெயர் மேட்டுத்தெரு அக்காடமி (Hill Street Academy).

இந்தப் புறக்கோட்டைப் பகுதியில் அப்போது அதிகமாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான். இந்த இடத்தைச் சூழ இருந்த முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று கொச்சிக்கடையில் இருந்து செட்டியார் தெருவுக்குள் நுழையும் முன்னர் உள்ள சுற்றுவட்டத்திற்கருகில் இடதுபுற மூலையில் இருக்கிற புனித தோமஸ் தேவாலயம் (Malabar Episcopalian Church, St. Thomas’s). இது ஆங்கிலேய ஆளுநர் சேர் ரொபர்ட் பிரவுன்றிக் (Sir Robert Bownrigg)1816இல் கட்டியது. இந்து சமுத்திரத்தைப் பார்த்தப்படி மேட்டுப் பகுதியில் கட்டப்படிருக்கிறது. எனவே “மேட்டுத்தெரு சேர்ச்” என்றும் அழைப்பார்கள். 1815இல் கண்டியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் ஆங்கிலேயர் கட்டுப்பட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது இவரின் தலைமையில் தான். இரண்டாவது தேவாலயம் தான் முன்னர் கூறியபடி ஐந்து லாம்பு சந்தியில் உள்ள  (St. Paul’s Church). இது முன்னர் போர்த்துகேயர்களின் வழிபாட்டிடமாக இருந்தது. இயங்காமல் இருந்த இந்த புனித போல் தேவாலயம் மீண்டும் 1816 யூலை 28 இலிருந்து வழிபாட்டுக்காக திறக்கப்பட்டன.  அங்கு தான் றோயல் கல்லூரியின் ஆரம்பம் நிகழ்ந்தது.

1836 இல் அன்றைய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்டன் (Sir Robert Wilmot-Horton) கொழும்பு அக்காடமி (Colombo Academy)  என்று இதன் பெயரை மாற்றி அரசாங்க பொதுப் பாடசாலையாக ஆக்கினார்.  எனவே றோயல் கல்லூரியின் தோற்ற நாளாக 25.10.1836ஆம் திகதியை பதிவு செய்கிறார்கள்.  அவர் தான் இலங்கையில் கட்டாய சேவை “இராஜகாரிய முறை”யை ஒழித்தார். ஜோசப் மார்ஷ் பாதிரியார் அந்தப் பாடசாலையின் முதலாவது அதிபராக ஆகி அரசாங்க சம்பளம் பெற்றார். அவருக்கான ஆண்டு சம்பளமாக 200 பவுண்டுகள் வழங்கப்பட்டது. அதன் இன்றைய பெறுமதியில் கூறுவதாயின் ஐந்து மில்லியன் எனலாம். ஆளுநர் தான் அதன் புரவலராக இருந்தார். 

ஆரம்பத்தில் ஆங்கில, டச்சு சமூக பின்னணியுள்ளவர்களே கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பின்னரே சுதேசிய இலங்கையைச் சேர்ந்த வசதி படைத்த மேட்டுக்குடியினர் முதலில் நுழைந்தனர்.

புறக்கோட்டை மெசேஞ்சர் வீதியில் 1836ஆம் ஆண்டு அமைந்திருந்த பாடசாலைக் கட்டிடம்

1836 ஜனவரியில் இந்த மேட்டுத்தெரு அக்காடமி கொழும்பு அக்காடமியாக பெயர் மாற்றப்பட்டு கொழும்பு புறக்கோட்டை, மெசேஞ்சர் வீதியில் உள்ள 144 ஆம் இலக்கக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது, இன்று அது சனநெருக்கடிமிக்க சந்தைப் பகுதி. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அதே ஆண்டு  அங்கிருந்து சென் செபஸ்தியன் வீதியில் உள்ள மேட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதற்கு முனனர் அது பொலிஸ் குதிரை லாயமாக இருந்தது. இன்னும் உறுதியாக சொல்வதாயின் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த “தவச” கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள மிகுந்து மாவத்தை சிங்கள வித்தியாலயம் இப்போது அந்த நிலத்தில் தான் அமைந்திருக்கிறது. 

நீண்ட காலமாக (1836 - 1913) சென் செபஸ்தியன் வீதியில் இங்கே தான் இயங்கியது

அதுமட்டுமல்ல இங்கே தான் சுமார் 75 ஆண்டுகளாக றோயல் கல்லூரி இயங்கியது. தொடக்கத்தில் அங்கிலிக்கனிசத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஒரு மத சார்பற்ற பள்ளிகூடமாகவே இயங்கியது. 

1859ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனமான குயின்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆங்கில பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுப் பரீட்சையில் தொற்றுவதாயின் அப்போது கொழும்பு அக்காடமியில் தான் பரிட்சை எழுத வேண்டியிருந்தது. 1865 ஆம் ஆண்டு இலங்கையின் கல்வி நிலை பற்றி ஆராய்ந்த மோர்கன் குழு (Morgan Committee) மேற்படிப்புக்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்க புலமைப்பரிசில் வழங்கவேண்டும் என்கிற தீர்மானத்தைத் தொடர்ந்து; கல்விக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரித்தானியாவில் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கே அடிப்படைக் கல்விக்கான உரிமை வென்றெடுக்கப்பட்ட அதே 1870 இல் தான் இலங்கையில் மோர்கன் ஆணைக்குழுவின் கல்வி குறித்த முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கள, தமிழ் மொழிக் கல்விக்கான சுதந்திரம், மிஷனரி பள்ளிக்கூடங்களிலும் சொந்த மதங்களைக் கற்கும் உரிமை போன்றவற்றை பரிந்துரைத்த ஆணைக்குழு அது. அதன் விளைவாக 1859 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரியும், கொழும்பு அக்காடமியும் ஒன்றாக இணைக்கப்பட்டது. குயின்ஸ் கல்லூரி என்றும் பெயர் மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது உயர் கல்வி நிறுவனம் அது தான்.


1881 இல் விக்டோரியா மகாராணியின் அரச அனுமதியுடன் கொழும்பு அக்காடமியானது; “றோயல் கல்லூரி” (Royal College Colombo) என்று பெயர் மாற்றப்பட்டது. 1881ஆம் ஆண்டு 31 யூலை வர்த்தமானிப் பத்திரிகையில் இதற்கான அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அப்போது கல்லூரியின் அதிபராக ஜோன் குல் (John Barnabas Cull) இருந்தார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பரீட்சை 1880 இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதும் அதே ஆண்டு 21 அப்பரீட்சைக்கு தோற்றினர். அவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் 1915 ஆம் ஆண்டு மொத்தம் 2151 மாணவர்கள் அப்பரீட்சைக்கு தோற்றினர் அதில் 236 பெண்களாக இருந்தனர். இதன் அறிமுகத்தோடு பலர் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக செல்லும் வாய்ப்பு விரிவானது.  


றோயல் கல்லூரிக்கான இடவசதியைப் பெருப்பிப்பதற்காக 1911 ஆம் ஆண்டு ரீட் அவெனியுவில் பெரிய காணியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இலங்கையின் முதலாவது விமானமோட்டும் முயற்சியின் போது அந்த விமானம் அங்கே விழுந்து கட்டிடத்துக்கும் சிறு சேதத்தை விளைவித்தது. 1913 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்துக்கு கல்லூரி கொண்டுவரப்பட்டது. இன்றைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடம் தான் அது. 1923 இல் ரீட் அவெனியுவில் புதிதாக கட்டப்பட்ட இன்னொரு கட்டிடமான விக்டோரியா கோபுர வடிவத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே 1914 இல் றோயல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்படவேண்டும் என்று உயர்கல்விக் குழு பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அரசாங்க சபையில் பிரெடெரிக் டோர்ன்ஹோஸ்ட் (Frederick Dornhorst, KC) நீண்ட உரையை வழங்கினார். மேலும் அன்றைய ஆளுநர் சார்மர்ஸ் (Lord Chalmers) கூட கொழும்பு பல்கலைக்கழகம் தனியாக இயங்கவேண்டும் என்றார்.

இதன் விளைவாக இந்தக் கட்டிடங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதே கட்டிடத்துக்கு சற்று அப்பால் கட்டப்பட்ட கட்டிடத்தில் றோயல் கல்லூரி இயங்கத் தொடங்கியது. 1923 ஆம் ஆண்டு ஆளுநர் வில்லியம் மனிங் ஆட்சியின் போது அவரின் கவனிப்பில்  தான் தற்போதைய நிலையான கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. இன்றுவரை அங்கே தான் நிலைத்து இயங்கி வருகிறது.


1940ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியில் றோயல் கல்லூரி மூடப்பட்டு இக்கட்டிடங்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்கான மருத்துவமனையாக இயங்கியது.  1945 இல் யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் பழையபடி இயங்கத்தொடங்கியது.

சேர் முத்துக்குமாரசுவாமி, இராமநாதன் சகோதரர்கள், அநகாரிக தர்மபால, ஜே.ஆர், கொல்வின் ஆர் டி சில்வா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை பல அரசியல் தலைவர்கள் இங்கு கற்றவர்கள் தான். ரணில் விக்கிரமசிங்க செல்வந்த குடும்பத்தின் வாரிசு என்பதை அறிவீர்கள். ஆனால் அவருக்கு வாரிசுகள் கிடையாது அவரின் தற்போதைய சொத்துக்கள் அவருக்குப் பின்னர் றோயல் கல்லூரிக்கே உயில் எழுதி வைத்துவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

றோயல் கல்லூரியின் பல செயற்பாடுகளில் தமிழ் விவாத அணியையும் முக்கியமாக குறிப்பட முடியும். இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த தமிழ் விவாத அணி அது. நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன், றவுஃப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணியின் தலைமைப்பொறுப்பை வகித்தவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

றோயல் கல்லூரிக்காக கட்டப்பட்ட கட்டிடம் இன்று கொழும்பு பல்கலைக்கழகமாக

றோயல் கல்லூரியின் அதிபர்களாக சுமார் இலங்கை சுதந்திரமடையும் காலம் வரை ஆங்கிலேயர்கள் தான் இருந்து வந்தார்கள். அதன் பின்னர் தான் சுதேசியர்கள் அதிபர்களாக ஆனார்கள். இதுவரை ஒரு தமிழரும் அங்கே அதிபராக ஆனதில்லை.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் பலரை ஆண்டு தோறும் உள்வாங்கி அக்கல்லூரியின் தரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டே வருகிறது இக்கல்லூரி. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் சிவில் அதிகாரிகள் பலரை உருவாக்கிய கல்லூரி அது. ஆரம்பத்தில் உயர் வர்க்க, கொவிகம, வெள்ளாள ஆண்கள் பலர் கற்ற பள்ளிக்கூடமாகத் தான் இருந்தது என்கிறார் L.H.Gratiaen. 

20 மாணவர்களுடன் சிறு வராந்தாவில் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் இன்று 9000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற இலங்கையின் மிகப் பெரிய கல்லூரியாக இயங்கி வருகிறது.

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 24.07.2022



பதிப்புப் பண்பாட்டின் நினைவுச் சின்னமாகத் திகழும் வெஸ்லியன் சிட்டி மிஷன் - (கொழும்பின் கதை - 34) - என்.சரவணன்

ஆசியாவின் முதலாவது மெதடிஸ்ட் தேவாலயம் இலங்கையில் தான் நிறுவப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் டாம் வீதியில் உள்ள கச்சேரிக்கு எதிரில் இது அமைந்திருக்கிறது. 1816 ஆம் ஆண்டு கொழும்பு சிட்டி மிஷன் (Colombo City Mission) என்கிற பேரில் அமைக்கப்பட்ட இது இன்றும் அதே பேரில் தான் அழைக்கப்படுகிறது. அதேவேளை இந்த தேவாலயம் பல முக்கிய வரலாற்றுக் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதோடு பல கிறிஸ்தவ மிஷன்கள் இலங்கையை இலக்கு வைத்து வந்து சேர்ந்தன. அதற்கு முன்னர் ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தை தடை செய்து வைத்திருந்ததால் இத்தகைய மிஷன்கள் தமது மதப் பிரச்சார, மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் இல்லாது இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் வந்ததோடு அந்த நிலை மாறியது. அவ்வாறு வந்திறங்கிய மிஷன்களுக்கு ஆங்கிலேய அரசே போதிய ஆதரவை வழங்கியது.

  • லண்டன் திருச்சபைக் கழகம் - London Missionary Society (LMS) - 1805,
  • பப்டிஸ்ட் திருச்சபைக் கழகம்  - Baptist Missionary Society (BMS) - 1812,
  • வெஸ்லியன் மெதடிஸ்ட் திருச்சபை - Wesleyan Methodist Mission – (WMM) - 1814,
  • அமெரிக்கன் மிஷன் The American Mission, (ABCFM- American Board of Commissioners for Foreign Missions) - 1816
  • சேர்ச் மிஷன் கழகம் Church  (of   England)  Missionary  Society  (CMS) – 1817

இவற்றில் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கிய மிஷன்கள் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனும், அமெரிக்க மிஷனும் தான்.

தெற்காசியாவை ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆக்கிரமித்தபோது, ஆங்கிலேய மிஷனரிகள் பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி துருப்புக்களோடு சேர்ந்து நெருக்கமாக அவர்களைப் பின்தொடர்ந்தனர், 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சிலோன் முடிக்குரிய காலனியாக அறிவிக்கப்பட்டபோது, ஆறு பேர் கொண்ட மெதடிஸ்ட் பணியாளர்கள் டிசம்பர் 1813 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டனர். ஆறு மாத பயணத்தின் பின்னர் ஜூன் 1814 இல் அவர்களில் நான்கு பேர் தென்னிலங்கையின் வெலிகம கடற்கரையில் வந்திறங்கினர். இந்த இலங்கைப் பயணக் குழுவுக்கு தலைமை தாங்கியவர் டொக்டர் தோமஸ் குக் (Dr Thomas Coke). அவர் அந்தக் கடற்பயணத்தின் போது இறந்துவிட்டார். மற்றொருவர் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டார்.


அவர்களில் ஒருவர் வில்லியம் மார்ட்டின் ஹார்வர்ட் (William Martin Harvard). இன்னொருவர் ஆண்ட்ரூ ஆர்மர் (Andrew Armour) அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. ஹார்வர்ட் இந்தியா, பம்பாயில் மிஷனரிப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட போதும் அவர் இடைநடுவில் 1815ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை வந்து தனது குழுவோடு இணைந்து கொண்டார். அவர் ஒரு கைதேர்ந்த அச்சகர். மிஷனரிப் பணிகளை முன்னெடுக்க பிரசுரங்களே சிறந்த வழி என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். மார்ட்டின் ஹார்வர்ட் பம்பாயிலிருந்து அச்சு இயந்திரங்களை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றார். அதன்படி அச்சு இயந்திரம், அதற்கான மை, நான்கு பெட்டிகளுக்கு எழுத்துவார்ப்புக்கள், கடதாசிகள் அனைத்தையும் அங்கிருந்து கொண்டு வந்து சேர்த்தார் அவர்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள டாம் வீதியில் ஹார்வார்ட் வெஸ்லியன் சபைக்காக ஒரு நிலத்தை வாங்கினார். அங்கு தான் தேவாலயம் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப் பழமையான மெதடிஸ்ட் தேவாலயம் இது தான். வெஸ்லியன் மிஷன் ஹவுஸ் (Weslyan Mission House) 1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நத்தாருக்கு சற்று முந்திய நாள் தனது முதல் ஆராதனையை நடத்தியது. தேவாலயத்தின் உட்புறப் பகுதிகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. மேலும் வெளிப்புறமானது 1966 இல் மாற்றியமைக்கப்பட்டது.  இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள புகழ்பெற்ற  டோரிக் வடிவத்திலான  பிரன்சுவிக் வெஸ்லியன் சேப்பலின் (Liverpudlian Brunswick Wesleyan Chapel) தோற்றத்துக்கு நிகராக இன்றும் தோற்றமளிக்கிறது. அந்த தேவாலயத்தின் தோற்றத்தில் தான் இது அமைக்கப்பட்டது.

Liverpudlian Brunswick Wesleyan Chapel

யாழ்ப்பாணம் சென்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் வடிவமும் இப்படித்தான் இருக்கிறது.

இந்த தேவாலயம் ஆரம்பிக்கப்பட்டு சில காலத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு பாடசாலை அங்கே ஆரம்பிக்கப்பட்டது. அங்கே தான் வெஸ்லியன் அச்சகமும் உருவாக்கப்பட்டது. 1874ஆம் ஆண்டு 2ஆம் திகதி டேனியல் ஹென்றி பெரேரா பாதிரியாரால் வெஸ்லி கல்லூரி இங்கே உருவாக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதலாவது அதிபரும் அவர் தான். புறக்கோட்டைப் பகுதியின் சத்தங்களும், தூசுகளும், வெக்கையும் பாடசாலையை தொடர்ந்து அங்கே நடத்த இடையூறாக இருந்தது. இடவசதியும் போதாமையாக இருந்தது. 1895இல் இக்கல்லூரிக்கு பொறுப்பாக வந்து சேர்ந்த  ஹைபீல்ட் (Highfield) 1905ஆம் ஆண்டு இகக்கல்லூரியை இடமாற்றம் செய்தார். அந்தக் கல்லூரி தான் இன்று இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கிற பொரல்லையிலுள்ள வெஸ்லி கல்லூரி.

இலங்கையின் அச்சு ஊடக வரலாற்றின் முக்கிய திருப்பு முனையாக அமைந்த அந்த அச்சகம் கைமன் வீதியில் (Kayman’s Street) நிறுவப்பட்டது.  அது என்ன கைமன் வீதி என்கிறீர்களா? அது தான் பிற்காலத்தில் டாம் வீதி (Dam Street) என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது. டச்சு காலத்தில் கைமன் வீதி என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலேயர் காலத்தில் அது தம்ப வீதி (Damba Street) என்று அழைக்கப்பட்டது. தம்ப என்கிற பழ மரம் வழிநெடுக இரு மருங்கிலும் அப்போது இருந்திருக்கிறது. அதுவே பின்னர் டாம் வீதி என்று ஆகியிருக்கிறது.

மிஷனரி பாடசாலைகளுக்கான நூல்கள் தான் இந்த வெஸ்லியன் அச்சகத்தில் அச்சடிக்கபட்டன. குறிப்பாக ஞாயிறு பாடசாலைக்கான நூல்கள் அங்கே பிரசுரிக்கப்பட்டன. இந்த அச்சகம் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருந்த வேளை அன்றைய தேசாதிபதி சேர் ரொபர்ட் பிர்வுன்றிக் அச்சகத்தை அரசாங்கத்துக்காக வாங்குவதற்காக தனது தனிப்பட்ட செயலாளர் பிஸ்ஸத்தை (Bisset) பல தடவைகள் அனுப்பிப் பார்த்தார்.

இதற்கு ஒரு காரணம் இருந்தது. பிரவுன்றிக் தலைமையிலான அரசாங்கம் தான் கண்டி ஒப்பந்தத்தை 1815இல் செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் ஒரு உடன்பாட்டையும் (5வது ஏற்பாடு) எட்டியிருந்தது. ஆனால் இந்த மிஷனரிகள் மெதடிஸ்ட் இலக்கியங்களான கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களின் மூலம் சுதேசிகளிடம் சிக்கல்களை உருவாக்கி விடக்கூடும் என்று நம்பினார் அவர்.

ஆனால் ஹார்வார்ட் இந்த அச்சகத்தை விற்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தேசாதிபதியின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆனால் தேசாதிபதி வேறு விதமாக அணுகினார். அதாவது அரசாங்கத்தின் அச்சகத்துக்கு பொறுப்பாக வந்து பணியாற்றும்படியும் அதற்கு தகுந்த சம்பளத்தையும் வழங்குவதாக கேட்டுப்பார்த்தார். தமக்கு வெஸ்லியன் மிஷனை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த தேசாதிபதியை பகைத்துக்கொள்ள முடியாமல் இறுதியில் அவர் அரசாங்க அச்சகத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆனால் டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தை மிகுந்த வினைத்திறனுடன் அவர் நடத்தவும் செய்தார். அந்த அச்சகத்துக்கு சிலவேளை தொழிநுட்ப உதவிகளோ, உபகரணங்களோ தேவைப்பட்ட வேளைகளில் அரசாங்க அச்சகத்தில் இருந்த வளங்களைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்தது. குறிப்பாக இந்த அச்சகத்துக்கு தேவையான தமிழ் எழுத்துக்கள் அரசாங்க அச்சகத்திடம் இருந்து தான் பெற்றுக்கொண்டது. 

இந்த அச்சகத்தில் ஆங்கிலத்தை விட சிங்கள மொழி பிரசுரங்கள் பல அன்று அச்சடிக்கப்பட்டன.  இலங்கையில் வெஸ்லியன் மிஷன் வருவதற்கு ஈராண்டுகளுக்கு முன்னரே Auxiliary Bible Society தொடங்கப்பட்டுவிட்டாலும் அச்சகத்தை வெஸ்லியன் மிஷன் தான் தொடங்கியது. மேலும் ஏனைய மிஷனரி அமைப்புகளின் நூல்களையும் கூட வெஸ்லியன் அச்சகம் தான் அச்சிட்டு கொடுத்தது. இங்கு தான் ஆரம்பகால சிங்கள பைபிள் மொழிபெயர்ப்பு எல்லாம் அச்சடிக்கப்பட்டது. வடக்கு பகுதிக்கான தமிழ் மொழி பாடசாலை நூல்களும் இங்கிருந்து பிரசுரித்து அனுப்பப்பட்டன. அன்றைய மெட்ராசில் இருந்து தமிழ் மொழியிலான பழைய ஏற்பாடு பைபிள்கள் அச்சடித்து அனுப்பும்படி ஹார்வார்டிடம் கோரப்பட்டபோது இங்கிருந்து அதனை பிரசுரித்து அனுப்பியிருக்கிறார். 


ஹார்வார்ட் காலத்திலேயே இந்த அச்சகத்துக்குப் பொறுப்பாக மேலும் சிலர் இயங்கினார்கள். (Squance, Callaway, Spence, Hardy, Gogerly). இவர்களில் கோகர்லி முக்கிமானவர். அவர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வெஸ்லியன் பாதிரியார். இவர் வெஸ்லியன் மிஷன் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் அதாவது 1818 ஆம் ஆண்டு வந்து சேர்ந்து விட்டார்.

அவர் தெவுந்தர என்கிற சிங்கள பிரதேசத்தில் தங்கி வாழ்ந்து அங்கேயே சிங்களம், பாலி மற்றும் பௌத்தம் ஆகியவற்றைக் கற்று தேறினார். அவர் 'கிறிஸ்தவ சாசனம்' (The Kristiyani Prajnapti - “கிறிஸ்தியானி பிரக்ஞப்திய”) என்கிற நூலை 1848 இல் வெளியிட்டார்.  இந்த நூல் 1848இல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் 1853, 1857 காலங்களில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதுடன் 1862 இல் கொகெர்லி பாதிரியார் அதனைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பௌத்தத்துக்கு ஈடு கொடுப்பதற்காகவே தன்னை தயார் செய்து; தருணம் வந்ததும் பௌத்தத்தை அவர்களின் களத்திலேயே சவாலுக்கு இழுத்தது அவர் அந்தத் துறையில் பெற்றிருந்த பாண்டித்தியத்தின் காரணமாகத் தான். வரலாற்றில் அதுவரை பௌத்தம் சந்திக்காத தத்துவார்த்த சவால் அது.

இந்த நூலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் தான் பெந்தொட்ட அட்டதஸ்ஸி தேரர்.  அவர் கரதொட்ட தம்மாராம தேரரின் கடைசி சிஷ்யர்.  அட்டதஸ்ஸி தேரர் 1849 ஆம் ஆண்டு “கிறிஸ்தவ சாசனத்துக்கு பதில்” (ක්‍රිස්තියානි ප්‍රඥප්තියට පිළිතුරක්) என்ற நூலை வெளியிட்டு கோகர்லிக்கு சவாலுக்கு அழைத்தார். இது தான் பௌத்த தரப்பின் கண்டன இலக்கியத்தின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையின் சமய கண்டன இலக்கியத் தொடரின் முதல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிரதான கண்டன இலக்கியமாக கொள்ளப்படுவது இது தான். சிங்கள பௌத்த அச்சகங்களின் உருவாக்கம் இதன் காரணமாகத் தான் எழுந்தது. இந்த விவாதங்கள் தான் பஞ்சமகா விவாதங்களாக தொடர்ந்து இறுதியில் பாணந்துறை விவாதத்தில் வந்து முடிந்தது. தமிழில் கண்டன இலக்கியம் தொடங்குவதற்கு முன்னரே சிங்களத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரம்பத்தில் டாம் வீதி வெஸ்லியன் மிஷன் தேவாலயம் இப்படித்தான் இருந்தது

ஆரம்ப கால டாம் வீதி வெஸ்லியன் கல்லூரி

ஆக இந்த டாம் வீதி வெஸ்லியன் அச்சகத்தில் இருந்து தான் சுதேசிய பௌத்த தரப்புக்கு எதிரான நிந்தனைப் பிரசுரங்கள் பல வெளியிடப்பட்டன. 

அதேவேளை கோகர்லி பல பௌத்த இலக்கியங்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து பிரசுரித்ததும் இங்கிருந்து தான். குறிப்பாக முதன் முதலில் அவர் தான் தம்மபதத்தை ஆங்கில உலகுக்கு மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். அது இங்கிருந்து வெளிக்கொணரப்பட்ட “The Friends” என்கிற சஞ்சிகையில் தான் தொடராகப் பிரசுரமானது. அதுபோல வடக்கில் பேர்சிவல் பாதிரியாரின் பல பிரசுரங்களும் இங்கு பதிப்பிக்கப்பட்டன.

இந்த வெஸ்லியன் சபையோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர்; இலங்கையின் அன்றைய நீதியரசர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் அன்று நிலவிய அடிமைமுறையை 1833இல் ஒழித்தவர் அவர். அவரின் துணைவி கொள்ளுப்பிட்டியில் இயக்கி வந்த பாடசாலையை ஹார்வர்டிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். வெஸ்லியன் மெதடிஸ்ட் சபை அதைப் பொறுப்பேற்று நடத்தியது. அந்த பாடசாலை தான் கொள்ளுப்பிட்டி சந்தியில் பிரதமரின் அலரி மாளிகைக்கு அருகில் இன்றும் இயங்கிவரும் பிரபல மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி.

வெஸ்லியன் திருச்சபையின் தலைமையகமாக பல வருடங்களாக இயங்கிய இந்த டாம் வீதி கட்டிடத்தை 2013 இல் இலங்கை அரசாங்கம் தொல்லியல் முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னமாக அறிவித்தது.

நன்றி - தினகரன் - 10.07.2022


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates