Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

கக்கூசு வாளி - நீலாவணை இந்திரா

இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில்; ஈழத்து தமிழ் இலக்கியம் என்றும், மலையக இலக்கியம் என்றும் இருவழித் தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காணப்படுகிற போதும் இந்த இரண்டினதும் கவனிப்புக்கும் உள்ளாகாத, இவை இரண்டுக்குள்ளும் உள்ளடக்கப்படாத இலக்கிய வகை ஒன்று உண்டு. ஈழத்தவராகவோ, மலையகத்தவராகவோ இராத இந்திய வம்சாவளியினர் அவர்கள். விளிம்பு நிலை சார் இந்த இலக்கியங்கள் பற்றிய உரையாடலுக்கு வழிதிறக்கப்பட வேண்டிய காலம் இது.

என் சரவணன் எழுதிய "தலித்தின் குறிப்புகள்" நூலின் பாதிப்பாலும், அவரின் வாழ்சூழலில் அவதானித்த விடயங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் வைத்து தன் சுய பாத்திரத்தையும் இச்சிறுகதையில் கொண்டு வந்திருக்கிறார் இந்த சிறுகதையின் ஆசிரியர் நீலாவணை இந்திரா. இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்கள் பற்றி மிகவும் அரிதாக வெளிவந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

'எளிய சக்கிலி நாயே உனக்கென்ன விசரா...” என்ற சாதியவசையோடே இந்தக் கதை ஆரம்பமாகிறது. இந்தக் கதையின் தொடக்கம் 1865 இல் ஆரம்பமாகிறது. 

யாராலும் வீழ்த்தப்பட முடியாதிருந்த கண்டி இராச்சியம் 1815 இல் ஆங்கிலேயர்களின் வசமானதுடன் பெருந்தோட்டத் தொழிலையும், ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி வர்த்தகத்தையும் காலணித்துவ ஆட்சியாளர்கள் கையில் எடுத்த வேளையில் கண்டியிலும், கொழும்பிலும் பெருநகரக் கட்டுமானங்களும் அது சார்ந்த சிறுநகர உட்கட்டுமானங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இப்படிப் பொருளாதார நலன்கள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களால் 1865 இல் நகரங்களின் நிர்வாக வேலைகளுக்காக நகரசபைகள் தோற்றுவிக்கப்பட்டவுடன் அதில் துப்பரவுப் பணிபுரியவென இந்தியாவின் அன்றைய தமிழகப் பரப்புக்குள்ளிருந்த தெலுங்கு பேசும் அருந்ததியர்களோடு, பள்ளர்களும், பறையர்களுமாக ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் இறக்குமதி செய்யப்பட்டவேளையில் துமிந்த என்றழைக்கப்படுகின்ற துமிந்த சில்வாவின் பூட்டனும் வந்திருக்கலாம் என்பது கதையை எழுதிக் கொண்டிருக்கின்ற எனது கணிப்பாகும்.

கொழும்பின் உருகொடவத்தை சந்தியில் இறங்கி உள்முகமாக நடந்து போனால் புறாக்கூடுகள் போல கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புக்களுக்கு அப்பாலே, பறந்து செல்லும் தேவதைகளாலும் கண்டறிப்படாத எலி வளைகளாக சிறுதேசம் இருக்கும். இந்தியாவின் கடைக்கோடிக் கிராமமொன்றில் பிள்ளையை பெற்றவுடன் அறுத்தெறியப்பட்ட தொப்புள் கொடியொன்று எங்கேயோ கள்ளிப்பற்றையில் காய்ந்து, மடங்கி, கவிச்சி நாற்றமெடுத்துக் கிடப்பது போல பெருநகரத்திலிருந்து தொடர்பறுந்து போனதாக சகதிகளுக்குள் மிதக்கும் ஒரு குடியிருப்பைக் காணலாம். அந்தக் குடியிருப்புக்களை உங்களால் உணரமுடியவில்லை என்றால் நாயகன் படத்தில் வருகின்ற பம்பாயையோ, காலா படத்தில் வருகின்ற தாராவியையோ, தமிழ்த் திரைப்படங்களில் வருகின்ற சேரியையோ, இடுப்பொடிந்த நிலையில் காணும் ஒரு விம்பத்தை நீங்கள் காணுவீர்களாயின் அதுவே துமிந்த சில்வாவின் பிறப்பிடமாக இருக்கும்.

துமிந்த சில்வா என்கிற பெயரின் முன்னொட்டுக்கும் பின்னொட்டுக்குமான குழப்பம் அவனது வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களை காட்டிலும் அவ்வளவு பெரிய விடயமல்ல. 

பிறப்போடே சாதியும் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லோரும் பிரம்மனாலேயே படைக்கப்பட்டவர்கள். பிராமணர்கள் தலையிலிருந்தும், சத்திரியர்கள் மார்பிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் காலடியில் இருந்தும் பிறந்தவர்கள் எனக் கருதும் நிலையில், தாயின் வயிற்றிலிருந்து யாரும் பிறக்கவில்லை தான் போலும். இப்படி பிரம்மனின் உடலில் கூட இடம் கிடைக்காமல் அதற்கும் கீழாக படைக்கப்பட்ட சக்கிலியர் எனும் அருந்ததியர்களில் அவனும் ஒருவனாக இருந்தான்.

இப்போது நான் எழுதப் போகும் கதை அலெக்ஸ் ஹேலியின் 'த ரூட்ஸ்' என்கிற புகழ்பெற்ற ஆங்கிலப் புதினம் போல வாசகர்களுக்கு இருக்கலாம். ஆனால் துமிந்த சில்வாவின் வாழ்க்கை நீட்சியும் ஒரு வகையில் இதுவரை யாராலும் எழுதப்படாத சாதிய அடிமைத்தனமாகவே இருக்கிறது.

துமிந்த சில்வா - நெடுத்த உருவம், பரட்டைத் தலை, தீர்க்கமான கண்கள், வறுமை தின்று விட்ட தேகம் இப்படியாக அலைந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞன். துமிந்த என்பது அவனது இயற் பெயராக இருந்தாலும் கொழும்பின் பிரபலமான சிங்களப் பாடசாலையொன்றில் அவன் படித்த காலத்தில் அவனது பெயர் வாளி என்பதாகவே இருந்தது. சரியாகச் சொல்லப் போனால் கக்கூஸ் வாளி. இந்தப் பட்டப்பெயருக்குப் பின்னால் இருக்கும் கதை வலி நிறைந்தது.

உருகொடவத்தையின் உள்முக சேரிக் குடியிருப்பொன்றில் சாக்கடையையும், கக்கூஸ் குழியொன்றையும் சுத்தம் செய்துவிட்டு விபத்தொன்றில் உடைந்து போன கணுக்கால் முறிவால் தரையில் காலை இழுத்துக் கொண்டு நடக்கின்ற சக்கிலி சில்வா, கக்கூஸ் குழிக்குள் இறங்கி மலத்தையும், கழிவுகளையும் ஒரு துருப்பிடித்த பழைய வாளியினுள் அள்ளிக் கொண்டு தூக்கமுடியாமல் உடைந்த காலால் நிலத்தை அரைத்தபடி தடுமாறி விழுந்துவிடாமல் இருக்க குழிக்குள் இருந்து மேலேறியதும், வாளியை தலையில் தூக்கி வைத்துக் கொள்வார். உடைந்த வாளியினூடாக ஒழுகும் மலம் தலையையும், கன்னத்தையும் நனைத்துக் கடந்து அழுக்கேறிய நிலையில் அவற்றைக் கொட்டிவிட்டு வருகின்ற சில்வாவிற்கு நிகழ்காலம் குறித்தோ, எதிர்காலம் குறித்தோ எந்தக்கவலையும் இருந்ததேயில்லை. அவரது கவலையெல்லாம் அவரின் ஒரே மகன் துமிந்தவைக் குறித்தே இருந்தது. 

துமிந்தவின் தகப்பன் சக்கிலி சில்வாவின் இயற்பெயர் சில்வாவே. நகர சபைக்குள் மலம் அள்ளும் பணியில் அவர் இருந்ததால் சாதியச்சாடலுடன் 'சக்கிலி சில்வா” என்றே இழிவாக அழைக்கப்பட்டார்.

தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட மக்கள் வகைக்குள் பிறந்த சக்கிலி சில்வாவின் தந்தை காப்பிலி தனது சாதிய அடையாளங்களால் பிள்ளைகள் அழுந்திக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சேரிக்குடியிருப்பில் கிறிஸ்துமஸ் தினமொன்றிற்கு பழைய ஆடைகளை வழங்க வந்த பாதிரியார் ஒருவரை சந்திக்கிறார். இயேசுவின் நாமத்தால் இறைபணி செய்து கொண்டிருந்த குறித்த பாதிரியார் சில்வாவின் தந்தை காப்பிலியின் மனதில் ஏற்படுத்தி விட்ட தாக்கம், கர்த்தர் ஒருவரே இந்த மானுடத்தின் நேசர் என்ற உளச்சிந்தனையை அவருக்குள் விதைத்துவிட்டது. அதுவரை காலமும் கொச்சைத்தமிழோடு தெலுங்கு பேசிக்கொண்டு, அவரது குலதெய்வம் மாடசாமிக்குப் படைக்கும் கள்ளையும், இறைச்சியையும் உண்டுவிட்டு நெற்றி நிறைய விபூதி தரித்துக் கொண்டு திரிந்தவர். 

இயேசுவே எங்கும் நிறைந்தவர். மீட்பர். தேவன் என்று சொல்லிக் கொண்டு பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டு, கிறிஸ்தவ சபையிலும் இணைந்து கொண்டார். காப்பிலி எனும் தனது இயற்பெயரை மார்டின் என்று மாற்றிக் கொண்டவர். இப்படி கிறிஸ்தவனாக மாறி பெயரை மாற்றிக் கொள்வதன் மூலம் தன் ஒடுக்கப்பட்ட அருந்தியன் எனும் நிலை காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்பதை வலுவாக நம்பினார். இதன் பின்னர் தனது இழிவான சமூக நிலையை இயேசு ஒருவராலேயே மாற்ற முடியும் என்று நினைத்த மார்டினாகிய காப்பிலி இயேசுவின் சேவகன் நானே என்றபடி அலைந்தார். பெயர் மாற்றம் பெற்று மார்ட்டினான காப்பிலி இயற்கையிலே 'கப்பிரிஞ்ஞா” எனும் பறங்கிய பைலா பாடுவதில் விண்ணர். தொண்டை நிரம்புமளவு கள்ளைக் குடித்துவிட்டு வெறியின் உச்சக்கட்டத்தில் சிங்களத்தூஷணங்கள் சரமாரியாக வெடிக்க மார்டின் பாடிக் கொண்டே ஆடுகின்ற பைலாவில் ஒரு வித சந்தம் தொக்கிக் கொண்டிருக்கும். குடித்துவிட்டு தெருவை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் மார்டினைப் பிடித்து கொஞ்சம் கஞ்சாவை கசக்கி வாய்க்குள் திணித்துவிட்டு, அது கள்வெறியை முறிக்கின்ற வேளையில் சக குடிகாரப் பெருமகன்களால் பாடுறா என்று உசுப்பேற்றி விட நைலோன் கைலியை தொடைக்கு மேலாக இழுத்துக் கட்டிவிட்டு கொச்சைத் தூஷணத்தோடு சககுடிகாரன், அன்று கஞ்சா தராதவன், கள்ளை உள்ளங்கையில் ஊத்திக் குடிக்க கொடுக்கிறவன் என எல்லோரையும் தமிழ், தெலுங்கு, சிங்களம் என எல்லா மொழிகளிலும் திட்டித் திட்டி ததிங்கிணத்தோம் போடுகிற பழைய மார்டின், அதன் பின்னர் கர்த்தரே எல்லாம், தேவனே மீட்பர் என்று மாறத் தொடங்கினார். அன்றிலிருந்தே கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். நிறுத்திவிட்டார் என்றால் கள்ளை நிறுத்திவிட்டு கிறிஸ்தவ சபை ஊழியர்களோடு சேர்ந்து வெளிநாட்டுச் சரக்கை குடிக்கப் பழகியிருந்தார். காலப் போக்கில் அவரது கப்பிரிஞ்ஞா கலை வடிவம் கிறிஸ்தவர்களில் நத்தார் போன்ற விசேட தினங்களிலும், அவர்களது திருமண நிகழ்வுகளிலும் அரங்கேற்றம் கண்டது. இப்படி கிறிஸ்தவக் குடும்பங்களோடு உறவு பாராட்டி வந்த மார்டினுக்கு கிறிஸ்தவ சபையினால் கல் வீடொன்று அரசமட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளின் பார்வைக்குள் சிக்காமல் கட்டிக் கொடுக்கப்பட்டது. துப்புரவுப் பணியிலும், பைலாவிலும் சுற்றித்திரிந்த மார்டினுக்கு திருமணமாகி இன்று சக்கிலி சில்வா என்று அழைக்கப்படும் சில்வா மகனாகப் பிறந்த போது ஏற்பட்ட மலேரியா நோயினாலும், பரம்பரையாக இருந்த சிறுநீரகத் தொற்று காரணமாகவும் இறந்து போனார்.

குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்த சில்வா, அரசாங்கத்தின் நிலத்தில் இருந்த தன்னுடைய வீட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்காக படிப்பென்ற ஒன்றே கிடைக்காமல் நகர சபைக்குள் எடுபிடி வேலைகளுக்கும், பின்னர் மலம் அள்ளும் வேலைகளுக்குமாக அமர்த்தப்பட்டார். என்னதான் மார்டின் வீடு அந்தச் சேரிக்குள் இருக்கும் சீற் போட்ட கல்வீடாக இருந்தாலும், அங்கு குடியிருந்தவர்களெல்லாம் நகரசபைக்கு ஊழியம் செய்யவென கொண்டு வரப்பட்ட தெலுங்கு தலித் சமூகத்தினர். அங்குள்ள நிலமோ, தகரக் கொட்டில்களோ கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. நகரசபையில் எடுபிடி வேலை, சுத்திகரிப்பு வேலை, நகரின் குப்பை அள்ளும் வேலை என நகரசபைக்கு உட்பட்ட ஊழியம் ஏதாவதொன்றினுள் இருக்கும் வரை மட்டுமே அந்தக் கொட்டில்களில் அவர்கள் இருக்கலாம் என்ற நிலையில், தனது வீட்டைப் பாதுகாப்பதையும், கணவனை இழந்த தனது தாயை காப்பாற்றுவதையும் மட்டுமே அவர் எண்ணியிருந்தார். சில்வா வளரும் வரையில் குப்பை கூட்டி அள்ளுகின்ற தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு இருக்கும் வேலையில் சில்வாவின் அம்மா அமர்த்தப்பட்டிருந்தாள். இந்தப் பின்னணியில் சில்வாவின் காலுடைந்த அதே விபத்தில் அவனது தாயும் இறந்துவிட சில்வா தனித்துப் போனார். இந்தப் பின்னணியில் அங்குள்ள அருந்ததிய சமூகத்தை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வாழ்ந்து வந்த சில்வாவின் மகனே கக்கூஸ் வாளி என நண்பர்களால் கேலி செய்யப்படுகின்ற இக் கதையின் நாயகன் துமிந்த சில்வா.

துமிந்த பிறந்த போதே கன்னங்கரேலன்று இருந்தான். கறுப்பன் எல்லாம் தமிழன் என்கிற சிங்கள ஐதீகத்தில் சக்கிலித் தமிழனாக துமிந்த பிறந்தது, இயற்கையான நிகழ்வு அல்லது உயர்த்தப்பட்ட பிராமணர்களால் கற்பிதம் செய்யப்பட்ட கர்மா. இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவனைப் பகடைக் காயக்கி பரமபதம் விளையாட முடிவுகட்டியிருந்தது. சக்கிலி சில்வா தனக்கு மகன் பிறந்த உடனேயே எந்தளவு ஆனந்தமடைந்தாரோ அதே போல கோட்டான் விழிகளுடன் கறுத்தப் பிசாசு போல பிறந்த அவனது தோற்றத்தை அவரே ஒதுக்கி வைத்தார். வெள்ளையெல்லாம் உயர்ந்தது என்பது ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தில் அழிந்துவிட்டாலும் கூட ஆங்கில மேட்டுக்குடிக்கு முதுகு தேய்த்துவிட்ட சிங்கள மேட்டுக்குடிக்கு அது மனப்படமாகியிருந்தது. சக்கிலி சில்வா வாழ்ந்த உருகொடவத்தையின் நிலைமை அவரது அப்பா மார்டின் வாழ்ந்த காலத்திற்கும், இப்போது துமிந்த பிறந்த காலத்திற்கும் இடையே ஒரு நூற்றாண்டு மாற்றத்தை எட்டியிருந்தது. மார்டின் வாழ்ந்த போதெல்லாம் கிறிஸ்தவ சபையின் ஆதிக்கம் இருந்ததென்றால் இப்போதெல்லாம் பௌத்த மேலாதிக்கமே அங்கு கொடிகட்டிப்பறந்தது. பௌத்தச் சக்கரங்களும், பல வர்ணக் கொடிகளும், நகரமயமாக்கலிலும், பெருவீதி விஸ்தரிப்பிலும் மிஞ்சிய அரசமரங்களுக்கு கீழெல்லாம் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டிருக்கும் சமாதி நிலைப் புத்தர் சிலைகளுமாக, உருகொடவத்தை தனது அடையாளங்களை முற்றிலுமாக மாற்றியிருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சிங்களவரின் நடைமுறைகளுக்கு கட்டுப்படும் வகையாக பாடசாலைகளும், தொண்டு நிறுவனங்களும் மாறியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிறந்த சில்வாவின் மகன் சிங்கள வழக்கத்தோடு துமிந்த சில்வா ஆவதே முறையாக இருந்தது. 

அருந்ததியர்களாக பிறந்த ஒரே காரணத்துக்காக, கால ஓட்டத்தில் எஜமானர்களின் அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் அவர்களது நிலைப்பாடகவே போயிற்று. மாடசாமிக்கு நேர்த்திக்கடன் எடுத்த காப்பிலி ஞானஸ்தானம் பெற்று மார்டின் ஆனதும், கிறிஸ்தவராக மாறிப்போன மார்டினின் மகன் சில்வா வீட்டைப் பாதுகாக்கவென மீண்டும் மலக்குழி அள்ளப் போனதும், அதே வரிசையில், தான் யாரென்றே தெரியாமல் ஒரு கிறிஸ்தவனின் மகனாகப் பிறந்து கொண்டு ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்திற்கும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் அருகிலுள்ள விகாரை அறநெறி வகுப்பிற்கும் அலைகிற இரண்டுங் கெட்டான் நிலையில் துமிந்தவின் பால்யம் கடந்து போனது. 

தனது மகனை உயர்ந்த சிங்களப் பாடசாலையில் படிப்பிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், படிப்பறிவே இல்லாத சக்கிலி சில்வா போட்ட முகமூடிகளில் சிலதான். துமிந்த என்கிற சிங்களச் சாயல் கொண்ட பெயரின் முன்னொட்டும், பின்னொட்டாக குடும்பப் பெயர் சில்வாவும் இருந்தது. கிறிஸ்தவ மிஷனரியின் சிபாரிசுக் கடிதத்திலும், பௌத்த அறநெறிப்பாடசாலை மாணவன் என்கிற ரீதியிலும் துமிந்த சில்வாவிற்கான பாடசாலை அனுமதி ஓரளவு ஒட்டத்திற்கும், நடைக்கும் பின்னர் கிடைத்தது. இப்படி தனது அருந்ததிய அடையாளங்களை மறைத்துவிட்டு அப்பா நகரசபையில் 'பியோன்” வேலை செய்கிறார். எனும் பொய்யுடன் படித்து வந்த துமிந்த சில்வா. கக்கூஸ் வாளியானது இப்படித்தான். 

எல்லா ஆண்களுடைய பால்யத்திலும் சில தேவதைகள் அவர்களை கடந்து கொண்டே இருக்கிறார்கள். முட்டை விழிகள் பிதுங்க சூத்தாமட்டியில் பிரம்பால் வெளுக்கின்ற கணக்கு வாத்தியார்கள் போலல்லாது இரண்டு கைகளையும் அசைத்து அசைத்து ஆங்கிலத்தில் கவிதைகள் சொல்லித்தருகின்ற பெரும்பாலான பெண் டீச்சர்கள் ஆண்களுக்கு தேவதைகள். பட்டாம் பூச்சி பிடித்து தா என்று கேட்கிற தங்கைகள், பாடசாலை முற்றத்தில் விரலிக்காய், தேங்காய்ப்பூ அல்வா, மிக்சர், மாங்காய்த்துண்டுகளை எனத் தின்பண்டங்களை விற்கும் பெயர் தெரியாத பல் விழுந்த கிழவி, பாடசாலைப் பேருந்தில் தினமும் ஏறுகின்ற அலுவலகப் பெண் எனப் பல தேவதைகள் கடந்து போகிறார்கள். இப்படித்தான் துமிந்தவின் வாழ்க்கையிலும் ஒரு தேவதை இருந்தாள். நகரத்தில் வேலை செய்கின்ற சட்டத்தரணி ஒருவரின் மகள். அவனோடு கூடப்படித்தவள், இந்தக் கதைக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் துமிந்தவின் ஸ்தீரமான பட்டப் பெயருக்கு அவளே முதற்காரணமாகிவிட்டாள். 

சம்பவம் நடந்த அன்று, துமிந்தவின் கன்னங்கள் இரண்டும் சிவப்புப் பழமாக பழுத்திருந்தன. இதில் தான் செய்த தவறு என்ன என்பது கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பகல் முழுவதும் செருப்புத்தைக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்த்துவிட்டு அசதியுடன் திரும்புகின்ற அவனது அம்மா, கலங்கி நிற்கும் கணவனையும் வெப்பிசாரத்துடன் அழுது கொண்டிருக்கும் துமிந்தவையும் ஒன்றாக நோக்கிவிட்டு நிலை தடுமாறினாள்.

அன்று காலை தனது சிநேகிதியுடன் வழக்கம் போல துமிந்த சென்றிருந்தான். நகர சபையில் அவனது தகப்பன் வேலை செய்கிறார் எனும் நினைப்பில் அந்தப் பெண்வீட்டில் துமிந்தவிற்கு ஓரளவு அன்பும் அவனது கெட்டித்தனத்தினால் அவனது மீது ஒரு ஈர்ப்பும் அவர்களுக்கு இருந்தமையால், குறித்த பெண்ணுடன் அவன் நட்பு வைத்திருப்பது அவர்களை பொறுத்தவரை இயல்பானதொன்றாகவே இருந்தது. 

எதிர்பாராத விதமாக அவளது வீட்டிலே மலக்குழி திருத்தும் வேலையில் அன்றைய தினம் சக்கிலி சில்வா இருக்க, இது வரை நாளும் தனது தந்தையின் நிலையை அறியாதவன் அன்று தான் முதல் முதலாக சில்வாவின் அலங்கோல நிலையை அறிகிறான். 

பாவித்த மலக்குழியொன்றினை திருத்தும் போது மலக்குழி நாற்றமெடுக்காமல் இருக்க அதில் ஒரு துவாரத்தை இட்டு கலன் கணக்கில் மண்ணெண்ணை ஊற்றிவிட்டு அதில் இறங்கும் சில்வா கொஞ்சம் தென்னஞ்சாராயத்தையும் குடித்துக் கொள்வார். இப்படி அரை போதையில் மலக்குழி அடைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்த சில்வாவின் சட்டையில், கழுத்தில், கைகளில் என மலத்தின் வாடையும், மண்ணெண்ணெய் நெடியும் ஒன்றாக வீசிக்கொண்டிருந்தது. தனது மகன் தன்னைக் கவனிப்பதைக் கூட அறியாமல் தெத்தித் தெத்தி உடைந்த காலுடன் சில்வா மலத்தை அள்ளி இன்னுமொரு குழிக்குள் இட்டு நிரப்பிய படியிருந்தார். மண்ணெண்ணெய் நாற்றமெடுத்தது. அது கக்கூஸ் குழியின் நாற்றத்தை முறித்திருந்தாலும் ஒரு அருவருக்கத்தக்க வாடையை அங்கு நிரம்பியே இருந்தது. இப்படியாக மலத்தை காவுகின்ற சில்வா களைப்பின் மிகுதியில் சறுக்கி கீழே விழ தனது தகப்பனை அவனே தாங்கிப்பிடித்தான். 

தன்னைத் தாங்கிப்பிடிப்பது மகனாக இருந்தாலும் அவனை அறியாதவன் போல் சில்வா அவனைத் தள்ளிவிட்டார்.

இவன் அப்பா என்றான்... 

யாரடா அப்பா போடா ..... என்றார் சக்கிலி சில்வா.

அவனைத் தள்ளிவிட்டதில் அவன் மண் குவியலின் மீது புரண்டு விழுந்தான். அவனது சட்டையில் மலமும், மண்ணும், ஈரமுமாக இருந்தது. 

சட்டத்தரணி, அவரது மனைவி, மகள், வீட்டிலிருந்த சமையல்காரி தொடக்கம் அவன் ஒரு சக்கிலியன் என்பதை அக்கணத்தில் அறிந்து கொண்டனர். சில்வா வெம்பினார். தனது அடையாளங்களில் கறை அவன் மீது படிந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் தூரமாக இருந்திருக்கிறார். அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல.உயர்ந்த சிங்களப் பாடசாலை ஒன்றில் படிக்கும் போது அவன் சாதிய அடையாளம் மறைக்கப்பட்டுவிடும் என்றே எண்ணியிருந்தார். தெலுங்குத் தமிழ் வம்சாவளி என்றாலே அருந்ததியர் எனும் அடையாளம் மாற வேண்டும் என்பதற்காகவே துமிந்த என்று சிங்களப் பெயரும் வைத்தார். இன்று தன்னாலேயே தனது மகன் சக்கிலியன் ஆனான். என்பது அவருக்கு அழுகையையும் கோபத்தையும் ஒன்றாக ஏற்படுத்தியிருந்தது. 

மீண்டும் துமிந்த 'அப்பா' என்றான். மலம் நிறைந்த கைகளாலேயே இரண்டு அறை விழுந்தது. 

அடுத்த நாள் துமிந்தவின் அப்பா அரச வேலை செய்பவர் அல்ல, அவன் ஒரு மலம், பொய்யன், ஊத்தைக்கும்பன், கறுப்பு பேய், மலம் அள்ளும் வாளி என்றெல்லாம் அவனது நண்பர்கள் கதைக்கத் தொடங்கினார்கள்.  

அவனது நண்பர்களில் யாரோ ஒருவன் பெண்கள் மலசலகூடச் சுவரில், சிங்களத்தில் கக்கூஸ் வாளி தூக்கி - துமிந்த என்று எழுதி ஒரு அரைகுறை ஓவியத்தையும் கரித்துண்டு ஒன்றினால் வரைந்து விட்டிருந்தான். ஒரு பையன் தலையில் வாளியொன்றைத் தூக்குவதாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியம் பாடசாலை எங்கும் தீயாகப் பரவத் தொடங்கியது. இதைப் பார்க்கவென்றே சில ஆண்கள் பாடசாலை முடியும் நேரம் பெண்களின் மலசலகூடப் பக்கம் ஒதுங்கினார்கள். ஏற்கனவே பார்த்த பெண்கள் கடைவாயை மூடிச் சிரித்துக் கொண்டார்கள். அன்றைய கிரிக்கெட் போட்டியில் ஒழுங்காக பந்து வீசாத இலங்கை வீரர் மலிங்கவை சக்கிலி மலிங்கா எனக் கொச்சைப்படுத்தி பிரபல சிங்கள நாளிதழ் வெளியிட்ட செய்தியில் மலிங்கவை அழித்துவிட்டு சக்கிலி துமிந்த என்று ஒருவன் எழுதினான். இன்னுமொருவன் சக்கிலி என்பதை வெட்டிவிட்டு கக்கூஸ் வாளி துமிந்த பொய்யன் என்று கிறுக்கினான். இப்படி வகுப்பில் ஒவ்வொரு நாளும் வாளி வாளி என்று நண்பர்களால் கேலி செய்யப்பட்டு உடைந்து போனவன் தான் இந்தக் கதையின் நாயகன் துமிந்த சில்வா.

அவனோடு அதுவரை பழகிய அந்த தேவதை கொஞ்சக் காலத்திலே அவனை விலகினாள். அது அவனைப்பிடிக்காமலில்லை. அவள் தெரியாமல் உளறிய ஒரு சொல்லாலே அவன் அவமதிக்கப்படுகிறான் என்பது அவளை உறுத்தியதானால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விலத்தினாள். அவள் விலத்தினாலும் கக்கூஸ் வாளி எனும் பெயர் நிலைத்து விட்டது. அது இனி சாகும் வரை அவனை உறுத்திக் கொண்டேயிருக்கும். பாடசாலை முடியும் வரையிலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை ஞாபகமூட்டியபடியே இருந்தனர். அப்போதெல்லாம் அவனுக்கு ஆத்திரமாக இருக்கும். தலையைக் கொண்டு ஏதாவதொரு சுவற்றில் முட்டிமுட்டிச் சாகவேண்டும் போல இருக்கும். பெரிய கல்லொன்றை எடுத்து சேரிக்குள் ஓடித் திரியும் சொறி நாயொன்றை அடிப்பதை போல அவர்களை பழிதீர்க்கத் தோன்றும். இப்படியெல்லாம் இருந்த துமிந்த 'கக்கூஸ் வாளி” எனும் பெயரோடே பாடசாலை நாட்களை கடந்தேறினான்.

இந்த துமிந்ததான் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்து விட்டு வேலையொன்றிற்காக அலைந்து கொண்டிருந்தான். குறித்த தலைமுறையின் முதல் பட்டதாரி. 

சில தினங்களுக்கு முன்பு நடந்த நேர்முகத்தேர்வு அவனுக்கு வேலையைப் பெற்றுத் தரும் எனும் நம்பிக்கையோடு துமிந்த காத்திருக்கிறான். ஒரு அரச வேலையையே அவன் விரும்பியது. அவனைத் தலைநிமிரச் செய்வது.அவனை மட்டுமல்ல அவன் குடும்பத்தையே அது நிமிர்த்திவிடும். அந்தச் சேரி வீட்டைத் துறந்து வெளியே ஒரு வாடகை வீட்டில் குடியேறலாம். அது நல்ல வீடுதான். அந்தச் சேரிக்குடியிருப்புக்குள்ளே இருக்கும் கல்வீடு. தனக்கு அரசவேலை கிடைத்து, தான் வெளியேறிய பின்னர் அது வேறு யாருக்காவது கிடைக்கும். பரவாயில்லை. தன்னுடைய சுதந்திர வெளி அதிகரிக்கும். சக்கிலி சில்வா இனி அவனைக் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர் இனி மலக்குழி வெட்டப் போகத்தேவையில்லை. அவனது தாய் இறப்பர் செருப்புக்களுக்கு ஆணியடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பரம்பரையாக ஒரே சாதிக்குள்ளே கல்யாணம் கட்டிக் கொண்டு மார்டினைப் போலவே சிறுநீரகக் கடுப்பு நோயில் அவதிப்படும் தனது தந்தை சில்வா போல தனது பிள்ளைகள் இருக்கத் தேவையில்லை. சேரியிலிருந்து விலத்தினாலே தனக்கு புதுமுகம் கிடைத்துவிடும். வேலை செய்யும் இடத்திலே ஒரு பெண்ணை தேடிக் கொள்ளலாம். என்னுடைய நாகரீகமான சிங்களமும், ஆங்கிலமும் ஒரு பெண்ணை என்னை நேசிக்கச் செய்யும் எல்லாம், எல்லாம், எல்லாமே இன்று வரப்போகும் அரச முத்திரை பதித்த கடிதத்தில் தங்கியிருப்பதை அவன் எண்ணிக் கொண்டான். கனவுகளுடான காத்திருப்போடு உருகொடவத்தைச் சந்தியில் தபால் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவனை அவனது பாடசாலையில் கூடப் படித்த கிட்டத்தட்ட முகம் மறந்துபோன ஒருவன் சந்திக்கிறான்.

ஏ... கக்கூஸ் வாளி எப்படியிருக்கா என்றான்.

கோபம் தலைக்கேற துமிந்த அவனை முறைத்துப் பார்த்தான். பளார் என்று ஒரு அறைவிட வேண்டும் போல இருந்தது அவனுக்கு. பற்களை இறுக்கிக் கடித்துக் கொண்டான். முகம் சிவந்திருந்தது.

என்னடா முறைக்கிறா....

எளிய சக்கிலி நாயே உனக்கென்ன விசரா என்றான், எதிரே நின்றவன்.

இவன் அறைய முயற்சித்த அக்கணத்திலே அரச முத்திரை பதிக்கப்பட்ட அக்கடிதத்தை இவனிடம் கொடுத்துவிட ஒருவர் இடைமறித்தார்.

எதிரே நின்றவன் விடுவதாக இல்லை. நீ கக்கூஸ் வாளி துமிந்த தானே... என்றபடி அக்கடிதத்திலுள்ள பெயரை வலுக்கட்டாயமாக பார்க்க எத்தனித்தான்.

அரச வேலைக்கான கடிதத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையின் நடுவிரலை அவனது முகத்துக்கு முன்னால் நீட்டினான் துமிந்த....

நன்றி - "தளம்" சஞ்சிகை - இதழ் - 25

நிலவரம்பற்ற சமூக சபை பொருத்தமானதா? - சி.அ.யோதிலிங்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இந்திய வம்சாவழி மலையகத்தமிழரின் தேசிய அபிலாசை ஆவணக்கோரிக்கைகளில் அடையாளப்பிரச்சினை பற்றி சென்ற வாரம் பார்த்தோம். இந்தவாரம் அரசியல் தீர்வுபற்றிப் பார்ப்போம். 

மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஆராயும் போது முதலில் சில கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். அவற்றில் மூன்று பிரச்சினைகள் முக்கியமானவை! ஒன்று மலையக மக்கள் ஒரு தேசிய இனமா? சிறுபான்மை இனமா? இரண்டாவது மலையக மக்களின் பிரச்சினை அடையாளப்பிரச்சினையா? இறைமைப் பிரச்சினையா? மூன்றாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு நிலம்சார்ந்த அரசியல் தீர்வா? சமூகம் சார்ந்த அரசியல் தீர்வா? இந்தக் கோட்பாட்டுப் பிரச்சினைகளும் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய பிரச்சினைகளாகவே உள்ளன. பெரும் தேசியவாதத்தை உசுப்பேற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்காகவும் கோட்பாட்டுப் பிரச்சனைகளை அடக்கி வாசிக்கும் நிலையும் உண்டு. 

ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசிய இனம் என்று வரையறுப்பதற்கு மாக்சீய மூலவர்கள் நிலம், மொழி, பொருளாதாரம் கலாச்சாரம் என்பவற்றை நிபந்தனைகளாக முன்வைத்துள்ளனர். நவீன காலத்தில் இதுவும் மாற்றத்திற்குள்ளாகி இந்த நான்கில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட தேசிய இனமாகக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது. முக்கியமாக நாம் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற கூட்டுப் பிரக்ஞை இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மாக்சிய மூலவர்கள் குறிப்பிட்ட நான்கு நிபந்தனைகளும் மலையக மக்களுக்கு இருக்கின்றது. எனவே அவர்களை தேசிய இனமாக கொள்ளலாம் என மலையக செயற்பாட்டாளர்கள் பலர் வாதிடுகின்றனர். 

மலையக வரலாற்றை எடுத்துப் பார்க்கின்றபோதும் வர்க்க ரீதியான காரணிகளை விட இன ரீதியான காரணியே அதிகம் தொழிற்பட்டிருக்கிறது. டொனமூர் யாப்பின் கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது அதனை 

சிங்கள மேட்டுக்குடியினர் எதிர்த்தனர். அதற்கு பிரதான காரணம் மலையக மக்களும் வாக்குரிமை பெற்றுவிடுவார்கள் என்பதே! 1931ம் ஆண்டு தேர்தலின் பின்னர் 1936ம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களின் வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது. சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இதன் பின்னர் 1977ம் ஆண்டுதான் மலையக மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைப் பெற்றனர். 

இன ரீதியான அரசியல் மேல்நிலைக்கு வராதமைக்கு தொழிற்சங்க அரசியலும் ஒரு காரணமாக அமைந்தது. மலையகத்தில் படித்த மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி இந்த நிலையை மாற்றியது. மலையக மக்கள் இயக்கமும் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியும் இன ரீதியான அரசியலில் வலுவான முனைப்புகளைக் காட்டின. தேசிய இனம் என்ற அடையாளத்தையும் தூக்கிப்பிடித்தன. மலையக மக்கள் முன்னணி தனி அதிகார அலகுக் கோரிக்கையையும் முன்வைத்தது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்னர் தேசிய இனம் தனி அதிகார அலகுக் கோரிக்கை என்பவற்றை சற்று அடக்கியே வாசித்தது. இதனால் மேலெழுந்த தேசிய இன அரசியல் மீண்டும் மௌன நிலைக்குச் சென்றது. 

மலையகச் செயற்பாட்டாளர்களில் இன்னோர்சாரார் இன அரசியலை அவ்வப்போது உயர்த்திப் பிடித்தாலும் தேசிய இன அரசியலை முன்னெடுக்க விரும்பவில்லை. மலையக மக்கள் மத்திய மலைநாட்டைத் தவிர ஏனைய இடங்களில் சிதறி வாழ்வதால் எப்போதும் மென்மையான அடையாள அரசியலிலேயே ஆர்வம் காட்டினர். இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தையும் அதற்காகவே உயர்த்திப் பிடித்தனர். 

இரண்டாவது கோட்பாட்டுப் பிரச்சினையும் முதலாவது கோட்பாட்டுப் பிரச்சினையின் தொடர்ச்சியாகவே உள்ளது. மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தால் அவர்களின் பிரச்சினைகளை ஒரு இறைமைப் பிரச்சினையே! அவர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாமல் சிதறி வாழும் மக்கள் கூட்டமாக இருந்தால் அவர்களின் பிரச்சினை அடையாளப் பிரச்சினையே! இதிலும்பலர் இறைமைப் பிரச்சினை என்றும் பலர் அடையாளப் பிரச்சினை என்றும் கொள்கைகளைக் கொண்டுள்ளனர். 

மூன்றாவது கோட்பாட்டுப் பிரச்சினையும் இரண்டாவதன் தொடர்ச்சியே! மலையக மக்கள் ஒருதேசிய இனமாக இருந்து அவர்களின் பிரச்சினை ஒரு இறைமைப் பிரச்சினையாக இருந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வு நிலரீதியான அதிகாரப் பங்கீடாகவே 

பங்கீடாகவே இருக்கவேண்டும். அவர்கள் ஒரு தேசிய இனமல்லாது சிதறி வாழும் மக்கள் கூட்டமாக இருந்தால் அடையாளப் பிரச்சினையின் வழி அவர்களுக்கான அரசியல் தீர்வு சமூக ரீதியான அதிகாரப் பகிர்வே! தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ளவில்லை. மாறாக சிதறிவாழும் ஒரு சிறுபான்மை இனமாகவே கொள்கின்றது. அதனால் சமூக ரீதியான அதிகாரப் பகிர்வையே முன்வைக்கின்றது. நிலவரம்பற்ற சமூகசபை என்ற கோரிக்கை இந்த அடிப்டையிலேயே எழுந்தது. 

மலையக மக்கள் மத்திய மலைநாட்டில் செறிவாக வாழ்கின்றனர். ஐந்து பிரதேச சபைகளும் இரண்டு நகர சபைகளும் அவர்களது ஆட்சியில் உள்ளது. இந்த உள்ளுராட்சி சபைப்பிரதேசங்களை இணைத்தாலே நில ரீதியான அதிகாரப்பகிர்வைப் பெறலாம். இதனை ஏனைய மாவட்டங்களில் செறிவாக உள்ள பிரதேசங்களையும் நிலத் தொடர்ச்சியற்ற வகையில் இணைத்தால் ஒரு பெரிய நில ரீதியான அதிகாரப் பகிர்வைப் பெறலாம். மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரம் நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகுக் கோரிக்கையை (பாண்டிச்சேரி மாதிரி) முன்வைத்தார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். 

ஒரு அதிகார சபைக்கு சுயமான வருமான மார்க்கங்கள் அவசியம். நில ரீதியான அதிகாரப் பகிர்வின் மூலம்தான் சுயமான வருமான மார்க்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

சமூக அதிகார சபையினால் சுயமானவருமான மார்க்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது குறிப்பாக வரிவிதிப்பு வருமானங்களை பெற்றுக்கொள்ள முடியாது. அனைத்து தேவைகளுக்கும் மத்திய அரசில் தங்கி நிற்கவேண்டிய நிலையே ஏற்படும். 

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலவரம்பற்ற சமூகசபை ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாடு என்பதால் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் சுயமாக இயங்கக்கூடிய ஆற்றல் அதற்கு மிகக் குறைவு. சுயமான வருமான மார்க்கங்கள் அதற்கு இல்லை. மத்தியரசின் ஒதுக்கீட்டிலும் சர்வதேச தரப்புகளின் நிதி ஒதுக்கீட்டிலுமே அது தங்கியிருக்கின்றது. பெருந்தோட்டத்துறை, உள்ளுர் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை என வளமான பொருளாதார வளங்களைக் கொண்டிருக்கின்ற மலையக மக்கள் சுயமான வருமானமில்லாமல் அவலப்பட வேண்டுமா? என்ற நியாயமான கேள்வி இங்கு எழுகின்றது. 

கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சாரம், மொழி, வீடமைப்பு, உட்கட்டுமான அபிவிருத்தி, வாழ்வாதாரம் என்பற்றில் பங்குபற்றல் அதிகாரங்களையே தமிழ் முற்போக்கு முன்னணி கோரியுள்ளது. இவ் அதிகாரங்களில் கூட தெளிவான அதிகாரமோ, வேறுபடுத்தல்களோ இல்லை. இடைநுழையும் அதிகாரங்களும் பங்குபற்றல் அதிகாரங்களும் உண்மையான அதிகாரங்களாக ஒருபோதும் இருக்கமாட்டாது. 

உண்மையில் இரண்டு வகையான அதிகாரப் பகிர்வுகளே மலையக மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். மலையக மக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களில் நிலரீதியான அதிகாரப் பகிர்வும், ஐதாக உள்ள பிரதேசங்களில் சமூக ரீதியான அதிகாரப் பகிர்வுமே அவையாகும். தமிழ் முற்போக்குக் கூட்டணி பெல்ஜியம் மாதிரியையே முன்வைப்பதாகக் கூறியுள்ளது. பெல்ஜியம் மாதிரி நிலரீதியான அதிகாரப் பகிர்வு, சமூக ரீதியாக அதிகாரப் பகிர்வு என இரண்டையும் கொண்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்வது அவசியமானது. 

மலையக சமூக ஆய்வுமையம் மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய அறிக்கையை நல்லாட்சிக் காலத்தில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தபோது நில ரீதியான அதிகாரப் பகிர்வு, சமூக ரீதியான அதிகாரப்பகிர்வு என இரண்டையும் முன்வைத்துள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்ற வகையில் 

வகையில் இணைத்து நில ரீதியான அதிகாரப் பகிர்வை உருவாக்க வேண்டும் என்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக மக்களுக்கு சமூக ரீதியான அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றும் கோரியுள்ளது. இந்தத் தீர்வு அதிகம் பொருத்தமானதாக இருக்கலாம். 

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களும் ஆரம்பத்தில் அடையாள அரசியலையே முன்நகர்த்தினர். சமூக ரீதியான அதிகாரப் பகிர்வையே முன்வைத்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இறைமை அரசியல் முன்னிலைக்கு வரத்தொடங்கியது. அதன் பிந்திய வரலாறு அனைவரும் அறிந்ததே! 

தமிழ் முற்போக்குக் கூட்டணி நிலவரம்பற்ற அதிகாரசபையை தமது கட்சியின் முன் மொழிவாக முன்வைக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது நடாத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு சிபார்சு செய்த யோசனையையே முன்வைப்பதாக கூறியுள்ளது. இதன் மூலம் பெரும்தேசியவாதம் உசுப்பேறி தாண்டவம் ஆடாமல் தடைவிதிக்க முற்படுகின்றது. இது ஒருவகையான இராஜதந்திரமே! ஆனால் அது மலையக மக்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும். 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலவரம்பற்ற சமூகசபைக் கட்டமைப்பிலும் பலவீனம் உள்ளது. நிலவரம்பற்ற சமூகசபைக்கு தனியான தேர்தலோ, பிரதிநிதித்துவமோ தேவையில்லை. 

பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இங்கும் உறுப்பினர்களாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமானது எனக் கூற முடியாது. உறுப்பினர்களுக்கு இரட்டைச்சுமையை இது கொடுப்பதாக அமையும் ஏற்கனவே இவ் அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒழுங்காகப் பணியாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இக் குற்றச்சாட்டுக்கள் மேலும் அதிகரிக்கப்படுமே தவிர குறைவதற்கான வாய்ப்புக்கள் இருக்காது. 

குறைந்தபட்சம் தேர்தலைத் தவிர்க்கவேண்டுமானால் பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் என்பவற்றின் உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து நிலவரம்பற்ற சமூகசபைக்கான பிரதிநிதிகளைத்தெரிவுசெய்யலாம். புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வது செயற்பாட்டாளர்களின் பங்கை அதிகரிப்பதோடு மக்கள் பங்கேற்பு அரசியலையும், பொறுப்புக்கூறும் அரசியலையும் வளர்த்தெடுக்கும். இன்றைய அரசியல் சூழலில் இது மிகவும் அவசியமானது. 

தவிர பாராளுமன்றத்திலும் மாகாணசபைகளிலும் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் சமூக சபைகளிலும் முன்வைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஜனநாயகப் பண்புகளைப் பரவலாக்குவதாக இருந்தாலும் சட்டமியற்றுவதில் காலதாமதங்களை உருவாக்கும். மலையக மக்களை பாதிக்கின்ற விடையங்களை மட்டும் இங்கு முன்வைக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும். 

எல்லாவற்றையம்விட முக்கியமானது இக்கட்டுரையாளர் சென்றவாரக்கட்டுரையில் முன்வைத்த அளவுகோல்தான். மலையக மக்களுக்கான எந்தத் தீர்வு யோசனைகளும் அவர்களை இனஅழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இன அழிப்பு என்பது தொற்றுநோயைப் போன்றது. ஆரம்பத்திலேயே அதனைத் தடுக்கவேண்டும். இல்லையேல் உடல்முழுவதும் நோய்பரவி ஆளையே அழித்துவிடும். 

இறுதியாகக் கூறுவது இதுதான்

"மலையக மக்களின் விவகாரத்திலும் நூறு பூக்கள்மலரட்டும்." 

பிற்குறிப்பு 

இக் கட்டுரையாளர் மலையத்தைச் சேர்ந்தவர் அல்ல. மலையக மக்கள்மீது அக்கறை கொண்டவர். தேசிய இன ஒடுக்குமுறைகள் பற்றி தொடர்ச்சியாக ஆய்வு செய்பவர் என்றவகையில் ஒரு புறநிலையாளனாகவே தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். இக் கருத்துக்கள் முடிந்த முடிவுகள் அல்ல. 

நன்றி - வீரகேசரி

கொழும்பின் 15 வலயங்களும், பின்புலக் கதைகளும் ( கொழும்பின் கதை - 48) - என்.சரவணன்

ஒரு புறம் கொழும்பு என்பது கொழும்பு மாநகர சபை வலயமாகவும், அதற்கு வெளியில் உள்ள நகர சபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கொழும்பானது நிர்வாக வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்றைய கொழும்பு நகரம் 15 அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கொழும்பின் நகராக்கம் வலுவடைந்து மக்கள் செறிவும், உட்கட்டமைப்பின் விரிவாக்கமும் பறந்து விரிந்த போது இவ்வாறு அஞ்சல் பிரிவுகளாக பிரிக்கும் தேவை உருவானது.

கொழும்பு 1 - கொழும்பு கோட்டை

கொழும்பின் உருவாக்கமே அதன் துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி, பின்னர் வளர்ந்தது பற்றியும், விரிவாகி நாட்டின் தலைநகராக ஆனதன் பின்புலத்தை இதற்கு முன்னர் பார்த்தோம். இத்துறைமுகமானது இயற்கையின் விலைமதிப்பற்ற கொடையாகும், இது வெளிநாட்டு வர்த்தகர்களை மட்டுமல்ல, படையெடுப்பாளர்களையும் ஈர்த்தது. முதலில் போர்த்துகீசியர்கள் (1505-1656) கொழும்பு துறைமுகத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டினார்கள், இரண்டாவதாக டச்சுக்காரர்கள் (1656-1796) மற்றும் மூன்றாவதாக ஆங்கிலேயர்கள் (1796-1948) அதை மேலும் மாற்றியமைத்து மேம்படுத்தினர். இந்த மூன்று காலனித்துவ சக்திகளிலேயே கோட்டையை பலமாக கட்டி அதனைப் பேணியவர்கள் டச்சுக் காரர்கள் தான். இந்த பண்டைய கொழும்பு நகர எல்லைகள் கொழும்பு கோட்டையிலிருந்து புறக்கோட்டை வரை மட்டுமே இருந்தது.

கொழும்பில் ஆங்கிலேயர் படையெடுப்பின் போது பதினொரு காவலரண்கள் (Bastians கொத்தளங்கள் அல்லது முன்னரண் முகப்பு என்றும் கூறலாம்) இருந்தன. அவற்றில் இரண்டு பீரங்கிகள் பொருத்தப்பட்ட கொத்தளங்கள். அதைவிட கோட்டைக்குள் நான்கு பிரதான வீதிகளும் இருந்தன. போர்த்துக்கேயரிடம் இருந்து கோட்டையைக் கைப்பற்றியதும் 1656இல் டச்சுக்காரர்கள் கோட்டையை பலமாகக் கட்டினார்கள். 11 கொத்தளக் காவலரண்களுக்கும் ஒல்லாந்திலுள்ள பிரசித்தி பெற்ற நகரங்களின் பெயர்களை அவற்றுக்கு சூட்டினார்கள். உதாரணத்துக்கு ஒல்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாம், ரொட்டர்டாம், டெல்ப் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். ஆம்ஸ்டர்டாம் என்று அன்று அவர்கள் பெயரிட்டிருந்த பகுதி என்பது இன்று கொழும்பு துறைமுகத்திற்குள் இருக்கிற சுங்கக் கட்டிடம் அமைந்திருக்கிற பகுதியைக் குறிக்கும்.


கோட்டையின் அரை வட்டப் சுற்றுப் பகுதியில் பெரிய அகழியையும் அவர்கள் கட்டி இருந்தார்கள். கடலைச் சூழ இருந்த பகுதிகளுக்கு அகழி அவசியப்படவில்லை. ஆனால் அதற்கு எதிர்புறமாக நிலத்தோடு தொடர்புடைய கிழக்குப் பகுதியில் அகழி இருந்தது. ஆங்கிலேயர்கள் 1869 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டையின் சுற்றுச் சுவர்களை அடையாளமே  தெரியாதபடி  இடித்துத் தள்ளினார்கள். இனி ஒரு ஆக்கிரமிப்புக்கான வாய்ப்பே இல்லை என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். அப்படி இடிக்கப்பட்ட சுவர்களையும் கொத்தளங்களையும் அகழியில் நிரப்பித் தான் நிலத்தை புறக்கோட்டையுடன் தொடுத்தார்கள். இன்றைய கபூர் கட்டிடம், YMBA கட்டிடம், அதனோடு இருக்கும் தொலைதொடர்பு திணைக்களத்தின் பின் புற வீதி உள்ள பகுதிகளே அவ்வாறு கோட்டையின் அகழியாக இருந்த பகுதிகள். 

இன்றும் கொழும்பு இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார மையமாகத் திகழும் பகுதிகளினூடே  அலைந்து திரிந்தால் கொழும்பு கோட்டையின் சில எச்சங்களை இன்றும் காணலாம்.

கொழும்பு 2 - கொம்பனி வீதி

கடந்த காலத்தில் கொம்பனித் தெருவின் பிரபலமான பெயர் ஸ்லேவ் ஐலன்ட் எனப்பட்டது. அதாவது அடிமைத் தீவு. இன்றும் அந்த பகுதி ஆங்கிலத்தில் (Slave Island) என்று அழைக்கப்படுகிறது. மேற்படி பிரதேசமானது இன்றைய கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை அல்லது யூனியன் பிளேஸ் பிரதான நிலப்பகுதியை இணைக்கிறது.

போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட 2000 மொசாம்பிக் காபிரி மக்களை (கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையிலிருந்து) இந்த நாட்டிற்கு அழைத்து வந்தனர், பின்னர் டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கூலிப்படைகளாகவும், வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும் பயன்படுத்தினர். அவர்கள் அடிமைகளாகவே கொண்டு வரப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட புகழ்பெற்ற 'காபிரி கிளர்ச்சி'யின் போது டச்சு அதிகாரி பேரன்ட் டி ஸ்வான் (Barent de Swan) கொல்லப்பட்டதால், டச்சுக்காரர்கள் காபிரி மக்களை கடுமையான பாதுகாப்பில் வைத்திருக்க சட்டங்களை அறிமுகப்படுத்தினார். அந்த கிளர்ச்சிமோசமாக ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிமைகள் பேரை வாவியின் நடுவில் உள்ள தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டு, அவர்கள் அங்குள்ள குடிசைகளிலும் அறைகளிலும் வைக்கப்பட்டனர். ஏரியில் உள்ள முதலைகள் அவை தப்பிக்காமல் இருப்பதை உறுதிசெய்தன, மேலும் எதிர்கால கலவரங்களை நடத்தும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு அங்கே தூக்கு மேடையும் நிரந்தரமாக அமைக்கப்பட்டது. அங்கே ரைபிள் ரெஜிமென்ட் (Rifle Regiment/Company) நிறுவப்பட்டதன் பின்னர் ஸ்லேவ் ஐலன்ட் (Slave Island) என்று அழைக்கப்பட்ட இடம் பின்னர் கம்பெனி தெரு என்று பெயர் மாற்றம் பெற்றது. 

கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி

1664 இல் உடுநுவர அம்பன்வெல அப்புஹாமியும், சத்கோரளே மன்ன அப்புஹாமியும், அட்டகலங்கோரளே சுந்தர அப்புஹாமி ஆகியோர் இரண்டாம் இராஜசிங்க மன்னருக்கு எதிராகக் சதிக்கிளர்ச்சி செய்தனர். இறுதியில் அது தோல்வியடைந்தது. அரச விரோதச் சதிகளுக்குத் தண்டனையாக மன்ன அப்புஹாமியும், சுந்தர அப்புஹாமியும் மரணதண்டனையின் மூலம் கொல்லப்பட்டனர். ஆனால் அன்று சக்திவாய்ந்த குடும்பப் பின்னணியையும் கொண்டிருந்த அம்பன்வெல அப்புஹாமி டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கரையோரப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டார்.

குறுகிய காலத்தில் டச்சுக்காரர்கள் அம்பன்வெல அப்புஹாமிக்கு (அம்பன்வெல ரால) கொழும்பிற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியில் ஒரு பெரிய நிலத்தை வழங்கினார்கள். அதற்குப் பிரதியுபகாரமாக கண்டி இராச்சியத்தின் தகவல்களை வழங்குவதற்கும் உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டனர்.

அம்பன்வெல அப்புஹாமி அந்த நிலத்தில் தென்னை பயிரிட்டு, டச்சுக்காரர்களின் உதவியுடன் சுற்றுப்புறத்தில் இருந்த மக்களின் நிலங்களை கையகப்படுத்தி நிலச்சுவாந்தராகவும் பணக்காரராகவும் ஆனார். கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் உருவாக்கிக் கொண்டார். வான் ரை-கோஃப் (Van Rycloff) என்கிற டச்சுப் பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார்.

சுற்றுவட்டார ஏழைகளின் நிலத்தை பலவந்தமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ அபகரித்துக் கொண்டிருந்தார் அம்பன்வெல அப்புஹாமி, அவரது செயலை எதிர்க்கும் சக்தி இல்லாத கிராம மக்கள், அந்தப் பகுதி கொள்ளையடிக்கப்பட்ட நிலம் என்பதால் “கொள்ள கே பிட்டிய” என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே திரிந்து கொள்ளுப்பிட்டி பின்னர் ஆனது.

கொள்ளுப்பிட்டி புனித மைக்கேல் தேவாலயமும், கல்லூரியும் இந்தக் காணியின் ஒரு பகுதியைச் சேர்ந்தது. கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து லிபர்ட்டி சுற்றுவட்டம் வரை அந்நிலப்பகுதி பரந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் புனித மைக்கேல் தேவாலயம் மற்றும் புனித மிக்கேல் கல்லூரி அமைந்துள்ள காணி பொல்வத்தை என்றும் புனித மைக்கேல் கல்லூரியின் முகவரி "பொல்வத்தை, கொழும்பு 03" எனவும் அழைக்கப்படுகின்றது.

கொழும்பு 4 - பம்பலப்பிட்டி

பம்பலப்பிட்டி என்ற பெயர் பிறந்ததற்கு அந்த பகுதியில் உள்ள மிகவும் வளமான ஜம்பு மரங்களே காரணமாகும். ஜம்போலா என்கிற சிங்களப் பெயரை சில இடங்களில் பம்பலொசி என்றும் அழைப்பார்கள். சிங்களப் பெயராக இருந்தாலும், இது தமிழில் 'பம்பலிமாசு' என்பதிலிருந்து திரிந்து போர்த்துகீச அல்லது டச்சுக் கலப்பு பெயராக திரிபடைந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஜம்போல, 'பாம்ப்லமூசஸ்' (பிரெஞ்சு) மற்றும் 'பொமலோ' என்றும் அறியப்படுகிற இந்த ‘ஜம்பு’ சிட்ரஸ் குடும்பத்தின் (citrus maxima) ஒரு பெரிய பழமாகும். பம்பலப்பிட்டி என்ற பெயர் இந்த வார்த்தைகளின் கலவையிலிருந்து பிறந்ததாக கொள்ளப்படுகிறது. காலி வீதியில் கொள்ளுப்பிட்டியின் முடிவெல்லையில் இருந்து பம்பலப்பிட்டி ஆரம்பிக்கிறது. தற்போது அதிக மக்கள் செறிவைக்கொண்ட இன்னொரு வணிக நகரமாக இருக்கிறது பம்பலப்பிட்டி.

கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன்

ஆர்தர் எலிபேங்க் ஹெவ்லொக் (Arthur Elibank Havelock) 1890 முதல் 1895 வரை இலங்கையின் பிரித்தானிய ஆளுநராக இருந்தவர். ஐந்து ஆண்டுகள் தான் அவர் ஆட்சி செய்தாலும் அவரின் காலத்தில் தான் கொழும்பிலிருந்து குருநாகல், பண்டாரவளை போன்ற இடங்களுக்கான  இரயில் பாதை விஸ்தரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அப்போது விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த “நெல்வரி” அவரின் காலத்தில் தான்  இரத்து செய்யப்பட்டது. கொழும்பின் ஒரு நகரத்துக்கே பெயரிடப்பட்ட ஒரே ஒரு ஆங்கிலேய ஆளுநரின் பெயர் அவரது பெயர் தான். அதுமட்டுமல்லாமல் ஹெவ்லொக் வீதி, எலிபேங்க் வீதி, ஹேவ்லாக் பிளேஸ் ஆகிய மூன்று வீதிகளும் இவரது பெயரால் சூட்டப்பட்டன. ஹவ்லாக் வீதி இன்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் தற்போதைய பெயர் சம்புத்தத்வ ஜெயந்தி மாவத்தை.

கொழும்பு 6 - வெள்ளவத்தை

வெள்ளவத்தை என்பது வெலி உயன என்கிற சிங்களச் சொல்லுக்கு சமமானது அந்தக் காலத்தில், புதைமணலால் கட்டப்பட்ட, காட்டுச் செடிகளாலும், புதர்களாலும், கடற்பரப்பிற்குச் செல்லும் பாழ்நிலமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால் இன்று காலி வீதியில் அமைந்துள்ள நகரங்களிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட வர்த்தக நகரமாக மாறியுள்ளது. பெருந்தொகையான நீர்வழிகள் மற்றும் கால்வாய்கள் வெள்ளவத்தை ஊடாக கடலைச் சென்றடைகின்றன. கொழும்பில் அதிகமான வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் வாழும் பகுதியாகவும் இது கொள்ளப்படுகிறது.


கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்

1765 முதல் 1785 வரை இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த வில்லெம் இமாம் பால்க் (Willem Imam Falck), விவசாய நிலங்களில் கறுவாப்பட்டை பயிரிடுவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதற்கு முன், கறுவாப்பட்டை காட்டில் இயற்கையாக வளரும் ஒரு செடி என்று நம்பப்பட்டது. கொழும்பின் மீதான போர்த்துகேயரின் ஆக்கிரமிப்பு மோகத்துக்கு கறுவாப்பட்டை உற்பத்தி முக்கிய காரணியாக அமைந்ததை அறிவீர்கள். அன்று இந்தக் கறுவாத் பயிடப்பட்ட பகுதி; தற்பதைய கொழும்பு 7 வலயத்திற்கு உட்பட்ட பகுதி உட்பட மருதானையிலிருந்து ஹெவ்லொக் டவுன் வரை 12 மைல்களுக்குள் பரவியிருந்தது. கொழும்பு 7 சிங்களத்தில் “குறுந்து வத்த” என்றும் ஆங்கிலத்தில் Cinnamon Garden என்றும் அழைக்கப்படுவதற்கு இந்த கறுவாப்பட்டையே காரணம். கொழும்பின் வசதி படைத்தவர்களும், அதிகமான வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்களும் உள்ள பகுதி இது.

கொழும்பு 8 - பொரளை

பொரளை என்பது சரளை (சிங்களத்தில் பொரளை) நிலத்திற்கு இணையான சொல்லாகும். சரளைக் மண், கற்கள் போன்றவற்றை அதிகமாகக் கொண்ட இடமாக அப்போது அறியப்பட்ட பிரதேசம் இது. போர்த்துகீசர்கள் இந்த இடத்தை Outeirinho das pedras (கற்களைக் கொண்ட குன்று) என்றும் அழைத்தனர். தற்போது, வார்ட் பிளேஸ், கலாநிதி டேனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி), ஞானார்த்த பிரதீபா வீதி மற்றும் கலாநிதி என். எம். பெரேரா மாவத்தை (கொட்டா வீதி) என்பன ஒன்றினையும் ஐந்து வழிச் சந்திப்பின் காரணமாக பொரளை ஒரு பரபரப்பான வர்த்தக நகரமாகும். நாட்டில் உள்ள குழந்தைகளுக்கான பிரதான வைத்தியசாலையான லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) போன்றனவும் பொரளையில் அமைந்துள்ளது.

கொழும்பு 9 - தெமட்டகொட

ஒரு காலத்தில் நாகப்பாம்பு விஷக்கடிக்கு மருந்தாக “தெமட்ட பந்துரு”  (Gmelina Asiatica அல்லது Asiatic bushbeech) என்கிற மருந்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். புதரில் இருந்து கீழே தொங்கும் மணி வடிவ மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த புதர்கள் பொதுவாக மூன்று மீட்டருக்கு மேல் உயரம் இருக்காது. ஒருவேளை தெமட்டகொட பிரதேசமானது கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தெமட்ட புதர்கள் செழிப்பாக வளர்ந்த கிராமமாக இருந்திருக்கலாம் என்றே ஊகிக்கப்படுகிறது.

அல்லது இரு மொழிகளின் இணைப்பால் இப்பெயர் பிறந்திருக்கலாம். போர்த்துகீச மொழியில், ‘De mata’ என்பது காடு/வனம் என்று அர்த்தம். சிங்களத்தில் 'கொட' என்பது 'Village' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பயன்படுத்தப்படும் சொல். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தெமட்டகொட என்பது 'காட்டில் உள்ள கிராமம்' என்றும் பொருள்படலாம். லியோனார்ட் வூல்ஃப்பின் 'பத்தேகம' இந்த இடத்தில் நமக்கு நினைவுக்கு வரும். அவர் எழுதிய நூலின் சிங்களத் தலைப்பு “பத்தேகம”. (பத்தேகம கிராமம் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது.)

இன்று தெமட்டகொட ஒரு கிராமப் பிரதேசம் அல்ல. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதி. தேசிய இரயில்வே அருங்காட்சியகம் தெமட்டகொடாவில் அமைந்துள்ளது. மேலும் தெமட்டகொடாவில் பல்பாதை மேம்பாலமும் இப்போது உள்ளது.

கொழும்பு 10 - மருதானை

மருதானை தமிழ்ச் சொற்களின் சேர்க்கை என்றே கொள்ளப்படுகிறது. தமிழில் உள்ள மரமும், ஸ்தானமும் இணைந்து திரிந்து மருதானை ஆனதாக சிங்கள மொழிக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது மருதானை 'மரங்களின் இடம்' ஆக இருக்கக் கூடுமோ?

க்ளோப் ஆதரின் (Clough’s definition) வரையறையின்படி, 'மரதான' என்பது 'மணல் பள்ளத்தாக்கு' என்பதன் பொருளில் இருந்து பிறந்தது. மருதானை பிரதேசத்தின் மணல்மேடுகளில் தான் முதன் முதலில் செயற்கையாக கறுவாப்பட்டை செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து கிடைக்கும் அறுவடை இலங்கையின் சிறந்த கருவாப்பட்டையாகக் கருதப்பட்டது. இந்த மண்ணில் கறுவாப்பட்டை சிறந்த முதிர்ச்சி அடைய ஐந்து ஆண்டுகள் போதும், ஆனால் சாதாரண மண்ணில் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

மருதானையின் கறுவாப்பட்டை மிகவும் பெரியதாக இருந்தது. அதன் சிறப்புக்கு உதாரணமாகக் கூறுவதாயின் டச்சுக் காலத்தில் அங்கிருந்த கறுவாப்பட்டையை திருடினாலோ, அப்பயிர்செய்கைக்கு சேதமேற்படுத்தினாலோ மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளில், அத்தகைய குற்றம் விளைவித்தவர்களுக்கு சாட்டையடியால் மட்டுமே தண்டிக்கப்பட்டனர்.

இன்றைய மருதானை, இலங்கைத்தீவின் தெற்கில் இருந்து வரும் ரயில்களுக்கான சந்திப்பாக திகழ்கிறது. பிரதான கோட்டை ரயில் நிலையத்தின் பரபரப்பான வளாகத்துடன் இது இணைக்கபட்டிருக்கிறது. இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

கொழும்பு 11 – புறக்கோட்டை

சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” என்பதன் தமிழ் அர்த்தம் புறக்கோட்டை என்று பொருள். ஆனால் ஆங்கிலத்தில் pettah என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த பெட்டா என்ற சொல் தமிழின் பேட்டை என்கிற சொல்லில் இருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது. Hobson-Jobson's ஆங்கில அகராதியின்படி, Pettah (தமிழ்ப் pettāi) என்பது ஒரு கோட்டையுடன் இணைக்கப்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும் அல்லது கோட்டையை ஒட்டிய நகரமாகும். முன்பெல்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாகவும், திறந்த வெளியில் கடைத் தெருவும், சந்தையும் இருந்தது. இன்று, புறக்கோட்டையில் குறுகிய முடுக்குத்தெருக்களும், குறுகிய பாதைகளும் சேரிகளின் ஒரு பிரமையைத் தருவதாக கூறப்படுவதுண்டு. இது இலங்கையின் மொத்த / சில்லறை வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.

கொழும்பு 12 - அளுத்கடை

1656 இல் போர்த்துகீசியர்களுக்கு எதிரான கடைசி வெற்றிகரமான போரில் டச்சு ஜெனரல் ஜெரார்ட் ஹல்ஃப்ட் (Gerard Hulft) கொல்லப்பட்டார். 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பை ஆக்கிரமித்திருந்த போர்த்துகேயர்களை வெளியேற்ற அந்த நேரத்தில் கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் ராஜசிங்க மன்னனுடன் அவர் கூட்டணி வைத்தார். ஹல்ஃப்ட் இறப்பதற்கு முந்தைய நாள், அவர்கள் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் இரண்டாம் ராஜசிங்க மன்னர் ஜெனரல் ஹல்ஃப்ட்டின் கழுத்தில் ஒரு 'தங்க மாலையையும் தனது சொந்த மோதிரத்தை டின் விரலிலும் அணிவித்தார் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பைக் குறிக்கிறது.

மறுநாள் ஜெனரல் இறுதிப் போரில் பயன்படுத்தக்கூடிய முன் வரிசை அகழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை போர்த்துக்கேயர்கள் டச்சு மண்டபத்திற்கு தீ மூட்டினர். ஹல்ஃப்ட் மும்முரமாக பணியில் இருந்த வேளை அவரின் இதயத்தில் வந்து பாய்ந்தது. அதே இடத்தில் அவர் இறந்தார். அவர் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்ட மேட்டுப் பகுதி பல நூற்றாண்டுகளாக ஹல்ஃப்ட்ஸ்டோர்ப் (Hulftsdorp) என்ற பெயருடன் தொடர்கிறது.

ஆங்கிலேயர்கள் புறக்கோட்டை சந்தையை இந்த மேட்டுப்பகுதியின் அடிவாரத்தில் கொண்டு வர முயற்சித்ததன் விளைவாக, அந்த இடத்திற்கு 'அழுத் கடே’ என்று பெயரானது. நியூ பஸார் என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றைய இலங்கையின் ஏறக்குறைய அனைத்து சட்ட நிறுவனங்களும் அளுத்கடையில் அமைந்துள்ளன. அவற்றில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நீதி அமைச்சு ஆகியவை அடங்கும்.

கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை

ஒரு சிறிய மீன்பிடி கிராமமான கொட்டாஞ்சேனை, அங்குள்ள கொட்டாங்காய் மரங்கள் (Costus Speciosus) நிறைந்திருதந்தால் அதன் பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்த இடம் கொட்டாஞ்சினா (Kottanchina) என்று அழைக்கப்பட்டது. டச்சு மொழியில், 'Korteboam' என்றால் 'குட்டையான மரங்கள்' எனப்படும். இறுதியாக, ஆங்கிலேயர்கள் கொட்டன் சைனாவாக (Cotton China) மாற்றினர்.

1760 ஆம் ஆண்டு முதலே கொட்டாஞ்சேனையில் ஒரு தேவாலயம் இருந்தபோதிலும், இந்த சிறிய கிராமம் 1838 இல் புனித லூசியாஸ் கதீட்ரல் தேவாலயம் நிறுவப்பட்ட பின்னர் நகரமயமாக்கப்பட்டது.

கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்

போர்த்துக்கேயர் காலத்தில் களனி ஆற்றைக் கடந்து வடக்கே செல்ல இரண்டு படகுத்துறைகள் இருந்தன.  போர்த்துகீசியர்கள் இதை 'பஸ்ஸோ' (Passo) என்று அழைத்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் அதை 'பாஸ்' என்று ஆங்கிலத்தில் அழைத்தனர். முதல் படகுத்துறை இன்றைய நாகலகம் வீதியின் முனையிலிருந்தது. இது போர்த்துகேயர் காலத்தில் 'பாஸோ கிராண்டே' (Passo Grande) என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அது கிராண்ட் பாஸ் ஆனது. இரண்டாவது துறை வத்தளைக்கு அருகாமையில் இருந்தது. கிராண்ட்பாஸ் படகுச்சேவை மிகவும் பரபரப்பான இடமாகவும், அதற்கென்றே சந்தையும் வரி வசூலிப்பு நிலையமும் இருந்தது. 1822 இல் தான் படகுகளின் மேல் மிதக்கும் பாலம் (Pontoon Bridge) கட்டப்பட்டது. அதன் பின்னர் படகுச் சேவை குறைந்து பின்னர் அச்சேவை நிரந்தரமாக முடிவுக்கு வந்தது. இந்தப் பாலத்தை 21 படகுகள் தாங்கியிருந்தன. அதன் நீளம் 499 அடியைக் கொண்டிருந்தது. 1895 ஆம் ஆண்டில் 26 அடி அகலத்தில் விக்டோரியா பாலம் கட்டப்படும் வரை இப்படித்தான் அந்தப் பாலம் இயங்கியது. அதற்கு 30 வருடங்களுக்கு முன்னர் களனி ஆற்றின் குறுக்கே ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

கொழும்பு 15 – முகத்துவாரம்

கடலுடன் வந்து கலக்கும் ஆற்றின் முனையத்தை முகத்துவாரம் என்று அலைக்கபடுவது வழக்கம். அப்படி வந்தது தான் களனி கங்கை வந்து கலக்கும் இந்த முனையம். அதேவேளை போர்த்துக்கேயர், டச்சுக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட 'முத்வால்' என்ற சொல் இன்றும் பயன்படுத்தபாட்டில் இருக்கிறது. இன்றைய முகத்துவாரப் பிரதேசத்தில் வடகொழும்பைச் சேர்ந்த மட்டக்குளி, மோதர, கதிரான, காக்கைத் தீவு என்பவை அடங்குகின்றன.

கொழும்பின் வலயங்கள்

அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள்

கொழும்பு 1 கோட்டை

கொழும்பு 2 கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ்

கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி

கொழும்பு 4 பம்பலப்பிட்டி

கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம், கிருலப்பனை

கொழும்பு 6 வெள்ளவத்தை, பாமன்கடை

கொழும்பு 7 கறுவாத் தோட்டம்

கொழும்பு 8 பொரல்லை

கொழும்பு 9 தெமட்டகொடை

கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை

கொழும்பு 11 புறக்கோட்டை

கொழும்பு 12 புதுக்கடை, வாழைத் தோட்டம்

கொழும்பு 13 கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை

கொழும்பு 14 கிராண்ட்பாஸ்

கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி, மாதம்பிட்டி

நன்றி - தினகரன் (26.11.2022)



விக்டோரியா கண் ஆஸ்பத்திரியும் ஸ்கின்னரின் தற்கொலையும் (கொழும்பின் கதை - 47) - என்.சரவணன்

விக்டோரியா மெமோரியல் கண் மருத்துவமனையானது (Victoria Memorial Eye hospital) அதன் கம்பீரமான கட்டிடக்கலையுடன் கொழும்பில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. இது லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழ்ந்த கட்டிடங்களில் பெரிய கட்டிடம் இது. உலகம் முழுவதும் பிரபலமான சிலோன் தேயிலையை நினைவுகூருவதற்காக பெயரிடப்பட்ட சுற்று வட்டமே லிப்டன் சுற்றுவட்டம் என்பதை நாம் அறிவோம். மகப்பேறு மருத்துவமனையை நடத்தி வந்த பரோபகாரரும் தொழில்முனைவோருமான சார்ள்ஸ் ஹென்றி டி சொய்சாவின் பெயரால் டி சொய்சா சுற்று வட்டம் என்று அழைக்கப்படுகிறது. 1906 இல் நிறுவப்பட்ட விக்டோரியா நினைவு மருத்துவமனைக்கு விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.

இந்த சிவப்பு செங்கல் கட்டிடமானது காலனித்துவ காலத்தை நினைவு கூறும் முக்கிய கட்டிடங்களில் ஒன்று. 1894 ஆம் ஆண்டு இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரான எட்வர்ட் ஸ்கின்னரால் (Edward Skinner) இது வடிவமைக்கப்பட்டது. அதன் கட்டுமான வெளித்தோற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு செங்கற்கள் பிரமாண்டமானதும் தனித்துவமானதுமான தோற்றத்தை அளிக்கிறது. சிவப்பு செங்கற்களினாலான கட்டிட அமைப்புமுறையின் வரலாறானது மத்திய, வடமேற்கு ஐரோப்பாவில் 12 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது. லண்டனில் உள்ள பல பிரபலமான 19 ஆம் நூற்றாண்டின் மருத்துவமனைகள் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனை மற்றும் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை (Moorfields Eye Hospital) போன்றவை சிவப்பு செங்கற்களால் செய்யப்பட்டவை.


கொழும்பில் காலி முகத்திடல் ஹோட்டல் (மீள் நிர்மாணம்), கார்கில்ஸ் கட்டிடம், விக்டோரியா மேசோனிக் தேவாலயம், வெஸ்லி கல்லூரி, கோட்டையில் உள்ள லொய்ட்ஸ் (Lloyds) கட்டிடம், மற்றும் காலி வீதியில் உள்ள செயின்ட் அன்ட்ரூஸ் ஸ்கொட்ஸ் தேவாலயம் (St. Andrew’s Scots Kirk) உள்ளிட்ட பல முக்கிய கட்டிடங்களை வடிவமைத்தவர் எட்வர்ட் ஸ்கின்னர். மேற்கத்திய கட்டிடக்கலையில் கோதிக் மறுமலர்ச்சி 20 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தாலும், எட்வர்ட் ஸ்கின்னர் இந்த கண் மருத்துவமனைக்கு இந்தோ-சராசெனிக் (Indo-Saracenic) வடிவத்தை முடிவு செய்தார். குவிமாடங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் முகலாயர் காலத்து கட்டிடக்கலையை நினைவூட்டுகிறது. அதுபோல் கதவுகளிலும், ஜன்னல்களின் நேர்த்தியான, அழகான பாலிக்ரோம் (polychrome) செங்கல் வளைவுகள் உள்ளன. கட்டிடக்கலை ரீதியாக அது உலகின் சிறந்த காலகட்டத்தின் நினைவைத் தொடர்ந்தும் தக்க வைத்திருக்க முடியும். 


அன்றைய பிரிட்டிஷ் ஆளுநர் சேர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வேயின் (Sir Joseph West Ridgeway) மனைவி, லேடி ரிட்ஜ்வே என்று அழைக்கப்பட்ட கரோலினா எலன் (Carolina Ellen), 1903 ஓகஸ்ட் 6 அன்று விக்டோரியா கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இக்கட்டிடத்தைக் கட்டும் யோசனையை முன்வைத்தவரும் லேடி ரிஜ்வே தான். 1902ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இப்படிப்பட்ட ஒரு ஆஸ்பத்திரியை நமது இராணியின் நினைவாக கட்டுவதற்கு ஆதரவு தரும்படி வேண்டினார். அதன் விளைவாக பல தனவந்தர்களும் பொது மக்களும் நிதியளித்தார்கள். உடனடியாக 30,000 ரூபா சேர்ந்தது. இறுதியில் அது ஒரு லட்சம் வரை உயர்ந்தது. அன்று நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மாத்திரம் 4000 ரூபாய் இதற்காக வழங்கினார்கள். திருமதி ஜேம்ஸ் பீரிஸ் 5000 ரூபாய் வரை சேகரித்துக் கொடுத்தார்.


இதற்காக நிதி வழங்கிய பலரின் பெயர் பட்டியல் Arnold Wright, எழுதிய “Twentieth Century Impressions of Ceylon” நூலில் காணக்கிடைகிறது. பி.குமாரசுவாமியின் பெயரும் அதில் அடங்கும். அன்று தனவந்தர்களாக இருந்த சேனநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த டீ.எஸ்.சேனநாயக்க இக்கட்டிடத்துக்காக வழங்கிய நிதிப் பங்களிப்பின் காரணமாக ஆங்கிலேய ஆளுநர் ரிஜ்வே முதலியார் பட்டம் வழங்கி கௌரவித்தார். பொது மக்களிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்ததை விட கிடைத்தது. அரசும் தனது பங்கையும் சேர்த்து கட்டிய கட்டிடம் தான் இது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் இந்த ஆஸ்பத்திரியை உருவாக்கி முடிக்க செலவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பலரின் மிகுந்த நம்பிக்கையுடன் சிறந்த கண் மருத்துமனையாக 1906 ஏப்ரல் 2ஆம் திகதி பொதுப்பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.  அது திறந்து புதிய ஆளுநர் மாற்றப்பட்டிருந்தார் எனவே புதிய ஆளுநரின் மனைவி லேடி எஷ்மோர் (Lady Ashmore) திறந்து வைத்தார்.  1906 ஆம் ஆண்டில் இது காலனி நாடுகளிலேயே சிறந்ததாகக் கருதப்பட்டது. இது இப்போது இலங்கையின் தேசிய மருத்துவமனையின் ஒரு பகுதியாகும்.  

பிற்காலத்தில் கண் மருத்துவ சேவைகள் பழைய மருத்துவமனையிலிருந்து எதிர் மூலையில் இருந்த புத்தம் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1962 இல் கொழும்பு புதிய தேசிய கண் மருத்துவமனை நிறுவப்பட்டது. பழைய விக்டோரியா நினைவு மருத்துவமனையின் சில பகுதிகள் சிதைக்க அனுமதிக்கப்பட்டாலும், இம்மருத்துவமனை தொடர்ந்தும் சேவை அளித்து வந்தது. சுகாதாரத் துறையில் இடத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க விக்டோரியா ஞாபகார்த்த வைத்தியசாலையில் திடீர் விபத்து சேவையை திறந்து வைத்தார். அதனைச் சூழ இருந்த பகுதியானது சின்னபொரளை வரை கொழும்பின் மருத்துவ மனைகளின் மத்திய தளமாக மாறியது. கொழும்பு மட்டுமன்றி இலங்கையின் மூளை முடுக்கெங்கிலும் இருந்து தரமான மருத்துவ சேவையை நாடிவரும் சாதாரண குடிமக்களின் நம்பிக்கை ஆலயங்களாக இந்த மருத்துவக் காடு திகழ்கிறது. நாளாந்தம் உடல்நலம் வேண்டி, நாடி  வரும் லட்சோப பாமர மக்கள் இன்றும் பயனடையும் இடமாக இது இன்று மாறியிருக்கிறது.


லிப்டன் சுற்றுவட்டத்தின் இன்னொரு புறத்தில் இன்று இருக்கிற அரச மருந்தகற் கூட்டுத்தாபனமான “ஒசுசல” கட்டிடம் ஒரு காலத்தில் அழகான பீக்கிங் ஹோட்டலாக இருந்தது. இன்று அப்படி ஒன்று இருந்ததை அறிந்தவர்கள் குறைவு.

விக்டோரியன் கட்டிடங்களின் பொது மருத்துவமனையானது குறுகிய தாழ்வாரங்களையும், ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்குச் செல்லும் கூரைபோட்ட பாதைகளும், அவற்றைக் கடந்து வரும் கலவரப்பட்ட சோக மனிதர்களும், நோயாளிகளும், எப்போதும் பல மருந்துகளின் கலவை மணம் பரவிய சூழலும் எவருக்கும் மகிழ்ச்சியைத் தந்து விடாது.

இங்கே பல ஆண்டுகளாக பணிபுரிந்த டொக்டர் நிமால் அமரசேகர இந்த மருத்துவமனை குறித்து எழுதிய விபரங்கள் சுவாரசியமானவை.

“...இரவில், அதன் பெரும்பகுதி இருட்டாகவும், வெளிச்சமின்றியும் சமீப காலம் வரை இருந்தது. இருளில் அவை அச்சுறுத்தும் பாதைகளாக இருந்தன. பெரும்பாலான பழைய கட்டிடங்கள் பேய் குடிகொண்டிருக்கும் கட்டிடங்களாக உலகளவில் ஒரு விசித்திரமான நம்பிக்கை உள்ளது. அங்கெல்லாம் இரவில் மர்மமான நிகழ்வுகள் நடந்ததாக பல கதைகள் உள்ளன. சிலர் மருத்துவமனையை சூழ பேய் உருவங்கள் உலாவுவதாக நம்பினர். அந்தக் கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர்கள் விசித்திரமான சத்தங்களைக் கேட்ட கதைகளை பகிர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் மூடிய கதவுகளின் வழியாக மனித உருவங்கள் தோன்றுவதைப் பார்த்தார்கள். நான் இரத்த வங்கியில் ஒரு மங்கலான அறையில் தூங்கினேன். எனது எல்லா வருடங்களிலும் எனக்கு கீழே இருந்த விபத்து சேவையிலிருந்து அவ்வப்போது வலியின் அழுகை அல்லது விரக்தியின் அலறல்களைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை....”


விக்டோரியா கண் மருத்துவமனை, கட்டிடக் கலைஞர்கள் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அக்கட்டிடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அனால் அது இன்று அதன் முக்கியத்துவம் அலட்சியம் செய்யப்பட்ட ஒன்றாக ஆகியிருக்கிறது. அதன் செங்கற்களால் ஆன முகப்பின் பிரமாண்டத்தையும் மகத்துவத்தையும் மறைக்கும் வகையில் பெரிய விளம்பரப் பலகைகளாலும் கதைகளாலும் மூடப்பட்டு காட்சி தருகின்றன. அற்புதமான நுழைவு வாயில்களும் நேர்த்தியான தாழ்வாரமும் இப்போது பயன்பாட்டில் இல்லை.

இலங்கையின் தேசிய வைத்தியசாலையின் ஒரு அங்கமாகவே இந்த வைத்தியசாலை உள்ளது. அவசர விபத்து சேவை, அவசர சேவை, தீக்காயங்கள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சில நரம்பியல் சத்திரசிகிச்சை சேவைகளையும் கொண்டிருப்பதுடன், ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வைத்தியசாலை தொகுப்பாக இன்று விரிந்திருக்கிறது.


புதிய கண் மருத்துவமனை ஒரு பெரிய கான்கிரீட் தொகுதியாகத் தோன்றினாலும், இது நவீன அமைப்பைக் கொண்ட அதிநவீன மருத்துவமனை மற்றும் மிக சமீபத்திய வசதிகளைக் கொண்டது. பெரிய வார்டுகள், சிறந்த வெளிச்சம் மற்றும் சத்திரசிகிச்சை வசதிகளுடன், மருத்துவ நிபுணர்களுக்கு மிகவும் சிறந்த பணிச்சூழலாக இருக்கிறது. விசாலமான காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிநோயாளர் கிளினிக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பெரிய காற்றோட்டமான பகுதிகள் பொதுமக்களுக்கு வசதியாக காணப்படுகிறது.

நிகழ்காலம் அனைவரையும் பிடிக்கும், ஆனால் கடந்த காலம் நம் வாழ்வில் எப்போதும் நிலைத்து இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றாலும், இப்போது கூட வண்ணப்பூச்சு வேலைபாடு சூரிய ஒளியில் அக்கட்டிடத்தின் புறத்தோற்றம் ஒரு தலைசிறந்த படைப்பென வெளிப்படுத்துகிறது.

எட்வர்ட் ஸ்கின்னர் (15.03.1869 – 26.12.1910)

ஸ்கின்னர் ஒரு தலைசிறந்த கட்டிடக் கலைஞர். 1893ஆம் ஆண்டு அவர் கட்டிடக் கலைஞராக உயர்கல்வியைக் கற்று பிரித்தானிய ராஜரீக கட்டிடக்கலை அமைப்பில் இணைந்த கையோடு அதே ஆண்டு தனது 24வது வயதில் இலங்கைக்கு குடிபெயர்ந்தார். 1897இல் இருந்து தான் அவர் கொழும்பில் தனது கட்டிட வடிவமைப்புகளை தொடங்கினார். அவரது கட்டிடக்கலை ஞானமும் வடிவமைப்பும் கொழும்பு நகரத்தின் பாராட்டைப் பெற்றன. கொழும்பின் காலனித்துவ கால கட்டிடங்களை நினைவு கொள்ள எஞ்சியிருக்கும் அழகான கட்டிடங்கள் பல அவரால் வடிவமைக்கப்பட்டவை. அவரின்  அலுவலகம் கொழும்பு கோட்டையில் இருந்தது.


அவர் கொழும்பு நகர வீதிகளில் அவர் சைக்கிளில் பயணம் செய்தார். திருமணமாகி சில மாதங்களில் 1910 யூலையில் அவர் ஒரு சைக்கிள் விபத்தில் சிக்கினார். அதனால் அவர்  மூளையதிர்ச்சியால் அவதிப்பட்டார். அதில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இறுதியில் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அவரது உடல் கோட்டையிலுள்ள அவரின் அலுவலகத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பற்றி அன்றைய சிங்கப்பூர் பத்திரிகையில் (டிசம்பர் 27 வெளியான சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையை ஆதாரம் காட்டி) அன்று வெளிவந்த செய்தியொன்றை கண்டெடுக்க முடிந்தது.  அதில் காலை உணவுக்கு வேளைக்கு வந்துவிடுவதாக கூறி மனைவியிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற ஸ்கின்னர் மதியம் தாண்டியும் வராத நிலையில் அவரைத் தேடி ஒஸ்திரேலியா கட்டிடத்தில் (Australia Building) இருந்த அவரின் அலுவலகக் கதவைத் திறந்த போது அவர் அங்கே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும், சைக்கிள் விபத்தின் பின் அவர் முற்றிலும் மாறிய மனிதாகவும், அடிக்கடி ஆத்திரமும், கவலையும் கொண்ட நபராக காணப்பட்டார் என்றும் அதில் காணக் கிடைக்கிறது.

கோட்டை கார்கில்ஸ் கட்டிடத்தை அன்று ஒஸ்திரேலியா கட்டிடம் என்று அழைத்தார்கள். இன்றும் கோட்டையில் பிரமிக்க வைக்கும் அக்கட்டிடத்தை வடிவமைத்தவர் கூட ஸ்கின்னர் தான். அவர் இறக்கும்போது அவரின் வயது 41 மட்டும் தான். இந்த குறுகிய காலத்துக்குள் அவர் முடித்து விட்டுச் சென்ற அற்புத படைப்புகள் காலத்தால் அழியாதவை. அப்படி அவரின் நினைவின் ஒரு பகுதி எப்போதும் விக்டோரியா நினைவு கண் மருத்துவமனையும் இருக்கும்.

நன்றி தினகரன் - 20.11.2022



சிறு தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களும் - அருள்கார்க்கி

தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியாள் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார் தோட்டங்கள் யாவும் தேயிலை சிற்றுடைமைகள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. காணி சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தேயிலை நிலங்கள் யாவும் இலங்கையர்களுக்கே சொந்தம் என்று அப்போதைய அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் அது தொழிலாளர்களுக்கு சொந்தமாகவில்லை. மாறாக தேயிலை காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்தமைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. இது அன்றே தேயிலை சிற்றுடைமைகளுக்கு அரசாங்கம் பக்கபலமாக இருந்ததற்கான அடிப்படையாகும். 

அன்று தொடக்கம் இன்றுவரை சிற்றுடைமையாளர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசாங்கம் பக்கபலமாக இருந்து வருகின்றது. 1975 இல் 117000 ஆக இருந்த தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் 1982 இல் 236000 ஆக அதிகரித்து 2006 இல் ஏறக்குறைய 319000 பேராக உயர்ந்துள்ளனர். இந்த தொகை 2017 இல் 395414 ஆகவும், 2018 இல் 399313 ஆகவும், 2019 இல் 400987 ஆகவும், 2020 இல் 404291 ஆகவும் படிப்படியாக அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. இது சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சிப் போக்கை மட்டுமல்லாது பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியையும் தெளிவுப்படுத்தும் குறிகாட்டியாகும். 

இவ்வாறு தேயிலை சிற்றுடைமையாளர்களாக உள்ளோரில் பெரும்பாலோனோருக்கு அரை ஹெக்டேயருக்கும் குறைவான தேயிலை நிலமே உரிமையாக உள்ளதுடன், இவர்களில் பெரும்பாலோனோர் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றனர். தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கான அதிகார சபையானது அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பொறுப்பாக செயற்படுகின்றது. அதேபோல் சமூக, பொருளாதார ரீதியாக இந்த தேயிலை சிற்றுடைமையாளர்களை பாதுகாக்கும் அமைப்பாகவும் இந்த அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. 

தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித நலன்பேண் திட்டங்களும் இல்லாத போதும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையானது பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் முக்கியமானது 1980 களின் பின்னர் உயர் விளைச்சல் தரக்கூடிய தேயிலை கன்றுகளை வழங்கி வருகின்றது. இலகு வட்டியில் கடன்களை வழங்கியமை, பச்சைத் தேயிலைக்கு உயர்ந்த விலையை வழங்கியமை, உரமானியம் வழங்கியமை ஆகிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொழில்சாலைகளை நிர்மாணிக்க உதவியமை போன்றவற்றைக் கூறமுடியும். 

இவ்வாறான எவ்வித உதவிகளும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கடந்த 150 வருடகாலமாக அறிய முடியவில்லை. இன்று தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்டங்களை விடவும் சிற்றுடைமைகளே அதிகமான விளைச்சலை கொண்டிருக்கின்றன. இதனை ஒப்பிடுகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மொத்த தேயிலை உற்பத்தியை சிறு தெயிலை தோட்டங்களே மேற்கொள்கின்றன. 

இலங்கையில் மொத்த விவசாய நிலத்தில் 16 சதவீதம் தேயிலை துறைக்கு சொந்தமானது. இதில் மொத்த தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி (வுநய ஊழவெசழட யுஉவ) நாடு முழுவதும் 20 பேர்ச்சஸ் முதல் 10 ஏக்கர் வரையிலான தேயிலை நிலங்கள் சிறிய தேயிலை தோட்டங்களாக கருதப்படுகின்றன. இந்த பின்னணியில் சிறிய தேயிலை தோட்டங்களின் வளர்ச்சியானது சமகாலத்தில் அபரிமிதமானதாக காணப்படுகின்றது. பெருந்தோட்ட கட்டமைப்பை மிஞ்சிய அளவில் கணிசமான வளர்ச்சியை சிற்றுடைமைகள் கொண்டுள்ளன. 

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கையின் படி (2020) இலங்கையின் தேயிலை உற்பத்தி மேலே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இது தேசிய தேயிலை உற்பத்தி மேலாண்மை நிறுவனங்களின் பங்களிப்பு ஆகும். அதன்படி சிற்றுடைமைகள் 2018 ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 75.02 சதவீதத்தை கொண்டுள்ளன. 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களிலும் முறையே 75.21 சதவீதம் மற்றும் 73.85 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. மறுபுறம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மொத்த உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 24.2 சதவீதம், 2019 ஆம் ஆண்டு 24.05 சதவீதம், 2020 ஆம் ஆண்டு 25.37 சதவீதம் என்றவாறு உள்ளது. இது சிற்றுடைமைகளின் சமகால வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாகும். 


2019 மற்றும் 2020 இரு ஆண்டுகளில் தேசிய தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்காக சிறு தேயிலை நிலப்பிரிவின் உற்பத்தி முக்கியமானதாக உள்ளது. இலங்கை தேயிலை சபையின் தேயிலை உற்பத்தி தொடர்பாக தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலங்களின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1766 கிலோகிராம் ஆகும். 2019 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலப் பிரிவின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1938 கிலோகிராம் என்றால் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் 8.8 சதவீத அதிகரிப்பாக கொண்டுள்ளது. 

தேயிலை காணிகளின் அபிவிருத்தியை பொருத்தவரையில் சிற்றுடைமைகளின் வளர்ச்சியானது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடக்கூட முடியாத அளவுக்கு சிறப்பாக காணப்படுகின்றது. பொதுவாக பெருந்தோட்ட கம்பனிகள் மீள்நடுகை விடயத்தில் சமகாலத்தில் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. ஆனால் சிற்றுடைமையாளர்களானது மீள்நடுகை விடயத்தில் சிறப்பான செயற்றிறன் கொள்கையை கடைப்பிடிக்கின்றன. 


2020 ஆம் ஆண்டில் மீள்நடுகைக்காக அனுமதிப் பத்திரங்களை வழங்கல் 41 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உரிமம் பெற்றவர்கள் பழைய தேயிலை அகற்ற விண்ணப்பிக்கப்பட்ட ஹெக்டேயர் அளவு 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேயிலை மீள்நடுகைக்காக தேயிலை அகற்றிய ஹெக்டேயர் அளவு 682 ஆகும். அந்த அளவு வருடாந்த இலக்காக நிலப்பரப்பின் அதாவது 840 ஹெக்டேயரில் 81 சதவீத வளர்ச்சியாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பழைய தேயிலை அகற்றும் சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்து அந்த நிலப்பரப்பு 306 ஹெக்டேயரில் அதிகரித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டில் சிற்றுடைமைகளின் மண் பதப்படுத்தல் இலக்காக கொண்ட நிலப்பரப்பு 624 ஹெக்டேயர் ஆவதோடு அதன் செயல்திறன் 94 சதவீத வளர்ச்சியாகும். இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணம்  மீள்நடுகை எடுக்கும் நிறுவன இலக்கு 376 ஹெக்டேயர் வரை வீழ்ச்சியாகும். ஒதுக்கீடு கட்டுப்பாடு என்றால் 2020 ஆண்டில் மண் மறுவாழ்வு இலக்கு 400 ஹெக்டேயர் ஆகும். 2020 ஆம் ஆண்டில் மண் பதப்படுத்தல் திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்ட நிலப்பரப்பு 411 ஹெக்டேயர் ஆகும். 

இவ்வகையாக தேயிலை  சிற்றுடைமைகளின் வளர்ச்சி காணப்படுமிடத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையானது பின்னோக்கி செல்கின்றது. அவர்களின் சம்பளம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. பொதுவாக நோக்குமிடத்து இவ்வாறான சிற்றுடைமைகளின் உரிமையாளர்களே அவற்றை நிர்வகிப்பவர்களாகவும், பராமரிப்பு, தொழிலாளர்களை கையாளுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுகின்றனர். எனவே இவர்களின் முதன்மை நோக்கமாக இருப்பது இலாபகரமான முறையில் அறுவடையை பெற்றுக் கொள்வது மாத்திரமே. தொழிலாளர்களின் நலன்பேண் விடயங்களில் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அதேபோல் இவ்வாறான சிற்றுடைமைகளில் தொழில்புரிவோர் எவ்வித இலக்க ரீதியான குழுவாகவும் இல்லாத காரணத்தினால் அவர்களின் உரிமைகள் தொடர்பாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படுவது இல்லை. இது சிற்றுடைமை உரிமையாளர்களுக்கு வாய்ப்பான ஒன்றாகும்.மேலும் தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் கிடையாது. அவர்கள் நாளாந்த கூலிக்கு தொழிலுக்கு வருபவர்களாவர். 

1950 ஆம் ஆண்டின் இலங்கையின் கைத்தொழில் சட்டம் (Induestrial dispute Act- 1950) எந்தவொரு தொழில்துறையிலும் பணியாளர்களின் வேலைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக உடன்பாடாக ‘கூட்டு ஒப்பந்தம்’ உருவாக்கப்பட்டது. (Cellective Agreement) முக்கியமாக தேயிலை தொழில்துறையில் இந்த கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் ஊதியத்தில் கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் புதுப்பிக்கப்படுகின்றது. ஆனால் தேயிலை சிற்றுடைமையாளர்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவது இல்லை. இது இவர்களுக்கு தமது ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குகின்றது. சிற்றுடைமையாளர்கள் தமது இலாப நோக்கத்தை இரட்டிப்பாக்கி கொள்வதன் கொள்கையை முழுமையாக விரிவுப்படுத்த இது வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இவர்களின் கொடுப்பனவு முறையை கேள்விக்குட்படுத்த எந்தவொரு அதிகாரம் பொருந்திய நிறுவனமும் இல்லை. என்பதும் ஒரு பாரிய குறைபாடாகும்.  

சுற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர சம்பளமாக ஒரு தொகையை நிர்ணயிப்பதில்லை. அவர்களின் அறுவடையை பொறுத்தே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. பெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிப்பதற்கு ரூ.30 வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது. இந்த தொகையானது அவர்களின் அறுவடையானது சராசரியாக 20 கிலோகிராமாக இருந்தால் அவர்களின் அன்றைய சம்பளம் ரூ. 600 மட்டுமேயாகும். ஆயினும் இன்று பச்சை தேயிலை ஒரு கிலோகிராம் சராசரியாக ரூ.200 வரை கொள்வனவு செய்யப்படுகின்றது. இவருமானத்தை அன்றைய தொழிலாளியின் நாளாந்த ஊதியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1ஃ7 மடங்காக காணப்படுகின்றது. 

தோழிலாளி ஒருவர் அன்றாடம் 20 கிலோகிராம் வரையில் பச்சை தேயிலையை அறுவடை செய்ய முடியுமா என்பதும் பாரிய சிக்கலான நடைமுறையாகும். அது தேயிலைச் செடியின் வயது, காலநிலை, மண்ணின் தன்மை, அறுவடை நடைமுறைகள் என்பவற்றை பொருத்து வித்தியாசப்படும். 

இது உற்பத்தி திறன் சார்ந்த ஊதியமாதிரி என்று அழைக்கப்படும். Produvtive link model அதாவது அவர்களுக்கு நிலையான ஊதியமொன்று இல்லை. அவர்களின் அறுவடையை பொறுத்து அவர்களின் நாளாந்த ஊதியம் தீர்மானிக்கப்படும். இருப்பினும் 2000 ஆண்டுவரை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை போலவே சிற்றுடைமையாளர்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாளாந்த ஊதியத்தை கொடுத்தனர். இது கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்டதாகும். பின்னாளில் அவர்கள் மிகை இலாபத்தை அடையும் நோக்குடன் அந்த நடைமுறையிலிருந்து விடுபட்டு தமக்கு சாதகமான உற்பத்தி திறன்சார்ந்த ஊதிய மாதிரிக்கு சென்று விடலாம். அதேபோல் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு, உழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு சேவைக்கால கொடுப்பனவு போன்ற எவ்வித நலன்புரி சேவைகளும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பதுளை மாவட்டத்தில் ஒரு சிற்றுடைமை தோட்டத்தில் தொழில்புரியும் அதிகமான பெண்கள் பெருந்தோட்டங்களில் சேவைபுரிந்து ஓய்வு பெற்றவர்களாவர். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. என்பது அந்த தேயிலை சிற்றுடைமை உரிமையாளரின் கருத்தொன்றாக இருந்தது. இதனை காரணம் காட்டி ஏனைய தொழிலாளர்களுக்கும் அந்த சேவை மறுக்கப்படுகின்றது. எத்தோட்டமும் மிகவும் இலாபகரமாக இயங்கும் ஒரு சிற்றுடைமையாகும். 

பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் அங்கு தொழில் புரியும் ஊழியர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு சேவைகளை வழங்குவது கட்டாயமாகும். வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, அடிப்படை உரிமைகள் போன்ற விடயங்களில் அவர்கள் நம்பமுடியாத சட்டங்க்ள ஓரளவு காணப்படுகின்றன. ஆயினும் இவ்வாறான தேயிலை சிற்றுடைமைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு உடைமையாளர்கள் எவ்வித அடிப்படை சேவைகளையும் வழங்குவதில்லை. அதிலும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் குடியிருப்புகளோ அல்லது வேறு எவ்வித பொதுச் சேவை கட்டிடங்களோ இல்லை. குறைந்த பட்சம் அவசர மருத்துவ தேவைகளை கூட தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

சிறியளவிலான மக்கள் குடியிருப்பாளர்களாக உள்ள தெயிலை சிற்றுடைமைகளில் வீடு பாதை வசதிகள், முன்பள்ளிகள், மருத்துவசாலைகள் குடிநீர், மகப்பேற்று நிலையங்கள், போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் நலன்பேண் விடயங்களுக்கும் சிற்றுடைமைகளின் உரிமையாளர்களுக்கும் தொழிலுறவைத் தவிர வேறு எவ்வித பிணைப்புக்களும் காணப்படுவதில்லை. எனவே இங்குள்ள மக்கள் மலையக அன்னியப்படுத்தப்பட்ட சமூகத்தினர்களாக காணப்படுகின்றனர். 

தேயிலை சிற்றுடைமைகளில் மக்களின் சமூக பொருளாதார சவால்கள் தொடர்பாக மூத்த சட்டத்தரணி இ.தம்பையா கூறுகையில் “சிறு தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். முதலாவதாக அவர்களின் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் ஓரளவுக்கு தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அக்கறை காட்டுவதங்கு சட்டங்கள் உண்டு. ஆனால் சிறு தேயிலை தோட்டங்களில் அவ்வாறில்லை. அங்குள்ள மக்கள் அடிமைகள் போன்றே நடாத்தப்படுகின்றனர். முக்கியமாக அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் முழுமையாக வழங்கப்படாமையை எடுத்துக்காட்ட வேண்டும். பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களை போன்று இவர்களின் ஊதியத்துக்கு எதுவித சட்ட ஏற்பாடுகளும் எதுவுமில்லை. அவர்கள் பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ற விதத்திலேயே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படும். இது அவர்கள் எவ்வித நிறுவன அமைப்புக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை என்பதனை குறிக்கின்றது. மேலும் ஊழியர்களின் நலன்புரி விடயங்களிலும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் போன்று ஒப்பீட்டளவிலேனும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தேயிலை தனியார் தோட்டங்கள் கூட்டு ஒப்பந்தத்துக்குள் உள்வாங்காப்படினும் கூட்டு உடன்படிக்கையில் எட்டப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுதல் வேண்டும் என்பது தொழில் ஆணையாளரினால் விடுக்கப்படும் கட்டளையாகும். 

எனினும் இவர்கள் அதற்கு கட்டுப்படுவதில்லை. பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு திருப்தியான வீடுகள் கூட இல்லை. அவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் அந்த தோட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். வெளியாரின் தொடர்புகளை கூட அவர்களுக்கு தோட்ட உரிமையாளர் அனுமதிப்பதில்லை. மறுபுறம் ஒரு தோட்டத்திலிருந்து பிரிதொரு தோட்டத்துக்கு மேலதிக வருமானம் ஈட்ட அவர்கள் செல்வதற்கும் அனுமதியில்லை இவ்வாறான சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட பல வழக்குகளில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக அனுபவம் உண்டு”  என்று தம்பையா கூறினார். சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களுக்கு தீர்வாக தம்பையா அவர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர். அவையாவன : 

  1. தேயிலை சிற்றுடைமையாளர்களுக்கு தொழில்துறை சார்ந்தும், தொழிலாளர்கள் சார்ந்தும் ஒரு சட்ட ஏற்பாட்டை கொண்டு வருதல்.
  2. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் யாப்பில் திருத்தங்களை கொண்டு வருதல். 
  3. அரசு, சிற்றுடைமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்ததற்கான ஒரு கூட்டுறவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 

என்பனவாகும். மேலும் எதிர்காலத்தில் பாரியளவான பொருளாதார (Macro Level) திட்டங்களே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும். அதற்கு மிகவும் சாத்தியமானது பெருந்தோட்ட தொழில்துறையாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) இன் பரிந்துரைகளும் அவ்வாறானவைகளாக தானிருக்கின்றன. சிறு தெயிலை தோட்டங்களினால் அந்த தேசிய இலக்குகளை அடைவது சிரமமானது. என்பதே சட்டத்தரணி இ. தம்பையாவின் கருத்தாகும்.  

அதே போல் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக நீண்ட அனுபவங்களை கொண்ட சட்டத்தரணி கௌதமன் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பாக வினவிய போது அவர் சில கருத்துக்களை முன்வைத்தார். அதாவது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. பெருந்தோட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒரு நிறுவன அமைப்ப காணப்படுவதால் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் காணப்படுகின்றன. பதுளை நுவரெலியா மாவட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட தோட்டங்களுக்கு அருகாமையில் சிறு தோட்டங்கள் காணப்படுவதால் சம்பள விடயத்தில் ஒரு நியாயம் காணப்படுகின்றது. குறைவான ஊதியம் கிடைத்தால் சிறு தோட்டங்களுக்கு தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதில் சிரமம் என்பதால் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள சிறுதோட்டங்கள் சம அளவான சம்பளம் வழங்குகின்றனர். 

ஆனால் எல்லா தோட்டங்களிலும் அவ்வாறு இல்லை. அங்கு உரிமையாளர்கள் வைத்ததுதான் சட்டம். ஊதியம், ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம், ஏனைய நலன்சார் திட்டங்கள், வீட்டு வசதிகள், சுகாதாரம், உள்ளிட்ட விடயங்களில் பாரிய பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவர்களை சட்டரீதியான ஒர கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கின்றார். 

இந்த ஆய்வு தொடர்பாக நாம் விஜயம் செய்த சிறு தோட்டங்களில் தொழிலாளர்கள் கூறிய விடயங்கள் இந்த கருத்துக்களை வலியுறுத்துவனவாகவே உள்ளது. கொஸ்லாந்தை பிரதேசத்தை அண்மித்த ஒரு சிறு தேயிலை தோட்டத்தில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் ஓய்வ பெற்றவர்களாவர். அவர்களுக்கான நாளாந்த சம்பளம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியமோ அல்லது வேறெந்த கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை. என்று அவர்கள் கூறுகின்றார்கள். இம்மக்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமே அவர்களின் தேவையாக இருப்பதால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவர்களுக்கான நலன்புரி தேவைகளும் முறையாக இல்லை என்பத அவர்களின் வீடுகளை அவதானித்தபோது தெளிவாகியது. 

அப்புத்தளை பிரதேசத்தை அண்மித்த ஒரு தனியார் தோட்டத்திற்கு விஜயம் செய்தபோது அங்குள்ள மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக அறியமுடிந்தது. நீண்டகாலமாக அவர்களுக்கான ஊழியர் சேமலாப  நிதியத்துக்காக பணம் செலுத்தப்படவில்லை. அந்த தனியார் தோட்டத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் அதேவேளை அந்த தோட்டத்தை நிர்வாகம் செய்தவர்களால் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய பணம் முறைகேடாக கையாளப்பட்டு இருப்பதாகவும் அம்மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

மேலும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்த தோட்டத்துக்கு பணிக்கு செல்லாவிட்டால் அவர்கள் அத்தோட்டங்களில் எவ்வித சலுகைகளையும் அனுபவிக்க முடியாது. வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு அவர்கள் நடுநிசியில் வெளியேற்றபட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அறிய முடிகின்றது. இவர்கள் ஒரு அடிமைச் சமூகமாகவே நடத்தப்படுகின்றனர். இந்த விடயத்தை பேராதனை பல்கலைகழகத்தின் அரசறிவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஸ் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். “தேயிலை சிற்றுடைமைகள் என்று சொல்லப்படும் தனியார் தோட்டங்கள் தான் இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கின்றன. அரசாங்கமும் அவர்களுக்கு கணிசமான அளவு மானியங்களையும் கடன் உதவிகளையும் வழங்குகின்றது.

அவர்கள் சமீபகாலமாக அதிகமான விளைச்சலையும் பெற்றுக் கொடுக்கின்றனர். கணக்கீட்டின் படி இலங்கையில் 4 இலட்சம் சிறு தேயிலை தொட்ட உரிமையாளர்கள் இன்று உள்ளனர். ஆனால் அவர்களின் தோட்டங்களில் தொழில்புரியும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உரிமைகள் மீறப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் உள்ளனர். சும்பளம், மேலதிக கொடுப்பனவுகள், நலன்புரி தேவைகள் என்பன ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலேயே உள்ளது.

தென் மாவட்டங்களை பொருத்தவரையில் அங்குள்ள சிற்றுடைமைகளில் தொழில் புரியும் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக கைவிடப்பட்ட ஒரு சமூகமாகவே இருக்கின்றனர். இதில் மலையக மக்களும் அடங்குகின்றனர். நுவரெலியா, ஊவா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களும் அடக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகமாகவே உள்ளனர். இவர்கள் தொழிற்சங்கங்களில் இல்லாமையும், நிறுவனமயப்படுத்தப்படாமையும், இவர்களின் தொழில் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளதற்கான பிரதான காரணங்களாகும். 

துனியார் தோட்டங்களில் தொழில்புரியும் மலையக மக்களின் தரவுகள் முழுமையாக இல்லாமையும் எமக்குள்ள ஒரு குறைபாடாகும். இவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இது சவாலாக உள்ளது.” என்கின்றார்.

மேலும் தனியார் தோட்டங்களில் பணிபுரிபவர்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது தனியார் தோட்டங்கள் இதுவரை நிறுவனமயப்படுத்தப்படவில்லை. எனவே சட்டத்தின் பிரகாரம் தனியார் தோட்டங்களை நிறுவனப்படுத்த வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்வதும் கட்டாயமாகும். இது அவர்களை அடிமை மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வரும். அதேபோல் அவர்களுக்கான நியாயமான சம்பளம் (Minimum wage ordinance) நலன்புரி சேவைகள் என்பனவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பிரதிநிதித்துவம் வலுவானதாக இருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்களை தொகுத்து ஆராய்கையில் சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களை நிவர்த்திச் செய்யும் வகையில் புத்திஜீவிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மலையக மக்கள் சிறு தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக உருவாவதை தடுக்க முடியாது.

06.11.2022 வீரகேசரி

கொழும்பின் மணிக்கூட்டுக் கோபுரங்கள் - (கொழும்பின் கதை - 46) - என்.சரவணன்

“நகரமொன்றின் தரம் எப்பேர்பட்டது என்பதை பறைசாற்றும் குறியீடாக மணிக்கூட்டுக் கோபுரங்கள் இருந்திருக்கின்றன” என்கிறார் மணிக்கூட்டுக் கோபுரங்களைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ள கார்லோ கிபல்லோ. 

கொழும்பின் மையப் பகுதிகளில் இன்றும் காணப்படுகிற மணிக்கூட்டுக் கோபுரங்கள் கொழும்பின் முக்கிய நினைவுக் கோபுரங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய மணிக்கோட்டுக் கோபுரங்கள் இலங்கையில் அறிமுகமாக்கியவர்களும் ஆங்கிலேயர்கள் தான். ஐரோப்பாவெங்கும் குறிப்பாக தேவாலயக் கோபுரங்களில் இத்தகைய பிரமாண்டமான மணிக்கூடுகள் அமைக்கப்பட்ட பெரிய கிறிஸ்தவ தேவாலயங்கள் பலவற்றைக் காணலாம். பெரிய கடிகாரங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தபோதும் இந்த கோபுர மணிக்கூட்டு கலாசாரம் 19ஆம் நூற்றாண்டில் தான் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வெளியில் வேறு கட்டிடங்களுக்கும், கோபுரங்களுக்கும் புழக்கத்துக்கு வந்தன. இவ்வாறு உயரமான இடத்தில் பிரமாண்டமான கடிகாரத்தை வைப்பதன் மூலம் தூர இருந்தே மக்கள் நேரத்தை அறிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னர் தேவாலய மணிகளை ஒலிக்கச் செய்து சுற்றி உள்ளவர்களுக்கு நேரத்தை அறியத் தரும் வழிமுறை இருந்தது. மணிக்கூடுகளை தேவலாய கோபுரங்களில் நாற்திசையிலும் வைத்தபோதும் கூட மணிகளை அடித்து நேரத்தை அறிவிக்கும் மரபு இன்று வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் இந்த தேவாலய மணிக் கோபுரங்கள் பிராரத்தனை நேரத்தை அறிந்துகொள்வதற்காகத் தான் பிரதானமாக நிறுவப்பட்டன.

இப்போதெல்லாம் இந்த மணிக்கூண்டுகள் அதிகம் பயன்படாவிட்டாலும், ஒரு காலத்தில் இந்த மணிக்கூண்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போதெல்லாம் கையில் கைக்கடிகாரம்  கட்டிக்கொள்வது கூட அருகிப்போய் விட்டது. கைக்கடிகாரம் வெறும் அழகுசாதனப் பொருளாக மட்டுமே குறுகிப் போய்விட்டது. ஸ்மார்ட்போன்கள் அந்த இடத்தை எடுத்துவிட்டன. கடிகாரங்களும், கைக்கடிகாரங்களும் வசதிபடைத்தவர்களின் சாதனங்களாக இருந்த காலத்தில் இத்தகைய மணிக்கூட்டுக் கோபுரங்கள் மிகுந்த பலனளித்தன. 

இலங்கையில் பின்னர் இந்தக் மணிக்கோட்டு கோபுரங்கள் பல நகரங்களின் மையத்தில் வைக்கப்பட்டன. இது நகரத்தின் மையம் என்பதை பறைசாற்றும் ஒன்றாகக் கூட இந்த மணிக்கோட்டுகோபுரங்கள் திகழ்ந்தன. கொழும்புக்கு வெளியில் காலி, யாழ்ப்பாணம், குருநாகல், கோட்டை, போன்ற இடங்களில் பழமையான மணிக்கூண்டுகள் உள்ளன. பிற்காலத்தில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, கண்டி, பதுளை போன்ற நகரங்களில் போன்ற ஏனைய நகரங்களில் கட்டப்பட்டன.

இப்படி கட்டப்பட்ட பல கோபுரங்களின் தோற்றத்தின் பின்னணியில் சுவாரசியமான கதைகள் பல உள்ளன. உதாரணத்துக்கு 135 வருடங்கள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண மணிக்கூண்டைக் கூடச் சொல்லலாம். 1875 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அன்றைய வேல்ஸ் இளவரசராக இருந்த இளவரசர் ஆல்பர்ட்டுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் இருந்து இந்த மணிக்கூட்டு கோபுரம் கட்டப்பட்டது. வேல்ஸ் இளவரசர் இலங்கை வரும்போது கொழும்பில் யாழ்ப்பாணத்துக்கென தனி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக்காக ஏற்பாட்டுக் குழுவினர் 10,000.00 ரூபாய் நன்கொடையாகச் சேகரித்திருந்தனர். 

வேல்ஸ் இளவரசருக்குப் பரிசளிக்க 4000 ரூபாய்க்கு வெள்ளி மஞ்சுசாவையும் நகைகளையும் வாங்கினர். இந்தப் பரிசு வேல்ஸ் இளவரசருக்கு டிசம்பர் 1 , 1875 அன்று வழங்கப்பட்டது. பின்னர் இந்த வரவேற்புக்குழு யாழ்ப்பாணம் சென்று மீதி ரூ6000 ஐ என்ன செய்வது என்று சிந்தித்தனர். இது குறித்து முடிவெடுக்க 1880 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வேல்ஸ் இளவரசரின் இலங்கை பயணத்தை நினைவு கூறும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பது நல்லது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அந்த மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது.


கொழும்பின் முதல் கலங்கரை விளக்கம்.

கொழும்பில் முதன் முறையாக கலங்கரை விளக்கம் 1829 இல் கட்டப்பட்டது. அதாவது போர்த்துகேய, ஒல்லாந்தர் காலத்தில் கொழும்பில் முறையான கலங்கரை விளக்கம் இருக்கவில்லை. ஆங்கிலேயர் கொழும்பைக் கைப்பற்றி சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தான் அதற்குரிய அவசரத்தை உணர்ந்தார்கள்.

இருப்பினும் இந்த கலங்கரை விளக்கம் குறித்து இலகுவாகத் தேடிக்கண்டுபிடிக்க முடிவதில்லை. பழைய ஆவணங்கள், வெளியீடுகளில் கூட எந்த குறிப்பும் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் இப்படி ஒரு கலங்கரை விளக்கம் இருந்ததை பிரிட்டிஷ் நூலகத்தின் இணையத்தளத்தில் சில படங்கள் காணக் கிடைக்கின்றன. அதன் கீழ் சில விளக்கங்களும் உள்ளன. இந்தப் படத்தை அப்போது எடுத்தவர் பிரபல புகைப்படப் பிடிப்பாளர் ஃபிரடெரிக் ஃபீபிக் (Fiebig, Frederick). 

கொழும்பு கோட்டையின் கொடிக் கம்பமும் பீரங்கிகளையும் அப்படத்தில் காணக் கிடைக்கிறது. கொழும்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் கலங்கரை விளக்கம் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருந்ததைக் காண முடிகிறது. இக்கலங்கரை விளக்கம் இரவு நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை ஒரு நிலையான ஒளியைக் காண்பிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட்டமான நான்கடுக்கு வீடுபோல அமைக்கப்பட்டிருக்கும் அந்த கோபுரம் நான்காவது அடுக்கில் சிறியதாக காணப்படுகிறது. அடிப்பகுதியிலிருந்து உச்சி வரை அதன் உயரம் 74 அடியாகும் (22.5 மீட்டர்). மேலும் ஒளியைப் பாய்ச்சும் கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 97 அடி உயரத்தில் அமைந்திருந்தது. கீழ் அறைகளின் விட்டம் 21 அடி 6 அங்குலம் (6.5 மீட்டர்) மற்றும் ஒளி பாய்ச்சும் அறை 11 அடி (6.4 மீட்டர்) ஆகும். 16 மைல் வரை இதைக் காணக் கூடியதாக இருந்திருக்கிறது. கடலில் இருந்து கிட்டத்தட்ட 120 கெஜம் (110 மீட்டர்) தொலைவில் அமைந்திருந்தது. அதுபோல் கடல் மட்டத்திலிருந்து 12 கெஜம் (10.9 மீட்டர்) உயரத்தில் அது இருந்தது.

இது 1844 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு 1849 இல் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.  அப்போது உள்நாட்டில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி விளக்குகள் ஏற்றப்பட்டன. இக் கலங்கரை விளக்கம் 1867 வரை செயல்பட்டது. 1869 க்கும் 1871க்கும் இடையில் கொழும்பு கோட்டையின் அரண்களை இடித்து அகற்றினார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது இந்த கலங்கரை விளக்கமும் சேர்த்தே இடிக்கப்பட்டது. அப்படி இடிக்கப்பட்ட போது அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் கொழும்பு கோட்டை கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டிருந்தது.

ஃபிரடெரிக் ஃபீபிக் அப்படத்தை 1852இல் எடுத்திருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி 1856 இல் வாங்கியிருக்கிறது. 

1864 ஆம் ஆண்டு 17ஆம் திகதி வெளியான “The illustrated London news” என்கிற சஞ்சிகையில் 280ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிற கோட்டோவியத்தில் இந்த கலங்கரை விளக்கத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. இக்கட்டுரைக்காக அச் சஞ்சிகையை தேடிக்கண்டுபிடித்த போது காண முடிந்தது. 285 ஆம் பக்கத்தில் அந்தப் படத்திற்கான மேலதிக விளக்கங்களை அதில் வெளியிட்டிக்கிறார்கள். “Photograph by messrs Slinn & Co, of Colombo” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கொழும்பில் இருந்த கலங்கரை விளக்கங்களுக்கும், இந்த மணிக்கூட்டுக் கோபுர கலங்கரைக்குமான பராமரிப்புச் செலவாக 1916-1917 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுக திணைக்களத்தால் 13,190 ரூபாய் செலவளித்திருப்பதை 1917 ஆண்டின் நிர்வாக அறிக்கை தெரிவிக்கிறது. 


கலங்கரையும், மணிக்கூண்டும்

இலங்கையில் கலங்கரை விளக்கங்களின் வரலாறு பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இருந்து தொடங்குகிறது. 1815-1948 வரை ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆண்டனர். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான கலங்கரை விளக்கங்கள் இந்தக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கலங்கரை விளக்கங்கள்; இம்பீரியல் லைட்ஹவுஸ் சர்வீஸ் (Imperial Lighthouse Service) என்ற நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் கலங்கரை விளக்கங்களின் செயற்பாடுகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும் இன்றைய நிலையில் இலங்கை துறைமுக அதிகாரசபை அவற்றை நிர்வகித்து வருகின்றது. இன்று இலங்கையில் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன, அவற்றில் 14 மட்டுமே செயல்படுகின்றன. எனினும், இலங்கையின் 25 கலங்கரை விளக்கங்களில் நான்கு கொழும்பில் அமைந்துள்ளன. கொழும்பு கலங்கரை விளக்கம், கொழும்பு வடக்கு பிரேக் வாட்டர், கொழும்பு தெற்கு பிரேக் வாட்டர் மற்றும் பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கம் என்பவையே அவை. இந்த நான்கு கலங்கரை விளக்கங்களில், பழைய கொழும்பு கோட்டை கலங்கரை விளக்கத்தைத் தவிர, மீதமுள்ள மூன்று கலங்கரை விளக்கங்கள் இன்றும் செயல்படுகின்றன.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழமையான மணிக்கூண்டு பல வழிகளில் முக்கியமான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் நிர்மாணமானது கொழும்பில் வசிப்பவர்களுக்கு மட்டுமன்றி முழு இலங்கையர்களுக்கும் ஒரு வகையான ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றுமாக இருந்தது. கொழும்பில் குவியும் உல்லாசப் பிராணிகளையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் இவ்வாறான ஒரு மணிக்கூட்டு கோபுரத்தை இந்நாட்டு மக்கள் இதற்கு முன் பார்த்ததில்லை. பிரித்தானிய அரசாங்கம் இலங்கையில் நிறுவிய முதலாவது மணிக்கூண்டு இதுவாகும். கொழும்பு கோட்டையில் சதாம் வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை (முன்னாள் இராணி வீதி) என்பவை சந்திக்கும் சந்தியில் கடிகாரத்துடனான இந்தக் கலங்கரை விளக்கம் இன்று செயலற்ற நிலையில் உள்ளது. இந்த கோபுரத்தை சுற்றி சுமார் 20 மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை, முன்னாள் தபால் தலைமையகம் என்பவை உள்ளன.

இது கொழும்பு நகரின் மிகவும் தனித்துவமான வரலாற்று நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. 1860 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் இலங்கையில் கடிகாரம் பொருத்தப்பட்ட ஒரேயொரு கலங்கரை என்பது அதன் விசேடத் தன்மையாகும். “கொழும்பு கோட்டை பழைய கலங்கரை விளக்கம்” என்று அது அழைக்கப்பட்டாலும், கடிகாரம் மட்டும் இன்றும் செயல்படுவதால், தற்போது அது மணிக்கூண்டு கோபுரமாக பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றுத் தகவல்களின்படி, இது 1856-57 இல் ஒரு மணிக்கூட்டு கோபுரமாக கட்டப்பட்டது. பின்னர் 1860ல் இந்த மணிக்கூண்டு கோபுரத்தில் கலங்கரை விளக்கு ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “A guide to Colombo with maps”  என்கிற கொழும்பின் வழிகாட்டி நூலில் இந்த கலங்கரை விளக்கத்துடன் சேர்ந்த மணிக்கூட்டுக்கோபுரமானது ஒளிக் குவிவை பாய்ச்சும் விசேட அம்சம் பொருந்திய ஒன்றென்றும் அது உலகத் தர வரிசையில் உலகின் மிகச்சிறந்த ஒன்றென்றும் குறிப்பிடுகிறது. கடல் மட்டத்திலிருந்து அந்த கலங்கரை உயரம் 132 அடி உயரத்தில் இருப்பதால் கொழும்புத் துறைமுகத்தின் வழிகாட்டலுக்கு மிகவும் உதவும் ஒன்றென்றும்  தெளிவான காலநிலையில் 17 மைல் தொலைவு வரை கடலில் தெரியும் என்றும் குறிப்பிடுகிறது.  அதுமட்டுமன்றி ஆரம்பத்திலிருந்து மண்ணெண்ணை மூலம் விளக்கெரிக்கப்பட்டுத் தான் கலங்கரை விளக்கை ஒளிர்க்கச் செய்தார்கள். அந்த ஒளியைக் கொண்டு தான் பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தன. ஆனால் 1907 ஆம் ஆண்டு தொடக்கம் எரிவாயு மூலம் விளக்கெரிக்கப்பட்டது. பின்னர் 1933 இல் இருந்து 1500 மெழுகுவர்த்திகளின் ஒளிக்கு நிகரான ஒளியைத் தரக்கூடிய மின்சார மின்விளக்கு நிர்மாணிக்கப்பட்டது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மணியின் எடை மாத்திரம் 250 கிலோகிராம் ஆகும்.

கோபுரத்திற்கான அனைத்து வடிவமைப்புத் திட்டமும் அப்போது இலங்கையின் ஆளுநராக பணியாற்றிய சர் ஹென்றி ஜார்ஜ் வார்டின் (Sir Henry George Ward -1797 – 1860) மனைவி எமிலி எலிசபெத் வார்டால் (Emily Elizabeth Ward) வடிவமைக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரது வடிவமைப்பின்படி, கடிகார கோபுரத்தின் கட்டுமானத்தின் இயக்குனரான கட்டிடப் பொறியியலாளர் ஜோன் ஃப்ளெமிங் சர்ச்சிலின் (J. F. Churchill) மேற்பார்வையின் கீழ் பொதுப்பணித் துறையால் 1957 பெப்ரவரியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த 95 அடி உயர கோபுரமே அன்றைய கொழும்பில் மிக உயரமான கோபுரமாக இருந்தது.

இந்த கோபுரத்தை ஆரம்பத்தில் அப்போது ஆளுநராக இருந்த சேர் ரொபர்ட் பிரவுன்ரிக், கோபுரத்தை நிறுவுவதற்காக 1814 ஆம் ஆண்டு 1,200 பவுண்டுகள் செலவில் ஒரு கடிகாரத்தை வடிவமைத்தார். ஆனால் பொருளாதாரச் சிக்கலில் அந்தத் தொகையைச் செலுத்த முடியாமல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடிகாரம் 1857 இல் கோபுரம் நிறுவப்படும் வரை ஒரு பழைய களஞ்சியத்திலேயே அக்கடிகாரம் இருந்தது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பின்னரும் அது நல்ல நிலையிலேயே இருந்தது. எனவே மேலதிகமாக 280 பவுண்டுகள் அக்கடிகாரத்தை கடிகாரத்தை சுத்தம் செய்வதற்கும் எண்ணெய் தடவி புதுப்பிப்பதற்கும் செலவிடப்பட்டிருக்கிறது.


இந்த கடிகாரம் மிகவும் உயர்தர கடிகாரம் என்று அதன் மதிப்பில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இதனை தயாரித்தது பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற வணிக நிறுவனமான டென்ட் (Dent) நிறுவனமாகும். இதில் உள்ள இன்னொரு விசேடத்துவம் என்னவென்றால் லண்டனில் புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரத்தை நீண்ட உத்தரவாதக் காலத்துடன் தயாரித்த டென்ட் (Dent) நிறுவனம் அது. “பிக் பென்” என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் வளாகத்தில் உள்ள பிரபலமான மணிக் கூட்டுக் கோபுரம் என்பதை அறிவீர்கள். இலங்கைக்கு தயாரித்த தரம்வாய்ந்த கடிகாரம் இங்கு கொண்டுவரப்பட்டது. மணிக்கூட்டு கோபுரத்தின் பிரதான மணி சுமார் 250 கிலோகிராம் எடையைக் கொண்டது. இந்த மணியைத் தவிர வேறு இரண்டு துணை மணிகளும் இருந்தன. அவற்றின் எடை 135 கிலோ.

Big Ben  என்பது இங்கிலாந்து பாராளுமன்றக் கட்டிடமான வெஸ்ட்மின்ஸ்டர் கட்டிடத்தில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம்
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்தில் “பிக் பென்” கோபுரம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே இந்த கலங்கரை மணிக்கூண்டு (Lighthouse Clock Tower) கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 1859ஆம் ஆண்டு மே31 அன்று தான் “பிக் பென்” திறக்கப்பட்டது. ஆனால் கோட்டை மணிக்கோட்டு கோபுரம் 1857 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்றே திறக்கப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை வடிவமைத்த அதே டென்ட் தான் “பிக்பென்” கடிகாரத்தையும் வடிவமைத்தார். 

1907 அளவில் இந்த கடிகாரம் பழுதானது. எனவே அந்தக் கடிகாரத்தை அகற்ற வேண்டியதாயிற்று. மீண்டும் 22.10.1913 அன்று இங்கிலாந்தில் இருந்து புதிய கடிகாரம் தருவிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. இன்று இருக்கும் 6-அடி கடிகார முகப்பும் பொருத்தப்பட்டது. ஆனால் அதனை உடனடியாக திறந்து வைக்க முடியவில்லை. முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பட்டு இருந்ததால் இழுபறிப்பட்டு பின்னர் 1914 ஏப்ரல் 04 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த காலத்தில் கோட்டை கடற்கரையோரத்தில் புதிய கலங்கரை (“கல்பொக்க லைட் ஹவுஸ்” என்று அழைக்கப்படும் “Galle Buck Lighthouse”) 1952 கட்டப்பட்டதால் யூலை 12 ஆம் திகதியிலிருந்து இந்தக் கோபுரத்தின் கலங்கரை வெளிச்சம் நிறுத்தப்பட்டது. அதேவேளை இந்த மணிக்கூண்டு கோபுரத்தை சுற்றி கட்டிடங்கள் எழத் தொடங்கின. தூரத்திலிருந்து வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட இந்த கோபுரத்தின் தேவை அற்றுப் போன நிலையில் இது நிறுத்தப்பட்டது.


கொழும்பு கோட்டையில் உள்ள இந்த பழைய கலங்கரை விளக்கமே இலங்கையின் முதலாவது கலங்கரை விளக்கம் என்கிறனர் சிலர். ஆனால் சில தகவல்களின்படி காலி கோட்டையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கமே இந்நாட்டின் முதல் கலங்கரை விளக்கமாகும். எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையின் பழைய மணிக்கூட்டு கோபுரம் இலங்கை நெடுஞ்சாலைகளின் தூரத்தை (Mileage) அளவிடுவதற்கான மையப் புள்ளியாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கொழும்பின் மையம் இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் இருந்து தான் நாளா திசைகளுக்கும் அளவிடப்படுகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், காலிக்கும் இங்கிருந்து கணக்கெடுக்கப்படுகிறது. முதற் தடைவையாக கொழும்புக்கும் கண்டிக்குமான தூரத்தை இதன் அடிவாரத்திலிருந்து தான் கணக்கெடுக்கப்பட்டது. இங்கிருந்து கண்டி 115.6 கிலோமீட்டர் தூரம் என கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.


கான் மணிக்கூண்டு கோபுரம்

கொழும்பில் உள்ள இந்த கலங்கரை விளக்கக் கோபுரத்தைப் பற்றிப் பேசும் போது மறக்க முடியாத இன்னொரு மணிக்கூண்டும் உள்ளது. அதுதான் கோட்டை மல்வத்தை வீதி மற்றும் பிரதான வீதி என்பன சந்திக்கும் இடத்தில் உள்ள கான் நினைவு மணிக்கூண்டு கோபுரம். கொழும்பு மத்திய இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நேராக வந்தால் இந்த இடத்தை வந்தடையலாம். ஹன்டர் என்ட் கொம்பனிக்கு எதிரில் துறைமுகத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது இது. கான் மணிக்கூட்டுக் கோபுரம் என்று இது அழைக்கப்படுகிறது.

பேர்சி குடும்பத்தைச் சேர்ந்த கான் (Framjee Bhikhajee Khan) என்பவரின் 45 ஆண்டின்  நினைவாக அவரின் புதல்வர்களால் இது அமைத்துக் கொடுக்கப்பட்டது. இலங்கைக்கு பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் வந்து குடியேறியிருக்கிறார்கள். 7ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தின் மீதான அரேபிய ஆக்கிரமிப்பின் போது அங்கிருந்து தப்பி சிதைந்து பல்வேறு இடங்களில் குடியேறியவர்கள் பார்சி இனத்து\முஸ்லிம்கள். அவ்வாறு குஜராத்தில் குடியேறி வாழ்ந்து வந்தவர்களின் சந்ததியினர் தான் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பெரிய வர்த்தக வியாபார  நோக்கத்துக்காக குடியேறிய பேர்சியர்கள்.


நிலையாக தம்மை பல துறைகளில் நிலைநிறுத்திக்கொண்ட அவர்கள் குறிப்பாக தரம் வாய்ந்த எண்ணெய் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். 1878ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்தின் தலையாய நபரான கான் இறந்து போனார். அவர்களின் இரு புதல்வர்கள் அந்த வியாபாரத்தை பெரிதாக வளர்த்தெடுத்தார்கள். அதற்கு மூலாதாரணமான தமது தந்தையின் பெயரை என்றென்றும் சொல்லக் கூடியவாறு அரசின் முழு சம்மதத்துடன் 1923 இல் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை அன்று 17,113 ரூபாய் செலவில் கட்டி முடித்தார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே நூறாண்டுகளை எட்டும் அந்த கோபுரம் இன்றும் கானின் பெயரால் நிலைத்து நிற்கிறது. இந்த நூறாண்டில் கொழும்பின் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களை நகர, மற்றும் வீதி அபிவிருத்தியின் பெயரால் செய்ய நேரிட்டாலும் இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கொண்ட சுற்று வட்டத்தை சேதப்படுத்தியதில்லை. அதில் உள்ள கல்வெட்டில் இப்படிப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

"இந்த மணிக்கூட்டு கோபுரமும் நீரூற்றும் ஃபிராம்ஜி பிகாஜி கானின் நினைவாக அவரது மகன்களான பிகாஜி மற்றும் மன்சர்ஷோ ஃப்ரம்ஜி கான் ஆகியோரால் அன்பான நன்றியின் அடையாளமாக அமைக்கப்பட்டது. மேலும் 1923 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி, கானின் நினைவாக கொழும்பு குடிமக்களுக்கு மாநகர சபையின் மூலம் அர்ப்பணிக்கப்பட்டது.”

இதில் அமைக்கப்பட்டிருந்த நீருற்று எப்போதோ நின்றுவிட்டது. இப்போது அது இல்லை. ஆனால் கடிகாரக் கோபுரம் அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. ஒன்றரை நூற்றாண்டையும் கடந்து விட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் முக்கிய ஆங்கிலேய காலனித்துவத்தின் எஞ்சிய அடையாளம் இவை.

நன்றி - தினகரன் - 30.10.2022


 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates